ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 106,500 
 

எச்சரிக்கை : இப்பதிவின் தலைப்பை யாரும் எம்.ஜி.ஆர் பாணியில் படித்துத் தொலைத்துவிட வேண்டாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. எங்கள் வீடு மெயின்ரோட்டில் இருந்து சிறிய சந்துக்குள் அமைந்திருந்தது. மெயின்ரோட்டில் எங்கள் வீட்டுக்கு முன்பாக ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அலுவலகம். அதற்கு பக்கத்தில் பூசாரிவீடு. பூசாரி வீட்டுக்கு அடுத்ததாக மிஷின்காரம்மா வீடு. அவர்கள் வீட்டுக்கு முன்பாக கடையில் வாடகைக்கு ஒரு ஒயின்ஷாப்பும், பாரும் இருந்தது.

அவ்வப்போது குடிகாரர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்வது சுவாரஸ்யமாக இருக்கும். சில குடிகாரர்கள் போதையில் விசில் அடித்துக்கொண்டே வீட்டுக்கு செல்வார்கள். சிலபேர் உரத்தக் குரலில் பழைய பாடல்களை பாடியபடியே தள்ளாடியபடியே நடப்பார்கள். இன்னும் சிலரோ போதையில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தெருவில் புரள்வார்கள். சில பேர் பச்சை பச்சையாக எதிரில் இல்லாத எதிரி எவனையாவது திட்டியபடியே நடப்பார்கள். என் பெரியப்பாவும் அந்த பாரில் அவ்வப்போது ‘கட்டிங்’ விட்டு திராவிட இனமான வரலாறு சொல்ல ஆரம்பிப்பார். தினம் தினம் ஜாலியான கண்காட்சி தான். தெருப்பெண்கள் இரவு ஏழுமணிக்கு மேல் அந்தப்பக்கமாக செல்லமாட்டார்கள். குடிகாரர்கள் யாரும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதில்லை என்றாலும் பெண்களுக்கு குடிகாரர்களை பார்த்தாலே வெறுப்பு.

ராதிகா நடித்த சித்தி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்பா சித்தி ரசிகர். எம்.ஆர்.ராதா எங்களுக்கு தூரத்து உறவினர் என்பதால் ராதிகா நடித்த படம், சீரியல் எதையும் வீட்டில் விட்டு வைப்பதில்லை. எங்கள் வீடே ‘சித்தி’யை பார்த்துக் கொண்டிருக்க, நான் குமுதத்தின் நடுப்பக்கத்தை அரைமணி நேரமாக ரசித்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு +2 பெயிலான பிறகு நடுப்பக்கத்தை மட்டும் அப்பா ‘சென்சார்’ செய்து கிழித்து தந்ததுண்டு 🙁

ஒயின்ஷாப்பில் பாட்டில்கள் உடையும் சத்தமும், ‘ஆய்.. ஊய்’ என்று பலமான சத்தமும் கேட்டது. சித்தியில் மூழ்கியிருந்ததாலும், ஒயின்ஷாப்பில் வழக்கமாக கலாட்டாக்கள் நடந்தவண்ணம் இருந்ததாலும் யாருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் மட்டும் கதவைத் திறந்துகொண்டு சென்று பார்த்தேன். பக்கத்து பூசாரிவீட்டு காம்பவுண்டை எகிறிக் குதித்து இரண்டு பேர் எங்கள் வீட்டை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். இருவர் கையிலும் உடைக்கப்பட்ட பீர் பாட்டில் முனைகள் கூர்மையாக பளபளத்தது. ஒருவனின் சட்டை முழுக்க இரத்தம். அவர்கள் ஓடிவருவதை கண்டதுமே யாரோ துரத்தி வருகிறார்கள் என்பது புலப்பட்டது. எப்படியும் எங்கள் வீட்டில் தான் பாட்டில்முனையில் கட்டாய அடைக்கலம் அடையப் போகிறார்கள் என்று தெரிந்தது. துரத்துவது போலிசாக இருந்தால் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினை வரும்.

வேகமாக ஓடிவந்து கதவை மூடி தாளிட்டேன். அப்பாவும், அம்மாவும் வித்தியாசமாக பார்த்தார்கள். உள்ளறைக்கு ஓடி, மரம் வெட்டும் இரண்டு அடி நீள கத்தியை (சாணை பிடிக்காமல் மொக்கையாக இருந்தது) எடுத்துக் கொண்டு கதவுக்கு அருகில் ஓடிவந்து நின்றேன். எங்கள் வீட்டு காம்பவுண்டை அவர்கள் எகிறிக் குதிக்கும் சத்தம் கேட்டது. நான்கைந்து நொடிகளில் கதவை நெருங்கி விடுவார்கள். “த்தா.. ங்கொம்மா.. வெட்டிடுவேன்.. குத்திடுவேன்” என்று பீதியில் வெறிக்கூச்சல் இட்டவாறே கத்தியை தரையில் சரக் சரக்கென இழுத்து பயங்கர சத்தம் எழுப்பினேன். கதவுக்கு அருகில் வந்தவர்கள் உள்ளே ஒரு ‘பெரிய ரவுடி’ இருக்கக்கூடும் என்று நினைத்திருக்கலாம். அல்லது பதட்டத்தில் உள்ளே எழுந்த கூச்சல் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். குழம்பிப் போனவர்கள் எங்களது பின்வாசல் கேட்டை எகிறிக் குதித்து ஓட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் ஓட ஆரம்பித்ததுமே எனக்கு தெம்புவந்துவிட்டது. கதவை திறந்துகொண்டு அவர்களை கத்தியோடு துரத்த ஆரம்பித்தேன். வெற்றுடம்பு. வீட்டில் இருக்கும்போது சட்டையோ, உள்பனியனோ போடுவதில்லை. கேட்டை தாண்டி ஓட ஆரம்பிக்கும்போது ‘லுங்கி’ தடையாக இருந்தது. அதை அவிழ்த்து தூக்கியெறிந்துவிட்டு ‘டாண்டெக்ஸ்’ ஜட்டியோடு அவர்களை வெறியோடு துரத்தினேன். மூன்று பெரியப்பா வீடுகளும் எங்கள் வீட்டுக்கு அருகருகே இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து வந்த வினோத சத்தத்தை கேட்டவர்களும் துணுக்கிட்டிருக்கிறார்கள். பெரிய பெரியப்பாவின் மகன் என்னவென்று பார்க்க சாலைக்கு வந்தபோது தம்பி ஜட்டியோடு கத்தியை எடுத்துக்கொண்டு இருவரை துரத்துவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்ன ஏதுவென்று தெரியாத அவரும் அந்த ‘இருவரை’ துரத்த ஆரம்பித்தார். உண்மையில் அவர்களை ஏன் கத்தியோடு துரத்தினேன் என்று எனக்கும் அப்போது தெரியாது.

குடிகாரர்கள் இருவர் மூச்சுவாங்க முன்னால் ஓட.. அவர்களை துரத்தியவாறே நாங்கள் இருவரும் பின்னால் ஓட.. ஒன்றும் புரியாமல் எங்கள் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாக ரோட்டுக்கு வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அண்ணனாவது சைலண்டாக ஓடிவந்தார். நானோ அபோகலிப்டோ வேட்டை ஸ்டைலிலும், அப்பாச்சே செவ்விந்தியர்கள் ஸ்டைலிலும் ஆய்.. ஊய்.. என்று கொடூர சத்தம் எழுப்பியவாறே துரத்தினேன். துரத்தப்பட்டவர்கள் மடிப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு அருகிலிருக்கும் குளத்துக்குள் நுழைந்து ஓட ஆரம்பித்தார்கள். குளத்தை தாண்டினால் அவர்கள் ஊருக்குள் தப்பி ஒளிவது எளிது. ஓட்டம்.. ஓட்டம்.. மரண ஓட்டம்.. அந்த அளவுக்கு வேகமாக வெறிநாய்கள் துரத்தியபோது கூட நான் ஓடியதில்லை. என்னைவிட என் அண்ணன் வேகமாக ஓடினார். முன்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களை கிட்டத்தட்ட அவர் நெருங்கிய வேளையில், அவர்களில் ஒருவன் சடன் பிரேக் போட்டு திரும்பி உடைந்த பாட்டிலை காட்ட இருவரும் திகிலடித்துப் போனோம். நோஞ்சான்களாக இருவர் இவ்வளவு தூரம் அவர்களை துரத்திவந்தது குறித்து அவன் கருடகர்வ பங்கம் பட்டிருக்க வேண்டும். “அப்படியே திரும்பி ஓடுங்கடா… முன்னாடி ஸ்டெப் வச்சா இறக்கிடுவேன்” என்று பாட்டிலை குத்துவது போல காட்ட..

முன்னால் ஓடிய வேகத்திலேயே அப்படியே அபவுட் டர்ன் போட்டு திரும்பி பின்னால் ஓட ஆரம்பித்தோம். அந்த குடிகாரர்கள் காரிய மண்டபம் பக்கமாக ஓடி ஒளிந்து எஸ்கேப் ஆனார்கள். திரும்பி ஓடிவரும்போது அண்ணன் கேட்டார். “எதுக்குடா அவனுங்களை கையில கத்தியோட துரத்துனே?”. என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. அவர்களை துரத்த வேண்ட அவசியம் எதுவுமில்லாமலேயே துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறேன். “தெரியலையே!” என்று சொன்னபோது மண்டையில் நங்கென்று குட்டினார். மேலதிக விசாரணைகளுக்கு அப்புறம் தான் தெரிந்தது. அந்த ரெண்டு பேரும் குடிபோதையில் ஒயின்ஷாப் மாடியில் இருந்து தெருவில் பாட்டில் விட்டிருக்கிறார்கள். அவர்களது போதாதநேரம் ரோந்துவந்த போலிஸ் ஜீப் ஒன்றின் மீதே பாட்டில் விழுந்து உடைந்திருக்கிறது. போலிஸ் துரத்த, இந்த அப்பாவிகள் தப்புவதற்காக எங்கள் வீட்டுப் பக்கமாக ஓடிவந்திருக்கிறார்கள்.

வீட்டு வாசலில் நின்றிருந்த அப்பா சொன்னார். “நல்லா சவுண்டு உடறே. அரசியலுக்கு போனா அசத்திடுவே!”. அதுவரை ஓ.வில் ஆரம்பிக்கும் ஸ்லோகத்தையெல்லாம் என் வாய் உச்சரிக்கும் என்பது என் வீட்டுக்கு தெரியவே தெரியாது. என்னோடு அந்த குடிகாரர்களை துரத்தி வந்த எனது அண்ணன் இப்போது அரசியல்வாதி.

– நவம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *