செடி நட்டவர் தண்ணீர் ஊற்றுவார்

 

அப்புசாமிக்குப் பல விஷயங்கள் ஆரம்பத்தில் புதிராகத்தான் இருக்கும். ஆனால் சீதாப்பாட்டி லாரி ஒன்று அழைத்துக்கொண்டு வருமாறு ஒரு நாள் காலையில் கட்டளையிட்டது அப்புசாமிக்கு விளங்கவேயில்லை.
மேஜைமீது நாலைந்து வருட வரவு செலவுக் கணக்குப் புத்தகங்கள் பிரித்துப் போடப்பட்டிருந்தன. அப்புசாமி சொன்னார்: ”ஓ! வருமான வரி ஆபீசுக்கு இந்தக் கணக்குகளையெல்லாம் எடுத்துப் போகவா?” என்றவர், ”இந்த நாலைந்து புத்தகங்களுக்காகவா ஒரு லாரி?” என்றார்.

”எந்த இன்கம்டாக்ஸ் ஆபீசுக்கும் நாம் இப்போது போகவில்லை. கலெக்ஷனுக்காகப் போகிறோம்,” என்ற சீதாப்பாட்டி மேஜை மீதிருந்த கணக்குப் புத்தகங்களை எடுத்து வைத்தாள். மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கூட்டுக்குள் போட்டாள். ” இன்னும் போகவில்லையா நீங்கள்?”

அப்புசாமி தலையைச் சொறிந்தவர், ”நீ எலக்ஷனுக்கு நிற்கப் போகிற சமாசாரம் எனக்குத் தெரியவே தெரியாதே? வெற்றிகிட்டுவதாக!” என்றார்.

”கலெக்ஷன்! கலெக்ஷன்!” வசூலிக்கப் போகிறோம். நாட் எலக்ஷன்.”

”எங்கே கலெக்ஷன்?”

”சைதாப்பேட்டை சீனிவாச மூர்த்திக்கு நீங்கள் ஐந்நூறு ரூபாய் கொடுத்து எவ்வளவு நாளாகிறது?”

”ஆமாம். அது ஆகிறதே ஏறக்குறைய, எட்டு வருடம். பாவம், கஷ்ட ஜீவனம். ஆசாமி முன் மாதிரி நம்மை வந்து பார்க்கக்கூட வருவதில்லை. பஸ் சார்ஜுக்கே பாவம் தகராறோ என்னவோ?”

”சுத்த ரிப்வான்வின்க்ளாக இருக்கிறீர்களே. நீயு சீனிவாச மூர்த்தியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது பாவம். ஹி இஸ் ப்ளையிங் இன் கார் நெளவடேஸ். சொந்தமாக நர்ஸரி கார்டன்ஸ் வைத்திருக்கிறான்.
ஊருக்கெல்லாம் செடிகள் சப்ளை செய்கிறான். பக்கத்து வீட்டில் இரண்டு செடிகள் வாங்கி வந்தார்கள். விவரம் தெரிந்தது. இப்போது நாம் நேரில் போவது பாக்கியைத் தருகிறாயா, இல்லை, அந்த அமெளண்டடுக்குச் செடிகளைத் தருகிறாயா என்று கேட்டு லாரியில் செடிகளை வாரிப் போட்டுக் கொண்டு வந்துவிடுவது.”

அப்புசாமி தன் தலையில் அடித்துக் கொண்டார்-சீதாப்பாட்டியின் தலையில் அடிக்கத் துணிவில்லாததால்.

”நாமென்ன ஆடா, மாடா? ஐந்நூறு ரூபாய் பெறுமான செடிகள் நமக்கு எதற்கு? வெற்றிலையாயிருந்தாலும் தின்று தீர்க்கலாம்.” என்றார்.

சீதாப்பாட்டி, ”அவனிடமிருந்து எப்படித்தான் பின்னே பாக்கியை ரிகவர் செய்வது? நீங்களும் பாண்டோ ரெஸிப்டோ எதுவும் அவனிடமிருந்து வாங்கிக் கொள்ளவில்லை! இதைவிட ஒரு வடிகட்டின அசட்டுத்தனம் இருக்க முடியுமா?”

அப்புசாமிக்குத் தன் தவறு தெரிந்தது. மேற்கொண்டு வாதித்து வீணாக மூச்சுக்குள்ளாவதைவிட லாரி தேட ஓடுவதே மேல் என்று கிளம்பிவிட்டார்.

கொடாக்கண்டர்களுக்குள் வருடா வருடம் போட்டி வைத்து, அந்தப் போட்டிக்கு ஒரு ரோலிங் கப்பும் பரிசாக வைக்கப்படுமானால், அந்தக் கப் சீனிவாச மூர்த்தியிடமேதான் நிரந்தரமாக இருக்கும். எல்லாருடைய கணக்க நோட்டிலும் வரவு-செலவு என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். சீனிவாச மூர்த்தியின் நோட்டுகளில் வரவு பத்தி ஒன்றுதான் இருக்கும்.

அந்த ஆளைச் சீதாப்பாட்டி சரியானபடிதான் கணித்து வைத்திருந்தாள். கையிலே விரலும், கடையிலே செடியும் தவிரத் தற்சமயம் தன்னிடம் தம்பிடி கிடையாது என்று சாதித்தான். ‘அப்படி அத்தனை அவசரமானால் செடிகளை வாரிக்கொண்டு போங்கள்’ என்றான். அந்த வார்த்தைகளுக்கே காத்திருந்தது போல் சீதாப்பாட்டி, ”ஊம். சரி. செடிகளைத்தான் எடுத்துக் கொள்கிறோம். எங்கள் பங்களாவில் வைத்துக் கொள்கிறோம்,” என்றவள் நர்ஸரியிலிருந்த தோட்டக்காரனை எல்லாச் செடிகளையும் வாசலில் நின்ற லாரியில் வைக்கச் சொன்னாள். ஆனால் அதற்குள் சீனிவாசமூர்த்தி ஏதோ சாடை காட்டினார். எஜமான் காட்டிய கண் சாடையைப் புரிந்து கொண்ட தோட்டக்காரன், ”நமக்கு வேலை இருக்குதுங்க.” என்று சொல்லி நகர்ந்து விட்டான்.

ஜனகருடைய வில்லைத் தூக்கும்படி ராமச்சந்திர மூர்த்திக்கு விஸ்வாமித்திரர் கண் பார்வையால் கட்டளையிட்ட மாதிரி, அடுத்த கணம் சீதாப்பாட்டி அப்புசாமியைக் கண்ணால் நோக்கினாள்.

மனைவியின் குறிப்பறிந்து நடக்க வேண்டியது கணவனின் தலையாய கடமை அல்லவா?

அப்புசாமி அடுத்த கணம் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு தொட்டியாகத் தூக்கி லாரியில் ஏற்றினார். அவருக்குச் சந்தேகம்; ஒவ்வொரு தொட்டியிலும் இருப்பது செடியா? சவமா?

அந்தக் கணம் கனத்தது.

ஒரு வழியாக ஐந்நூறு ரூபாய் பெறுமான செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பாக்கி வசூலை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் சீதாப்பாட்டி திரும்பினாள்.

நூற்றுப் பதின்மூன்று செடித் தொட்டிகளைப் பார்த்து அப்புசாமி எயிறுகளை நறநறவெனக் கடித்தார். செடிகள் வந்து சேர்ந்து மூன்று நாளாயின. அதற்குள் அந்தப் பொல்லாத செடிகள் அவரைப் படாதபாடு படுத்திவிட்டன.

”ஊம்…எய்தவன் இருக்க அம்பினை நோவதென்ன?” என்று முணுமுணுத்துக் கொண்டார். ‘எங்களுக்குத் தண்ணீர் ஊற்று, களை பறி, எரு போடு’ என்று செடிகள் அவருக்குக் கட்டளை இடுவதில்லை. அதைச் சொல்வது சீதாப்பாட்டி.

அப்புசாமி எந்த ஜென்மத்திலும் காத்தவராயனாக – அதாவது தோட்டக்காரனாகப் பிறந்ததில்லை. ”அடாடா! அந்த சாப்ளிஸ்கைத் தூக்கி ‘சன்’னில் போட்டு விட்டீர்களே? அது நிழலில் வளர வேண்டியதாயிற்றே, தூக்கங்கள், தூக்குங்கள்,” என்பாள் பாட்டி.

அப்புசாமியின் மூச்சில் ஒரு மூவாயிரம் குறையும். தொட்டியைத் தூக்கி நிழலில் வைப்பார்.

‘இதை யார் ஷேடோவில் வைத்தது? வாட்டர் யார் விட்டது? இந்த க்ரீப்பருக்கு ஒரு கோல் நட்டு வைக்கக் கூடாதா? பழைய பூக்களை சிசர்ஸால் கட் செய்யக் கூடாதா?’-சீதாப்பாட்டியின் பத்து கட்டளைகளில் இவை சில.

அப்புசாமி பூவாளியால் செடிகளுக்கு ‘ஷவர் பாத்’ செய்வித்துக் கொண்டிருந்தார். ‘நூற்றுப் பதின்மூன்று குட்டி அரக்கர்களே, எங்கே வந்து சேர்ந்தீர்கள் என் கழுத்தை அறுக்க?’ என்று மனத்துக்குள் திட்டியவாறே தண்ணீர் ஊற்றினார். ஒரு ரோஜாச் செடி அந்தத் திட்டு பொறாமல் அவர் தண்ணீர் ஊற்றியதும் சட்டென்று தலை நிமிர்ந்து தன் முள்ளால் அவரைக் குத்திவிட்டது! வந்ததே கோபம் அப்புசாமிக்கு. ‘படக்’கென்று அந்தக் கிளையைக் கிள்ளினார். கிள்ளனிதோடு, ”நன்றி கெட்ட பதரே! நீ பெரிய ரோஜாவோ? முளைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் இவ்வளவு திமிரா? வா. நாளியிலிருந்து உனக்கு வெந்நீர் ஊற்றுகிறேன்!” என்று வாய்விட்டு வெடித்தார்.

அதே சமயம், ”சார்! அப்புசாமி சார்!” என்று ஒரு குரல் கிசுகிசுத்து அவரை அழைத்தது.

அப்புசாமி ஒருகால் ரோஜாக்கிளையை ஈவிரக்கமின்றிக் கிள்ளியதால் மனச்சாட்சிதான் கூப்பிடுகிறதோ என்று ஜிப்பாவுக்குள்ளாக மனத்தைப் பார்த்தார். அங்கு எவ்வித அசைவுமில்லை. ‘தன்னைக் குத்த வரும் ரோஜாவையும் கிள்ளு,’ என்று தர்ம சாத்திரம் கூறுவதை அவர் அறிவார்.

அவரைக் கூப்பிட்டது அடுத்த வீட்டிலிருக்கும் இன்ஜினீயர் பிள்ளை சம்பத். பனைமரத்தைப் பார்ப்பது மாதிரி அவனது நெடிய உருவம் எங்கிருந்தாலும் தெரிமாதலால் அப்புசாமிக்கும் எளிதில் தெரிந்தது.

”ஏராளமான செடிகள் வாங்கித் தள்ளிவிட்டீர்கள் போலிருக்கிறது! எல்லாம் மூர்த்தி நர்ஸரி கார்டன்ஸ் தானே?” என்றான் அவன்.

அப்புசாமி தலையில் போட்டுக் கொண்டார். ”வேண்டாமென்றால் கேட்கிறாளா? அந்தப் பயல் எங்களுக்குக் கொஞ்சம் பாக்கி தர வேண்டும். பாக்கியை இந்த வழியில் வசூல் செய்து விட்டோம்.”

”ஊம்…” லேசான பெருமூச்சு விட்டான் இன்ஜினீயர் பிள்ளை. பிறகு, குரலைத் தாழ்த்திக் கொண்டு, ”அப்புசாமி சார்! உங்களுக்குத் தெரியுமோ? அந்த மூர்த்தி ஒரு காரியம் செய்தான் என்றால் அதில் ஏதோ ஓர் அர்த்தம் இருக்கிறது. அவன் அவ்வளவு ஏமாந்தவன் அல்ல. நீங்கள் செடிகளைத் தூக்கி வந்து விட்டதை அவன் அனுமதித்ததற்கு விசேஷ காரணம் உண்டு. ஊரே பேசிக் கொள்கிறதே, உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.

அப்புசாமி சம்பத்துக்குத் தன் காதைக் கொடுத்தார். அடுத்து, சம்பத் கூறிய விவரங்களைக் கேட்டதும் தன் கையிலிருந்த புவாளியைத் தொப்பென்று நழுவ விட்டார்.

”ஆ! அப்படியா?”

”பின்னே, பொய்யா சொல்கிறேன்?”

அப்புசாமி இரவு தூங்கவே இல்லை. சீதாப்பாட்டி நன்கு தூங்கியதும் மெதுவாக எழுந்து தோட்டத்துப் பக்கம் வந்தார்.

முதல் தொட்டியை எடுத்தார். கடப்பாறையால் செடி இருந்த மண் சட்டியைப் பொட்பொட்டென்று தட்டி உடைத்தார். செடியை உதறித் தூக்கிப் போட்டார். மண்ணை ஆவலுடன் கிளறிப் பார்த்தார்.

பிறகு அடுத்த தொட்டியை எடுத்தார். கடப்பாறையால் உடைத்தார்.

இதே மாதிரி ஏறக்குறைய இருபது தொட்டிகளை உடைத்துவிட்டு இருபத்தொன்றாவது தொட்டியை
உடைக்க அவர் கடற்பாறையைத் தூக்கியபோது ஒரு கரம் வெடுக்கென்று அந்தக் கடப்பாறையைப் பறித்துக் கொண்டது!

பேயோ பிசாசோ என்று திரும்பினார் சீதாப்பாட்டி தான், கண்களில் அனல் எழ, கொள்ளிக் கண் பிசாசாக நின்றிருந்தாள். ”என்ன காரியம் செய்கிறீர்கள்? வாட் இஸ் திஸ் அட்ராஸிடி! ஹ¥லிகானிஸம்! இப்படியா குழந்தைகள் போன்ற செடிகளை மர்டர் செய்வது? நீங்கள் ஒரு மனிதரா?”

கடப்பாறையைப் பறித்து வீசிப் போட்டாள்.

அப்புசாமி, ”சீதே! உனக்கு விஷயம் தெரியாது. நாம் ஒரு பேராபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் நல்ல வேளை. பக்கத்து வீட்டு சம்பத் சொன்னான். சீக்கிரம்! சீக்கிரம்! நீயும் இன்னொரு கடப்பாறை எடுத்து வந்து தொட்டிகளை உடை” என்றார்.

”நான்சென்ஸ்! தூக்கக் கலக்கத்தில் என்னவோ உளறுகிறீர்கள்!”

அப்புசாமி சொன்னார்: ”ஐயோ! வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடக்கூடாது சீதே. நம்ம சீனிவாசமூர்த்தி எவ்வளவு விடாக் கண்டன். அவன் ஒரு காரியத்துக்குச் சம்மதித்தானென்றால், அதற்கு என்ன அர்த்தம்? அவனைப் பற்றி ஊரே பேசுகிறதாமே? மலேயாவிலிருந்து நிறையத் தங்கம் கொண்டுவந்து பதுக்கி வைத்திருக்கிறானாம். விற்பனைக்கு வைத்திருக்கிற சில தொட்டிகளில் பதுக்கியிருக்கிறானாம், யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி! கடைசியில் நாமல்லவோ அகப்பட்டுக் கொள்வோம்! அதனால் நம் தொட்டிகளில் ஏதாவது தங்கம் இருந்துவிடப் போகிறது என்று உடைத்துப் பார்க்கிறேன். நீ சம்மதிப்பாயோ, மாட்டாயோ என்று….”

சீதாப்பாட்டி பல்லைக் கடித்தாள். தலையில் அடித்துக் கொண்டாள். ”ஐயா, இப்படிக்கூட ‘ஸ்டுப்பட்’ ஆக இருக்கிறீர்களே? அநியாயமாக இருபது செடியைப் பாழடித்துவிட்டீர்களே! அந்தப் பக்கத்து வீட்டுப் பையன் நம் வீட்டில் நிறையச் செடிகள் இருக்கிற பொறாமையால் இப்படி உங்களைக் கிளப்பி விட்டிருக்கிறான். நீங்களும் நம்பி நல்ல விலைச் செடிகளையெல்லாம் கொன்றுவிட்டீர்களே?”

அப்புசாமி செய்வதறியாது நின்றார். இரண்டு நாள் கழித்து மூர்த்தி நர்ஸரி தோட்டத்திலிருந்து மூர்த்தியே வேனில் அவசர அவசரமாக வந்தான். சீதாப்பாட்டியிடம் ”பாட்டி! நீங்கள் பெரிய மனசு செய்து நான் செய்த ‘டிலே’யை யெல்லாம் மறந்து ஒரு உதவி செய்ய வேண்டும்”, என்று கெஞ்சினான்.

சீதாப்பாட்டி ”என்ன விஷயம்?” என்றாள் வியப்புடன்.

”ஒன்றுமில்லை. இப்போது என் நர்ஸரியில் செடிகளே இல்லை. இருந்ததையெல்லாம் நீங்கள் ஜப்தி செய்து வந்து விட்டீர்கள். எனக்கு அவசரமாக நூறு செடிகள் வேண்டும். ஒரு வனமகோத்சவ ஆர்டர் வந்திருக்கிறது. பெரிய இடத்திலிருந்து.”

சீதாப்பாட்டி அமைதியாகச் சிரித்தாள். ”டபிள் தி ரேட்! தட் இஸ், தெளஸண் ருபீஸ்! என்ன?” என்றாள்.

ஓ! ரெடி! செக்காக்கூட இல்லை. ‘ரெடி காஷ்’ கொண்டு வந்திருக்கிறேன்,” என்று சொல்லி மூர்த்தி
ஆயிரத்தைக் கொடுத்தான்.

செடிகளை லாரியில் தூக்கிப் போட்டுக்கொண்டு மூர்த்தி சென்ற பிறகு சீதாப்பாட்டி சிந்தனை வசப்பட்டு உட்கார்ந்திருந்தாள்.

அப்புசாமியிடமிருந்து ஒரு சிரிப்பு வெளிப்பட்டது. ”பாவம் மூர்த்தி!”

”என்ன பாவம்?” என்றாள் சீதாப்பாட்டி.

”அவனுக்கு யாரோ ஆர்டர் அனுப்பியிருக்கிறார்கள் என்று பறந்தோடி வந்தானே, அந்த ஆர்டரை அனுப்பியது நானேதான். இந்த மாதிரி ஒரு கடிதம் தட்டி விட்டால், அவன் உடனடியாக சரக்குக் கைவசம் இல்லாததால் நம்மிடம் வருவானே!”

சீதாப்பாட்டி அப்புசாமியைப் பெருமதிப்புடன் பார்த்தாள்! ‘ஒண்டர்·புல்’ என்ற வார்த்தை அவளிடமிருந்து வெளிப்பட்டது. 

தொடர்புடைய சிறுகதைகள்
விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் - நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் ...
மேலும் கதையை படிக்க...
(கவித்துவமான தலைப்பு மாதிரி இருக்கிறதல்லவா? சூட்சுமமாக எதையோ மறைமுக மாக உணர்த்துவது போல் தோன்றுகிறதல்லவா? ஏமாந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அசல் பேனா பற்றிய கதைதான் இது!) எனது பேனாக்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஒரு பனிப் போர், பொறாமைப் போராட்டம் நடந்துவருவதை ...
மேலும் கதையை படிக்க...
நானா பைத்தியம்?
 பிற்பகல் மூன்று மணி. அலாரம், 'கிர்ர்...' என்று அடித்தது. அதைத் தொடர்ந்து, "ஊம்...போதும் தூங்கினது. வேக்கப்! இரண்டு விஷயம்! மத்தியான்னத் தூக்கம் ஆயுளைக் குறைக்கும். இரண்டாவது, வேலை இருக்கிறது," என்று சீதாப்பாட்டி, காப்பி ஒரு கையிலும் அலாரம் டைம்பீஸ் ஒரு கையிலுமாக, ...
மேலும் கதையை படிக்க...
அப்புசாமி வேளா வேளைக்கு ஒழுங்காக சாப்பிட்டாலும் வயிற்றில் ஒரு கபகப உணர்வு கொஞ்ச நாளாக இருந்து வந்தது. டிசம்பர் ஸீஸனில் அவர் விட்ட பெருமூச்சைக் கொண்டு எட்டு கிராமங்களுக்குக் காற்றாடி ஆலைகள் நிறுவியிருக்கலாம். எண்ணூர் அனல் மின்சார நிலையத்துக்குக் கணிசமான அனல் உதவியிருக்கலாம். விழாக்களில் பொன்னாடைகள் ...
மேலும் கதையை படிக்க...
பிரியமுள்ள கணவருக்கு, வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி ஆகிவிடும். வலை பீரோவை நன்றாகக் கவனிக்கவும். ஏதேனும் எறும்புகள் தென்படுகின்றனவா? வலை பீரோவின் கால்களுக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றவும். கொஞ்சம் நெய் ...
மேலும் கதையை படிக்க...
‘‘சரி... நடந்தது நடந்து போச்சு! இனிமே நடக்கறது நல்ல தாவே நடக்கும். நம்பிக்கை யோடு இரு. ஒண்ணு சொல்றேன், நல்லாக் கேட்டுக்கோ. எது ஒண்ணும் நிரந்தரமில்லே. வர்றப்ப யார் கூட வந்தே? நினைச்சுப் பார். நம்ம கூடவே யாரும் இருக்கப் போறதில்லே, ...
மேலும் கதையை படிக்க...
உறுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா? இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே தப்பில்லே... சிலதை மறைச்சுத்தான் ஆகணும்னு! அந்த ரெண்டிலே இது எந்த ரகம்னு புரியலே! படவா, அவனைச் செருப்பைக் கழட்டி அடிக்கணும் போல ஆத்திரம் ஆத்திரமா ...
மேலும் கதையை படிக்க...
காலட்சேப பவன்
ஆவியில் மூன்று வகை - கெட்ட  ஆவி, நல்ல ஆவி, கொட்டாவி. மூன்றாவது வகை ஆவி அப்புசாமியிடமிருந்து அடுத்தடுத்துப் பிரிந்துகொண்டிருந்தது. வளசரவாக்கத்தில் உற்சாகமான சில இளைஞர்களும், அவர்களைவிட அதிக உற்சாகமுள்ள சில வயசானவர்களும் சேர்ந்து 'காலட்சேப பவன்' என்னும் நவீன சபா ஒன்றை ...
மேலும் கதையை படிக்க...
நண்பன் நாராயணன் ஏதாவது கனவு கண்டால் அவனது மனைவியிடம்கூடச் சொல்லமாட்டான். (அப்படியே அவன் சொன்னாலும் அந்த அம்மையார் பொறுமையாக காது கொடுத்துக் கேட்கமாட்டாள்.) ஆகவே தனது கனவுகளை சுடச்சுட சொல்லுவதற்கு சில வேளைகளில் என் வீட்டிற்குக் காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவான். அன்றைக்குக் ...
மேலும் கதையை படிக்க...
ஓட்டேரிப் பாதையிலே..
அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார். சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. "என்னைக் சும்மா தொந்தரவு செய்யாதீர்கள். ஐ டூ க் லை டமில் பிக்சர்ஸ். ஆனால் இந்தப் படத்துக்கு மட்டும் 'ப்ளீஸ்' என்னைக் கூப்பிடாதீர்கள்," என்று மறுத்தாள். சாதாரணமாகச் சீதாப்பாட்டி ...
மேலும் கதையை படிக்க...
விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
ஒரு ராஜ பேனாவின் கதை!
நானா பைத்தியம்?
அப்புசாமியின் பொன்னாடை
பிரியமான கடிதம்
நடந்தது நடந்துவிட்டது!
என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!
காலட்சேப பவன்
கனா கண்டேன் தோழா நான்!
ஓட்டேரிப் பாதையிலே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)