Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டொமேட்டோ ஏன் தக்காளி ஆனது?

 

பழைய சோற்றில் பாக்கெட் தயிரை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டவாறு உங்களிடம் இதைப் பகிர்ந்துகொள்ளும் நேரம்… தோழி கலா, ஆகாயத்தில் பயணித்துக்கொண்டிருப்பார்; மிதந்துகொண்டிருப்பார் அல்லது தவழ்ந்துகொண்டிருப்பார்.

கலா அமெரிக்கா போகிறார் என்பது, மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவாகியிருந்தது. அவரது கணவரும் எனது நண்பருமான அர்ஜுனன் பணி நிமித்தமாக முன்பே அமெரிக்காவுக்குப் பயணித்திருந்தார். அங்கு சென்று காலூன்றிய பின் மனைவியை அழைத்துக்கொள்ளும் ஏற்பாடு அவரது வேலைத்திட்டத்தில் இருந்தது. நண்பர் அர்ஜுனனை, சில மாதங்களுக்கு முன்பாக கண்ணாடித் தடுப்புகள் மிகுந்த விமான நிலையத்துக்குச் சென்று நானும் நண்பர்களும் வழியனுப்பினோம். அடுத்து கலா விமானம் ஏறப்போகும் தருணம் என்பது, என் எண்ணத்தில் இருந்ததே தவிர… கவனத்தில் இல்லை.

நேற்றைய இரவு 8 மணிக்கு கலாவிடம் இருந்து வந்த அலைபேசி செய்தியில்தான், காலை நேரத்து ஃப்ளைட்டில் அவர் பயணிக்கப்போவதை அறிந்தேன்.

டொமேட்டோ ஏன் தக்காளி ஆனது1மனைவியையும் அழைத்துக்கொண்டு போய் கலாவை வழியனுப்ப வேண்டும் என்பது எனது விருப்பம். மனைவி தனது அலுவலகத்தில் பணி முடித்து இரவு 8.15 மணிக்கு வந்தாள்.

”கலா அமெரிக்கா போகிறார்!” என்றேன்.

”போகட்டும்!”

முடிவு தெரிந்துவிட்டது. கலாவை வழியனுப்ப இனி இவள் வருவது என்றால், அவள் புஷ்பக விமானத்திலோ, பறக்கும் தட்டிலோ, அமெரிக்கா போனால்தான் உண்டு.

”சாப்பாடு ஆக்கியாச்சா?”

இதை பெண்ணிடம் ஆண் கேட்கும் கேள்வியாகவே இன்னும் புரிந்துகொண்டிருக்க வேண்டாம்.

”ஆக்கிட்டேன்” என்று பதிலிறுத்தேன்.

”கலாவை அனுப்பிட்டு, சாப்பிடுறதுக்கு இங்கே வந்துருவீங்கள்ல?”

”போயிட்டு போன் பண்றேன்!”

கலாவை வழியனுப்பப் போய்விட்டு போன் செய்ய மறந்ததற்கும், இப்போது பழையது தின்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது. பயணத்துக்குத் தயாராகிற ஒருவர் மீதான மனக்குவிப்பே இப்படி ஆக்கிவிட்டது. தவிர, ஆற்றுக்கும் சோற்றுக் கும் சம்பந்தம் இருக்கிறது.

அர்ஜுனனை வழியனுப்பும் போது அவர் அமெரிக்காவில் எங்கு போகிறார் என்று நான் கேள்வி கேட்கவே இல்லை. நிச்சயமாக அவர் வெள்ளை மாளிகைக்கு வேலைக்குப் போகவில்லை என்பதை மட்டும் அறிவேன்.

கலா குடியிருக்கும் அபார்ட்மென்ட்டுக்கு செக்யூரிட்டிகள் வைந்திருந்த ஏட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு நான் சென்ற நேரம், பயணப் பைகளை எப்படி வடிவமைத்துக்கொள்வது, கொண்டுசெல்லும் கிலோகிராம்களை எப்படிப் பிரித்து எடுத்துச்செல்வது என ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார் ரமேஷ். அர்ஜுனனுக்கும் கலாவுக்கும் உறவினர் அவர்.

”ஃப்ளைட்ல ஒரு க்வெஸ்ஷனர் கொடுப்பாங்க. அதைக் கவனமா ஃபில் பண்ணணும்” என்றார் ரமேஷ்.

”அப்படியா?!” எனக் கேட்ட கலாவின் முகத்தில் வியப்பு படிந்திருந்தது.

ரமேஷ், விமானப் பயணத்தின்போது கொடுக்கப்படும் கேள்வித்தாளை வியந்துகொண்டிருந்தார். ”அவர்கள் அவ்வளவு நுட்பமாக அந்தக் கேள்வித்தாளைத் தயாரித்திருப்பார்கள்” என்றும், ”நாம் தவறியும் ஒரு விதையைக்கூட நமது கைப்பையில் எடுத்துச் சென்றுவிட அனுமதிக்க மாட்டார்கள்” என்றும் விளக்கிக்கொண்டிருந்தார். ரமேஷ் அடுத்ததாகச் சொன்ன தகவலில் விதையை எடுத்துச் செல்வது என்பது விதியை எடுத்துச் செல்வதேதான் என்பதை உணர்ந்தேன். அது தனிமனித விதி அல்ல; மொத்த மானுட விதி.

”தக்காளி, இந்திய மண்ணின் தாவரம் அல்ல; தென் அமெரிக்கத் தாவரம். கால்பந்து அதிகமாக விளையாடும் மண்ணில் இருந்து அது கண்டம்விட்டு கண்டம் தாண்டியிருக் கிறது. அது அந்நியக் கனி என்பதால், இந்தியாவின் அனேக மொழிகளில் அது ‘டொமேட்டோ’வாகவே இருக்கிறது” என்றும், ”தமிழ் தனது செழுமையால் ‘தக்காளி’ எனப் பேர் பெற்றுவிட்டது” என்றும் கூறினார்.

தக்காளியுடன் ரமேஷ் நிறுத்திக்கொள்ளாமல், ”கலா, நீங்கள் அர்ஜுனனோடு வேலை செய்யும் யாராவது ஒருவரின் போன் நம்பரையும் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது” என்றார்.

வாஸ்தவம்தான். போக்கிடம் பற்றி அதிகபட்ச விவரம் கையில் இருப்பது வாழ்க்கைக்கு நல்லது. பேச்சின் ஊடே பயணத்துக்கான பொருட்கள் பொதியும் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. அப்போதுதான் திடீரென என் மனக்கண்ணுக்கு அமெரிக்காவின் விஸ்தீரணம் தோன்றி, அமெரிக்க தேசியக் கொடியில் விண்மீன்கள் எத்தனை இருக்கின்றனவோ, அத்தனை மாகாணங்கள் அங்கே உண்டு என்பது என் நினைவுக்கு வந்ததும் கலாவிடம் கேட்டேன்.

”அமெரிக்காவுல எங்க..?’

‘மிஸிசிப்பி.’

மிஸிசிப்பியை ஆறு என்று கேள்விப்பட்டிருந்த நான், அதை மாகாணமாகக் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆறு எனக் கேள்விப்பட்டிருந்தபோது, அதில் கிளிஞ்சல்கள் இருந்தன. கிளிஞ்சல்கள் உலை அரிசியைச் சமைக்கும் பாத்திரமாக இருந்தன. கிளிஞ்சலைப் பார்த்து ஆற்று நீரின் அளவு சொல்லும் திறன்கொண்ட பெண்களும் இருந்தார்கள். சிப்பி என்ற சொல்லே மனதுக்குள் கிளிஞ்சலையும் தோற்றுவித்திருக்கக்கூடும்.

மிஸிசிப்பியை கற்பனை செய்துபார்க்க சிரமப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு, ரகுவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நண்பன் ரகு, கலாவை வழியனுப்புவதற்காக வந்து திரும்பிய சொந்த ஊர்க் கூட்டத்தாரையும் சுற்றத்தாரையும் ரயிலுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தான்.

டொமேட்டோ ஏன் தக்காளி ஆனது2கலா மற்றும் அர்ஜுனன் ரத்தவழிப் பேர் சொல்லும் சுற்றத்தார் இப்போது வெளிக்கிட்டு, நாளை காலை ராமேஸ்வரத்திலும் ராமநாதபுரத்திலும் கடகங்கள் ஊறும் கடற்கரைக்கு அருகில் போயிருப்பார்கள். லாட வட்டங்களை நடைரேகைகளாகப் பதிந்து நடக்கும் அந்த நண்டுகளானவை, கொடுக்குக் கால் தூக்கி திசை எத்தனிக்கும் இடைவெளியில் பரிதவிக்கும் பரதவ ஓலம் காலச் செய்திகளில், தொலைக்காட்சிகளில் ஒலிக்கும். மீன் பிடிக்கப் போனோரையும் சிறைப்பிடித்து நிற்கும் சிங்களத்தின் இறுமாப்புக்கு சாட்சியம் சொல்லவும் இயலாது கிடந்து தவிக்கும் புத்தனின் புனிதப் பல். மனித உறுப்பில் அழத் தெரியாத ஒரே உறுப்பு, பல் தான். வீட்டுக்கு நானும் வழியனுப்ப வந்திருக்கிறேன் என்பதை முன்பே அறிந்திருந்ததால், நண்பன் ரகு எனது இரவு உணவு ஏற்பாடு பற்றி கேட்கிறான்.

”ரெண்டு பரோட்டா, ஒரு தோசை வாங்கிக்கிட்டு வந்திரு ரகு!”

ரகு உணவுப்பொட்டலங்கள் வாங்கி வருவதற்கு முன் ரமேஷ் போய்விட்டார்.

மத்தியானம் கலா கைப்படச் செய்த பிரியாணி, கடையில் இருந்து ரகு வாங்கிவந்த இட்லி, சப்பாத்தி என முன்னம் வாங்கிவற்றோடு எனது ஆர்டரையும் ரகு வாங்கி வந்திருந்தான். குடல் நிரப்பும் ஓர் அளவைக்காக மட்டுமே பரோட்டாவையும் தோசையையும் சொன்னேன் என்று ரகுவிடம் சொன்னபோது, ”விடுங்க பாஸு, எல்லா அயிட்டத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் தின்போம்” என்று ரகு பதில் சொன்னான். சாப்பாட்டு நேரம் ஆரம்பம் ஆகியது.

” ‘பால் பீச்சும் மாட்டைவிட்டு பஞ்சாரத்துக் கோழியைவிட்டு…’ பாட்டு எல்லாம் ஞாபகம் வருகிறதா கலா?” என்று நான் வினவியபோது, கலாவின் கண்களில் கடல் இருந்தது. அலைகள் எழுப்பாத கடல்; கதுப்பு வரை தாரை வடித்து காய்ந்துபோகும் உப்பு ஓடை.

‘உலகம் ஒரு தெருவுக்குள் முடிந்திருக்கக் கூடாதா?” என்றேன் நான்.

எனது கண்களுக்குள்ளும் கடல் உண்டு. எனினும் அலைநேரம் எனது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை.

‘தெரு என்றால், அது எவ்வளவு நீளமான தெருவாக இருக்கும்?’ – இது கலா.

”நம்முடைய தெருக்கள் எல்லாம் நமது அட்ரஸ் புத்தகத்தில் இருக்கிற நபர்களின் எண்ணிக்கையோடு முடிவதைத்தான் மனிதர்கள் விரும்புவோம்!’ என்றான் ரகு.

பேசப்பட்டதை ஓரிரு பக்க உரையாடலாக எழுதிவிடலாம் என்றாலும், பிரிவின் மௌனத்தை எழுதிவிட முடியாதே.

பயணத்தின்போது எடை அளவுகள், கால் டாக்சி ஏற்பாடு, கடிகார அலாரம், அயலக அனுமதி, கடவுச்சீட்டுக் கவலைகள் இவ்வளவையும் தாண்டி இன்றிரவு மீந்த உணவுப்பொருட்களை குப்பைப் பகுதிக்கு அனுப்பும் வேலையும் கலாவுக்கு இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். கலா, கவளங்கள் என்ற பேரில் பருக்கைகளைச் சவைத்து (சுவைத்து அல்ல) உணவை முடித்துக்கொண்டார்.

விமான நிலையத்தின் அனுமதி ஒழுங்குகள், எத்தனை மணித்தியாலங்களை எடுக்கும் என்பது தெரியாததால், கொஞ்சம் முன்கூட்டியே நிலையத்துக்குப் போகப்போவதாக கலா சொன்னார். அவர் விமான நிலையத்துக்குத் தயாராகும் முன்பே எனது விடை கூறல் முடிந்துவிட்டது.

வீட்டுக்கு நான் வந்தது நள்ளிரவாகவோ பின்னிரவாகவோ இருக்கலாம். வீட்டுக்கு வந்ததும் கதவு தட்ட வேண்டியிருந்தது. ஏழு நிமிடங்களுக்கும் மேலாகக் கதவு தட்டி ஒலி எழுப்பினாலும், உறங்குவோரை எழுப்பவேண்டி நேர்ந்தாலும், அந்த வீட்டின் எஜமானர் நாம் அல்ல. மனிதன் ரொம்பத்தான் அநாதை.

கலாவின் வீட்டுக்குப் போன பின்னால் எனது இரவு உணவு பற்றி முறையான தகவல்கள் தெரிவிக்காததால், மீந்திருக்கும் சோற்றை நானே தின்றுதீர்க்க வேண்டும் என்று கட்டளையிட்ட மனைவி, ‘இரவு பால் மட்டும் அருந்திவிட்டுப் படுத்துவிட்டதாக’க் கூறினார். வாழ்வின் எந்தக் கணத்திலும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திவிடக்கூடிய வல்லமை தாலிக்கு இருக்கிறது. கணவர்களையும் அவ்வப்போது தொங்கலில் விட்டால்தான், கழுத்தில் தொங்குவதற்கு அர்த்தம் இருக்கிறது.

இன்று காலையில், நமக்கு உயிர் தரிக்கும் தெம்பு உண்டு என்றால், அடுத்த நாள் நமக்கு இருக்கிறது. இல்லையெனில், நமனுக்கு இருக்கிறது. கலாவின் பயண நேர்வுக்கு இடையில் தக்காளி விதைகள் பற்றிய விவாதம் இடம்பெற்றதைப் பற்றி மனைவியிடம் கூறினேன்.

அவர், ”நீங்கள் என்னென்ன விதைகள் எடுத்துச் செல்கிறீர்கள்? என்பது எல்லாம் விமானப் பயணத்தின் கேள்வித்தாளில் இல்லை” என்றும், ”ஆனால், உடன் எடுத்துச் செல்லப்படும் பொருட்களின் உத்தேச மதிப்பு, கேள்வித்தாளில் இடம் பெறும்” என்றும் கூறினார்.

அவருக்கும் விமானப் பயண அனுபவம் இருக்கிறது. ”இதேதம்மா இப்படிக் கூறுகிறாய்?” என வியந்து வினவினேன். தனது பயணத்தின்போது உடன்பயணிக்கும் பொருள் மதிப்பு, ’10 லட்சம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகாய வழியில் காயமானாலோ, மாயமானாலோ இன்ஷூரன்ஸ் தொகை அதிகம் என்று யாரோ சொன்னது, அத்தகைய விளைவை உண்டுபண்ணியிருக்கக்கூடும்.

ஏதோ ஒரு விமான நிலையத்தில் தணிக்கை அதிகாரி 10 லட்சம் எவ்விதம் எனக் கேட்டிருக்கிறார். இவர் தாலிக்கொடியை இழுத்துக் காட்டியிருக்கிறார். பிறகு, அதிகாரியே வலிய வந்து கேள்விக் காகிதத்தின் மேற்படி பதிற்தடத்தில் 10 லட்சத்துக்குப் பதிலாக 50 ஆயிரம் என எழுதி இவரது பயணத்துக்கு ஆவன செய்திருக்கிறார். தாலிக்கொடியின் தங்க விலையோடு என்னை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கையில் எனது மதிப்பு மைனஸில் வந்துவிடுகிறது. உம்… நம்ம நினைப்பின்படி ஒன்றும் ஆவது இல்லை என்பதே உண்மை. ஆகவே, ‘போவது’ என்றால் போய்விடுவது நடந்துவிடும்போல் இருக்கிறது. பயணங்களின் கதை!

இதை எழுதிக்கொண்டிருக்கிற நேரம் கலா வானில் பறந்துகொண்டிருக்கிறார். பறந்துகொண்டிருப்பதாகவும் அவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நம் கணக்குக்கு அது பறத்தல்தான். நான் காலைப் பழையதைத் தின்றுகொண்டிருக்கிறேன்.

கடவுச்சீட்டு அவசியப்படாத கத்தும் பறவையினங்களே தாவரங்களையும் நாடு கடத்த முடியும். தனது விதைப்பின்மீது தானே உரிமை கோராத பறவைகள்.

பறவை போலவே தோற்றம் அளித்தாலும் ஏரோபிளேனின் எச்சத்தில் விதைகள் இருக்க முடியாது. ஆனாலும் இப்போது, எனது பழைய சோற்றுக்குத் தொட்டுக்கொள்ள இருக்கவே இருக்கிறது தக்காளிக் குழம்பு!

- ஆகஸ்ட் 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
கொடைக்கானலுக்குச் செல்லும் அந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக வெள்ளியருவிக்குப் பக்கத்தில் நின்றது. 'இங்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நிற்கும். எல்லாரும் இறங்கிப் பார்த்துவிட்டு விரைவில் வாருங்கள்' என்று ஓட்டுநர் பணித்தார். அப்படி அவர் நிறுத்தியதற்குக் காரணம், அவருக்கு இணை இருக்கையில் அமர்ந்திருந்த ...
மேலும் கதையை படிக்க...
செவிநுகர் கனிகள்
வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த இடம், அந்தி மாலையிலும் அதிகாலையிலும் பறவை இனங்களின் கெச்சட்டமும் இறக்கையோசையுமாக இருக்கும். வெயில் காலங்களில் பாம்பு, பாம்பிராணி, ஓணான் வகைகளின் ...
மேலும் கதையை படிக்க...
கல்தூண்கள் நட்டு, கம்பிவேலி இட்ட இரண்டு ஏக்கர் பரப்புக்குள் உலகத்தின் தாவரங்களை எல்லாம் வளர்க்கும் முஸ்தீபில் மாமனார் இருக்கிறார். பாப்ளார், பேரீச்சை போன்றவற்றை அவர் பார்த்திராததால், அவ்வகை இனங்களைத் தென்மேற்குப் பருவக் காற்று வீசும் இந்தப் பரப்பில் அவர் முயற்சிக்கவில்லை. மண் அனைத்தையும் ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபராக சில ஆலோசனைகள்
முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை மால் ஒன்றில் நான், ஆனந்தன், ரவி, வடிவேல் நால்வரும் இருந்தபோது முருகன் வந்தார். 40 வயதுக்கு மேல் ஆகியிருந்த முருகனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஆர்வலருக்கு இல்லை அடைக்குந் தாழ்…
உறக்கத்தின் கைப்பொருள் போல இருள் மெள்ள நழுவியது. உதயம் எழுந்தது. புதுச் சூரியனின் புது ஒளி எங்கும் பரவிய காலை நேரத்தில் கண் விழித்த அழகர்ராஜாவுக்கு, தனது நண்பனின் ஊரில் படுத்திருப்பது நினைவில் தட்டியதும், திருப்தியாக இருந்தது. உண்மையில் தனது ஊரில் ...
மேலும் கதையை படிக்க...
கொடையா, கானலா?
செவிநுகர் கனிகள்
உப்புக் கடலைக் குடிக்கும் பூனை!
தொழிலதிபராக சில ஆலோசனைகள்
ஆர்வலருக்கு இல்லை அடைக்குந் தாழ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)