கதவைச் சாத்து…காதோடு பேசணும்

 

முதலில் வாசற்கதவைச் சாத்தி விட்டு வருகிறீர்களா… ஏனென்றால், இது நமக்குள் பேச வேண்டிய விஷயம்… நண்டு, சிண்டுகள் கேட்டால் போச்சு… தெரு முழுக்க ஒலிபரப்பி, நம்மை பீஸ் பீஸாக்கி விடும்.

புருஷர்களுக்கா… ஊம்ஹ§ம்… மூச்சு விடக் கூடாது. ஏற்கனவே வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு ‘பாப்கார்ன்’ கொடுத்த மாதிரி. ‘அப்படி என்ன ரகசியம்’ என்கிறீர்களா… எல்லாம் நம்மைப் பற்றித்தாங்க!

நமக்கு என்ன குறைச்சல்? எதுலேதான் குறைச்சல்? கைவேலையாகட்டும்; கம்ப்யூட்டர் ஆகட்டும்… நம்மை அடிக்க யாரும் இல்லை. நேற்றுகூட ஒரு தினசரியில் பார்த்தேன்… 102 வயது பாட்டி ஒருவர் & கேரளாவில், கம்ப் யூட்டர் கற்றுக் கொள்கிறாராம்… கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

‘போகட்டும். இதைச் சொல்லவா இத்தனை ரகசியம்’ என்று பல்லைக் கடிக்கக் கூடாது என்னருமை சகோதரிகளே… இது வேறு. நம்மிடம் எத்தனையோ ப்ளஸ் பாயின்ட்ஸ் இருக்க… நடுநடுவே சில மைனஸ்ஸ§ம் இருக்கிறதே… அதைப் பற்றித்தான் பேசப் போகிறேன்.

காலையில் என் சிநேகிதி பட்டு வந்திருந்தாள்…அவளைப் பார்க்க வேண்டும் நீங்கள்… சும்மா, சிம்ரன் மாதிரி… (என்ன, சிம்ரனுக்கு நாற்பத்தி ஐந்து, ஐம்பது வயதானால் எப்படியோ… அப்படி இருப்பாள் என்று சொல்ல வந்தேங்க…)

‘‘அனு, உன் கிட்ட இதப் பத்திச் சொல்லணும்னே வந்தேன்…’’

‘‘எதைப் பத்தி…’’

‘‘இரு… ஒரு நிமிஷம்… ‘சொர்க்கம்’லே அவளுக்குக் குழந்தை பிறந்துடுத்தானு பார்த்துட்டு வர்றேன்…’’ இப்படி சொல்லி விட்டு, ரிமோட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவாள்.

சரி… இவள் ஏதோ முக்கியமான சமாசாரம் சொல்லப் போகிறாள் என்று நாமும் கிடக்கிற வேலை எல்லாவற்றையும் ஏறக்கட்டிவிட்டு, இவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தால்…

‘சன்’னில் இருந்து ‘கே’ போவாள்… ‘த்சு… அரதப் பழசு’ என்று உச்சுகொட்டிவிட்டு ‘ராஜ்’ஜுக்குத் தாவுவாள். ‘சன் மியூசிக்’கில் ஒரே பாட்டையே திரும்ப திரும்பப் போடுவதாக சலித்துக் கொண்டே ‘விஜய்’க்கு மாறுவாள். ‘பொதிகை’க்கு பொத்தானை அழுத்துவாள். ‘இவங்க இன்னும் கொஞ்சம் ஸ்டைலை மாத்திக்கலாம்…’ இப்படியரு விமர்சனத்தைக் கொடுத்துவிட்டு, ‘ஜெயா’வுக்கு…

‘‘அச்சச்சோ… நியூஸ் வந்துடுத்தா… நான் கிளம்பறேன். நேரம் போனதே தெரியலே…’’ துள்ளிக் குதிக்க முயற்சித்து, முடியாமல் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டே எழுந்து விடுவாள்.

‘‘ஆமா… என்கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னியே…’’

‘‘நானா.. உன்கிட்ட ஏதோ சொல்றேன்னு சொன்னேனா… இல்லையே…’’ & ‘அம்னீஷியா’வினால் நினைவுகளை இழந்த ‘பொம்பளை கஜினி’போல பேந்தப் பேந்த விழித்துவிட்டு, ‘ஜுட்’ விட்டு விடுவாள். இவள் எதற்காக வந்தாள்? என்னத்தைச் சொன்னாள்? இங்கேதான் என்றில்லை; எங்கு போனாலும் அவர்கள் வீட்டு ரிமோட் கன்ட்ரோலும் கையுமாகப் பட்டுவைப் பார்க்கலாம்.

ஒரு தடவை & சுமங்கலி பிரார்த்தனைக்கு ஒன்பது சுமங்கலிகளுக்கு (அதில் இவளும் ஒருத்தி) இலை போட்டு, வடை பாயசத்திலிருந்து சகலமும் பரிமாறி, சாப்பிட அத்தனை பேரும் உட்கார்ந்தாயிற்று… இவளானால் மடிசார் புடவையும், காலில் நலுங்கு மஞ்சளுமாய், வீட்டுக் கூடத்தில் ரிமோட்டை அழுத்திக் கொண்டு நிற்கிறாள்.

வந்த இடத்தில் இதைப் பார்க்கவில்லை என்றால் என்ன குடி முழுகிப் போய் விடப் போகிறது? வந்த இடத்தில் மட்டுமில்லை… இவள் வீட்டுக்கு யார் போனாலும் இதே கதைதான்.

ஒரு முறை இவளது புக்ககத்து மாமா, கிராமத்தில் இருந்து ஆசை ஆசையாக உளுந்து, பயிறு, நிலக் கடலை என்று மூட்டை கட்டிக் கொண்டு வந்து விட்டு, இங்கே தங்கியிருந்த மூன்று நாளும் உடுப்பி ஹோட்டலில் வேளாவேளைக்குச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்.

‘‘பட்டு… நான் வர்றேன்…’’

‘‘இப்பத்தானே வந்தீங்க… அதுக்குள்ளயா?’’

‘‘சரியாப் போச்சு. நான் வந்து மூணு நாளாச்சு. நீதான் பிரும்மஹத்தி பிடிச்சாப்பல அந்த டி.வி. பொட்டி முன்னாடியே உட்கார்ந்திருக்கியே… வேலை ஆச்சு. கிளம்பறேன்…’’

‘‘அப்ப… சரி… இந்த எபிஸோட்லேயாவது ஹீரோ யினோட ஒரிஜினல் புருஷன் யார்னு தெரியறதோனு பார்த்தேன்…’’

அதெல்லாம் நானூறு எபிஸோட் ஆன பிறகுதான் ஒரிஜினல் யார் என்பது தெரியும். அதற்குள் நமது அன்றாட வாழ்க்கை, நம்மை விட்டுவிட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது என்பதை பட்டுவுக்கு யார் எடுத்துச் சொல்வது?

இவள் இப்படி என்றால் இன்னொரு அம்மாள். பார்க்க ‘பளபளப்பள’ என்று இருப்பாள். ஐயோ… அம்மாடி… அந்தப் பெருமையே… காது கொப்புளித்துப் போய்விடும்.

‘‘எல்லாரும் சொல்லுவாங்க… பார்வதி வீட்டுல விசேஷம்னா சாப்பிடக் கொடுத்து வைக்கணுமே யின்னு… சும்மாவா… அத்தனை பேருக்கும் ஸில்க் பொன்னி… ஹை குவாலிடி அரிசி. அந்த சர்க்கரைப் பொங்கல் மாதிரி, அவங்க இந்த ஜென்மத்துல சாப்பிட்டிருக்க மாட்டாங்க…’’

‘‘வெண்ணெய் காய்ச்சின நெய்லேதான் ரசத்துக்கே தாளிச்சுக் கொட்டுவேன். இதனாலேயே யார் வீட்டுல யாவது சாப்பிடக் கூப்பிட்டா, இவர் மூஞ்சிய சிணுக்கிப்பார். ரசம் வாசனைய வச்சே, இது ‘லூஸ்’லே வாங்கின டின் நெய்னு சொல்லிடுவார்… ‘பார்வதி, உன் கைச் சாப்பாடு மாதிரி எங்கேயும் வராதுடீ’யின்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போவார்…’’

பார்வதிக்குத் தான் செய்வது மட்டும்தான் ஒசத்தி. ஒரு பண்டிகை, நாள் கிழமை என்று யாராவது கொஞ்சம் வெல்லச் சீடையோ, முறுக்கோ கொண்டு வந்து வைத்தால் & அமர்த்தலாகச் சிரித்தபடியே & தான் செய்ததைத் தருவாள்.

‘‘சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லு. சும்மா இல்லே… ஒவ்வொரு ஈட்டுக்கும் அரை கிலோ வெண்ணெய்… வாயில் போட்டா, அப்படியே கரையணும் எங்களுக்கு.’’

இதைச் சொல்வதுடன் நிறுத்திக் கொள்ள மாட்டாள். வேலை மெனக்கெட்டு எடுத்துப் போய், வாசலில் உட்கார்ந்திருக்கும் தன் மாமியாரிடம் தருவாள்.

‘‘பக்கத்து வீட்டு விமலா கொண்டு வந்து தந்திருக்கா. சாப்பிட முடியுமா… இல்லே, மிக்ஸியிலே போட்டு ரெண்டு சுத்து சுத்தித் தரட்டுமா…’’

என்ன… பார்வதியின் கழுத்தைப் பிடித்து அப்படியே நெறிக்க வேண்டும் போல் இருக்கிறதா… அவள் அப்படித்தான். அடுத்தவர் மனசு எந்த அளவுக்குப் புண்படும் என்பது பற்றி யெல்லாம் பார்வதிக்குக் கவலையே இல்லை.

‘‘என்ன பாரு… பாவம், அந்தப் பொண்ணு மனசு எத்தனை கஷ்டப்பட்டிருக்கும்… முகமே மாறிப் போச்சு…’’ இப்படி நாம் சொன்னால், ‘பளிச்’சென பதில் வரும்.

‘‘நல்லாயிருக்கே… எனக்கு எல்லாத்துலேயும் தரம்தான் முக்கியம். ‘பெர்ஃபெக்ஷன்தான் பார்வதி’னு என் வீட்டுக்காரர் கூடச் சொல்லுவார். அப்படியே வளர்ந் தாச்சு. இனிமே மாத்த முடியாது!’’

பார்வதியை தூக்கி அடிக்கிற மாதிரி ஒருத்தி… பாமா என்று பெயர். அவள் இருப்பாள் 90 கிலோவுக்குக் குறையாமல். ஆனால், நாலு பேர் கூடுகிற இடத்தில் இவளுக்குத் தெரிந்தவள் யாராவது மாட்டினால், கொஞ்சம்கூட நாசூக்கு நாகரிகமே பார்க்காமல் இப்படி கேட்பாள்…

‘‘என்ன விஜி… ஒரேயடியா ஊதிக் கிடக்கே… இத்தனை குண்டா உடம்பை வச்சிட்டு, சுரிதார் வேறயா… நன்னாவே இல்லே… மாத்து…’’

‘‘சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதே… உன் முகம் ரொம்ப முத்திப் போச்சு… ஐ லைனர், லிப்ஸ்டிக்… இதுக்கெல்லாம் ஆசையே படாதே.’’

இப்படிப் பேசுகிறவளிடம் யாராவது துணிந்து, ‘ஆமா… பூசணிக்கா மாதிரி முகத்தை வச்சிட்டு, என்னைப் பத்திப் பேசறியா’ என்று கேட்டால் தொலைந்தது.

‘‘நான் ஒண்ணும் உன்னளவுக்கு குண்டு இல்லே… எங்க ஃபேமிலி வாகே இப்படி… எனக்கு குழந்தை முகம்னு எங்கம்மா சொல்லுவா…’’

இந்தப் பீத்தல் பீதாம்பரிக்கு தான் ‘சித்தப் பூசினாப்பல’ இருக்கறதாகத்தான் நினைப்பு!

ஜானா அப்படியில்லை. அவள் வேறு மாதிரி. அவளெதிரில் யாரும் தனக்கு இன்ன வியாதி இருப்பதாகச் சொல்லி விடவே கூடாது…

‘‘இதே பிளட்பிரஷர் எனக்கும் உண்டு. ஒரு தடவை பிரஷர் பார்த்தப்ப அந்த இன்ஸ்ட்ரூமென்ட்டே தெறிச்சுப் போயிடுத்து… தெரியுமா?’’

‘‘ஒரு தடவை ஷ§கர் நானூறுக்கு மேல போய், ஒரு கட்டெறும்பு கூட்டமே என்னை ‘கிட்நாப்’ பண்ணற அளவுக்கு ஆயிடுத்து…’’

இப்படிப் பேசுகிற ஜானாவை, அநேகமாக எல்லா சிநேகிதிகள் வீட்டு விசேஷங்களிலும் பார்க்க லாம்.

‘‘ஷ§கரை இத்தனை வச்சிட்டு நாலைஞ்சு குலோப்ஜாமுனா முழுங்கறியே…’’ & இப்படி இவளை ஒருத்தி கேட்டதற்கு, அழுது ரகளை பண்ணி விட்டாள்.

‘‘எனக்குத் தெரியாதா… காலம்பறதான் டாக்டர் எனக்கு பிளட் ஷ§கர் டெஸ்ட் பண்ணினார். கடும் பத்தியம் இருந்து, ஜலபானம் கூடப் பல்லுல படாம இருந்து ஷ§கரைக் குறைச்சிருக்கேன். அதெல்லாம் என் வைராக்கியம் யாருக்கு வரும்… இன்னிக்கு ஷ§கர் ஒரேயடியா அதலபாதாளத்துக்குப் போயிடுத்து. டாக்டர்தான் ‘எதையாவது தின்று, ஷ§கரை மேலே இழுத்துட்டு வாங்க’ன்னார். இல்லேயின்னா ‘கோமா’ அட்டாக் ஆயிடும்னார். அதுக்கோசரமாக்கும் இந்த குலோப்ஜாமுனை முழுங்கறேன். என்னைப் போய்… விக்…விக்…’’ ஜானு அழுதே ஒரு ஸீன் க்ரியேட் பண்ணி விடுவாள் பாருங்கள்… அவளை விசாரித்தவள் தலைதெறிக்க ஓடி விடுவாள்…

‘‘எல்லாம் சரிதான் அனு… இவங்களைப் பத்தி எல்லாம் சொல்றதுக்காக ஏன், கதவைச் சாத்தணும்னு சொன்னே…’’ இப்படி கேட்கிறீர்களா?

அதாவது, டியர் அண்ட் நியர்ஸ்… இந்த பட்டு, பார்வதி, பாமா, ஜானா எல்லாரும் நீங்கள் தாழ்ப்பாள் போட்டு மூடினீர்களே… அந்தக் கதவுக்கு வெளியே இல்லை… உள்ளே தான்… நமக்குப் பக்கத்தில், நம்மைச் சுற்றி, ஏன்… நம்மிலே கூட இருக்கிறார்கள் தான்…

கொஞ்சம்… கொஞ்சமே கொஞ்சம் இவற்றை எல்லாம் மாற்றிக் கொண்டால்… அட, அப்புறம் நமக்கு நிகர் வேறு யார்… சொல்லுங்களேன்!

- மார்ச் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
வயிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல… காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் ...
மேலும் கதையை படிக்க...
விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!
ஆட்டோவில் இருந்து முத்துலட்சுமி இறங்குவதைப் பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் மற்ற சிறுசுகளுடன் கதை பேசிக்கொண்டு இருந்த பாவாடை தாவணி உள்நோக்கி ஓடியது. உள்ளே போனவள், தன்னைப் பெற்றவளிடம் என்ன சொல்லிஇருப்பாள் என்று முத்துலட்சுமிக்குத் தெரியும். “அம்மா... ஓடிப் போன அத்தை வந்திருக்கா!” பட்டு, சங்கரிக்குப் ...
மேலும் கதையை படிக்க...
இரவல் தொட்டில்
இன்னும் அன்னம் வரவில்லை. வாசல் இரும்புக் கிராதியின் சத்தம் கேட்கும்போது எல்லாம் விசுவம் எட்டிப் பார்த்து ஏமாந்தான். அப்பா இடை ரேழியில் இருந்து செருமினார்... ''இன்னும் அவ வரல்லே போல இருக்கே?'' ''வந்துடுவா.'' அதற்கு மேலும் அங்கே நிற்கச் சக்தி அற்றவனாகக் கூடத்துக்கு வந்தான். ஊஞ்சல் ...
மேலும் கதையை படிக்க...
சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். இந்தக் காலம் போல அரையாண்டு விடுமுறைக்கு 'பிக்னிக்', கோடை விடுமுறைக்கு 'லாங் டூர்' என்று போவதெல்லாம் என்னவென்றே தெரியாது எங்களுக்கு! ஆக, டீன்--ஏஜில் எனக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கும் டூர் என்பது ஒரு அந்நிய ...
மேலும் கதையை படிக்க...
அறிந்தும் அறியாமலும்…
‘‘ஏண்டா... ஏண்டா இப்படி, இங்கே வந்தும் அடிச்சுக்கறேள்... காசிக்கு வந்தும் கர்மம் தொலையலேடா! அஞ்சு வருஷம் முன்னாலே போனவர், என்னையும் அழைச்சிண்டு போயிருக்கப் படாதா..?” மாடி வெராந்தாவில் நின்றுகொண்டு அந்த அம்மாள் அழுதாள். அடுத்தாற்போல கரகரப்பான, ஆளுமை நிறைந்த ஆண் குரல் இரைந்தது... “இந்தா, ...
மேலும் கதையை படிக்க...
அக்னி
விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!
இரவல் தொட்டில்
குற்றால டூரும்…கஷ்டமித்ர பந்துக்களும் !
அறிந்தும் அறியாமலும்…

கதவைச் சாத்து…காதோடு பேசணும் மீது ஒரு கருத்து

  1. Good opening this site first to-day.கதைகள் என்பதைவிட சுவாரஸ்யமான தகவல்களுடன் ரசனை கலந்தசம்பாஷனைகள் என்று கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)