சிங்கம் சினிமாவுக்குக் கிளம்பிடிச்சு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 32,467 
 

”ஆடி மாசம் அம்ம னுக்குக் கூழ் ஊத்துறதை விட, புதுசா இந்த வருஷம் ஒரு நாடகம் போட்டா என்ன?” என்று முதல் ஏவுகணையை மணி வீசினான்.

”நல்லாதான் இருக்கும். ஆனா, நிறையப் பணம் தேவைப்படுமே!” – என் கவலையைச் சொன்னேன்.

”அம்பது நூறுக்குப் பதிலா, ஐந்நூறு ஆயிரம்னு வசூல் பண்ணுவோம். நாடகம் போட்ட மாதிரியும் இருக்கும்; நாம எல்லாரும் நடிச்ச மாதிரியும் இருக்கும்” என இரண்டாவது ஏவுகணை சரவணனிடம் இருந்து வந்தது.

”ஆமாடா… ஊர்ல நமக்கு ஒரு கெத்து வேணாமா? எத்தனை திருவிழாவுக்குத்தான் ‘கூழே’ ஊத்துறது. பொண்ணுங்களும் ‘கூழ் காய்ச்சுறவனுங்க போறானுங்கடி!’னு கேவலமாப் பாக்கிறாங்க!”

சிங்கம் சினிமாவுக்குக் கிளம்பிடிச்சுஎங்கள் ஊர் தெருமுனை டீக்கடையில் காலைகளில் கூடிவிடுவோம். நான், சரவணன், மணி, சேது இன்னும் சிலர். எங்களுக்கு நாங்களே வேடிக்கையாக வைத்துக்கொண்ட பெயர் ‘வஞ்சிக்கப்பட்ட வாலிபர் சங்கம்’. ஜாலியாக இருந்தாலும், பொருத்தமாகவும் அமைந்துவிட்டது. சங்கத்தில்… காதலியால், தந்தையால், மனைவியால், மொத்தக் குடும்பத்தாலும்… எனக் கைவிடப்பட்ட நண்பர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது.

எங்களது வ.வா.சங்க மூத்த உறுப்பினர் ஓர் அண்ணன். அவர் பெயர்… யாருக்கு வேண்டும்? அப்படியே சொன்னாலும் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆக, ‘அண்ணன்’ என்றே இருக்கட்டும்.

அவர்தான் ‘நாடகம் போடுங்கடா வசூல் பண்ணித் தர்றேன். அண்ணன் நான் இருக்கேன்டா!’ என்று வலுக்கட்டாயமாக எங்கள் வாயைத் திறக்கச்சொல்லி ஊக்க மாத்திரைகளைப் போடுவார். ஆனால், நாங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவோம். அப்படி அவர் சொல்வதில் உள்குத்தும் இருக்கிறது. நாடகம் என்றால் ‘ரேப்’ சீன் இருக்கும். மூத்தவர் என்பதாலும், வசூல் செய்து தருவதாலும் வில்லன் கேரக்டரை விடாப்பிடியாக வாங்கிவிடலாம் என்ற ஆசை, கனவு, லட்சியம், வெறி… அவருக்கு.

பார்ப்பதற்கு, வாய்ப்பு கிடைக்காத முன்னாள் நடிகர்போல் அவர் இருப்பார். இறுக்கிப் பிடித்த சட்டை, பட்டையாக மடித்துவிடப்பட்டு, துண்டிக்கப்பட்ட தும்பிக்கைபோல் ஆர்ம்ஸ் காட்டும் கைகள். ரோஸ் நிறத்தில் மூன்று கோட்டிங் முகப் பூச்சு. முன் நெற்றியில் ‘நல்ல நேரம்’ எம்.ஜி.ஆர் ஸ்டைலில் சுருள் கேசம். முன்பெல்லாம், முன் உச்சியில் சீப்பை இரண்டு சுழற்றிச் சுழற்றி வெடுக்கென இழுத்து சுருள் வைப்பார். கைப்பிடி அளவுக்கு இருக்கும். இப்போது ஒற்றை வொயரில் உருவிப்போட்ட கம்பிபோல் நான்கைந்து சுருண்டு தொங்குகின்றன. நாங்கள் நாடகம் பற்றி பேசியது, அண்ணனின் சுருள் முடிக்கு வேர்த்துவிட்டதோ என்னவோ வந்து நின்றார்.

”அண்ணே… நீங்க சொன்ன மாதிரி இந்தத் திருவிழாவுக்கு நாடகம் போடுறதா முடிவு பண்ணிட்டோம். உங்களுக்குச் சம்மதம்தானே?” என்றதும் அண்ணனிடம் இருந்து அப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

”யாரைக் கேட்டு முடிவு செஞ்சிங்க? தலைமையை விட்டுட்டுச் செயல்பட துணிஞ்சிட்டீங்களா? (அவரைத்தான் தலைமை என்கிறார்) நாடகம் போட்டா யாருடா பாக்கிறது? சினிமா எடுங்கடா… நான் வசூல் பண்ணித் தர்றேன்” என்று சொல்லிவிட்டு, அவர் பாட்டுக்குப் போய்விட்டார். எங்களுக்குத்தான் பகீர் என்றது.

‘என்னாது சினிமா எடுக்கிறதா… சாதாரண விஷயமா என்ன?’ – ஆளாளுக்கு முகம் பார்த்துக்கொண்டார்கள். நான்தான் சொன்னேன். ”ஏன் முடியாது. நாம நெனச்சா முடியும். நம்ம வீடுகள்ல கல்யாணம், காதுகுத்து, கெடாவெட்டுனா, எவ்வளவு வேலை பார்க்கிறோம். அதே மாதிரிதான் ஆளாளுக்கு ஒரு வேலையைப் பிரிச்சிக்குவோம். ‘சிங்கம்’ மாதிரி ஒரு சினிமா எடுக்குறோம்!”

”அதுக்கு சென்னைக்குப் போகணும். மினி பஸ்ஸே வராத நம்ம கிராமத்துல இருந்து என்ன பண்றது?” – நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டான் சரவணன்.

”அங்க போயி சோத்துக்கு..? ரோட்டுக் கடையில இட்லியே எட்டு ரூபா தெரியும்ல… சினிமா எடுக்கணும்னா, சாக்கு மூட்டையில பணம் வேணும்” – இது மணி.

எங்கிருந்து வந்தார், எப்படி வந்தார் என்றெல்லாம் தெரியாமல், ”இந்தா சிவா… என்னோட முதல் தொகையா வரவு வை” என்று 5,001 ரூபாயை என் முன் நீட்டினார் அண்ணன்.

வாங்கி வைத்துக்கொண்டு, ”நாம சென்னைக்குப் போகணும்ணே… அங்கதான் எல்லா வசதியும் இருக்கு” என்றேன்.

”அதுக்கு முன்னாடி பணம் சேர்க்க வேணாமா? யார் யார் என்னென்ன வேலை எடுத்துக்கப் பிரியப்படுறிங்களோ… அதுக்கு தகுந்த மாதிரி ரேட். டைரக்ஷன் பொறுப்பு யாருக்கு வேணும்..?” அனைவரையும் ஒரு சுற்று பார்த்துவிட்டு என்னிடம், ”சிவா… நீயே எடுத்துக்கோ. உன்கிட்டதானே பைக் இருக்கு. எல்லா இடத்துக்கும் டக்னு போக வர வசதியா இருக்கும்” என்றார், ஏதோ மார்க்கெட்டிங் வேலைக்கு ஆள் எடுப்பதுபோல்!

”சரிண்ணே.. எப்பவும் உங்க முடிவு கரெக்ட்டாதான் இருக்கும். நானே டைரக்ஷன் பண்றேன். ஆனா, நாம போடுற 5,000, 10,000 ரூபாய் வெச்சு படம் எடுக்க முடியாதுண்ணே.”

”சரிப்பா… இப்ப என்ன சொல்ல வர்ற?”

”புரொடியூசர் வேணும். பல லட்சம் தேவைப்படும். அப்பதான் ஷூட்டிங் பண்ண முடியும். வெயிட் பார்ட்டி ஒருத்தரைப் பிடிங்க. படத்தை முடிப்போம்!”

”ம்…” என்றவர் வானத்தைப் பார்த்தார். கூடவே நாங்களும் பார்த்தோம்.

திடீரென உற்சாகமானவர், ”இருக்கான்டா, ஒருத்தன் இருக்கான். பருத்திக் காட்டைப் பாதி விலைக்கு வித்துட்டு, கையில காசு வெச்சிருக்கான். படம்தான் எடுக்கணும்னு பைத்தியமா இருக்கான்.”

”எடுக்கிறதுக்கு முன்னாடியேவா..?” என்ற சரவணனின் காதைப் பிடித்துத் திருகி, ”எப்பப் பாரு ஏடாகூடமான கேள்வியாவே கேக்கிற… மூடிட்டு இரு!” என மிரட்டிவைத்தேன்.

”உடனே கூட்டிட்டு வாங்கண்ணே” என்ற, அடுத்த பேராவிலேயே அண்ணன் அந்தத் தயாரிப்பு நபரோடு இருந்தார்.

”இவர்தான்டா நான் சொன்னது. திருத்தணிக வடிவேலாயுத சாந்தமூர்த்தி” -அவ்வளவு நீளமான பெயருக்கு ஐந்து அடிக்கும் கீழாக இருந்தார். பார்க்க மிகவும் சிம்பிளாக இருக்கட்டும் என்று, கழுத்தில் ஒரே ஒரு செயின் மட்டும் 100 பவுனில் போட்டிருந்தார். வணங்கினேன்; வணங்கினார்.

”தம்பி நல்ல திறமையானவன்… நம்பி பணத்தைப் போடுங்க” – அண்ணன் என்னைக் காட்டியதும், அந்த தி.வ.சா பாடி கட்டாத லாரி குலுங்கிக் கிளம்பியதுபோல சிரித்தார்.

”ஓ…ஹோ. தம்பி… நம்பி! சூப்பர் காமெடி சென்ஸ்யா…” என்று எங்களைப் பார்த்தார். நாங்களும் பொதுவாகச் சிரித்துவைத்தோம். தயாரிப்பாளாராயிற்றே… அப்போதுதான் அவர் எது சொன்னாலும் நாமும் சேர்ந்து சிரிக்க வேண்டும் என்பது புரிந்தது.

”கதை இருக்கா… இனிமேதான் செய்யணுமா? என் பாட்டி நிறைய கதை சொல்வாங்க. அதுல ஒண்ணை ‘உல்ட்டா’ பண்ணுவோம்” என்றார் தி.வ.சா.

”கேப்போம். பாட்டி சொல்ற கதை சரியில்லைனா, சென்னைக்குப் போய் இறங்குறதுக்குள்ள பஸ்லயே ரெண்டு கதை ரெடி பண்ணிடுவோம்” – சரவணன் ஐடியா இது.

”புது பஸ்ஸ்டாண்டுகிட்ட எனக்குத் தெரிஞ்ச எழுத்தாளர் இருக்கார். அவர்கிட்ட இருக்கானு கேட்டுப் பார்ப்போம். கிடைச்சா நல்லதுதானே!” -பிரேம் சொன்னதை ஏற்றுக்கொண்டோம்.

மல்லூரில் இருந்து புதுப் பேருந்து நிலையத்துக்கு தயாரிப்பாளருடன் வந்தோம். எதிரிலேயே இருந்தது வணிக வளாகக் கட்டடம். அதன் மூன்றாம் மாடியில் பத்துக்குப் பத்து அழுக்கான அறையில், 50 வயதைத் தாண்டி ஒருவர் அமர்ந்திருந்தார். மூக்குக்கண்ணாடியை முன்னால் இழுத்துவிட்டிருந்தார். அவர் முதுகுக்குப் பின்னால் கைவிரல்கள் விரித்த ஃப்ளெக்ஸ் போர்டு ஒன்று இருந்தது. அதில், ‘கணித்து எழுதுபவர்: பாரப்பட்டி பாண்டுரங்கன்’ என்று இருந்தது. படுபாவி பிரேம், எழுத்தாளர் என்று நினைத்து ஜோசியக்காரரிடம் கூட்டி வந்தது அப்போதுதான் தெரிந்தது. அந்த நேரத்தில் சூர்யாபோல் என் பார்வையால், ஓங்கி அடித்து ஒன்றரை டன் வெயிட்டை பிரேம் மீது இறக்கினேன்.

”ஜோசியக்காரர்னு தெரியாது சிவா. எப்போ பார்த்தாலும் எழுதிக்கிட்டே இருப்பார். அது கதையில்ல… ராசிபலன்னு இப்பத்தான்டா எனக்கே தெரியுது!”

இந்த விவரம் புரியாத புரொடியூசர், ”என்ன மாதிரி கதையெல்லாம் இருக்கு?” என்று விசாரித்தார்.

ஜோசியக்காரர், கதை என்றதும் சமாளித்தபடி ”எல்லாவிதமான கதையும் இருக்கு சார். அண்ணன்-தங்கை பாசம், அப்பா-மகள் நேசம்!”

‘பாசம்… நேசம்! சூப்பர் காமெடி ஸ்டோரிய்யா” என்று லாரியை மீண்டும் ஸ்டார்ட் செய்தார், தயாரிப்பு.

”இந்த அண்ணன்-தங்கை பாசம் இருக்கே, செம சென்ட்டிமென்ட் ஸ்டோரி. வந்த புதுசுல சரத்குமார் பண்ணியிருந்தார்னா, சூப்பர் ஹிட். இப்போ சிவகார்த்திகேயனுக்கு செட்டாகும். ஆனா, பேரரசுதான் டைரக்ட் பண்ணணும்” என்றவர், அலமாரியில் இருந்து புகையாகக் கிளம்பிய பாலிதீன் கவர் ஒன்றைத் தட்டி டேபிள் மீது போட்டு, ”தமிழ் சினிமா உலகத்துல இப்படி ஒரு கதை வந்தது இல்லை. ஒரு பக்கம் தாய்மாமன்; இன்னொரு பக்கம் காதலன். ரெண்டு பேருக்கும் மத்தியில தள்ளாடித் தவிக்கிற பெண்ணோட கதை. வேணுமா? ஹண்ட்ரட் டேய்ஸ் ஃபிலிம்!”

‘ஓ.கே-வா?’ என்பதுபோல் தி.வ.சா என்னைப் பார்த்தார். ”இந்தக் காலத்துக்குத் தகுந்த மாதிரி வேணும் சார்!” என்றேன்.

”ம்… இந்தக் காலத்துக்குத் தகுந்த மாதிரி! இது பாரு. ஹீரோ ஒரு ஃபோர்ஜரி. மண்ணுளிப் பாம்புல இருந்து மருந்து, மாத்திரை, இரிடியம் வரைக்கும் ஏமாத்திச் சம்பாதிக்கிறான். ரொம்பப் புதுசு!” என்ற ஜோசியரை என்ன செய்வது என்று தெரியவில்லை.

”புதுசுதான். ஆனா, அந்தப் படம் தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்கே!”

”ஓடுதா? சரி, ஓடுற படத்தை நாம ஏன் எடுக்கணும். இந்தக் கதை எப்படினு பாருங்க. ஒரு தாதாவைக் கண்காணிக்கிற ஹீரோ. கிளைமாக்ஸ்ல தாதா நல்லவனாவும், ஹீரோ தாதாவாவும் மாறிடுறாங்க. பிரில்லியன்ட் ஸ்டோரி. காலேஜ் பசங்க கொண்டாடுவாங்க!”

”கல் எடுத்து அடிப்பானுங்க!” என்றபடி அந்த அறையைவிட்டு வெளியே வந்தோம்.

”டேய்… ‘ஜிகர்தண்டா’, ‘சதுரங்க வேட்டை’ படங்களைப் பார்த்துட்டுப் பேசிட்டு இருக்கான்டா. இப்படிக் கதைக்காகச் சிக்கிச் சீரழியறதைவிட, காதல்ல தோத்துப்போன நம்ம சேது கதையவே எடுக்கலாம்டா” என்று பிரமாதமான ஐடியா கொடுத்த மணியைக் கட்டிக்கொண்டேன்.

நாளை ‘ரைட்ஸ்’ பிரச்னை வந்துவிடக் கூடாது என்று சேதுவிடம் எழுதி வாங்கிக்கொண்டேன். இந்த விஷயம் தெரிந்த அண்ணன் வந்தார்.

”சேது கதையைப் படம் பண்ணப்போறீங்களா?”

”ஆமாண்ணே… அருமையான ‘லவ்’ ஸ்டோரி!”

”தெரியும். ஆனா, தலைமையைக் கலந்துக்காம தன்னிச்சையா செயல்பட ஆரம்பிச்சிட்டிங்க” என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல வெடுக்கெனக் கிளம்பிப் போனார். நாங்களும் கண்டுகொள்ளவில்லை.

சிங்கம் சினிமாவுக்குக் கிளம்பிடிச்சு2”சரவணா, கதை இருக்கு. இசையமைப்பாளர் வேணும். யாரு இருக்கா?” என்றதும் வானத்தைப் பார்த்து யோசித்தான். அவனுக்கும் இயக்குநர் கனவு இருக்கும்போல!

”போன திருவிழாவுல ‘ரணகள மெலடிஸ் ஆர்க்கெஸ்ட்ரா’வுல நல்லா மிமிக்ரி பண்ண ஒரு பையனைத் தெரியும்.”

”அவனை உனக்குத் தெரியும்… சரி. அவனுக்கு இசை தெரியுமா?”

”’சரிகம…’வைத் தலைகீழாக் கேட்போம். சொல்லிட்டான்னா தெரியும்னுதானே அர்த்தம்!” என்றான்.

உடனே ‘நடிகர்-நடிகைகள் தேவை’ என்று உள்ளூர் பேப்பர் ஒன்றில் விளம்பரம் கொடுத்தோம். ஆணும் பெண்ணுமாக 134 பேர் வந்திருந்தனர். முதல் சுற்று, இரண்டாம் சுற்று… எனச் சுற்றிச் சுற்றி வந்ததில், 11-வது சுற்றில் ஏழு பேர் தேர்வானார்கள். இதில் வைல்ட் கார்டில் தேர்வான பையன்தான் ஹீரோ. அதுவரை கூடவே இருந்த அண்ணனை, ஹீரோயின் தேர்வின்போது மட்டும் அருகில் சேர்க்கவில்லை.

டைரக்டர் என்றால் ஒரு சீனிலாவது தலையைக் காட்டுவது இன்றைய டிரெண்ட் என்பதால், 33 சீன்களில் மட்டும் தலையைக் காட்ட பெருந்தன்மையோடு தீர்மானித்திருந்தேன். வழக்கம்போல் அண்ணன் வந்தார்.

”எனக்கு என்ன கேரக்டர்?”

”காதலைச் சேர்த்துவைக்கிறதே நீங்கதாண்ணே. காதலுக்கு எதிரியான ஹீரோயின் அப்பாவைப் பழிவாங்க, அவரோட செங்கல்சூளைக்குக் கடப்பாறையோடு போறீங்க. அங்கே வெந்து பதமா இருக்கிற செங்கல்லைத் தனித்தனியாப் பிரிக்கிறீங்க.”

”அப்படியே ஒரு லாரியைக் கொண்டாந்து நிப்பாட்டுங்கடா… லோடு ஏத்திவிடறேன். என்னடா விளையாடுறீங்களா? வில்லன் வேஷம் கேட்டா, செங்கல்சூளை கூலி வேலைக்கு ஆள் அனுப்புறீங்க” என்று கோபமாகக் கிளம்பியவரை ஒருவழியாக சமாதானம் செய்தோம்.

இரண்டு நாளில்… நான், சரவணன், மணி, அண்ணன் மற்றும் தயாரிப்பாளரோடு சென்னைக்குக் கிளம்பினோம். மணிக்கு இதுதான் முதல் சென்னைப் பயணம். விமானம் மேலே ஏறுவதைப் பார்க்க வேண்டும் என, கிண்டி வரை தூங்காமலே வந்தான்.

வடபழநியில் ஒரு லாட்ஜில் தங்கினோம். தயாரிப்பாளர் என்பதால் தி.வ.சா-வுக்கு மட்டும் தனி அறை. எங்கள் மூவருக்கும் ஒன்று. ‘சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால், கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்’ என்பார்கள். அதற்காக எவ்வளவு பெரிய கஷ்டம். ஓர் அறையில் மூன்று பேர்… அப்பப்பா!

அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. விழுப்புரத்தில் வாங்கிய ‘சினிமாவில் சிகரம் தொடுவது எப்படி?’ என்ற புத்தகத்தைப் படித்தும் தைரியம் வரவில்லை. அண்ணனைப் பார்த்தேன். இத்துப்போன கதவை மொக்கை ரம்பத்தில் அறுப்பதுபோல, சத்தம் நிறைந்த குறட்டையிலும் ஆழ்ந்த உறக்கத்திலும் இருந்தார். பலவிதமாக முயற்சித்தும் அசைந்துகொடுக்காதவர், ”தலைமை… எந்திரிங்க தலைமை” என்றதும் எழுந்து உட்கார்ந்தார்.

”என்ன சிவா இந்த நேரத்துல… தூங்கலையா?”

”வரலைண்ணே… படம் எடுக்க சென்னைக்கு வந்துட்டாலும், பதற்றமாவே இருக்கு. படம் டைரக்ட் பண்றதுக்கு ஷூட்டிங் பார்த்த அனுபவம் மட்டும் போதாதோ?”

”அதுவே அதிகம். பதற்றம், படபடப்பு, கை-கால் உதறல், கண் எரிச்சல், கால்ரா, வாந்தி-பேதி வரைக்கும் வராம இருக்கணும்னா, முதல் மூணு நாள் ‘ஸாங்’ ஷூட் பண்ணு.

நீ பண்ண என்ன இருக்கு? மாஸ்டர் எடுப்பாரு… நீ வேடிக்கை பாத்துக் கத்துக்க!”

”அதுக்குப் பாட்டு வேணுமே!”

அடுத்த நாள் லாட்ஜ் அறையில் இசையமைப்பாளர் கீரவாணிராஜன், புலவர் அக்னி புதல்வனோடும், பூரிகிழங்கு, பொங்கல் ஏப்பத்தோடும் சாங் கம்போஸிங் பண்ண அமர்ந்தோம்.

”பசங்க தியேட்டர் திரையைக் கிழிக்கிற மாதிரி பாட்டு போடுங்க தம்பி” என்றார் தயாரிப்பு.

”கிழிப்பானுங்க சார். கிழிக்கலேனா, ‘ஏன்டா கிழியலே?’னு என்னைக் கேளுங்க. டைரக்டரே… சுச்சுவேஷன் சொல்லுங்க” ஆர்மோனியத்தை அருகில் இழுத்துக்கொண்டு, கையை முறுக்கியபடி சண்டைக்குப் போவதுபோல் தயாரானார்.

அண்ணனைப் பார்த்தேன். ”சொத்தையா கேட்டாரு? சுச்சுவேஷன்தானே… தைரியமா சொல்லு. அண்ணன் நான் இருக்கேன்” – காதில் கிசுகிசுத்தார்.

”ஒரு பொண்ணைக் காதலிக்கிற பையன்…”

”சூப்பர் சுச்சுவேஷன். இதோ ட்யூன் போடுறேன்… ம்…” சுருதி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்.

”சார்… இருங்க சார். சொல்லியே முடிக்கலை!”

”காதல்னுட்ட… இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு? புலவர் புதல்வா… ட்யூன் இதான் எழுதுங்க. ‘தன்ன தனனனே தன்னே… தன்னே தனனனே தன்னே!”

புலவர் ரைட்டிங் பேடை எடுத்து அடுத்த நிமிடமே பாட ஆரம்பித்தார்.

”சங்க அறுத்துப்புட்டா – கழுத்து
சங்க அறுத்துப்புட்டா
சாஞ்சிப் படுத்திருந்தேன் – இழுத்து
மாஞ்சா போட்டுப்புட்டா!”

வரியைக் கேட்ட தயாரிப்பு துள்ளிக் குதித்தார். ”சாஞ்சா – மாஞ்சா, கழுத்து-இழுத்து அடடா!” – உற்சாகத்தில் உடனே அட்வான்ஸ் கொடுத்து அனுப்பினார்.

புரொடக்ஷன் மேனேஜர் என்று மீட்டர் கோவிந்தை அறிமுகப்படுத்தினார் அண்ணன்.

”சிவா… இவரு சினிமாவைக் கரைச்சுக் குடிச்சவரு!”

”நேத்தே வரேன்னு சொன்னீங்க?” என்றேன் கோவிந்துவிடம்.

”முடியல தம்பி. லூஸ் மோஷன். நீங்கதான் டைரக்டரா?”

”டிசென்ட்ரி ஆகுற அளவுக்கு சினிமாவைக் குடிச்சிருப்பார்போல” என்றேன் அண்ணன் காதில்.

”படம் எவ்வளவு பட்ஜெட்?” – இது கோவிந்த்.

”50. அதுக்குள்ள முடிச்சாகணும்.”

”புள்ளிவெச்ச மாதிரி முடிக்கணும்னு சொல்றீங்களே. புரொடியூசரும் நீங்கதானா?”

”இல்லை… வேற ஒருத்தர்.”

”அப்போ விடுங்க. 50-னு ஆரம்பிச்சு, ரவுண்டா ரெண்டுல முடிப்போம். அப்புறம், நீங்க புதுசுங்கிறதால நான் சொல்ற டெக்னீஷியனைப் போட்டிங்கனா ரொம்ப வசதி.”

”யாருக்கு?”

”நம்ம எல்லோருக்கும்தான். அடுத்து, எத்தனை நாள் ஷூட்டிங் பண்ணப்போறீங்க… டே அண்ட் நைட் எத்தனை நாள் வரும்… இன்டீரியர் – எக்ஸ்டீரியர் எத்தனை சீன் வருது… எதுல ஷூட் பண்ணப்போறீங்க… ஃபிலிம்மா, டிஜிட்டலா? இதெல்லாம் தெரிஞ்சாத்தானே அதுக்கு தகுந்த மாதிரி பிளான் பண்ண முடியும்!”

”அப்படினா…” என்றான் சரவணன்.

”ஓ… நீயும் புதுசா..?” என்று சொல்லிவிட்டு மீண்டும் லிஸ்ட் போட ஆரம்பித்தார். ”காஸ்ட்யூம் லிஸ்ட் குடுத்துடுங்க. கேமராமேன் டிபார்ட்மென்ட்ல சொல்லி மெட்டீரியல் எழுதி வாங்குங்க!”

மீட்டர் கோவிந்த் சொல்லச் சொல்ல எனக்கு குவார்ட்டர் அடித்ததுபோல் தலை சுற்றியது. அண்ணனைப் பார்த்தேன். அவரும் மிரண்டுபோயிருந்தார்.

”அண்ணே… சினிமானா இவ்வளவு இருக்கா?” அவர் வாய் திறக்கும் முன் மீண்டும் மீட்டர் கூப்பிட்டார்.

”அப்புறம் ஹீரோயின் பாம்பே பொண்ணு. ஏற்கெனவே தமிழ்ல ‘சூடான சேமியா’ படத்துல நடிச்சிருக்கு. வெரி… வெரி டேலென்ட். பாவம் சின்னப் பொண்ணு. தனியா வரப் பயந்துட்டு குடும்பத்தோடதான் வரும். அப்புறம்…” என்றவருக்கு வலுக்கட்டாயமாகத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். ஒரே மடக்கில் குடித்துவிட்டு மீண்டும் ஆரம்பித்தார்.

”சினிமாவுல ரொம்ப முக்கியம் ஆர்ட் டைரக்டர். கேமரா இல்லாம ஷூட்டிங் போனாலும், ஆர்ட் டைரக்டர் இல்லாம போகக் கூடாது!”

நீண்ட நேரத்துக்குப் பிறகு… ”ஏன் அவரு என்ன பண்ணுவாரு?” என்று கேள்வி கேட்டான் மணி.

”என்ன பண்ணுவாரா..! மெரினா பீச்சுல மகாபலிபுரம் செட்டு போடுவாரு.”

”அதுக்கு மகாபலிபுரமே போலாமே!” என்ற சரவணனை முறைத்துப் பார்த்துவிட்டு, என் தோளில் கையைப் போட்டுக்கொண்டு தனியே கூட்டிப்போனார்.

”தம்பி… நீ சினிமாவுக்குப் புதுசு. அதான் தெரியலை. ‘கோ’னு ஒருத்தரை அனுப்புறேன். கூட வெச்சிக்கோ. எல்லாம் அவரு பாத்துக்குவாரு. எல்லா டெக்னீஷியனுக்கும் அட்வான்ஸ் குடுக்கணும். ‘வவுச்சர் பேடு’ இருக்குல?!” என்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, உதட்டை ஓரத்தில் திறந்து சைடில் புகைவிட்டார்.

அடுத்த ஒரு வாரத்தில் 20 லட்சம் ரூபாய் வாங்கி, எங்களைத் தவிர அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுத்தார் புரொடக்ஷன் மேனேஜர்.

இன்னும் நான்கு நாட்களில் ஷூட்டிங் புறப்படத் தயாரான நிலையில், ‘பாக்கி 30 லட்சம் பணத்தோடு வாங்க’ என்று மீட்டர் கோவிந்த் வழியனுப்பிவைக்க, தயாரிப்பாளர் ஊருக்கு வரவே இல்லை.

அண்ணன்தான் அந்த விஷயத்தைச் சொன்னார்.

”சிவா… ‘கையில சுத்தமா பணம் இல்லை’னு தயாரிப்பாளர் சொல்லிட்டாரு!”

அதிர்ச்சியுடன்… ”என்னண்ணே சொல்றீங்க? பருத்திக் காட்டை வித்துட்டு பணம் வெச்சிருக்கிறதா சொன்னீங்களே?”

”பருத்திக் காட்டை வித்ததும் உண்மை; பணம் வாங்கினதும் நிஜம். ஆனா, காடு அவரோடது இல்லையாம். பக்கத்து வீட்டுக்காரனுதாம். போலிப் பத்திரம் ரெடி பண்ணி வித்திருக்கார். போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.”

இதைக் கேட்டுக்கொண்டிருந்த மீட்டர் கோவிந்த், ”எனக்கு அப்பவே தெரியும். இந்த ஆளு எங்க படம் எடுக்கப்போறான்னு” என்று பொங்கலில் இருந்த மிளகைத் தனியாக வைத்தபடி, ”எதுக்கு இதுல இவ்வளவு மிளகு போடுறானுங்க?” என்றபடி எந்தவித சலனமும் இல்லாமல், அடுத்த கம்பெனிக்கு போன் பேச ஆரம்பித்தார்.

”அப்போ என் படம் என்னாச்சுனுதானே கேட்கிறீங்க? சூப்பர் லவ் ஸ்டோரி. நல்ல புரொடியூசர் இருந்தா சொல்லுங்க சார்!”

– ஆகஸ்ட் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *