நடுவுல கொஞ்சம் செமஸ்டர காணோம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 12,755 
 

“என்னாச்சு?”

தரணியும் மஞ்சுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர். இந்த கேள்வியை ஷர்மி கேட்பது இது எட்டாவது முறை. இன்று பைனல் ரிவிவ். இன்ஜினியரிங் எட்டாவது செமஸ்டரில் இருந்த ஒரே பேப்பர், ப்ராஜக்ட் வொர்க் மட்டும் தான். கம்பியூட்டரில் படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, கூகிளை திறந்து ஈமெயில் செக் செய்வது, indiaglitz.comல் கிசு கிசு படிப்பது தவிர வேறு ஒன்றும் மஞ்சுவிற்கோ தரணிக்கோ தெரியாது. அதனால் தான் ஜாவா புலியான ஷர்மியை கூட்டு சேர்த்துகொண்டு ப்ராஜெக்ட் செய்தனர். முதல் இரண்டு ரிவீவை தட்டு தடுமாறி ஷர்மி இருந்ததால் ஒப்பேத்தியாயிற்று. இன்று பைனல் ரிவீவ். இன்னைக்கு பார்த்தா இப்படி ஆக வேண்டும்..

“என்னாச்சு..? மாடி மேல ஏறி வந்துக்கிட்டுருந்தோம். தண்ணி குடிக்கலாம் சொல்லிட்டு வாட்டர் டேங் பக்கம் போனோம். நீ தான தண்ணி எடுத்து குடுத்த.. அப்புறம் என்னாச்சு? ஒ.. தரைல வழுக்கி ஸ்லிப் ஆயிட்டனா..? கீழ விழுந்துட்டேன்.. இங்ங்ங்ங்க அடிபட்டுருக்கும்.. இங்க தான் மேடுல்லா அப்லங்கேட்டா இருக்கு. கொஞ்சம் நேரத்துல அதுவா சரியாகிடும் டி..”

அப்படி இப்படி என்று ஒரு வழியாக CSE dept ரிவிவ் ஹாலுக்குள் முன்பு இருந்த காரிடருக்கு ஷர்மியை கொண்டு வந்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் இவர்கள் பிரசன்டேஷன் தர வேண்டும்.

“ஏன் எல்லாரும் இங்க நிக்கிறாங்க..” ஷர்மி வசதியாய் ஒரு மர பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்.

“என்னால முடில டி. எதாவது சொல்லி சமாளி. ப்ரின்சி க்கு தெரிஞ்சுது அவ்ளோதான். நான் போயி நம்ம PPT சி.டி.யை குடுத்துட்டு வந்துடறேன்.” சொல்லிவிட்டு மஞ்சு எஸ் ஆனாள்.

கொஞ்சம் நேரம் வானத்தை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஷர்மி தரணியை பிடித்து உலுக்கினாள்.

“என்னாச்சு..?” தரணி என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, ஷர்மியே தொடர்ந்தாள். “மாடி மேல ஏறி வந்துக்கிட்டுருந்தோம். தண்ணி குடிக்கலாம் சொல்லிட்டு வாட்டர் டேங் பக்கம் போனோம். நீ தான தண்ணி எடுத்து குடுத்த.. அப்புறம் என்னாச்சு? ஒ.. தரைல வழுக்கி ஸ்லிப் ஆயிட்டனா..? கீழ விழுந்துட்டேன்.. இங்ங்ங்ங்க அடிபட்டுருக்கும்.. இங்க தான் மேடுல்லா அப்லங்கேட்டா இருக்கு. கொஞ்சம் நேரத்துல அதுவா சரியாகிடும் டி..”

“ஆமா டி.. கொஞ்சம் நேரம் சும்மா இரு டி.” சொல்லிவிட்டு அவள் அருகில் சென்று அவளை பிடித்துகொண்டு உட்கார்ந்தாள் தரணி.

படபடப்புடன் அங்கு வந்து சேர்ந்தாள் மஞ்சு. “நல்லா மாட்டினோம் தரு..”

“ஐயோ என்னாச்சு..?”

“ரிவிவ் கமிட்டி ல IT dept வித்யா மேம் இருக்காங்க. சும்மாவே அவங்களுக்கு நம்ம மூணு பேர பிடிக்காது. இப்போ கேள்வி மேல கேள்வி கேட்டு நம்மல காலி பண்ணிடுவங்கலே..”

“ஒன்னும் பிரச்சன இல்ல டி. ஷர்மி ஜாவா ல பெரிய ஆள் தான. அவ பாத்துக்குவா..”

ஷர்மி இப்பொழுது வாயை திறந்தாள், “ஆமா.. என் இங்க எல்லாரும் இருக்கோம். இது நம்ம கிளாஸ் ரூம் கிடையாதே..”

‘என்ன.. ஏன் இங்க இருக்கோம் ன்னு மறந்துட்டாளா.. ‘ தரணி மிரண்டு போனாள்.

“ஷர்மி இன்னைக்கு ப்ராஜக்ட் பைனல் ரிவிவ் டி.” மஞ்சு தன் சொன்னாள்.

“ஒ.. அப்படியா சரி சரி..” சொல்லிவிட்டு மீண்டும் பெஞ்சில் சாய்ந்து கொண்டாள்

முன்பு போயிருந்த டீம் வெளியே வந்தது. “எப்பா.. இந்த வித்யா லூசு கேள்வி கேட்டு பாடா படுத்திடுச்சு.. பாத்து பதில் சொல்லுங்க.. இப்போ தீபா டீம் போயிருக்கு.. அடுத்து நீங்க தான்..” ஏற்கனவே உள்ளே கப கப என்று எரிந்து கொண்டிருக்க பல்லவி வேறு கொஞ்சம் பயமுறுத்தி விட்டு போனாள் .

“மஞ்சு.. என்னாச்சு..” ஷர்மி மஞ்சு வின் கையை பிடித்துகொண்டு கேட்டாள்

‘ஐயோ மறுபடியுமா..’

“ஒன்னு ஆகல ஷர்மி.. சும்மா இரு கொஞ்ச நேரம்..” இருவரும் ரிவிவ் ஹாலின் வாசலை வெறித்து கொண்டிருந்தனர்.

“ஆமா.. எதுக்கு எல்லாரும் இங்க இருக்கோம்..” ஷர்மி இப்பொழுது தரணியை பிடித்து கொண்டாள்

“எத்தனை டைம் டி சொல்றது. இன்னிக்கு ரிவிவ் டி. ப்ராஜக்ட் பைனல் ரிவிவ்.” தரணிக்கு கோபத்திலும் பயத்திலும் அழுகையே வந்துவிட்டது.

“ஓகோ.. அகிலா அக்கா வர சொன்னாங்களா..?” அப்பாவியாக ஷர்மி கேட்டதும் தரணிக்கும் மஞ்சுவிற்கும் தூக்கி வாரி போட்டது.

அகிலா.. இவர்கள் முதல் ஆண்டு படித்தபோது பைனல் இயர். அப்படின்னா.. நடுவுல ஐந்து செமஸ்டர் நடந்தது மறந்து போயிட்டாளா..

“தரணி…” மஞ்சு மெதுவாக அழைத்தாள்..

“சொல்லு டி..” ஷர்மியை பார்த்த கண் மாறாமல் கேட்டாள்

“ஜாவா எந்த செமஸ்டரில படிச்சோம்..”

“நாலாவது செமஸ்டர்..”

அப்பொழுது உள்ளே சென்ற தீபா டீம் வெளியே வந்தது. அவர்கள் டீமில் இருந்த ராகவி கண்களை கசக்கி கொண்டிருந்தாள். “ஷர்மி.. உங்க டீம் டி. உள்ள போங்க..”

எதையுமே காதில் வாங்காத ஷர்மி , மஞ்சு தரணி இருவரின் கையை பிடித்து இழுத்தாள்..

“என்னாச்சு ..”

ரிவிவ் ஹாலின் உள்ளே இருந்த எ.சி. விர்ர்ரென்ற சத்ததுடன் இயங்கி கொண்டிருந்தது. இருபது டிகிரியில் உள்ளே நிலவிய காற்று வியர்த்து விறுவிறுத்து போயிருந்த மஞ்சுவிற்கும் தரணிக்கும் கொஞ்சம் நிம்மதியை தந்தது.

“கேள்ஸ்.. உங்க தீசிஸ் அப்ஸ்ட்ராக்க்ட குடுங்க..” மேஜையின் இடது புறம் இருந்த ஷாஜகான் சார் மஞ்சுவின் கையில் இருந்து இரண்டு பைல்களை வாங்கினார்.”

வேறு வழி இன்றி தரணி தங்கள் PPT சி.டி.யை லேப்டாப்பின் வாயில் வைத்து தள்ளினாள் . ‘ஆண்டவா.. இந்த சீ.டி. ஸ்ட்ரக் ஆயிடனும்’

ஆனால் அந்த பாழாய் போன லேப்டாப் சரியாய் இயங்க ஆரம்பித்தது. ப்ரொஜக்டரில் இருந்து நீல ஒலி பாய்ந்து வந்து வெள்ளை திரையை நிரப்பியது.

A PROJECT ON MOVING PHOTOGRAPHIC PIXELS FILES OPTIMIZATION USING JAVA BEANS

Submitted By
Manjula S | Dharani K | Sharmila T

“ஒ.. ஜாவா.. எனக்கு அவ்ளோ வா தெரியாது. மேடம் உங்க டெக்னாலாஜி தான். தே ஆர் ஆல் யுவர்ஸ்.” வில்லங்கம் புரியாமல் ஷா சார் வித்யா மேடத்திடம் பாசக்கயிற்றை ஒப்படைத்தார்.

‘இந்த சார் நம்மளை காப்பாற்றுவார் நெனச்சா. இவரே நம்மல ஆப்பு மேல உக்கார வைக்கிறாரே..” தரணி நொந்து கொண்டாள்.

“ஷர்மிளா.. யூ கேன் நவ் ஸ்டார்ட்.” கண்ணாடியை சரி செய்து கொண்டு வித்யா மேம் கூறியதும் ஷர்மி திரும்பி மஞ்சுவை பார்த்தாள்.

“என்னாச்சு ..?”

மஞ்சுவும் தரணியும் திரு திருவென்று விழித்தனர். ‘அவ்ளோ தான். நாம இதோட காலி.’

அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. இது தன் சாக்கென்று மஞ்சு ஓடி சென்று கதவை திறந்து விட்டாள். வெளியே நின்றது பியூன் ஷன்மு..கையில் ஒரு தட்டில் ஆவி பறக்கும் இஞ்சி டீ. (இப்போ வாசகர்களுக்கு வானதி ஞாபகம் வருமே !!)

நல்ல பிள்ளை போல அந்த தட்டை பவ்யமாய் வாங்கி கொண்டு மஞ்சு மத்தியில் இருந்த டேபிளை நோக்கி வந்தாள். முதலில் ஷா சாருக்கு டி யை குடுத்தாள். வித்யா மேமிடம் நீட்டியபொழுது..

“அங்கே வச்சிட்டு போ. ஷர்மி இ செட் யு கேன் ஸ்டார்ட்.. வாட் ஆர் யு கோசிப்பிங் தேர்..” அதட்டியது, அந்த தட்டினை அப்படியே வைத்து விட்டு ஓடிச்சென்று தரணி அருகில் மஞ்சு நின்று கொண்டாள். ஷர்மி ஏதும் புரியாமல் ஸ்க்ரீன் அருகே சென்று அங்கே இருந்ததை படித்தாள்.

“ஷர்மி.. நவ் டெல் மீ வோய் ஜாவா இஸ் ப்ளேட்பாரம் இண்டிபெண்டன்ட்”

“மேம் எ ஜாவா கோட் இஸ் கம்பெய்ல்டு பை..” இந்த கேள்விக்கு பதில் தெரிந்த மஞ்சு பளிச்சென்று பதில் சொல்ல ஆரம்பித்ததும் வித்யா கையை தூக்கினார்.

“ஷ்ஷ்.. நான் ஷர்மிளா வை கேட்டேன். உன் பேர் ஷர்மிளாவா ?” உஷ்ணமாக வித்யா பேசியதும் தரணி மஞ்சுவிற்கு புரிந்தது. இந்த ராட்சசி நம்மை ஒரு வழி செய்யாமல் விடாது..

ஷர்மி இந்த கேப்பில் ரகசியமாய் தரணியை பார்த்து சைகையில் கேட்டாள், “என்னாச்சு ..”

“என்ன சார். சின்ன கேள்விக்கு கூட பதில் தெரில உங்க டிபர்த்மென்ட் பொண்ணுங்களுக்கு..” ஏளனமாய் சிறிது விட்டு எதிரில் இருந்த டீ டம்ப்ளரை எடுக்க எழுந்தார். அப்பொழுது அந்த நாற்காலியின் காலின் கீழ் மாட்டியிருந்த அவரது சேலை தலைப்பு தடுக்கி விழ தடால் என்று வித்யா கீழே விழுந்தார்.

“ஐயோ.. மேடம்..” ஷா சார் பதற்றத்துடன் எழுந்து வர வித்யா சமாளித்து கொண்டு எழுந்தார். “ஒன்னும் இல்ல. ஒன்னும் இல்ல.. ஐ அம் ஆல்ரைட்..”

தன் உடையை சரி செய்து கொண்டு டி யை கையில் எடுத்து கொண்டு நாற்காலியில் அமர்ந்தார். பே பே என்று விழித்துகொண்டிருந்த மூன்று தோழிகளையும் கூர்ந்து பார்த்தார். திரும்பி அருகில் இருந்த ஷா சாரை உற்று பார்த்தார். தன் கண்ணாடியை சரி செய்து விட்டு வித்யா மேடம் ஷா சாரை பார்த்து கேட்டார்..

“என்னாச்சு …???”

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *