கருடன் வந்து கண் திறந்த கதை

 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கருடன் வந்து கண் திறந்த கதை

“விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினாறாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘ஆலகால விடத்தையும் நம்பலாம், ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்’ என்று ஆரம்பித்து, ‘சேலை கட்டிய மாதரை நம்பொணாது மெய், நம்பொணாது மெய், நம்பொணாது மெய், காணுமே!’ என்று முடியும் ‘விவேக சிந்தாமணி’ பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களல்லவா? அந்தப் பாடலை அப்படியே பின்பற்றி நடந்து வந்த கணவன் ஒருவன் அதிராமப்பட்டினத்திலே உண்டு. ‘முத்து, முத்து’ என்று பெயர் பெற்றிருந்த அவனுக்கு, ‘மாரி, மாரி’ என்று ஒரு மனைவி உண்டு. அந்த மனைவி சேலை கட்டியதால் தானோ என்னவோ, அவன் அவளை நம்புவதே இல்லை. அது மட்டுமல்ல; ‘அவள் எப்போது தன்னை விஷம் வைத்துக் கொன்று விடுவாளோ?’ என்று ஒரு காரணமும் இல்லாமல் ஒவ்வொரு நிமிஷமும் பயந்துகொண்டே இருந்த அவன், அவள் தனக்குப் பரிமாறும் உணவைக்கூட உடனே எடுத்துச் சாப்பிடுவதில்லை; நாய்க்கோ, பூனைக்கோ முதலில் ஒரு பிடியை எடுத்து வைத்து, அந்தப் பிடியை அது சாப்பிட்டு உயிருடன் இருந்த பின்னரே அவன் சாப்பிடுவான். இந்த விஷயம் அவளுக்குத் தெரியாது; அவளிடம் அவன் அதைச் சொல்லவும் இல்லை. ஆகவே ‘வாயில்லாப் பிராணிகளிடத்தில் தன் கணவனுக்குள்ள பிரியம்தான் அதற்குக் காரணம் போலும்!’ என்று அவள் எண்ணி வாளாவிருப்பாளாயினள்.

இந்த விதமாகத்தானே தன் உயிர் தன்னுடைய மனைவியால் பறி போகாமல் இருக்க, அவன் ஒவ்வொரு நிமிஷமும் எச்சரிக்கையுடன் இருந்து கொண்டிருந்த காலையில், ஒரு நாள் அவன் மனைவியாகப்பட்டவள் தன் ஊரில் அப்போது நடந்து கொண்டிருந்த ‘மாரியம்மன் திருவிழா’வுக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன்னுடைய கணவனை ‘வேண்டு, வேண்டு’ என்று வேண்ட, ‘சரி’ என்று அவனும் அதற்குச் சம்மதிக்க, ஒரு நாள் கால்நடைப் பயணமுள்ள அந்த ஊருக்கு அவர்கள் இருவரும் மறு நாள் காலை கட்டுச் சாதம் கட்டிக் கொண்டு நடந்தே செல்வாராயினர்.

உச்சிப் பொழுது வந்ததும் அவர்கள் ஓர் ஆற்றங்கரை ஆல மரத்தடியில் உட்கார்ந்து, தாங்கள் கொண்டு வந்த கட்டுச் சாதத்தை அவிழ்க்க, ‘நாய்க்கும் பூனைக்கும் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று மனைவியாகப் பட்டவள் சிரித்துக்கொண்டே கேட்க, ‘ஏன், காகம் இல்லையா?’ என்று கணவனாகப்பட்டவன், தன் கையில் ஒரு பிடி சாதத்தை எடுத்துக்கொண்டு, ‘கா, கா’ என்று கரைய, அதைக் கேட்டுக் காகங்களும் ‘கா, கா’ என்று பதிலுக்குக் கரைந்து கொண்டே வந்து, அவன் வைத்த சோற்றை உண்டு உயிருடன் இருக்க, அதற்குப் பின்னரே அவன் அப்போதும் உண்பானாயினன்.

அதுகாலை தன் உணவுக்காக நல்ல பாம்பு ஒன்றைத் தன்னுடைய கால்களால் பற்றிக் கொண்டு வந்த கருடன் ஒன்று, அவன் தலைக்கு மேல் இருந்த மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து, தான் கொண்டு வந்த பாம்பைக் கொத்தித் தின்ன முயல, அது வலி தாங்காமல் விஷத்தைக் கக்க, அந்த விஷம் அவனுடைய கட்டுச் சோற்றில் விழுந்து கலக்க, அதைக் கவனிக்காமல் சாப்பிட்ட அவன், சிறிது நேரத்தில் அப்படியே மயங்கித் தரையில் சாய்வானாயினன்.

கணவன் கண்கள் பஞ்சடையத் தரையில் சாய்ந்ததைக் கண்ட மனைவி திடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்க்க, அதுகாலை கருடனின் காலடியில் இருந்த பாம்பே நழுவிக் கட்டுச் சாதத்தில் விழ, அங்ஙனம் விழுந்த பாம்பை அக்கணமே கருடன் பாய்ந்து வந்து மீண்டும் தன் கால்களால் பற்றிக் கொண்டு பறக்க, ‘ஐயோ, பாம்பின் விஷமல்லவா கட்டுச் சாதத்தில் விழுந்து கலந்துவிட்டதுபோல் இருக்கிறது!’ என்று பதறித் துடித்த அவள், அங்குமிங்குமாகப் பித்துப் பிடித்தவள் போல் ஓட, அந்த வழியே ஆற்றில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்த சாமியார் ஒருவர் அவளைத் தடுத்து நிறுத்தி, ‘என்னம்மா, என்ன?’ என்று விசாரிக்க, அவள் கலங்கிய கண்களுடன் நடந்ததைச் சொல்ல, ‘கவலை வேண்டாம். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நீ போய் உன் கணவனுக்கு அருகிலேயே இரு; இதோ, நான் வருகிறேன்!’ என்று சொல்லிவிட்டு எங்கேயோ சென்ற அவர், சிறிது நேரத்துக்கெல்லாம் ஏதோ ஒரு பச்சிலையும் கையுமாக வந்து, அதைப் பிழிந்து அவன் வாயிலும் மூக்கிலும் விட்டுத் திப்பியை அவனுடைய தலையின் உச்சியிலே வைத்துக் கட்ட, அடுத்த ஐந்தாவது நிமிஷம் அவன் தூங்கி விழித்தவன் போல் எழுந்து உட்கார்ந்து, தனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்திருந்த சாமியாரையும் சம்சாரத்தையும் மாறி மாறிப் பார்த்து விழிக்க, சாமியார் நடந்ததைச் சொல்லிவிட்டு, ‘இனிமேல் மரத்தடியில் உட்கார்ந்து எதையும் சாப்பிடாதே! ஒன்று, வெட்ட வெளியில் உட்கார்ந்து சாப்பிடு; இல்லை யென்றால், மேலே கூரை வேய்ந்த ஏதாவது ஓர் இடத்தில் உட்கார்ந்து சாப்பிடு!’ என்று சொல்லிவிட்டு நடக்க, ‘இந்தாருங்கள், எனக்கு மாங்கல்யப் பிச்சை அளித்ததற்காக இதையாவது வைத்துக் கொள்ளுங்கள்!’ என்று மனைவியாகப்பட்டவள் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த ஐந்து ரூபா நோட்டொன்றை அவிழ்த்து எடுத்து அவரிடம் நீட்ட, ‘இந்த மருந்து கடவுள் கொடுத்த மருந்து; இதை நான் யாருக்கும் காசுக்கு விற்பதில்லை!’ என்று சாமியார் அதை வாங்கிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே நடக்க, அவள் அவரையே கடவுளாக எண்ணி, அவர் சென்ற திக்கு நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுவாளாயினள்.

தன்னையும் அறியாமல் தன் கண்களில் நீர் மல்க அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்த கணவனாகப்பட்டவன், மனைவி கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக அவளை மார்புறத் தழுவிக்கொண்டு, ‘இன்றுதான் எனக்குப் புத்தி வந்தது, மாரி!’ என்று நாத் தழுதழுக்கச் சொல்ல, ‘ஏன், என்ன நடந்தது?’ என்று அவள் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘மனைவி கணவனின் உயிரை வாங்க வந்தவள் அல்ல, கொடுக்க வந்தவள் என்பதை நான் இன்றுதான் உணர்ந்தேன்!’ என்று அவன் பின்னும் சொல்லி அவளை இறுகத்தழுவ, ‘இத்தனை நாள் வரை?’ என்று அவள் பின்னும் கேட்க, ‘நீ எங்கே விஷம் கிஷம் வைத்து என் உயிரை வாங்கி விடுவாயோ என்றுதான் இத்தனை நாளும் நான் எதைச் சாப்பிட்டாலும் அதில் கொஞ்சம் நாய்க்கோ, பூனைக்கோ வைத்த பின் சாப்பிட்டு வந்தேன்!’ என்று அவன் அதுவரை சொல்லாத உண்மையை அவளிடம் மனம் விட்டுச் சொல்ல, அவள் ‘ஓ’ வென்று சிரித்து, ‘இப்படியும் ஓர் ஆண் பிள்ளை உண்டா?’ என்று அவன் கன்னத்தில் ஒரு செல்லத் தட்டுத் தட்ட, அவன் வெட்கித் தலை குனிவானாயினன்.’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘கணவனுக்கு மனைவி உயிர் கொடுக்க வருபவளா, உயிர் வாங்க வருபவளா?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘அப்படியும் சிலர் உண்டு, இப்படியும் சிலர் உண்டு!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க… காண்க… காண்க……

- மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
"டேய், உன் அப்பாடா!" என்று தன் சகாக்களில் ஒருவன் தன்னை எச்சரித்ததுதான் தாமதம், அதுவரை கோலி விளையாடிக் கொண்டிருந்த குமார், தன் கையிலிருந்த குண்டைக் கீழே விட்டெறிந்துவிட்டு, விட்டான் சவாரி, வீட்டை நோக்கி. வந்த வேகத்தோடு வேகமாகக் கை கால் முகத்தைக் கழுவிக் ...
மேலும் கதையை படிக்க...
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பரோபகாரி கதை ‘விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினைந்தாவது கதையாவது: ‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'தயாநிதி, தயாநிதி' என்று ஒரு 'தனி மனிதன்’ தரங்கம்பாடியிலே உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
'கொக்கரக்கோ' என்று கோழி கூவிற்று. சின்னப்பன் படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்தவன், தன் மனைவியை ஒரு முறை பரிதாபத்துடன் பார்த்தான். அவள் அசைவற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய நெற்றியில் விழுந்து புரண்டு கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவன் ஒரு நீண்ட பெருமூச்சு ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம்போல் காலை எட்டு மணிக்கெல்லாம் தம்முடைய 'நர்ஸிங் ஹோ’மிலிருந்த நோயாளிகளைப் பார்வையிடுவதற்காக ஞானப்பிரகாசம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, "இன்னும் எத்தனை நாட்கள்தான் உங்கள் நர்ஸிங் ஹோமையும் வீட்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டாள், அவருடைய மனைவி அற்புதம். "பொழுது விடிந்தால் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன பாதாளக் கதை இரண்டாம் நாள் காலை போஜனாகப்பட்டவர் பல்லைத் தேய்க்காமலே காபி குடித்துவிட்டு, காலைப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டுப் புரட்டிப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் குளித்து, ‘அடுத்த வீட்டுக்காரன் பூஜை செய்கிறானே!' என்பதற்காகத் தானும் ...
மேலும் கதையை படிக்க...
......யார் வீட்டுக் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலும் சரி, "ராஜா!" என்று தம் மகனை உடனே அழைத்து விடுவார் ரங்கநாதம்-அன்றும் அப்படித்தான் நடந்தது. "ராஜா!" "ஏன் அப்பா!" "எதிர்வீட்டு ராதையைப் பார்த்தாயா?" "இதென்ன அப்பா! உங்களுக்கு வேறு வேலை ஒன்று மில்லையா? எப்போது பார்த்தாலும் இவளைப் பார்த்தாயா, அவளைப் ...
மேலும் கதையை படிக்க...
டண்டண், டண் டண், டண் டண், டாண் டாண்! "வயிறு பன்னிரண்டு மணிக்கே சாப்பாட்டு மணி அடித்து விட்டது; இவன் என்னடா வென்றால் ஒரு மணிக்கு அடிக்கிறான்!" என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த 'ஸ்டிக்'கைக் 'கே'ஸின் மேல் வைத்து விட்டுக் கையைக் கழுவுவதற்காகக் ...
மேலும் கதையை படிக்க...
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன காடுவெட்டிக் கதை "விக்கிரமாதித்தன் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பத்தாவது கதையாவது: 'கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'காடுவெட்டி, காடுவெட்டி' என்று ஒரு கள்ளப் பயல் ...
மேலும் கதையை படிக்க...
எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் எனக்கு இது அதிசயமாய்த்தான் இருக்கிறது. தன் உயிரின்மேல் அந்தக் கிழவனுக்குத்துளிக்கூட ஆசை இல்லை; ஆனால் உயிரோ அவன் மீது அளவற்ற ஆசை வைத்திருக்கிறது. என்ன செய்வான், பாவம்! படுக்கையில் படுத்தபடி ஒரு நாளைப்போலத் தன் உயிரோடு ...
மேலும் கதையை படிக்க...
விய வருஷம் பிறந்து விட்டதல்லவா? - எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களாகி விட்டன. இன்னும் அவர்களிடையே மலர்ந்த காதல், பிஞ்சு விடவில்லை! வேலைக்குப் போகும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவன் "லக்ஷ்மி!" என வேண்டியது; அவள் 'ஏன்?!' ...
மேலும் கதையை படிக்க...
மூன்று பொம்மைகள்
பரோபகாரி கதை
கைமேல் பலன்
ஏசு நாதரின் வாக்கு
இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா
மிஸ் நளாயினி-1950
பதவி
காடுவெட்டிக் கதை
அவன் கேள்வி
அன்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)