Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

‘களி’காலம்

 

களிதான் நடராஜமூர்த்தியை களிப்படைய செய்யும் படையல் என்பதை யார் சொன்னார்களென்பது சிதம்பர ரகசியம். திருவாதிரை திருநாளன்று இந்த களிக்காக ஆனந்த நடனம் புரியும் நடராஜ மூர்த்தி, என் மனைவி வெந்தும் வேகாததுமான ஒரு வஸ்துவை வெங்கலப்பானை நிறைய பண்ணி வைத்து களி என்று, நைவேத்யம் செய்தபோது ருத்ரமூர்த்தியாய் தாண்டவத்தை மாற்றிவிடுவாரோ என்ற கிலி எனக்கு உண்டாகிவிட்டது.

நல்ல வேளையாக இந்த திருவாதிரை நோம்பில் சிவகாமிகளுக்கே முன்னுரிமையானதால், என் மனைவி அகிலாவும் பெண் பீரிதுவும் வாழையிலையில் வைத்துக் கொண்டு களி எனும் பண்டத்தை வழித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

”ரொம்ப நல்லா வந்திருக்கில்லே” என்று அகிலா எப்போதும் போல தன் புத்ரியிடம் கேட்டு, வலுகட்டாயமான ஒரு ஒப்புதல் கம் பாராட்டை பெற முனைந்தபோது, என் பெண் வாயில் போட்ட மிளகளவு களியை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாம் மிரண்டபடி என்னை ஒரு பார்வையால் எச்சரித்தாள்.

அப்போதே எனக்கு களியின் லட்சணம் எப்படி இருக்குமென்று புரிந்துவிட்டிருந்தது. இருந்தாலும் இன்றைய தினம் இந்த களியால் இம்சை உண்டு என்ற ராசிபலன் எந்த ஜோஸியரும் சொல்லாமலேயே எனக்கு தெரிந்துவிட்டது.

அன்றைய சமையல் மெனுவே அந்த அதிகாலையில் செய்யப்பட்ட களியும் ஏழுதான் கூட்டும் என்றாகிவிட்டதில், வயிற்றை நிரப்ப களியல்லால் வேறு கதியில்லை என்றாகிவிட்டது.

களியின் ருசி என்பது கலியாணமானதிலிருந்து எனக்கு மறந்துபோன உணர்வானது. கடந்த முப்பது வருட காலமாக அகிலா தயாரிக்கும் களியாகப்பட்டதில் நான் காணும் குறைகளுக்காக அவள் அரிசி, வெல்லாம், என அப்பாவி மளிகைகள் மேல் பழி போடுவது வழக்கமாகிவிட்டது.

இப்படி ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு சாக்கு சொல்லியே ஓட்டிவிட்டதால், இந்த முறை சற்று மாறுதலாக ”ஆல் இண்டியா லெவல்லே லாரி ஸ்ட்ரைக்காமே… நேந்து வந்த காஸ் சிலிண்டர்லே ஏதாவது கலப்படம் பண்ணிட்டானோ என்னவோ,” அதனாலே கொஞ்சம் வேக்காடு கம்மியா போச்சு” என்று அபாண்டமாக பழியை போட்டு இவள் தப்பித்தாலும், இந்த பண்ணதை சாப்பிடுவதிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை.

களிக்கு சைட்டிஷ்ஷாக ஏழுதான் கூட்டை கூட்டணி சேர்த்துவிட்ட மகானுபாவருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லியபடி, கூட்டின் ஒத்தாசையோடு ஒரு பிடி களியை உள்ளே தள்ளி என்று உண்டியை பூர்த்தி செய்துக் கொண்டேன். இந்த ஒரு பிடியால் மேற்படி களியின் அளவு சற்றும் குறையாத நிலை.

ஒரு உருண்டை களி உண்ட களைப்பிலேயே பகலில் தூங்கிக் கொண்டிருந்தவனை அகிலா உலுக்கி எழுப்பினாள்.
”இதோ பாருங்கோ… வர புதன்கிழமை பொங்கல் நீங்க எப்போ உங்க அக்காக்களுக்கு பொங்கல் சீர் தர போகப்போறீங்க இன்னிக்கே போய் அந்த வேலையை முடிச்சுட்டு வாங்க” என்றாள்.
ஏதேது நாத்தனார்கள். சமாசாரத்தில் இவளுக்கு இத்தனை கரிசனம் பொங்குகிறதென்று லேசாக நான் சந்தேகித்தது சரிதான் என்று புரிந்தது. உடனே எழுந்து புறப்பட தயாரான என்னிடம் இரட்டை சம்படங்களை இவள் கொடுத்தாள்.

”வெறும் கையோட அவா வீட்டுக்கு போகாதீங்க. இதிலே களி வைச்சிருக்கேன்” என்று அவள் கொடுத்த சம்படங்களின் எடை தலா ரெண்டு கிலோ தேறும். அப்போதே களி டிஸ்போஸல் ஆரம்பித்தாகிவிட்டதில் எனக்கு லேசான மகிழ்ச்சியே. அந்த மகிழ்ச்சி என் அக்காக்கள் வீட்டிற்கு போனபோது காணாமல் போனது.

”உன் தம்பி கார்த்திக்கு நீ பண்ணின களியை கொடேன் டேஸ்ட் பாக்கட்டும்” என்று இரு அத்திம்பேர்களும் என்மேல் காட்டிய அன்பில், அவர்கள் வீட்டிலும் இதே டிஸ்போஸல் பிராப்ளம் என்று தெளிவாயிற்று.

எப்போதும் போண்டா, பஜ்ஜி என்று போட்டுக் கொடுக்கும் தமக்கைகள் அன்று பிளேட்டில் கொண்டு வைத்த களி என்னை பார்த்து கேலி செய்தது.
”இந்தடா நான் பண்ணின களியை அகிலாவும் பிரீதுவுக்கும் கொண்டு கொடு” என்று அக்காக்கள் இருவரும் நான் கொண்டுபோன சம்படத்திலேயே அதைவிட அதிக அளவை அடைத்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் அகிலா புலம்ப ஆரம்பித்தாள்.

”இந்த வேலைக்காரி ருக்குமணிக்கு ஆனாலும் திமிரு… கார்த்தாலே சுடசுட சாப்பிடட்டுமேன்று அவகிட்டே அத்தனை களியை கொடுத்தனுப்பினேன்… மதியானம் மூணு மணிக்கு வந்து ‘இதோ பாருமா… இந்த மாதிரி பதார்த்தத்தை நீ கொடுக்கலேன்னு யார் அழுதாங்க… எங்கு வூட்டுக்காரர் இதை ஒரு வாய் சாப்பிட்டு பேஜாராய் பூட்டாரு இதோ பாருமே இதை துன்றதுக்கு பதிலா நான் திரும்பவும் திருடிட்டு ஜெயிலுக்கு போய் அவன் போடற களியை துன்னலாம்’னு கோயிச்சிருக்கிறாரு’னு சொல்லி அதை அப்படியே திருப்பி கொடுத்துட்டு போயிட்டா கடங்காரி” என்றாள்.

ருக்மணி எத்தனை கொடுத்துவைத்தவளென்று பொறாமைபட்டேன்.
ருக்மணி திருப்பிக் கொடுத்ததை ஒரு பாலிதின் பையில் போட்டு குப்பையாக வெளியில் வைத்தாகிவிட்டது. ஆனால் எப்போதும் போல் குப்பை கலெக்ஷனுக்காக சாயங்காலம் வரும் முனிசிபாலிடி சிப்பந்தி அதை மட்டும் சீண்டாமல் அப்படியே விட்டுவிட்டு போயிருந்தான்.

எனக்கு கோபமான கோபம். உடனே எங்கள் குடியிருப்பு அஸோசியேஷன் செகரடரியை தொடர்பு கொண்டு இது விஷயமாக புகார் சொன்னேன். செகரடரி உடனே பதிலோடு தயாராய் இருந்தார்.

”ஹலோ ஸார்! நானே உங்களுக்கு போன் செஞ்சி இதைப் பத்தி கேட்கலாம்னு இருந்தேன். உங்க வீட்டுக்கு முன்னாலே இருந்த குப்பையை மக்கும் குப்பையா, மக்காத குப்பையான்னு முனிசிபாலிடிகாரனாலே கிலாசிஃபை பண்ணமுடியலேன்னு கம்ளையண்ட் பண்ணினான்… அதனாலேதான் எடுக்கலையாம்… கொஞ்சம் கிளாரிஃபை பண்ணினேங்கன்னா எடுக்கச் சொல்லலாம்” என்றார். கொஞ்சம் விட்டால் ஏதாவதொரு லேபரடரியின் சான்றிதழ் கேட்பார் போலிருந்தது.

ஆனால் வீட்டில் கேட்பாரற்று குவிந்திருந்த களியால் என் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. போதிய தைரியத்தை வரவழித்துக் கொண்டவனாய் அகிலாவிடம் ஒரு அதட்டல் சாயலோடு கேட்டேன்.

”நத் தைர்யத்திலே இத்தனை களியை கிளறினே” என்றேன். அகிலாவிடம் எந்த கிளர்ச்சியும் காணப்படவில்லை.

”எல்லாம் யுவன் சங்கர் ராஜா கொடுத்த தைரியம்தான்” என்றாள் நிதானமாக.

”எனதிது சம்பந்தா சம்பந்தமில்லாமல்” என்றேன்.

”அவர் பழைய பாட்டையெல்லாம் ரீமிக்ஸ் பண்ணி போடறமாதிரி,… நானும் இந்த களியை அப்படியே ஃபிரிட்ஜில் வைச்சுடப்போறேன்… இன்னும் நாலு நாள்லே பொங்கல் வந்துடரது. வீணா திரும்பவும் அரிசி வெல்லம் நெய்யெல்லாம் கொட்டி பொங்கல் வைப்பாளா என்ன? இந்த களியை அப்படியே மேக்கப் பண்ணி ரீமிக்ஸ் பண்ணிட வேண்டியதுதான்” என்றாள் அலட்சியமாக.

கலியும் களியும் முத்தியோய்விட்டதை எண்ணி நான் மூர்ச்சையானேன்!

- பெப்ரவரி 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
வாசகர் தர்மம்!
அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில் புத்தகமாக, என் சிறுகதைகள் வெளிவந்தால், அதை விட பெருமையில்லை. இவர்களின் அங்கீகாரம் அபூர்வமென்பதால், எக்காரணத்தைக் கொண்டும் இந்த வாய்ப்பை நழுவ ...
மேலும் கதையை படிக்க...
''வெளியே போகும்போது மறக்காம 'செல்'லை வீட்டிலேயே வெச்சுட்டு போங்க'' என்று சொல்லும் அளவிற்கு நான் தொலைத்த செல்ஃபோன்களின் எண்ணிக்கை அளவுக்கு மிஞ்சி போய்விட்டது. நோக்கியா, சாம்சங், எல்.ஜி., சோனி எரிக்ஸன், ரிலையன்ஸ் என்று பாரபட்சமில்லாமல் அத்தனை வகையாறா கம்பெனிகளின் செல் கருவியையும் தலா ...
மேலும் கதையை படிக்க...
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை, இன்றோடு கைகழுவிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று, அவன் மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. அதற்காகத் தான் பிச்சுமணி ஐயருக்காக, சரவணன் காக்க வேண்டியதாகி விட்டது. அந்த கிழவர் இன்று எப்படியும் வந்தே ...
மேலும் கதையை படிக்க...
நுனி விரலைக் கடித்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தேன். நகச்சுவைதான் தெரிந்ததேயன்றி நகைச்சுவையாக எந்த ஐடியாவும் வரமறுத்தது. கோடை காலப் புழல் ஏரியாய் என் மூளையின் ஹாஸ் 'ஏரியா'வில் அப்படி ஒரு வரட்சி. 'இன்னும் ஒரு வாரத்தில் கொடு' என்று என் நண்பன் ...
மேலும் கதையை படிக்க...
உன்னைத்தான்.. எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்றேன்.. பேசாம இருந்தா எப்படி ஹும் அப்படின்னா உனக்கு சந்தோஷம் இல்லையா ? என்ன பெரிய சந்தோஷம் வேண்டியிருக்கு.. சம்பாதிச்ச காசையெல்லாம் இப்படியே அழிக்கப் போறீங்க.. கவலைப்படாதே.. தனியா இல்லே கூட்டணிதான். கூட்டணியா ? யார் யாரோட ? 'சே.ப.க' வோட ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
வாசகர் தர்மம்!
‘செல்’லுமிடமெல்லாம் தொலைப்பு
அர்ச்சகம்
டேக் இட் ஹி… ஹி…!
ஒரு எம்.எல்.ஏ டிக்கெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)