கனகாம்பரம் சிரித்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,963 
 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன கனகாம்பரம் சிரித்த கதை

“விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபத்திரண்டாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘கனகாம்பரம், கனகாம்பரம்’ என்ற கட்டழகி ஒருத்தி காட்டுப் பாக்கத்திலே இருந்தாள். பொழுது விடிந்ததும் அவள் அந்த ஊர் மாடுகளையெல்லாம் ஓட்டிக் கொண்டு காட்டுக்குப் போவாள். அவற்றை அங்கே மேய விட்டுவிட்டு, அவள் அடுப்புக்கு வேண்டிய விறகு, சுள்ளி ஆகியவற்றைச் சேகரிப்பதில் ஈடுபடுவாள். அதற்குள் பொழுது சாய்ந்து விடும்; சேகரித்த விறகுச் சுமையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு, மாடுகளையும் மடக்கி ஓட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்புவாள்.

இப்படி ஒரு நாளா, இரண்டு நாட்களா? எத்தனையோ நாட்களாக அவள் போவதும் வருவதுமாயிருந்தாள். அப்படிப் போகும்போதும் சரி, வரும்போதும் சரி, அவள் யாரையும் ஏறெடுத்துக்கூடப் பார்ப்பது கிடையாது; ‘தான் உண்டு, தன் காரியம் உண்டு’ என்று போவாள்; வருவாள். அப்படிப்பட்டவள் ஒரு நாள் மாடுகளை முன்னால் போக விட்டுவிட்டு, அடிக்கொரு தரம் நிற்பதும், நின்றபின் ஏதோ நினைப்பதும், நினைத்தபின் விழுந்து விழுந்து சிரிப்பதுமாகச் செல்ல, அதைக் கவனித்த ஒரு பெரியவர், ‘இத்தனை நாளும் இல்லாமல் இன்று என்ன வந்துவிட்டது இந்தப் பெண்ணுக்கு? இவள் ஏன் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறாள்? ‘சிரிப்பு வியாதி’ என்று ஏதோ ஒரு புது வியாதி இப்போது இளம் பெண்களுக்கெல்லாம் வருகிறதாமே, அந்த வியாதி இவளுக்கும் வந்து விட்டதா, என்ன? அது கலியாணமாகாத பெண்களுக்கல்லவா வருவதாகச் சொல்கிறார்கள்? இவளுக்குத்தான் கலியாணமாகிவிட்டதே! ஏன் அந்த வியாதி வருகிறது? அப்படியே வந்தாலும் அதை வாலிபர்கள் குணப்படுத்தி விடுகிறார்களென்றும், எப்படிக் குணப்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்னும் மர்மமாகவே இருக்கிறதென்றும் சொல்கிறார்களே, அந்த மர்மம் இவளுடைய கணவனுக்குத் தெரியாதா, என்ன?’ என்று பலவாறாக நினைத்துக்கொண்டே, மெல்ல அவளை நெருங்கி, ‘ஏன் பெண்ணே, அப்படிச் சிரிக்கிறாய்?’ என்று கேட்க, அவள் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் திடீரென்று தேம்பித் தேம்பி அழ, ‘இது என்ன வேடிக்கை! கொஞ்ச நேரத்துக்கு முன்னால் விழுந்து விழுந்து சிரித்தாய்; ‘ஏன் சிரிக்கிறாய்?’ என்று கேட்டால், தேம்பித் தேம்பி அழுகிறாயே? என்ன விஷயம்? என்ன நடந்தது?’ என்று அவர் வியப்புடன் கேட்க, அவள் மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னதாவது:

‘ஒரு நாள் மத்தியானம் வழக்கம்போல் நான் காட்டில் சுள்ளி பொறுக்கிக்கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒன்று பயங்கரமாக உறுமும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். புதரில் பதுங்கியிருந்த புலி ஒன்று திடீரென்று என்மேல் பாய்ந்தது. எனக்கு ஒன்றும் புரிய வில்லை; ‘ஐயோ, அம்மா!’ என்று அலறிக்கொண்டே குப்புறப் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டு விட்டேன். ‘டுமீல்’ என்று ஒரு சத்தம் கேட்டது; விழித்துப் பார்த்தேன். எனக்கு அருகில் கையில் துப்பாக்கியுடன் வெள்ளைக்கார உடையில் யாரோ ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் செத்துப்போன புலி கிடந்தது. நான் நன்றியுடன் அவரைப் பார்த்தேன்; ‘அந்தக் காலத்துப் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதாகச் சொல்வார்கள்; நீ என்னடாவென்றால் அதன் உறுமல் சத்தத்தைக் கேட்டவுடனே இப்படி விழுந்துவிட்டாயே?’ என்றார் அவர் சிரித்துக்கொண்டே. எனக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. ‘அந்தக் காலத்து ஆண்கள் யானையைக்கூட நேருக்கு நேராக எதிர்த்து நின்று அங்குசத்தாலேயே அதை அடக்கி ஆண்டார்களாம். இந்தக் காலத்து ஆண்கள் அப்படியா செய்கிறார்கள்? மறைந்திருந்து துப்பாக்கியால் அல்லவா சுடுகிறார்கள்!’ என்றேன் விருட்டென்று எழுந்து நின்று. அதற்குமேல் அவர் ஒன்றும் பேசவில்லை; அசடு வழியப் போய்விட்டார். 

அன்றிரவு வீட்டில் படுத்துத் துங்கிக்கொண்டிருந்த போது, எங்கிருந்தோ சுண்டெலி ஒன்று வந்து என்மேல் விழுந்தது. ‘எலி, எலி!’ என்று நான் கத்தினேன். எனக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த என் கணவர், ‘எங்கே தடி, தடி?’ என்று என்னைத் தொடர்ந்து கத்திக்கொண்டே எழுந்தார். ‘எலியை அடிப்பதற்கா தடி!’ என்றேன் நான். ‘மூடு, வாயை!’ சின்ன பாம்பாயிருந்தாலும் பெரிய கொம்பால் அடி!’ என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!’ என்று சொல்லிக்கொண்டே இறக்கி வைத்திருந்த விளக்கின் திரியை ஏற்றி எடுத்துக்கொண்டு அவர் தடியைத் தேடினார். ‘பாம்புக்குத்தானே அப்படிச் சொன்னார்கள்? எலிக்குச் சொல்லவில்லையே!’ என்றேன் நான். ‘உனக்குத் தெரியாது; பேசாமல் இரு!’ என்று அவர் என்னை அடக்கி விட்டுத் தடியைத் ‘தேடு, தேடு’ என்று தேடினார். ஒரு வழியாகத் தடியும் கிடைத்தது.

அந்தத் தடியுடன் அவர் எலியை ‘விரட்டு, விரட்டு’ என்று விரட்டினார். அது பழங்கலம் அடுக்கி வைத்திருந்த மூலைக்கு ஓடிற்று. அதைத் தொடர்ந்து ஓடிய அவர், அதன்மேல் போட்டார் ஒரு போடு! உடைந்தது எலியின் மண்டையல்ல; பழங்கலங்கள்! அடுத்தாற்போல் அந்த எலி உறிக்குத் தாவிற்று; விடுவாரா? தடியால் ஓங்கி அடித்தார் இன்னும் ஓர் அடி! காலியானது எலி அல்ல; உறி! கயிறு மட்டுமே எஞ்சி நின்ற அந்த உறியிலிருந்து எண்ணெயும் நெய்யும் வழிந்து இரண்டறக் கலந்து எங்கள் ‘எட்டடிக் குச்சு’க்குள்ளே ஒரே எண்ணெய் ஆறாக ஓடிற்று. என்ன இருந்தாலும் என் கணவர் ஆண் பிள்ளையல்லவா? மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே ‘என்ன ஆனாலும் சரி, இன்று உன்னை நான் விடுவதில்லை!’ என்று அந்த எலியை விரட்டிக் கொண்டே வீதிக்கு ஓடினார். நான் ‘விதியே!’ என்று பழங்கலத்திலிருந்தும், உறியிலிருந்தும் விழுந்து உடைந்த மண்பாண்டங்களின் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பதில் முனைந்தேன்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு வியர்க்க விறுவிறுக்க தடியார் திரும்பி வந்தார். ‘என்ன ஆயிற்று எலி?’ என்றேன் நான்; ‘விட்டேனா?’ என்றார் அவர் மறுபடியும் மீசையைத் திருகி விட்டுக் கொண்டே. ‘அடித்துவிட்டீர்களா?’ என்றேன்; ‘அடிப்பதாவது! அதுவரை எனக்கு எதிரே நிற்க அவ்வளவு தைரியமா அதற்கு?’ என்றார். ‘கடைசியில் என்னதான் ஆயிற்று?’ என்றேன்; ஓடிப் போய் வளைக்குள் புகுந்து கொண்டு விட்டது; ‘பாவம், போனாற் போகிறது!’ என்று நானும், ‘ஜாக்கிரதை! இன்னொரு தடவை வெளியே வந்தாயோ, கொன்று விடுவேன் கொன்று!’ என்று அதை எச்சரித்து விட்டு வந்தேன்!’ என்றார் அவர் மீண்டும் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே. நான் சும்மா இருந்திருக்கக் கூடாதா? கீழே விழுந்து கிடந்த வெண்ணெயில் கொஞ்சம் எடுத்து அவரிடம் நீட்டினேன். ‘எதற்கு?’ என்றார்; ‘இவ்வளவு பெரிய வீர சாகசத்தைச் செய்துவிட்டு, மீசையை வெறுமனே முறுக்கலாமா? கொஞ்சம் வெண்ணெய் தடவி முறுக் குங்கள்!’ என்றேன்.

கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது அவருக்கு; ‘என்ன குறைச்சல் என் வீரத்துக்கு?’ என்று ஓர் எம்பு எம்பித் தம் கையிலிருந்த தடியை என்னை நோக்கி ஓங்கினார். எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது; ‘சும்மா நிறுத்துங்கள்! மத்தியானம் காட்டில் ஒரு புலி என்மேல் பாய வந்தது; ஒரே குண்டில் அதைச் சுட்டுக் கொன்ற வீரர் தன் வீரத்தைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை; நீங்கள் என்னடாவென்றால், இவ்வளவு பெரிய தடியை எடுத்துக்கொண்டு போய் ஓர் எலியைக்கூடக் கொல்லாமல் திரும்பி வந்துவிட்டு இத்தனை பேச்சுப் பேசுகிறீர்களே!’ என்றேன். அவ்வளவுதான்; ‘யாரடி அவன்? எதற்காக அங்கே வந்தான்? உனக்காக ஏன் புலியைக் கொன்றான்? உனக்கும் அவனுக்கும் என்ன உறவு? எப்போதிருந்து உறவு? சொல்லடி, சொல்?’ என்று என்னை அடிமேல் அடி அடித்ததோடு நில்லாமல், ‘போ, அந்த வீரனுக்குப் பின்னாலேயே போ! இனிமேல் இங்கே வராதே!’ என்று அவர் அன்றிருந்து என்னை ‘விரட்டு, விரட்டு’ என்று விரட்டிக்கொண்டே இருக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போதிருந்து அந்தப் புலி வேட்டைக்காரரை நினைத்தால் எனக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது; எலி வேட்டைக்காரரை நினைத்தால் அழுகை அழுகையாய் வருகிறது!’

கனகாம்பரம் இதைச் சொல்லிவிட்டு மீண்டும் தேம்பித் தேம்பி அழ, ‘அழாதே பெண்ணே, அழாதே! கொண்ட கணவனுக்கு முன்னால் அண்டை வீட்டுக்காரனைப் புகழலாமா? புகழக் கூடாதே! போ, இனிமேலாவது அதைத் தெரிந்து கொண்டு, அதற்குத் தக்கபடி நடந்துகொள்!’ என்று சொல்லி விட்டுப் பெரியவர் தன் வழியே செல்ல, அவளும் அவள் வழியே செல்வாளாயினள்.’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘கொண்ட கணவனுக்கு முன்னால் அண்டை வீட்டுக்காரனை ஏன் புகழக் கூடாது?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘புகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதுதான் அந்தக் கதையிலிருந்தே தெரிகிறதே!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க… காண்க… காண்க…..

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *