Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

குதிரை

 

சிலருக்கு லாட்டரியில் பரிசு விழுகிறது. சிலரை பிரபல டைரக்டர் பஸ்ஸடாண்டில் பார்த்து “அடுத்த அமாவாசைக்கு ஷ¨ட்டிங்குக்கு வா” என்கிறார்.இப்படித் திடீர் என்று தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.ஏதோ ஒரு வகையில் பிரசித்தி பெறுகிறார்கள்.அம்மாதிரி நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!

“குதிரையா?” என்று வியப்புடன் கேட்கிறீர்கள் அல்லவா? உங்களுக்குச் சொல்கிறேன். முதலில் என்னைப் பற்றி. அப்புறம் குதிரையைப் பற்றி. என்பேர் கிஷ்ண சாமி அதை கிச்சாமி என்று சுருக்கி மனதில் ஒரு பிம்பம் ஏற்படுததிப் பாருங்கள். அதேதான் நான். தொழில், தோற்றம் என்று எந்த வகையிலும் எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படிதது, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு.

மனைவி, குழநதை ,மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு மலர்ச்செடிகள், தவணை முறையில் ரேடியோ என்று பிரகாசமற்ற பிரஜைதான் நான்.

குதிரை கடிக்கும் வரை! குதிரையும் அவ்வளவு பிரசித்தமில்லாத ஜட்கா வண்டிக் குதிரைதான்.எங்கள் வீட்டிலிருந்து அஹமத் ஸ்டோர்ஸ்க்கு போகும் வழியில் ஆஸ்பத்திரி இருக்கிறது.அதன் வாசலில் வழக்கம்போல் இளநீர் காலி பாட்டில்கள் எல்லாம் விற்கும் இடத்துக்கு எதிரே ஒரு குதிரைலாயம் இருக்கிறது. பொதுவாக எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் எதிரில் இந்த லாயம் இருப்பதை நீங்கள் கவனித் திருக்கலாம்.இந்த லாயங்களில் மற்றொன்றையும் கவனித்திருக்கலாம், திருச்சி தென்னுர் போனலும் பிட்ரகுண்டா போனலும். ஒரே அமைப்பு. உயரமான கருங்கல் கம்பங்கள் மேல் ஜாக்கிரதையாக ஓடு வேய்ந்திருக்கும். நடுவே 1938 ல் ஏதோ ஒரு உள்ளூர் நாயுடுவின் உபயத்தில் கட்டடப் பட்டது என்று அறிவித்து ஒரு தண்ணீர்த் தொட்டி இருக்கும்.நகரச் சந்தடியில் ஒரு சோம்பேறித் தீவாக கொஞ்சம் சேணம்,கொஞ்சம் லத்தி ஈரப்புல் கலந்து நாற்றமடிக்கும்.

வண்டிக் காரர்க்ள் சுகமாக எங்கேயோ கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஒன்றிரண்டு குட்டிக் குதிரைகள் தெனபடும்.அவை அழகாக இருக்கும். திடீர் என்று குதிரைக் குட்டி உற்சாகம் பெற்று வெறி பிடித்தாற்போல போக்கு வரத்தின் ஊடே ஓடும். இந்த மாதிரித் தான் நான் சொல்லும் இடமும். அதைக் கடந்து செல்லும்போது லேசாக மழை பெய்ததால் சற்று ஒதுங்கி குதிரைகளின் கிட்டே நடந்து போனேன்.சில குதிரைகள் என்னை சட்டை செய்யாமல் அவ்வப்போது உடம்பில் எதிர்பாராத இடங்களைச் சிலிர்த்துக்கொண்டு தெய்வமே என்று வண்டிக்காரன் கொடுத்ததை மென்று கொண்டிருந்தன. எல்லாமே கிழட்டுக் குதிரைகள். முதுகெலும்புகள் தெரிய தோள்பட்டையில் தழும்போடு கால்கள் ஜபேட் அடித்து குதிரையா கழுதையா என்று தீர்மானமாக சொல்ல முடியாத அளவுக்கு இருந்தன. அவற்றில் ஒன்று என் முழங்கையைக் கடித்துவிட்டது.

நான் நடந்து கெசாண்டே இருக்கும் போது முழங்கைப் பகுதியில் சுரீர் என்கிறதே என்று பார்த்தால் குதிரை கடித்து முடித்துவிட்டு என்னைப் பார்த்தது. தொள தொள என்ற உதடுகளுடன் சிரித்தது. நான் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று முழங்கையைப் பார்ததுக்கொணடு குதிரைக் காரனைத் தேடினால் காணவில்லை. ஒரே ஒரு பையன் எங்கோ பார்ததுக் கொண்டு நின்றான். மறுபடி கடித்துவிடப் போகிறதே என்று விலகி வந்து காலை வெளிச்சத்தில் காயத்தை ஆராய்ந்தேன். லேசாகப் பல்லுப் பட்டிருந்தது.

அது ஒன்றும் நிகழவில்லைபோல் என் மேல் சுவாரசியம் விலகிப் போய் எதையோ மென்று கொண்டிருந்தது.என்னை யாரும் பார்க்கவில்லை.’ச்சே’ என்று பொதுப்படையாகத் திட்டிவிட்டு அடிக்கடி காயத்தைப் பார்த்துக் கொண்டே’ டெட்டால்’ போட்டு அலம��
�பிக் களிம்பு தடவ வேண்டும் என்று எண்ணிய படி வீட்டுக்கு விரைந்தேன். என் மனைவி வாசலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.கடைக்குப் போன கணவன் குதிரை கடித்து இத்தனை சீக்கிரம் திரும்பி வருவான் என்று எதிர் பார்க்கவில்லை.

“என்ன வந்துட்டிங்க? அகமத் ஸ்டோர் மூடியிருக்கா?” “இல்லை வரவழியில..” “ என்ன ஆச்சு? என்ன கையில” “உள்ள வாயேன் சொல்றேன்” “என்ன ஆச்சு விழுந்திட்டிங்களா?” “இல்லை ஆஸபத்திரிக்கு எதிர்ல கதிரை லாயம் இருக்கு பாரு அது வழியா நடக்கறபோது குதிரை கடிச்சுடுத்து” “என்னது,குதிரையா?” “ஆமாம்” “கடிச்சுதா?” மாமனார் உள்ளே வர “அப்பா குதிரை எங்கயாவது கடிக்குமா?” என்று அவரிடம் கேள்வி. “எதை” “மனுஷாளைப்பா” “சேச்சே” “இதோ உங்க மாப்பிள்ளையைக் கடிச்சிருக்கு” “அப்படியா, ஆச்சரியமா இருக்கே! என்ன மாப்பிளளை எதாவது அதைப்போய் சீண்டனம் பண்ணேளா?” “இல்லே ஸார் அந்தப் பக்கமா நடந்து போயிண்டிருந்தபோது லபக்குன்னு கவ்விடுத்து” “குதிரை லாயத்துக் கெல்லாம் எங்க போறேன். கல்யாணி நீ எதாவது வண்டி கொண்டுவரச் சொன்னாயா?” “இல்லைப்பா ஸ்டவ்வுத் திரி வாங்கிண்டு வர அகமத் ஸ்டோர்ஸ்க்கு அனுப்பிச்சேன். எதுக்கு நீங்க குதிரை கிட்டல்லாம் போறேள்? அய்யோ நன்னாப்பல்லுப் பட்டிடிருக்கே. விஷப் பல்லா இருந்துடப் போறது. அப்பா அதைப் பாருங்க” மாமனார் கிட்ட வந்து பார்த்து,“கன்னித்தான் போயிருக்கு. மாப்பிள்ளை நீங்க எதுக்கும் ராயர் கிட்டக் கொண்டு காட்டிடுங்கோ. கல்யாணி, அழைச்சுண்டு போயிடு. ஜட்கா வண்டிக் குதிரையா” “ஆமாம்” சற்று யோசித்து“ஜட்கா வண்டிக் குதிரை கடிக்காதே” என்றார் ஜ.வ.குதிரைகளில் டாக்டர் பட்டம் வாங்கினவர் போல். “இந்தக் குதிரை கடிச்சுது ஸார் என்ன பண்ண?” என்றேன். “இவருக்கு மட்டும எல்லாம் ஆகும்பா, கணக்கால் அளவுக்கு தண்ணீர் போதும் இவருக்கு முழுகிப்போய்டுவார்.இப்படித்தான் திருச்சினாப்பள்ளியில உய்யக் கொண்டான் வாய்க்கால்ல..” “சரிதான் நீ ஆரம்பிக்காதே” என்று அதட்டினேன். “எதுக்கும் டாக்டர் ராவ் கிட்ட கொண்டு காட்டிடறது நல்லது” என்றாள். எனக்கும் காயத்தைப் பார்த்ததில் அபபடித்தான் பட்டது.ஆனால் இதை டாக்டரிடம் எப்படிச் சொல்லப் போகிறேன் என்று கவலையாக இருந்தது.

நரஹரி ராவ் எங்கள் குடும்பத்து டாக்டர் . அறுபது வயசானாலும் நல்ல ப்ராக்டிஸ், நாங்கள் போனது காலை வேளையாக இருந்தாலும் நல்ல கூட்டம்.குழந்தைகளும் தாய்மார்களும் க்ளார்க்ககுகளும் மப்ளர்காரர்களுமாக அடைத்துக் கொண்டு காத்திருந்தார்கள்.சின்ன இடம் அதில் பாதி தடுத்து நரஹரிராவ் உள்ளே உட்கார்ந்துகொண்டு யாரையோ ‘ஆ’ சொல்லிக் கொண்டிருப்பது பனிக் கண்ணாடியில் குழப்பமாகத் தெரிந்தது. எங்களுக்கு உட்கார இடம் இல்லை. அடுத்த முறை பையன் வெளியே வந்தபோது கல்யாணி “இந்தாப்பா டாக்டர் கிட்ட சொல்லு அவசரமா பார்க்கணும்னு” என்றாள்.

“எல்லாருக்குந்தாம்மா அவசரம்” “இல்லைப்பா இவரை குதிரை கடிச்சுடுத்துப்பா. ரத்தமா கொட்டறது பாரு ”என்றாள். “கல்யாணி! என்ன சொன்னே? சரியாக் காதுல விழலை குதிரையா?” “ஆமாம் மாமி. போயும் போயும் குதிரை கிட்ட கடி பட்டுண்டு வந்திருக்கார். என்னத்தைச் சொல்லி மாள?” “குதிரை வளக்கறிங்களா?” “அதுங்கிட்ட எதுக்குப் போனார்? ” எல்லோரும் என்னையே பார்த்தார்கள். “உள்ளே வாங்க கிச்சாமி” என்றார் டாக்டர். “என்ன குதிரை கிட்டல்லாம் போய் விளையாடிண்டு இந்த வயசில” “டாக்டர் அது வந்து ஆஸ்பத்திரிக்கு எதிர்த்தாப்பல நடந்து போயிண்டிருநதேனா..” என் கதையைத் தணிந்த குரலில் சொன்னேன்.“ டாக்டர் அதுக்கு எதாவது விஷப் பல்லு இருக்குமா” என்றாள் கல்யாணி இடையே. “தெரியலைம்மா. இருக்காதுதான். ஆனா கல்யாணி நானும் இதே மில்கார்னர்ல முப��
�பது வருஷமா ப்ராக்டிஸ் பண்ணிண்டிருக்கேன்.குதிரை கடிச்ச கேஸை இப்பதான் முதல்ல பார்க்கறேன்” என்றார். “என்ன பண்றது டாக்டர்? ஆக்ஸிடெண்ட்டுக்குன்னே பொறந்தவர் இவர்.ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்கறேன்னு ஸ்கூட்டரை ஸ்டாண்டில இருந்து எடுக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டார்.தொப்புன்னு போட்டுண்டு கீழே விழுந்தார். கால்ல பாருங்ஙகோ தழும்பு” டாக்டர காயத்தை கவனித்தார். “வலிக்கிறதா? இருங்க காட்டரைஸ் பண்ணிடறேன்” என்று குட்டியாக இருந்த ஸ்பிரிட் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு அலமாரியிலிருந்து தடிமனான ஒரு புத்தகத்தைப் பிரித்து அதன் பின் அட்டவணையில் குதிரை, குதிரைக் கடி என்று தேடினார். “ம் ஹ§ம் டெக்ஸ்ட் புக்லயே இல்லை. எதுக்கம் கவலை படாதங்கோ சீட்டு எழுதிக் கொடுக்கறேன். நேரா ஆஸபத்திரிக்குப் போய் இன்ஜெக்ஷன் ஒரு கோர்ஸ் ஆரம்பிச்சுடுஙகோ இப்பவே”என்றார். “அந்த இன்ஜெக்ஷனை இஙகேயே போட்டுண்டடுடலாமே டாக்டர்” “எங்க கிட்ட ஸீரலம் கிடையாது, ஆதுவும் இல்லாம டாக்டர் கோபி எல்லாம் தேர்ந்தவர். அவர் பார்த்து தேவைப் பட்டுதுன்னாத்தான் ஊசி போட்டுக்கணும். இப்ப காட்டரைஸ் பண்ணி அனுப்பிச்சுர்றேன்” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு “குதிரை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு“டாக்டர் கோபிக்கு லெட்டர் கொடுக்கறேன் உடனே போம்” என்றார். ஆஸபத்திரியை நோக்கி நடக்கும்போது ஒரு மாடு கிழிசல் பனியனை மென்று கொண்டிருந்தது. “பாத்து வாங்கோ .இது வேற கடிச்சு வெக்கப்போறது” என்றாள் கல்யாணி. “என்ன கல்யாணி சொல்றே? வேணும்னுட்டா கடிச்சுப்பா?” “வேணுமோ வேணாமோ நம்மாத்தில மட்டும்தான் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது. டாக்டர் சொன்னார் பாருங்கோ” “எல்லாம் எனக்கும் கேட்டுது. அதபாரு குதிரை கடிக்காதுதான் என்னைக் கடிச்சுடுத்து என்ன பண்ணச் சொல்றே ? ஏன் கடிச்சேன்னு வேணா விசாரிச்சுன்டு வரட்டுமா?” “வேண்டாம். மறுபடியும் கடிச்சு வெக்கப் போறது. கடிக்கறதுன்னா அந்தப் பக்கம் ஏன் போகணும்?” “குதிரை கடிக்கும்னு யாருக்குடி தெரியும் மூதேவி!”

நடுரோடில் எங்களை வேடிக்கை பார்கக கூட்டம் கூடிவிடவே நாங்கள் கலைந்து நடந்தோம்.ஆஸபத்திரியில் டாக்டர் கோபிநாத்தைத் தேடிக்கொண்டு சென்றேன்.நீண்ட பெஞ்சு போட்டு பலபேர் உட்கார்ந்திருந்தார்கள். கல்யாணி இங்கே வந்து “குதிரை கடித்துவிட்டது” என்று இரைந்து கூறி சலுகை கேட்கப் போகிறாளே என்று பயமாக இருந்தது.ஆககால் கல்யாணி பேசாமல்தான் உட்கார்ந்தாள்.அங்கே உட்கார்ந்திருந்தவர்களை விசாரித்ததில் பெரும்பாலோர் நாய்க்கடிக் காரர்கள் என்று தெரிந்தது. அங்கங்கே ஒன்றிரண்டு எலி தேள் இருந்தன. எல்லாருடைய சீட்டுகளிலும் நாய் நாய் என்றுதான் எழுதியிருந்தது.அங்கே அருந்த சிப்பந்தி அவற்றை அடுக்கி வைக்கம் போது என் சீட்டு வந்தபோது மட்டும மயங்கினான்.

“குதிரை! இங்க யாருப்பா கிருஷ்ணசாமி” “கிருஷ்ணசாமி நான்தான் ”என்றேன். “உங்க டிக்கெட்டில் தப்பா போட்டிருக்கு குதிரை ன்னு. கொஞ்சம் திருத்திக் கொடுக்கறிங்களா” “இல்லை ஸார் என்னை குதிரைதான் கடிச்சிருக்கு” இப்போது அத்தனை பேரும் திக்கித்துப் போய் என்னைப் பார்க்க, சிப்பந்தி உடனே உள்ளே போய் கோபிநாத்திடம் சொல்ல “கூப்பிடு உள்ளே அவரை முதல்ல” என்றார். “வாங்க உக்காருங்க. ராயர் போன் பண்ணிச் சொன்னார். நீங்கதானா அது? குதிரை எங்கே கடிச்சுது உங்களை?”என்று விசாரித்தார். “ஆஸ்பத்திரிக்கு எதித்தாப்பல ஸ்டாண்டு இல்லை? அங்கே” “அதைக் கேக்கலை.உடம்பில எந்த பாகத்தில?” நான் என் கைச்சட்டையை வழித்துக் காட்டினேன்.“காட்டரைஸ் பண்ணாரா?”என்று அலமாரியிலிருந்து தடியான புத்தகம் ஒன்றை எடுத்தார். “அந்தப் புஸ்தகத்தில் ‘குதிரைக்��
�டி’ கிடையாது டாக்டர்”என்றாள் கல்யாணி. “எப்படிச் சொல்றிங்க?” “டாக்டர் ராவ் பார்த்துட்டார்” “மிஸடர் கிருஷ்ணசாமி ஒண்ணு பண்ணலாம் நான் குதிரை கடிச்ச கேஸை இதுவரை ட்ரீட் பண்ணதில்லை எதுக்கு ரிஸ்க் எடுக்கணும். ஒரு ஷார்ட் கோர்ஸ் ஆரம்பபிச்சுர்றேன் ஸ்ப்க்யுட்டேனியஸ்ஸா..” “டாக்டர் உயிருக்கு ஆபத்து எதும்ம இல்லையே?” “சேச்சே பயப்படாதிங்கம்மா.மிஸ்டர் கிருஷ்ணசாமி எதுக்கும் ரெண்டு மூணுநாள் அந்தக் குதிரையை வாட்ச் பண்ணிக்கிட்டு இருங்க.செத்து கித்து வெக்குதான்னு. எந்தக் குதிரை கடிச்சுது ஞாபகம் இருக்குமோல்லியோ?” “ம்” என்றேன் சந்தேகமாக “மூணு நானைக்கு எதுக்குப் பார்க்கணும்” என்றாள் கல்யாணி. “அதுக்கு வெறி கிறி எதாவது பிடிச்சிருந்தா செத்துப்போய்டும் . அது உயிரோட இருந்தா கவலைஇல்லை.எதுக்கும் பயப்படடிதிங்க ரிஸ்க் எடுத்துக்காம கோர்ஸை ஆரம்பிச்சுர்றக்ஷன். தினம் காலை இந்த வேளைக்கு வந்துடுங்க என்ன ?” “பகவானே என்ன க்ஷசொதனை பாத்திங்களா?” என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தாள் கல்யாணி.வந்ததும் அங்கே உட்கார்ந்திருந்தவர்களிடம சட்டென்று பேச்சு நின்று போய் ஒரு சிலர் உள்ளங்கையால் வாயை மறைத்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவரிடம் என்னைக் காட்டிப் பேசுவதை கவனித்தேன். முதுகில் கூட அவர்களது பார்வை பட்டது. திடீரென்று திரும்பி’குதிரை கடிச்சா என்னய்யா?“ என்று சத்தமாகக் கேட்க நினைத்தேன். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போகும் போதே குதிரையை ஒரு நடை விசாரித்து விட வேண்டும் என்று கல்யாணி சொன்னாள். எனக்கு அது தேவையாகப் படவில்லை. இருந்தும் அங்கே போனோம். ”குதிரையை ஞாபகம் இருக்கோல்லியோ?“ என்றாள். ”இருக்கும்னு நெனைக்கிறேன்.நெத்தில டைமண்ட் ஷேப்பில வெள்ளையா ஒரு திட்டு இருந்ததா ஞாபகம்.“

லாயத்துக்குப் போனபோது ஏறக்குறையக் காலியாக இருந்தது. சிறுவன் மட்டும் காலை ஆட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். ”ஏம்பா எல்லாக் குதிரையும எங்கே?“ ”எல்லாம் சவாரி போயிருக்குதுங்க. கொச்ம் இருங்க வந்துடும். பாடி கொடுத்துட்டாங்களா“ ”பாடியா?“ ”இவன் என்ன சொல்றான்“ என்றாள் கல்யாணி. ”ஏம்பா இந்த அடத்தில எத்தனை குதிரை இருக்கு?“ ”ஏங்க எதாவது எலக்சனா? குதிரைச் சின்னத்தில் நின்னறிங்களா? ஊர்கோலம் போகணுமா? எத்தனை குதிரை வேணும்?“ ”ஒரே ஒரு குதிரைதாம்பா. நெத்தில டைமண் மாதிரி இருக்கும்“ ”கரீம்பாய் குதிரையை சொல்றிங்க. இதோ இப்ப சவந்துடுங்க. கபர்ஸ்தான் போயிருக்குது“ ”அது உயிரோட இருக்கில்லே?“ ”இல்லாம,பின்ன?“ ”நல்லது“ என்று புறப்பட்டு வந்துவிட்டோம். ”தினம் ஆஸ்பத்திரிக்கு வர வழியில ஒரு விசை குதிரையை விசாரிச்சுண்டு வந்துருங்கோ“ என்றாள் கல்யாணி. மறுதினம் ஆஸபத்திரிக்குப் போகிற வழியில் என்னைக் கடித்த குதிரையை மறுபடி சந்தித்தேன் அந்தப் பையன்தான் ” கரீம்பாய் கல் பூச்சானா? ஓ ஆத்மி ஆயா “ என்றான். கரீம்பாய்க்கு காலையிலேயே கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்தது, ”என்ன சாமி நம்ம சுல்தானைப் பத்தி விசாரிச்சிங்களாமே?“என்றான்.நான் கிட்டப்போய்ப் பார்த்ததில் என்னைக் கடித்த குதிரை அதுதான் என்று தெரிந்துபோய்விட்டது. ”பாய்! இந்தக் குதிரை நல்லாத்தானே இருக்குது? உயிரோடதானே இருக்குது?“ சேணம் எல்லாம் கழற்றிப் போட்டு எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கு முன்பிருக்கும் நங்கை போல் இருந்தது. ”ஏன் சாமி“ ”நேத்திக்கு இது என்னை கடிச்சிடுச்சுப்பா. குதிரை உயிரோடதான் இருக்கான்னு தினம் பார்க்கச் சொல்லியிருக்கார் டாக்டர்“ ”கடிச்சுதா? அதெல்லாம் செய்ய மாட்டானே நம்ம சுல்தான், க்யூன் சுல்தான் ஸாப்கோ காட்டா?“ குதிரை ”பிஹிர்ர்ர்“ என்றது. ”என்னா குதிரைங்க இது?“ என்று அதன் கழுத்தருகில் சொரிந்து கொண்டே சொன்னான். ”ரேக்ளா ரேஸ்ல எல்லர்ம ப்ரைஸ் வாங்கிருக்கு. க்யுன் சுல்தான்?“ ”பிஹிர்ர்ர்“ ”ஏதோ சௌக்கியமா இருந்தா சரி. அதோ பார் முழங்கையைக் கடிச்சுடுச்சு. தினப்படி ஊசி போட்டுக்க வேண்டியிருக்கு. குதிரையைக் கட்டுப் படுத்தி வெச்சுக்கக் கூடாதாப்பா?“ ”ஊசி போட்டுக்கறியலா?“ என்று சுல்தான் போலவே சிரித்தான். ”எதுக்கு? குதிரை கடிச்சதுக்கா? இத பாரு.“என்று தன் கையைக் காண்பித்தான். ”எத்தனை தடவை புல் குடடுக்கறப்ப கொள் கொடுக்கறப்ப சுல்தான் என்னைக் கடிச்சிருக்கான் தெரியுமா? ஊசியா போட்டுக் கிட்டேன்? க்யூன் சுல்தான்?“ எதற்கும் நான் ரிஸ்க் எடுத்துக் கொள்ளவில்லை.ஆஸ்பத்திரிக்குப் போகும் போதெல்லாம் சிப்பந்திகள் குதிரைக்காரர் வந்துட்டாரு” என்று பேசிக்கொண்டாலும், எதிர் வார்டிலிருந்து நண்பர்களையெல்லாம் கூட்டி வந்து என்னைக் காட்டினாலும், வீட்டில் கல்யாணியின் பல உறவினர்கள் பேருக்குப் பேர்“குதிரை கடிச்சுடுத்தாமே ” என்று விசாரித்தாலும் மதிக்காமல் பிடிவாதமாக சிகிச்சைக்குச் சென்றேன்.சில நாட்களில் காயம் ஆறிவிட்டது. ஆனால் அந்த சம்பவத்துக்குப் பின் என் பெயர் மாறிவிட்டது ‘குதிரைக் கிச்சாமி’ என்று.

ஊருக்கு ஊர் கிச்சாமி இருக்கிறார்கள், ஆனால் நாட்டில் ஒரே ஒரு ‘குதிரைக் கிச்சாமி’ நான்தான் என்பதில் ஒரு அற்ப சந்தோஷம்.

Author’s note on this story.
This is also one of my much anthologised stories. Published in `Kalaimagal` Deepavali issue 1983 first, its Hindi translation appeared in a Sahithya Academy collection of Indian short stories. This experience was narrated by my cousin in Bangalore who was actually bitten by a horse. More than the bite the disbelief of the people that a harnessed city horse can bite, was described humourously by him. That gave me the idea for the story. The descriptions are a mixture of the horsecart stands, invariable features in front of many municipal hospitals I have seen in Trichy and other places.

A note on Madan the illustrator
My association with Madan the `Inai Aasiriyar` of Vikatan spans more than a decade. He is more than a cartoonist and illustrator. He is a versatile writer, a very well read thinker and a delightful conversationalist with a glint of humour in his eyes. He makes the whole Tamil nadu laugh but it is difficult to make him laugh though I have succeeded in extracting a chuckle or two from him occasionally. My collaborative effort with him in `Junior Vikatan` called `Een etarku Eppadi` was a delightful experience , Madan providing ideal editorial support which created minor history in popularising science in Tamil and got me a national award.

—————————————————————————————————————–

குதிரை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இரண்டாம் தொகுதியில் 10-வது கதையாக
இடம் பெற்றுள்ளது.
எழுதிய வருடம் : 1983 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு லட்சம் புத்தகங்கள்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! - மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாயிலில் ஆடின. தலைப் பாகைக்காரரின் படம் கீழே துடித்துக்கொண்டு இருந்தது. அருகே பல வண்ணக் கொடிகள் சஞ்சலித் ...
மேலும் கதையை படிக்க...
நிபந்தனை
ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை ஏன் உடுத்திக்கொண்டு வந்தோம் என்றிருந்தது. பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
நகர்வலம்!
அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக ஏற்பட்ட பெரிய படகு அது. அதன் மேல்தளத்தில் மிகவும் இயல்பான நிலையில் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் சூரிய வெளிச்சத்தில் படுத்துக்கொண்டும் ...
மேலும் கதையை படிக்க...
நகரம்
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை ...
மேலும் கதையை படிக்க...
என் முதல் தொலைக்காட்சி அனுபவம்!
கதை ஆசிரியர்: சுஜாதா. ஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில் ‘தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்’ ...
மேலும் கதையை படிக்க...
கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
உபக்கிரகம்
பட்டாபிராமன் தினம் போல் சாயங்காலம் நடப்பதற்குக் கிளம்பினார். ரிட்டயர் ஆனதிலிருந்து அது இப்போது பத்து வருஷமாகிறது. அதிக நாள்கள் இந்த வாக் தவறினதில்லை. பட்டாபிராமன் நிறைய நாள் வாழ்ந்திருக்க விரும்பினார். தினசரி மூன்று மைல் நடந்தால் நிறைய நாள் வாழலாம் என்று ...
மேலும் கதையை படிக்க...
சேச்சா
ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும் பாஸ்போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும் அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு, சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்1, கணக்கில் மிக கெட்டிக்காரன். 2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போது எல்.பி.டபிள்யு கொடுத்தால் ...
மேலும் கதையை படிக்க...
எப்படியும் வாழலாம்!
”உங்களுக்கு வயசு எத்தனை?” ”செரியாச் சொல்ல முடியாதுய்யா!” ”உங்க அப்பாஅம்மா?” ”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.” ”உங்க சொந்த ஊரு?” ”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.” ”தொழில்?” ” ‘….’ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா?” ”போட மாட்டாங்க!” ”அப்ப இரவு ராணின்னு வெச்சுக்க. என்னைப் ...
மேலும் கதையை படிக்க...
தேடல்
போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக டாக்டர் சிவசங்கர் பார்த்தார். சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது. “சரியா இருபது வருஷம் ஆச்சு இந்த ...
மேலும் கதையை படிக்க...
ஒரு லட்சம் புத்தகங்கள்
நிபந்தனை
நகர்வலம்!
நகரம்
என் முதல் தொலைக்காட்சி அனுபவம்!
முதல் மனைவி
உபக்கிரகம்
சேச்சா
எப்படியும் வாழலாம்!
தேடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)