Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கார் வாங்கப் போறேன்

 

“நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” – வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன்.

“அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே சோதனை ஓட்டம் போகலாம்னு படுத்தமாட்டீங்களே?” தர்மபத்தினி லாவண்யா.

“வாழ்த்துக்கள் சுந்தர்! எவ்ளோ காசு ஆகும்டா?” அப்பா கிருஷ்ணன்.

“கண்ணு! உனக்கு திருப்தியா இருக்கா? எல்லாரும் ‘தாமதம் ஆகுது’ன்னு திட்டறாங்கன்னு ஏதோ ஒண்ணு வாங்கணும்னு அவசரப்படாத” அம்மா அம்புஜம்.

“அப்பாடா! மொதல்ல என் நண்பர்கள் எல்லார் கிட்டயும் சொல்லணும்” வெளியில் ஓடினான் பையன் கேசவ்.

“ஹையா ஜாலி! ஒரு வழியா நம்ம வீட்டுக்கு கார் வரப்போகுது” துள்ளிக் குதித்தாள் பெண் காவ்யா.

ஒரு விஷயம் கவனிச்சீங்களா? ‘எந்த கார் மாடலை வாங்க முடிவு பண்ணியிருக்கே?’ அப்படின்னு யாருமே கேக்கல. நான் முடிவு பண்ணதே அவங்களுக்குப் போதும். அந்த அளவுக்கு அவங்க எல்லாரும் வெந்து வெங்காயம் ஆயிட்டாங்க.

எனக்குச் சின்ன வயசுல இருந்தே கார் என்றால் அவ்வளவு பிடிக்கும். எங்க அப்பா மின்துறையில் குமாஸ்தாவாக இருந்தார். அவர் கஷ்டப்பட்டு வாங்கிய பொருள் என்றால் அது வண்ணத் தொலைக்காட்சிதான். எனக்கு சைக்கிளுக்கு அடுத்து, பைக்கை விட நேரடியாக கார்தான் பிடிச்சது. எங்கள் பள்ளியில் எந்தப் பிள்ளைகள் காரில் வருவாங்களோ, எப்படியாவது அவங்களோட நட்பாக ஆகிவிடுவேன். அவங்ககூட ஓசியில கார் சவாரி போக அலைஞ்சேன்னு நெனைக்காதீங்க – எனக்கு சுயமரியாதை அதிகம். நான் அவங்களோட நண்பன் ஆக நெனச்சது ஏன்னா, அவங்ககிட்ட கார் பத்தி பேசிகிட்டே இருக்கலாம்னுதான். கார்ல போறப்ப அவங்க எப்படி உணருவாங்க? கார்ல அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சது என்ன? கார்ல என்னென்ன வசதிகள் இருக்கு? என்னென்ன வசதிகள் இருந்தா நல்லா இருக்கும்னு நெனக்கறாங்க? இப்படியெல்லாம் நெறைய தெரிஞ்சிக்கணும்னு கேள்வி கேட்டுகிட்டே இருப்பேன். ஆனா அந்த பசங்களுக்கு கார் பத்தி அவ்ளோ அறிவு இல்ல. கொஞ்சம் நாளுக்கு அப்புறம், அவங்களோட கார் பத்தி அவங்களவிட எனக்கு அதிகமா தெரிஞ்சது.

அப்பாவுக்கு தனக்கே கார் வாங்கற வசதி இல்லாதப்போ, எனக்கு எப்படி வாங்கிக் கொடுக்கமுடியும்? அதனால நான் பள்ளியில் படிக்கறப்பவே முடிவு பண்ண விஷயம் – நான் சம்பாதிச்சி கார் வாங்கற வரைக்கும் வேற வண்டி எதுவும் வாங்கமாட்டேன். அப்பா எனக்கு வாங்கிக் குடுத்த சைக்கிள்தான் நான் கடைசியா ஓட்டினது. அதுக்கு அப்புறம் பேருந்து, வாடகை வாகனம், இன்னும் மத்த வண்டிகள்ல பயணம் செஞ்சிருக்கனே ஒழிய நானா எதையும் ஓட்டினதில்ல.

கல்லூரி சேர்ந்ததும் கார் பத்தின என்னோட அபிப்பிராயம் மாறுச்சு. கார் வேணாம்னு இல்ல, எந்த மாதிரி கார் எந்தெந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வரும்/வராதுன்னு நெறைய கத்துக்கிட்டேன். அதுக்காக படிப்புல கோட்டை விட்டேன்னு நெனச்சீங்களா? ரொம்ப நல்லா படிச்சேன், அப்பதான நல்ல வேலை கெடச்சி நெறைய சம்பாதிச்சி, சமரசம் செய்யாம எனக்குப் புடிச்ச கார் வாங்கமுடியும்.

ஆங், சொல்ல மறந்துட்டனே? நான் படிச்சதே மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இன்ஜின் பத்தி இன்னும் அதிகமா தெரிஞ்சிக்கவே படிச்சேன். பள்ளியில் நானாக போயி கார் வெச்சிருந்தவங்க பசங்களோட நட்பை ஏற்படுத்திகிட்ட மாதிரி, கல்லூரியிலும் செய்வேன்னு நெனச்சா அது தப்பு, ‘நான் வளர்கிறேனே மம்மி?’!!!

கார் பத்தின என்னோட அறிவைப் பார்த்து கார் வெச்சிருக்கற பசங்க அவங்களா வந்து என்கிட்ட நட்பு வெச்சிக்க ஆசைப்படணும்னு முடிவு பண்ணேன். என் அறிவைப் பட்டை தீட்டிகிட்டேன். ஆரம்பத்துல கொஞ்சம் ஈகோ பார்த்து என்கிட்ட வராம இருந்து, பிறகு அவசரத்துக்கு என்கிட்ட வர ஆரம்பிச்சி, கடைசில என் அறிவை கண்கூடாகப் பார்த்து வியந்து சரணாகதி ஆனாங்க எல்லாரும்.

அதுக்காக கார் ரிப்பேர் பண்ற மெக்கானிக்னு என்னை நெனச்சிடாதீங்க. அது கௌரவம் இல்லாத வேலைன்னு சொல்லல. ஆனா என் கவனம், காரை எப்படி வடிவமைக்கறாங்க? எந்த கார்ல எந்த விஷயம் நல்லது? இப்படியான விஷயங்கள்ல இருந்தது.

கல்லூரி முதல் வருஷம் முடியறதுக்குள்ளயே நான் ‘அறிவிக்கப்படாத நிபுணன்’ ஆயிட்டேன், எல்லாருக்கும். கல்லூரியில் விரிவுரையாளர்கள், இன்னும் மத்த எல்லாருக்கும் என்னோட ‘கார் ஞானம்’ புரிஞ்சது. நான் கல்லூரியில் கடைசி வருடம் பண்ண ப்ராஜக்டே கார் சம்பந்தமாதான்.

கேம்பஸ் இன்டர்வியூல எனக்கு சுலபமா வேலை கெடைச்சது. நல்ல சம்பளம் கொடுத்தாங்க. வேலை கஷ்டமாவே இல்ல, என்னோட பொழுதுபோக்கு/விருப்பம்/வேலை எல்லாமே ஒண்ணுதான்.

என்னோட நண்பர்கள், உடன் வேலை செய்யறவங்க, குடும்பம் என எல்லாரும் ஒட்டுமொத்தமா ஆவலாக இருந்தாங்க – நான் என்ன கார் வாங்கப்போறேன்னு பார்க்க. கொஞ்சம் நெறைய சம்பாதிச்சதுக்கு அப்புறம்தான் கார் வாங்கணும்னு முடிவு பண்ணேன்.

அலுவலகத்தில் இரண்டு தடவை பதவி உயர்வு வாங்கினேன் சில வருஷங்கள்லயே. ஒரு பக்கம் அப்பாவும், அம்மாவும் எனக்கு கல்யாணம் செய்யலாம்ன்னு பொண்ணு தேட ஆரம்பிக்க, கார் வாங்கலாம்னு முடிவு பண்ணி என் தேடல் ஆரம்பிச்சேன்.

