கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 44,500 
 

மாலை அலுவலகம் விட்டு அலுத்து சலித்து அறைக்குள் நுழைந்த அந்த மூவரும் அறையின் கட்டிலில் வெங்கட் படுத்திருப்பதைப் பார்த்ததும் துணுக்குறார்கள்.

அவன் தலைமாட்டிற்கருகில் ‘ தற்கொலை’ என்று கொட்டை எழுத்தில் எழுதி ஒரு கடிதம் இருப்பத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டார்கள்.

சேகர் லபக்கென்று அந்த கடித்ததைக் கைப்பற்றி பரபரப்புடன் பிரித்தான்.

‘ மனநிலை சரியில்லாத காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்வதென்று முடிவெடுத்துவிட்டேன். எனது சாவிற்கு யாரும் காரணமில்லை.’

இப்படிக்கு

வெங்கட்

படித்து முடித்ததும் அரண்டு போனான் சிலையாகிப் போனான் சேகர். அவன் அப்படி திக்பிரமைப் பிடித்து நிற்பதைக் கண்ட சிவாவும் கணேஷும்..

” டேய் ! என்னடா..? ” என்று அவனைக் கேட்க……..

அவன் மௌனமாய் அக்கடிதத்தை அவர்களிடம் நீட்டினான்.

படித்த அவர்களும் அதிர்ந்தார்கள்.

” டேய் ! மொதல்ல அவன் உயிரோட இருக்கானான்னு பாருங்கடா..! ” சேகர் சுதாரித்து பரபரப்பாய் நண்பர்களுக்குக் கட்டளை இட்டான்.

சிவா, கணேஷ்…. இருவரும் பயத்துடன் கட்டிலில் படுத்திருப்பவனை நெருங்கி உற்றுப் பார்த்தார்கள்.

மார்புக்கூடு சீராக ஏறி இறங்கி… மூச்சு வந்து கொண்டிருப்பதின் அடையாளம் தெரிந்தது.

” டேய் சிவா ! பக்கத்துல தூக்க மாத்திரை ஏதாவது கெடக்கான்னு பாரு ” உற்றுப் பார்த்த சேகர் கிசுகிசுக்க…

ஆராய்ந்தார்கள்.

ஒன்றும் கிடைக்கவில்லை.

” மாத்திரையைச் சாப்பிட்டு படுத்திருக்கப் போறாண்டா. எழுப்பி பார்க்கலாம்.” என்று கணேஷ் முணுமுணுக்க…

முதலில் பயத்துடன் தொட்டு, அப்புறம் பலமாய் எழுப்பினார்கள்.

வெங்கட் அசைந்து கொடுத்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எழுந்தான்.

எழுந்தவன் தன்னைச் சுற்று கலவரமாய் மூவரும் நிற்பதைப் பார்த்ததும் மலங்க மலங்க விழித்தான். பின்பு சோகத்துடன் தன நண்பர்களைப் பார்த்தான்.

” இதை எழுதினது நீயா ..? ” – சேகர்.

” ….ஆ….மா… ”

” பாவி ! தற்கொலை செய்துக்கிற அளவுக்கு உனக்கு என்னடா பிரச்சனை..? ” சிவா பதற்றத்துடன் கேட்டான்.

இதைக் கேட்டதும் வெங்கட்டின் கண்களில் குபுக்கென்று கண்ணீர் வந்தது.

” டேய் ! சொல்லுடா..? ” – கணேஷ்.

”………………………”

” தயவு செய்து சொல்லும்மா. காரைக்கால்ல பொறந்து புதுச்சேரியில வந்து வேலை பார்க்கிறோம். எல்லோரும் ஒரே அறையில் தங்கி இருக்கோம் . இங்க ஒருத்தருக்கொருத்தர் தான் …. தாய், தந்தை, அண்ணன், தம்பி, சொந்தம், நண்பன்… துணை எல்லாம். ஒருத்தனுக்கு ஒன்னுன்னா பேசாம இருக்க முடியுமா…? சொல்லு.? மனம் விட்டு சொல்லு. உனக்கு என்ன பிரச்சனை..? ” மெல்ல வெங்கட்டின் அருகில் அமர்ந்து கொண்ட சேகர் அவனை அணைத்துக்கொண்டு ஆதரவாகக் கேட்டான்.

” என்னன்னு சொல்லு வெங்கட். எதுவா இருந்தாலும் நாங்க உயிரைக் கொடுத்தாவது தீர்த்து வைக்கிறோம். ! ” சிவா தழுதழுத்தான்.

வெங்கட் நண்பர்களின் அன்பைக் கண்டு நெக்குருகிப் போனான். ஆனாலும் பேசவில்லை. அழுதான்.

” பிரச்சனையைச் சொல்லாம மௌனமா அழுதா எங்களுக்குச் சங்கடமா இருக்குடா. சொல்லு..? ” கணேஷ் மீண்டும் வற்புறுத்தினான்.

” தயவு செய்து என்னைத் தனியா விடுங்க. எதுவும் கேட்காதீங்க. நான் என் முடிவை மாத்திக்கிறதா இல்லே. ” சொல்லிவிட்டு வெங்கட் குப்புறப் படுத்துக்கொண்டான்.

‘ கல்லுளி மங்கன். பிடிச்சா பிடவாதம். விடமாட்டானே ! இனிமேல் அடிச்சி உடைச்சாலும் சொல்லமாட்டான். அடுத்து என்ன செய்வது..? ‘ நினைத்து ஆளாளுக்கு குழம்பிப் போய் ஒருவன் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

” வெங்கட் ! இதையாவது சொல்லு. தற்கொலைக்காக எதையாவது தின்னிருக்கிறீயா..? ” சேகர் அவனிடம் பாவமாகக் கேட்டான்.

அவன் குரலில் இரங்கிய வெங்கட்…

” இல்லே…” சொல்லி தலையாட்டினான்.

சேகருக்கு நம்பிக்கை இல்லை.

” சத்தியமா..? ”

” சத்தியமா இல்லே. போதுமா..? படுத்தாதீங்கடா….?! ” சொன்ன வெங்கட் மீண்டும் கவிழ்ந்தடித்து குப்புறப் படுத்துக் கொண்டான்.

” அப்பாடி !அது போதும் ! ” சேகருக்கு உயிர் வந்தது.

மற்றவர்களுக்கும் நிம்மதி.

அறைக்கு வெளியே வந்த மூவரும் ஆலோசனை செய்தார்கள்.

” சேகர் ! இவன் தற்கொலை கடித்ததை நாம காவல் நிலையத்துல ஒப்படைச்சா என்ன..? ” சிவா தனக்குள் தோன்றியதைக் கேட்டான்.

” வேணாம். இந்த கடிதம் அங்கே போனால் ஆள் செத்தாலும் சாவலைன்னானும் அவனுக்கும் நமக்கும் தலைவலி. ”

” வேறென்ன செய்யலாம்..? ”

” அதான் யோசனைப் பண்றேன். ” என்ற சேகர் சிறிது நேரத்திற்குப் பின்…….

” இதோ பாருங்கடா….. தற்கொலை என்பது கணநேரத்து முடிவு. அந்த விநாடியிலேர்ந்து ஆளைக் காப்பாத்திட்டோமன்னா ஆள் பொழைச்சுப்பான். நமக்கும் அல்லல் இல்லே ! ” சொன்னான்.

எல்லோருக்கும் அது சரியாகப் பட்டது.

” அதுக்கு இப்போ என்ன செய்யலாம் என்கிறே…? ” கேட்டான் சிவா.

” ஒன்னும் பண்ண வேணாம். நாம் மூணு பேரும் கண்விழிச்சி , ஆளைக் கவனிச்சு காப்பாத்தணும்.”

” அதான் சரி ” – கணேஷ் சொல்ல… மூவரும் அறைக்குள் நுழைந்தார்கள்.

வெங்கட் கட்டிலுக்கு அருகில் பாயை விரித்துப் போட்டு மூவரும் ஒன்றாகப் படுத்தார்கள்.

” சிவா ! வெங்கட் படுக்கைக்குப் பக்கத்துல ஒண்ணுமில்லையே..?! ” சேகர் கேட்டான்.

” அதான் மொதல்லேயே ஒழுங்காப் பார்த்துட்டோமே. இல்லே.”

” அப்ப சரி. ஆளைக் கவனி. விளக்கை அணைச்சுரு. விடிவிளக்கையும்தான். ”

கணேஷ் எழுந்து விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.

தெரு விளக்கின் வெளிச்சம் உள்ளே பரவ…. இருட்டில் கண்கள் பழகிப் போக கீழே படுத்திருக்கும் மூவரும் வெங்கட்டைக் கவனித்தார்கள்.

வெங்கட் புரண்டு படுத்தான்.

” டேய்..! புரண்டு படுக்கிறாண்டா..” கணேஷ் குசுகுசுத்தான்.

” ஜாக்கிரதை ! அவன் எழுந்து ஏதாவது தின்கிற மாதிரியோ. அல்லது வேற ஏதாவது விபரீதமா செய்துக்கிற மாதிரியோ இருந்தா நாம கபால்ன்னு எழுந்து ஆளைத் தடுத்திடனும்.” சிவா மெல்ல சொன்னான்.

மற்ற இருவரும் ;’ சரி ‘ சொன்னார்கள்.

வினாடிகள் நிமிடங்களாக…..

ஐந்து…. பத்து…. பதினைந்து….

வெங்கட் அசையவில்லை.

” டேய் ! இன்னைக்கு எவனும் தூங்கிடாதீங்க. நம்பளை ஏமாத்திட்டு ஆள் தன் எண்ணத்தை நிறைவேத்திக்கப் போறான் ! ” சேகர் எச்சரித்தான்.

ஆளாளுக்குக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு வெங்கட்டை உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

” இவனுக்கு என்ன பிரச்சனை இருக்கும்…?! ஏண்டா கணேஷ் ! இவன் எவளையோக் காதலிக்கிறதாச் சொன்னியே. அவ இவனைக் கை விட்டுட்டாளா…? ” சிவா கேட்டான்.

” அதெல்லாம் இருக்காதுடா. நேத்திக்ககூட அவகூட இவன் சிரிச்சி சிரிச்சிப் பேசிக்கிட்டிருந்தை நன் பார்த்தேன் ! ”

” ஒருவேளை இந்த வாரக் கடைசியில் அவன் தங்கச்சிக்குக் கல்யாணம்ன்னு சொன்னானே. அங்க ஏதாவது இவன் அவமானப்படுகிற மாதிரி பிரச்சனையா..? ”

” அந்த திருமணத்துக்காக இவன் பணத்துக்கு அலைஞ்சிக்கிட்டு இருந்தான். ஒருவேளை கிடைக்கலையோ என்னவோ…?! ”

” என்ன எழவோத் தெரியலையே..! இவன் செத்துத் தொலையிறது மட்டுமில்லாம நம்பளையுமில்ல வம்புல மாட்டிவிடுவான் போலிருக்கு.! ”

” இந்த ஏரியாவுல திருட்டுப் பசங்க அதிகம் என்கிறதுனால சரியாவேத் தூங்க முடியாது. இன்னைக்கு இவனுக்காக வேற கண் முழிப்பா…?! நம்ம நெலமையைப் பார்த்தியா..? ”

– இப்படி ஆளாளுக்குக் கிசுகிசுத்துக் கொண்டு காவல் காத்தார்கள்.

வெங்கட்டிடம் சிறு அசைவு தென்பட்டால்கூட கவனித்து விழிப்புடன் இருந்தார்கள்.

பாவம் ! அவர்கள் எத்தனை மணி நேரம்தான் விழித்துக் கிடப்பார்கள் !! அசதியில் அவர்களை அறியாமலேயே தூங்கிப் போனார்கள்.

பதறிப்போய் எழுந்துப் பார்த்தால்…மணி ஏழு.

கட்டிலில் வெங்கட் இல்லை. ஒரு கடிதம் !

சேகர் அதை எடுத்து நடுக்கத்துடன் பிரித்தான்.

மூவரும் படித்தார்கள்.

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு…..

தங்கையின் திருமணத்திற்காக இரண்டு லட்சம் பி.எப். போட்டு அலுவலகத்திருந்து எடுத்து வந்தேன். அதைப் பெட்டியில் பூட்டி பத்திரப்படுத்திவிட்டாலும் இந்த ஏரியா திருடர்கள் பயமென்பதால் ஒரே பயம். நான் தூக்க மன்னன் என்பதால் என்னாலும் காவல் காக்க முடியாது. அதனால்… நான் தற்கொலை செய்து கொள்வதாய் ஒரு கடிதம் எழுதி உங்கள் பார்வைக்குப் படுமாறு வைத்தேன். கடித்தை நீங்கள் படித்ததும் என்னைக் காப்பாற்ற கண்விழிப்பீர்கள் என்று தெரியும். என் கணிப்பு வீண் போகவில்லை. அப்படியே கண் விழித்து என் பணத்தைக் காவல் காத்தீர்கள். நான் வழக்கம் போல் நிம்மதியாகத் தூங்கினேன். திருமணத்திற்காக ஒரு வாரம் விடுப்பில் ஊருக்குச் செல்கிறேன்.உங்களிடம் உண்மையைச் சொல்லிச் சென்றால் கண்டிப்பாக என்னை உதைப்பீர்கள். அதனால் விடியற்காலை நாலுமணி பேருந்திற்கே நீங்கள் அயர்ந்து தூங்கும்போது கிளம்பிவிட்டேன். உங்கள் காவலுக்கு நன்றி.

இப்படிக்கு

வெங்கட்

படித்து முடித்த மூவரும் ஆளாளுக்குப் பல்லைக் கடித்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *