Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தாமரை பூத்த தடாகம்

 

என் வாழ்க்கையில் நான் பல பருவங்களைக் கடந்து வந்திருக்கிறேன். பருவங்கள் என்றால் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று நீங்கள் நினைக்கலாம். அல்லது மேல்நாடுகள்போல இலையுதிர், பனி, இலைதுளிர், கோடை என்றும் எண்ணலாம். நான் சொல்வது வயதுப் பருவம். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு காதல் எனக்கு இருந்தது. ஒரு பருவத்தில் திடீரென்று என்னை இசை மோகம் பிடித்து ஆட்டியது. அதற்கு காரணம் என் நண்பரும் குருவுமான வேலுச்சாமி என்றே நினைக்கிறேன்.

வேலுச்சாமிக்கு வயது 20 இருக்கும். என்னிலும் ஐந்து வயதுகூடியவன். பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வீணை வாசிக்கத்தெரியும். மிருதங்கம் அடிப்பான். வாய்ப்பாட்டும் பாடுவான். இறுதி ஆண்டை நெருங்கியபோது படிப்பை முற்றிலும் துறந்துவிட்டு இசையில் ஆழமாக ஈடுபாடு கொள்ளத் தொடங்கினான். அந்த நேரம் பார்த்து எங்கள் நட்பும் வலுவடைந்தது.

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வேலுச்சாமியின் முகம் எனக்கு ஞாபகம் வருவதில்லை. நினைவில் இருப்பதெல்லாம் அவனுடைய துரைத்தனமான நடைதான். எங்கே இசைக்கச்சேரி நடந்தாலும் அந்த விசயம் வேலுச்சாமியின் காதுகளுக்கு முதலில் எட்டிவிடும். அவன் அங்கே நிற்பான். சபையிலே உட்கார்ந்து கேட்பது அவனுக்கு பிடிக்காது. வெளியிலே தென்னைமரத்தில் கட்டியிருக்கும் குழாய் வழியாக வரும் சங்கீதத்தை கீழே நின்றுகொண்டு ரசிப்பான். ராக ஆலாபனைகளின் போது அரைக்கண்மூடி ‘ஆஹா’ என்பான். மெல்லக் கண்களைத் திறந்து நுட்பம் விளங்குகிறதா என்பதுபோல என்னையும் பார்ப்பான். ஒருமுறை ஷேக் சின்ன மௌலானா கொழும்புக்கு வந்திருந்தார். அவர் வாசித்த வாத்தியம் என்றால் நான் முன்பின் பார்த்திராதது. அதைக் கிளாரினட் என்று சொன்னார்கள். ஒரு மேற்கத்தைய வாத்தியத்தில் முதன்முறையாக கர்நாடக இசையை வாசிப்பதால் அந்தக் காலத்தில் பலர் இதை வியந்தார்கள். இவரைப் பார்ப்பதற்காக ஒருநாள் வேலுச்சாமி வெகுதூரம் போய்விட்டு வந்து அதை விவரித்தான். அவர் அதிகம் பேசமாட்டாராம். அவருடைய வாத்தியத்தில் துளைகள் மட்டுமில்லை விசைகளும் இருந்தன என்றெல்லாம் சொன்னான். இவன் ஒரு கேள்வி கேட்டிருக்கிறான். ‘ஐயா இந்த வாத்தியம் புதுசாக இருக்கிறதே. இதை ஊதுவதற்கு சுவாசப்பை நிறையவேலை செய்யவேண்டி வருமா?’ அதற்கு அவர் ‘சுவாசப்பை மட்டும் போதாது. உனக்குள்ளேயும் ஏதாவது இருக்கவேண்டும். அப்போதுதான் அதை ஊதித்தள்ளலாம்’ என்று சொன்னாராம். இதிலே எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவ்வளவு புத்திசாலித்தனமான பதிலை வேலுச்சாமியினால் தயாரித்திருக்க முடியாது. என் அண்ணரிடம் ஓர் ஒலிப்பதிவுக் கருவி அந்தக் காலத்திலேயே இருந்தது. அவர் அப்போது மணமுடிக்கவில்லையாதலால் ஒரு நண்பருடைய வீட்டில் தங்கியிருந்தார். அண்ணரிடம் இருந்த கருவியை எல்லோரும் நூதனமாகப் பார்ப்பார்கள். அந்தக் காலத்தில் அது தங்கத்திற்கு சமானம். அதைத் தொட ஒருவரையும் அனுமதிக்கமாட்டார். பாட்டுக் கேட்பதாயிருந்தாலும் ஒரு மூன்றடி தூரம் தள்ளி இருந்துதான் கேட்கவேண்டும். அதன் விசைகளை யாரும் எசகு பிசகாக திருகி சேதம் விளைவித்து விடுவார்களோ என்று பயந்தார்.

இப்பொழுது காணப்படும் கருவிகள் போல அது கைக்கு அடக்கமாக இராது. இரண்டு பேர் பிடித்து தூக்கவேண்டும். ஏழு அங்குலம் அகலமான இரண்டு ஸ்பூல்கள் இருக்கும். ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நாடா மாறும்போது இசையெழும்பும். அந்தக் கருவியின் தொழில் நுட்பங்கள் அண்ணருக்கு புரியாது. ஒலி நாடா மூன்று வேகங்களில் ஓடக்கூடியது. என்ன வேகத்தில் ஒலி பதிவுசெய்யப்பட்டதோ அதே வேகத்தில் ஓடவிட்டு பாடலைக் கேட்கவேண்டும். அந்த சூட்சுமம் அண்ணருக்கு பிடிபடாது. அவர் பாட்டு வைக்கும்போது வெளிநாட்டு பறவைகள் ஒன்றுசேர்ந்து கலகம் செய்வதுபோல சத்தம் வரும். கே.பி.சுந்தராம்பாள் வந்தபோது தன்னுடைய விதிமுறைகளைத் தளர்த்தி, ஒலிப்பதிவு கருவியை என்னிடம் ஒப்படைத்து, எப்படியும் அவர் குரலைப் பதிவு செய்து தரும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

ஒலிப்பதிவு செய்வதற்கு இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று கோயில்காரர் மற்றது பாடகர். பாடும்போது ஏதாவது தவறு ஏற்பட்டால் அதுவும் பதிவாகிவிடும். பின்னர் அந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்கிறோமோ அத்தனை தடவை அந்த தவறையும் கேட்போம். ஒரு கட்டத்தில் அப்படி தவறாக பாடுவதுதான் சரிபோலவும் தோன்றிவிடும்.

வேலுச்சாமி இந்த விசயத்தில் கெட்டிக்காரன், விடாப்பிடியானவன். எப்படியோ முக்கியமானவர்களுடன் பேசி ஒலிப்பதிவிற்கு சம்மதம் வாங்கி விடுவான். செல்வரத்தினம் என்று எனக்கு ஓர் உதவியாளன் இருந்தான். என் வயதுதான் அவனுக்கு என்றாலும் அவன் உடம்பு வாட்டசாட்டமாக இருக்கும். இரண்டு பேர் தூக்கவேண்டிய ஒலிப்பதிவுக் கருவியை அவன் ஒருவனாகவே தூக்கிவிடுவான். மேடையில் ஒலிவாங்கியை வைப்பது, வயர்களை பூட்டுவது போன்ற காரியங்களை அவன் பார்க்க உயர் தொழில்நுட்ப விசயங்களை நான் கவனித்துக்கொள்வேன். மிகப்பிரதானமான கல்பனாஸ்வரம் வரும் நேரத்தில் சரி கணக்காக நாடா முடிந்துவிடும். உடனே கருவியை நிறுத்தி நாடாவை இடம் மாற்றவேண்டும். அதற்கிடையில் ஸ்வரம் முடிந்து பாடகர் அடுத்த பாடலை ஆரம்பித்திருப்பார்.

எனினும் நாங்கள் பதிவு செய்த அத்தனையுமே பொக்கிசம்தான். அந்த வருடம் வேறு ஒருவருக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கே.பி.சுந்தராம்பாள் இந்தியா திரும்பிய பிறகும் அவர் குரல் எங்களுடனேயே தங்கிவிட்டது. அண்ணர் வசித்த வீட்டில் சுந்தராம்பாளுடைய குரல் காலை மாலை இரவு என்று ஒலித்தபடி இருக்கும். அண்ணர் உரத்த சத்தத்தில் பாட்டை வைப்பார், அயல்வீட்டு சனங்கள் எல்லாம் கேட்டு மகிழவேண்டும் என்ற கருணையில். கே.பி.சுந்தராம்பாளின் இசையை வர்ணித்து அவர் எட்டுப் பக்கம் கடிதம் அவருக்கு எழுதினார். அதற்கு பதில் வரவில்லை. அது போய்ச் சேர்ந்ததோ என்றும் தெரியாது.

காருகுறிச்சி அருணாசலம் கொழும்பு வரப்போவதாக செய்தி வந்ததுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மற்றவர்கள்போல ஒலிப்பதிவு செய்வதை எதிர்ப்பவரல்ல. எவ்வளவு வேண்டுமென்றாலும் பதிவு செய்யலாம். அருமையான மனிதர். அதைவிட அருமையான வாசிப்பு. ஆறுமணித்தியாலம் தொடர்ந்து வாசிப்பார். அவ்வளவையும் நான் ஒலிப்பதிவு செய்வேன். அவர் சுருதி சேர்ப்பது, சபையின் ஆரவாரம், கைதட்டல் எல்லாமே பதிவாகும். எப்பொழுது அந்த இசையை திருப்பிப் போட்டு கேட்டாலும் ஒரு சபையில் இருந்து ரசிப்பதுபோன்ற உணர்வை அது கொடுக்கும்.

காருகுறிச்சி தங்கிய அத்தனை நாட்களும் அவர் எங்கே கச்சேரி என்று போனாலும் நானும் வேலுச்சாமியும் செல்வரத்தினமும் அவருடன் போனோம். எங்களைப்போல ஒரு பெண்ணும் அவரைப் பின்தொடர்ந்தாள். சபையிலே ஒரே இடத்தை தேர்வு செய்து அங்கே உட்கார்ந்திருப்பாள். அந்தக் காலத்தில் ஆண்கள் ஒரு பக்கத்தில் சப்பாணிகட்டி உட்கார்ந்திருப்பார்கள். மறுபக்கத்தில் பெண்கள் அமர்ந்திருப்பார்கள். இந்தப் பெண் இரண்டு கால்களையும் ஒரு பக்கம் மடித்துவைத்து அதற்குமேல் உட்கார்ந்திருப்பாள். கச்சேரி முழுக்க அசையமாட்டாள். அவளுடைய முதுகு கம்புபோல நேராக இருக்கும். பின்னல் தலையில் நீளத்துக்கு மல்லிகைப்பூ வைத்திருப்பாள். முகம் மட்டும் அழுது வடிந்த முகம். அவள் நின்றதையோ நடந்ததையோ ஒருவரும் கண்டது கிடையாது. எப்பொழுதும் ஒரேமாதிரித்தான் உட்கார்ந்திருப்பாள். செல்வரத்தினம் அந்தப் பெண்ணின்மேல் காதல் கொண்டிருந்தான். காருகுறிச்சி என்னதான் பிரயத்தனப்பட்டு நாதஸ்வரத்தை உயர்த்தியும், தாழ்த்தியும், பக்கவாட்டில் அசைத்தும் வாசித்தாலும் இவள் முகத்தில் உணர்ச்சி பேதம் கிடையாது. ‘தாமரை பூத்த தடாகம்’ நாதஸ்வரத்தில் வந்தால் அவள் முகம் பளிச்சென்று பூத்துக் குலுங்கும்.

இதை எப்படியோ அவதானித்த செல்வரத்தினம் ‘தாமரை பூத்த தடாகம்’ என்று துண்டுகள் எழுதி காருகுறிச்சிக்கு அனுப்பத் தொடங்கினான். சில வேளைகளில் ஒலிவாங்கியை தள்ளிவைக்கும் சாக்கில் துண்டைக் கொடுத்துவிட்டு வருவான். கச்சேரி முடிவதற்கிடையில் நிறைய துண்டுகள் போய்ச் சேர்ந்துவிடும். இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று கச்சேரி நீளும். சில நாட்களில் கோயில் குளத்தில் உண்மையான தாமரை பூத்துவிடும் ஆனால் ‘தாமரை பூத்த தடாகம்’ வராது. பெண்ணின் முகம் இன்னும் அழுதுவடியும். செல்வரத்தினம் சோகமே உருவானவனாக மாறிவிடுவான். ஒலிப்பதிவு கருவியை என் அறைக்கு தூக்கிவருவதற்கு நான் வேறு ஆள் பார்க்கவேண்டி வரும்.

காருகுறிச்சி வாசிக்கும்போது அவருடைய கழுத்து படம் எடுக்கும் பாம்பினுடையதுபோல உப்பிப் பெருக்கும். ஒரு திகில் நாவல்போல அடுத்து என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். தவில் வாசிக்கும் தட்சிணாமூர்த்திக்குகூட அவர் என்ன வாசிப்பார் என்பது தெரியாது. என்னுடைய இசைப்பயிற்சியை வேலுச்சாமி அங்கேதான் நடத்துவான். ஒரு ராகம் தொடங்கியவுடனேயே அது என்ன ராகம் என்பதை அடையாளம் கண்டுபிடித்துவிடுவான். சில ராகம் அவனை திணறடித்துவிடும். தமிழ் சினிமாவில் காலை காட்டி, கையை காட்டி, முதுகை காட்டி இறுதியில் கதாநாயகியைக் காட்டுவதுபோல காருகுறிச்சி மெள்ள மெள்ள ராகத்தை வெளியே விடுவார். வேலுச்சாமி சில வேளைகளில் இது என்ன ராகம் என்று சொல்லி அது முடிவுக்கு வரும்தறுவாயில் மனதை மாற்றி வேறு ஒரு ராகத்தின் பெயரை சொல்வான். அவனுக்கே சிலது பிடிபடுவதில்லை. இது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

ஒருமுறை காருகுறிச்சி சீவாளியை எடுத்து சுத்தம் செய்து ‘பீப்பீ’ என்று ஊதி சரிபார்த்தார். நான் பதிவு செய்வதை நிறுத்திவிட்டேன். திடீரென்று ‘தாமரை பூத்த தடாகம்’ என்று ஆரம்பித்தார். இந்தப் பெண்ணின் முகம் இதற்காகவே வருடக்கணக்கில் காத்திருந்ததுபோல மலர்ந்தது. அவள் உடம்பு மலர்ந்தது. பார்த்தால் அங்கு கூடியிருந்த அத்தனை பெண்களின் முகங்களும் பூத்துக் கிடந்தன. அந்தக் காட்சியை பார்த்து மெய்மறந்து நின்ற நான் பதிவு பட்டனை அழுத்த மறந்துவிட்டேன். நான் என் வாழ்க்கையிலே பதிவுசெய்யத் தவறிய தலைசிறந்த பாட்டு அதுதான்.

கச்சேரி முடிந்ததும் பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்கும். பொன்னாடை போர்த்துவார்கள். நாதஸ்வரத்தில் கட்டித் தொங்கவிடுவதற்கு தங்கப் பதக்கம் கொடுப்பார்கள். ஒரு முறை மரத்தில் செதுக்கிய சின்ன நாதஸ்வரம் ஒன்றுகூட பரிசளித்தார்கள். இப்பொழுது பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் போய்ச்சேர்ந்திருக்கும் சந்தன நாதஸ்வரம்கூட அப்போது கொடுத்ததாக இருக்கலாம்.

ஒரு நாள் வேலுச்சாமிக்கு ரேடியோவில் பாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவன் பொறியியல் இறுதிப் பரீட்சையில் தோல்வியடைந்திருந்ததால் மறுபடியும் படித்துக் கொண்டிருந்தான். வானொலி வாய்ப்பு வந்ததும் பரீட்சையை விட்டுவிட்டு அதற்கு தயாரானான். நான் கேட்டபோது பரீட்சை எப்பவும் எழுதிப் பாஸாகலாம், இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் கிட்டாது என்றான்.

ரேடியோவில் பாடுவதென்றால் கச்சேரியல்ல. இவனைப்போல இன்னும் நாலு இளைஞர்களும் ஒருவர் பின் ஒருவராக பாடுவதற்கு வந்திருந்தார்கள். வேலுச்சாமி என்னையும் வரச்சொன்னதால் நானும் போயிருந்தேன். இதனிலும் முக்கியமான வேலை எனக்கு என்ன இருக்கிறது. சங்கீதத்தை இவ்வளவு நுட்பமாக தெரிந்து வைத்திருந்த வேலுச்சாமிக்கு, மற்றவர்கள் பாடுவதை கூறுகூறாக பகுத்தாயும் அவனுக்கு, சுத்தமாகப் பாடவே வராது. அவனுடைய பாட்டை பதிவு செய்து திருப்பி போட்டுக் காட்டினாலும் அவனுக்கு தான் செய்யும் தவறுகள் தெரிவதில்லை. சுருதியோடு எங்கே இணைந்துவிடுவோமோ என்று பயந்ததுபோல விலகியே பாடுவான். இது அவனுக்கு சீடனாக இருக்கும் பேறுபெற்ற எனக்கே தெரிந்திருந்தது; அவனுக்கு தெரியவில்லை. ரேடியோ நிலையம் போனதும்தான் என்ன ஒரு பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு புரிந்தது. வேலுச்சாமி சுருதிப் பெட்டியையும் கொண்டுவந்திருந்தான் ஆனால் அதை இயக்குவதற்கு ஆள் இல்லை. என்னைப் போடச் சொன்னான். நான் அதை பார்த்திருக்கிறேனே ஒழிய அதை முன்னே பின்னே இயக்கியதில்லை. ‘ஈசி, இப்படி போடலாம்’ என்று காட்டித் தந்தான். பெரிய தானம் வழங்க முடிவெடுத்த கனவான்போல நடந்துவந்து ஒலிவாங்கியின் முன்னே நின்று பாடினான். தனக்குப் பக்கத்தில் ஒருத்தன் நின்று மினக்கெட்டு சுருதிப்பெட்டியை இந்த அமத்து அமத்துகிறானே, இவனுடன் கொஞ்சம் ஒத்துப்போவோமே, என்றெல்லாம் வேலுச்சாமி நினைக்கவில்லை. அவன் தன் பாட்டுக்கு பாடினான். நான் என் பாட்டுக்கு சுருதிப் பெட்டியை போட்டேன். அன்று வானொலியில் பாடியபோது அவன் பாட்டுக்கு பக்கத்து பக்கத்தில் தனியாக ஒலித்த சுருதி நான் உண்டாக்கியதுதான். வானொலியில் அவனுடைய பாடல் போய்ச் சேர்ந்த அத்தனை வீடுகளுக்கும் என்னுடைய சுருதியும் போய்ச் சேர்ந்தது.

என்னுடைய அறைவாசிக்கு, வேலுச்சாமிக்கும் எனக்கும் தெரிந்த சங்கீதத்தின் கூட்டுத்தொகையிலும் பார்க்க அதிகம் தெரியும். அறைக்கு திரும்பியதும் நான் வாயை திறக்க முன்னரே அவர் ‘இண்டைக்கு சுருதிப் பெட்டியை போட்டவன் துப்புரவாய்ச் சரியில்லை’ என்றார். ஏதோ பக்கத்தில் நின்று பார்த்ததுபோல பேசினார். எத்தனையோ மைல் தூரத்தில் ரேடியோ நிலையம் இருந்தது. இவருக்கு இந்தச் சங்கதி எப்படித் தெரிந்தது, சுருதி போட்டவர் புது ஆள் என்பதை கண்டுபிடித்துவிட்டாரே. நான் அவரிடம் அன்று சுருதி போட்டது நான்தான் என்பதை சொல்லவில்லை. தலையைக் குனிந்தபடி, வாய் பேசாமல் உள்ளே போனேன்.

அதன் பிறகு எப்படியோ செய்தி பரவி ஒருவரும் என்னை சுருதிபோட அழைக்கவில்லை. நானும் அதை பெரிய இழப்பாக கருதவில்லை. ஏனென்றால் நான் அப்பொழுது இசைப்பருவத்தை தாண்டி இன்னொரு பருவத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.

- 2011-01-10 

தொடர்புடைய சிறுகதைகள்
முன்குறிப்பு:- நான் ஆபிரிக்காவில் ஐ.நா.வுக்காக வேலை செய்தபோது நடந்த கதை இது. ஊரும், பேரும் சம்பவங்களம் முற்றிலும் உண்மையானவை. அதற்கு நான் கொஞ்சம் உப்பு-புளியிட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து மணம் கூட்டியிருக்கிறேன். வேறொன்றுமில்லை. தயவுசெய்து கதை முடிந்தபிறகே பின்குறிப்பைப் படிக்கவும். --- அவருடைய ...
மேலும் கதையை படிக்க...
ஐயாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் பிள்ளைகள் பிறந்ததும் அவர்கள் சாதகத்தை எங்களூரில் பிரபலமான சாத்திரியாரைக் கொண்டு எழுதுவித்தார். நாங்கள் ஏழு பிள்ளைகள். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொப்பியில் முழுச் சாதகமும் எழுதப்பட்டிருந்தது. அந்த சாதகங்களை ஐயா ஒரு கட்டாக கட்டி ...
மேலும் கதையை படிக்க...
என்னுடைய முதல் மனைவிக்கு இந்த உலகத்தில் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. 1. சூரிய அஸ்தமனத்தின் போது பையிலே பணம் இருப்பது. கையிலே இருக்கும் காசை எந்தப் பாடுபட்டாவது நாள் முடிவதற்கிடையில் செலவழித்துவிட வேண்டும். காலையில் எவ்வளவு பணம் பையில் இருந்தாலும் இரவு படுக்கப் ...
மேலும் கதையை படிக்க...
கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித்திருந்தது; ஆனால் அது ஆபிரிக்காவுக்கு வரும் வரைக்கும்தான். இங்கே அவனுடைய பெயர் செய்தகூத்தை விவரிக்க முடியாது. போகிற இடமெல்லாம் முழுப் பெயரையும் எழுதும்படி கேட்பார்கள். 'தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்' என்று விஸ்தாரமாக இவன் எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் ...
மேலும் கதையை படிக்க...
அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் ...
மேலும் கதையை படிக்க...
விழுக்காடு
எங்கள் வீட்டு நீதிவான்
முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி
முழுவிலக்கு
தாழ்ப்பாள்களின் அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)