குற்றால டூரும்…கஷ்டமித்ர பந்துக்களும் !

 

சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். இந்தக் காலம் போல அரையாண்டு விடுமுறைக்கு ‘பிக்னிக்’, கோடை விடுமுறைக்கு ‘லாங் டூர்’ என்று போவதெல்லாம் என்னவென்றே தெரியாது எங்களுக்கு! ஆக, டீன்–ஏஜில் எனக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கும் டூர் என்பது ஒரு அந்நிய வார்த்தை… அவ்வளவுதான்!

எப்போதாவது அப்படி புறப்பட்டால்… சென்னையில் பாட்டியிடம் வளர்ந்த நான், பெட்டி படுக்கை கட்டிக் கொண்டு மேட்டூரில் இருந்த என் பெற்றோர் வீட்டுக்குப் போவேன். வருஷம் தவறாமல்… ஏப்ரல், மேயில் என் அம்மா, என் சகோதர ரத்னங்களுடன் சென்னை வந்துவிடுவாள். பசங்களின் விடுமுறை முடிந்து, எல்லாரையும் மறுபடியும் ஒன்றுதிரட்டி அழைத்துப் போக அப்பா வருவார். இது தவிர, யாரும் எங்கேயும் போக மாட்டோம்.

விடுமுறை தினங்களில் என் தம்பிகள், நண்பர் குழாத்துடன் மொட்டை மாடியில் உட்கார்ந்திருப்பார்கள். நான், என் தங்கை மற்–றும் சிநேகிதிகளுடன் கிணற்றடியில் உட்கார்ந்து அம்மா, பாட்டியின் அக்கப்-போரைக் கேட்டுக் கொண்டிருப்போம்; அல்லது என் சிநேகிதிகளில் வசதிமிக்க ஒன்றிரண்டு பேர் ஊட்டி, கொடைக்கானல் போய் வந்த சேதியைச் சொல்ல, காதிலும் மூக்கிலும் பொறாமைப் புகையப் புகையக் கேட்டுக் கொண்டிருப்போம்.

இந்தச் சமயத்தில்தான் என் தாத்தா ஒரு செய்தியைக் கூறினார். அதாகப்பட்டது…

‘ஜூலை, ஆகஸ்ட்டில் பள்ளிக்கூடம் திறந்துவிட்டிருந்தாலும் ஒரு வாரம் போல குற்றாலம் போய் வரலாம்.’

ஆனால், பள்ளிக்கூடத்துக்கு லீவு போட வேண்டுமே… அப்பா ஒப்புக் கொள்வாரா?!

”அதான் ஒன்றரை மாசம் லீவு இருக்குல்லே… அதுலே தென்காசி, குற்றாலம் என்ன… வடக்கே காசி, ஹரித்வாரே போயிட்டு வந்துடலாம்…” என்றார் அப்பா.

”ஏப்ரல், மேயில அருவி, தோசைக்கல் மாதிரி காய்ஞ்சுக் கிடக்குமாம். என் சிநேகிதி சொல்றா…” என்றாள் அம்மா.

”சரி! அப்போ பசங்க பெரிய லீவுல உட்கார்ந்து அடுத்த வருஷப் பாடங்களை ‘கோ த்ரூ’ பண்ணட்டும். குற்றாலம் கிளம்-புறதுக்கு ரெண்டு நாள் முன்ன நாம திரும்பவும் மெட்ராஸ் வரலாம்” என கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு அம்மாவோடு மேட்டூருக்கு கிளம்பிவிட்டார் அப்பா.

அந்த முறை கருங்கோடை-யில்கூட வெயிலில் அலையாது, ஐஸ்க்ரீம் எதுவும் சாப்பிடாது, வீடே கதியாக நானும் என் உடன் பிறப்புகளும் இருந்தோம். அடுத்த வருட பாடப் புத்தகத்தை எல்லாம் வாங்கி, புரிகிறதோ இல்லையோ… பொட்டை நெட்டுரு அடித்தோம்.

கட்டிலம்மா (என் அம்மா-வின் அம்மாவை இப்படித்தான் கூப்பிடுவோம்), தையற்காரர் அய்யாவுவை வரவழைத்து, எனக்கும் என் தங்கைக்கும் மூன்று ஜோடி ஸாட்டீன் பாவாடை – சட்டை தைத்தாள்.

தாத்தா, எப்போதுமே கறுப்பு, பச்சை சிவராயர் கரை அல்லது குண்டஞ்சி வேஷ்டிதான் கட்டு-வார். அதில் அரை டஜன்… நல்ல கிளாக்ஸோ மல் ஜிப்பா ஆறு… ரெடியானது.

”குளிரப் போறது…” என்று பதறினாள் பாட்டி.

”போடி பைத்தியமே.. இப்படி மெல்லிசா இருந்-தாத்-தான் ஒரு தடவை குளிச்சுட்டு வந்தவுடனேயே காயப் போட வசதியா இருக்கும்.”

”அப்ப நான் பட்டுப் புடவை எடுத்துக்க வேண்டாமா…”

”ரெண்டு வச்சுக்கோ. மீதிய சின்னாளம்பட்டுல எடுத்துக்கோ. அருவி விழற வேகத்துல, புடவை எல்லாம் தார் தாராக் கிழிஞ்சுடும்.”

”தலை துவட்டிக்கற துண்டு?”

”அங்கேயே கிடைக்கும். அதெல்லாம் மூட்டை சேர்க்காதே…” டூர் டிப்ஸ்களை கொட்டினார் தாத்தா.

”எதுக்கும் கொஞ்சம் பட்சணம்… குழந்தைகளோட போறோம். ‘குழந்தை பசியோ, கொள்ளித் தேளோ’னு சொல்லுவா…”

- கட்டிலம்மாவுக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு விட்டது. முள் தேன்குழல், மனோகரம், தேங்காய் பர்ஃபி, தட்டை.

போதாக்குறைக்கு என் அம்மா வேறு, கட்டிலம்மா-வுக்கு தபால் போட்டிருந்தாள்…

‘சமையல் மாமிகிட்ட சொல்லி, கொஞ்சம் புளிக்காய்ச்சல், மாவடு, நார்த்தங்காய் எடுத்துக்கோ. உன் பெரிய டிபன் கேரியர். கூஜா மறக்காதே. சீஸன் சமயத்துல குற்றாலத்துல ஆகாரம் சரியா இருக்காதுனு இங்கே எல்லாரும் சொல்றா. உன் மாப்பிள்ளை ஒருவேளை சாப்பாடு சரியில்லைனாலும் ருத்ரதாண்டவம் ஆடிடுவார்.’

கடிதத்தின் விளைவாக புளிக்காய்ச்சல், தக்காளித் துவையல், தேங்காய் பொடி, சின்னதாக ஒரு ஸ்டவ், இரண்டு உருளை, ஒரு ருக்மிணி குக்கர்… எல்லாம் ரெடி செய்துவிட்டாள் கட்டிலம்மா!

கோடை விடுமுறை கரைந்து, இதோ… இதோ… என் அம்மா, அப்பாவும் வந்தாகிவிட்டது. மறுநாள் காலையில் திருநெல்வேலி பாசஞ்சரில் பிரயாணம்.

எத்தனை ஏற்பாடுகள்..? ஒரு வாரம் வீட்டை விட்டுப் போவதென்றால் எதையெல்லாம் யோசித்து யோசித்துத் திட்டமிட வேண்டியிருக்கிறது..?!

சமையல் பாட்டிக்கும், வேலைக்காரி கண்ணம்-மாவுக்கும் ஒரு வாரம் லீவு கொடுத்து அனுப்பியாகி விட்டது. பால்கார காபாலியிடம் அன்றிலிருந்து ஏழாம் நாள் சாயந்திரம் பக்கத்து வீட்டில் பால் கொண்டு வந்து கொடுத்தால் போதும் என்று சொல்லியாகி விட்டது.

ஏரியா கூர்காவுக்கு ஐந்து ரூபாய்… எங்கள் வீட்டுப் பக்கம் வந்தால் மட்டும் வாசல் கேட்டில் இரண்டு தரம் பலமாக சத்தம் செய்யும்படி!

தாத்தாவும் அவர் நண்பர் ராமண்ணாவும் போய், ‘வாடகை டாக்ஸி இரண்டு, விடிகாலையில் வர வேண்டும்’ என்று சொல்லி வந்துவிட்டனர்.

அடுத்த அரை மணி நேரத்திலேயே இரண்டு பெரிய டாக்ஸிகள் வீட்டு வாசலில் வந்து நிற்க…

ராமண்ணா தாத்தா ‘குடுகுடு’வென வாசலுக்கு ஓட…

கார் கதவுகளை அகலத் திறந்து கொண்டு, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தாற் போல…

தாத்தாவுடைய… தாத்தாவுடைய… உறவு முறைகள்… இஷ்டமித்ர பந்துக்கள்… கஷ்டம் தரவென்றே வந்திறங்கி விட்டன.

”மணி சௌக்கியமாடா..? ஜானகி, என்ன மலைச்சுப் போய் நிக்கறே..?! சுப்புணி சொன்னான்… ஒரு லெட்டர் போட்டுட்டுப் போகலாம்னு. நான்தான் வேணாம்னுட்டேன். நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு… அட, பட்டா… குழந்தைகள் எல்லாரும் இங்கேதான் இருக்காங்களா… சரியாப் போச்சு! பருத்தி, புடவையாக் காய்ச்சாப் போல! அடியே… சரஸ்வதி… எல்லாரையும் இங்கேயே பார்த்துடலாம்…”

சொன்னால் நம்ப மாட்டீர்கள்… கிட்டத்தட்ட ஏழெட்டு பெரிய உருப்படிகள். நாலைந்து வாண்டுகள்!

இரவு எட்டு மணிக்கு மேல் அம்மாவும், கட்டிலம்மாவும் அவர்கள் கட்டி வைத்திருந்த சாக்கு மூட்டையைப் பிரித்து, ருக்மிணி குக்கரை எடுத்து சாதம் வடித்து, புளிக்காய்ச்சலைப் போட்டுக் கலந்து, வடகத்தைப் பொரித்துக் கொடுத்ததைச் சொல்வதா? விடிகாலை இருட்டில், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு, தாத்தாவும், ராமண்ணாவும் பால்கார கபாலியைத் தேடிச் சென்றதை சொல்வதா? வந்திருந்த வாண்டுகள் எனக்கும் என் தங்கைக்குமாக எடுத்த சாட்டீன் பாவாடை- சட்டையை மாட்டிக் கொண்டு ஆனந்தப்பட்டதை சொல்வதா?

”அம்மாமி… எப்படியும் ஒரு தடவை மெட்ராஸைப் பார்த்துடணும்னு ஆசை. அம்மாவுக்கு, தன் தம்பியோட வீட்டையும், தோட்டத்தையும் தன் நாட்டுப் பெண்களுக்குக் காட்டணும்னு கழுத்து மட்டும் ஆதங்கம். அதான் கிளம்பிவந்துட்டம்…”

- அத்தைப் பாட்டியின் இளைய மகன் பேசிக் கொண்டிருக்கையிலேயே, தாத்தா ஏற்பாடு செய்திருந்த இரண்டு டாக்ஸிகளும் வந்ததைச் சொல்வதா?

எங்கள் கண்களில் குற்றால பொங்குமாங்கடல் பொங்கிப் பாய ஆரம்பித்ததைச் சொல்வதா?!

- மார்ச் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!
ஆட்டோவில் இருந்து முத்துலட்சுமி இறங்குவதைப் பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் மற்ற சிறுசுகளுடன் கதை பேசிக்கொண்டு இருந்த பாவாடை தாவணி உள்நோக்கி ஓடியது. உள்ளே போனவள், தன்னைப் பெற்றவளிடம் என்ன சொல்லிஇருப்பாள் என்று முத்துலட்சுமிக்குத் தெரியும். “அம்மா... ஓடிப் போன அத்தை வந்திருக்கா!” பட்டு, சங்கரிக்குப் ...
மேலும் கதையை படிக்க...
அன்று - கௌதம முனிவனின் குடிலில் பொழுது புலர்வதற்கு முன், ஏற்பட்ட விபத்து - இன்று பாகீரதிக்கு ஏற்பட்டுவிட்டது. நேரமும் காலமும் மனிதர்களும் தான் வேறு... வேறு... சம்பவம் ஒன்றுதான். அகலிகையைப் போல, தன் கணவனுக்கும் அந்நிய புருஷனுக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷி ...
மேலும் கதையை படிக்க...
முதலில் வாசற்கதவைச் சாத்தி விட்டு வருகிறீர்களா... ஏனென்றால், இது நமக்குள் பேச வேண்டிய விஷயம்... நண்டு, சிண்டுகள் கேட்டால் போச்சு... தெரு முழுக்க ஒலிபரப்பி, நம்மை பீஸ் பீஸாக்கி விடும். புருஷர்களுக்கா... ஊம்ஹ§ம்... மூச்சு விடக் கூடாது. ஏற்கனவே வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
இரவல் தொட்டில்
இன்னும் அன்னம் வரவில்லை. வாசல் இரும்புக் கிராதியின் சத்தம் கேட்கும்போது எல்லாம் விசுவம் எட்டிப் பார்த்து ஏமாந்தான். அப்பா இடை ரேழியில் இருந்து செருமினார்... ''இன்னும் அவ வரல்லே போல இருக்கே?'' ''வந்துடுவா.'' அதற்கு மேலும் அங்கே நிற்கச் சக்தி அற்றவனாகக் கூடத்துக்கு வந்தான். ஊஞ்சல் ...
மேலும் கதையை படிக்க...
வயிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல… காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் ...
மேலும் கதையை படிக்க...
விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!
சிறை
கதவைச் சாத்து…காதோடு பேசணும்
இரவல் தொட்டில்
அக்னி

குற்றால டூரும்…கஷ்டமித்ர பந்துக்களும் ! மீது 2 கருத்துக்கள்

  1. manjula says:

    excellent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)