Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டுபாக்கூர் ராஜாவும் டயமண்ட் ராணியும்

 

சென்னையில் போன வருடம் பெய்த அடைமழையின் ஞாபகங்கள் மற்றவர்களிடமிருந்து எனக்கு முற்றிலுமாக வேறுபட்டது. அதுவரைக்கும் எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த அறையை காலி செய்து விட்டு வடபழனி கோயில் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வீட்டில் இருந்த முத்தண்ணன் உடன் நான் போய் சேர்ந்திருந்தேன். முத்தண்ணன் என் வருகையினை ரொம்பவும் விரும்பவே செய்தார் என்பது அவர் என் மீது காட்டிய பாசமான அணுகுமுறையிலேயே தெரிந்தது. மதுரையில் முதலில் பரிச்சயமான பொழுது அவர் காட்டிய அதே அக்கறை, அதே நேசம். இன்னும் அதுகளில் எதுவும் குறையவில்லை என்பதே பெரும் ஆறுதலாய் இருந்தது. உதவி இயக்குனர் ஆக முயற்சித்துக் கொண்டு நான் சென்னை நகரத்து தெருக்களில் அலைந்து கொண்டு இருந்த கடினமான நேரத்தில் உணவு, உடை என்பதை விட ஒரு நண்பனுடனான உறைவிடம் பெரிய நிம்மதி.

தினமும் காலைல என்னை எழுப்புவதில் இருந்து துவங்கும் முத்து அண்ணனின் உதவிகள். நான் உற்சாகமிழக்கும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைதூக்கி நிறுத்தி நம்பிக்கை ஊட்டி மனநிலையை மாற்றுவதை அண்ணன் லாவகமாகவே செய்யும். சிலசமயங்களில் முத்தண்ணன் சொல்லும் சமாதானங்கள் வேறு யாரும் எனக்கு தராதவை.

முத்தண்ணனின் சிற்றன்னை மகன் பாலாவும் சனி ஞாயிறுகளானால்
எங்களது அறைக்கு வந்து விடுவது வழக்கம். அந்த மாதிரி சமயங்களில் தீர்த்தவாரி நடப்பதும் சகஜம். ஓரிரு முறை விடிய விடிய குடித்து விட்டு தூங்காமல் அதிகாலை கிளம்பி பாண்டிச்சேரி போய் வந்ததும் நிகழ்ந்தது.

அன்றைக்கு சனிக்கிழமை இரவு. சீட்டுக்கச்சேரி ஓடிக்கொண்டிருக்க நான் லேசாய் தலை வலித்ததால் கட்டிலில் படுத்துக்கிடந்தேன். முரளி, ஜேம்ஸ், பாலா, முத்தண்ணன், பக்கத்து ரூமில் வசிக்கும் நாகராஜ் 5 பேரும் சீட்டுக்களை விசிறி போல் கைகளில் தாங்கிப் பிடித்திருக்க கதவை யாரோ தட்டினார்கள்.

நான் கதவை திறந்தேன். எதிரே நின்றது கனகு.

“என்ன மாப்ள… நல்லாயிருக்கியா. . ?”

கேட்டபடியே தனது கையில் இருந்த பெரிய பையை நாசூக்காக உள் அறையில் போய் வைத்தான். பையினை திறந்து அதனுள்ளிருந்து ஒரு லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு நேராக வெளி ரூமுக்கு வந்தான்.

“என்ன முத்தண்ணா. . சவுக்கியமா. . ? ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்கள்ல. . ?ஒரு வேலை கிடைக்கிறா மாதிரி இருக்கு சென்னை’ல. அதான் கெளம்பி வந்துட்டேன். ”

அவன் எப்போதும் இப்படித்தான். அடுத்தவருக்கு சந்தர்ப்பமே தராமல் பேசுபவன். நான் முறைத்தபடி கேட்டேன்.

“சொல்லாம கொள்ளாம இப்படி வந்து நிக்கிறதாடா. . ? ஒரு ஃபோன் செஞ்சிருக்கலாம்ல. . ?”

அவன் சிரித்தான். “நான் கால் பண்ணி சொல்லலாம்னு தான் உன் நம்பர் கேட்டேண்டா மாப்ள… உன்தங்கச்சி செல்வி உன் நம்பர் தெரியாது’ன்னு சொல்லிடிச்சி. . ”

கனகுவிடம் இருந்து செல்வி என்னை காப்பாற்றி இருக்கிறாள்.

“அப்புறம் எப்டிடா ரூம் எல்லாம் கரக்டா கண்டுபிடிச்சு வந்தே. . ?”

அவன் அப்பாவி போல முகத்தை வைத்துகொண்டு சொன்னான்.

“முத்தண்ணன் கிட்டே கேட்டேன் மாப்ள” நான் அண்ணனை முறைத்தேன். அவன் தூங்கத் துவங்க முத்தண்ணன் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார்.

“சென்னைக்கு வர்றேன்’ன்னாண்டா தம்பி. . உன்னை பாக்க வரணும்’னு சொன்னதால அட்ரஸ் குடுத்தேன்டா நான்”.

“பாத்தீங்கள்ல… ? இவனை முதல் வேலையா துரத்தணும் அண்ணே. ” என்றேன். என்னால் இதை ஒத்துக்கொள்ளவே முடியாது. கனகு என்ற ஒருவன் பலமுறை எனது பழைய ஞாபகங்களின் வெறுப்பு அடுக்குகளில் இருந்து எட்டிப் பார்த்து என்னை கேலி செய்வது போலவே தோன்றியது.

“விடுறா… ? பாவம். அவன் என்ன பண்ணான்… ?” என்றார் அண்ணன்.

மறுநாளில் இருந்து நிம்மதி இழந்தேன் நான் என்று சொல்லாம். மழை மழை பேய் மழை. (அப்படி சொல்லக்கூடாதுடா தம்பி. பேரன்புக்கு பேர் பேய் மழையா… ? தாய் மழைன்னு சொல்லு… எவ்ளோ அழகா இருக்கு”)அது சரி. . மழையை எப்படி குறை சொல்வது… ? கனகு வந்த நேரம் என்னால் எதையும் ரசிக்க முடியவில்லை. அறையிலேயே முடங்கிக் கிடந்தோம்.

“இன்னிக்கு நான் சமைக்கிறேன்”ன்னு சொல்லி சமையலை ஆரம்பிச்சான். எனக்கு ஒண்ணும் பெரிசா பிடிக்கலை. முத்தண்ணனும் பாலாவும் கனகு செஞ்ச சிக்கன் குழம்பையும் கோலா உருண்டையயும் ரொம்ப ரசிச்சாங்க. பாராட்டித் தள்ளிட்டாங்கன்னு தான் சொல்லணும். எனக்கு ரொம்ப ஒண்ணும் பிடிக்கலை.

மறுநாளில் இருந்து ஆரம்பிச்சது அவன் அட்டகாசம். முத்தண்ணனை கைக்குள்ள போட்டுக்கிற வழியை மெல்ல கண்டுபிடிச்சான் கனகு. காலைல சீக்கிரம் எழுந்து ரூமை கூட்டுறானாம். நீட்டா வெச்சுக்கிறானாம். குடி தண்ணீர் வாங்கி வெக்கிறானாம். சமைக்கிறானாம் எல்லாத்துக்கும் மேலா… . சரியான ஏமாத்துக்காரன்.

இந்த முத்தண்ணனும் இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் “தம்பி… கனகு தம்பி கனகு”ங்கிறாரு.. எனக்கு பத்திக்கிட்டு வருது. போன மாசம் ஒரு நாள் எனக்கு நல்லா ஞாபகத்தில இருக்கு. சனிக்கிழமை நைட்டு. சீட்டுக் கட்டை எடுத்து கலைச்சு ரெண்டு கைலயும் பிடிச்சு விர்ருன்னு ஒண்ணு சேக்குறேன். வழக்கமா நான் இப்படி பண்ணதுமே முத்தண்ணன் என் தலையை கலைக்கும் செல்லமா.. என்னை பாராட்டுறா மாதிரி.

அன்னிக்கு வழக்கத்துக்கு மாறா, “தம்பி கனகு’ங்கிறாரு அவனும் என் கைல இருந்த சீட்டுக் கட்டை தான் வாங்கி என்னென்னமோ வித்தை எல்லாம் செய்யுறான். சும்மா சொல்லக்கூடாது. நல்லா தான் செஞ்சான் வலது கைய்யை ஆட்டி “டுபாகூர் ராஜா”ங்குறான்… தொறந்தா இஸ்பேடு ராஜா… இடது கைய்ய மூடி இப்ப பாரு டயமண்டு ராணி”ன்றான். தொறந்தா அதே ராணி… . .

அதுக்கு அடுத்து முத்தண்ணன் செஞ்சது தான் எனக்கு எரிச்சலாயிடுச்சு. என்னை செய்யுறா மாதிரியே அவன் தலையை செல்லமா இல்லைன்னாலும் அதே மாதிரி கலைக்கிறாரு நண்பா… . எனக்கு எப்படி இருக்கும்…?

ராசாங்களெல்லாம் ஒரே ஆட்டத்துல தோல்வியுற்ற பாண்டவர் ப்ரதர்ஸ் நிப்பாங்களே அது போல நின்றேன். முத்தண்ணன் கண்டுக்கவே இல்லை. அவருக்கு இது ஒன்னும் வித்யாசமா தெரியாம இருந்து இருக்கலாம். ஆனால் எனக்கு தெரியும் அந்த வலியும் வேதனையும்.

அப்புறம் நிறைய நடந்துச்சி வரிசையா. என்னை விட்டுட்டு ஒரு வாரம் சனிக்கிழமை ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போனது, முத்தண்ணன் ஆபீஸ்’லயே கனகும் வேலைக்கு சேர்ந்தது. பாலா உள்பட எங்கள் அறைக்கு வரும் வழக்கமான நண்பர்கள் கூட கனகுவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது.

ஒரு நாள் ஜாடையாகக் கேட்டேன் அண்ணனிடம்.

“என்னண்ணே, கனகு ரூம் எப்போ மாற்றதா சொன்னான். . ?”

“அவன் மாறணுமான்னு கேட்டாண்டா தம்பி.. நான் தான் அவன்’ட்டசொன்னேன்.. உன்னால ஒரு பிரச்சினையும் இல்லை. உதவி தான். நீ எங்கயும் போக வேண்டாம்’ன்னு சொன்னேன்.”

கடைசி வாய்ப்பும் போனது தெரிந்தும் அமைதியாய் இருந்தேன்.

எப்படி இந்த முத்தண்ணனுக்குப் புரிய வைப்பேன்… ? கனகு நல்லவன். அனுசரணையானவன். என்னை விட நல்லவன். என்னை விட திறமையானவனும் தான். நன்றாகப் பழகுவான். எல்லாம் சரி தான். எனக்குப் பொறாமையாக இருப்பதையும், என்னால் அவனை பொறுத்துக்கொள்ள முடியவே இல்லை. இன்று நேற்றல்ல… . பள்ளிக்காலம் தொட்டே நான் அவனை வெறுத்தும் அவன் என்னை விரும்பியுமே இதுகாறும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்று.

அடுத்த ரெண்டாவது நாளே என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கெடைச்சது. முத்தண்ணனிடம் சொன்னேன் “அண்ணே எங்க டைரக்டர் சார் புது ஆபீஸ்லயே ஒரு போர்ஷன்ல என்னையும் இன்னொரு உதவி இயக்குனரையும் தங்கச் சொல்லிட்டாரு… நாளைக்கு கிளம்புறேன் நான்”

அண்ணனுக்கும் கனகுக்கும் ரொம்ப சங்கடம். திருச்சி’ல இருந்து எங்க டைரெக்டர்கிட்ட உதவி இயக்குனரா ஒரு சின்ன பையன் சங்கர்’ன்னு சேந்து இருக்கான். தற்சமயத்துக்கு அவனோட ரூம்ல தான் இருக்கேன். முத்தண்ணன் கிட்டே சொன்னா மாதிரி ஆபீஸ்ல எல்லாம் ஒன்னும் தங்கலை நான்.

இந்த ரூம் தாம்பரத்துல இருக்கு. சின்ன ரூம். ஒரு கட்டில் தான். காமன் டாய்லெட் வேறு. இப்படி சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கு தான்…! இருந்தாலும்… இருந்தாலும்… நீங்களே சொல்லுங்க நண்பா… மனசுக்குள்ள பொறாமையோட வெந்து சாகுறத விட… இது எவ்வளவோ மேல்.

என்ன சொல்றீங்க. . ? 

தொடர்புடைய சிறுகதைகள்
ரகுராம சுப்ரமணியனை நான் சந்தித்தது திட்டமிட்ட சதி என்று தான் சொல்லமுடியும். யார் திட்டமிட்டது என்றால், எனது டீம் லீடர் நடேஷ். சென்ற வெள்ளிக்கிழமை என்னை அழைத்த போது ஒரு டீபகிங் இல் மூழ்கி இருந்தேன். "ரொம்ப உளைக்காத செல்லம்...என் காபினுக்கு வர்றே. ...
மேலும் கதையை படிக்க...
என்னைப் பின் தொடர்வது தான் லட்சியமெனில் முயன்று பார்க்கலாம். நான் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதை விமர்சிக்கப் போவதில்லை என்றால் மட்டும். அறையின் மூலையிலிருந்த எழுத்து மேசையில் கவிழ்த்து வைக்கப்பட்ட புத்தகங்களின் இடையிலிருந்த செல்பேசி அலறியது. படுக்கையிலிருந்து எழுந்து நகரும் பொழுது அவிழ்ந்திருந்த தனது கைலியை சரி செய்து கொண்டு மேசையை ...
மேலும் கதையை படிக்க...
ஏழு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடம் மிக பிரம்மாண்டமானதாயிருந்தது. அந்த நகரத்தின் அடையாளமே அந்தக் கட்டிடம் தான்.அதன் பெயர் வியா. அந்த நகரத்திற்கு அன்றாடம் வருகிறவர்களில் பெருமளவினர் அந்த வியா என்னும் வியாபாரஸ்தலத்துக்கு வருகை புரிவதற்குத்தான் வருகின்றனர் என்பது திண்ணம்.அதன் உரிமையாளன் பேர் வினோதன்.அவன் தன் ...
மேலும் கதையை படிக்க...
சந்தானத்தின் மாடி வீடு
புருஷோத்தமன் தெருவில் சந்தானத் தின் வீடு எது என்று கேட்டால், உடனே கை நீட்டும் அளவுக்குப் பிரசித்தம். காரணம், சந்தானத்தின் கேரக்டர். தன்னுடைய வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சந்தானம் முன்வைக்கிற கண்டிஷன்களாலேயே, சென்னையில் பிரபலமாகி இருந்தார். சந்தானம் வாடகைக்கு விடுவதாக இருப்பது ...
மேலும் கதையை படிக்க...
செய்தித்தாளை எப்பொழுதும் வாசிக்கிறவர்களுக்கு இந்த கதை வேறொரு கோணத்தில் முன்பே அறிமுகமாயிருக்க கூடும்.போன வருடமும் இந்த வருடமும் நாளிதழ்களில் வெளிவந்த இரண்டு செய்திகள்,ஒன்றுக்கொன்று எந்த விதத்திலும் சம்மந்தமற்றவை. ஆனால் இந்த கதை அந்த இரண்டு செய்திகளைப் பற்றியது என்பதால் அந்தச் செய்திகள் ...
மேலும் கதையை படிக்க...
உயர்வு நவிற்சி அணி
தொட்டிமீன்கள்
வினோதனின் காதல்
சந்தானத்தின் மாடி வீடு
இரண்டு செய்திகள் – ஒரு தொடர்புமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)