‘செல்’லுமிடமெல்லாம் தொலைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 17,027 
 

”வெளியே போகும்போது மறக்காம ‘செல்’லை வீட்டிலேயே வெச்சுட்டு போங்க” என்று சொல்லும் அளவிற்கு நான் தொலைத்த செல்ஃபோன்களின் எண்ணிக்கை அளவுக்கு மிஞ்சி போய்விட்டது.

நோக்கியா, சாம்சங், எல்.ஜி., சோனி எரிக்ஸன், ரிலையன்ஸ் என்று பாரபட்சமில்லாமல் அத்தனை வகையாறா கம்பெனிகளின் செல் கருவியையும் தலா ஒன்று வீதம் வாங்கி தாரவாத்த பெருமை எனக்குண்டு.

செல் யுகம் தொடக்க காலத்தில் நாலாயிரத்து சொச்ச விலை கொடுத்து நான் வாங்கியிருந்த செல்லை அத்தனை செல்லமாகத்தான் பாதுகாத்தேன். அதற்கென்று அளவெடுத்து தைக்கப்பட்ட ஜாக்கெட் போன்ற உறையில் திணிக்கப்பட்டு, இலவச குடிநீர் தொட்டியில் தொங்கும் எவர்சில்வர் டம்ளர் கட்டுண்டு காணப்படுவதுபோல அதை கழுத்தோடு கட்டிக் கொண்டு திரிவேன். ஒரு மகா சத்திய பத்தினிகூட தன் கழுத்து தாலியை தாமதுண்டு நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரியும் வாய்ப்புண்டு. ஆனால் என் கழுத்தோ நானோ செல்லை விட்டு விரிந்த சந்தர்ப்பமே இல்லை எனலாம். குளிப்பறை, கழிப்பறை இத்யாதி இடங்களம் இதில் அடக்கம்.

இப்படித்தான், என் மைச்சினன் பையன் கல்யாணத்தில் கல்யாண சத்திர குளியலறைக்கும் செல்லை விடாமல் கூட்டிப் போனேன். செல் தொங்கிக் கொண்டிருந்த கழுத்து பட்டை நொந்து நூலாகிவிட்டதில் எங்கோ செல் நழுவி போய்விட்டது. காலை கல்யாண டிபன் இழுப்பில் எந்த பிரக்ஞையுமில்லாமல் குளியலறை கம் கழிப்பறையிலிருந்து வெளியே வந்து அவசர அவசரமாக டிரஸ்ஸை செய்துக் கொண்டு முருவலான மசால் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த மயக்கத்தில் செல் ஞாபகம் விட்டுப் போயிருந்தது.

ஒரு ஏப்பம் வெளிப்பட்டபோதுதான், டிபன் திணிப்பால் நிறைந்த தொப்பை சற்றே விரிந்து எப்போதும் இப்பட சமயங்களில் தட்டுப்படும் கழுத்திலிருந்து தொங்கும் கருவி காணப்படாததை உணர்த்தியது.

காபியை பாதி கிளாஸ் குடித்துவிட்டு பதைப்போடு எழுந்துக் கொண்டேன். எங்கே தொலைத்தேன் என்று தெரியாமல் படுத்து எழுந்ததிலிருந்து போய் வந்த அத்தனை இடத்திலேயும் தேடி பார்த்தாயிற்று. எல்லோரிடமும் விசாரணை செய்தாயிற்று. நாலாயிரத்து சொச்ச ‘செல்’ அம்பேல். என் மனைவியின் கடுமையான அனல் கக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் இங்கும் அங்கமாய் ‘எங்கே தேடுவேன் உன்னை எங்கே தேடுவேன்’ என்று நான் அலைந்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் மச்சினன்தான் ஒரு யுக்தியை முன் மொழிந்தான்.

”அத்திம்பேர் கல்யாணத்திற்கு எத்தனையோ நல்லவா கெட்டவா வர்றா… நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். யார் எடுத்தான்னு சந்தேகப்படமுடியும் சொல்லுங்கோ… அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு… உங்க நம்பரை என் செல்லுலே போடறேன் உங்க ரிங்டோன் எங்கிருந்து வருதோ, அவாகிட்டே இருக்கிறது தெரிஞ்சுடும்… பையிலே, பெட்டியிலேயோ வைச்சிருந்தாலும் காட்டிக் கொடுத்துடும்” என்றான்

செல் வந்த ஆதிகாலங்களில் தொலைந்த செல்லை தேடும் இதுபோன்ற யுக்தி புதுமையாகத்தான் இருந்தது.

உடனே என் நம்பரை மச்சினன் தன் செல்லில் போட அம்மாம் பெரிய கல்யாண மண்டபத்திலிருந்த பத்து அறைகள், ஹால், ஸ்டோர் ரூம், சமையல் கூடம், ஆபீஸ் ரூம் என்று ஒன்றையும் விடாமல் என் உறவுக்கார இளைய தலைமுறை அத்தனையும் ‘ரிங்டோன்’ எங்கே கேட்கிறதென்று, பாம் வைத்த இடத்தை பரப்பரப்பாக தேடும் நாய் ஸ்க்வார்ட் கணக்காய் நாலா புறமும் செவியை தீட்டிக் கொண்டு தேட ஆரம்பித்தாயிற்று.

இந்த பரபரப்பில் கல்யாண மண்டபத்து வேலைக்காரி பீதியுடன் ஓடிவந்தான்.

”ஐயையோ… பத்து பாத்திரம் தேய்ச்சுகினு இருக்கச் சொல்ல பூமிக்கடிலேயிருந்து எவனோ ஒரு பேமானி ‘வாடி என் கெப்பகிழங்கே’ன்னு பாடறாங்க… ஓடியாங்க புடுச்சி நாலு சாத்து சாத்தலாம்” என்று அலறினாள்.

எல்லோரும் ‘செல்’லை மறந்தவர்களாய் வேலைக்காரி சொன்ன அதிசயத்தை காண அவள் பின்னே சென்றனர். அவள் குந்தி பத்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த இடம் செப்டிக் டாங்கின் மேல் தளம். அதற்குள் ஒலித்த ‘பேமானி’யின் பாட்டு என் செல்லின் ரிங்டோம்தான் என்பதெல்லாம் அவர்களுக்கு அப்புறம் புரிந்துவிட்ட சமாசாரங்கள்.

என் கழுத்திலிருந்து நழுவி ஈரோப்பியன் கிளாஸட் வழியே செப்டிங் டாங்கில் மூழ்கியும் என் செல் தன் கடமையை மறக்காமல் செய்துக் கொண்டிருந்தாலும், அதை திரும்பவும் சக்தியிலிருந்து எடுக்க மெனகிட முடியாமல் அதற்கு அங்கேயே இறுதி அஞ்சலி செய்துவிட்டு வந்தேன்.

அந்த ‘செல்’ விட்ட சாபமோ என்னமோ, அடுத்தடுத்து வாங்கிய செல்கள் ஒவ்வொன்றாக தொலைந்துக் கொண்டே வந்தன.

இப்போது வைத்திருப்பது என் பையன் யூ.எஸ்ஸிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது டாலர் கொடுத்து வாங்கி தந்த வஸ்து! இதை வீட்டில் உபயோகிக்க மட்டுமே எனக்கு உரிமை. வெளியே செல்வதென்றால் மறக்காமல் வைத்துவிட்டுதான் போகவேண்டும்.

வெளியிலே கடைக்கு கடை தொங்கும் ஒரு ரூபாய் தொலைபேசி பெட்டியில் அவ்வப்போது என் செல் நம்பரை போட்டு பேசினால், அதை எடுக்கும் என் மனைவி என் செல்லில் யார் யார் கூப்பிட்டார்கள் என்று சொல்வாள். நான் அவர்களுக்கெல்லாம் வீட்டிற்கு திரும்பியோ, அவசரமென்றால் வெளியே ‘பூத்’திலோ பேசி விடுக்கிறேன்.

செல் தொலைப்பிற்கு இது ஒரு மாற்றாகத்தான் உள்ளது. நீங்களும் முயற்சி செய்யலாம்.

”யோவ்! மொபைல் போன்னா என்னய்யா அர்த்தம்?” என்று கேட்பீர்கலானால், கை பேசியை தொலைத்துக் கொண்டே இருங்கள் உங்கள் இஷ்டம் அது!

– மார்ச் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *