ஒரு ராஜ பேனாவின் கதை!

 

(கவித்துவமான தலைப்பு மாதிரி இருக்கிறதல்லவா? சூட்சுமமாக எதையோ மறைமுக மாக உணர்த்துவது போல் தோன்றுகிறதல்லவா? ஏமாந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அசல் பேனா பற்றிய கதைதான் இது!)

எனது பேனாக்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஒரு பனிப் போர், பொறாமைப் போராட்டம் நடந்துவருவதை என்னால் ஊகிக்க முடிந்தது.

சில கூட்டுக் குடும்ப வீடுகளில் ஓரகத்திகளுக்குள் எப்போதுமே ஏதாவது போட்டி பொறாமை உணர்ச்சிகள் இருந்து வரும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் செய்கைகளிலேயே அது தெரிந்துவிடும். ஒருத்தி ரசம் நன்றாகச் செய்து, அதை எல்லோரும் ‘கமகமவென்று ஜோராக இருக்கிறதே’ என்று புகழ்ந்துவிட்டால் போச்சு… அந்த ரசத்தை மற்றவள் ஊற்றிக்கொள்ள மாட்டாள். மற்றவள் சிரமப்பட்டு நல்லதொரு அழகான கோலம் வாசலில் போட்டிருந்தால், இவள் அதைக் கண்டுக்கவே மாட்டாள். அதன் மேல் வாளித் தண்ணீரை ‘தற்செயலாக’ச் சிந்திவிட்டுப் போவாள்.

வாயுள்ளவர் களுக்குள் இது மாதிரி மௌனப் போர் நிகழ்வது போல, வாயில்லாத பொருள்களிடமும் போட்டி பொறாமை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

என்னிடம் ஏழெட்டு பேனாக்கள் இருந்து வருகின்றன. அவற்றில், தொண்ணூறு விழுக்காடு எழுதாதவை. ஆனாலும், தூக்கி எறிய மனமில்லாமல் சேர்த்து வைத்திருக்கிறேன்.

என் பேனாக்களில் ஒரு தடித்த பேனாவை மட்டும் ‘ராஜ பேனா’ என்று செல்லமாக அழைப்பேன். அதை ஒரு பிரத்யேகப் பெட்டியில்தான் (எந்த நகைக் கடையிலோ தந்த பிளாஸ்டிக் பெட்டி) எப்போதும் போட்டுவைப்பது வழக்கம். அதற்கு நான் தரும் தனி அந்தஸ்து அது.

வழவழவென்று எழுதும். வாரத்துக்கு ஒரு தரம் மை போட்டால் போதும். நிறையத் தீனி போட்டு வளர்ந்த புஷ்டியான டெல்லி எருது மாதிரி இருக்கும். புதிதாக அதைப் பயன்படுத்துகிறவர்களுக்கு கை விரல்கள் எல்லாம் நோகும். அந்தப் பேனாவைச் சதா காலமும் நான் சட்டைப் பையில் வைத்துக்கொள்வது இல்லை. வாக்கிங் போகிறபோது மட்டும் வெளியே எடுத்துப் போவது வழக்கம். அது என் சட்டைப் பையில் இருக்கும்போது, ஒருவித கம்பீரம் என்னையறியாமலே உண்டாகி விடுவதை என்னால் உணர முடிந் தது. கதை எழுத மட்டுமே அந்தப் பேனா. கரடுமுரடான மலைச் சாலையில்கூட மிலிட்டரி டாங்க் தங்கு தடையில்லாமல் போவது போல, எந்தவித முரட்டுக் காகிதத்தின் மீதும் அற்புதமாக எழுதிச்செல்ல அந்தப் பேனாவால் மட்டும்தான் முடியும்.

அந்தப் பேனா மீது மற்ற ஒல்லிப் பேனாக்களுக்கு ஒரு வகைக் காழ்ப்பு உணர்ச்சி இருப்பதை நான் சில நாட்களாக அறியத் தொடங்கினேன். ஆனால், வெளியே யாரிடமும் சொல்லவில்லை. ‘வயசாகிடுச் சில்லையா, கிராக் ஏதோ உளறு கிறது’ என்று பட்டம் கட்டி விடுவார்கள் என்கிற பயம்தான் காரணம்.

ராஜ பேனாவை நான் ஒரு தனி பிளாஸ்டிக் பெட்டியில் வைப்பது தான் வழக்கம் என்று சொன்னேனில் லையா? அவ்வளவு பத்திரமாக வைத்திருந்தாலும், சில சமயம் பெட்டிக்கு வெளியே அது விழுந்துகிடக்கும். அக்னி நட்சத்திர வெம்மை தாளாமல் மனிதர்கள் வீட்டுக்கு வெளியே படுப்பது போல், பெட்டிப் புழுக்கம் தாளாமல் அது வெளியே வந்து படுத்திருக்கிறதா? நிச்சயமாக நான் அதை வெளியே வைக்கவில்லை. பின்னே எப்படி அது வெளியே வந்தது?

சொன்னால் நம்ப மாட்டீர்கள். எல்லாம் மற்ற பேனாக்களின் திரிசமன் வேலைதான். ஒரு ஃப்ளவர்வாஸில் மற்ற ஒல்லிப் பேனாக்களைப் போட்டு வைத்திருந்தேன். அவையெல்லாம் (சில இங்க், சில பால்பாயின்ட்) கூட்டணி அமைத்துக்கொண்டு, சட்டமன்றத்தில் ரகளை செய்யும் எம்.எல்.ஏ&க்களை சபைக் காவலர்கள் குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிப் போய் வெளியே போடுவது போல, ராஜ பேனாவை வெளியே இழுத்துப் போட்டிருக்கின்றன. நான் செய்த முட்டாள் தனம், ராஜ பேனாவின் பெட்டியை மூடாமல் திறந்து போட்டுவிட்டுப் போனது.

ஒல்லிப் பேனாக்கள் ராஜ பேனாவை ஏதாவது கடித்துக் குதறித் துன்புறுத்தி இருக்கின்றனவோ என்று நிதானமாக ஆராய்ந்தேன். நான் பயந்தது சரியாகப் போய்விட்டது. ராஜ பேனாவின் பழுப்பு நிற மினுமினுப்பில், சில இடங்களில் கொத்தின அடையாளங்கள் தென் பட்டன. பதறிவிட்டேன்.

வலிக்காமல் கைக்குட்டையால் துடைத்தேன். மற்ற பேனாக்கள் என் ராஜாவைக் கடித்து, அடித்து வெளியே கொண்டுவந்து போட்டிருக்கின்றன. ‘ஐயோ… என்னைக் கொல்றாங்களே, கொல்றாங்களே’ என்று அது கதறியிருக்கும். நான் வெளியே போயி ருந்ததால், அந்தக் கூக்குரல் என் காதில் விழவில்லை. ஸ்தலத்துக்கு உடனே விரைய முடியவில்லை.

துடைக்கும்போது கவனித்தேன்… தழும்பு போல மேலே அங்குமிங்கும் ஏதோ ஒட்டியிருந்தது. முகர்ந்து பார்த்தேன். என்னவோ மாவு!

சரிதான். கிள்ளு பலமாக விழ, மாவைத் தடவிக் கிள்ளியிருக்கின்றனர். சாமர்த்தியமான எதிரிகள் தான். சே! அறிவற்ற ஜடப் பொருள் களுக்குள்ளே மனிதனைப் போல் இத்தனை சதி அறிவா?

கீழே காலை எதுவோ இடறியது. நேற்று மாலை டிபன் சாப்பிட்டுவிட்டு (கொழகொழ ரவா உப்புமா) தட்டை மேஜைக்கடியிலேயே போட்டுவிட் டேன் போலிருக்கிறது.

ராஜாவை முகர்ந்து பார்த்தேன். அதன் தேகத்தில் உப்புமா வாசனை அடித்த பின்புதான் எனக்கு உயிரே வந்தது. நல்லவேளை, நான் பயந்தது போல் அதை மற்ற பேனாக்கள் கடித் திருக்கவில்லை. அதன் உடலில் ஏற்பட்டிருந்த சொர சொரப்பு, கவனப் பிசகாக எச்சில் கையோடு நான் அதைத் தொட்டு எழுதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனாலும், நான் உஷாராகவே இருந்தேன். மற்ற பேனாக்கள் அணுக முடியாத இடமாக, புத்தக ஷெல்ப்பின் உச்சித் தட்டில் என் ராஜபேனாவை வைத்துவிட்டேன்.

ஒரு சனிக்கிழமை, பிற்பகல் இரண்டரை மணிக்குத் தடாலென்று ஒரு சத்தம்.

ஓடிப் போய்ப் பார்த்தால், என் ராஜ பேனா, பெட்டியுடன் தரையில் கவிழ்ந்தடித்து விழுந்து கிடந்தது. பெட்டி சிதறி, வேறோர் இடத்தில். இது ரயிலில் அடிபட்ட அனாதைப் பிணம் மாதிரி கோணா மாணாவென்று ஒரு ஓரமாக ஒதுங்கிக் கிடந்தது. பதறித் துடித்து, ராஜாவை அள்ளினேன்.

அதைப் பாதுகாத்த பிளாஸ்டிக் பெட்டி, மூடி தனி, அடி தனியாக மூலைக்கொன்றாகக் கிடந்தது. அந்த வரைக்கும் தன் உயிரைக் கொடுத்து, என் ராஜாவை அது காப்பாற்றிவிட்டது. கடமை உணர்ச்சி யுள்ள பெட்டி!

என் கண்களில் துளிர்த்த நீருடன், மேற்படி பெட்டியின் தியாகத்தை மெச்சி, அதைச் சகல மரியாதைகளுடன் ஓனிக்ஸ் தொட்டியில் போட்டு, மேலே ரெண்டு பூவும் போட்டு, கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே வந்தேன்.

நடந்தவை எல்லாமே ஒல்லிகளின் சதிதான் என்று எனக்குத் திட்டவட்டமாகப் புலனாயிற்று. தாங்கள் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே ஏகாதிபத்திய வெறியர்கள் ஏவுகணை மூலம் பிற நாடு களைத் தாக்குவது போல, ஒல்லிப் பேனாக்களின் கூட்டாட்சியில் விளைந்த காட்டாட்சி, ராஜ பேனாவைத் தாக்கியிருக்க வேண்டும். அது சாத்தியமா என்று யாரும் சந்தேகப்படவே தேவையில்லை. சாத்தியம்தான்.

எழுதவே எழுதாத ஒரு ரீஃபில் பேனா ராஜ பேனா வைத்திருந்த அலமாரியின் கீழே உடைந்து கிடந்தது. மேற்படி ஒல்லிகள் தங்களுக்குள் ஒருத்தரை களப் பலி கொடுக்கத் தேர்ந்தெடுத்து, மனித வெடிகுண்டு மாதிரி அந்த ரீஃபில் பேனாவை ராஜ பேனா இருந்த ஷெல்ஃபின் மீது வீசி எறிந்திருக்கின்றன. எதிர்பாராத விதமாகத் தாக்கிய தாக்கலில், ராஜ பேனாவின் பெட்டி கீழே விழுந்திருக்கிறது. பெட்டி மட்டும் மெல்லியதாக இருந்திருந்தால், ராஜ பேனா இந்நேரம் பீஸ் பீஸாகியிருக்கும்.

ஒல்லிப்பேனாக்களின் அரா ஜகத்துக்கு உடனடியாக ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று உறுதி பூண்டேன். உருப் படாத கழுதைகள்! உடனடியாக நெருப்பு மூட்டி, எதிரிகளான அத்தனை பேனாக்களையும் ஈவிரக்கமில்லாமல் கொளுத்தியே விட்டேன்.

வீடு பூரா பிளாஸ்டிக் புகை. இருமல், இத்யாதி… ஆனாலும், ராஜாவைக் காப்பாற்றிவிட்டேன் என்கிற திருப்தி.

ராஜாவைக் கொண்டே இப்போது கதை மட்டுமல்லாது, பால் கணக்கு, லாண்டரிக் கணக்கு என என் சகல எழுத்துக்களையும் எழுத வேண்டியதாயிற்று.

ஒரு தினம் போஸ்ட் ஆபீஸ§க்கு ராஜாவுடன் சென்றேன். பேரனின் ஆண்டு நிறைவுக்கான அழைப்பிதழ் களில் முகவரிகளை எழுதிக்கொண்டு இருந்தபோது, ஒரு பெரியவர் கனிவுடன் என்னருகே குனிந்து, ‘‘ஒரு நிமிஷம் பேனா தர முடியுமா?’’ என்றார். ஒல்லியாக இருந்தார்.

நான் கொளுத்திப்போட்ட ஒல்லிப் பேனாக்களில் ஒன்றை அவர் உருவம் ஞாபகப்படுத்தியது.

சிமென்ட் கலர் ஜிப்பா. மஞ்சள் வேட்டி. சின்ன தலை… அவர் தலையையே ஓர் அழுத்து அழுத்தி எழுதிவிடலாம் போலிருந்தார்.

இறந்துபோன ஒல்லிப் பேனாக் களின் ஆவிகளெல்லாம் இந்த ஆசாமியைத் தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கின்றனவா? எழுதித் தருவதாக என் ராஜ பேனாவை வாங்கி, என்னமாவது செய்துவிட்டால்..?

பயந்துகொண்டே கொடுத்தேன். அந்த ஆள் பேனாவை வாங்கி எழுதினார், எழுதினார்… ரொம்ப நேரம் எழுதினார். கையெல்லாம் நடுங்கியது. வயசு காரணமல்ல; செய்யப்போகும் சதி பற்றிய பயம்.

உஷாராக அவரையே கண்காணித்துக்கொண்டு இருந்தவன், சற்றே கவனப் பிசகாக ஸ்டாம்ப் கவுன்ட்டருக்குப் போய்விட்டேன். சிறிது நேரம் கழித்துச் சட்டென்று ஞாபகம் வந்து, அந்த ஆசாமியைத் தேடினால்… ஐயோ, காணோம்! என் ராஜ பேனாவுடன் மாயமாக மறைந்துவிட்டார் அந்த ஒல்லிப்பிச்சான் பெரியவர்.

அங்குமிங்கும் ஓடினேன். ‘மச்சா னைப் பார்த்தீங்களா, மலைவாழைத் தோப்புக்குள்ளே… என் பேனாவைப் பார்த்தீங்களா, பலாமரத் தோப்புக் குள்ளே…’ என்ற பழைய பாட்டைப் பாடியவாறு, பித்தன் மாதிரி எல்லாரை யும் விசாரித்தேன்.

என் ராஜ பேனா, என் அபிமான பேனா, என் லட்சியப் பேனா என்னை விட்டுப் பிரிந்தே பிரிந்துவிட்டது. ‘அனார்… அனார்…’ என்று அனார்கலியை நினைத்துக் கதறிப் புலம்பிய ஜஹாங்கீர் மாதிரி என் அருமைப் பேனாவை நினைத்து, நாளெல்லாம் புலம்பிக் கொண்டு இருந்தேன்.

மற்ற ஒல்லிப் பேனாக்களின் ஆவிகளின் கூட்டுச் சதியேதான் இதற்குக் காரணம் என்று இப்போதும் திடமாக நம்புகிறேன்.

நன்றியுள்ள நாய்க்குக்கூட நினைவு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். நன்றி யுள்ள பேனாவுக்கு யாரும் நினைவு மண்டபம் கட்டியதாகத் தெரியவில்லை. நான் கட்டத் தீர்மானித்தேன். அதை வைத்திருந்த இடத்தில் அழகாக ஒரு மண்டபம் அமைப்பது பற்றி, கார்பென்ட்டர் ஒருவருடன் டிஸ்கஸ் செய்துகொண்டு இருந்தேன்.

‘படீர்!’

திறந்திருந்த ஜன்னல் வழியே ஒரு பெரிய கல் வந்து, ப்ரபோஸ்டு ஸைட்டைத் தாக்கியது. புத்தகங்கள் சரிந்து விழுந்தன. பெரிய கல்.

கீழேயிருந்து எந்தப் பயலோ அடுத்த பங்களாவின் மாமரத்துக்குக் குறிவைத்து எறிந்திருக்கிறான். குறி தவறி, ஜன்னலில் நுழைந்து பேனாவின் உத்தேச சமாதி இடத்தைத் தாக்கிவிட்டிருக்கிறது.

சட்டென்று என் மூளையில் ஒரு மின்னல்! இதே மாதிரி சம்பவத் தால்தான் என் ராஜ பேனாவும் அன்றைக்குக் கீழே விழுந்து இருக்குமோ? ஒல்லிப் பேனாக்கள்தான் தாக்கியிருக்கும் என்று தவறாக முடிவெடுத்து, அவற்றுக்கு நான் மரணதண்டனை நிறைவேற்றியது அவசரச் செய்கையோ? அடடா..! என் அவசர புத்தி காரணமாக, ஒரு பாவமும் அறியாத நிரபராதிகளைத் தண்டித்து விட்டேனே! யானோ எழுத்தாளன்..? யானே மூடன்! விழுகிற பாவனையில் நாற்காலியிலிருந்து தளர்ந்து, சரிந்து, தரையில் இறங்கி அமர்ந்து, விசனப்படலானேன்.

பேனாக்களோடு இனி ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று முடிவெடுத்து, இப்போது நேரடியாகவே கம்ப்யூட்டரில் டைப் செய்து வருகிறேன். ஆனாலும், என் ராஜ பேனாவில் எழுதுகிற மாதிரி சுகம் எனக்கு இதில் கிடைக்கவே இல்லை.

அப்பிராணி பேனாக்களை அநியாயமாகத் தண்டித்ததற்குத் தண்டனையாக எனக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்!

- வெளியான தேதி: 25 ஜூன் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
துபாயிலிருந்து வந்த சித்தப்பா பெண் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பிஸ்தா வாங்கி வந்துவிட்டாள். வறுத்த பிஸ்தா மேல் ஓட்டுடன் அழகாக வாயைப் பிளந்து கொண்டு சற்றே அங்குமிங்கும் சில பல உப்புக் கரிப்புடன் பிரமாதமாக இருந்தது. பிஸ்தாவில் அதன் உள்ளிருக்கும் பருப்பைவிட அதனுடைய ...
மேலும் கதையை படிக்க...
இப்போதெலலாம் கல்யாண வீடுகளுக்குப் போனால் முன் மாதிரி 'பந்திக்கு முந்திக்கோ' என்று அநாகரிகமாக விழுந்தடித்தவாறு ஒருத்தர்மேல ஒருத்தர் இடித்துக் கொண்டு, மியூஸிகல் சேரில் இடம் பிடிப்பதுபோல் டைனிங் ஹாலில் காலி நாற்காலியை நோக்கிப் பாயவேண்டிய அவசியமே இல்லை. முதலில் சாப்பிட்ட எச்சில் ...
மேலும் கதையை படிக்க...
ஒக்காண்டே தூங்கலாம்!
உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப் படுத்துக்கொண்டாலும் தூக்கம் வருவதில்லை. நண்பன் நாராயணன் அடிக்கடி சொல்வான்... ‘‘செத்தாக்கூட எனக்குத் தூக்கம் வராதுடா!’’ பிள்ளை இல்லாதவர்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும். உட்கார்ந்துகொண்டே ...
மேலும் கதையை படிக்க...
சீதே ஜே.பி.
"என்ன தாத்தா! எவ்வளவு நேரமாகக் கை தட்டிக் கொண்டே பின்னால் வருகிறேன்.  திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிறீர்களே...ஹ¥ம்... என்ன இருந்தாலும் ஒரு கெளரவ மாஜிஸ்திரேட்டோட கணவரில்லையா? புதுப் பெருமையினால் பழைய சினேகிதர்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை..." என்று பெருமூச்செறிந்தான் ரசகுண்டு. "என்னது? கெளரவ மாஜிஸ்ட்ரேட்டோட ...
மேலும் கதையை படிக்க...
சுண்டல் செய்த கிண்டல்
சீதாப்பாட்டி அப்புசாமியின் பாதங்களைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பத்துத் தினங்களாக அப்புசாமியின் பாதங்கள் பன் ரொட்டி போல் வீக்கத்துடன் காட்சி அளித்ததே காரணம். சீதாப் பாட்டிக்கு யானை என்றால் பயம். அதிலும் முக்கியமாக யானைக்கால் என்றால் யானைக்குப் பயப்படுவதைப் போல் நாலு ...
மேலும் கதையை படிக்க...
"சீதே! அப்புசாமி பல்லை நறநறத்தார். "நீ என்னை ரொம்பக் கேவலப்படுத்தறே! ஒவ்வொருத்தன் தாஜ்மகால் கட்டினான். நான் கேவலம் ஒரு பாத்ரூம் கட்ட ஆசைப் படறேன் ... அதுக்கு வக்கிலையா எனக்கு?" "நத்திங் டூயிங்!" என்ற இரண்டு வார்த்தைகளோடு சீதாப்பாட்டியின் பதில் அமைந்திருந்தால் ...
மேலும் கதையை படிக்க...
விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் - நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் ...
மேலும் கதையை படிக்க...
அப்புசாமி சீதாப்பாட்டியின் தூதுவராக மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். முதல் தடவை பச்சைத் தண்ணீரைப் பல திக்குகளிலிருந்து ஜல்ஜலார் என்று வீசினார். பலனில்லை. இரண்டாம் சுற்றில் சின்னஞ்சிறு தரமான கற்களைப் பொறுக்கி ஏவினார். ஊஹ¥ம். இலக்கை அவை அடையவில்லை. மூன்றாவது சுற்றில் வாக்கிங் ஸ்டிக்கை ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் & ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி ...
மேலும் கதையை படிக்க...
சிவலிங்க செட்டியாரின் பங்களாவுக்கு நிகரான பங்களா எங்கள் கிராமத்தில் அப்போது ஏதுமில்லை. மதிப்புக்குரிய செல்வந்தர்களான நாடார் இனத்தவரை 'செட்டியார்' என்று மரியாதையாக குறிப்பிடுவது எங்கள் வட்டார வழக்கு. அசல் செட்டி நாட்டுப் புகழ்பெற்ற பங்களாக்களைப் போலவே கட்டிட நேர்த்தியும், பளபளப்பும் மழமழப்புமாக ஊரே ...
மேலும் கதையை படிக்க...
நடுக் கதையில் அப்புசாமி!
பந்தியும் ப·ப்வேயும்
ஒக்காண்டே தூங்கலாம்!
சீதே ஜே.பி.
சுண்டல் செய்த கிண்டல்
அப்புசாமி செய்த கிட்னி தானம்
விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
அப்புசாமிக்கு ஆயில் தண்டனை
புரொபசர் சகல சந்தேக நிவாரணி!
சிவலிங்க செட்டியார் பங்களாவில் தபாலாபீஸ்!

ஒரு ராஜ பேனாவின் கதை! மீது ஒரு கருத்து

  1. ரமேஷ் says:

    ஒரு பேனா!! அருமையான சிருகதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)