Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

திருக்குறள் செய்த திருக்கூத்து

 

துப்பறியும் இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்தல் ராவ் என்றால் சாதாரண மக்களுக்குத் தெரியாமலிருக்கலாம்; அது ஒரு குற்றமல்ல – இரகசியப் போலீஸ் அல்லவா. ஆனால் போலீஸ் இலாகாவில் அவரது பிரக்யாதி தெரியாதிருப்பவன் உத்தியோகத்திலிருப்பதை விட பலசரக்குக்கடை வைக்கலாம். துப்பறியும் தொழிலில் அவர் யாருடைய சிஷ்யர் என்று நீங்கள் அறிந்திருந்தால் இவ்வளவு தூரம் நாம் எடுத்து எழுத வேண்டாம். மேல்நாட்டு ஷெர்லாக் ஹோம்ஸும் தென்னாட்டு பிரக்யாதிபெற்ற துப்பறியும் கோவிந்தனும் அவரது ஹ்ருதய கமலத்தில் தனித்தொகுதி பெற்று இருந்தனர். ஸ்ரீலஸ்ரீ திகம்பர சுவாமியார் அவர்களே துப்பறியும் தொழில் பஞ்சாட்சரத்தை அவர் காதில் உபதேசித்து அருளியது. இவ்வாறு மேல்நாடும் கீழ்நாடும் சம்மேளித்துப் பரிணமித்த இரகசியப் போலீஸ் வீரர் வித்தல் ராவின் திறமையைப் பற்றி இன்னும் சந்தேகிப்பவர்களை சுயமரியாதைக்கார நாஸ்திகர் என்று தள்ளிவிடலாம்.

நமது வித்தல் ராவிற்கு மாறுவேடத்தில் அபார நம்பிக்கை. அதிலும் தன்னுடைய திறமைக்கு எந்தத் தென்னிந்திய நாடகமேடை சார்லி சாப்பிளினும் போட்டி போட முடியாது என்பது இரண்டாவது நம்பிக்கை. சாதாரணமாக தாலுகா ஆபீஸ் குமாஸ்தா அல்லது எலிமெண்டரி பாடசாலை உபாத்தியாயர் மாதிரிதான் காட்சியளிப்பார். சிற்சில முக்கிய சமயங்களில்,மேல்நாட்டு உடைகளையணிந்து ஒரு ஜாவா சுருட்டு சகிதமாகப் புறப்பட்டுவிட்டால், அவரை வித்தல் ராவ் என்று நிரூபிப்பிபவர்களுக்கு என்ன வெகுமதி வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். சிவபிரான் சிற்சில சமயங்களில் அர்த்தநாரீஸ்வரராகத் திகழ்வதும் உண்டு. கிப்ளிங் கவிதைக்கு விதிவிலக்காக, நமது வித்தல் ராவ், கீழ்-மேல் நாடுகளின் நடையுடை பாவனைகள் இரண்டும் கலந்து பரிணமித்த ஒட்டு மாங்கனியாகத் தனித்தமிழ் சிவத்தை முறியடிப்பதும் உண்டு.

சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நெருக்கடியான காலம். இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர், தம்மை ஒரு ஆதிசேஷனாக நினைத்து ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். வேதாந்திகள் ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பார்கள். இன்ஸ்பெக்டரோ ‘சர்வம் சந்தேகமயம் ஜகத்’ என்பார். சிவப்புப் புடவை முதல் சிவப்புக் கழுத்துப்பட்டி ஈறாக சதிக்கூட்ட அங்கத்தினர்களின் சின்னமாகவே கருதுவார்.

தாடி வைத்த பைராகி முதல் நாவிதனுக்குக் கூலி கொடுக்க விதியில்லாத கூலிக்காரன் வரை தொழில் புரட்சி அங்கத்தினர்கள். இவ்வாறு இவர் தம் ஆழ்ந்த அனுபவத்தால் கண்டுபிடித்த விஷயங்களுடன், எடுத்த கேஸ்கள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்று வாகையே சூடி வந்திருந்தும், அவரது அந்தராத்மாவின் இலக்ஷியமாகிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பதவி இன்னும் இலக்ஷிய உலகிலேயே இருந்துவருகிறது. அடிக்கடி தான் எதிர்பார்த்தும் எட்டமுடியாத சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடையுடன் தமது சூக்ஷ்ம சரீரம் நடமாடும் தோற்றமே இவருக்கு மிகுந்த உற்சாகத்தையளித்து வருகிறது.

சாயங்காலம் 5 அல்லது 51/2 மணியிருக்கலாம். இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்தல் ராவ், போலீஸ் சூப்பிரண்ட் துரை பங்களாவை நோக்கி தான் வழக்கப்படி செய்யும் புண்ணிய க்ஷேத்திர யாத்திரையை நடத்திக்கொண்டு இருந்தார்.

முன்னறிக்கைகொடாது தன்னை வேட்டையாட வரும் மோட்டார்களுடன் கிளித்தட்டு மறித்துக்கொண்டே சூப்பிரண்ட் துரையவர்களின் பங்களா வாசலைடைந்தார். இதற்குள் சாயங்காலமும் மேகங்களுடன் கூட்டுறவு செய்துகொண்டு வெளிச்சத்தை அதிக மங்கலாக்கிவிட்டன. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாத் திசைகளிலும் பார்த்தார். ஒரு மனிதப் பிராணிகூடயில்லை! பிறகு பூமியில் எங்காவது வெடிகுண்டு ஏதேனும் ஒருவேளை மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடுமோவென்று கூர்ந்து கவனித்தார். அப்படி ஒன்றுமில்லை. ஆனால் அவரது தீட்சண்யமான பார்வை ஒரு சிறு துண்டு கடிதத்தின் மீது சென்றது. உடனே பாய்ந்துசென்று வெகு ஜாக்கிரதையாக எடுத்தார். ஹா! என்ன ஆச்சரியம்! அது சிவப்பு இங்கியில் எழுதப்பட்டு இருந்தது. சாதாரண நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட காகிதந்தான். எழுதப்பட்டிருந்த விஷயந்தான் அதிக சந்தேகத்தை உண்டு பண்ணியது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பர்க்கு துப்பாய தூ மழை

என்று இருந்தது. கையெழுத்தையும் அதில் எழுதியிருந்த மாதிரியையும் பார்த்தால் சட்டசபை அங்கத்தினராகவாவது அல்லது சென்னை சர்வகலாசாலை மாணவனாகவாவது இருக்க வேண்டும் என்று ஊகித்தார். ஆம்! எழுதியவருக்கு புரட்சி எண்ணங்கள் முதிர்ந்து பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் மந்திரத்தை உச்சாடனம் செய்வதுபோல் தப்பும் தவறுமாக துப்பாக்கி என்ற வார்த்தையை எழுதியிருப்பானா?

மழை திடீரென்று வந்து அவரது எழுத்து வேலையைத் தடை செய்திருக்க வேண்டும். பின் ஏன் “தூ மழை” என்று அதையும் எழுதவேண்டும்? யோசிக்க, யோசிக்க, துப்பறியும் வித்தல் ராவிற்கு, ஓர் பயங்கரமான, அபாயகரமான, கொலைப் பைத்தியம் பிடித்த புரட்சிக்காரனுடைய வேலை என்பது உறுதியாயிற்று. ஆனால் யார் என்ற மறுகேள்வி பிறந்தது. காலடித் தடங்கள் தரையில் இருக்கின்றனவா என்று பூமாதேவியை ஏறக்குறைய முத்தமிடும் அளவு முகத்தைக் குனிந்து கூர்ந்து நோக்கினார். ஒரே விதமான காலடித் தடங்கள் முட்புதர் நிறைந்த மைதானத்தை நோக்கி ஓர் ஒற்றையடித் தடத்தின் வழியாகச் செல்வதைக் கண்டார். முதலில் அவற்றை அளந்து கொண்டு வெகு ஜாக்கிரதையாக, ‘ஙப்போல் வளை’ என்பதற்கு நடமாடும் மனித உதாரணமாகச் சென்றார். உடை முட்புதர்கள் படர்ந்து ஓர் ஆள் உயரம் வளர்ந்திருந்தால் அம்மாதிரி நடப்பதற்கு வித்தல் ராவைப் போல் தொழிலில் பயிற்சி இருந்தால்தான் முடியும்.

இவ்வாறு பதுங்கிப் பதுங்கிச் சென்று ஓர் முட்புதரை நெருங்கினார். அதன் மறுபக்கத்தில் பிரசங்கம் செய்வதுபோல் ஓர் மனிதக் குரல் கேட்க, கிளைகளின் ஊடே முட்கள் கண்களில் குத்தாமல் நோக்கினார். அவரது தீட்சண்ய பார்வையில், பத்துப் பதினைந்து பேர் கூடிய ஒரு சிறு கூட்டத்தின் முன், சிவப்புக் கழுத்துப் பட்டியணிந்த ஒரு வாலிபன் உற்சாகமாகப் பிரசங்கம் செய்வது தெரிந்தது. சிவப்புக் கழுத்துப்பட்டி! சதியாலோசனைக் கூட்டம்! உடனே உடல் முழுவதும் வியர்த்தது. புரட்சிக்காரருக்கும் நமக்கும் 43/4 அடிதான் தூரமிருந்ததென்றால் யாருக்குத்தான் வியர்க்காது!

“இக்கொடுமையை, அநாகரீகமான, மனிதத் தன்மையற்ற கொடுமையை இனி பொறுக்க மாட்டோ ம். நாளைக்குத் தீர்மானமாக…” என்ற பிரசங்கியாரின் வார்த்தைகள், “ஆம்! ஆம்!”, “நாளைக்கு”, “கட்டாயமாக” என்ற வார்த்தைகளுடன் சபையோரின் கரகோஷத்தினிடையே மறைந்தது. நமது ராவ்ஜியின் மனக்கண்முன், “இரகசியப் போலீஸ் நிபுணர் கொலை” என்ற பத்திரிகைத் தலையங்கங்கள் முதல், உபகாரச் சம்பளம் பெறும் தன் விதவையான மனைவி வரை, சினிமாப் படம்போல் தோன்றி மறையலாயின. ஆனால் அடுத்த நிமிஷம் அவரது அந்தராத்மா அவரது இலக்ஷியமான சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடையுடன் மனக்கண்முன் தோன்றி ஓர் புதிய உற்சாகத்தையும் வீரத்தையும் அளித்தது. அங்கேயே சற்று உட்கார்ந்து கவனிப்பதென்று நிச்சயித்துக் கொண்டார்.

இதற்குள் பிரசங்கமும் முடிந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக, தலைவன் நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தத்தினால் எழுதாவிட்டாலும் சிவப்பு இங்கினாலாவது இருக்க வேண்டுமென்பது வித்தல்ராவினது திடமான நம்பிக்கை.

இப்பொழுது தலைவனைக் கூர்ந்து கவனிக்க அவகாசமிருந்தது. தனக்கு உளவு கொடுத்த சிறு துண்டு கடுதாசியை அவன் தான் எழுதியிருக்க வேண்டுமென்று பட்டது. பேச்சும் குரலும், ஓர் பயங்கரமான பைத்தியக்கார புரட்சிக்காரனுடையது போலிருந்தது. அவனது கால் பாதங்களும் தாம் முன்பு அளவு எடுத்த தடத்தையே ஒத்திருந்தது.

சபை கலைந்தது. ஒவ்வொருவராக பாதையின் வழியாக பசுப்போல் செல்ல ஆரம்பித்தனர். துப்பறியும் இன்ஸ்பெக்டரும் புறப்பட்டார். வலக்கையில் ஒரு நீண்ட உடைமரத்தின் முள் இருந்தது. இடது பையில் கூர்மையான பென்ஸில் இருந்தது. புரட்சிக்காரர் கண்டு கொலை செய்யவந்தால் உயிர் போகுமளவாவது ஒரு வீரப்போர் நடத்தியிருப்பார் என்பது திண்ணம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமன்றோ! ஆனால் அப்படிப்பட்ட அசம்பாவிதமான விஷயம் ஒன்றும் நடக்கவில்லை. அவர்கள் யாவரும் சென்றபின் வெகு ஜாக்கிரதையாக மாறுவேடம் புனைந்தார். தலையில் முக்காடு இட்டு கிழவன் நடக்கிற பாவனையாக இரண்டாவது குழவிப்பருவம் எய்தி, இடையிடையே இருமல் பஜனையுடன் அந்தப் புரட்சித் தலைவனை தொடர்ந்தார். நாளைக்கு ஓர் மர்மமான சம்பவம் நடக்கப்போகிறது என்பதை திட்டமாக ஊகித்து அறிந்துகொண்டார்.

காலை பத்து மணி. பாளையங்கோட்டை கலாசாலை. விளையாடுமிடத்தில் இருந்த ஒரு பெரிய மாமரத்தினடியில் முந்திய நாள் புரட்சிக் கூட்டத்தார் உல்லாசமாகப் பேசிக் கொண்டே புத்தகங்களை அம்மானை விளையாடிக் கொண்டிருந்தனர்.

புரட்சித் தலைவர் என்று சொல்லப்பட்டவர் எவ்வளவு கம்பீரமாக கடிகாரத்தைப் பார்க்கமுடியுமோ அவ்வளவு கம்பீரமாக பார்த்துவிட்டு திடீரென்று ஒருவனை நோக்கி, “சங்கர், நீ அங்கு நின்று பண்டிதர் கிளாசிற்குப் போனதும் வந்து சொல்” என்று அனுப்பிவிட்டு, தனது புத்தகங்களின் இடையே வைக்கப்பட்டிருந்த நீண்ட உறையை ஜாக்கிரதையாகத் திறந்து, ஓர் பத்திரம் போன்ற கடுதாசியை மிகவும் ஊக்கமாக வாசித்துக்கொண்டிருந்தார். உறையில் ‘மாணவர் வீர சுதந்திரம்’ என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இவர்களுக்குச் சற்று தூரத்தில் தலையில் முக்காடுபோட்டு நரைத்த மீசையையுடைய கிழவர் இவர்களைப் பார்த்ததும் பார்க்காததுமாகக் கண்காணித்து வந்தார்.

கலாசாலை மணி, ‘பாடம் ஆரம்பிக்கலாயிற்று’ என்பதை நீண்ட ஓசையில் பிலாக்கணம் வைத்தது. சங்கர், “அவர் போய்விட்டார்” என்று தலைதெறிக்க ஓடிவந்து சொன்னான். உடனே எல்லோரும் புரட்சித் தலைவருக்குப் பின் வரிசையாக வந்து நின்றார்கள். சிவப்புக் கழுத்துப்பட்டி, வண்ணானை நெடுநாளாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் கருப்புக் கதர்ச்சட்டை, ஒரு மல் வேஷ்டி நம் ‘புரட்சித் தலைவரது’ தேகத்தை அலங்கரித்தன. வலது சட்டைப் பையில் ஏதோ பருத்துத் துருத்திக்கொண்டிருந்தது.

எல்லோரும் தலைவனைத் தொடர்ந்தனர். ஊர்வலம் வகுப்பின் கதவுவரை போய் நின்றதும், புரட்சித் தலைவர், மிகுந்த காம்பீர்யமாக நாடகத்தில் அயன் ராஜபார்ட் முதல் தடவை பிரவேசிப்பதுபோல் நடந்து சென்றது. தனது கையிலிருந்த நீண்ட உறையை, பண்டிதர் அருகிலிருந்த மேஜையின் மேல் அனாயாசமாக வீசி எறிந்துவிட்டுத் திரும்ப, வெளியிலிருந்து கூட்டம், “மாணவர் வாழ்க! மாணவர் வெல்க!” என்று ஏக குரலில் கோஷித்தது. பிறகு புரட்சி வீரர் தன்சைன்யத்தை யழைத்துக்கொண்டு தனது மாமரக் கோட்டைக்கு வந்துவிட்டார். அவசர அவசரமாக இவர்களைத் தொடர்ந்த கிழவனை யாரும் கவனிக்கவில்லை.

பண்டிதருக்கு இம்மாதிரியான நடத்தை மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்குமென்றாலும் முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. பண்டிதரல்லவா? பிறகு அந்த உறையைப் பிரித்து உள்ளிருந்த பத்திரத்தை வாசித்தார். அது பின்வருமாறு:

மாணவர் சுதந்திரப் பத்திரம்

பாளையங்கோட்டைக் கலாசாலை பதின்மூன்றாவது வகுப்பு அல்லது பி.ஏ. முதல் வருஷத்து மாணவர்களது ‘மாணவர் சுதந்திர சுயமரியாதைச் சங்கத்தின்’ ஆதரவின் கீழ் 13.8.33ல் நடந்த பொதுக்கூட்டத்தில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இச்சங்கம்,

  1. மாணவர் சுயமரியாதைக்கு இழுக்காக, அநாகரீகமான, மனிதத்தன்மையற்ற, கொடூரமான முறையில் பண்டிதர் நடப்பதை வெறுத்துக் கண்டிக்கிறது.
  2. மாணவர்களின் தொன்றுதொட்டு வந்து உரிமைகளை (வியாசங்கள், புத்தகங்கள் கொண்டுவராமலிருத்தல் முதலியன) மறுபடியும் வற்புறுத்துகின்றது.
  3. தண்டம் வசூலிக்கும் கோழைத்தனமான செய்கையை தனது முழு ஆத்ம பலத்துடனும் கண்டிக்கிறது.
  4. மனிதரை விலங்கினத்தினின்றும் பாகுபடுத்தும் சிரிக்கும் உரிமை மாணவர்களுக்கு உண்டு என்பதை மிகவும் அழுத்தமாக வற்புறுத்துகிறது. மாணவர்கள் தனியாகவோ, சேர்ந்தோ, ஏக குரலாகவோ சிரிக்கலாம் என்பதை பண்டிதருக்கு மிகவும் கண்டிப்பாக அறிவிக்கிறது.

மாணவர் வாழ்க! மாணவர் வெல்க!

மாணவர் சுதந்திர சுயமரியாதைச் சங்கம்

இதை முழுவதும் வாசித்த பின்னும் பண்டிதர் முகத்தில் ஓர் புன்னகைதான் தவழ்ந்தது.

வேலைக்காரனைக் கூப்பிட்டு, இச்சுதந்திரப் பத்திரத்துடன் ஓர் சீட்டும் எழுதிப் பிரின்ஸிபாலுக்கு அனுப்பிவிட்டு, அங்கு மிகவும் பொறுமையுடன் காத்திருந்த மரப்பெஞ்சுகளுக்கு, வெகு உற்சாகமாக மௌனப் பிரசங்கம் ஒன்று – தனித்தமிழ் வீர வாழ்க்கையைப் பற்றியிருக்கலாம் – நடத்திவிட்டு நேரம் முடிந்ததும் பிரின்ஸிபாலைக் காணச் சென்றார்.

பிறகு இருவருமாக புரட்சி வீரர்களுடைய மாமரக் கோட்டையை முற்றுகையிட அணுகினார்கள். அங்கு செல்லும் வரை பிரின்ஸிபாலின் கோபாக்கினி மீசையில் துடித்துக்கொண்டிருந்ததனாலும், அவர் நெருங்கியதும் தனது கைக்குட்டையால் வெள்ளைக்கொடி காட்டுவதுபோல காட்டி, ஆங்கிலத்தில் “நடேசா இங்கே வா” என்று அந்த புரட்சித் தலைவனை தமது சமரசக் கமிட்டிக்கு அழைத்தது ஓர் சுத்த வீரனது உயரிய மனோதர்மத்தைக் காட்டியது. நடேசன் தனது வீரர்களுக்கு கண்களினால் சமிக்ஞை செய்துவிட்டு கம்பீரமாக நடந்து சென்று, தனது பூரண சுதந்திரத்தை பிரின்ஸிபால் முன்னும் நிலைநாட்ட பயப்பட மாட்டான் என்பதைக் காண்பிக்குமாறு தனது (துருத்திக்கொண்டிருந்த) பையில் கையைப் போட்டார்.

“அடே பாவி! என்ன செய்யப்போகிறாய்” என்று கத்திக் கொண்டே அங்கிருந்த கிழவர் நடேசன் மீது பாய்ந்து, அக்கையை எட்டிப் பிடித்து வெளியே இழுக்க முயன்றார்.

தனது பூரண சுதந்திரத்தை நிலைநாட்டும் சமயத்தில் குறுக்கே விழுந்து தடை செய்யும் கிழவரையா நடேசன் பொருட்படுத்துகிறவன். “முடியாது” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, பையில் வைத்த கையை எடுக்காமல் தனது தலைமைப் பதவிக்கு வரவிருந்த இகழை தனது முழு ஆத்ம பலத்துடனும் துடைத்துவிட்டான். கிழவரோ தமது பிடிக்கும் திறமையில், உடும்பின் உடன்பிறந்த சகோதரன்போல் காணப்பட்டார். நடேசன் இதை மாணவர் சுதந்திர சுயமரியாதைச் சங்கத்தின் குருக்ஷேத்திரமாக எண்ணினான். வித்தல் ராவ் இதை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டும் இரண்டாவது பிளாசியுத்தமாக மதித்தார்.

இம்மாதிரி எதிர்பாராதவிதமாய் தமது சமரச மகாநாட்டிற்கு வந்த இடையூறு பிரின்ஸிபால் துரையவர்களின் மனதில் ஒரு நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்திவிட்டது. தமது தலைவரின் வீர யுத்தத்தைக் கண்ட மாணவர்கள், “மாணவர் வெல்க!” “ஸ்ரீயுத நடேசருக்கு ஜே!” என்று கோஷித்து உற்சாகமூட்டினார்கள்.

பிரின்ஸிபாலும், பண்டிதரும் என்ன செய்வதென்றறியாமல் திகைத்து நின்றனர்.
இதற்குள் கிழவருக்கும், குமரருக்கும் நடந்த முஷ்டி யுத்தம், ஜய லக்ஷ்மியை யாருக்கு வெற்றியைக் கொடுப்பது என்னும் ஓர் நெருக்கடியான நிலைமையில் கொண்டுவந்து வைத்துவிட்டது. கடைசியில் கிழவர் திடீரென்று தந்திரத்தை மாற்றி, குஸ்தி திறமையால் வாலிபன் கையை அப்படி இப்படி திமிறவிடாமல் பிடித்துக்கொண்டார். அந்தோ! அன்று மாணவ சு.சு. சங்கத்தின் தோல்வியாகவும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வெற்றியாகவும் போர் முடிந்தது. கிழவரானாலும் சிங்கத்தின் தைரியத்தைப் படைத்த வெற்றி வீரனைக் கண்டு யாவரும் சித்திரப் பதுமைபோல் நின்றனர்.

இடக்கையால் நடேசனைப் பிடித்து இறுக்கிக்கொண்டு, மிகுந்த கம்பீரமாகவும் அனாயாசமாகவும் தனது வலது கையால் வெள்ளைக்காரர் தொப்பியை எடுக்கும் பாவனையாக பொய் மீசையை எடுத்துவிட்டு “நான் தான் வித்தல் ராவ் சி.ஐ.டி.” என்று பிரின்ஸிபாலுக்கு தனது சுய உருவை கடாக்ஷித்தருளினார். காரியம் என்னதென்று விளங்காவிட்டாலும் பிரின்ஸிபாலுக்கு வித்தல் ராவின் நாடகத்திறமையைப் போற்றாமலிருக்க முடியவில்லை. அவர் உடனே, “உமக்கு எனது மாணவருடன் என்ன வேலை?” என்றார்.

“அவன் ஒரு பயங்கரமான புரட்சிக்காரன். உம்மேல் வெடி குண்டை எறிய எத்தனித்தான். நேற்றே இவன் சூழ்ச்சியை எல்லாம் கண்டுபிடித்துவிட்டேன். என்னை இவன் ஏமாற்ற முடியுமா?” என்று சொல்லிக்கொண்டே புரட்சித் தலைவன் சட்டைப் பையிலிருந்த அந்த பயங்கரமான வஸ்துவை எடுத்தார். அது கசங்கிப்போன ஒரு சோற்றுப் பொட்டணமாக இருந்தது! உடனே யாவரும் சிரிக்காமலிருக்க முடியவில்லை.

“வாலிபனாகிலும் இவ்வளவு தந்திரம் உன்னிடம் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டதாக மனப்பால் குடிக்காதே! என் கையில் ரிக்கார்டு இருக்கிறது” என்று நடேசனை நோக்கி உறுமிவிட்டு, பிரின்ஸிபால் துரையிடம் பேச எத்தனித்தார்.

இப்பொழுது வித்தல் ராவ் தான் வரம்பு மீறி கலவரம் விளைவிக்கவில்லையென்பதை பிரின்ஸிபாலுக்கு ருசு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தான் கண்டுபிடித்த விஷயங்களை எடுத்து சொல்லி சிறு துண்டு கடிதத்தையும் காண்பித்தார்.

“எங்கே, அந்தத் துண்டுக் கடிதத்தைப் பார்ப்போம்” என்றார் பண்டிதர்.

“இதோ இந்தாருங்கள்” என்று கொடுத்தார். பண்டிதர் அதை வாங்கி, கவனித்துவிட்டு, “நடேசனுக்கு தமிழில் போய்விடும் போலிருக்கிறதே. எத்தனை தப்பு, குறள் கூடவா சீர்தளைகளைக் கவனித்து எழுதத் தெரியாது?” என்று பண்டிதர் சிறிது கோபப்பட்டுக் கொண்டார்.

“இது இவன் எழுதியதுதான் என்று தெரிந்தும் இவனையும் இவன் கூட்டத்தையும் ஏன் கைது செய்யக்கூடாது?” என்று தமது கட்சியை ஸ்தாபித்தவர் போல் வித்தல் ராவ் கர்ஜித்தார்.

பண்டிதர் மிகவும் சாவதானமாக “இது திருக்குறள்; இதற்கு பரிமேலழகர் உரை சொல்லுகிறார்…” என்று ஆரம்பித்து ஒரு சிறு பிரசங்கம் நடத்தினார்.

வித்தல் ராவ் தனது முழு சாமர்த்தியத்தாலும் ஒவ்வொரு அம்சமாகக் கண்டுபிடித்த கேஸ், அந்த சோற்றுப் பொட்டணத்தைப்போல் சிதைந்து போனது மிக்க பரிதாபகரமாகயிருந்தது.

பிரின்ஸிபாலும், “நீங்கள் வகுப்பிற்குப் போங்கள். ராயர்வாள், உமது துப்பறியும் திறமையை வேறிடத்தில் காட்டும். நீர் என் (மார்பைத் தட்டிக்கொண்டு), மாணவரை சந்தேகித்தது என்னைச் சந்தேகித்தது மாதிரி. இனி இங்கு அரை நிமிஷமும் நிற்கக் கூடாது. போம்” என்று ஒரே கல்லில் இரண்டு பட்சிகளையடித்த மாதிரி தமது அதிகாரத்தை நிலைநாட்டி மறைந்தார்.

ஐந்து நிமிஷங்களுக்கப்புறம் மா.சு.சு. சங்கத்தின் அங்கத்தினர்கள் மாமரக் கோட்டையில் மருந்திற்காவது கிடையாது.

வித்தல் ராவ் திரும்பிப்போன யாத்திரையை வர்ணிக்க நம்மால் முடியாது.

தம்மை ஏமாற்றி தமது கேஸைப் பாழாக்கின திருக்குறளையும் அதை எழுதியவரையும் அவர் இன்றும் மன்னிக்கவேயில்லை.

காந்தி, 10-05-1934 

தொடர்புடைய சிறுகதைகள்
'கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது... ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த, தருவைக்கு ...
மேலும் கதையை படிக்க...
கவிக்குயில், முதல் மலர், 1946 பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்களான ஸ்டேஷன்கள் பட்டணவாசிகளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த ...
மேலும் கதையை படிக்க...
அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது. தன்னருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்று தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம், என்னமோ ஒருமாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது. அவள் விதவை. நினைவு ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ...
மேலும் கதையை படிக்க...
கயிற்றரவு
தியாகமூர்த்தி
படபடப்பு
செல்லம்மாள்
வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)