கல்யாணத்துக்கு கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 8,538 
 

கல்யாணத்துக்கு, பலவருஷங்களாய் பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வயசு ஏறிக்கொண்டே சென்றது.

வயசு ஏறுவதற்கு மட்டும் ஏணியோ அல்லது சின்னதா ஒரு ஸ்டூல் கூட தேவையில்லை. தானாகவே ஏறிவிடும், விலைவாசி போலவே.

அவனோட ஜாதகத்தில், சந்தோஷம் ஒன்னை தவிர எல்லா தோஷமும் இருந்தது.செவ்வாய் தோஷம், புதன் தோஷம் என்று வாரத்தில் ஏழு நாட்களுமே தோஷம்தான் அவனுக்கு.

இதெல்லாம்கூட பரவாயில்லை. தோஷங்களை கழிக்க பரிகாரம் செஞ்சிக்கலாம்.ஆனா..உள்ளூர் தோஷம்னு ஒன்னு இருக்கு .அதுதான் எந்த பரிகாரத்துக்கும் குறையாத தோஷம்.

அந்த ஓட்டலுக்கு போயி, “ரெண்டு கொத்து பரோட்டா பார்சல்”னு சொன்னால், அந்த பரோட்டா மாஸ்டர் இப்படி சொல்வான்…அபசகுணமாக!!

“கல்யாணம்..லேட்டாகும் பரவாயில்லியா?”

அவன் “கொத்து பரோட்டா லேட்டாகும் பரவாயில்லியா?”ன்னு கேட்டிருக்கணும்.

ஆனா….கல்யாணம் ஆகாததை சொல்லி, குத்தி காட்றமாதிரியே சொல்வானுங்க பாருங்க.அப்பதான் அவனுக்கு எரிச்சல் ஜாஸ்தியாகும். இந்த மாதிரி லோக்கல் தோஷத்தை தான் அவனால ஒன்னும் செய்ய முடியவில்லை.இப்படி ஆளாளுக்கு கலாய்க்கிறதை கேட்டு கேட்டு, அதுவே அவனுக்கே ‘பழக்கதோஷமாகிவிட, அப்படியே விட்டு விட்டான்.

கல்யாணம் சீக்கிரமா கூடி வரணும்னு குலதெய்வத்துக்கு வேண்டிக்கிட்டு குளத்திலெல்லாம் கூட குளிச்சிருக்கான்,
தண்ணிப்பஞ்சம் வந்தப்போவே.

கடவுளுக்கு கண் இல்லை போல…கருணை காட்டவேயில்லை அவனுக்கு.

கல்யாணத்துக்கு கருணை காட்டும் ஒரே நபர், காய்கறி விற்கும் கண்ணப்பன் தான்.

அவர்தான், தன் கடையில் நீண்ட நாட்களாய் விற்காமலிருந்து வீணாய்ப்போன ‘கருணை’யைகாட்டி இவன் தலையில் கட்ட நினைப்பார்.

ஒரு வருஷத்துக்கு குறைஞ்சது ஒரு டசன் பெண்ணாவது பார்த்துவிடுவான்.ஆவரேஜ் போட்டு பார்த்தா மாசத்துக்கு ஒரு பொண்ணு.

ஒரு சில வருஷம் ஆவரேஜ்…டெசிமல்ல வரும்..0.9. இப்படி முழு எண்ணாய் வராததால் , அவனுக்கு சிரமமாக இருந்தது, கணக்கை நினைவில் வைத்துக்கொள்ள.அதனாலேயே..
அவன் ஆவரேஜ் 1 க்கும் குறையாமல் ‘மெயிண்டன்’ செய்வதில் குறியாய் இருந்தான்.

இந்தியன் ‘மேட்ரி மோனியலி’லிருந்து ஆப்பிரிக்கா ‘மேட்ரி மோனியல்’ வரைக்கும் இவன் ஜாதகம் ‘டிஸ்ட்ரிபியூட்’ ஆகி இருந்தது. ஆனால், ஆப்பிரிக்காவிலிருந்து கூட ஒரு கருப்பான ‘அனுஷ்’காக்கா’ கிடைக்கவில்லை.
உலகம் சுற்றும் ஜாதகன்.

இப்படியாக உலகம் சுற்றி வந்த ஜாதகக்காரனுக்கு போன மாதம்தான்,ஒரு பொண்ணு சிக்குச்சி. ஜாதகத்தில் ஒன்பது பொருத்தம், ‘ஜோடி நம்பர் ஒன்’ என்றது.

“நம்ம கல்யாணத்துக்கு கல்யாணமாம் டோய்”

என ஊர் முழுக்க கல்யாணத்தின் கல்யாணத்தை பத்திதான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கல்யாணம் ஒரு’ பப்ளிக் ஃபிகர்’.

ஆமாம். அவன் ரேஷன் கடையில் வேலை பார்க்கிறான். அப்போ பப்ளிக் ஃபிகர்தானே?

இந்த ஃபிகருக்கு வேலையே ‘ சுகர்’ எடை போட்டு மக்களுக்கு கொடுக்கறதுதான்.

ஆனா, மற்ற ரேஷன் கடைக்காரங்க மாதிரி இவன் இல்லை.

மற்றவங்க எல்லாம்..டாக்டருக்கு இணையா, சுகரை குறைச்சி விட்றுவாங்க..உடம்பில் அல்ல எடையில்.

இவன் எடைபோடுவதில் சுத்த தங்கம்.

“என்னோட பத்து வருஷ ரேஷன் கடை சர்வீஸ்ல , சர்க்கரை, அரிசியை மட்டுமில்லை.ஆட்களைக்கூட பார்த்ததுமே எடை போட்டுடுவேன் நான்” என்று அடிக்கடி தன்னைப்பற்றின புகழை பாடிக்கொண்டிருப்பான்.

ஆனால் அது சும்மா புரூடா என்பது, மாதா மாதம், அரிசியையும், சர்க்கரையும் தான் எடை போட்டு கொடுத்த ஒருத்தர்தான் அவனது வருங்கால மாமனார் என்று எடை போடாத்தெரியாமல் விட்டுவிட்டபோது தெரிய வந்தது.

ஆமாம். ரேஷனில் சர்க்கரை வாங்க வரும் நுகர்வோர் ஒருவர், கல்யாணத்தின் கேரக்டரை ரொம்ப நாளா எடைபோட்டு, தனது மகளை அவனுக்கு கட்டிக்கொடுக்க விருப்பப்பட்டு, ஜாதகம் பார்த்தார்.

என்ன ஆச்சர்யம்? ஜாதகம் பொருத்தமாகிப்போனது.உடனே… கல்யாணத்துக்கு, கல்யாண தேதியை நிச்சயித்தார்கள்.

“ரேஷனுக்கு வந்த என் மாமனாரே…இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” என்று பாடத்தோணிற்று அவனுக்கு.

கல்யாணம் நடக்கப்போவதை நினைத்து, சந்தோஷத்தில் கொஞ்சம் எடை போட்டுவிட்டான் கல்யாணம்.

மேளக்காரருக்கும், சமையல் காரருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது.மண்டபத்தையும் ‘புக்’ செய்தான்.

மண்டபம் ‘புக்’ செய்வதில் மட்டும், அவனுக்கு இஷ்டமில்லாமலேயே இருந்தது.அந்த மண்டபத்தில் ‘புக்’ செய்யறது, பல குழப்பத்தை எற்படுத்தப்போகிறது என்பது மட்டும் அவனுக்கு தோணிற்று.

வேறு மண்டபம், அந்த தேதியில் கிடைக்கவில்லை என்பதால் ,வேறு வழி இன்றி, அரை மனசோடு ‘புக்’ செய்தான்.

பத்திரிக்கை எல்லாம் அச்சடித்தாகி விட்டது.அவன், நிறைய பேருக்கு அவங்க வீட்டுக்கு சென்று பத்திரிக்கை கொடுக்கவில்லை.

ஊரேதான் இவன் ரேஷன் கடைக்கு வருமே!! அப்படி வந்த போது, அவங்களோட பையில சக்கரையையும், கையில பத்திரிக்கையையும் கொடுத்து விட்டான்.

“பத்திரிக்கை வைக்க ஆன நேரத்தை எப்படி மிச்சபடுத்திட்டேன் பாருங்க “என மார்தட்டி பெருமையாய் சொல்லியபோது, கல்யாணத்தின்மேல் பட்ட திருஷ்டிக்கண்கள் ஏராளம்.

“பொண்டாட்டி வந்த பிறகுதான் அவள்கிட்ட சொல்லி சுத்திப்போட சொல்லணும்” என நினைத்தான்.

பொண்டாட்டி தாசனாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் அவனிடம் தென்பட ஆரம்பித்தன அப்போதே.

“கல்யாணம் ..லேட்டாகும்” வசனத்துக்கு சொந்தக்காரரான, அந்த பரோட்டா மாஸ்டருக்கு மட்டும், நேரிலேயே போய் பத்திரிக்கையை கொடுத்தான்.

“இனி ,பரோட்டா பார்சல் வாங்க வரும்போது ‘கல்யாணம்.. லேட்டாகும் பரவா இல்லியா?’ ன்னு கேக்க மாட்டியே?” என்று எதிர் கேள்வி கேட்டு, அவரை பழி வாங்கிவிட்டதாய் எண்ணி மகிழ்ந்தான்.

முழு பரோட்டா போல இருந்த ‘பரோட்டா மாஸ்டர்’ , அவன் கேட்ட கேள்வியில் கொத்துபரோட்டா போல ‘தூள் தூளா’கிப்போனதை கல்யாணத்தினால் கவனிக்க முடிந்தது.

பத்திரிக்கையை வாங்கி படித்தவர்கள், சற்றே குழம்பிப்போய் கேட்டார்கள். மண்டபம் ‘புக்’செய்யும்போதே, இப்படி நடக்கும் என, அவன் எதிர் பார்த்தது, நடக்க ஆரம்பித்துவிட்டது.

“ஏம்பா..கல்யாணம்?”

“ம்..சொல்லுங்க!”

“கல்யாணம் எங்க?”

“இதோ உங்க முன்னாடி நிக்கறனே?”

“அய்யோ அதை கேக்கல..உன்னோட கல்யாணம் எங்க நடக்கப்போவுது?

“கல்யாணம் மண்டபத்துல”

“அது தெரியும்.எந்த மண்டபத்தில?

“போட்றுக்கே..பத்திரிக்கையில் ‘கல்யாணம் மண்டபத்துல’ ன்னு.

“ஓ….மண்டபத்தோட பேரும் கல்யாணமா?”

“இவங்களுக்கு வேற பேரே கிடைக்கல போலிருக்கு.கல்யாண மண்டபத்துக்கு, போயும் போயும் ‘கல்யாணம் மண்டபம்’ னா பேர் வைக்கணும்?” மனசுக்குள் அடக்கி வச்சிருந்தது கோபமாய் வெளியில் வந்தது.

மண்டபத்து பேரும் கல்யாணம். மாப்ள பேரும் கல்யாணம். இதுதான் எல்லா குழப்பத்துக்கும் காரணம்.

“கல்யாணத்துக்கு,’ கல்யாணம் மண்டபத்தில்’ கல்யாணம்” என்று சொல்லி விவரித்தான்..சந்தேகம் கேட்டவர்களிடம்.

“விசு மாதிரி ஆக்கிப்புட்டியேப்பா!” என குழும்பிப்போனார்கள், பத்திரிக்கையை பார்த்தவர்கள்.

ஒவ்வொருத்தருக்கா விளக்கம் சொல்றதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு, ‘கல்யாண குரூப்’என்ற பெயரில் ஒரு ‘வாட்சாப் குரூப்பே’ ஆரம்பித்து விட்டான்.கேள்விகளுக்கு பதில் சொல்ல.

‘வாட்சாப் குரூப்’ ஆரம்பித்த பிறகும் ஒருத்தர் போன் செய்தார்.

“ஹலோ…கல்யாணம்….இந்த…”

அவர் கேள்வியை, முழுதாக கேட்க விடவில்லை, கல்யாணம்.

“அதான் வாட்சாப் குரூப் ஆரம்பிச்சி ‘டவுட்’ எல்லாம் க்ளியர் செஞ்சிட்டனே..இன்னும் என்ன சந்தேகம்?”

“வாட்சேப்பா? வாட்சேப்னா என்னா அப்டிங்கிறதுதான் என் சந்தேகமே..அதுக்குதான்..உனக்கு ஃபோன் செஞ்சேன்..கல்யாணம்!!”

“ஓ!? அவனா நீ!?”

என பெருமூச்சி விட்டபடி,”கல்யாணத்துக்கு கல்யாணத்துல கல்யாணம்” என்பதோடு, வாட்சாப் என்றால் என்ன என்றும் கூடுதலாய் விளக்கம் சொன்னான்.

“பத்திரிக்கை நேரில் போயி வைக்காம சேகரிச்ச நேரத்தை, இப்படி சந்தேகத்துக்கு பதில் சொல்லியே வீணாப்போவுதே!” என வருத்தப்பட்டு போனான்.

“எப்படியோ கல்யாணம் நல்லபடியா நடந்தா சரி” என நினைத்து தனக்குத்தானே ஆறுதல் படுத்திக்கொண்டான்.

கல்யாண தேதியும் நெருங்கிக்கொண்டே வந்தது.

அன்றைய தூக்கத்தில், தனது கல்யாணம் நடக்கும் காட்சி, அவனின் கண்களில் கனவாய் ஓடிக்கொண்டிருந்தது.

மணப்பெண் வெட்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.பக்கத்தில் மாப்பிள்ளையாய் கல்யாணம்.

எதிரில் மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவரையும் பார்க்க சந்தோஷமாக இருந்தது. பத்திரிக்கை வைத்தவர்களில் ஒருவர் கூட மிஸ் ஆகாமல் வந்திருந்தார்கள்.பப்ளிக் ஃபிகர் ஆச்சே?

கொடுத்த அட்வான்ஸ்க்கு குறை வைக்காமல் அடிச்சி தூள் கிளப்பிக்கொண்டிருந்தார், மேளக்காரர்.

கிச்சனுக்கும் கல்யாண மேடைக்கும் ஏதோ கள்ளத்தொடர்பு இருக்கும் போல.அங்கு சமைக்கற வாசம் இங்கு மேடைக்கும் வந்தது.

பெண் கழுத்தில் அவன், மூன்று முடிச்சி போடும் வரை ,அந்த கனவு நீண்டுதான் போயிருந்தது.

பெண் கழுத்தில் தாலி கட்டும்போது, கொட்டும் கெட்டி மேளச்சத்தமும், தலை முழுக்க ஆசீர்வாதங்களாய் வந்து விழும் அட்சதை அரிசிகளுமான காட்சி, இவன் வாழ்வில் நடக்குமா என்றிருந்த காலம் போய், அது இப்போ நிஜமாகவே இவன் வாழ்வில் நடக்கப்போகிறது.

அதற்கு முன்னோட்டமாய்தான், தனக்கு அந்த கல்யாண காட்சி கனவில் வந்தது என தீர்க்கமாய் நினைத்தான், கல்யாணம்.

ஆனால்…பாவம் கல்யாணம்.

கனவில் நடந்தது எதுவும் கை கூடாமல் போகசெய்து விட்டது, சைனாவிலிருந்து இறக்குமதியாகியிருந்த கொரோனா.

உலகம் முழுக்க அள்ளிக்கிட்டு போவுது மனுஷ உயிர்களை. நம்மூர்லயும் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்காம இருக்க அரசு அறிவிச்சிட்டாங்க ‘லாக் டவுன்’.

யாரும் எங்கியும் போக கூடாது,வரக்கூடாது. அப்படி போனால், கொரோனா உங்களை தொற்றிக்கொள்ளும். சமூக இடைவெளி விட்டு நிக்கணும், கையை கழுவணும், மாஸ்க் போட்டுக்கணும்னு ஏகப்பட்ட எச்சரிக்கைகள். சினிமா பாட்டு மூலம் பாதி பேர் ‘அவேர்னஸ்’ செய்யறோம்னு ஒரு பக்கம் மக்களை கொல்ல ஆரம்பிச்சிருந்தாங்க .மக்களுக்கு உயிர் பயம் வந்திருந்தது.

ஒன்னுமே புரியவில்லை கல்யாணத்துக்கு.

கல்யாணம் நடக்கப்போவதை நினைத்து சந்தோஷத்தில் போட்டிருந்த கொஞ்ச நஞ்சம் எடையும் குறைந்து போய்விட்டது, கல்யாணத்துக்கு.

இன்னும் ஐந்தாறு நாட்கள்தான் இருக்கு கல்யாணத்துக்கு.அதற்குள், இப்டி ‘லாக் டவுன் செஞ்சா, எப்படி கல்யாணம் நடத்தறது?

குழப்பத்தில் ஆழ்ந்து போனான்.

அறிவுரை சொல்ல யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால், எல்லாருக்குமே கொரோனா புது பிசாசு. அதை எப்படி ஓட்டறதுன்னு யாருக்குமே தெரியல.

“பல வருஷமா நடக்காத கல்யாணம் இப்பதான் நல்ல காலம் வந்து நடக்கப்போவுதுன்னு சந்தோஷத்தில் இருந்தா…இப்டி ஆயிடுச்சே…கொரோனா வந்து? கல்யாணத்துக்கு யாருமே வரமாட்டாங்க.
யாரையும் வரசொல்றது நியாயமில்லியே!”

மனசுக்குள் நினைத்து குழம்பிப்போனான்.

சரி!! நடப்பது நடக்கட்டும் என மாமனாரிடம் பேசி, கல்யாணத்தை அருகிலிருக்கும் கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தான். கோவில் நிர்வாகிகள் தீர்க்கமாய், சொல்லிவிட்டார்கள்.

“கல்யாணத்துக்கு குறைந்த ஆட்கள்தான் வரணும்.அப்போதான்..கல்யாணம் நடத்த சம்மதிப்போம்” என்று. சரியென்று ஒத்துக்கொண்டான்.

முகூர்த்த நேரம்.

பொண்ணு கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்னாடியே,அவள் முகத்தில் ‘நோஸ் மாஸ்க்கை’ மாட்டி விட்டு, பின்னாடி மாஸ்க்குக்கு முடிச்சி போட்டு விட்டான்.

தூரத்திலிருந்து பார்த்தால், கல்யாணம், பொண்ணு கழுத்தில் தாலி கட்டுவதாய்தான் நினைக்க தோன்றி இருக்கும்.

கல்யாணம், பொண்ணு கழுத்தில் மூணு முடிச்சி போட்டான்.இந்த முறை முடிச்சி போட்டது தாலிக்கயிற்றில். ‘நோஸ் மாஸ்கில்’ அல்ல. மணமக்களின் அருகில் இருந்த நாலு பேரும்,கல்யாண வீடியோ எடுத்தவரும், அட்சதை போட்டு ஆசிர்வதித்தார்கள்.

கூட்டம் கூட்டமாய் வந்திருந்து, மணமக்களை ஆசீர்வதிப்பது போல கனவெல்லாம் கண்ட, கல்யாணத்துக்கு கொஞ்சம் மனசு கஷ்டமாய்தான் இருந்தது. இப்படி யாருமே வராமல் கல்யாணம் நடந்ததை நினைத்தபோது.

அன்றைக்கு இரவு..

‘கொரோனாவில் கல்யாணம். நான்கைந்து பேர் மட்டும் வாழ்த்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்,மாப்பிள்ளை” என்ற தலைப்புச்செய்தியோடு, கல்யாணம், பொண்ணு கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சியை முக்கியமான செய்தியாக ஒலிபரப்பிக்கொண்டிருந்தது, அந்த பிரபலமான தொலைக்காட்சி.

“நம்ம கல்யாணத்தோட கல்யாணம், எப்படி ஊர் உலகமே பார்க்கிற மாதிரி நடந்துடுத்து. பார்த்தியா ?!அதுக்கெல்லாம் மச்சம் வேணும்பா”

என்று சொல்லி கல்யாண ஜோடியை மனசார வாழ்த்தியபடி இருந்தார்கள்,தொலைக்காட்சி செய்தியை பார்த்த, கல்யாணத்தின் ஊர் மக்கள் அனைவரும்.

சந்தேகம் விளக்குவதற்காக ஆரம்பித்த ‘கல்யாணம் வாட்சாப்’ குருப், அப்போது .. தொலைக்காட்சியில் வந்த கல்யாணத்தின் கல்யாண வீடியோ க்ளிப்பிங்ஸோடு, அனைவரின் வாழ்த்துகளால் நிரம்பி வழிந்திருந்ததை பார்த்து மகிழ்ந்தான்,கல்யாணம்.

அன்றையிலிருந்து, கல்யாணத்தின் ஜாதகத்திலிருந்த அனைத்து தோஷங்களும் காத தூரம் ஓடிப்போக..ஒரே ஒரு தோஷம் மட்டும் கல்யாணத்துடன் நிரந்தரமாய் தங்க ஆரம்பித்திருந்தது.

அது…..சந்தோஷம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *