கொரோனா கிச்சன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 43,166 
 

இந்தக் கொரோனா எத்தனையோ பேருக்கு உலகம் முழுக்க எத்தனையோ விஷயங்களைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது…! அதற்கு எப்படி பயப்படுவது..? எப்படி கட்டுப்பட்டு நிற்பது..? எப்படி மீறுவது ..? ஏன்..!? எப்படி அதை அலட்சியப் படுத்துவது வரை.. !!

எனக்கும் சொல்லித் தந்து கொண்டிருக்கிறது.. எப்படி நாக்கிற்கும் சிறிது ருசியாக சமைப்பது என்று…!! எப்படி வேளா வேளைக்கு வீட்டைப் பெருக்குவது.. ஸிங்க் கில் ரொம்பிக் கிடக்கும் பாத்திரங்களைத் தேய்ப்பது..!! சமையலறை மோடையைத் துடைப்பது.. !நாலஞ்சு நாள் பாத்ரூம் வாஷ்பேஸின் அடியில் சுருண்டு கிடக்கும் ஜட்டி , பனியன்களை வாஷிங் மிஷினில் தூக்கி எறிந்து சுவிட்சைப் போடுவது. ..!! குப்பைத் தொட்டியை மறக்காமல் ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை வாசலில் கொண்டு கொட்டுவது….!! அதை விட முக்கியமாக குடிக்க வெந்நீர் வெச்ச கேஸ் அடுப்பை மறக்காமல் கொதி வந்த உடன் ஆஃப் செய்வது வரை எலலாம் இந்தக் கொரோனா சொல்லித் தந்த கலைதான்…!!

இன்னும் சொல்லப் போனா.. அங்க இங்க அப்பப்ப ஓடர கரப்பான் பூச்சிகளை கைப்பிடித் துணியால் அடித்து பொத்தி எடுத்து நேராக ரெஸ்ட் ரூம் கம்மோட்ல போட்டு தண்ணிய ஃப்ளஷ் பண்ணி தலை முழுகுவது கூட … இந்த கொரோனா எனக்குச் சொல்லித் தந்த வீரம் தான்.! ஆனால் இந்த ஐம்பது வயதில் இதெல்லாம் கத்துக்கலைன்னு இங்க யாரும் தவம் கிடக்கவில்லை என்பதை அதனிடம் பல முறை அழுது சொல்லியும் அது காதுல போட்டுக்கரதா தெரியல…! மண்டையில் குட்டி குட்டி சொல்லிக் குடுத்துட்டுதான் ஓய்ஞ்சது ..! இன்னும் ஓயல..! அதான் இன்னும் லாக் டவுன் முடியலயே..!?

இப்படியாக இந்த கொரோனா சனியன்.. என்னை ஒரு நள மகாராஜாவாக வும். வீட்டு வேலை செய்யர பணிப் பெண்ணாகவும் மாற்றிவிட்டது மட்டுமில்லாமல்.. அஞ்சா நெஞ்ச வீரனாக.. கரப்பான் பூச்சி பிடிக்கும் ஒரு படைத்தளபதியாகவும் மாற்றி இருப்பது உண்மைதான்..!

ஆரம்பத்தில் நான் எனக்கு சமையல் தெரியும் என்றுதான் நினைத்திருந்தேன்..!! ஏன்னா என் மனைவி செய்யும் சமையலில் எல்லா வித நோனாவட்டங்களும் சொல்வது இந்த வீட்டில் நான்தான்..! அது பெரும்பாலும் சரியானதாகத்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்.. ! எத்தனையோ தடவை அப்பப்ப ஏதாவது சின்ன சின்ன சமையல் ஐட்டம் செஞ்சு அசத்தரவன்தான்.. ஆனா மறுமுறை என்னை என் மனைவி எதையுமே சமைக்கவிட மாட்டாள்…! ஏன்னா நான் செஞ்சதைஅவளும் சாப்பிட்டிருக்கிறாளே..? அது நினைவில் இருக்கிற வரை என்னை அடுப்பு பக்கம் அனுமதிக்கவே மாட்டாள்.. அவ்வளவு அதிதீவிரமா என் சமையலை ரசித்திருக்கிறாள் ..பாவம்.!

ஆனா என்ன செய்ய…? நான் மாதத்தில் இரண்டு மூன்று வாரமாவது வெளியூர் சுத்தர வேலை..! பத்து நாட்கள் தான் வீட்டில் இருப்பேன்.. ! இந்த முறை என் மனனவி சென்னையில் என் மூத்த மகளுடன் செட்டில் ஆகிவிட்டாள்…! நான் இங்கு தனியாக கோயமுத்தூரில் கிடந்து அல்லாடுகிறேன் .! கேட்டா அதே பத்து நாட்ள் தானே நீங்க சென்னையிலும் இருக்கீங்க..?! அப்ப வீட்டுக்கு வாங்கன்னுட்டு சின்னவளையும் கூட்டிகிட்டு சென்னையிலயே டேரா போட்டுட்டாள்.! நானும் இன்னும் சில மாதங்களில் சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிற தி்ட்டம்தான்.. அதற்குள் இந்த பாழாப் போன கொரோனா வந்து வியாபாரத்தையே பாழாக்கி விட்டது… ! சரி..எனக்கு மட்டும்தானா? ஊருக்கே தானே..!?

என் சமையலின் ஆரம்ப கட்ட பயிற்சி வகுப்புகள் அனைவரையும் போல என் அம்மா தந்ததுதான்..! ஒரு டம்ளர் காஃபிக்கு தலை தட்டியவாறு ரெண்டு ஸ்பூன் சர்க்கரை என்பதே நான் கற்ற முதல் பாடம்..!இன்றைக்கும் அது ஒன்றுதான் சரியாகச் செய்வேன்.! மற்றபடி எல்லாம் கண் பார்வை தான் அப்ப அப்ப கரண்டியில் எடுத்து நக்கிப் பார்த்து அதற்கேற்ற படி கூட்டலும் குறைத்தலும்தான் என் சமையல் அனுபவமே.!

என் அம்மா எனக்கு எதையும் சாப்பிடும் மன உறுதியையும், அடங்கிய நாக்கையும் தந்திருக்கிறாள்..! நான்கு நாள் பழையதும்.. ஏடு பிடித்த குழம்பையும் , ரசத்தையும் சுட பண்ணி சாப்பிடுவதும் என் அம்மா சொல்லித் தந்ததுதான்…! அதுவும் அந்த பழங்குழம்பை இலுப்பச்சட்டியில் கொட்டி.. பெரிய வெங்காயத்தை ஏராளமாக வெட்டிப் போட்டு.. .தாராளமாக தேங்காய் எண்ணெயை ஊற்றி… தள தளன்னு சும்மா அல்வா மாதிரி சுண்ட சுண்ட சுட பண்ரது இருக்கே….?.! அட..அட..அட.. இன்றைக்கும் எரிச்சக் குழம்பிற்கு ஈடு இணை உலகத்தில் ஏதுமில்லை.. அதுவும் இட்லி தோசைக்கு.. அடிச்சுக்க முடியாத, இணையில்லா ஜோடி இந்த எரிச்சக் குழம்புதான்..!

தண்ணீர் ஊற்றாத நேற்றைய சாதத்தில் போட்டு பிசைந்து.. கூடவே சின்ன வெங்காயத்தை நறுக் ..மொறுக் என்று கடிச்சு சாப்டரதுதான் எந்த ஸ்டார் ஓட்டல்லயும் கிடைக்காத மெனு…!

அட சாதமே வேண்டாங்க..?! அப்படியே தோசக்கரண்டியால வழிச்சு எடுத்து லபக்குனு வாய்ல போடுங்க..!! இருட்டுக்கடை அல்வாவை தோற்கடிக்கும் சுவை நம்ம எரிச்சக் குழம்பிற்கு மட்டும்தான் இந்த அவனியிலேயே உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்…!?

மத்தபடி எங்கம்மா எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமாக்கினது அக்கார அடிசல்..அவியல்ல ஆரம்பிச்சு.. பிஸிபேளாபாத்..போளி.. உருளக்கிழங்கு கறி..கோதுமை தோசைனு பெரிய லிஸ்ட்டா இருந்தாலும்.. நம்ம ரவா உப்புமாவிற்கு இதில் முக்கிய இடமுண்டு..! என்னடா எல்லாரையம் போல ரவா உப்புமாவை இழுக்கரானேன்னு சலிச்சுக்காதீங்க.! உண்மையிலயே வெள்ள ரவா உப்புமான்னா எனக்கு உசிரு.!

பொதுவா என் சின்ன வயசில காலைல டிபன் செய்யர வழக்கம் என் அம்மாவிற்கு கிடையாது.. ஏதாவது பழைய ஐட்டம்தான் ஓடும்.. ஆனா அப்பாவிற்கு காலை முதல் ஷிஃப்ட்டுன்னா அம்மா ஏதாவது டிபன் செய்வாள்..! ரவா உப்புமா அந்தப் பட்டியலில் அடிக்கடி இடம் பெறும்..! சம்பா உப்புமா தான் எனக்கு பிடிக்காத ஐட்டமே..!

ரவா உப்புமா எனக்கு மிகவும் பிடித்ததன் காரணம் அதற்கு தொட்டுக்க ஊற்றும் சாம்பார் ஒருபுறம்னா.. சிம்பிளா தொட்டுக்கர சர்க்கரை கூட ரொம்ப விருப்பம்தான் எனக்கு..!

அம்மா ரவா உப்புமாவில் கடலை பருப்பு போடுவாங்க.. கடுக் மொடுக்கு அதை நடுநடுவில் சாப்பிடுவதுதான் எனக்கு ரவா உப்புமாவின் பெயரில் அலாதி பிரியத்தையே உண்டு பண்ணியது.. சொல்லப் போனா..தொட்டுக்க எதுவுமில்லாமலேயே.. மென்னி அடைக்க ரவா உப்புமாவை விரும்பி சாப்பிடுவேன்..!! அப்பப்ப என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு அம்மா அதில் மஞ்சப் பொடிய தூவி..ரெண்டு கேரட் தக்காளி வெட்டிப் போட்டு கிச்சடியாக்கி என்னைப் பரவசப் படுத்துவாள்…!!

வளர்ந்த அப்புறம் மெட்ராஸ்ல உட்லண்ட்ஸ்ல ரவாபாத்..கிச்சடி ன்னு ரெண்டுபேர்ல இந்த ஐட்டத்தையே தின்னும் போதெல்லாம் அம்மா ஞாபகம்தான் வரும்.. ! கூட வர்ரவன்லாம் திட்டுவான்.. என்னடா.?? ஓட்டலுக்கு வந்தும் இந்த ரவா உப்புமாவை விடலயான்னு..? நம்ம டேஸ்ட் அவனுக்கு எங்க தெரியப் போகுது..?!

எங்க அம்மா எனக்குள் திணித்த உணவு போலவே எங்கப்பா எனக்குள் திணித்த மிக முக்கிய உணவு வகைகள் மூன்று.. 1)காரமா இலுப்பச் சட்டில செய்யர வெத்தக் குழம்பு… ரெண்டு மூனு நாள் வரும்.. “இலுப்பச்சடடிய கவுத்தா குழம்பு கீழ விழக் கூடாதுடா..!” ம்பார் எங்கப்பா பெருமையா…? மறுநாளைக்கு எவன் செளசாலயத்துல கஷ்டப்படரதுன்னு நெனைச்சுப்பேன்.! ஆனா சாதத்துல பிசைஞ்சு சாப்பிட ஊறுகா மாதிரி ரெண்டு மூனு ஸ்பூன்தான் தெளிச்சுப்பார் அப்பா…”போட்டுக்க வேண்டாம்டா..! கண்ணால பாத்துண்டே சாப்பிடலாம்..!” னு வௌம்பரம் மாதிரி அலட்டிப்பார்..செய்யர ஒவ்வொரு தடவையும்..!

2)அதே மாதிரி எப்பவாவது சேலம் ஈரோடுன்னு போனா ஓட்டலுக்கு ரொம்ப ரேரா கூட்டிண்டு போவார் அப்பெல்லாம்.. அதுவும் உடுப்பி ஓட்டலாத்தான் கூட்டிண்டுபோவார்.. ! கண்ல உடுப்பி ஓட்டல் தெரிஞ்சாப் போதும் ..அவர் அடையர சந்தோஷத்திற்கு அளவேயில்லை..!

எப்ப ஓட்டல் போனாலும் எங்கப்பா சொல்ர ஒரே மெனு….ஆளுக்கு ரெண்டு இட்லி.. ஒரு ரவா ரோஸ்ட்டு.. ஒரு ஸ்ட்ராங் காஃபி..கடைசி வரை இந்த மெனுவை அவர் மாத்திக்கவேயில்லை..! அதுவும் ரவா தோசையில் இருக்கும் மிளகையும்..பச்ச மிளகாவைும் தின்னுட்டு அதே காரத்தோட கடைசியா பித்தள டம்ளர்ல வர்ர அந்த டிகிரி காப்பியை சூடா உறிஞ்சிக் குடிக்கும்போது அவர் தான் சந்தோஷப்படரது இல்லாம.. எங்க முகத்திலயும் அது இருக்கான்னு பாத்துட்டு திருப்தியா எங்கள பாத்து ரசிப்பது இன்னும் என் ஞாபகத்துல இருக்கு…! ஆனா ஒன்னு இந்த ஓட்டலுக்குப் போரதெலலாம் நாங்க கூட வந்தாத்தான்..! அம்மா விட மாட்டாங்க.. ! ஆனா பாவி மனுஷன் தனியா சேலம் , ஈரோடு போகும் போதெல்லாம்… ஓட்டலுக்குப் போக மாட்டார்.. எத்தனை நேரமானாலும் வெறும் வயித்த காயப் போட்டுகிட்டு வீடு வந்துசேருவார்..மிஞ்சிப்போனா ஒரு காஃபி ..கூட வேர்க்கடல பர்பி..”வயிறு நிறைஞ்சிடும்டா !” ம்பாரு… இதற்குக் காரணம் வெறும் வறுமை மட்டுமல்ல.. எங்களை விட்டு தையும் அனுபவிக்க மனம் வராத மனுஷன் அவர்… !!

அது என்னமோ.. எல்லாரும் சொல்வாங்க நான் தோற்றத்திலும் நடை உடை பாவனை பேச்சு ஜோக் அடிக்கிற திறமை எல்லாத்திலயும் எங்கப்பா மாதிரின்னு ..!! முன் கோபத்திலும் கூட…!! அது மட்டும்தான் இன்னிக்கு வரைக்கும் எனக்கு பெருமை தர்ர விஷயமா நான் நினைக்கரது.. முன் கோபத்தால நான் இழந்தது அதிகம்னாலும்.. குடும்பத்த விட்டு எதையும் அனுபவிக்க விரும்பாத அந்த குணம் என் அப்பா எனக்குத் தந்த வரம்தான்..!

ஏன் இன்னிக்கும் நான் ஓட்டலுக்குப் போனா அதே ரெண்டு இட்லியும்., ரவா ரோஸ்ட்டும் சாப்டரதுதான் வழக்கம்…! அது எங்கப்பாவுக்கு நான் செய்யர தர்ப்பணம்னு கூட வெச்சுக்கலாம்..!

3)எங்கப்பாவிற்கு ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம்.. மாம்பழம்..!! பின்ன.?! சேலம் டிஸட்ரிக்ட் ஆளாச்சே சும்மாவா? வீட்லயே நாலஞ்சு வெரைட்டி மரம் இருந்தது..குதாத் கூட இருந்தது.. சீசன் அப்ப மோருஞ்சாத்துக்கு மாம்பழம் தொட்டுக்கர்து அப்பாவோட ஸ்பெஷல்.. வெட்டக் கூடாது..!! அப்படியே முழுசா கடிச்சு ஒழுக ஒழுக சாப்பிடணும்..! மோரும் மாம்பழமும் கலந்து முழங்கை வரைக்கும் ஓடணும் .. அதான் ப்யூட்டியே.? என் பள்ளித் தோழி க்ருபா ஒரு தடவை சொன்னா , அக்கார அடிசில்னா நெய் முழங்கை வரைக்கும் ஓடணும்னு ஏதோ திருப்பாவை ல பாட்டு இருக்காமே.?! மாம்பழ மோர் சாதத்திற்கு இணையா வேற ஒன்னு இருக்க முடியுமா என்ன..?? சொல்லுங்க.!!

இப்படி பல வகை சமையல் அனுபவத்தோடதான் நான் இந்தக் கொரோனா டைம்ல கரண்டிய எடுத்தேன்..!! அதாவது சப்பு கொட்டிக் கொண்டு சாப்பிட்ட அனுபவத்தை மட்டும் வெச்சிண்டு.. !!

சில பல வருஷங்களிலும் அப்ப அப்ப சமைச்சிருக்கேன்.. சாம்பார் வெக்க எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்ததை விட இலுப்பச்சட்டியை எடுப்பதுதான் என் வழக்கம்.. ! எனக்குள்ள இருக்கிற அப்பா சொல்ரதனால இருக்கலாம்.!

சாம்பார்னா புளி… பருப்பெல்லாம் போட மாட்டேன்.. என்னப் பொருத்தவரை சாம்பார் & குழம்பு ரெண்டுமே ஒன்னுதான்..! குழம்பு மிஞ்சிப்போனா மறுநாள் வெச்சுக்கலாம்.. சாம்பார்ல முடியாதே..?! அந்த முன் ஜாக்கிரதை உணர்வினால இந்த முறையும் ஆரம்பத்தில குழம்பு வெக்கர ஐடியாதான் மேலோங்கி நின்னது.!

ஃப்ரிட்ஜ்ல கெடக்கிற நாலஞ்சு காய்கறிய எடுப்பேன்.. ஸ்டாக்குகள் படி “ஃபர்ஸ்ட்-இன், ஃப்ர்ஸ்ட்-அவுட்” முறையை மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் மேனேஜ்மெண்ட் டிகிரி ஹோல்டராச்சே.?!

இலுப்பச் சட்டியில எப்பப்பாத்தாலும்.. துவரும் பருப்பு, கடுகு தாளிச்சி ., கூடவே பச்சை மிளகாய்.. கறிவேப்பிலைன்னு உதறி விட்டு ..மேலயே வெங்காயத்த போட்டு வதக்கி , தக்காளிய வெட்டிப் போட்டு வதக்கிடுவேன்…கூடவே உப்பு போட்டு பட்ட மிளகாப் பொடிய கொட்டி பகுமானமா மஞ்சப் பொடிய தெளிச்சு விட்டு…!

இதெல்லாம் வதங்கற நேரத்துல தான் ஒரு முக்கிய முடிவை எடுப்பேன் ..! அதாவது இன்னிக்கு என்ன குழம்பு வெக்கலாம்னு..! நிஜமாத்தான்..!! இது வரை என்னோட ஸ்டேண்டேர்டு ஐட்டம் இதெல்லாம்..!

ஃப்ரிட்ஜ்ல முள்ளங்கி.. முருங்கக்கா னு ஏதாவது குழம்பு ஐட்டம் இருந்தா இலுப்பச் சட்டில ரெண்டு மூனு டம்ளர் தண்ணிய ஊத்தி.. இந்த காய்கறியப் போட்டு குழம்ப வெப்பேன்…இல்ல..! உருளக்கிழங்கு.. பீட்ரூட்..வாழக்காய்னு ஏதாவது இருந்தா.. பொரியல் மாதிரி வதக்கி எடுப்பதே என் பழக்கம்..! அதையே சாப்பாட்ல பிசைஞ்சு சாப்டிடுவேன்..வேற ஒன்னும் வேண்டாம் எனக்கு..!

இதையெல்லாம் செஞ்சு என் ஸ்கூல் க்ரூப் வாட்ஸஸப்ல பெருமையா போட ஆரம்பிச்சதும்.. ஒரு நாள் க்ருஷ்ண மூர்த்தி கண்டு பிடிச்சிட்டான..” டேய்…! நேத்தும் இதே இலுப்பசட்டில இதே ஐட்டம். இன்னிக்கும் இதே ஐட்டமாத் தெரியுதே..?!”ன்னு கேட்டான்..”டேய் .!கண்ணத் தொறந்து நல்லாப் பாருடா. நேத்திக்கு கொட மொளகா குழம்பு. இன்னிக்கு உருளக்கிழங்கு தக்காளி சப்ஜி ” ன்னு சமாளிச்சு வெச்சேன்..!

அதே மாதிரி காரம் ..உப்பு.. தண்ணி லாம்.. ஒரு கை தேர்ந்த ஜாக்கி மாதிரி கை வந்த கலை எனக்கு.. ! பாத்திருக்கீங்கல்ல..?! எஃப் எம் ரேடியோல.. டிஸ்கோ டான்ஸ் பார்ட்டி ஆடியோலலாம் ஒருத்தர் பாட்டு போட்டுகிட்டு முன்னாடி ஈக்வலைசர்ல குச்சி குச்சியா எதையோ ஏத்தி இறக்கி அட்ஜஸ்ட் பண்ணிட்டே இருப்பாரே..? அது மாதிரித்தான் என் பொழப்பும்..! தண்ணிய ஊத்தினா ..காரம் சப்புனு ஆய்டும்.. காரம் கூட்டினா..வாயெல்லாம் எரிஞ்சு தொலைக்கும் .. !!

சொல்லப் போனா இத்தன நாள் எனக்குத் தெரிஞ்சதெல்லாம் பட்ட மிளகாப் பொடிதான்..சாம்பார் பொடியும் சாதா மிளகாப் பொடியும் ஒன்னுன்னுதான் நெனச்சுகிட்டிருந்தேன்.. என் அப்பாவுக்குத் தெரிஞ்சதும் அது ஒன்னுதானே.? என்னடா குழம்பு அம்மா வெக்கிற மாதிரி மஞ்சளா ப்ரௌன் கலரா வர மாட்டேங்குதே..? ரொம்ப சிவப்பா காரமா போகுதேன்னு நான் குழம்பிய பல நாட்கள் உண்டு…இப்பதான் ரீசண்ட்டா குழம்பு பொடின்னு ஒன்னு இருக்கரத சூப்பர் மார்க்கெட்ல கண்டு பிடிச்சு யூஸ் பண்ரேன்னா பாத்துக்கங்க..!!

எப்படியோ ஒரு வழியா குணம்..மணம் கார சாரத்தோட கொதிக்க வெச்சு எறக்க வரைக்கும்..இந்த கார, உப்பு, தண்ணி காம்பினேஷன் ஒரு பெரிய தர்ம சங்கடம்தான் போங்க..!! பின்ன சாப்பிடப் போறது சாட்ஷாத் நானாச்சே..? நான் மட்டுமே ஆச்சே.?

இன்னிக்கு வரைக்கும் பாட்டு போடர ஜாக்கி மாதிரியே நானும் இதக் கத்துக்கவேயில்ல…! கூட்டலும் குறைத்தலுமே எ(இ)ன்றைக்கும் என் பாணி! அளவெல்லாம் தெரியாது..!

ஆனா இப்பெல்லாம்..என் ஸ்கூல் க்ரூப்ல சமச்சத பசங்க கிட்ட போட்டோ போட்டுக் காட்டி பெருமை பீத்திக்கரதுக்கு பதில் ..!!! தோழிகள் கிட்ட கத்துகிட்டு சமைக்க ஆரம்பிச்சிட்டேன்.. ஆமா க்ரூப்புல சில பல ஆயாக்களும்..பாட்டிகளும்.. மாமிகளும் எனக்கு நல்ல பழக்கம்..!! வெட்டி அரட்டைதானே..?! ஆனா இப்பெல்லாம் உருப்படியா சமையல் ஐட்டம்லாம் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன்..!

பன்னீர் மசாலா.. அடை.. சர்க்கரைப் பொங்கல்.வெண் பொங்கல்.. பஜ்ஜி, காலி ஃப்ளவர் பிரியாணி னு ஓடரது ஐட்டம் இப்பெல்லாம்.. முதல் முதலா மிக்சியில் சட்னிகள் அரைச்சு செஞ்சு சாப்டரன்னா பாருங்களேன்.. அவ்வளவு முன்னேற்றம் .. பின்ன எத்தனை நாளைக்குதான்.. என் கையாலயே நான் தண்டனையை அனுபவிப்பது சொல்லுங்க..? கூடிய சீக்கிரம்.. அவியல். கூட்டுனு செய்யக் கத்துக்கணும்.. அதான் கூடவே பாட்டிகள் சங்கம் இருக்கே..?! அது ஹெல்ப் பண்ணும் னு நம்பிக்கை இருக்கு..!

இதக் கேளுங்க..! போன வாரம் வீட்ல பரோட்டா செய்யலாம்னு எறங்கினேன்.. க்ரூப்ல யாரையும் கேக்கவேயில்ல..! நானே யூ ட்யூப்ல ஒரு அம்மா செஞ்சத பாத்து அதே மாதிரி செய்யலாம்னு ட்ரை பண்ணினேன்…அந்த லேடி சொன்ன மாதிரி மொறு மொறுன்னு பொன்னிறமாக(?!! ) வர்ரணும். நம்ம பசங்கள அசத்தனும்னு சர்க்கரையெல்லாம் சேத்தன்னா பாருங்களேன்.?!

ஆனா மாவுல தண்ணி ஜாஸ்தியா விட்டுட்டேன் போல..சொத சொதன்னு ஈஷிண்டு சரியா பெசைய வரல..? மேல மேல மாவப் போட்டு ..சொதம்ப எண்ணெய ஊத்தி..எப்படியோ முக்காவாசி ரெடி பண்ணிட்டேன்.. ! மூடி வெக்கணுமாம்மே.?! நாலஞ்சு மணி நேரம்.? அதுவும் நல்ல வெள்ள துணியால..?!

வீட்ல இருந்த சுத்தமான வெள்ள துணின்னா அது கப்போர்ட்ல இருக்கிற நாலஞ்சு வேட்டிதான்.. எதுக்குடா வேஸ்ட்டா வேட்டிய கிழிக்கணும்னு ஒரு ஓரமா வேட்டிய வெச்சு மாவ மூடி வெச்சேன்..!

நல்லா அஞ்சாறு மணி நேரம் கழிச்சு பார்த்தா. மாவு வேட்டியெல்லாம் ஈஷிண்டு .. பிச்சு பிச்சு எடுக்க வேண்டியதாப் போச்சு..! அப்புறம் பாத்தா வேட்டி ஓரம் பூரா வடாம் போட்ட மாதிரி வெட வெடன்னு இருந்தது.. பரவால்ல மறக்காம இந்த வாரம் மிஷின்ல இதையும் போடணும்.! “சமையல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ..!!” னு கவுண்டமணி கணக்கா நெனச்சிண்டேன்..!

கடைசில ஒரு வழியா மாவ உருண்ட பிடிச்சு அப்புறம் அதை அரை மணி நேரம் ஊற வெச்சு.. ஸ்டைலா விசிறலாம்னா..எழவெடுத்த மாவு.. அந்த யூ ட்யூப் அம்மா சொன்ன மாதிரி விசிற வரவேயில்ல..சரி பரவால்லன்னு ஒரு வழியா உருட்டி .. கையாலயே தட்டி ஆசையா தோசக் கல்லுல போட்டு வாட்டினா..பொன்னாவும் வரல..முத்தாவும் வரல….அதே சப்பாத்தி மாதிரித் தான் வந்தது…! எனக்கு ஒரே கடுப்பு..! என்னடா இது ஒரு நாள் பூரா கஷ்டப்படடது சப்பாத்தி செய்யத்தானான்னு செம்ம கோபமாய்டுச்சி..?

அப்புறம் தான் பாக்கெட் மேல பார்த்தேன்.. “ஆட்டா ..!”னு போட்டிருந்தது.. ஆட்டானா மைதா மாவுலயே சுப்பீரியர் வகைன்னு நெனைச்சிண்டிருந்தேனே.?! இல்லியா பின்ன..!? சரி பரவால்ல அடுத்த முறை மைதா மாவுல செய்வோம்னு நெனச்சிகிட்டேன்…!!

ஆனா பரோட்டா கரெக்டா வந்திருந்தா.. மறுநாளைக்கு நாலஞ்சு மிச்சம் வெச்சு கொத்து பரோட்டா போடர ஐடியா கூட யோசிச்சு வெச்சிருந்தேன்னா பாருங்களேன்..!!? பேராசை..!?

இல்ல வேணாம்..!. மைதா ஜீரணக்குறைவு ..! உடம்புக்கு கெடுதல் மட்டுமல்ல.. பரோட்டா ரொம்ப கை வலிக்கும் என்பதனாலயும்தான்..!!

சரி சாப்பாட்டு டைம் ஆச்சு.. என்ன பண்லாம்னு கப்போர்ட தொறந்தேன்…பளிச்சுனு கண்ல பட்டது நம்ம ஆஸ்தான ஆபத் பாந்தவன் வெள்ளை ரவைதான்………!!

சந்தோஷமா இலுப்பச் சட்டிய எடுத்தேன்….!?

“ரவா பாத்”தா..?! “கிச்சடி”யா?? என்ன வேணும்னு சொல்லுங்க…!!

யோசிச்சு வைங்க..அதுக்குள்ள மள மளன்னு வெங்காயம் வெட்டி..வதக்கிட்டு வர்ரேன்….!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *