சீமைக்குப் போன செல்வனின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,711 
 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன சீமைக்குப் போன செல்வனின் கதை

“மறுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபத்தோராவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘ஏழுமலை, ஏழுமலை’ என்று ஓர் ‘எஸ்டேட் ஏஜெண்ட்’ ஏற்காட்டிலே உண்டு. ‘மிஸ்டர் செவன் ஹில்ஸ், மிஸ்டர் செவன் ஹில்ஸ்’ என்று தன் வெள்ளைக்கார முதலாளியால் அழைக்கப்பட்டு வந்த அவர், பின்னால் எப்படி அந்த எஸ்டேட்டுக்கே சொந்தக்காரரானார் என்பது அந்தப் பக்கத்தில் யாருக்குமே புரியாத புதிராக இருந்து வந்தது. ‘இந்தியா சுதந்திரம் அடைந்ததும் வெள்ளைக்கார முதலாளி லண்டனுக்குப் போய்விட்டதுதான் அதற்குக் காரணம்’ என்று சிலர் சொன்னார்கள்; ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; மிஸஸ் செவன் ஹில்ஸின் முகராசிதான் அதற்குக் காரணம்’ என்று வேறு சிலர் சொன்னார்கள். எப்படியோ மிஸ்டர் செவன் ஹில்ஸ் உயர்ந்தார்; அவருடைய அந்தஸ்தும் ‘ஏழுமலை’ அளவுக்கு உயர்ந்தது!

மிஸ்டர் செவன் ஹில்ஸுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உண்டு. மூத்தவன் பெயர் முனிசாமி, அப்பாவைப் பின்பற்றி அவன் தன் பெயரை, ‘எஸ்.எம். சாம்’ என்று மாற்றி வைத்துக் கொண்டான். இளையவன் பெயர் கோபாலன்; அவன் தன் பெயரை ‘எஸ்.ஜி. பால்’ என்று மாற்றி வைத்துக் கொண்டான். பெண்ணின் பெயர் குப்பம்மாள்; அவள் தன் பெயரை ‘எஸ்.கே. பம்மா’ என்று மாற்றி வைத்துக் கொண்டாள்.

இப்படியாகத்தானே மலையுச்சியில் வாழ்ந்து வந்த அந்தக் குடும்பம் திடீரென்று நாகரிகத்தின் உச்சிக்குப் போக, அதன் காரணமாகத்தானோ என்னவோ, ஆண்-பெண் பேதத்தைக் கூட மறந்து பழகும் பல ‘அபூர்வ நண்பர்கள்’ அவர்களுக்கு வாய்ப்பாராயினர். அதற்குப் பின் இட்டிலி, தோசை சாப்பிடுவதைக்கூட அநாகரிகமாகக் கருதிய அவர்கள் பன் பட்டர், ஜாம், பிரெட் என்று சாப்பிட்டு வந்த காலையில், ஒரு நாள் இருபத்திரண்டு வயது நிறைந்த சாமைச் சுட்டிக் காட்டி, ‘இவ்வளவு பெரிய பிள்ளையா உங்களுக்கு இருக்கிறார்?’ என்று நாற்பத்து நாலு வயது நிறைந்த மிஸ்டர் செவன் ஹில்ஸை அவருடைய சிநேகிதிகளில் ஒருத்தியான ஐம்பத்து நாலு வயது சீமாட்டி ஆச்சரித்துடன் கேட்க, மிஸ்டர் செவன் ஹில்ஸ் திடுக்கிட்டு, ‘அவன் என் பிள்ளை இல்லை, தம்பி!’ என்று அவனுக்குத் தெரியாமல் சொல்லி அவளைச் சமாளிப்பராயினர்.

எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட இந்த அசம்பாவிதம் குறித்து அன்றிரவே மிஸ்டர் செவன் ஹில்ஸ், மிஸஸ் செவன் ஹில்ஸுடன் கலந்து ஆலோசிக்க, ‘ஆபத்து, ஆபத்து! அவன் இங்கே இருந்தால் நம் உண்மை வயது நம்முடைய நண்பர்களுக்கெல்லாம் தெரிந்துவிடும்போல் இருக்கிறது; அவனை உடனே வேறு எங்கேயாவது அனுப்பப் பாருங்கள்!’ என்று அவள் அலறோ அலறு என்ற அலற, அவனை எங்கே அனுப்பி வைப்பதென்று அவர் அன்றிரவு முழுவதும் யோசித்தார், யோசித்தார், அப்படி யோசித்தார். கடைசியில் ‘மேல் படிப்பு என்ற சாக்கில் அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்துவிட்டால் என்ன?’ என்று மிஸ்டர் செவன் ஹில்ஸ் மிஸஸ் செவன் ஹில்ஸைக் கேட்க, ‘அதுதான் சரி, அதுதான் சரி!’ என்று அவர் சொன்னதை அவள் அப்படியே ஆமோதிப்பாளாயினள்.

இந்த விதமாகத்தானே சீமைக்குப் போன செல்வன் சாம், அங்கே மேலே படித்தானோ இல்லையோ, திரும்பி வரும் போது மறக்காமல் வெள்ளைக்கார மனைவியுடன் இல்லை, வெள்ளைக்காரத் துணைவியுடன் இந்தியாவுக்கு வருவானாயினன். அந்தத் துணைவியுடன் நேரே வீட்டுக்குப் போனால் தந்தை என்ன சொல்வாரோ, என்னவோ என்று சற்றே பயந்த சாம், எதற்கும் அவளை ஓர் ஓட்டல் அறையில் விட்டுவிட்டுப் போவோம் என்று விட்டுவிட்டுப் போக, முன் ஹாலில் யாரோ ஒருவனுடன் உட்கார்ந்து அரட்டை யடித்துக் கொண்டிருந்த அவன் தங்கை மிஸ் பம்மா, ‘வா, அண்ணா!’ என்று அவனை வரவேற்று, ‘இவர்தான் என் பாய் பிரெண்ட் மிஸ்டர் ஜும்மா!’ என்று தன்னுடன் இருந்தவனை அவனுக்கு அறிமுகம் செய்து வைக்க, ‘என்ன துணிச்சல் இவளுக்கு! எங்கேயோ இருந்த எவனோ ஒருவனை இங்கே அழைத்து வந்து வைத்துக் கொண்டு அரட்டையடிப்பதோடு நில்லாமல், அவனை எனக்கு அறிமுகம் வேறு செய்து வைக்கிறாளே?’ என்று கருவிக் கொண்டே அவன் மேலே இரண்டடி எடுத்து வைக்க, பின் ஹாலில் யாரோ ஒருத்தியுடன் உட்கார்ந்து சரஸமாடிக் கொண்டிருந்த அவன் தம்பி மிஸ்டர் பால், ‘வா, அண்ணா!’ என்று அவனை வரவேற்று, ‘இவள்தான் என் கெர்ல் பிரெண்ட் மிஸ் பெர்ல்!’ என்று தன்னுடன் இருந்தவளை அவனுக்கு அறிமுகம் செய்து வைக்க, ‘என்ன அக்கிரமம் இது! இந்த வீட்டில் இவர்களைக் கேட்பார் யாருமில்லையா?’ என்று தன்னை மறந்து ஆத்திரத்தின் எல்லைக்கே போய்விட்ட மிஸ்டர் சாம், ‘அம்மா எங்கே?’ என்று அவசர அவசரமாகக் கேட்க, ‘ஏன், அவள் நம் எஸ்டேட் பாஸுடன் உலாவப் போயிருக்கிறாள்!’ என்று தம்பி சொல்வானாயினன்.

‘எஸ்டேட் பாஸா! அவர் இப்போது எங்கிருந்து வந்தார்?’ என்று அண்ணன் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘லண்டனிலிருந்துதான் வந்திருக்கிறார்!’ என்று தம்பி சொல்வானாயினன்.

‘ஒஹோ! அப்பா?’ என்றான் அவன்; ‘மாடியில் இருக்கிறார்!’ என்றான் இவன்.

‘என்ன செய்துகொண்டிருக்கிறார் அவர்? தூங்குகிறாரா? இதோ போய் நான் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டிவிட்டு வருகிறேன், பார்!’ என்று கத்திக்கொண்டே அவன் மாடிக்கு ஓட, அவர் அங்கே ஆங்கில இசைத் தட்டு ஒன்றைக் கிராம போனில் வைத்துவிட்டு, அந்த இசைக்கேற்ப யாரோ ஒரு சீமாட்டியுடன் ‘ராக் அண் ரோல்’ நடன மாடிக்கொண்டிருக்க, மிஸ்டர் சாமுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, அவன் தன் ஆத்திரத்தை யெல்லாம் அக்கணமே மறந்து விழுந்து விழுந்து சிரிப்பானாயினன்.’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘மிஸ்டர் சாம் ஏன் சிரித்தான்?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘தங்கை தவறு செய்தால் அம்மாவிடம் சொல்லலாம்; தம்பி தவறு செய்தால் அப்பாவிடம் சொல்லலாம். அம்மாவும் அப்பாவுமே தவறு செய்தால் யாரிடம் சொல்வது என்று நினைத்திருப்பான்; சிரிப்பு வந்துவிட்டிருக்கும்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக் கொண்டு விட்டது என்றவாறு… என்றவாறு… என்றவாறு….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *