செவிநுகர் கனிகள்

 

வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த இடம், அந்தி மாலையிலும் அதிகாலையிலும் பறவை இனங்களின் கெச்சட்டமும் இறக்கையோசையுமாக இருக்கும். வெயில் காலங்களில் பாம்பு, பாம்பிராணி, ஓணான் வகைகளின் சரசரப்பும் அங்கு காணக் கிடைக்கும். அந்த இடத்தின் தெற்கு மூலையில், அந்திமந்தாரையின் சிறு புதரும் இருந்தது. அந்திமந்தாரைக்கு சில வகை வண்ணங்கள் உண்டு. இப்போது அந்த இடத்தில், தேநீர் தயாரிப்பு வேலை நடக்கும் ஒரு மேஜை இருக்கிறது.

ஊரும் அப்படி ஒன்றும் பெரிய ஊர் அல்ல. பேருந்தில் நெடுவழிப் பயணிக்கும்போது அது கண்ணில்பட்டால், ‘இது எந்த ஊரு?’ என ஆவல் மிகுந்து பக்கவாட்டில் பெயர்ப்பலகை ஏதேனும் கண்ணில் தட்டுப்படுகிறதா என நீங்கள் பார்ப்பதற்குள், ஊர் கடந்துபோயிருக்கும். பயணத்தின் இடையில் அந்திமந்தாரை பார்வைக்குக் கிடைக்காது. அந்த இடங்களை கடைகளாகக் கட்டிப்போட்டுவிட்டார் ராக்கப்பன்.

செவிநுகர் கனிகள்1அந்த இடத்தின் உரிமையாளரான ராக்கப்பன், இந்தக் கதை தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக வேர் தண்டுகளை வெட்டி மேவி, ஆள் அம்புகளை அதட்டி ஏவி, நான்கு கட்டடங்களைக் கட்டி முடித்தார். பொக்லைன் கொண்டு வேர்களைப் பெயர்த்தார். டிராக்டர்களைக் கொண்டு வேண்டாதவற்றை இடம்பெயர்த்தார். ஷட்டரைத் திறந்து உள்ளே போனால், ஒன்றுக்கொன்று வேறுபாடு காண முடியாத கனகச்சித சம செவ்வகங்களால் ஆன நான்கு கடைகளைக் கட்டினார். ஊரில் முதன்முதலாக ‘கமர்ஷியல் கரன்ட்’க்கு விண்ணப்பித்து மின்சாரம் வாங்கியதும் ராக்கப்பன்தான். ஆனால், இந்தக் கதை ராக்கப்பனைப் பற்றியதோ, அவர் விண்ணப்பித்து வாங்கிய கமர்ஷியல் கரன்ட் பற்றியதோ அல்ல.

கட்டிய கடைகளின் விலாச முகப்பில் ராக்கப்பன் தனது பேரனின் பெயராகிய ‘மனுஷ்’ என்பதைச் சொல்லும்விதமாக ‘மனுஷ் காம்ப்ளெக்ஸ்’ என எழுதவேண்டியிருந்தது. அந்தவிதமாக ஊரின் நாகரிக வாழ்வின், வளர்வின் எடுத்துக்காட்டாக மனுஷ் காம்ப்ளெக்ஸின் நான்கு கடைகளில் இரண்டாவது கடையாக வந்ததுதான் சந்திரமோகனுடைய செல்போன் கடை.

அதை ஒட்டி ஒரு டீக்கடையும் உண்டு. அந்திமந்தாரைகள் பூத்த தடத்தின் மேலாகத்தான் இப்போது பாய்லரின் புகை வெளியேற்றம். ராக்கப்பனின் இந்த நான்கு கடைகள் வடக்கு பார்த்து இருக்கின்றனவா… மேற்கு பார்த்து இருக்கின்றனவா என்பதோ, மற்ற இரண்டு கடைகளோ, இந்தக் கதைக்கு உளுந்தவடை அளவுக்குக்கூட அவசியம் இல்லாதவை.

‘காஸ்மிக் லிங்க்ஸ்’ என செல்போன் கடைக்குப் பெயரிட்ட சந்திரமோகனுக்கு வயது 45 இருக்கலாம். இந்த இடத்தில் இதைச் சொல்கிறவன் ஆகிய நான், எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாத நாக்கறு நிலையில்தான் இருக்கிறேன். சந்திரமோகனுக்கு வயது 45 இருக்கலாம் என்ற அளவிலேயே என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடிகிறது. அவரது வயதைத் துல்லியமாகச் சொல்லிவிட்டால், பிற்பாடு வசந்தியின் விஷயத்தில் நான் புறமுதுகிட்டுத் தோற்க வேண்டியிருக்கும். ஏதாவது ஒரு செய்தியை அறுதியிட்டுச் சொல்லலாம் என்றால், சந்திரமோகனின் சொந்த ஊர், எங்கள் ஊரில் இருந்து எட்டு மைல் தள்ளியிருக்கிறது என்பதை வேண்டுமானால் சொல்லலாம். அவரது வயதுக்கான வளர்ச்சியை அல்லது தளர்ச்சியை உடல் பாகங்கள் மொழிந்துகொண்டிருந்தன. கண்ணாடி அணிந்திருந்தார். ஓட்டுக்குள் இருக்கும் ஆமையை நினைவூட்டுவதுபோல கண்கள். சர்க்கரை நோயில் விழுந்த பழைய மல்யுத்த வீரன்போல தோற்றம். சந்திரமோகனுக்கு மனைவி இல்லை என்பதும், தேநீர்க் கடையின் பெஞ்சுக்கு சீக்கிரத்திலேயே தெரியவந்துவிட்டது. ‘மனைவி உடன் இல்லையா, இல்லவே இல்லையா?’ என்பதைக் கண்டடைய டீக்கடை பெஞ்சுகளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே பிடிக்கும்.

அலைபேசிகள், சிம்கார்டுகள், உதிரிப்பாகங்கள், அட்டை வழி, ஆகாய வழி ரீசார்ஜ்கள் அனைத்தும் சந்திரமோகன் கடையில் கிடைத்தன. இரண்டு காரணங்களால் அவர் அறிவாளியாகக் கருதப்பட்டார். முதலாவது காரணம், கடைக்கு முன்னால் பெஞ்ச்சைப் போடுவதற்கு மாற்றாக, நாற்காலிகள் வாங்கிப் போட்டதோடு இரண்டு நாளிதழ்கள் மற்றும் வாரம் இருமுறை அரசியல் இதழ்களையும் வாங்கிப்போட்டார். ஆகவே, பெரும்பான்மை டீக்கடைகள் போலவே அவரது கடையும், ஈமு முதல் ஈராக் வரை அலசும் தளமாக மாறிவிட்டிருந்தது. கூடுதல் மேதையாக அவர் அறியப்பட்டதற்கு இரண்டாவது காரணம், ‘… எண் இரண்டை அழுத்துங்கள்… இப்போதே சப்ஸ்கிரைப் செய்ய எண் மூன்றை அழுத்துங்கள்’ என சம்மன் இல்லாமல் ஆஜராகி, வழுவமைதி மற்றும் நிறப்பிரிகை ஆபத்துகள் விளைவிக்கும் குரல்களைத் தொடர்ந்து செல்போனில் சடாரென ‘பேலன்ஸை’ இழந்த அப்பாவிகளின் காசைப் பறித்த சில பாடல்களில் இருந்து, கம்பெனிக்கே போன் போட்டுப் பேசி பல வாடிக்கையாளர்களைக் காப்பாற்றினார் என்பதும்தான்.

சந்திரமோகன் என்ற பெயர் ஏதோ வரலாற்றை நினைவூட்டுகிறது என்பதால், நானும் என் நண்பனும் சமகால வரலாற்றைக் கருதி சந்திரமோகனுக்கு ‘சிம்’மராசு எனப் பெயரிட்டோம். நண்பனின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால், அவன்தான் இந்தக் கதையை முடித்துவைக்கப் போகிறவன்.

செல்போன் கடை ஆரம்பித்த சில நாட்களில் கடையில் சிம்மராசுக்கு உதவிகரமாக இளம்பெண் ஒருத்தி சம்பளத்துக்கு வந்து சேர்ந்தாள். அவளுக்கும் இந்தக் கதையில் கிஞ்சித்தும் இடம் இல்லை. வண்டி ஓட்டிக்கொண்டு சிக்னலில் இருக்கும்போது உங்களுக்கு வரும் ‘விளம்பரச் சேவை’ போன்றதே அவளது மதிப்பு. சமீபத்தில் புத்தாடை தரித்து வந்த அவள், பிறந்த நாள் எனப் பகர்ந்து சிலருக்கு சாக்லேட் கொடுத்திருப்பதால், பின்வரும் நாட்களில் அவளது பெயருக்கும் முக்கியத்துவம் ஏற்படக்கூடும். விதியை வென்றவர் யார்தான் இருக்கிறார்கள்? நேற்றைக்கு 21 வயதைத் தொட்ட அவளைவிடவும், ஒரு முதன்மைத்துவமும் கோர்வையும் ‘வசந்தி’க்கு இந்தக் கதையில் வந்துவிட்டிருக்கிறது.

எங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 12 கடைகளைக் கடந்து வேலிகள், ஓணான்கள், மழைக்காலத் தவளைகள், கன்றுகாலிகள், வண்டி வாகனங்கள் ஆகியன கடந்து மேற்கே 742.33 மீட்டர் தூரத்தில், ஊர் ஓரத்தில் வசந்தி வேலைசெய்யும் கம்பெனி இருக்கிறது. வசந்தி தாமதமாகப் போனால் அவளை யாராவது திட்டுவார்கள் என நான் நம்புவதற்கு, எனது மூளை பழக்கப்பட்டிருக்கவில்லை. வசந்திக்கு வயது 40-க்கும் மேல். இது உத்தரவாதமான செய்திதான். 15 வருடங்களுக்கு முன்னால் நான் பார்க்கும்போதும் இதேபோன்ற தோற்றமே அவளுக்கு இருந்தது. வாளிப்பு, வனப்பு, அவர் குறித்த சில கதைகள், அங்க அசைவுகள், உடல்மொழி, பேச்சு வழி… ஆகியன வெவ்வேறு கலவைகளில் வசந்தியை 22-க்கும் 42-க்கும் இடையில் வெகு வெகுகாலமாக நிறுத்தியிருக்கின்றன.

இதை எனக்குச் சரியாக விளக்க முடியவில்லை. வசந்தியை நான் பார்த்த ஆரம்பங்களில், பக்கத்து ஊரின் ஒரு நரை மீசைக்காரரோடு அவரைச் சம்பந்தப்படுத்தி ஒரு பேச்சு இருந்தது. அதற்கெல்லாம் 17, 18 ஆண்டுகள் கழிந்த போன மாதத்தில் சொசைட்டி ஆபீஸ் பக்கம் நான் நடந்துபோனபோது, ஏறக்குறைய 22 வயதுப் பையனுடன் வசந்தி பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

பையனாகப்பட்டவன், கோடை வெயிலில் மர நிழல் இல்லாப் பிராந்தியத்தில் முளையடித்துக் கட்டப்பட்ட பசுமாடுபோல மூச்சிரைத்துக்கொண்டிருந்தான். அவ்வண்ணமான வெயிலிலேயே கொளுத்திய குப்பைக்கூளம்போல சடசடவென எரிந்து, தகித்து அவன் மாய்ந்துகொண்டும் இருந்ததை கண்களால் பார்த்தேன். இப்போதும் வசந்தியைப் பற்றி சரியாகச் சொல்லிவிட்டேனா தெரியவில்லை. 20 ஆண்டுகளில் வசந்தியின் உடையிலும் எடையிலும் பெரிய மாற்றம் இல்லை. வசந்தி சூடிய பூக்களும் புடவைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன; ஆட்களுடன் சம்பந்தம்கொள்வதான கதைகள் மாறுகின்றன என்பதன்றி, மியூசியத்தில் காப்புறும் ஓவியம்போலவே இருக்கிறார். எனது மனக்குறை அவர் தனது உடையில் ஒருநாளும் அந்திமந்தாரையின் நிறத்தை நினைவுறுத்தவில்லை என்பதுதான். ஆவரை மஞ்சள், தந்த வெள்ளை என்பதான அந்திமந்தாரைகளும் உலகில் இருப்பினும் எனது அந்திமந்தாரைக்கும் வசந்தியின் அந்திமந்தாரைக்கும் தொடர்பே இல்லாமல் இருந்துவருகிறது இதுவரை.

நல்லவேளையாக வசந்தி எங்கள் ஊரில் வசிக்கவில்லை. தான் பயணித்து எங்கள் ஊருக்கு வரும் பேருந்தில் சில சலனங்களை மீதம்வைத்துவிட்டு எங்கள் ஊரில் இறங்கி, பணிபுரியும் நிறுவனத்துக்கு நடந்துபோக யத்தனிப்பார் வசந்தி. சூழல் கைவிடும் மிக அபூர்வமான பொழுதுகளில்தான், வசந்திக்கு கால்கொண்டு நடந்துபோக நேர்ந்திருக்கிறது. நடந்துபோவதற்கு அனேகமாக அவசியம் இல்லாதபடிக்கு, யாராவது ஒருவர் வண்டி பைக் மொபெட்டில் வந்து அழைத்துச்செல்வது வழக்கம்.

‘இந்தப் பக்கம்தான் போறேன்… நீங்க கம்பெனிக்கா?’ எனக் கேட்டு, வண்டியில் கூட்டிக்கொண்டுபோய் நிறுவன வாயிலில் இறக்கிவிட்டுவிடுவார்கள். ‘இந்தப் பக்கம்’ போவதற்கான வேலையை கால், அரை மணி நேரம் காத்திருந்து தயாரித்துவைத்திருப்பார்கள். இந்தப் பக்கம் போவதான வேலை அனேகமாக வசந்தியை இறக்கிவிடச்செல்வதாக மட்டுமேகூட இருக்கும். இதில் சில நபர்களது வேண்டுகோளை மறுத்து, வசந்தி நடந்தே செல்வதும் உண்டு. லிஃப்ட் கொடுக்கச் சென்றவர்கள் முகத்தில் அவமானத்தின் வெம்மை சுட்டுப்பொசுக்க, போனவாக்கிலேயே வண்டியைக் கொஞ்ச தூரம் போகவிட்டு அரை மணி நேர ஆசுவாசத்துக்குப் பின் ஊர் மீண்டிருக்கிறார்கள் என்பதுவும்கூட இங்கு குறிப்பிடத்தக்கதே.

இந்த, ‘கொண்டுபோய் இறக்கிவிடும்’ வேலையை ஒரு வேள்வியாகவே மேற்கொண்டு, பன்னெடுங்காலமாக ஒருவன் எங்கள் ஊரில் செய்துவருகிறான். பெட்டிக் கடை ராமராஜ். அவன் மிதிவண்டியை உபயோகித்த காலத்தில் இருந்து, தனக்கு என எக்ஸெல் வைத்திருக்கும் நாளது நாளாந்தம் வரை அதைச் செய்து வருகிறான். சைக்கிள் காலத்தில் அவன் ஆரம்பித்த ‘அன்று சிந்திய வியர்வை’யின் பூர்வபுண்ணியப் பலனாக, இன்றளவும் அவனது சுமைதூக்கும் பணியை பெண்கள் மறுப்பது இல்லை. இந்த விஷயம் அறிந்தோர் அவனது கடையில் தங்களது வண்டிகளை நிறுத்திவைத்துவிட்டுப் போனாலும், வண்டிச் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டுப் போக அஞ்சுவார்கள்.

போக்கிடத்துக்கான வண்டி இன்றி பயணிகள் தவிக்கிற அந்த நேரம், கடையில் வாடிக்கையாளர் யாரும் இல்லை எனில், ராமராஜ் ‘வசந்தி’க்காகவோ அல்லது நடைப் பயணிக்காகவோ தனது குதிரையைக் கிளப்பிவிடுவான். ‘பயணி’ என்பது அனேகமாக பெண்பாலினரைக் குறிப்பதாகும். பயணர்கள் அல்ல. ராமராஜ் வண்டியில் கொண்டுவிடும் அவ்வளவு கிளிகளையும் கொத்திவிடக்கூடிய சமர்த்தன் அல்ல என்பதை உள்ளூர்க்காரர்கள் அறிவார்கள். அந்த உண்மை சந்திரமோகனுக்குத் தெரியவில்லை.

ராமராஜ் கடையைத் திறந்துபோட்ட மேனிக்கே லிஃப்ட் கொடுக்கச் சென்றுவிடுவான். மூன்று காரணங்களால் அவனது கடையில் திருடுபோவது இல்லை. அவன் இல்லாவிட்டால் அவனது கடைக்கு காற்றும் வெய்யிலுமே காவல் இருக்கும். அல்லது வேலை இல்லா பன்னீர் காவல் இருப்பான். அதைவிடவும் முக்கியமான காரணமாக நான் நினைப்பது, அவன் கடையில் வாங்கப்படும் பொருட்கள் எதுவானாலும், மீண்டும் ஒரு தடவை அவனிடம் கொண்டுசென்று முறைப்பாடு வைத்த பிறகே உருப்படியான உபயோகத்துக்கு வந்துசேரும். இவ்வளவு சாதுர்யமான பொருட்களை, அவன் எங்கே வாங்குவான் என்பது ஆச்சர்யம்தான். அவன் இல்லாத நேரத்தில் அவனது கடையில் பொருட்களை எடுப்பது என்பது ‘ரிஸ்க்’ எடுப்பதே ஆகும்.

செவிநுகர் கனிகள்2பன்னீருக்கு வேலை இல்லை எனப் பொதுவாகச் சொன்னேனே தவிர, அவன் எல்லா வேலையும் செய்யத் தயாராக இருந்தான். ஆனாலும் அவனை நம்பி கப்பலையோ ரயிலையோ ஓட்டச் சொல்லி யாரும் தந்தது இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன் என் நண்பனிடம் சைக்கிளை பத்து நிமிடங்கள் இரவல் கேட்டதற்கே மறுத்துவிட்டான் என் நண்பன். பன்னீரினால் ஆகக்கூடிய வேலைகளும் உலகத்தில் உண்டென அவ்வப்போது நிரூபித்தும் வந்தான் அவன். பன்னீரிடம் அலாதியான குரலும் குணமும் உண்டு. அசந்தர்ப்பங்களால் நேர்ந்துவிட்ட இழப்புகள் பற்றி நீங்கள் பேச்செடுத்தால், ‘அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் நடக்கிற கதையே வேறு’ எனச் சூளுரைப்பான். ஆனால், கதைகளை மாற்றும் சந்தர்ப்பம் பன்னீருக்கு வாய்த்தது இல்லை.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் சிம்மராசுவின் கடையில் வசந்தி நின்றிருந்ததைப் பார்த்தேன். வசந்தியிடம் செல்போன் இருக்கிறது. ஆகையால் அங்கே அவர் நின்றது குறித்து பிரத்யேகமாக எதுவும் எனக்குப் படவில்லை. ஆனால், அடுத்த நாள் அதே நேரம் வசந்தி அங்கே நின்றுகொண்டிருப்பதையும் சிம்மராசு பம்பரமாக மாறுவதையும் பார்த்தேன். பெண்ணின் கண்கள் பம்பரமானால், ஆண்களே பம்பரமாக மாறிவிடுகிறார்கள். பக்கத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்று, நாளிதழின் ஒரு தாளை பதினாறில் ஒன்றாகக் கிழித்த சதுரவெட்டுக் காகிதத்தின் மீது, உளுந்தவடை ஒன்றை எடுத்துக்கொண்டு வசந்தியிடம் வந்தார் சிம்மராசு. வடையை எடுக்கும் நேரமும் கொடுக்கும் நேரமும் மட்டும் வலது கையைப் பயன்படுத்தினார். இதர எட்டுத் தப்படிகளின் நடையின்போது இரண்டு கரங்களாலும் சீதனத் தட்டைப்போல அந்தக் காகிதத்தை அவர் ஏந்தியிருந்தார். வடையை வசந்தி விள்ளியபோது ஆவி பறந்தது. சிம்மராசு அவளையே பார்த்தவாறு வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்ததுபோல் இருந்தார். ஆவி பிரிந்து காற்றில் கலப்பதை அப்போதுதான் கண்ணால் பார்த்தேன். ஆவி பிரிந்தும் அமரத்துவம் எய்திவிட்டது வடை. வடை தின்கிறார் வசந்தி. உண்மையில் அந்தக் காட்சி எனது வடிவ இயல் அறிவை விகாசமடையச் செய்துவிட்டது.

அடுத்த நாள் தேநீர்க் கடைக்கு நானும் போய் வடை தின்றேன். வடைக்கு அடியில் வைக்கப்பட்ட காகிதத்தை ஆராய்ந்து, செவ்வகங்களை வெட்டி சதுரங்களையும் சதுரங்களை வெட்டியோ ஒட்டியோ செவ்வகங்களையும் உண்டாக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தேன். மேலும் தேநீர் அருந்தும்போது உளுந்தவடையைப் பற்றி சிந்தித்தேன். இந்த உளுந்தவடையின் சிறப்பு அதன் நடுவிலுள்ள துளைதான். அந்தத் துளையினால் வடையின் புறப் பரப்பளவில் மாற்றம் இல்லை என்பதுடன் அந்தத் துளைதான் வடை முழுதையும் பச்சையடிக்காமல் வேகவைப்பதற்கும் உதவுகிறது. மற்றும் உள்சுற்றில் அதற்கென உருவாக்கிக்கொள்ளும் பொன்னிறப் படலம்… ப்ச். உடனே தேநீரைக் குடிக்காமல் இருந்தால், இன்னும் பல வடைகளை நான் தின்ன நேர்ந்திருக்கும்!

ஒருவாரம் வெளியூர் சென்றிருந்த நான், ஊர் திரும்பியதும் நண்பனைச் சந்தித்தேன். இருவரும் தேநீர் அருந்தப் போனோம். செல்போன் கடை பூட்டியிருந்தது ஏமாற்றத்தை அளித்தது. டீ குடித்துக்கொண்டு, ”என்னடா சிம்மராசு கடை பூட்டியிருக்கு?” என்றேன். கண் ஜாடை காட்டி அமைதிப்படுத்தியவன், தேநீருக்குப் பிறகு ஒதுக்குப்புறமாகக் கூட்டிப்போய்க் கூறினான்.

‘சிம்மராசுக்கு ஆக்ஸிடென்ட்.”

‘என்ன ஆச்சு… எங்கே?”

‘வடக்குத் தெருவுக்கு வண்டில ஃபாஸ்ட்டாப் போயி முக்குல திரும்பறப்ப, ஆட்டோவுல மோதிட்டார். ரைட் ஹேண்டுல எலும்பு முறிவு. ரெக்கவர் ஆகி வர, ரெண்டு மாசம் ஆகும்.”

‘இவர் எதுக்குடா அங்க போனாப்ல?”

‘பன்னீரைப் பார்க்க…”

‘பன்னீர்?”

”அவன்தான் வசந்திக்கும் சிம்மராசுக்கும் இடையில காதல் தூதன். நியாயம் கேக்க ஆவேசமாப் போயி, கண்மூடித்தனமா வண்டியில விழுந்துட்டாரு!”

”பன்னீர்கிட்ட இவரு என்ன நியாயம் கேக்கணும்?”

நண்பன் புன்னகைத்தான்.

‘பல அளவுல விசாரிச்சு இந்த உண்மையைக் கண்டுபிடிச்சுருக்கேன். ஊர்ல எவனுக்குமே தெரியாது இது…”

போச்சு! நண்பன் இந்த இடத்துக்குப் போய்விட்டான் என்றால், வெகுநேரத்துக்கு விஷயம் வெளியே வராது. எளிய மன்றாட்டுகளைப் போட்டு மனமிரங்க வேண்டினேன். செவிநுகர் கனிகள் என்பனவே இம்மாதிரிச் செய்திகள்தானே. இறுதியாக ஒருவிதமாக அருளினான்.

வசந்தியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படும் இடைநேரமாகிய வடை நேரம் தவிர, சிம்மராசுக்கு வசந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. இந்த நேரத்துக்குள்ளாக தனது பூரண உட்கிடக்கைகளை முழுக்கத் தெரிவிக்க இயலாத சிம்மராசு, இடைக்கால நிவாரணமாக பன்னீரைத் தூதுவனாகக் கொய்து எடுத்திருக்கிறார். இதன் உடனடிப் பயனாக பன்னீருக்கு சில்லிப் பரோட்டாக்கள், சிகரெட்டுகள், சினிமா டிக்கெட்டுகள், சில்லறைக் காசுகள் ஆகிய சிற்றின்பங்கள் லபித்துவந்தன.

இப்படியான நல்கைகளை பன்னீருக்கு வழங்கிக்கொண்டு, வசந்தி தனக்கே தனக்குத்தான் என எண்ணி மனக்கோட்டை கட்டிக்கொண்டு மகிழ்வெய்தி இறும்பூதெய்தியிருந்த காலைகளிலே, அடுத்தடுத்து இரண்டு நாட்கள் ராமராஜுடன் வசந்தி வண்டியில் போவதைப் பார்த்ததும், ரத்தம் கொதிப்பேறி வண்டியை எடுத்துக்கொண்டு பன்னீரைப் பார்க்கப் போயிருக்கிறார் சந்திரமோகன். அப்போதே அந்தப் பேராபத்து விபத்து!

வாகனத்தில் அடியுண்டதால், தற்கால நிலைமை அவருக்குச் சிக்கலிலும் சிகிச்சையிலுமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் ஓர் இடைத்தூதனாக பன்னீர் செயல்பட்டிருப்பது எனக்குப் புதுச் செய்தியாக இருந்தது. நண்பன் இதைச் சொல்லி முடித்ததும், எனக்கு வியப்பும் பச்சாதாபமும் ஒருங்கே எழுந்தன.

வசந்திக்கு பல ஆட்கள் லிஃப்ட் கொடுப்பது பற்றியும், குறிப்பாக ராமராஜின் சேவை பற்றியும் ஊரார் பலரும் அறிந்ததே. பக்கத்து ஊரில் இருந்து வந்து கடை வைத்திருந்ததால் சந்திரமோகனுக்கு அதுவரை தெரியாமல் போய்விட்டிருந்ததே இந்த விபத்துக்குக் காரணம். சந்திரமோகனும் எங்கள் ஊரில் பிறக்கவில்லை. வசந்தியும் எங்கள் ஊரில் பிறக்கவில்லை. ஆவலாதியான குரலில் நண்பனிடம் அங்கலாய்த்தேன்.

”கால் நூற்றாண்டு வரலாறு தெரியாம கையை முறிச்சுக்கிட்டாரேடா சிம்மராசு. அது சரி… இந்த ஆள்கிட்ட என்ன வசீகரம்! வசந்தி மடிஞ்சிருக்கு?” என வினவினேன்.

‘ஆள் எக்ஸ் சர்வீஸ்மேன். பென்ஷன் வருது…”

‘இது எனக்குத் தெரியாதே!”

நண்பன் முறைத்தவாறே பதிலிறுத்தான். ”உனக்கு என்னதான்டா தெரிஞ்சிருக்கு… இது தெரிய..? தெரிய வேண்டியவங்க

தெரிஞ்சுக்குவாங்க. புரியுதா?”

‘அதெல்லாம் சரிடா. வடை வாங்கித் தர்ற ஆள் அப்படியே இவரே வசந்தியை வண்டியில கொண்டுபோய் விட வேண்டியதுதான? என்ன கெட்டுப்போச்சு?”

எனது கேள்விக்குக் குபீரென ஒரு பதில் சொன்னான் நண்பன்.

”மணக்கும் வடைகள் வேறு… மனத் தடைகள் வேறு!”

- டிசம்பர் 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…
'ஒன்றியச் செயலா ளரே... எங்கள் மனதில் ஒன்றியச் செயலாளரே!’ என்று பேனர் வைத்த போதுதான் குமாரு, நம்ம ஒ.செ. கதிரேசனின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றான். நீங்காத இடமே மங்காத இடமாக மாறப்போகும் சந்தர்ப்பத்துக்காகத்தான், மறுபடியும் அந்த இடத்தில் குமாரு உட்கார்ந்திருந்தான். அது ...
மேலும் கதையை படிக்க...
பகவதி அம்மன் கோயிலின் மார்கழி மாத இரவு நேரத் தப்படிப்புப் பறைச் சத்தத்தின் துள்ளல் துல்லியமாகக் கேட்கும் தூரத்தில் அந்த அலுவலகம் இருக்கிறது. கிராம நிர்வாக அலுவலகம். அதன் வடக்குப் பக்க ஜன்னலைத் திறந்துவைத்தால், கோயிலின் மஞ்சள் பூசிய 3 கலசங்களைப் ...
மேலும் கதையை படிக்க...
மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு
தோட்டத்து வீட்டின் பட்டாசாலையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த புருஷோத்தமன் நள்ளிரவில் கண் விழித்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதான உணர்வு மேலிட்டது. மின்சாரமும் மின் விளக்கும் இல்லாத அந்த இடத்தில் அவனது தலையணைக்கு அடியில் பேட்டரி லைட் இருந்தது. சுற்றிலும் மேலும் ...
மேலும் கதையை படிக்க...
கிளிவலம் வந்த நல்லூர் என்னை ஆவலுடன் வரவேற்றது. வேறு மாநிலத்தில் அன்றாடப்பாடுகளுடன் ஜீவித்திருந்த என்னைத் தொலைபேசியில் அழைத்தார் அப்பா. ‘‘எலெக்சன்ல மெம்பருக்கு நிக்கிறேன்யா... உடனே வா!’’ ஊருக்குப் போய் இறங்கி யதும், நான் முதலில் சந்தித்த வேட்பாளர் அப்பா அல்ல. அவரது தற்காலிக வைரியான ...
மேலும் கதையை படிக்க...
கல்தூண்கள் நட்டு, கம்பிவேலி இட்ட இரண்டு ஏக்கர் பரப்புக்குள் உலகத்தின் தாவரங்களை எல்லாம் வளர்க்கும் முஸ்தீபில் மாமனார் இருக்கிறார். பாப்ளார், பேரீச்சை போன்றவற்றை அவர் பார்த்திராததால், அவ்வகை இனங்களைத் தென்மேற்குப் பருவக் காற்று வீசும் இந்தப் பரப்பில் அவர் முயற்சிக்கவில்லை. மண் அனைத்தையும் ...
மேலும் கதையை படிக்க...
அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…
இந்த நாள்… இனிய நாள்
மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு
ஒரு ஊர்ல ஒரு தேர்தல்!
உப்புக் கடலைக் குடிக்கும் பூனை!

செவிநுகர் கனிகள் மீது ஒரு கருத்து

  1. Rathinavelu says:

    நல்ல கதை பலசுவை, வடைச் சுவையுடன், நகைச்சுவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)