சீரியோமோபியா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 14,201 
 

“அந்தக் காஞ்சனாவைப் பழி வாங்கத் துடிக்கிற அவ நாத்தனார் கவிதாவையும் அப்பாவிப்பொண்ணு சந்தியாவைப் பாடாபாடு படுத்தற பத்மினியையும் நான் பழி வாங்காம விட மாட்டேன். அவாளைக் கொன்னாத் தான் எனக்கு நிம்மதி, ம்ம்….” முணுமுணுத்தபடியே படுத்திருந்த அம்மா அம்புலுவைப் பரிதாபமாகப் பார்த்தான் பாலாஜி. அருகே அவன் தந்தை வெங்கடாசலமும் நின்றிருந்தார்.

“அம்மா, இப்போ எதைப் பத்திப்பா பேசறா?”

Sorgam”ஓ அதுவா, மதியானம் போடற சொர்க்கம் சீரியலும் நைட் பார்க்கிற கணவருக்காக சீரியலும் கலந்து அடிக்கிறா. அதுலே பாரு, இந்தக் கணவருக்காக சீரியல் நன்னா போயிண்டு இருக்கு. கதை கேக்கிறியா? சந்தியானு ஒரு பொண்ணு. அதோட வாழ்க்கையில எப்பவும் சோதனை தான். அவா ஆத்துக்காரரை அபகரிக்க முயற்சி பண்ணற பத்மினினு ஒரு பொண்ணு,அம்மா கொல்லணும்னு சொல்லிண்டு இருந்தாளே அது அந்த பத்மினியத் தான், எனக்கே எத்தனையோ தரம் அந்த மாதிரி தோணியிருக்கு, வெளிக்காட்டிண்டதில்ல. அம்மாக்கு இப்படி ஆனதிலேர்ந்து என்னாலேயும் எந்த சீரியலும் பார்க்க முடியலே. சந்தியா என்ன பண்றாளோ, ஏது பண்றாளோனு நினச்சா எனக்கே கவலையா இருக்கு” நடந்தபடியே வெங்கடாசலம் கூறினார்.

“ஸ்டாப் இட் அப்பா, அம்மாக்குத் தான் இப்படினு நினைச்சேன், நீங்க பேசறத எல்லாம் பார்த்தா இன்னும் பயமா இருக்கே. ஏன்பா, ஒழுங்கா காலேஜுக்கு வேலைக்குப் போயிண்டு வந்துண்டு இருந்தேள். எப்போ ரிடையர் ஆனேளோ அப்போலேர்ந்து அம்மாவோட சீரியல் பார்க்க ஆரம்பிச்சேள், உங்களை விட்டு அம்மாவைத் திருத்த வைக்கலாம்னு பார்த்தா நீங்களும் சீரியல்லே இன்வால்வ் ஆகி படுத்தறேள். பெருமாளே, ஏன் இப்படி சோதிக்கிறே? குடும்பத்துலே சண்டை, பிரச்சினை, அதனாலே பிராப்ளம் வரும், இல்லை சாதாரணமா உடம்புக்கு முடியாம வரும்னு கேள்விப்பட்டிருக்கேன், சீரியல்னால இப்படி வியாதி வரும்னு நினைச்சுக் கூடப் பார்க்கலையே. என்ன பெரிய சீரியலோ? சீரியல் பேரு மட்டும் மங்களகரமா இருக்கும், ஆனா எல்லாம் அழுகை சீரியல். ஒரு வயசான அப்பா, அவாளுக்கு அஞ்சு பொண்ணு. எப்படி கரையேத்தறார்னு,என்னப்பா இப்போ நாம அம்மாவை இந்தப் பிரச்சினையிலேர்ந்து எப்படி கரையேத்தப் போறோம்? சரி,அம்மாவைப் பார்த்துக்கோங்கோப்பா. டாக்டர்கிட்டே பேசிட்டு வர்றேன்.” புலம்பியபடியே அறையின் கதவைச் சாத்தி விட்டு மருத்துவர் இருக்கும் அறைக்குச் சென்றான் பாலாஜி.

பாலாஜியும் ஜானகியும் வெங்கடாசலம்-அம்புலுவின் பிள்ளைகள். ஜானகியின் பி.எஸ்.எஸி படிப்பு முடிந்தவுடன் அவளுக்கு நல்ல வரனும் அமைய திருமணம் செய்து கொடுத்து விட்டிருந்தனர். தனியார் அலுவலத்தில் மேனேஜராகப் பணியாற்றும் பாலாஜிக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அம்புலு பொறுப்பான இல்லத்தரசி. சுறுசுறுவென்று தையல் வேலைகள் செய்வது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று தன் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழித்துக் கொண்டிருந்தாள். ஓய்வு நேரத்தில் பொழுது போக்க அரை மணி நேரம் என்ற ரீதியில் பார்க்கத் தொடங்கிய தொடர் நாடகங்கள் குறிப்பிட்ட காலத்தில் நாள் முழுவதும் என்ற கணக்கில் அம்புலுவின் நேரங்களை அபகரித்து விட்டிருந்தது. நிழல் நாயகிகளின் கற்பனைப் பாத்திரப்படைப்புகளோடு ஒன்றி, அதைப் பற்றியே அரட்டை அடிப்பதும் அதைப் பற்றியே சிந்திப்பதுமாய் இருந்த அம்புலுவின் மன நிலை பாதிக்கப்பட்டது. விளைவு, சாதாரணமாக மெகாசீரியல் பற்றிப் பக்கத்து வீட்டு மாமியுடன் கலந்துரையாடல் செய்து கொண்டிருந்த போது அம்புலு ஏதோ தொடர் நாடகம் பற்றி கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள். அன்னியன் திரைப்படமும் சந்திரமுகி திரைப்படமும் கொடுத்த ஸ்பிளிட் பெர்சனாலிட்டி பற்றிய போதுமான விளக்கத்தால் விழிப்புணர்வு பெற்ற பங்கஜம் மாமி உடனே பாலாஜிக்குத் தொலைபேசியில் “உன் அம்மா அம்புலு லகலக ஜோதிகா மாதிரி ஆகிட்டா,கண்ணை உருட்டி உருட்டிப் பேசறா. கத்தறா.சீக்கிரம் வாடா” என்ற தகவல் கொடுத்தாள். பாலாஜி பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்க்கவும் தக்க தருணத்தில் பேஷண்டைச் சேர்த்ததாகவும் இன்னும் ஒரு நிமிடம் தாமதமாகி இருந்தாலும் அம்புலுவைக் காப்பாற்றியிருக்க முடியாது என்று மருத்துவர் கூறவும் சரியாக இருந்தது.

மருத்துவரின் அறைக்குள் நுழையும் முன் கதவைத் தட்டினான் பாலாஜி.

“நான் உள்ள வரலாமா?”

“வாங்க, பிளீஸ் டேக் யுவர் ஸீட்”

(அமர்ந்து கொண்டே)”டாக்டர், எங்கம்மாவைக் குணப்படுத்த வழியேதும் இல்லையா?”

“ஸாரி மிஸ்டர் பாலாஜி ஆரம்பத்திலேயே வந்திருந்தால் கொஞ்சாமாவது சான்ஸஸ் இருந்துருக்கும், இப்போ ரொம்ப லேட். இருந்தாலும் டிரை பண்ணறேன்” கண்ணாடியைத் துடைத்தபடியே மருத்துவர் பாலகிருஷ்ணன் சொல்ல மோகன் பரிதவித்தான்.

“டாக்டர், நீங்க கண்ணாடியை ஏன் கழட்டினேள்?”

“தூசி இருந்துச்சு, துடைச்சேன். ஓ, இந்த மூவீஸ்லே எல்லாம் பேஷண்ட்ஸக் காப்பாத்த முடியலைனா டாக்டர் கண்ணாடியைக் கழட்டிக்கிட்டே சொல்லுவாரே, அப்படி நினைச்சேங்களோ? அப்படி ஒண்ணும் பிரச்சினை இல்லை, இருந்தாலும் உங்க மனச திடமா வச்சுக்கங்க”

“என்ன டாக்டர், என்னைக் குழப்பாதீங்கோ. ரொம்ப பில்டப் வேற கொடுக்கிறேள். எங்கம்மாவுக்கு என்ன வியாதி? சொல்லிடுங்கோ”

“சொல்றேன். இதுக்குப் பேரு சீரியோமோபியா, இந்த வியாதிக்காரங்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிற தொடர் நாடகங்களை விடாமல் பார்த்து தங்களைக் குழப்பி அந்தக் கேரக்டரோட கேரக்டரா மாறி தங்களையே அழிச்சுப்பாங்க, உங்கம்மாவுக்கு வந்துருக்கிறதும் அது தான். குறிப்பா அவங்க ஒரு நாடகம் விடாம எல்லாம் பார்த்து,குழம்பி தன் மனசைப் பலவீனப்படுத்திக்கிட்டு இருக்காங்க. ஒரு நிழல் கதையை நிஜம்னு நினைக்கிறாங்க. இதுலேர்ந்து மீளணும்னா அவங்க நிறைய தியாகம் பண்ணனும். குறிப்பா சீரியல் பார்க்கக் கூடாது. சீரியல்ங்கிறது ஒரு போதை வஸ்து மாதிரி, அதுக்கு அடிக்ட் ஆனவங்களாலேயும் அதைப் பார்க்காம இருக்க முடியாது. மீளறது கஷ்டம் தான்.எதுக்கும் நான் சொல்லற பிராக்டிகல் டிரீட்மெண்ட்ஸ் பண்ணிப் பாருங்க. மற்றது மேல இருக்கிறவன்கிட்டே சொல்லுங்க,அவன் பார்த்துப்பான்”

“யாருகிட்டே?, மாடியிலே கிளினிக் வச்சுருக்கிற உங்க தம்பிகிட்டேயா?”

“சீ, அதுக்கும் மேல”

“மொட்டை மாடி”

“உங்க மாடி காலி(தனக்குள் முணுமுணுத்தபடியே), ஸாரி, உணர்ச்சிவசப்பட்டுட்டேன். மேலே உள்ளவன்னு நான் சொன்னது கடவுளைத் தான்”

“சரி டாக்டர். நான் என்ன பண்ணனும்னு சொல்ல வர்றீங்க?”

“யாரோ,கிருஷ்ணவேணி,அம்சவேணி,அபினு புலம்பறாங்களே. அவங்கள்லாம் யாரு? உங்க சிஸ்டர்ஸா? அவங்களை வரவழைக்க முடியுமா?”

“ஸாரி டாக்டர், அவா ஆக்டர்ஸா இருக்கா, அவாளைக் கூட்டிண்டு வர்றது கஷ்டம்”

“பெத்த தாயைப் பார்க்க வர மாட்டாங்களா? என்ன சொல்றேங்க?”

“ஓ ஸாரி, நீங்க தப்பாப் புரிஞ்சுண்டேள். அவா சீரியல் ஆர்டிஸ்ட், எனக்கு ஒரே ஒரு சிஸ்டர் ஜானகி தான். அவளும் கல்யாணமாகி பெங்களூர்லே இருக்கா.அவளை வரச்சொல்லணுமா?”

“ஓ அப்படியா? வேண்டாம், உங்க சிஸ்டரை டென்ஷன்படுத்த வேண்டாம்.ரொம்ப கஷ்டம்னு சொன்னேன் இல்லையா? பாருங்க, உங்க ரெண்டு பேர் பேரச் சொல்லிப் புலம்பாம சீரியல் ஆக்டர்ஸ் கேரக்டர் பேரு சொல்லிப் புலம்பியிருக்காங்க.முதல்லே உங்கம்மாவை நீங்க பிரியாவே விடக் கூடாது. என்கேஜ் பண்ணிக்கணும். காலையில் ஒரு மணி நேரம் அவங்க கூட வாக் போங்க. அவங்க கவனத்தை வேற திசையில் செலுத்துங்க. அவங்களுக்குனு ஒரு தனித்திறமை இருக்கும் இல்லையா? அதைக் கண்டுபிடிச்சு என்கரேஜ் செய்யுங்க. அவங்களைக் கோவில், குளம், சினிமானு கூட்டிட்டுப் போங்க.அவங்ககிட்டே மனசு விட்டுப் பேசுங்க. குறிப்பா,அழுவாச்சி சீரியல் எதுவும் பார்க்க விட வேண்டாம். பக்கத்து வீட்டுக்குக் கதை கேட்டு ஓடுவாங்கன்னா நீங்க அவங்ககிட்டேயும் தெளிவா கதை சொல்ல வேணாம்னு சொல்லிடுங்க. மெடிட்டேஷன் செய்யச் சொல்லுங்க, கீழே கவுண்டர்லே பீஸ் கட்டிட்டு அம்மாவை வீட்டுக்கே கூட்டிட்டுப் போலாம், (ஏதோ டைரியைப் பார்த்துக் கொண்டே) அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை,மங்களகரமான நாள், அப்போ தான் உங்களுக்கு அப்பாயிண்மெண்ட் இருக்கு. அப்போ அம்மாவைக் கூட்டிட்டு வாங்க. கொஞ்சம் கொஞ்சமாயும் சேஞ்சஸ் கிடைக்கும். சடனாவும் கிடைக்கும், நீங்க அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிற முறையில தான் இருக்கு.” மனோதத்துவ மருத்துவர் மனோகர் பாலாஜிக்குத் தெளிவாக விளக்கினார்.

“ரொம்ப நன்றி டாக்டர். நீங்க சொன்னபடியே செய்யறேன்”

அக்ரஹாரத்தில் சில வீடுகளில் வாசலில் அமர்ந்திருந்த மாமிகள் கார் சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்க வெங்கடாசலமும் பாலாஜியும் அம்புலுவை காரிலிருந்து மெதுவாக இறக்கி வீட்டிற்கு அழைத்து வந்தனர். அம்புலு தன் அறையில் அயர்ந்து தூங்கினாள். வீட்டிற்கு வேலை செய்ய வரும் ரெங்கா மாமிக்கும் இவர்கள் வரும் தகவலைத் தெரிவிக்காததால் வெங்கடாசலமும் பாலாஜியுமே சமையல் பொறுப்பை ஏற்றார்கள்.

வீட்டிற்குள் நுழைந்து ஒரு அரை மணி நேரம் ஆகியிருக்கும். வீட்டின் குக்கூ கடிகாரத்தின் குயில் பதினொன்று மணி என்பதைப் பதினோறு தரம் கூவ,தூங்கிக் கொண்டிருந்த அம்புலு அதட்டல் தொனியில்,”டேய், பாலாஜி, டிவி எங்கேடா? ஏண்ணா, நீங்க எங்கே? யாரு ஆத்துலே இருக்கேள்? தீர்க்க சுமங்கலி, நிம்மதி சீரியல் போட்டுருப்பா. சீக்கிரம் டிவியக் கனெக்ட் பண்ணுங்கோ,வேற சேனல்கள் பார்க்கலைனாலும் கவலை இல்லை, எனக்கு சன் தான் வேணும்” என்று அரசியல்வாதியின் மேடை முழக்கம் போல் சத்தமிட்டாள்.

அம்மாவின் அருகில் சென்று “டிவி ரிப்பேர்மா” என்றான் பாலாஜி எரிச்சலுடன்.

“டாக்டர்கிட்டே காண்பிச்சியா?”

“யாரைம்மா? உனக்கு இனி அடுத்த வாரம் தான் அப்பாயிண்மெண்ட்”

“டிவியத் தான் டாக்டர்கிட்டே காட்டினியானு கேட்டேன். அதுவும் எனக்குக் குழந்தை மாதிரி, என்ன ரிப்பேர்?”

“என்னனு தெரியல, டிவி ஹாஸ்பிடல்லே ஸாரி சர்வீஸ் சென்டர்லே இருக்கு. நீ படுத்து ரெஸ்ட் எடு. இந்தா இந்த மருந்து சாப்பிடு”

“டேய், பிளீஸ்டா, என்னாலே சீரியல் பார்க்காம இருக்க முடியாதுடா, என்னைப் பங்கஜம் மாமியாத்துக்காச்சும் அழைச்சுண்டு போடா, பிளீஸ்”

பாலாஜிக்குப் பரிதாபமாக இருந்தது.

“அம்மா, நான் ஒன்னு சொன்னா நீ ரொம்ப சந்தோஷப்படுவே. நீ சொன்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்”

“என்னடா சொல்லறே? ஏதோ அப்படி படிச்சிருக்கணும், முடி நீளமா இருக்கணும்,பொண்ணு கோபிகாவோ அசினோ, நயந்தாராவோ அவாளை மாதிரி சுமாரா இருந்தாப் போதும்னு மணல்கயிறுலே வர்ற மாதிரி ஏகப்பட்ட கண்டிஷன் போட்டே, இப்போ எப்படி இந்த சம்பந்தத்துக்கு ஒத்துண்டே?”

“அம்மா நான் சொல்லறதைக் கேளு. இப்போ இந்த மாசத்திலேர்ந்து இன்னும் ஒரு வருஷத்துக்கு நீ நான் சொல்லறபடி தான் கேக்கணும். நீ சொல்லற பொண்ணை அப்போ தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன், இதான் நமக்குள்ளே ஒப்பந்தம், சரியா?”

“சொல்லு, நீ அந்தப் பொண்ணு பத்மாவைக் கல்யாணம் செஞ்சுக்க நான் என்ன பண்ணனும்? நீ என்ன சொன்னாலும் கேட்பேன்” அம்மாவின் அருகில் கட்டிலில் உட்கார்ந்த படியே சொல்ல ஆரம்பித்தான்.

“பாயிண்ட் நம்பர் ஒண்ணு, நீ டிவி பற்றியோ மெகா சீரியல் பற்றியோ நினைச்சுப் பார்க்கப்பிடாது. ரெண்டாவது உன்னோட தையல் கலையையும் பாட்டு முந்தி சொல்லிக் கொடுத்துண்டு இருந்தியே அதையும் கண்டினியு செய்யணும். மூணாவது உன்னோட சமையல் ரொம்ப அருமை. ஸோ வித்தியாசமான ரிஸிப்பீஸ் எழுதறே, அதைப் புக்காப் போடப் போறோம்”

அம்மா என்ன சொல்லுவது என்று தெரியாமல் திருதிருவென்று விழிக்க,வெங்கடாசலமும் இவர்கள் அறைக்கு வந்தார்.

“என்னடா,ஏதோ கண்டிஷன்னு பேசிண்டு இருந்த மாதிரி இருக்கு. தளிகை ஆயாச்சு, குழம்பு,சாத்தமுது, கூட்டு,கோஸ் கரமந்து, பச்சடி ரெடியாயாச்சு. குக்கர் இன்னொரு விசில் வந்தா அணைச்சுடலாம்,அம்மாவுக்குத் தாவளையாயிடுத்துனா ஒரு நாள் திருக்கண்ணமுது செஞ்சு பெருமாள் கோவில்லே அம்சை பண்ணனும்” என்று சொல்லியவாறே அந்த அறையின் குளிரூட்டியை இயக்கினார்.

Kanavarukaga”உட்காருங்கோ அப்பா, நான் உங்ககிட்டே ஏற்கனவே சொன்னது போல அம்மாக்குச் சில வேலைகள் கொடுத்துருக்கேன். நீங்களும் அம்மாக்கு எல்லா வகையிலும் ஹெல்ப் பண்ணனும், நீங்க பிசிக்ஸ் பிரொபஸர் என்பதால் நீங்களும் உங்க டைமிங் வேஸ்ட் பண்ணப்பிடாது. உங்களுக்கு இப்போவே 20 குழந்தைகள் டியுஷனுக்கு ரெடி. ரெண்டு பேரும் என்ன சொல்றேள்?”

வள்ளுவனும் வாசுகியும் மன்னிக்க வெங்கடாசலமும் அம்புலுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“சரிடா, அந்தப் பொண்ணு தங்கமான பொண்ணு, அது நம்மாத்துக்கு மாட்டுப்பொண்ணா வர்றதுக்கு நாங்க எந்தத் தியாகமும் பண்ணத் தயார்” என்று கூறிய அம்மாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டான்.இவ்வளவு சீக்கிரம் அம்மா சீரியலைத் தியாகம் செய்வாள் என்று பாலாஜி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. முதலில் அம்புலுவிற்கு இதெல்லாம் நடைமுறைப்படுத்த சிறிது சிரமமாகத் தான் இருந்தது. நாட்கள் மாதங்களானது.

வெங்கடாசலம் தன் ஓய்வு நேரத்தைச் சிறப்பு வகுப்பு எடுத்துப் பயனுள்ள வகையில் செலவழித்தார். அம்புலுவும் காலையில் ஒரு குழுவிற்குப் பாட்டு கற்றுக் கொடுக்கவும் அடுத்து ஒரு குழுவிற்குத் தையல் கற்றுக் கொடுக்கவும் செய்ய ஆரம்பித்திருந்தாள். அம்புலுவின் சமையல் குறிப்புகள் 2,3 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் தனியார் தொலைக்காட்சியில் புதுப்புது சமையல் செய்முறைகள் செய்து காட்ட அம்புலுவிற்கு அழைப்பு விடப்பட காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டிருந்தது போல் இன்னும் தன் வேலைகளில் மும்முரமானாள். அம்புலுவின் ‘நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடுவது எப்படி?’ என்ற புத்தகமும் ‘நேரத்தை வீணடிக்கும் மெகா சீரியல்கள்’ என்ற புத்தகமும் வசூலில் சக்கை போடு போட்டது. அம்புலுவிற்குப் பணத்துடன் புகழும் நேரத்தை வீணடிக்காமல் தன் திறமைகளை வளர்த்துக் கொண்ட திருப்தியும் பெருமிதமும் கிடைத்தது. பாலாஜிக்கும் பத்மாவைத் திருமணம் செய்து விட்டாயிற்று. பாலாஜிக்குப் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்க அவனும் பத்மாவுடன் அமெரிக்கா சென்றாயிற்று. வெங்கடாசலம், தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க காரணமான பங்கஜம் மாமியையும் மருத்துவரையும் தன் மகனையும் நன்றிப்பெருக்கோடு மனதார வாழ்த்தி…

வாணி………….கதையை எழுதி முடிக்கும் முன் வரவேற்பறையில் இருக்கும் கணவரின் குரல் காற்றோடு மிதந்து வரக் கேட்டாள்.

“என்னங்க…எதுக்குக் கூப்பிடறீங்க?”

“வாணி நம்ம பேவரிட் சீரியல் கணவருக்காகப் போட்டாச்சு, கதை எழுதி முடிச்சிட்டியா? சீக்கிரம் வா…

“இதோ வந்துட்டேங்க” சீரியல் மோகத்தால் நேரங்களை வீணடிக்கும் இல்லத்தரசியைக் கருவாகக் கொண்டு எழுதி வரும் ‘சீரியோமோபியா’ கதையின் இறுதி வார்த்தையை எழுதி முடிக்காமல்,கணவருக்காக, தனக்குப் பிடித்த மெகாசீரியல்’கணவருக்காக’பார்க்கச் சென்றாள் வளர்ந்து வரும் எழுத்தாளர் வாணி.

– காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com] – பிப்ரவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *