கடவுள் வந்தார்

 

மூன்று நாட்களாக கடும் சுரம். நான்கு மணி நேரதிற்கு ஒரு முறை மாத்திரையால் கட்டுப் பட்டது இப்போது முன்னேறி ஏழு மணிக்கு ஒரு முறை கட்டுப் படத் தொடங்கி இருந்தது…. சென்னை வெய்யிலின் உக்கிரம் தணியும் மாலை வேளை. மணி 6:30. புழுக்கம் உச்சதில் இருந்தது. கொஞ்சம் வெளியே சென்றால் நான்றாக இருக்கும். செருப்பை மாட்டிக் கொண்டு ஒரு அடி எடுத்து வைத்ததும் தோன்றிய யோசனை ‘இந்த தளர்ந்த நிலையில் ஏன் வெளியே செல்ல வேண்டும், மேலே மொட்டை மாடிக்கு செல்லலாமே’

லிஃப்டை பிடித்து மேலே அடைந்தேன்…

மொட்டை மாடி ஒரு அமைதிப் பிரதேசம்…. அப்பார்ட்மென்ட் நிர்வாகம் செய்பவர்களின் அடிப்படை கடமையான சுத்தம் அங்கே இருந்தது. (ஒரு மூதாட்டி வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சனை செய்யாத தால்) குறுக்கும் நெடுக்கும் நடக்கும் போது கொஞ்சம் கவனம் தேவை – கொடிக் கயிறு கழுத்தை அறுத்து விடும் (நீங்க வேற….? கட்சிக் கொடி இல்லீங்க… துணி காயப் போடற கயிறு). நான் இன்று நடப்பதாக இல்லை… காற்று நன்றாக வீசும் இடம் தேடி ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தேன்…

எனக்கு இது ரொம்ப பிடித்தமான இடம் என்றாலும் அடிக்கடி வர மாட்டேன்…

யாரும் வருவதில்லை…. சம உயர கட்டிடங்கள் நெருக்கத்தில் ஒன்று இரண்டு இருந்தாலும் யாரும் மாடிக்கு வந்தது நான் பார்ததில்லை. இப்பொழுதும் இந்தப் புழுக்கதிலும் 6:30மணி தொலைக் காட்சித் தொடர் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம், கொஞ்சம் காற்று

வாங்குவதில் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை. சிறு குழந்தைகளும் விலக்கல்ல…

360 டிகிரி கோணத்தில் பார்வையைப் படர விட்டேன். அந்த பிரம்மாண்ட ஐ.டி. வளாகத்தின் இரண்டு பெரிய கட்டிடங்கள் கட்டி ஒரு வருடம் ஆகிறது. முதல் பகுதியில் பத்து மாடிகளில் விளக்கு எரிகின்றது. இன்னும் சில மாடிகளில் யாரும் இல்லை. அதை ஒத்த இரண்டாம் பகுதி முழுதும் இருட்டாய்… இரண்டிலும் முழுவதுமாக ஆட்கள் இருந்தால் இன்னும் பல ஆயிரம் பேர் வேலை செய்வார்கள். அப்படியே வட்டமடித்து வந்தால் அந்த புறவழிச் சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன…. இரு புறம் பல உயர்ந்த அடுக்கு மாடிக் குடியிருப்பபுகள் கட்டப்பட்டும், கட்டும் நிலையிலும்…. அதில் ஒன்று முழுதும் முடிவடைந்தும் ஆட்கள் இன்னும் குடி வர வில்லை. என்றாலும் இன்னும் பல கட்டிடங்கள் கட்டப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தூரத்தில் நிழல் போல் தெரிந்த பரங்கி மலையைச் சிறிது நேரம் பார்த்து விட்டு கண்ணை வான் நோக்கினேன்…

வானத்தில் தனியாய் அந்தப் பிறை நிலா! சிறிது தூரம் தள்ளி பளிச்சென்று ஒரு ஒற்றை நட்சத்திரம். இன்னும் வானத் தோட்டத்தில் மற்ற பூக்கள் பூக்கத் தொடங்கவில்லை. இவை இரண்டும் மட்டுமே! அதிலும் அந்த நட்சத்திரம் கூடுதல் பிரகாசத்துடன். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் ஒளி கூடிக்கொண்டே போக சட்டென்று ஒரு ஒளிக் கீற்று என்னை நோக்கி வந்தது… கண்ணை மூடித் திறந்தால் அருகே சின்னப் புகை மூட்டம்…… சிறிது நேரத்தில் தெளிய பார்வையில் எதுவும் படவில்லை. ஆனால் ஒரு வாடை இருந்தது. தீபாவளிக்கு பாம்பு மாத்திரை கொளுத்தும் போது வருமே.., அது போல். சுற்று முற்றும் பார்த்தேன். அடுத்துள்ள மாடிகளில் எந்தச் சலனமும் இல்லை. சுற்றுப் புறமும் அமைதியாகவே இருந்தது….. கொஞ்சம்

அமைதியாகி சிறிது மூச்சுப் பயிற்சி செய்தேன்…. கண் மூடி தியானம் செய்வதுபோல் பாவனை செய்ய

“முரளி……” என்று யாரோ மென்மையாக கூப்பிடுவது போல் இருந்தது…. கண்ணைத் திறந்து பார்த்தேன். யாரும் இல்லை. மொட்டை மாடி முழுதும் யாரும் இல்லை.

மீண்டும் அந்தக் குரல் மென்மையாக “முரளி…..” என யாரோ நம்மை கேலி செய்கிறார்கள் என்று புரிந்தது. இது போன்ற வேலையெல்லாம் என் தம்பி செய்வான்.

“கோபி விளையாடாதே… நேர வா…” என்றேன்.

“நான் கோபி அல்ல” என்றது குரல்.

சற்று பதட்டமாகி “யா ஆ ஆ ரு.? என்றேன்.

“நான் தான் கடவுள்….!”

‘களுக்’ கென்று சிரித்து விட்டேன்.

“என்ன சிரிப்பு….?”

“இல்ல இந்தப் பெயரை வைத்து இங்கே பலர் பல விதமாக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்”

“உண்மை தான்…. ஆனால் அதற்கும் காரணம் நானும் என்னைப் போன்றவர்களும் தான். அதோ ஓளி வீசிக்கொண்டிருக்கும் நட்சத்திரம் தெரிகிறதே…. ஆங்கிருந்துதான் நான் வருகிறேன்…. அது நட்சத்திரம் அல்ல நான் வந்த விண்கலம். இதே நேரத்தில் என்னைப் போல் பலர் பூமியில் இறங்கி இருக்கிறோம்” என்றது குரல்…

என்னால் நம்ப முடியவில்லை…. கண் முன் எதுவும் புலப் படவில்லை. வானில் தெரிந்த நட்சத்திரம் மட்டும் மின்னிக் கொண்டிருத்தது….

குரல் தொடர்ந்தது….

“என்ன யோசனை….? நாங்கள் வேற்றுக் கிரக வாசிகள்.. இந்த பூமியில் உள்ளவர்களை விட பல மடங்கு அறிவிலும் அறிவியலிலும் தேர்ச்சி பெற்றவர்கள்…. எங்களுக்கு மற்றவர் மனங்களை கட்டுப் படுத்தும் திறமை உண்டு….. ஒரு விதமாகச் சொல்வதென்றால் நீங்கள் எல்லோரும் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறீர்கள்…….”

“அது எப்படி…..?”

குரல் தொடர்ந்தது. “நாங்கள் பூமிக்கு பல்லாயிரம் வருடங்களாக வந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு மனிதர்கள் மேல் எப்பொழுதும் ஒரு கண் உண்டு, பயமும் உண்டு. எங்கே அவனை சுயமாகச் சிந்திக்க விட்டால் அடுத்து இருக்கும் எங்கள் மீது ஆளுமை செய்யும் திறமை வளர்த்துக் கொண்டு விடுவானோ என்று. இதற்காகவே நாங்கள் அவனை சுயமாக சிந்திக்கும் திறமையை வளராமல் இருப்பதற்கு பல வழிகளைக் கையாண்டு இருக்கிறோம்.

உதாரணமாக உங்கள் மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்…. ஒவ்வொரு சில ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை சிலரைத் தேர்ந்தெடுத்து சில மதக் கொள்ககளைப் பரப்புவோம். நான் ஏற்கனவே சொன்னது போல் மனிதனை ஆட்டு மந்தை போல் ஒருவன் பின்னால் செல்ல வைக்கும் யுக்தி எங்களுக்குத் தெரியும். நாங்கள் தேர்வு செய்பவர்களுக்கும் இத் திறனை அளிப்போம்… கிட்டத்தட்ட அவர் மூலம் செயல் படுவோம். உலகின் பல்வேறு இடங்களிலும் இது போல் ஒரே சமயத்தில் இக்

கொள்கைகளப் பரவச் செய்வோம்…

நான் சந்தேகமாக “அப்ப எதுக்கு பல மதங்கள்…..?”

“அதுவும் எங்கள் வேலை தான்… சில நூற்றாண்டுக்கு ஒரு முறை வேறு வேறு கொள்கை கொண்ட மதங்களைத் தோற்றுவித்து தாங்கள் சொல்லும் கடவுளே சிறந்தது என்று கூறுவர். அதன் பின்னால் மறைவில் சிரிப்பது நாங்களே. உற்றுப் பார்த்தாய் என்றால் உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு கொள்கையின் பின்னால் செல்லும் மந்தைகளே…!“

நான் யோசித்தபடி “இப்ப சிலர் கடவுள் இல்லை, மதங்கள் இல்லை என்று நம்ப ஆரம்பித்து விட்டார்கள்”

குரல் சிரித்து விட்டுத் தொடர்ந்தது. “அதுவும் எங்கள் ஏற்பாடுதான்,

இருக்கு – இல்லை

இந்த வேறுபாடு உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும். இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தாலும் நம்புவதா கூடாதா என்ற சந்தேகம் அலைக் கழித்துக் கொண்டிருக்கும். நம்பாதவர்கள் நம்புவதா, நம்புபவர்கள் நம்பாதிருப்பதா என்ற தெளிவற்று இருப்பர். உண்மையில் ஆத்திகம் எத்தனை பலமானதோ அதே போல் தான் நாத்திகமும். ஆனால் இரண்டுமே ஒன்றுதான் ஏனென்றால் இரண்டையும் உருவாக்கியவர்கள் நாங்களே! சூட்சுமத்தை கவனித்தாயா இந்த இரண்டை வைத்தே உலக மக்கள் அனைவரும் இரு குடையின் கீழ் கொண்டு வந்து விட்டோம்….“

“இரண்டாவதாக ஒரு முக்கியமான ஒன்றை இந்த நூற்றாண்டில் இந்த உலகத்துக்கு அறிமுகப் படுத்தி முழ

வெற்றி அடைந்துள்ளோம். என்ன சொல்லு பார்ப்போம்…“

யோசித்தேன் ஒன்றும் தோன்றவில்லை…

குரல் தொடர்ந்தது “அது தான் தொலைக் காட்சிப் பெட்டி. இது எங்கள் நவீனக் கண்டு பிடிப்பு. நாங்களே எதிர் பார்க்காத அளவு மனிதர்களை கட்டுப் படுத்தி சிந்திக்கும் திறனை மழுங்க வைத்துள்ளோம்…. மனிதன் அந்த மாயப் பெட்டியில் மயங்கியே கிடக்கிறான்…. எங்கள் கிரகத் தலைமைக்கு மிக்க மகிழ்ச்சி”

“ஏன் உங்கள் கிரகத்தில் தொலைக் காட்சி கிடையாதா…..?

“உண்டு. ஆனால் எங்கள் கிரகவாசிகள் அனைவரும் உண்மை மட்டுமே பேசுவர். அங்கு பொய், கற்பனை, ஜாலங்கள், ஏமாற்றுதல் கிடையாது. தொலைக் காட்சியில் உண்மைச் செய்திகள் கருத்துக் கலப்படம் இல்லாமல் இருக்கும். திரிப்பது, திணிப்பது எல்லாம் அவர்கட்குத் தெரியாது. பூமியில் அதை ஒரு கலையாகவே செய்யக் கற்றுத் தந்திருக்கிறோம். அந்தக் கலையில் மனிதர்கள் மிகவும் சிறந்து விளங்குகிறார்கள். அதுவும் ஒரே செய்தியை பல சானல்களில் பிச்சிப் பிச்சிக் கொத்து பரோட்டா போடுவதைப் பார்க்க மிகுவும் ருசிகரமாக உள்ளது.“

குரல் சிறிது அமைதியாகி விட்டது.,

நான் சிறிது கனைத்து “எதற்காக என்னிடம் இதையெல்லாம்…? என்று இழுத்தேன்.

குரல்: “எங்கள் கிரத்தில் சிலர் நாங்கள் பூமிக்கு தீராத தீமை செய்து விட்டதாக வருந்துகிறார்கள்… ஒரு பாவமும் அறியாது திரிந்து கொண்டிருந்த மனிதனை, கடவுள்கள், மதங்கள் என்ற பிரிவை ஏற்படுத்தி அவர்களிடையே

மோதலை ஏற்படுத்தி தொடர்ந்து சச்சரவில் இருக்க வைத்ததற்கு மிகவும் வருந்துகிறார்கள். உண்மையில் மனிதனின் சுய சிந்தனையை மடக்க நினைத்தது இவ்வளவு விஸ்வரூபம் எடுக்கும் என்று எண்ணவில்லை. மிகவும் வருந்துகிறோம். இந்த உண்மையை உங்கள் மூலம் உலகுக்கு தெரிவித்து, கடவுள் மதம் என்பதெல்லாம் எங்களின் திணிப்பே…. அதேபோல் கடவுள் எதிர்ப்பும் நாங்கள் உண்டாக்கிய மாயையே என்று தெரிவிக்க வேண்டும்.”

“அடடா இது ரொம்ப வில்லங்கமா இருக்கும் போல இருக்கே… கடவுளும் கடவுள் எதிர்ப்பும் நம்மள கட்டுப்படுத்த வெளியாளுங்க வேலைனு நான் சொல்லணுமா…? இரண்டு பார்ட்டியும் நமக்கு டின் கட்டிட மாட்டாங்க…”

நான் மனசில் நினைத்தது அந்த வேற்று கிரக வாசிக்கு தெரிந்திருக்கும் போல…. குரல் தொடர்ந்தது….. “எங்களால் நேரடியாக செய்ய முடியாது. உங்களில் ஒருவர் மூலமாகத்தான் முடியும். எங்கள் கிரகத்தில் நாங்கள் உங்களுக்கு நாத்திக ஆத்திக கொள்கைகளைப் கொடுத்து செய்த தீமையை எண்ணி தினம் வருந்திக் கொண்டிருக்கிறோம். இதை சரி செய்ய விரும்புகிறோம். உங்களை முடக்கி வைக்க அதைவிட சிறந்த கருவியான தொலைக்காட்சிப் பெட்டி வந்துள்ளதால் வேறு எதுவும் இனித் தேவை இல்லை. சரி என்று சொல்லுங்கள்.”

நான் யோசனை செய்தேன்…. யாரிந்தக் குரல்…. என்னை வைத்து காமடி கீமடி செய்கிறார்களா…. சரி பார்ப்போம்… குரல் வந்த திசை பார்த்துக் கேட்டேன்…. “நான் சரி சொல்வதற்கு முன் உங்களுக்கு உண்மையான சக்தி இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும்….” என்றேன்.

“கேள் என்ன வேண்டுமென்றாலும் கேள்…” என்றது குரல். சிறிது நேரம் யோசனைக்குப் பிறகு “எங்கள் பகுதியில் கடந்த பத்து வருடமாக, குடி நீர் வழங்குதல் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதை விரைவிலே முடித்துத் தர வேண்டும்” என்றேன்.

அருகில் ஒரு பல்பு ஃப்யூஸ் ஆனது போல் ஒரு ஒலி கேட்டது… வானத்தில் பளிச்சிட்ட நட்சத்திரம் காணாமல் போய் விட்டது….

நம் அடிப்படைத் தேவைகளைப் பற்றி நாம் கவலைப்பட ஆரம்பித்தால் ஆண்ட(ள்ப)வர்கள்தான் காணாமல் போய் விடுகிறார்கள் என்றால் இவருமா….? என்று பொருமிக் கொண்டே மாடியை விட்டு இறங்கினேன்….

ஆதலால் நண்பர்களே மாலை சாயும் வேளையில் மொட்டை மாடிக்கு செல்லாதீர்கள்… அந்தக் குரல் உங்களையும் அணுகக் கூடும்……!!! 

தொடர்புடைய சிறுகதைகள்
வேலுவுக்கு தகவல் வந்த போது பதறி விட்டான்.  ஓரு கணம் என்ன செய்வது. ஏது செய்வது என்று புரியவில்லை.  மனைவிக்கு இரண்டாவது பிரசவம்....   மருதுவர் சொன்னபடி பார்த்தால் இன்னும் இரண்டு வாரம் தள்ளித்தான் ஆக வேண்டும்..... இப்பொழுதேவா.....?   உடனே மருத்துவமனை செல்ல ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பேருந்து நிறுத்ததில் நான் செல்ல வேண்டிய பேருந்துக்காக காத்திருந்தேன். நடு வீதியில் பேருந்தை நிறுத்தி இரு பல்லவன் அதிகாரிகள் பயணச் சீட்டு சோதனை செய்து கொண்டிருந்தனர். பின்னால் போக்குவரத்து தடை பட்டு நிற்கும் வண்டிகள் ஓயாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.. ...
மேலும் கதையை படிக்க...
"ராஜன்ஜி....?" வேகமாகப் போய்க் கொண்டிருந்தவரை யாரோ பின்னாலிருந்து உரத்த குரலில் அழைக்க தன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தார். யார் என்பதற்குள் நாம் ராஜன் ஜி அவர்களை முழுவதுமாகப் பார்த்துவிடுவோம்.... என்ன வயது என்று தீர்மானிக்க முடியாத தோற்றம்.... முகம் முழுதும் கரு கரு தாடியில் ...
மேலும் கதையை படிக்க...
காலில் அடிபட்டு ஒய்வாக இருந்தார் ராமசாமி. என்ன ஏதென்று பதற வேண்டாம். குளியல் அறையில் வழுக்கி விழுந்து கால் கணுக்காலில் மயிரிழை உடைப்பு. கால் கட்டு போட்டு அசையக் கூடாது என்பது மருத்துவர் கட்டளை. சும்மா இருத்தல் என்றால் என்ன என்பதை இதுவரை ...
மேலும் கதையை படிக்க...
களம்: கல்லூரி வளாகம் அல்ல காலம்: 1971-72 சென்னை விமான நிலையம் இருக்கும் ஊரில் இரயில் வண்டி நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் கலைக் கல்லூரி. அதோ நம் நாயகன் கல்லூரி முடிந்து வேக வேகமாக வந்து கொண்டிருக்கும் இளைஞன். நல்ல உயரம். மெல்லிய உடல் ...
மேலும் கதையை படிக்க...
அம்மா! அம்மாவுக்கு இன்னொரு பெயர் 'உழைப்பு'. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள். சும்மா இருப்பது என்பது ரொம்ப கம்மி. இப்பவும் நான் அந்த கல்யாண மண்டபத்தின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க கீழே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தன் தங்கையின் இரண்டாவது ...
மேலும் கதையை படிக்க...
அந்த இரயில் வண்டி மைசூரிலிருந்து ஹூப்ளி சென்றுகொண்டிருந்தது. முன்னிரவில் புறப்பட்ட வண்டி அடுத்த நாள் காலைதான் செல்லுமிடம் சேரும். நானும் எனது மனைவியும் ஒரு அலுவலக நண்பரின் திருமணத்திற்குச் சிர்சி (Sirsi) சென்றுகொண்டிருந்தோம்... அலுவலக நண்பர்களின் திருமணங்களுக்குச் செல்வது என்பது ஒரு கடமையாகவே ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு கிராமம்-- நாப்பது அண்டுகளுக்கு முன்.... அது ஒரு ரொம்ப சின்ன கிராமம். இரண்டே தெரு. மேல் தெருவில் பத்து கல்லு வீடுகள், ஒரு கோவில். பின் தெருவில் முப்பது வீடுகள். டவுனுடன் தொடர்பு கொள்ள ஒரு தனியார் பேருந்து - ஓடினால் ...
மேலும் கதையை படிக்க...
எப்பொழுதாவது ராஜியைப் பற்றி பேச்சு வந்தால் உடனே சித்தி என்னைக் காண்பித்து இவன்தான் சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்து அவள் உயிரை காப்பாற்றினான் என்பார். ஆனால் உண்மை உலகுக்கு தெரிய வேண்டாமா? இதோ நடந்தது இதுதான்..... கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் இருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
பால்கனிக்கு தமிழில் என்ன வார்த்தை என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அதிகாலை கண் விழித்த பின் எவ்வளவு புரண்டும் தூக்கம் வரவில்லை. சீக்கிரம் எழுந்து வெட்டி முறிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை.... வேலை ஓய்வுக்குப் பின் ஐந்து வருடமாக நானே ...
மேலும் கதையை படிக்க...
ஏ டீ எம்
உயிர்
குருஜி
அருகே….! மிக அருகே..!
இயற்பியல் இரண்டாம் ஆண்டு
அம்மா
ஹம்பி
ஒரு கிராமம்
மருத்துவர் எங்கே..?
VIP

கடவுள் வந்தார் மீது ஒரு கருத்து

  1. Karunanidhy S says:

    Although narrations are more , the humour and sattire make the reader to go non stop. nice!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)