சந்தையில் இருக்கற எல்லா கார் மாடலையும் சோதனை ஓட்டம் செஞ்சு பார்த்து, அலசி ஆராய்ஞ்சிட்டேன்.

முதலில் என் மனைவி என்னைப் புரிஞ்சிக்காம “ஒரு கார் வாங்க ஏன் இவ்ளோ வருஷமா இழுத்தடிக்கறீங்க?” ன்னு கோவப்பட்டா. அப்பறம் போகப் போக புரிஞ்சிகிட்டு என்னை என் போக்குல விட்டுட்டா. அப்பா, அம்மா பத்தி கேக்கவே தேவையில்ல, என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க. என் பையனும், பொண்ணும் கொஞ்சம் விவரம் புரிய ஆரம்பிச்சதும் நச்சரிக்க ஆரம்பிச்சாங்க. சில வருஷங்கள் கழிச்சு, என் வழிக்கு வந்துட்டாங்க.

ஆல்டோல ஆரம்பிச்சி பி.எம்.டபிள்யூ/ஆடி/பென்ஸ் ன்னு எந்த கம்பெனியோட எந்த செக்மெண்ட்டையும் விட்டு வைக்கல, எல்லாம் ஓட்டிப் பார்த்தேன். ஆரம்பத்துல ஜாலியா என்னோட குடும்பமும் என் கூட சோதனை ஓட்டம் வந்தாங்க. ஆனா போகப் போக அவங்களுக்கு போர் அடிச்சது, சில வருஷங்களா சோதனை ஓட்டம் மட்டுமே பண்ணிட்டு இருந்தா போர் அடிக்காதா? அப்பறம் நான் மட்டுமே ஓட்டிப் பார்த்தேன். சோதனை ஓட்டம் பண்றது மட்டும் இல்லாம, இணையத்தில் நெறைய படிச்சேன். ஏற்கனவே கார் வேச்சிருக்கறவங்ககிட்ட பேசினேன். அவங்க எல்லாம் என்கிட்டயிருந்து நெறைய கத்துக்கிட்டாங்க.

என்னைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமா கார் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு எல்லாம் தெரிய வந்தது. என்னை பகுதி நேரத்தில் கார் பத்தின விமர்சனங்கள் எழுத கூப்பிட்டாங்க, நேர்மையா எழுதுவேன்.

புதுசா கார் வாங்கற நெறைய பேர் சந்தேகங்கள் கேட்டு கார் சம்பந்தமான இணைய தளங்கள் இல்லன்னா பத்திரிக்கைக்கு எழுதுவாங்க – நான் அவங்களுக்கு பதில் சொல்வேன். என் மனைவி கிண்டலா கேப்பா “ஹூம், உங்களால மத்தவங்க சீக்கிரமா முடிவு பண்ணி கார் வாங்கிடறாங்க, நீங்க எப்பதான் வாங்கப் போறீங்களோ?”

ஒவ்வொரு வருஷமும் ஏதோ ஒரு கார் மாடல் முடிவு பண்ணி வாங்கலாம்னு நெனைப்பேன், ஆனா இன்னும் ஒரு மாசம் காத்திருந்தா சில மாடல்கள் புதுசா வெளியாகும், அதையும் ஓட்டிப் பாத்துட்டு முடிவு பண்ணலாம்னு தள்ளிப் போடுவேன். இப்படியே நான் கார் வாங்கறத தள்ளிப் போட்டுட்டே இருந்தேன்.

ஒரு நாள் ராத்திரி மொட்டை மாடியில் குத்த வெச்சு ஒக்கார்ந்து நிலாவைப் பார்த்துகிட்டே குண்டக்க மண்டக்க யோசிக்கும் போது தோணிச்சி. ‘கல்யாணத்துக்கு பொண்ணு தேட ஆரம்பிக்கும்போது கார் தேடல் ஆரம்பிச்சேன். இப்ப என் பையனும் பொண்ணும் பள்ளிக்கூடம் போயிட்டு இருக்காங்க, இன்னமும் தாமதிச்சா அப்புறம் நேராக என் பையனே சம்பாதிச்சு கார் வாங்கிடுவான். இதுக்கும் மேல தாமதிக்க வேணாம்’ ன்னு முடிவா முடிவு பண்ணேன்.

ஏற்கனவே எனக்கு எல்லா கார் மாடல் பத்தின விவரங்கள் அக்கு வேறா ஆணி வேறா தெரியும். இன்னும் விலை ஜாஸ்த்தியான மாடலே வாங்கமுடியும் – சொல்ல மறந்துட்டனே? கார் தேடல் ஆரம்பிச்சதுல இருந்து இப்ப வரைக்கும் இன்னும் மூணு தடவை பதவி உயர்வு வாங்கிட்டேன்.

ஒரு வாரம் அலுவலகத்திற்கு விடுப்பு போட்டுட்டு, வீட்ல ஒக்கார்ந்து ரூம் போட்டு நெறைய யோசிச்சு “முடிவு” பண்ணிட்டேன். அப்பதான் வீட்ல எல்லார் கிட்டயும் என் முடிவச் சொன்னேன்.

அப்பறம் மளமளன்னு வேலை நடந்தது – வங்கிக் கடன் இல்லாமலே மொத்தமா காசு குடுத்து வாங்கறேன். எல்லா வங்கிகளுக்கும் இதனால வருத்தம். அலுவலகத்தில் மேலாளர் என்கிட்ட “எவ்ளோ நாள் வேணா விடுப்பு எடுத்துக்கோ, கார் வாங்கினதுக்கு அப்புறம் நீ வந்தா போதும்” ன்னுட்டார். நான் பகுதி நேரத்தில் வேலை பண்ணின கார் சம்பந்தப்பட்ட இணைய/பத்திரிக்கைக்காரங்க எல்லாரும் நான் கார் டெலிவரி எடுக்கறத தொலைக்காட்சியிலயும் யூடியூப், மத்த இணையங்கள்லயும் நேரடி நிகழ்ச்சியாகவே ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணாங்க.

என்னோட நண்பர்கள், கூட வேலை பண்றவங்க, சொந்தக்காரங்க எல்லாரும் டெலிவரி அன்னைக்கு என் கூட வர திட்டம் பண்ணாங்க. இப்படி ஊரே கூடற திருவிழா மாதிரி ஆயிடுச்சி நான் கார் வாங்கற நிகழ்ச்சி.

முகூர்த்த நாள் வந்தது. தெரு பூராவுமே ஜனங்க கூடிட்டாங்க. நிறைய காவலர்கள் வந்து கட்டுப்பாடு பண்ண வேண்டி இருந்தது. போக்குவரத்து மந்திரியே டில்லியில இருந்து வந்து என்கிட்ட கார் சாவியை ஒப்படைச்சாரு. இந்தியா முழுக்க எல்லா தொலைக்காட்சி, பண்பலை, முகநூல், கீச்சகம் ன்னு எல்லா சமூக வலைத் தளங்களிலும் அன்னைக்கி என்னோட கார் பத்திதான் ஒளிபரப்பினாங்க.

டெலிவரி எடுத்து வீடு வந்து சேர்றதுக்குள்ள அந்து அவுலாயிட்டோம். அன்னைக்கி ராத்திரி நான் மட்டும் இல்ல, எங்க வீட்ல எல்லாரும் நிம்மதியா தூங்கினாங்க.

அப்படி என்ன அப்பாடக்கர் கார் வாங்கினேன்னு கேக்கறீங்களா? எல்லா கார் கம்பெனிகளோட எல்லா மாடல் கார்கள்லயும் இருக்கற நல்ல விஷயங்கள் எல்லாத்தையும் சேத்து ஒரு பிரத்தியேக மாடல் கார் எனக்காகவே வடிவமைச்சேன் – எல்லா கார் கம்பெனி ஆளுங்களோடவும் சேர்ந்து. இந்தியால (ஏன், உலகத்துலேயே கூட இருக்கலாம்) முதல் முறையா இப்படி ஒரு காரை எந்த மனுஷனும் வாங்கியிருக்கமாட்டான்.

என்ன ஒண்ணு – என் காரை சர்வீஸ் பண்ணனும்னா எல்லா கம்பெனி ஆளுங்களும் ஒண்ணா வந்து செஞ்சாத்தான் உண்டு.

என் கார் மாடலோட பேர் என்னன்னு கேக்கறீங்களா? எல்லா மாடல்கள் பேரையும் சேர்த்து கதம்பமா ஒரு பேர் வச்சிருக்கேன் – அந்தப் பேரை கின்னஸ் புக்ல போடறாங்களாம், இவ்ளோ பெரிசா வித்தியாசமா பேர் இருக்கற கார் உலகத்துலேயே இதுதானாம்.

இவ்ளோ கேட்டதுக்கு அப்பறம் உங்களுக்கு என் காரைப் பார்க்கணும் போல இருக்குமே? என் வீட்டுக்கு வாங்களேன், ஜாலியா ஒரு சோதனை ஓட்டம் போகலாம் !!! 

தொடர்புடைய சிறுகதைகள்
"என்ன அருண்! இன்னைக்கு யாரைப் பார்த்து கதை சொல்லப் போற?" "தயாரிப்பாளர் ஏ. கே. தெரியுமா?" "தெரியுமா-வா? அவரைத் தெரியாம தமிழ்நாட்ல யாராவது இருப்பாங்களா? விஜய்காந்த் பாணியில புள்ளி விவரம் சொல்றேன், சரியான்னு சொல்லு. 125 படங்கள் தயாரிச்சிருக்கார், அதுல 50 படங்கள் 200 ...
மேலும் கதையை படிக்க...
"ஹாய்டா! உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கியா?" "ஹாய்டி! உன்னைப் பார்க்காமல் சூப்பரா இருக்கேன், நீ எப்படி இருக்கே?" ஏதோ பலநாள் கழித்து சந்திக்கும் நண்பன்/நண்பியின் ஜாலியான உரையாடல் இது என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் கணவன், ...
மேலும் கதையை படிக்க...
"இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர், மக்கள் போற்றும் மகேசன், எதிரிகள் அஞ்சும் எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன் அவர்களுக்கு நாள்பட தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தீராத ...
மேலும் கதையை படிக்க...
"டேய் பாரதி! நேத்து உனக்கு எவ்வளவு தடவை ஃபோன் பண்ணேன், நீ எடுக்கவே இல்லை. திரும்பவும் நீ எனக்கு கால் பண்ணவும் இல்லை. அடிக்கடி நம்பரை மாத்தினா எப்படிடா உன்னைக் கூப்புடுறது?" புலம்பினான் ஜெகன். இதுதான் பாரதியோட பிரச்சனை. தன்னிடம் ஏற்கனவே மொபைல் ...
மேலும் கதையை படிக்க...
காட்சி 1: "என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!" "இல்லைடி. ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்" "என்னடி ஆச்சு? என்கிட்ட சொல்லவேயில்ல. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?" "சின்னதா ஆரம்பிச்சி, பூதாகரமா ஆயிடுச்சி" "யார் மேல தப்பு?" "ரகுதான் எல்லாத்துக்கும் காரணம். ...
மேலும் கதையை படிக்க...
எண்ணம்போல் படம்
சேர்ந்தும் சேராமலும்
எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்
மறந்து போச்சு
யார் மேல தப்பு?

கார் வாங்கப் போறேன் மீது 2 கருத்துக்கள்

  1. Pooja says:

    Kadisi varaikum car pera solalaya bro. .comedy kaga ethavathu jolly ah name soli irukalam .comedy story nu solitu konjam serious ah ve poiduchu..

    • சத்யஸ்ரீ says:

      பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. உங்கள் கருத்தை ஏற்கிறேன், திருத்திக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)