குதிரைகள் பேச மறுக்கின்றன

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 13,984 
 

ஞாயிற்றுகிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது கையில் ஒரு குதிரையைப் பிடித்தபடியே நடந்து வந்திருந்தார். என் வீட்டின் வாசல்கதவை திறந்து அவர் நிதானமாக  குதிரையை தென்னை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு எதுவும் நடக்காதவரைப் போல சுவரோரம் உள்ள தண்ணீர் குழாயில் காலைக் கழவிவிட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு நாளிதழைப் புரட்டி படிக்கத் துவங்கினார்.

சவரம் செய்தபடியே அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு குழப்பமாக இருந்தது. நான் ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தேன். குதிரையே தான். எப்படி அது. நாயை கூட்டிக் கொண்டு தானே வாக்கிங் சென்றார். யாருடைய குதிரை. அதை எதற்காக நமது வீட்டிற்கு கொண்டுவந்திருக்கிறார். விலைக்கு வாங்கிவிட்டாரா இல்லை யாராவது சில நாட்கள் வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார்களா என்று ஆயிரம்கேள்விகள் ஒரே சமயத்தில் மண்டையில் மோதின.

சவரம் செய்வதை பாதியில் நிறுத்தவிட்டு மீனாவைச் சப்தமாக கூப்பிட்டேன். அவள் சமையல் அறையில் எதையோ பொறித்தபடியே இருங்க வர்றேன் என்று பதில் தந்தாள். என் அறையை விட்டு வெளியே வந்து குதிரையை நன்றாகப் பார்த்தேன். அது தலைகவிழ்ந்தபடியே நின்றிருந்தது. கறுப்புநிறம். அராபியக்குதிரை போலிருந்தது. நாக்பூரில் இப்படியான குதிரைகளை பார்த்திருக்கிறேன். அந்த ஊரே அரசர் காலத்திலிருந்து மீளமுடியாமல் இருப்பதுபோலதானிருக்கிறது

பெங்களுரில் உள்ள சில பூங்காகளில் கூட வயதான குதிரைகள்  அலைந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டிருக்கிறது. ஆனால் என் வீட்டின் வாசலில் நின்றது வயதான குதிரையில்லை. அது வாளிப்புடன் திண்ணெனவே இருந்தது. அதன் மயிர் அடர்ந்த வால் அசைந்தபடியே இருக்க தலையை வலப்பக்கமாக சாய்த்தபடியே நின்றிருந்தது.

அப்பா நான் பார்ப்பதைக் கண்டு கொள்ளாதவர் போல பேப்பர் படித்து கொண்டிருந்தார். நான் அந்த அலட்சியத்தைத் தாங்கி கொள்ள முடியாமல் என்ன இது என்று கேட்டேன். அவர் திரும்பிப் பார்த்துவிட்டு குதிரை என்று சொல்லி பேச்சை முடித்து கொண்டார். எதற்காக இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவேயில்லை. யாருடைய குதிரை என்று சற்று குரலை உயர்த்தி கேட்டேன். நம் குதிரை தான் என்று சொல்லிவிட்டு குளிப்பதற்காக தன் அறைக்குள் சென்றுவிட்டார்

நமக்கு குதிரை எதற்கு. ஒரு குதிரை என்ன விலையிருக்கும். யாராவது குதிரை வாங்குவார்களா என்ன? இதை வைத்து ஏதாவது புது திட்டம் வைத்திருக்கிறாரா? வீட்டில் குதிரை வளர்ப்பதை வீட்டு ஒனர் அனுமதிப்பாரா? அதை என்ன செய்வது. அதற்கு என்ன உணவு அளிப்பது. நாளை அப்பா ஊருக்கு போய்விட்டால் அதை என்ன செய்வது என்று குழப்பம் ஊற்று எடுக்க துவங்கியது. இதற்குள் மீனா வெளியே வந்து குதிரையின் அருகில் சென்று அதை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

பிறகு என்னிடம் உங்களுக்கு குதிரை ஒட்டத் தெரியுமா என்று கேட்டாள். நான் முறைத்தபடியே எதற்கு என்றேன். உங்களுக்காகத் தானே உங்கப்பா குதிரை வாங்கிட்டு வந்திருக்கார் என்று கேலி செய்தாள். அவளிடம் இந்தக் குதிரையை என்ன செய்வது என்று நீயே கேள் என்று கத்தினேன்.  அவள் மறுபடியும் கேலியாக இதிலேயே உங்கப்பா சொந்த ஊருக்கு கிளம்பிப் போனாலும் போவாரா இருக்கும் என்றாள்.

அப்பாவை அவள் அடிக்கடி பரிகாசம் செய்கிறாள். குத்திக்காட்டுகிறாள் என்று எனக்கு கோபமாக வருகிறது ஆனால் அதைப் பற்றி பேசினால் உடனே சண்டை துவங்கிவிடும் என்பதால் நான் பல்லைக்கடித்தபடியே குதிரையைப் பார்த்து கொண்டிருந்தேன். அப்பா குளித்துவிட்டு ஈரத்தலையைத் துவட்டியபடியே வெளியே வந்து நின்றார். நரைத்து போன தலைமயிர்கள். களைத்து போன கண்கள். அப்பா  குதிரையை மிக பரிவோடு பார்த்து கொண்டிருந்தார்.

நான் அவர் முன்னால் போய்நின்றபடியே நமக்கு எதுக்குப்பா குதிரை என்று கேட்டேன். அவர் நீ எதுக்காக நாய் வளர்த்தியோ அது போல தான் இதுவும் என்றார். நாய் வீட்டை பாதுகாக்கும். குதிரை பாதுகாக்குமா என்று கோபமாக கத்தினேன். பாதுகாக்காது என்று உனக்கு எப்படி தெரியும். நீ எத்தனை குதிரைகள் வளர்த்திருக்கிறாய் என்று அமைதியாக கேட்டார். யாராவது வீட்ல குதிரை வளர்க்கிறார்களா என்று மறுபடி சப்தமிட்டேன்.  நூறு வருசத்திற்கு முன்பு வரை குதிரை வசதியான எல்லோர் வீட்டிலும் இருந்தது தானே என்றார்

என்ன பைத்தியக்காரன தனமான பேச்சிது. வாகனங்கள் இல்லாத காலத்தில் குதிரைகள் வைத்திருத்திருந்தார்கள். அதில் ஏறிப் பயணம் சென்றார்கள். இப்போது தான் விதவிதமான கார்களும் பைக்கும் வந்துவிட்டதே. பிறகு எதற்கு என்று ஆத்திரமாக வந்தது. இந்தக் குதிரை உங்களுக்கு எப்படி கிடைச்சது  இது யாருடையது என்று உண்மையை சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்று கத்தினேன் . அவர் மிக நிதானமாக இது நம்ம டிங்கி தான். அது தான் குதிரையாக மாறிவிட்டது என்றார்

சின்னபிள்ளையைப் போல பொய் சொல்கிறாரே என்று எரிச்சலும் கோபமும் பீறிட்டது. நாய் எப்பிடிப்பா குதிரையா மாறும் என்று முறைத்தேன். அவர் குதிரையின் அசைந்து கொண்டிருக்கும் இடதுகாதை காட்டி அதில் எல் என்ற எழுத்தை போல உள்ள முத்திரையை சுட்டிக்காட்டி இது டிங்கி காதுலயும் இருந்தது இல்லையா என்றார். அது உண்மையே. என்னுடைய நாயின் காதில் எல் என்ற எழுத்து போல அடையாளம் இருந்தது  அது எப்படி குதிரை காதிற்கு வந்திருக்கிறது.

நான் அருகில் சென்று காதை உன்னிப்பாக் பார்த்தேன். அப்படி அச்சு அசலாக அது நாயின் காதில் இருந்தது போலவே காணப்பட்டது. அத்துடன் குதிரை என்னை பார்த்தவுடன் நட்போடு வாலையும் அசைத்தது.   என்ன கர்மமிது. ஒரு நாய் எப்படிக் குதிரையாக மாற முடியும். அது ஒரு போதும் சாத்தியமில்லை. யாராவது அப்பாவை ஏமாற்றியிருக்கிறார்களா அல்லது அப்பாவிற்கு ஏதாவது மனப்பிரச்சனையா என்று குழப்பமாக இருந்தது.

அப்பா வழக்கம் போல காய்கறிகள் வாங்கிவருவதற்காக கூடையுடன் கிளம்ப தயராக இருந்தார். நான் அவரை வழிமறித்து முதல்ல நாயை என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்க என்றேன். அவர் எப்பவும் போல வாக்கிங் கூட்டிக் கொண்டு போனேன் என்றார். எங்கே போனீங்க. என்ன செஞ்சீங்கனு என் கூட கார்ல வந்து காட்டுங்க என்று கத்தியபடியே  காரை வெளியே எடுத்து அப்பாவை ஏற்றிக் கொண்டேன்.

அப்பாவின் முகம் இறுக்கம் அடைந்து போனது. அவர் மெதுவான குரலில் வழி சொல்லிக் கொண்டே வந்தார். முக்கால்வாசி பெங்களுரை சுற்றிவந்து மைசூர் சாலையில் கார் செல்ல துவங்கியது. இவ்வளவு தூரம் அப்பா தினமும் நடந்துவருகிறாரா. அது எப்படி சாத்தியம் என்ற சந்தேகத்துடன் அவர் சொன்ன வழியில் சென்று கொண்டேயிருந்தேன். சாலை ஒரு இடத்தில் பிரிந்தது. அப்பா அந்தக் கிளைவழியாக செல்லும்படி சொன்னார். கார் மெதுவாக சென்றது. மரங்கள் அடர்ந்த சாலை வரத்துவங்கியது. அதன் உள்ளே சென்றதும் காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து வரச்சொன்னார்.

பத்து நிமிசம் நடந்திருப்பேன். நாணல புதர்வளர்ந்து போன பகுதியாக இருந்தது. அதை தாண்டி உள்ளே சென்றால் சிறிய ஏரி. அதைச் சுற்றிலும் அடர்ந்த மரங்கள். ஜில்லென அந்த இடம் குளிர்ச்சியேறியிருந்தது. ஒரேயொரு வாத்து நீரில் நீந்தியபடியே சென்று கொண்டிருந்தது. ஏரி தண்ணீரில் சலனமேயில்லை. ஆகாசம் நீரில் மின்னிக் கொண்டிருந்தது. இவ்வளவு அமைதியும் அழகுமான இடத்தை அப்பா எப்படிக் கண்டுபிடித்தார். ஆறுவருசமாக பெங்களுரில் எத்தனையோ கிளப்புகள், கொண்டாட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். இது போல ஒன்றை கண்டதேயில்லை. அப்பா எப்போதும் தான் அமரும் கல் என்று ஒன்றை காட்டினார்.

அதில் பாதி தண்ணீருக்குள் முழ்கியிருந்தது. அப்பா அதில் உட்கார்ந்து கொண்டு தன் காலை தண்ணீரில் விட்டு கொண்டார். சட்டென அவருக்கு வயது கலைந்து போய் பத்துவயதுச் சிறுவனை போலதோன்றினார். அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான் அமைதியாக அந்த இடத்தை பார்த்தபடியே இருந்தேன். கேமிராவை கொண்டுவராமல் போய்விட்டோமே என்று மனதில் தோன்றியபடியே இருந்தது.

வந்த வழியை கவனமாக பார்த்து வைத்து கொண்டுவிட்டால் நாளை மீனாவை அழைத்துகொண்டு வரலாம் என்றும் தோன்றியது. அப்பா என்னிடம் பேசவேயில்லை. அவர் மௌனமாக ஏரியைப் பார்த்தபடியே இருந்தார். அப்படி என்ன இருக்கிறது ஏரியில் என்று தெரியவில்லை. நான் அங்கிருந்த மரங்களின் ஊடே நடந்து சென்றேன். சப்தமேயில்லை அது ஏதோவொரு தனித்தீவு  போல இருந்தது..  அப்பாவை போல பலரும் அங்கே வரக்கூடும் போலும். ஒரு இடத்தில் தூண்டில் ஒன்று சொருகி வைக்கபட்டிருப்பதை கண்டேன்

அரைமணி நேரமாகியிருக்க கூடும். அப்பா தண்ணீரை பார்த்தபடியே இருந்தார். அருகில் போய் நின்று இங்கே நாய் எப்படி குதிரையாக மாறியது என்று கேட்டேன். நாயைத் தனியே அலைய விட்டுவிடுவேன். வீடுதிரும்பும் போது அது தானாக என்னைத் தேடிவந்துவிடும். இன்றும் அப்படி தான் நடந்தது. ஆனால் அது திரும்பிவரும்போது குதிரையாக மாறி இருந்தது என்றார்.

அது தான் எப்பிடி நடந்தது என்று கேட்டேன்.  எனக்கு அதைப் பற்றி யோசிக்க விருப்பமில்லை. அது நமது டிங்கி என்று பார்த்தவுடனே தோன்றியது. வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் என்றார். ஏன் இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறார் என்று ஆத்திரமாக வந்தது

அது ஒருவேளை வேறு யாருடைய குதிரையாகவோ இருந்திருந்தால். அவர் நாளை நம்மைத் தேடி வந்து கேட்கமாட்டாரா என்று கேட்டேன். அப்பாவிடம் பதில் இல்லை. நாய் அப்பாவிடமிருந்து தப்பி எங்கோ ஒடிபோயிருக்க கூடும். அதைச் சமாளிக்க அப்பா ஒரு குதிரையை அழைத்து வந்து நாடகம் ஆடுகிறாரோ என்று கூட தோன்றியது. அப்பா ஆனால் சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கு அவரது பேச்சு அலுத்துப் போகத் துவங்கியது. நாங்கள் வீடு திரும்பிய போது அண்டை அடுக்குமாடி வீட்டில் இருந்தவர்கள் தங்கள் ஜன்னல்களை திறந்து எங்கள் குதிரையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி மட்டும் குதிரை அழகாக இருக்கிறது அங்கிள் என்று பாராட்டினாள். நான் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றேன். இதை என்னசெய்வது. எப்படிச் சமாளிப்பது என்று தலைவலிக்க துவங்கியது. மீனாவிற்கு டிங்கிக்கு என்ன ஆனது என்ற கவலை பிடித்து கொண்டது. அந்த நாயை வாங்கியவள் அவள். டிங்கி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்

பகலில் தனியாக இருக்கும் வீட்டினைப்  பாதுகாக்க நாய் தேவைப்பட்டது. நானும் மீனாவும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். வேறு வேறு அலுவலகங்கள். ஆகவே இருவரும் காலை எட்டு இருபதிற்குள் வீட்டில் இருந்து கிளம்பிவிட வேண்டும்.  பகல் முழுவதும் வீட்டைப் பார்த்துக் கொள்வது நாய் மட்டுமே.  அதற்கான உணவும் தண்ணீரும் வெளியே ஒரு தட்டில் போட்டு வைக்கபட்டுவிடும். அது நாள் முழுவதும் வாசல்படியை ஒட்டியே தான் படுத்து கொண்டிருக்கும். பகலில் நாய் என்ன செய்து கொண்டிருக்கும் என்று நாங்கள் யோசித்ததே கிடையாது. நாங்கள் நாயை வெளியே அழைத்து போக நேரமும் இருப்பதில்லை.

டிங்கியை வாக்கிங் கூட்டிச் செல்வதற்காக மட்டுமே அப்பா ஊரில் இருந்து கிளம்பி வருகிறாரோ என்று சந்தேகப்படும் அளவில் அப்பா இரண்டுவாரம் ஒரு முறை ஊரிலிருந்து வீட்டிற்கு வந்துவிடுகிறார். தினமும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் அதை நடத்தி கூட்டி கொண்டு செல்வார். முழுபெங்களுரையும் சுற்றிவிட்டு தான் திரும்புவார்கள் போலும். எப்படியும் நடைபயிற்சி முடித்து திரும்பி வர மூன்று மணிநேரமாகும். அதன்பிறகு நாயின் சுபாவம் ஒருவாரத்திற்கு உற்சாகத்துடன் இருக்கும்.

அப்பா எங்களுடன் இல்லை. அவருக்கு இந்த ஏப்ரலோடு எழுபத்திமூன்று வயதாகிறது. அவர் தனியாக சொந்த கிராமமான செவல்பட்டியில் வசிக்கிறார்.  இருபத்தியாறு வயதுவரை தனியாக வசித்து வந்த அவர் நாக்பூரில் அம்மாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு போதும் தனியாக இருந்ததேயில்லை.

வீட்டில் அம்மாவும் நான்கு குழந்தைகளும் அத்தையும் அவர்களது மூன்று பிள்ளைகளும் என்று நாங்கள் பெரிய குடும்பமாக இருந்தோம். ஐம்பது வருசங்களுக்கு முன்பாக தனி ஆளாக அப்பா நாக்பூருக்கு வந்துசேர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணியில் இருந்த திரவியம் மாமாவின் ஆலோசனையாக இது இருக்க கூடும். அதை பற்றியெல்லாம் அப்பா பேசிக் கொண்டதேயில்லை. 

ஆனால் மொழியறியாமல் தன் இருபது வயதில் அப்பா நாக்பூரில் போன்ஸ்லேயின் ஆரஞ்சு மண்டியில் வேலை  செய்திருக்கிறார். தள்ளுவண்டியில் பழங்களை விற்று பிழைத்திருக்கிறார். ரகுஜிராவ் என்ற நண்பரின் உதவியால் அப்பா ஆரஞ்சு ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக வேலைக்கு சேர்ந்த போது வயது இருபத்தியாறு. அதன்பிறகு அவர் வேலை மாறவேயில்லை. ஆனால் நாக்பூருக்கு வந்த ஆறு ஆண்டுகளில் அப்பா எங்கேதங்கியிருந்தார் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை.

என் அம்மாவின் பெயர் சாந்த துர்கா, அவர் மராத்தியைச் சேர்ந்தவர். அவரைத் திருமணம் செய்து வைக்க அப்பாவிற்கு உதவியது லட்சுமண் ரானே என்று சொல்வார்கள். வீட்டில் அவரது ஒரு புகைப்படம் இருக்கிறது. நாங்கள் பிறப்பதற்கு முன்பாக அவர் இறந்து போயிருந்தார். அம்மாவின் கிராமத்தில் இருந்து தான் அப்பாவின் மண்டிக்கான ஆரஞ்சு பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தன. அந்த தொடர்பில் அவர் கிராமத்திற்கு சென்றிருக்க கூடும். அம்மாவைப் பற்றி அறிந்திருக்ககூடும். இவை எல்லாம் எங்களது யூகங்கள். அம்மா தன் திருமணத்தின் முன்பு அப்பாவை பற்றி ஒரு வார்த்தை கூட கேள்விபட்டதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறாள்.

எப்படி உங்கள் திருமணம் நடந்தது என்று கேட்டபோது அவளது அப்பா இறந்து போய் மாமாவீட்டில் வசித்து வந்ததால்  திருமணம் பற்றி யாரும் அவளிடம் ஆலோசிக்கவேயில்லை என்று சொல்வார். அப்பாவிற்கு யாரையும் கடிந்து கொள்ளவோ கோபப்படவோ பிடிக்காது. அவர் ஒரு நிழலை போலவே நடந்து கொள்வார்.

அவர் வீட்டிற்குள் வருவதும் போவதும் கூட சப்தமில்லாமல் தான் நடக்கும். யோசனை. தீராத யோசனை அவர் முகத்தில் எப்போதுமிருப்பதை கண்டிருக்கிறேன். நான் வீட்டின் கடைசிபிள்ளை.நான் பிறந்த பிறகே அம்மா மிகவும் நோய்வாக படத் துவங்கினார். அதன்பின்னான ஏழு வருசங்களில் அம்மா இறந்து போனார். எங்களை பார்த்து கொள்வதற்காக ஊரில் இருந்து அத்தையும் குடும்பமும் எங்களுடன் சேர்ந்து வாழ துவங்கினார்கள்.

நானும் அக்காக்களும் நாக்பூரில் படித்தோம். பிறகு நான் டெல்லிக்கு படிக்க சென்றேன். அப்பா ஒரேயொரு முறை என்னைப் பார்க்க டெல்லி என்ஜினியரிங் கல்லூரிக்கு வந்திருந்தார். அன்று நான் காலை ஏழு மணிக்கே பயிற்சிவகுப்பிற்கு சென்று விட்டதால்  விடுதியின் வெளியில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் காலை முதல் மாலை ஆறு வரை உட்கார்ந்திருந்திருக்கிறார். அதைப்பற்றி என்னிடம் ஒரு வார்த்தை சலித்து கொள்ளவில்லை. எனக்குத் தேவையான பணத்தை தந்துவிட்டு இரவே அவர் ஊருக்கு புறப்பட்டும் போனார். அவ்வளவு தான் அவரை பற்றிய எனது நினைவுகள் . மற்றபடி அவரை நான் நெருக்கமாக உணரவேயில்லை. எனக்கு வேலை கிடைத்து பெங்களுர் வந்து அப்பாவின் விருப்பபடியே மதுரையில் படித்த தமிழ்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஆறுவருசமாக பெங்களுரில் வசித்து கொண்டிருக்கிறேன்.

அப்பாவிற்கு எங்கள் யாரோடும் சேர்ந்து இருப்பதற்கு பிடிக்கவேயில்லை. அதை என் பெரிய அக்கா ஒரு முறை அவரிடமே சொல்லியும் விட்டாள். அதற்கு அப்பா தூரத்தில் வசிக்கும் போது மட்டும் தான் நீங்கள் என் பிள்ளைகள் என்ற நினைப்பு வருகிறது. அருகில் இருந்தால் வேறு யாரையோ போலிருக்கிறீர்கள் என்றிருக்கிறார். அப்படிதான் அப்பாவின் பேச்சு எப்போதுமிருக்கும். அது இயல்பானதா அல்லது தன்னை மறைத்து கொள்ள அப்படி பேசுகிறாரா என்ற சந்தேகம் எனக்குண்டு. நானே சில வேளை அப்படி பேசுகிறேன் என்று என் மனைவி சொல்கிறாள். எதற்காக இந்த பழக்கம்.

அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளபடாத ரகசியங்களும் அவமானங்களும் வலிகளும் நிறைய இருக்கின்றன என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும். சொற்ப வருமானத்தில் பெரிய குடும்பம் ஒன்றை வளர்த்து காப்பாற்றிவருவது எளிதானதில்லை. யாரையும் திருப்தி செய்ய முடிந்திருக்காது. சில வேளைகளில் அப்பாவை என் கூடவே வைத்து ஏசி செய்யப்பட்ட அறையை தந்து அவரைக் காரில் அழைத்து கொண்டு போய் தேவைப்படும் உடைகள் உணவுகள் வாங்கி தந்து அன்பாக வைத்துகொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவரை நேரில் பார்த்தவுடன் அந்தக் கனவுகுமிழ் தானே உடைந்து போய்விடும். அல்லது அவரே உடைத்துவிடுகிறார்.

அப்பா வயதாக ஆக எதை எதையோ நம்பத் துவங்குகிறார் என்பதற்கு முதற்சாட்சி நாக்பூரை விட்டு நாங்கள் காலி பண்ணியது. அப்பா திடீரென ஒரு நாள் காலை தான் சொந்த ஊரில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியிருக்கப் போவதாக சொன்னார்.  எனக்கும் தங்கைகள் எவருக்கும் அந்த யோசனை பிடிக்கவில்லை.   தன்னுடைய கனவில் அந்த ஊர் திரும்ப திரும்ப வருவதாக  சொல்லிய  அப்பா அடுத்த வாரமே செவல்பட்டிக்கு சென்று வீடு ஒன்று கட்ட துவங்கிவிட்டார். மூன்றே மாதங்களில் நாக்பூரில் நாங்கள் வசித்து வந்த பூர்வீக வீடு விற்கபட்டு எங்களது நாற்பத்தியோறு வருட நாக்பூர் வாழ்க்கை முடிந்து போனது.

சொந்த ஊரில் என்ன இருக்கிறது. அப்பா இருபது வயதில் ஊரைவிட்டு ஒடிப்போனவர் என்பதால் அங்கிருந்த யாருக்கும் அவரோடு உறவில்லை. அப்பாவைத் தவிர மற்ற உறவினர்கள் ஊரை காலி செய்து அருகாமை நகரங்களுக்கு போய்விட்டார்கள். ஆகவே உறவினர்களும் அங்கில்லை. அந்த கிராமத்திற்கு ஒரேயொரு பேருந்து மட்டுமே போய்வருகிறது. நிறைய புளிய மரங்கள் அடர்ந்த ஊரது. எதற்காக அங்கே குடியிருக்க வேண்டும். ஏன் இந்த தடுமாற்றம். அப்பா அதைச் சொல்வதேயில்லை. அவராக எதையோ கற்பனை செய்து கொள்கிறார். பேசமறுக்கிறார் என்று ஆத்திரமாகவே இருக்கிறது.

அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே அவர் நாய் தான் குதிரையாக மாறிவிட்டது என்று சொல்வதாக நினைத்தேன். அன்று பகல் முழுவதும் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அப்பா நாள் எல்லாம் குதிரையின் அருகிலே உட்கார்ந்திருந்தார். அதன் உடலை சுத்தம் செய்தார். அதற்குத் தேவையான குடிநீரை வாளியில் பிடித்து வைத்தார். மீனா அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று உறுதியாக சொன்னாள். 

யாரிடம் இதைப்பற்றி பேசலாம் என்று தெரியாமல் என்னோடு வேலைபார்க்கும் வித்யாகருக்கு போன் செய்து விபரம் சொன்னேன். அவன் குதிரையை தனது பையன் நெடுநாட்களாக பார்க்க வேண்டும் என்று சொல்லி மாலை வீட்டிற்கு வருகிறேன். நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி பேச்சைத் துண்டித்துவிட்டான்.

மாலை வித்யாகர் குடும்பம் வந்திருந்தது. குதிரையை அவன் வான் உயர புகழ்ந்து தள்ளினான். அது போன்ற குதிரையின் விலை பத்து லட்சமிருக்க கூடும் என்று சொல்லி உன் அப்பா பெரிய அதிர்ஷடத்தை கொண்டுவந்திருக்கிறார் என்று பாராட்டினான். குடும்பமே குதிரையின் முன்பாக புகைப்படம் எடுத்து கொண்டார்கள். அவன் அப்பாவிடம் தனக்கு குதிரைகள் பற்றியுள்ள ஞானம் முழுவதையும் கொட்டித் தீர்த்தான். அப்பா அதில் சலனமடையவேயில்லை.

இரவில் மீனா நாளை நாம் என்ன செய்வது என்று கேட்டாள். எதற்கு என்று புரியாமல் கேட்டேன். காலை ஆறுமணி ரயிலில் உங்கள் அப்பா ஊருக்கு கிளம்பி போய்விடுவார். நீங்கள் ஒருநாள் விடுமுறை எடுத்து கொண்டு இந்த குதிரையைக் காலி செய்யப்பாருங்கள் என்றபடியே புரண்டு படுத்து கொண்டாள். குதிரையை என்ன செய்வது என்ற எண்ணம் மனதில் ஒடிக் கொண்டேயிருந்தது. தூக்கம் பிடிக்கவேயில்லை. காலையில் நான் எழுந்து கொள்வதற்குள் அப்பா ஊருக்கு கிளம்பி போயிருந்தார்.

குதிரை அதே இடத்தில் நின்றிருந்தது.  நான் அன்று ஒருநாள் விடுமுறை போட்டேன். என்னிடம் உள்ள ஒவ்வொரு தொலைபேசி எண்ணாக பேசிபேசி குதிரையை என்ன செய்வது என்று திட்டமிட துவங்கினேன். அதைப் பற்றி காவல்துறையில் புகார்செய்ய வேண்டும் என்று ஒரு நண்பன் மிரட்டினான். அதை விற்க முடியாது சிக்கல் என்று ஒருவர் தெரிவித்தார். அதை ஏதாவது ஒரு சேவைநிலையத்திற்கு தள்ளிவிடு என்றொரு ஆலோசனை வந்தது. என்ன செய்வது என்று முடிவாக எதுவும் தெரியவில்லை.

திடீரென குதிரை நேற்றில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்ற யோசனை தோன்றியது. குதிரை சாப்பிட என்ன தருவது. எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. வீட்டில் உள்ள காய்கறிகளை ஒரு காகிதத்தில் அள்ளி போட்டு அதன்முன்னே வைத்தேன். அது எதையும் சாப்பிடவில்லை. ஒரு குதிரை என்ன சாப்பிடும் எவ்வளவு சாப்பிடும், எப்போது உறங்கும், என எந்த விபரமும் தெரியவில்லை. அது குதிரை என்ற பெயர் மட்டுமே தெரிந்திருக்கிறது

உடனே கம்ப்யூட்டரில் குதிரையை பற்றிய அடிப்படை விபரங்களை தேடத் துவங்கினேன். ஆயிரமாயிரம் பக்கமாக நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. குதிரைகளின் வியப்பான சரித்திரத்தை அது என்றாவது நினைவில் கொண்டிருக்குமா. நினைத்து வேதனை அடையுமா என்ற நினைப்போடு குதிரைகளின் புகைப்படங்களை பார்த்தபடியே இருந்தேன். அதில் ஒரேயொரு தகவல் குதிரை சாப்பிடுவதற்கென தனியான புல் மார்க்கெட்டில் கிடைக்கிறது என்றிருந்தது. அதன் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு எனது குதிரைக்கான புல்வேண்டும் என்று ஆர்டர்  செய்தேன்.

உண்மையில் என்னுடைய குதிரை என்று சொல்வதற்கு கூச்சமாகவே இருந்தது. இரண்டு மணிநேரம் சென்று ஒரு வேனில் புற்கட்டுகள் வந்து இறங்கியது. ஒரு வயதானவர் அதை எடுத்து வந்து என் குதிரையின் முன்னால் போட்டுவிட்டு குதிரை நன்றாக இருக்கிறது என்ன வம்சமது என்று கேட்டார். நான் அது என் அப்பாவின் குதிரை என்று மட்டும் சொன்னேன். அவர் என் அப்பாவை ஒரு ராஜா போல கற்பனை செய்து கொள்ளக் கூடும். அது ஏனோ எனக்கு பிடித்திருந்தது. இனிமேல் யாராவது கேட்டால் அது என் அப்பாவின் குதிரை என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

குதிரை அமைதியாக புல்லைத் தின்றபடியே நின்றிருந்தது. அதன் அருகாமையில் போய் தொட்டு பார்த்தேன். இதன்மீதேறி தான் மனிதர்கள் நூற்றாண்டுகாலமாக பயணம் செய்திருக்கிறார்கள். சண்டையிட்டிருக்கிறார்கள். பந்தயம் கட்டி ஒட விட்டிருக்கிறார்கள். இன்று இயந்திரங்கள் இந்தக் குதிரைகளை நம் கவனத்தில் இருந்து முழுவதாக அப்புறப்படுத்திவிட்டதே என்று தோன்றியது.

குதிரையின் கண்களை கவனித்தேன். எவ்வளவு சாந்தம். நாயின் கண்களில் இல்லாத அமைதியது. அது சாப்பிடுவதில் கூட அதிக விருப்பம் கொள்ளவேயில்லை. அதன் நெற்றியில் கைவைத்து தடவிவிட்டேன். குதிரையை நெருங்கிப் பார்க்கும் போது நானே சிறுவனாகிவிட்டது போல தோன்றியது. சிறுவயதில் ஒரு மரக்குதிரை ஒட்டியிருக்கிறேன். இப்போது தான் நிஜக்குதிரையை தொட்டு தடவி பார்க்கிறேன். அதன் முதுகு எலும்புகள் இரும்பை போல உறுதியாக இருந்தன.  பகல் முழுவதும் குதிரையைப் பார்த்து கொண்டேயிருந்தேன்.

மீனா அலுவலகம் விட்டு திரும்பியதும் குதிரை அதே இடத்தில் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்தாள். தான் உடனே கிளம்பி ஊருக்கு போகப் போவதாக மிரட்டினாள். உனக்கு எதற்காக குதிரையை பிடிக்கவில்லை என்று கேட்டேன். அவள் அது நாய்போல இல்லையே என்று சொன்னாள். இல்லை இதோடு நாம் இன்னமும்பழகவில்லை என்று சொன்னேன்.  உங்கள் அப்பாவை போலவே பேசாதீர்கள். எனக்கு குதிரைகள் வேண்டாம். நாம் என்ன நெப்போலியனா, இல்லை ராஜாதேசிங்கா குதிரையில் போக என்று கேட்டாள்.

அவள் சொன்னபிறகு தான் பெருமைக்குரிய குதிரை வைத்திருந்தவர்கள் பற்றிய தகவல்கள் மண்டைக்குள் பீறிட துவங்கின. இரண்டு நாளில் அந்தக் குதிரையை எப்படியாவது அனுப்பிவிடலாம் என்று சமாதானம் சொன்னேன். இரவில் அவள் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் போனில் குதிரை பற்றியே பேசிக் கொண்டேயிருந்தாள். நான் மறுபடி அப்பாவை போனில் கூப்பிட்டு இது யாருடைய குதிரை உண்மையை சொல்லிவிடுங்கள் என்று கேட்டேன். அப்பா  அது நமது டிங்கியே தான் என்றார். ஒரே பொய்யை ஏன் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் என்று கத்தினேன். மறுமுனையில் பேச்சேயில்லை.

மறுநாள் நாங்கள் குதிரையை பற்றி யோசிக்க கூடாது என்று முடிவுசெய்து காலை அவசரமாக  வீட்டை பூட்டிக் கொண்டு அலுவலகம் சென்றோம். பகலில் வேலையின் நடுவில் குதிரை என்னவாக இருக்கும் என்ற யோசனை தோன்றி மறையும். ஆனால் அதை பற்றி நினைக்க கூடாது என்று கறாராக இருந்தேன். மாலை வீடு திரும்பும் போது என் வீட்டின் வாசலில் பெரிய கூட்டம் நின்றிருந்தது. அத்தனையும் குதிரையை வேடிக்கை பார்க்கும் கூட்டம். அருகாமை வீட்டின் கூர்க்கா தான் கேட்டை தாண்டி போய் குதிரைக்கு குடிதண்ணீர் வைத்ததாக விளக்கம் தந்து கொண்டிருந்தான்.  குதிரையை நானே கொண்டுபோய் எங்காவது விட்டுவிட வேண்டியது தான் என்று முடிவு செய்து அதை கையில் பிடித்து கொண்டு நடக்க துவங்கினேன்

வீதியில் குதிரையோடு நான் செல்வதை மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று தோன்றியது. குதிரை ஏறத் தெரியாமல் அதை பிடித்துகொண்டு நடப்பது அவமானமாக இருந்தது. அதை சகித்தபடியே நடத்தி கொண்டு சென்றேன். எங்கே கொண்டுபோய்விடுவது என்று தெரியவில்லை. வழியில் ஒரு பயம் வந்தது. ஒருவேளை அப்பா அடுத்தவாரம் திரும்பிவந்து அந்த குதிரை யாருடையது என்ற உண்மையை சொல்லிவிட்டால் திரும்பி கொடுக்க என்ன செய்வது. குதிரையைக் கொடுக்க முடியாவிட்டால் பத்து லட்சம் பணம் அல்லவா தர வேண்டியது இருக்கும். நான் குதிரையோடு வீடு திரும்பிய போது இரவாகியிருந்தது. 

குதிரையை நான் ஏன் வெறுக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. அன்றிரவு குதிரைகளைப் பற்றி நிறைய படித்தேன். உயிருடன் கம்பீரமாக என் வீட்டின் வாசலில் நிற்கும் அதை ஏன் நான் அலட்சியப்படுத்துகிறேன் என்று குழப்பமாக இருந்தது.

இரண்டுநாட்களில் அந்த குதிரை எங்கள் வீட்டின் அடையாளமாகி போனது. கூரியர் ஆள், காய்கறிவிற்பவன், கேஸ்சிலிண்டர் கொண்டுவருபவன் என எல்லோரும் அதை நேசித்தார்கள். அதற்கு என்ன பெயர் என்று ஆசையாக கேட்டார்கள். அடுத்த மாதம் தனது தம்பி திருமணத்திற்கு அந்த குதிரையை இரவல் தர முடியுமா என்று தபால்காரன் அன்போடு கேட்டான். தலையாட்டிக் கொண்டேன். என் மனைவிக்கு குதிரையை பிடிக்கவேயில்லை. பூனை நாயை கூட பிடிக்கும் அவளுக்கு குதிரை மீது ஏன் இவ்வளவு வெறுப்பு.

குதிரைக்கு தினமும் ஒரு கட்டு புல்லும், குடிதண்ணீரும் வைக்கும் வேலையை நானே ஏற்றுக் கொண்டேன். சிலவேளைகளில் அதன் வயிற்றை தடவிவிடுவேன். நெற்றியில் விரலால் அழுத்தி கொடுப்பேன். குதிரைசாணத்தின் நாற்றத்தை என் மனைவியால் சகித்து கொள்ள முடியவேயில்லை. அதையும் நானே சுத்தம் செய்ய துவங்கினேன். குதிரையை நம்பி வீட்டை விட்டு சென்றேன். குதிரையோ வந்த நாளில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது.

சில நாட்களில் எனக்கு குதிரையைப் பிடித்துபோக துவங்கியது. அதை நேசிக்க ஆரம்பித்தேன். அப்பாவை போல அதை நானும் வாக்கிங் கூட்டி செல்ல முடியுமா என்று நினைத்தேன். சிறுவர்களை குதிரையோடு விளையாட அனுமதித்தேன். அண்டை வீட்டோர் என்னை புரியாமல் பார்த்தார்கள்.

ஒரு வெள்ளிகிழமை இரவு எப்போதும் போல அப்பா பிறகு வந்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர் குதிரை எப்படியிருக்கிறது என்று தான் கவனித்தார். பிறகு அவர் அதை காலையில் தான் வாக்கிங் அழைத்து செல்வதாக சொல்லியபடியே நெருங்கி உட்கார்ந்து கொண்டார். இரவில் அப்பா குதிரையோடு ஏதோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

காலையில் நான் எழுந்து கொள்வதற்குள் அப்பா குதிரையை அழைத்து கொண்டு வாக்கிங் சென்றிருந்தார். என் மனைவி தனது தோழியின் வீட்டிற்கு போக கிளம்பி கொண்டிருந்தாள்.காலை ஒன்பது மணியிருக்ககூடும். அப்பா திரும்பிவருவது தெரிந்தது. அப்பாவின் கையில் டிங்கியிருந்தது. குதிரை எங்கே போனது. எப்படி நாய் திரும்பவந்தது என்று திகைப்பாக இருந்தது.

அப்பா மிக இயல்பாக  நாயை அதன் இடத்தில் கட்டிவிட்டு  வரவேற்பறையில் அமர்ந்து பேப்பர் படிக்க துவங்கினார். தனது நாயை பார்த்த சந்தோஷத்தில் மீனா டிங்கியை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். நான் அப்பாவிடம் குதிரை எங்கே போனது என்று கேட்டேன்.

குதிரை மறுபடியும் நாயாக மாறிவிட்டது என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் அவரிடம் வேறு கேள்விகள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. நாயை கண்டுகொள்ளாமல் குளிக்க சென்றேன்.

இரும்பு கேட்டின் வெளியே சிறுவர்கள் குதிரையைத் தேடி வந்து விசாரித்து கொண்டிருப்பது கேட்டது. அப்பா சொல்வது எல்லாம் உண்மை என்று எனக்கு அப்போது தோன்றியது. நாய்களைப் போல ஏன் குதிரை தன் இருப்பை காட்டிக் கொள்ள சப்தமிடுவதோ கத்துவதோ இல்லை என நான்  குதிரையை பற்றியே நினைத்துகொண்டிருந்தேன். என்னை அறியாமல் மனதில் வலி கவ்வியது. அப்பா எப்போதும் போல காய்கறி வாங்க கூடையுடன் வெளியே கிளம்பி போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *