Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காற்று வாங்கப் போனோம்!

 

அலுவலகம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் எப்போதும் ஈஸி சேரில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டே டீவி பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கமுள்ள கிருஷ்ணனுக்கு வெளியிடங்களுக்குப் போவதே பிடிக்காது. அதிலும் எப்போதும் கூட்டமாக உள்ள சினிமா தியேட்டர், கடற்கரை போன்ற இடங்கள் என்றால் கூடுதல் அலர்ஜி! தப்பித் தவறி எங்கேயாவது போனாலும் அவர் சுபாவம் அங்கே உள்ள குறைகள் மட்டுந்தான் அவர் கண்களுக்குத் தெரியும். சுற்றிலுமுள்ளவர்களை எப்போதும் சந்தேகக் கண்களோடயே தான் பார்ப்பது அவர் பழக்கம்.

அவ்வப்போது அனு தான் குழந்தைகளை வெளியே அழைத்துக் கொண்டு போவாள். எங்கே போனாலும் ஒருமணி நேரம் ஒன்றரை மணி நேரந்தான் கணக்கு. அந்த நேரம் தாண்டி விட்டால் இவர் இங்கே வீட்டில் எகிறி எகிறி குதிப்பார். அசோக் நகரிலிருந்து மெரினா கடற்கரைக்கு பஸ்ஸைப் பிடித்துப் போகவே ஒருமணி நேரம் ஆகி விடும். அவர் எதிர்பார்க்கும் நேரத்திற்குள் போய் வர முடியாதென்பதை அனு புரிந்து கொண்டதால் வெளியே போகவே தயங்குவாள். ஆனால் குழந்தைகள் வெளியே அழைத்துப் போகச் சொல்லி நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.

பள்ளியில் கோடை விடுமுறை விட்டாகி விட்டது. ஐந்தாவது படிக்கும் நந்துவுக்கும் மூன்றாவது படிக்கும் மஞ்சுவுக்கும் வீட்டில் பொழுதே போகவில்லை. குடியிருப்பிலுள்ள அவர்கள் வயதையத்த குழந்தைகள் வெளியூருக்குப் போய் விட்டார்கள். “எங்களையும் எங்கேயாவது வெளியில் அழைத்துக் கொண்டு போ!” என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்கள். மெரினா பீச் என்றால் அவர்களுக்குக் கொள்ளை ஆசை. ஒரு நாள் மாலை பீச்சுக்குப் போயே ஆக வேண்டும் என்று ரொம்பப் பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியில்லாமல் கிருஷ்ணன் மனம் இல்லாமல் முணுமுணுத்துக் கொண்டே கிளம்பினார். ஒரு பஸ்ஸிலும் ஏற முடியாத அளவுக்கு கூட்டம் நெரிந்தது. வேறு வழியில்லாமல் குழந்தைகளை திட்டிக் கொண்டே கிருஷ்ணன் ஒரு ஆட்டோவைப் பிடித்தார். ஆட்டோவில் பாதி இடத்தை அடைத்துக் கொண்ட கிருஷ்ணனுக்கு இடம் விட்டு குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு வாயைத் திறக்காமல் வந்தாள் அனு. ஒரு வழியாக மெரினா வந்து இறங்கினார்கள்.

கொஞ்சம் பருமனான உடல் வாகுள்ள கிருஷ்ணனுக்கு சாலையிலிருந்து ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து நடந்ததில் கடற்கரையை நெருங்கும்போதே மூச்சு வாங்கியது. நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்த ரொம்ப குண்டான ஆசாமி ஒருவர் சும்மா இல்லாமல் கிருஷ்ணனைப் பார்த்து, “இதுக்கு தான் சார், தினமும் ‘வாக்கிங்’ போகணும்னு சொல்றாங்க!” என்று அக்கறையாக சொல்லிவிட, கிருஷ்ணனுக்குக் கோபம் பொத்துக்கொண்டது.

“எந்த நிமிஷமும் டெலிவரி ஆகிற மாதிரி தொப்பையை வச்சிக்கிட்டு எனக்கு அட்வைஸ் பண்றியா?” என்று அவரைப் பார்த்து எகிற, பெரிய சண்டையாகிவிடப்போகிறதேயென்று பயந்து போய் கிருஷ்ணனை அங்கிருந்து அவசரமாக நகர்த்திக் கூட்டிக்கொண்டு போனார்கள் குடும்பத்தினர்.

கடற்கரை கோலாகலமாக இருந்தது. சென்னை ஜனங்கள் முழுவதும் அங்கே தான் இருக்கிறார்களோ என்று வியக்கும் அளவுக்கு நல்ல கூட்டம்! ஆங்காங்கே குழந்தைகள் கும்பல் குதூகலமாகக் கத்திக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தது. “லீவு விட்டா இப்படி கத்திக் கிட்டே தான் இருக்கணுமா என்ன?” என்று கிருஷ்ணன் அவர்களை கோபமாகப் பார்த்துக் கொண்டே நடக்க, வாயைத் திறக்காமல் குடும்பத்தினர் அவரைப் பின் தொடர்ந்தனர்.

பஞ்சு மிட்டாய், மாங்காய், சுண்டல், வேர்க்கடலை என்று கடற்கரைக்கே உரித்தான பொருட்கள் வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. மஞ்சு ஆசையாகப் பஞ்சு மிட்டாய் கேட்டாள். கிருஷ்ணனுக்கு பொது இடத்தில் எதுவும் வாங்கிச் சாப்பிடுவது பிடிக்காது என்பதால், கோபமாக ஒரு முறை முறைக்க, மஞ்சு வாய் தானாக மூடிக்கொண்டது.

“வாம்மா! நாம்ப ஜாலியா தண்ணியில நிக்கலாம்” என்று நந்து அனுவை இழுத்தான். தண்ணீரில் நிற்பதைப் பற்றி கிருஷ்ணனுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், போட்டுக்கொண்டிருக்கும் துணிமணிகள் ஈரமானால் கோபம் வந்து விடும். அது சாத்தியமில்லையென்பதால் தொடர்ந்து மணலில் நடந்தார்கள்.

அவர்கள் அதிர்ஷ்டம் அன்றைக்கென்று கொஞ்சம் கூட காற்றே இல்லை. கிருஷ்ணன் ‘உஸ் உஸ்’ஸென்று கைக்குட்டையால் முகத்தில் விசிறிக்கொள்ள, “எல்லா காத்தையும் நமக்கு முன்ன வந்தவங்க வாங்கிட்டுப் போயிட்டாங்க போலிருக்கு!” என்றாள் அனு கஷ்டப்பட்டு சிரிக்காமல் முகத்தை வைத்துக் கொண்டு.

“இதுக்குத் தான் வரமாட்டேன்னு சொன்னேன். இப்பப்பாரு. இங்கே உள்ளவங்க மூச்சுக் காத்தைத் தான் நாம்ப சுவாசிக்கணும்.” என்றார் கிருஷ்ணன் சீரியஸாக.

மஞ்சுவும் நந்துவும் ஒரு இடத்தில் அமர்ந்து மணலைத் தோண்டி வீடு கட்ட ஆரம்பித்தார்கள். “ஏய்! சொன்னாக் கேளு! உள்ளுக்குள்ள ஏதாவது அசிங்கத்தைப் போட்டு மூடியிருப்பாங்க. தோண்டாதே!” என்று அதுக்கும் ஆட்சேபணை தெரிவித்து கிருஷ்ணன் கத்திக் கொண்டிருக்கும்போது, கிட்டத்தட்ட கழுதை சாயலில் இருந்த ஒரு தொத்தல் குதிரையை வைத்துக் கொண்டு “குதிரை சவாரி! பத்து ரூபா!” என்று ஒருவன் அறை கூவிக் கொண்டே அருகில் வந்தான்.

“அப்பா! ப்ளீஸ்ப்பா! ஒரே ஒரு தடவை குதிரை மேல சவாரி பண்ணிட்டு வந்துடறேம்ப்பா!” நந்து கெஞ்ச, அவனுக்காக ரொம்ப பாவப்பட்டு கோவக்கார கணவனிடம் அனுவும் சேர்ந்து கெஞ்சினாள்.

“ஹ¨ம்!” என்று முறுக்கிக் கொண்டு கிருஷ்ணன் திரும்பிக் கொள்ள, அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு நந்து குதூகலமாக குதிரையில் ஏறினான். குதிரை கடற்கரையோரமாக சாதாரணமாகத்தான் நின்று கொண்டிருந்தது. திடீரென்று எதிரே கரடி மாதிரி ஒரு நாயை அழைத்துக் கொண்டு ஒருவர் வந்தார். எதிர்பாராது அவ்வளவு பெரிய நாயை தன் முன்னே கண்டதும் குதிரை மிரண்டு சட்டென்று முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு பின்வாங்கியது. இதை எதிர்பாராத குதிரைக்காரனும் நந்துவும் அப்படியே மல்லாக்க பின் பக்கம் சாய்ந்து, குதிரை பின்னால் நின்று கொண்டிருந்த கிருஷ்ணன் மேல் ‘லேண்ட்’ ஆக, அவர் ஒன்றுமே புரியாமல், சினிமாவில் சண்டைக் காட்சியில் ஹீரோவிடம் செம உதை வாங்கிய குண்டு வில்லன் விழுவதைப் போல ‘பப்பரப்பா’ என்று கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு கீழே மல்லாந்து விழுந்தார். ஈர மணலில் விழுந்ததால் யாருக்கும் அடி ஒன்றும் பெரிதாகப் படவில்லை. நந்துவும் குதிரைக்காரனும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்டனர். எழுந்திருக்கவே முடியாமல் கிடந்த கிருஷ்ணன் அதே ‘போஸிலேயே’ ‘புஸ§ புஸ§’ என்று மூச்சு இரைக்க, கோபத்தோடு அனுவை அடித்து விடுவது போலப் பார்த்தார். எல்லோருமாக சேர்ந்து கிருஷ்ணனைத் தூக்க முயன்றபோது திடீரென்று வந்த ஒரு பெரிய அலை கீழே விழுந்து கிடந்த கிருஷ்ணனைத் தொப்பலாகப் புரட்டிப் போட, அன்றையப் பொழுதுக்கு உச்சத்துக்குப் போன கோபத்தில் கிருஷ்ணன் மூர்ச்சையானார்.

காற்று வாங்கப் போன கடற்கரைப் பயணம் கழுதையை வாங்கிக்கொண்டு இனிதே முடிந்து விட்டது என்று புரிந்து போன அனு, கிருஷ்ணனை தூக்கிப் போட்டுக் கொண்டு போய் பத்திரமாக வீட்டில் சேர்க்க, ஒரு ஆட்டோ கிடைக்குமா என்று பார்க்க சாலைக்கு ஓடினாள்.

- லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2014 இல் பிரசுரமானது 

தொடர்புடைய சிறுகதைகள்
காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. ஒரே மாதிரி உடையலங்காரத்துடன் ஒவ்வொரு வளைவிலும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பாலகர்கள் பூஜையை ஆரம்பித்தனர். கரையிலிருந்து சற்று நேரம் ஆரத்தி ஏற்பாடுகளை ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சு கை கால்களெல்லாம் ஓய்ந்து போய் படுத்தாள். எப்போதடா பொழுது விடிந்து இந்த நீண்ட இரவு முடியும் என்று ஆயாஸமாக இருந்தது. நேற்று இரவு ஒன்றுமே விபரீதமாக நடக்காததைப் போல எப்பொழுதும் போல ஜகன் காலை எட்டு மணிக்குக் கண் முழித்து ...
மேலும் கதையை படிக்க...
இன்று ஞாயிற்றுக்கிழமை! விடுமுறை என்று பெயர் தான். ஆனால் இன்றும் ராபர்ட் வெளியே போய் விட்டான், யாரோ முக்கியமான கஸ்டமரை சந்திக்க வேண்டுமாம்! ராபர்ட் சர்ச்சுக்கு வந்து எத்தனை நாட்களாகிவிட்டன என்று நினைத்து வருத்தத்துடன் பெருமூச்செறிந்தவாறே டேவிட்டை அழைத்துக் கொண்டு ஞாயிறு பிரார்த்தனை ...
மேலும் கதையை படிக்க...
"அண்ணாமலை வந்திருக்கார். அரை மணி நேரமா காத்திண்டிருக்கார்." கணவரை வாசலிலேயே எதிர் கொண்டு கிசுகிசுப்பான குரலில் யமுனா அறிவித்தாள். 'எதுக்கு வந்திருக்கார்? இந்த மாச வாடகை கூட அக்கவுண்ட்ல போட்டாச்சே? என்ன விஷயமாக இருக்கும்?' கேள்விக்குறியை முகத்தில் தேக்கியபடியே சுப்பு உள்ளே நுழைந்தார். அவரைப் ...
மேலும் கதையை படிக்க...
உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் பதறியது வரதனுக்கு. நாலு பேர் எதிர்ல வச்சு எப்படி மட்டமா பேசிட்டாரு இந்த மொதலாளி, அதுவும் ஒரு சின்ன தப்புக்காக? வார்த்தீங்களா அது? நெருப்புத் துண்டங்களா இல்லே எடுத்து வீசினாரு? இன்னா சொன்னாரு? "ஸ்பானரு புடிக்கத் தெரியாத பயலுவளெல்லாம் எதுக்குடா பேண்ட்டை மாட்டிக்கினு ...
மேலும் கதையை படிக்க...
சின்னஞ்சிறு பெண் போலே…
போராட்டம்
தற்காலிக உன்னதங்கள்
காலம் செய்த கோலமடி…..
மனம் ஒரு குரங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)