Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

சிலந்தி

 

சிதம்பரத்தின் உடல் இன்னும் நடுங்கக கொண்டிருந்தது, உள்ளத்தின் பதை பதைப்பும் ஒடுங்கிவிடவில்லை .

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்தெழுந்தான். பரபரவென்று போர்வையை உதறினான். அவனை அப்படி எழுந்திருக்கும்படி தூண்டியது…..
அது தான் அவனுக்குப் புரியவில்லை . அது வெறும் கனவா? நனவு தூண்டிய உணர்வா? அல்லது, உள்ளுணர்வு தந்த அபாய அறிவிப்பா ?

கனவு என்றால் -

நிஜமாக முன் நின்றது அதை மறக்கும்படி தூண்டியது.

நிஜம் – நனவின் விளைவு – என்றால், தூங்கிக் கொண்டிருந்தவன், கன்னக் கனிந்த இருட்டிலே அதை தெள்ளத் தெளிவாக அறிய முடிந்தது எவ்வாறு?

உள்ளுணர்வின் உந்துதல் என்றாலோ -

உள்ளுணர்வு உணர்வைத் தூண்டலாம். மூளையை விழிப்புறச் செய்யலாம். தூங்கும் போது கூட, கண்ணினால் காண்பது போல் பளிச்செனப் புலப்படுத்துவதற்கு அதற்கு ஏது சக்தி? உள்ளுணர்வு அதீதமான கண்களும் பெற்றிருக்குமோ?

சிதம்பரத்துக்கு எதுவுமே புரியவில்லை . அறிவைக் குழப்பும் விஷயமாகத்தான் அமைந்தது அது.

இரண்டு கண்கள். அவனையே வெறித்து நோக்கும் ஒளிப்பொறிகள். சூரியனின் கதிர்களை ஏற்றுப் பளீரென ஒளி வீசும் மணிகள் போல் மினுமினுக்கும் கண்கள்… அவனை உற்று நோக்கியவாறிருந்தன. அக்கண்கள் பொதிந்த தலை பெரிதாய், விகாரமாய், வெறுப்பு ஏற்படுத்துவதாய், ஒருவித பயமும் தருவதாய் இருந்தது. அதற்கேற்ற உடல்…. அதில் முளைத்தெழுந்த எட்டுக்கால்கள் – உடலைவிடப் பெரியனவாய் அதன் வேக இயக்கத்துக்குக் துணை புரிவனவாய்….

“ஐயோ, சிலந்திப்பூச்சி!” என்று அலறியது அவன் மனம். “ஐயய்யோ நம்ம மேலே ஏறிவிடும் போல் தோணுதே! என்று பதறியது.

அவன் விழித்து, அலறியடித்துக் கொண்டு எழுந்தான். அவன் உடல் மீது பூச்சி வேகமாக ஓடுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. கையினால் தடவித் தள்ளினான். துடித்து எழுந்து, ஸ்விச்சைத் தட்டினான்.

இரவின் ஆழத்தில் – கிணற்றில் விழும் கல் “டுபுக்”கென ஒலி எழுப்புவதுபோல் – அது கனத்த ஓசை எழுப்பியது. ஒளியைக் கொட்டி எங்கும் பூசியது சிறு “பல்ப்”.

கண்களைக் கூச வைத்த அவ் வொளி வெள்ளத்திலே அவன் அதைக் கண்டான். சுவரோடு தரை கூடும் இடத்தில் – சுவரோடு சுவராய், தரையோடு தரையாய் அது ஒண்டியிருந்தது. பெரிய சிலந்திப் பூச்சி. நன்கு வளர்ந்து தடித்தது. அழுக்கு முட்டிய ஏதோ ஒரு உருண்டை போல, அருவருப்பு தரும் உடல். அதன் மீதுள்ள ரோமங்களும் புள்ளிகளும் அவன் பார்வையை உறுத்தின. அதன் கண்கள் விளக்கொளியில் மினுமினுத்தன.

அப்படியே அந்தப் பூச்சியை நசுக்கிக் கொல்லவேண்டும் என்று துடித்தது அவன் உள்ளம். ஆனால், வெறும் பாதத்தினால் அதை மிதித்து நசுக்க அஞ்சினான் அவன். பழந்துணியையோ, செருப்பையோ தேடித் திரிந்தன அவன் விழிகள்.

அவன் செருப்பை எடுத்து வருவதற்குள் அந்த எட்டுக்கால் பூச்சி வேறு இடத்துக்கு ஓடியிருந்தது. அவன் கண்கள் அதைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டன.
சிலந்தி சுவர்களின் ஒரு மூலையில் தரை ஓரத்தில் பதுங்கி யிருந்தது.

“இங்கேயா இருக்கிறே?” என்று முனங்கியபடி அவன் வேகமாக அறைந்தான். செருப்பு பூச்சியின் மீது பட்டது. ஆயினும் அதைச் சாகடிக்கும் விதத்தில் தாக்கவில்லை . அது ஓடியது. அதன் கால் ஒன்று தரையில் தனியாகக் கிடந்தது.

பூச்சி வேறொரு இடம் சேர்ந்து அசையாமல் நின்றது. சிதம்பரம் தாமதிக்கவில்லை. இந்தத் தடவை தவறு செய்யவுமில்லை. சரியாக அதைக் தாக்கி நசுக்கித் துவைக்கும் விதத்தில் செருப்பை உபயோகித்தான்.

சிதைந்து, உருக்குலைந்து, அசிங்கமான திரவமும் உடலும் கூழாகிவிட்ட நிலையில் காட்சி அளித்தது சிலந்தி..

அதைத் துடைப்பத்தால் எடுத்துத் தூர எறிந்து விட்டு அவன் படுக்கையில் படுத்தான். விளக்கு எரிந்து கொண்டு தானிருந்தது. அவன் மனம் ஒடுங்க வில்லையே! அவனுக்கு இனி தூக்கம் வருவதாவது…..

சிலந்திப் பூச்சி என்றாலே சிதம்பரத்துக்கு மன உளைச்சல்தான்.

அவனுக்கு அது ஒரு அப்ஸஷன்”, சிலந்தி மிக மோசமான ஜந்து என்பது சிதம்பரத்துக்கு அவனது எட்டாவது வயசில் புரிந்தது.

அவன் உடலில் வட்டம் வட்டமாக “பற்று” படர்ந்தது. அரிப்பெடுத்தது, சொறிந்தால், புள்ளிகள் போல் அடை அடையாய் தென்பட்டன. அவை கழுத்திலும், மார்பிலும், முதுகிலும், எங்கும் பரவின.

“இது எட்டுக்கால் பூச்சி விஷத்தினால் ஏற்பட்டிருக்குது. நீ தூங்குகிறபோது சிலந்திப் பூச்சி கடித்திருக்கும். இதற்கு பார்வை பார்க்கணும்” என்ற பெரியம்மா ஒருத்தி உபதேசித்தாள். “பார்வை பார்ப்பதில்” தேர்ந்த ஒரு பெரியவர் இருக்குமிடத்தையும் அவள் குறிப்பிட்டாள். “போகும் போது ஒரு பாட்டிலும் கொண்டு போ. பச்சை நிற பாட்டில் வேணுமின்னு அவர் சொல்லுவார். வெள்ளை பாட்டில் ஆகாதாம். அதனாலே பச்சை பாட்டிலே எடுத்துப் போ. அவரு மந்திரிச்சு தண்ணீர் தருவாரு. அதை என்ன செய்யணுமின்னும் சொல்லுவாரு” என்றும் அறிவித்தாள்.

அவ்வாறே அவன் செய்தான். “சிவப்பழம்” ஆகத் தோன்றிய பெரியவர் அவனைத் தன்முன் நிறுத்தி மந்திரித்தார். முனங்கி, தண்ணீரை அள்ளிச் சுற்றி, அவன் தலைமீது தெளித்தார். தம்ளரில் பாக்கியிருந்த நீரை, அவன் கொண்டு வந்திருந்த புட்டியில் ஊற்றி அவனிடம் கொடுத்தார்.

“இந்த பாட்டிலை கீழே எங்கும் வைக்காமல் வீட்டுக்கு எடுத்துப் போ. வீட்டிலும் தரையிலே வைக்கப்படாது. மரப்பலகை மீதுதான் வைக்கவேண்டும். ஸ்டூல் அல்லது பெஞ்சு அல்லது அலமாரித் தட்டு இதுமாதிரி எதன் மேலாவது வை. இந்தத் தண்ணியை மூன்று வேளைகளில் குடித்துத் தீர்த்து விடு சரியாப் போகும்” என்றார்.

அவனும் பயபக்தியோடு, அவர் அறிவித்தபடியே செய்து முடித்தான். அவன் தேகத்தில் படர்ந்த பூச்சிக்கடி விளைவு மாயமாக மறைந்து விட்டது.

அது எதனால் நேர்ந்தது?

அன்றும் அது அவனுக்கு விளங்கவில்லை. அதன் பின்னரும் தெளிவு ஏற்பட்டதில்லை.

“சிலர் கண்களுக்கும் எண்ணத்துக்கும் விசேஷமான ஒரு சக்தி உண்டு. அவர்கள் கூர்ந்து பார்த்து, திடமனசோடு எண்ணினால், அந்த எண்ணத்தின்படி பலன் ஏற்படும்” என்கிறார்களே. “பார்வை பார்த்த” பெரியவரும் அத்தகைய ஆத்ம சக்தி பெற்றிருக்கலாம். மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக ஒருவிதமான பயமும் பக்தியும் உண்டாக்குவதற்காக – தண்ணீர், பச்சை நிற பாட்டில், அதை மரப்பலகை மீது தான் வைக்க வேண்டும் எனும் விதி என்றெல்லாம் அவர் ஒழுங்கு செய்திருக்கலாம்.

இவ்வாறு சிதம்பரம் பிற்காலத்தில் எண்ணியது உண்டு. எனினும் இதுதான் சரி என்று அவன் உள்ளம் துணிந்து சாதித்ததில்லை….

இந்த இரவில், தடித்த பூச்சியைக் கொன்று விட்டு, படுக்கையில் படுத்துக் கிடந்த போதும் அவன் அதைப்பற்றி எண்ணினான்.

முன்பு பார்வை பார்த்த” பெரியவர் இறந்து எவ்வளவோ வருஷங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு சிதம்பரம் பல தடவைகள் சிலந்திப் பூச்சிக் கடியினால் அவதிப்பட்டது உண்டு. அச் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவன் பெரியவரைப் போல் மந்திரிக்கக்கூடிய ஆள் எவரையும் காண முடிந்ததில்லை. மேலும், பூச்சிக் கடியின் விளைவு சில தினங்களில் தானாகவே மறைந்துவிடும்.

எனினும், அவன் உள்ளத்தில் சிலந்தி தனியொரு இடம் பெற்று நின்றது. நினைவாக வளர்ந்து அரித்துக் கொண்டிருந்தது. கனவிலும், நுண்ணிய இழைகளை ஒடவிட்டு வலை பின்னி அவன் மூளையில் பதிய வைத்தது. பித்தாய், பேயாய், படுத்தி வந்தது. கோளாறாய், குணக்கேடாய், வளர்ந்து அவனை ஆட்டிப் படைத்தது.

சிறு சிறு பூச்சிகளிலிருந்து பென்னம் பெரிய சிலந்திகள் வரை, பலரகமான பூச்சிகள் சதா அவன் நினைவில் ஊர்ந்து கொண்டிருந்தன. எப்பவாவது பூச்சி கடித்தாலும் கூட, சிலந்தி தான் கடித்திருக்கும் என்று நம்பி அவன் கஷ்டப்படுவது வழக்கம். “காணாக்கடி”யாக ஏதாவது அவனை அடிக்கடி கடித்துக்கொண்டு தானிருந்தது. தேகத்தில் அங்குமிங்கும் அரிப்பும், கழுத்துப் பக்கத்திலும் மூக்கோரத்திலும் கண் இமைகள் மீதும் முதுகிலும் வட்டங்களாகவும் புள்ளிகளாகவும் பற்று வருவது போவதாகவும் இருந்தன.

அவனைக் கடிக்காத வேளைகளில் கூட, சிதம்பரத்தின் மனம் சிலந்தி பூச்சிகளைத் தேடித் திரிந்தது. அவன் நினைவு அந்தப் பூச்சியைச் சுற்றியே வலைபரப்பியது. எங்கோ எப்போதோ படித்ததன் நினைவு அவன் தூக்கத்திலே கனவாய், பயங்கரமாய் நிழலாடுவது முண்டு.

- ஆப்பிரிக்காவிலோ, அல்லது வேறு எங்கோ, ஒருவகைச் சிலந்தி உண்டு. மனிதர் கீழே படுத்துத் தூங்கும்போது அந்தப் பூச்சி வந்து அவர்கள் தலை மீது ஊர்ந்து, மயிர் முழுவதையும் கத்திரித்துவிடும். அது அப்படிச் செய்வது, படுத்துத் தூங்கு கிறவனுக்குத் தெரியாது. அவன் விழித்தெழுந்த பிறகுதான், தனது தலைமொட்டையாகியிருப்பதை உணர முடியும்.

இதை அவன் ஒரு பத்திரிகையில் – படித்தது முதல் இச்செய்தியால் பித்துற்றான். அந்த ரகச் சிலந்தி மனிதர்கள் தலைமுடியை மட்டும் தான் கத்திரிகிக்குமா; அல்லது, மயிர்; அடர்ந்த உடல் பெற்ற பிராணிகள் மீதும் ஊர்ந்து தனது வேலையைக் காட்டுமா? அவன் அறிவு இவ்வாறு குரல் கொடுத்தாலும் கூட, இச் சந்தேகத்தை விட அவனது விசித்திர உணர்வே அதிக வலிமை பெற்று மேலோங்கியது….

தூக்கத்தில் அவன் கை தலையைத் தடவிப் பார்த்துக் கொள்ளும்… இரவில் இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் – வேளைகெட்ட வேளைகளில் எல்லாம் – விந்தைச் சிலந்தி அவனது அடர்ந்த கரிய தலைமுடியினூடே புகுந்து விளையாடுவது போன்ற உணர்வு பெற்று அவன் திடுக்கிட்டு எழுவான். மயிர் கொட்டி விடவும், மண்டையில் அங்கங்கே சொட்டை விழுந்து விகாரத் தோற்றம் பெற்று விட்டதுபோல் அவனுக்குப்படும். உடனே. விளக்கை ஏற்றி. கண்ணாடி முன் நின்று ஆராய்ச்சி செய்வான் அவன்.

“டாரன்ச்சலா” என்ற இனத்துப் பூச்சி பற்றி அவன் அறிந்தது முதல், சிதம்பரத்தின் மனப்பித்து மோசமான நிலை எய்தியது…

டாரன்ச்சலா இனச் சிலந்தி பெரியது: மயிர் செறிந்தது. விகார உருவம் பெற்ற இது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் விஷம் உடையதல்ல. இத்தாலியிலும் ஐரோப்பாவின், வேறு சில நாடுகளிலும் காணப்படுகிற இந்தச் சிலந்தியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு நாட்டியம் ஆட வேண்டும் என்ற வெறி பிறக்குமாம். அவர்கள் அந்த உணர்வு தீருகிற வரை வெறியாட்டம் ஆடவேண்டியது தான்….

சிதம்பரம் இந்த இனச் சிலந்தியை நேரில் காணும் வாய்ப்பு பெற்றவனல்ல. அதன் படத்தை மட்டுமே கண்டிருந்தான். ஆயினும் டாரன்ச்சலா அவன் மூளையில் ஒரு பகுதியில் குடியேறி விட்டது!

அந்தப் பெருஞ்சிலந்தி அவனைக் கடித்து விட்டது போலவும், “ஆடு! எழுந்து குதித்து, கூத்தாடுடா பயலே!” என்று உத்திரவிடுவது போலவும் உணர்வு எழும் அவனுக்கு.
ஒன்றிரண்டு தடவைகள் அவன் எழுந்து நின்று “திங்கு திங்கென்று” குதித்துக் கூத்தாடவும் செய்திருக்கிறான். நல்ல வேளை! அச்சந்தர்ப்பங்களில் அவன் தனியனாய் தனது அறையிலேயே இருந்தான். வேறு எங்காவது இருந்திருந்தால் அவனுக்குப் பைத்தியம் என்றே மற்றவர்கள் முடிவு கட்டியிருப்பார்கள்.

அவனுக்குப் பைத்தியம் தானா? அல்லது, பைத்தியத்தின் ஆரம்ப நிலையா? பைத்தியத்தின் வித்து விழுந்து, மனம் சிறிது சிறிதாகப் பேதலித்து வரும் தன்மையோ? அறிவு மயக்கமும் தெளிவும் மாறி மாறி வரும் நிலமையாக இருக்குமோ?

திட்டமாகச் சொல்வதற்கில்லை. எதுவாகவும் இருக்கலாம். எதுவும் இல்லாது, வேறு குழப்பமாக இருந்தாலும் இருந்து விடலாம். மனித உள்ளத்தின் சிக்கல்களை யார்தான் எளிதில் விடுவிக்க முடிகிறது?

சிதம்பரம் அன்றாட அலுவல்களை ஒழுங்காகத் தான் செய்த வந்தான். “முக்கியமான வேலை” என்று எதையும் செய்ய வேண்டிய அவசியம் அவனுக்குக் கிடையாது. வாழ்க்கை வசதிகள் பலவும் இருந்தன. ஆகவே, சோம்பியிருக்கவும், வீண் எண்ணங்களை வளர்க்கவும் நேரம் நிறையவே கிடைத்தது. அத்தகைய வேளைகளில் அவன் மனம் அடிக்கடி சிலந்தியைச் சுற்றியே நூல் ஓடவிட்டு, தான் பின்னிய வலையில் தானே சிக்கிச் சுழன்று, எண்ணச் சிக்கலை அதிகமாக்கிக்கொண்டு குழம்பித் தவிக்கும்.

இந்த உலகத்திலேயே தனது முதல் விரோதி சிலந்திப் பூச்சிதான் என்றும், கண்ட போதெல்லாம் அந்த இனப்பூச்சியை நசுக்கிக் கொல்ல வேண்டும் என்றும் தவித்தான் அவன். அந்த இனத்தை அவன் அடியோடு ஒழித்துக் கட்டிவிட முடியாது என்றும், அவனுக்கு அந்தப் பூச்சியினால் தான் மரணம் சம்பவிக்கும் என்றும் அவன் உள்ளம் அடிக்கடி அவனுக்கு நினைவு படுத்திக் கொண்டிருந்தது.

சில சமயங்களில் அந்தப் பூச்சி சிலந்தி இனப்பூச்சிகளில் எதுவாவது ஒன்று – அவன் கண்களைக் கவர்ந்து, மனசை வசீகரித்து, வியந்து நிற்கும்படி செய்துவிடும்.
ஒரு தடவை சிதம்பரம் ரஸ்தாவில் நடந்துகொண்டிருந்தான். இருபுறமும் மரங்கள் ஓங்கி வளர்ந்த பாட்டை மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்த சருகுகளும், பழுப்புகளும், காய்களும், பூக்களும் எங்கும் சிதறிக் கிடந்தன. அவை இன்னும் உதிர்ந்து கொண்டிருந்தன… திடீரென்று அவன் முன்னே , காலுக்கு அருகிலேயே, “டப்” என்று எதுவோ விழுந்தது. வேப்பம் பழமாக இருக்கும் என்று அவன் எண்ணினான்.

மேலே கவிந்து நின்ற வேப்ப மரத்திலிருந்துதான் அது விழுந்தது. ஆனால் அவன் ஏமாற்றமும் வியப்பும் ஒருங்கே அடைய நேர்ந்தது. வேப்பம் பழம் போல் உருண்டையாக இருந்தது. அது. வெண்மையும் பசுமையும், சிறிது மஞ்சள் நிறமும் கலந்த உடலும், பசிய குச்சிகள் போன்ற கால்களும் பெற்ற சிலந்திப் பூச்கியாக இயங்கியது. நகர்ந்தது. அவன் காலை நோக்கி ஓடிவர முயன்றது.

அவன் பாதம் தானாகவே பின்னுக்கு நகர்ந்தது. இயற்கையின் அற்புதமான ஆற்றலை – சூழ்நிலைக்கு ஏற்ப ஜந்துக்களைப் படைத்து, அவற்றுக்கு இயல்பான பாதுகாப்பு அளிக்கும் தன்மையை – எண்ணி வியப்புற்றான் அவன். அதற்குள் அந்தப் பூச்சி அவன் மீது தாவி ஏறுவதற்காக நெருங்கி விட்டது.

செருப்புக் காலால் அதை நசுக்கிக் கொன்றிருக்கலாம். கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழாமலில்லை. எனினும் அதைக் கொல்ல அவன் கால் நகரவில்லை. மனம் தூண்டவுமில்லை. அந்த விஷப் பூச்சி, மலரும் நிலையிலுள்ள குண்டு மல்லி மொக்கு போல் புதுமையாக இருந்தது; பசுமையாயும் அழகாகவும் இருந்தது. அதனால் வசீகரிக்கப்பட்டு நின்ற அவனை அவனுடைய உள்ளுணர்வு வேகமாக உந்தியது. அவன் விலகி நகர்ந்தான்.

அந்தப் பூச்சியையே கண் வைத்துக் காத்திருந்த ஒரு காக்கை குபீரென்று பாய்ந்தது. தன் கூரிய மூக்கால் பூச்சியைக் கொத்தியது. கொன்றது. கவ்வி எடுத்துப் பறந்தது.

சிதம்பரம் அந்தப் பூச்சிக்காக அனுதாபப்படவில்லை. அவனுக்கு ஏதாவது ஒரு சிலந்திப் பூச்சியால் சாவு ஏற்படும் – “ஜலமண்டலி” கடித்தால் மரணம் நிச்சயம் என்று தானே சொல்கிறார்கள்? என்று அவன் உள்மனம் அப்பொழுது ஜாதகம் கணித்தது.

தூக்கம் பிடிக்காமல் கிடந்த சிரம்பரத்தின் கண்கள் ஒளிக்குமிழையே உற்றுநோக்கிக்கொண்டிருந்தன. வைரக் கம்பிகள் போல் அதிலிருந்து பாய்ந்த ஒளிக்கோடுகள் எல்லாம் சிலந்தியின் மெல்லிய நூல்கள் போலவும், ஒவ்வொன்றிலும் ஒரு பூச்சி தொங்கிப் பாய்வது போலவும் தோன்றியது.

ஒரு தடிப்பூச்சி வாயில் வெள்ளை வட்டம் ஒன்றைக் கவ்வியபடி வந்து விழுந்தது. உற்றுக் கவனித்தால், அது அவ் வட்டப் பொருளைத் தன் கால்களால் நன்கு பற்றியிருப்பது புரிந்தது.

சிதம்பரம் ஒரு குச்சியால் விரட்டவும், சிலந்தி அதை நழுவவிட்டு விட்டது. அவன் அதைக் குத்தினான். அது கிழிந்து, அதனுள்ளிருந்து பலபல பூச்சிகள் – சின்னஞ்சிறு சிலந்திகள் – வெளிப்பட்டுச் சிதறின. குடுகுடுவென ஓடி ஊர்ந்தன. அவனைச் சுற்றி ஓடின. அவன் உடல் மீதும் ஏறின.

“ஐயோ ஐயோ!” என்று அலறிக் கொண்டு துள்ளி எழுந்தான் அவன். கைகளால் நெடுகிலும் தேய்க்க முயன்றான். எனினும் பூச்சிகள் வேகமாக ஊர்ந்து படர்ந்தன. பெரிய பூச்சி கூட-”அவனைத் துரத்தி வந்தது.

செய்யும் வகை புரியாதவனாய் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு கைகளை ஆட்டி அசைத்து, “ஐயோ, ஐயோ!” என்று கூச்சலிட்டபடி ஓடலானான் அப்பாவி சிதம்பரம்.

- வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு 

தொடர்புடைய சிறுகதைகள்
"ஏய், விளையாட்டில் ஜெயிக்கிறவன் மற்ற எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கணும். ஆமா" என்று கத்தினான் ஆத்ம கிருஷ்ணன். ஆமா, ஆமோ ஆமா' என்று கூப்பாடு போர்ட்டார்கள் மற்றவர்கள் முருகையா குதிக்கவுமில்லை; கூப்பாடு போடவுமில்லை. எனினும் அவனும் விளையாட்டில் கலந்து கொண்டான். ஓட்டப் பந்தயம் மும்முரமாக ...
மேலும் கதையை படிக்க...
கைலாசம் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்த்துப் போவதற்காகப் பலபேர் வந்தார்கள். அவன் இளம் கவிஞன். கலைஞன், இலக்கிய ரசிகன். சதா புத்தகங்களைப் படித்து, ரசித்து, அவற்றின் நயங்களில் ஆழ்ந்து கிடப்பவன். இப்படி அவனைப் பலரும் அறிந்து வைத்திருந்தார்கள். ஆகவே, அவன் நண்பர்கள், தெரிந்தவர்கள், அவனைப் ...
மேலும் கதையை படிக்க...
"விளையும் பயர் முளையிலே தெரியும்" என்று சொல்லப்படுகிறது. பயிர்களைப் பொறுத்த வரையில் இது உண்மையாக இருக்கலாம். மனித வாழ்க்கையில் இந்த விதி பொய்த்துப் போகும். போகும் என்ன போகும் முழுக்க முழுக்கப் பொய்த்தே விட்டது. பொய்யாகிக் கொண்டே இருக்கிறது! சிந்தித்துச் சினந்து சீறியது ...
மேலும் கதையை படிக்க...
ஒருவனுக்கு அதிர்ஷ்டம் இந்தால் அவன் கரியைத் தொட்டாலும் அது மஞ்சள் ஆகிவிடும் என்று சொல்வார்கள். பணம், பொருள் விஷயத்தில் மட்டுமின்றி புகழும் பெருமையும் வந்து சேருவதில் கூட அதிர்ஷ்டம் துணைபுரியக்கூடும் என்பதற்கு புன்னைக்காடு மகிழ்வண்ணம் பிள்ளையின் அனுபவம் சுவாரஸ்யமான உதாரணமாக விளங்குகிறது. வானைத் ...
மேலும் கதையை படிக்க...
சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, அவனுக் கென்ன! கொடுத்து வைத்தவன்" என்று சொல்வார்கள். திருவாளர் நமசிவாயம் அவர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டிய அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் அல்லர். "பாவம், கொடுத்து வைக்காதவர்" என்று தான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள். திருவாளர் நமசிவாயம் தமாஷாகச் சொல்லுவார்: "நம்ம ...
மேலும் கதையை படிக்க...
இருள் கவியவில்லை இன்னும்... நாகரிகப் பெருநகரம் அசுரவேகத்தோடு, ஆரவாரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் வேளை, மாலை நேரம். புற்றுக்களிலிருந்து கிளம்பி எங்கெங்கும் திரிகிற எறும்புகள் போல, அலுவலகங்களில் அடைபட்டுக் கிடந்துவிட்டு வெளியேறிய உழைப்பாளிகள் - இயந்திரங்களை ஓட்டிப் பிழைக்கிறவர்களும், பேனா ஓட்டி வாழும் குமாஸ்தாக்களும், பிறரும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பொழுது நான் தூங்கவில்லை - தூக்கக் கிறக்கத்திலே தோன்றிய சொப்பனமாக இருக்கும் என்று அதைத் தள்ளி விடுவதற்கு. உண்மையைச் சொல்லப் போனால் அப்போது நான் விழித்திருக்கவும் இல்லை; கண்களை மூடிக்கொண்டு, யோசனையில் ஆழ்ந்து கிடந்தேன், முதுகெலும்பு இல்லாத ஜீவன் மாதிரி நாற்காலியில் சரிந்து ...
மேலும் கதையை படிக்க...
சந்தோஷங்கள் சந்தோஷங்கள்
சுவரில் தொங்கிய காலண்ட ரைப் பார்த்தான் சின்னக் கண்ணன். ஆகா என்று கைகொட்டிக் களித்தான். ஈசிச்சேரில் ஓய்வாகச் சாய்த்திருந்த அப்பா கேட்டார், "இப்ப என்ன சந்தோவும்?" என்று. "நாளைக்குத் தேதி இருபது" என்றான் கண்ணன். "சரி. அதுக்கென்ன?" "நாளைக்கு ஒரு விசேஷம். ஞாபகம் இல்லை?" "என்ன விசேஷம்?" "பம்பர் பரிசுச் ...
மேலும் கதையை படிக்க...
பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன் மத்தாதின், யானை நாளுக்கு நாள் அடங்காப்பிடாரியாக ஆகிக் கொண்டு வருவதாக இளவரசனிடம் முறையிட்டான். அதன் துணைக்கு சீக்கு. எனவே, டாக்டரின் உத்திரவுப் படி அதை அதன் ஜோடியிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்கள். ஆனால், ஒவ்வொரு நாள் ...
மேலும் கதையை படிக்க...
தெற்கு வடக்காக அகன்று நீண்டு கிடந்த மேலத்தெருவின் கிளைபோல் கிழக்கு நோக்கி ஒடுங்கலாகப் பிரிந்து சென்ற நடுத்தெருவில் திரும்பி அடியெடுத்து வைத்த ஆண்டியா பிள்ளையின் நடையில் தனியொரு வேகம் சேர்ந்தது. கைலாசம் பிள்ளையை சந்திக்கப் போகிறோம் என்ற துடிப்பு, அவர் கால் ...
மேலும் கதையை படிக்க...
கொடிது, கொடிது!
மனம் தேற மருந்து
முளையும் – விளைவும்
பெருமை
கொடுத்து வைக்காதவர்
இரண்டு பாபிகள்
ஒரு காதல் கதை
சந்தோஷங்கள் சந்தோஷங்கள்
பம் பகதூர்
நண்பர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)