ஒரு மாணவன் ஃபெயிலாகிறான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 11,655 
 

துருப்பிடித்த சைக்கிளில் போய்க்கொண்டு இருந்த குமாரப்பன், ஆலமரத்தடி ஆஞ்சநேயரைப் பார்த்ததும் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டான். போகிற காரியம் கூமுட்டையாகப் போகாமல் கொய்யாப் பழமாக வேண்டும் என்பதுதான் அவன் வேண்டுதல். சாமி கும்பிடும்போதே சைக்கிளுக்குக் குறுக்காக வந்து, அவனைக் குப்புறத் தள்ளப்பார்த்த குருட்டு நாயைக் கெட்ட சகுனமாக நினைக்கவில்லை அவன். குடித்துவிட்டு வந்திருந்த தன் அப்பன் குப்பைக் குழியில் விழுந்திருந்ததைப் பாதி வழியில் பார்த்ததும்தான் பதறினான். போகிற காரியம் நாசமாகத்தான் போகும் என்று அப்போதே அவனுக்குத் தெரிந்துபோனது.

பள்ளிக்கூடத்து கிரவுண்டில் பையன்களும் பெண்களும் மொத்தப் பல்லும் தெரியச் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். சூரியனுக்கே ஏரோப்ளேன்விட்ட ஆசாமிகளைப் போல ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கை வேறு கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். தன்னைப்போலவே ஒன்பதாவதில் மூன்று வருடங்கள் ஃபெயிலாகி பெரிய டவுசர் போட்டுத் திரியும் ராமுப் பயலும் கை கொடுத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் நடுங்கிப்போனான் குமாரப்பன். ரெண்டு லட்டு போட்டு இதுதான் எட்டு என்று சொல்கிற ராமுப் பயலே பாஸாகிவிட்டான் என்றால் நாமும் பாஸ்தான் என்ற நம்பிக்கையோடு ஒட்டப்பட்டு இருந்த காகிதத்தை எட்டி எட்டிப் பார்த்தான். கோழி முட்டையில் கல் அடித்தது போல நொடுக் கென்று ஆகிவிட்டது. மூன்று வருடங்களாகத் தொடர்ந்து ஃபெயிலானவன் நாலாவது வருசமும் ஃபெயிலாகி சரித்திரம் படைத்திருந்தான்.

ஆட்டு மந்தைக்கு நடுவே இருக்கிற வேட்டை நாயைப் போலவே பையன்களுக்கு நடுவே வீரதீரமாக வாழ்ந்துகொண்டு இருந்தவன் குமாரப்பன். தென்னை மரமேறி கிணற்றில் குதிப்பது, ரெட்டை நாயைக் கண்டாலே கல்லால் அடிப்பது, ஒற்றைக் காலில் நின்று சைக்கிள்விடுவது, ஏரி மீன் பிடித்து குமரிகளிடம் கொடுத்து, பனைமரத்தடியில் குழம்பைத் தின்பது என்று வயசுக்கு மிஞ்சிய பயங்கரங்களைப் பண்ணிக்கொண்டு இருந்த குமாரப்பனைப் பார்த்தால் தைரியசாலிப் பையன்களே டவுசரைப் பிடித்துக்கொண்டு நிற்பார்கள். அப்படிப்பட்ட குமாரப்பன் நாலு முறை ஃபெயிலானால், இனி யார் மதிப்பார்கள்?

போட்ட தண்டவாளத்தில் ரயில் போவதும், வருஷமானால் குமாரப்பன் ஃபெயில் ஆவதும் ஊருக்குள் சாதாரண விஷயம்தான். நாலாவது, ஆறாவது, எட்டாவது என்று எத்தனை எத்தனையாவதிலோ எல்லாம் குமாரப்பன் ஃபெயில் ஆகியிருக்கிறான். அத்தனை ஃபெயில்களுக்கும் அஞ்சாமல் நின்ற குமாரப்பனால் இந்த ஒன்பதாவது ஃபெயிலை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. காரணம், வனிதா!

கொடிக் கம்பத்துக்குப் பக்கத்தில் நின்று சத்துணவு டீச்சரோடு பேசிக்கொண்டு இருந்த வனிதாவைப் பார்த்ததும் பற்றிக்கொண்டு வந்தது குமாரப்பனுக்கு. அவளும் ஒன்பதாவது பாஸாம்! என்ன கேவலம் இது! குமாரப்பன் ஆறாவது ஃபெயிலானபோதுதான் அந்த வனிதா பள்ளிக்கூடத்துக்கே வந்தாள். ஒரு வருசம்கூட ஃபெயிலாகாமல் கூறுகெட்டத்தனமாகப் படித்து இப்போது ஒன்பதாவதும் பாஸாகிவிட்டாள். “பயப்படாதே குமாரு! நல்லாப் படிச்சு நான் டீச்சரா வந்து உனக்குச் சொல்லிக்குடுக்கிறேன். அப்ப நீ பாஸானாப் போதும்!” என்று ஏழாவது படிக்கும்போதே இளக்காரமாகப் பேசியவள் இப்போது என்ன பேசுவாள்?

அசோக மரத்தடியில் நகத்தைக் கடித்தபடி நின்றிருந்த குமாரப்பனுக்கு அடங்காத கோபம். வருகிற கோபத்துக்கு எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால் எட்டியாவது உதைக்கலாமே என்று ஆத்திரத்தோடு காத்திருந்தான். நல்லாப் படிக்கிறவன், நேரம் தவறாம வருவான் என்று ஹெட்மாஸ்டர் சொன்னது உண்மையாகிவிட்டது. குரங்கு பெடல் அடித்தபடி வந்த மோகனரங்கனைப் பார்த்ததும் சந்தோஷமாகிவிட்டது அவனுக்கு. தர்ம அடி வாங்கிக்கிட்டு தர்மாஸ்பத்திரிக்குத்தான் போவேன் என்று அடம்பிடிக்கிற நல்லவன் மோகனரங்கன். அவனை அதட்டிக் கூப்பிட்டான் குமாரப்பன்.

“ஏய் நில்லு! நீ ஒன்பதாவது பாஸாயிட்டா, ஒங்கப்பன் கலெக்டர் ஆயிடுவானா? என் முன்னாடி குரங்கு பெடல் அடிக்கக் கூடாது, குங்குமப் பொட்டு வெக்கக் கூடாது, டவுசர் பட்டனை எப்பவும் போடக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்! ஏன்டா கேக்கலே?” என அவன் தலையில் படீர் படீரென்று அடிக்க ஆரம்பித்தான்.

இடிச் சத்தம் கேட்டதும் பயத்தோடு திரும்பிப் பார்த்தாள் வனிதா! ஆனது ஃபெயில்தான் என்றாலும், வனிதா பயந்ததைப் பார்த்ததும் சந்தோஷமாகிவிட்டது குமாரப்பனுக்கு. இன்னும் கோபத்தோடு அவனை அடித்தான். ரெண்டு ரூபாய்க்கு வாங்கிய பாம்பு மோதிரம் பயங்கரமானது என்று அப்போதே தெரியும் குமாரப்பனுக்கு. பாம்பு மோதிரம் காதைக் கடித்து, மோகனரங்கன் காதில் ரத்தம் சொட்டியது. ஓட்டமெடுத்தான் குமாரப்பன்.

ஓட்டை சைக்கிளைக் குப்புறத் தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் குமாரப்பன். வீடு வெறிச்சென்று இருந்தது. குப்பையில் விழுந்த அப்பனையும் காணோம். கொல்லைக்குப் போயிருந்த அம்மாவையும் காணோம். பெத்த மகன் கஷ்டப்பட்டு ஃபெயிலாகி வாரானே! ஏன்னு கேப்போம்னு காத்திருக்க ஒரு ஆள் இருக்கா இங்க! அவன் ஃபெயிலானதற்காக ‘ஐயோ’ என்றுசொல்லக் கூட வீட்டில் யாரும் இல்லை. அவன் ஆத்திரத்தோடு. ஈயப் பாத்திரத்தை, எச்சில் சட்டியை, அரிவாள்மணையை எட்டி எட்டி உதைத்தான். பிறகு காலைப் பிடித்துக்கொண்டு அவனே ‘ஐயோ!’ என்று கத்தினான்.

அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. குப்புறப் படுத்தான், கோழி முட்டையைக் குடித்தான், கரப்பான் பூச்சியைக் காலால் மிதித்தான், காலோரம் வந்த பூனையை எட்டி உதைத்தான், சுண்ணாம்புச் சுவரில் தலையை இடித்துக்கொண்டு விதவிதமாகச் சிரித்தான். என்ன செய்தாலும் வனிதா பாஸ் ஆனதை மட்டும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. கோயிலுக்கு முன்பாக குப்புற விழுந்தால்கூட சாமி கும்பிட்டே பழக்கப்படாத குமாரப்பன், அன்றைக்கு விநோதமான ஒரு காரியம் செய்தான். ஒற்றை ஊதுவத்தியைப் பற்றவைத்துக் கொண்டுவந்து சாமி படத்துக்குக் காட்டி, ‘சாமி! இந்த ஒருவாட்டி மட்டும் ஒன்பதாவது என்னை பாஸாக்கிடு!’

என்று வேண்டிக்கொண்டான். பிறகு சடசடவென்று எழுந்து, சருவச்சட்டி, இரும்புப் பெட்டி, இருவாய்சால், கூடை என்று கண்டதையெல்லாம் உருட்டி எதையெதையோ தேடினான்.

அரிசி, அவரைக் கொட்டை, கோழி முட்டை, பூசணிக்காய், ஆமணக்கு விதை, இஞ்சி, எலுமிச்சம் பழம் என்று கைக்குச் சிக்கிய எல்லாவற்றையும் எடுத்து ஒரு பையில் போட்டுக்கொண்டான். ஊதுவத்தி, உளுத்தம்பருப்பு, குங்கும டப்பா, துணி சோப்பு, வெத்தலை உரல் என்று இன்னும் கொஞ்சம் அள்ளிக்கொண்டான். சுவரில் தொங்கிய சீமெண்ணெய் பாட்டிலையும் எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துக்கொண்டான். பிறகு, அவன் ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான்.

திருப்பதிக்கு மொட்டை அடித்து, சந்தனம் பூசியது போல ஹெட்மாஸ்டர் வீடு மஞ்ச மஞ்சேரென்று இருந்தது. ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு முன்னால், குட்டியைக் கடிக்கிற நாயும், ஈயை எட்டி உதைக்கிற எருமையும், ஒற்றைக் காலில் நடக்கிற சேவலும் இருந்தன. ஹெட்மாஸ்டரைக் காணோம்!

வீட்டுக்குள் போய் ஹெட்மாஸ்டரைப் பார்க்க குமாரப்பனுக்கு அச்சமாக இருந்தது. கம்பராமாயணத்துல நாலாவது பாட்டைச் சொல்லு என்று எங்கே பார்த்தாலும் உயிரை எடுப்பார். பயத்தோடு வாசலிலேயே நின்றான். இருட்டுகிற நேரமாகப் பார்த்துத்தான் ஹெட்மாஸ்டர் வெளியே வந்தார். “யாரு? குமாரப்பனா? இங்க எதுக்குடா வந்தே! ஆமா கையில என்ன பையி?” என்று கேட்டார்.

ஒன்றும் பேசாமல் பையை அவர் முகத்துக்கு நேராக நீட்டினான். ஹெட்மாஸ்டர் பையை வாங்கிப் பார்த்துவிட்டு, “இதெல்லாம் எதுக்கு? அரிசி, கோழி முட்டை, ஊதுவத்தி… சீமெண்ணெய்! உன் அம்மா அடமானத்துக்குக் கொடுத்துவிட்டாளா?” – புரியாமல் கேட்டார்.

”எங்கம்மா குடுக்கல! நாந்தான் கொண்டாந்தேன்! இந்த வருசமும் ஃபெயிலாக்கிட்டீங்க என்னைய. இதையெல்லாம் வெச்சுக்கிட்டு என்னை இந்தவாட்டி மட்டும் பாஸ் போட்டுருங்க!”

‘பிப்பிப்பிரிய்…’ என்று வெற்றிலை எச்சில் தெறிக்கச் சிரித்தபடி வெளியே வந்தாள் ஹெட்மாஸ்டரின் அம்மாக் கிழவி. “டேய், பரமானந்தம். நீ வெவரமாத்தான்டா புள்ளைங்களுக்குச் சொல்லிக்குடுத்திருக்க! அரைக் கிலோ அரிசியும், வாத்து முட்டையவும் கொண்டாந்தாத்தான் பாஸ் ஆக முடியும்னு வந்து நிக்கிறான் பாருடா இவன். இதான்டா படிப்பைவிட பெரிய புத்திசாலித்தனம்!” – ஹெட்மாஸ்டரைப் பார்த்துச் சிரித்தாள் கிழவி!

ஹெட்மாஸ்டருக்குக் கோபத்தில் உச்சந்தலை மூன்று முடிகளும் நட்டுக்கொண்டன. ”அறிவிருக்காடா உனக்கு? படிக்கவும் துப்பில்ல… புத்தியும் சரியில்ல. கோழி முட்டை குடுத்தா, நான் பாஸ் போடணுமா? நீ என்னத்தைப் படிச்சுக் கிழிச்சேன்னு நான் பாஸ் போடட்டும்?” என அவனிடம் கேட்டார்.

”உங்க மகனை மட்டும் பாஸ் போட்ருக்கீங்களே…” – நாக்கு பிடுங்கும்படி ஒரு கேள்வி கேட்டான் குமாரப்பன்.

”அட தெண்டக் கருமாந்திரமே. அவன் படிப்பென்ன… உன் பவிசு என்ன? டேய் மோகனரங்கா…” – ஹெட்மாஸ்டர் வீட்டுக்குள் பார்த்துக் கூப்பிட்டார். உள்ளே இருந்து மோகனரங்கன், வெங்கலச்சொம்பு உருள்கிறபடி தடுக்கியடித்துக்கொண்டு ஓடி வந்தான். அப்பாவுக்கு முன்பாக மரியாதையாகக் கையைக் கட்டிக்கொண்டு நின்றான். கிழிந்த காதுக்கு பெரிய பிளாஸ்த்திரியாக ஒட்டியிருந்தான்.
”டேய், ரெண்டு திருக்குறள் சொல்லுடா?”

மோகனரங்கன் நான்கு திருக்குறள்கள் சொன்னான். பிறகு ஆத்திசூடி சொன்னான். ஒளரங்கசீப்பின் அப்பாவைப்பற்றி சொன்னான். குப்ளா கான் படையெடுத்ததை விவரித்தான். கலிலியோ, பூதக் கண்ணாடி, தந்துகிக் கவர்ச்சி, சவ்வூடு பரவல், இனக்கவர்ச்சிப் புழு என்று இன்னும் என்னென்னவோபற்றியெல்லாம் திக்காமல் சொன்னான். அவனை அனுப்பிவிட்டு குமாரப்பனை முறைத்தார் ஹெட்மாஸ்டர். ”பாத்தியா அவன் எப்படி ஒப்பிக்கிறான்னு. நீ அவ்ளோ சொல்லத் தேவையில்ல. நாலாவதுல படிச்சேல்ல… காக்கா கீக்கீ… அதை ஒழுங்காச் சொல்லு பாப்பம். இப்பமே பாஸ் போடறேன்!”

குமாரப்பன் மவுனமாக நின்றான். காக்கா, கீக்கி, கொக்கு, குருவியெல்லாம் தெரிந்திருந்தால், அவனே பாஸ் ஆகியிருப்பானே. பிறகு கோழி முட்டையும், அவரைக்கொட்டையும் எதற்கு? அழுவதைப் போல நின்றிருந்த குமாரப்பனைப் பார்க்க ஹெட்மாஸ்டருக்கே பாவமாகப் போனது! படிக்க வக்கில்லை என்றாலும் ஃபெயில் ஆவது அவமானம் என்கிற அளவுக்காவது புத்தி வந்திருக்கிறதே என்று அவன் மீது பரிதாபப்பட்டார்.

”டேய் கொமரப்பா, உன்னோட நல்லதுக்குத்தான்டா நான் ஃபெயில் போட்டேன். அடுத்த வருசம் ஒழுங்காப் படி. பாஸ் போடறேன். ஏழாவது படிக்கிற வரையில உன்ன மாதிரித்தான் நானும். நானு இப்போ ஹெட்மாஸ்டரு. எப்படி ஆனேன் சொல்லு… மரமண்டையில மரம் மொளைக்கறாப்பல முட்டி முட்டிப் படிச்சி…” – ஒளரங்கசீப்பின் அப்பா கதையைவிடப் பெரிய கதையாகச் சொல்லிக்கொண்டு இருந்த ஹெட்மாஸ்டரைப் பரிதாபத்தோடு பார்த்தான் குமாரப்பன். அவர் பேசுகிற வக்கணையைப் பார்த்தால், இந்த ஜென்மத்தில் பாஸ் போட மாட்டார் என்பது புரிந்தது. அவனுக்கு நிஜமாகவே அழுகை வந்துவிட்டது.

ஐயோவென்று குமாரப்பனைப் பார்த்தார் ஹெட்மாஸ்டர். “டேய் கொமாரு, அழாதடா! ஃபெயிலானதை உன் அப்பாகிட்ட சொன்னா குடிச்சிட்டு வந்து அடிப்பாருன்னு பயப்படறியா? பயப்படாத, நானே வந்து உங்கப்பாகிட்ட சொல்லிக்கிறேன். அவரு அடிக்க மாட்டாரு!” எனச் சமாதானம் செய்தார்.

“ஃபெயிலானதைச் சொல்ல எனக்கென்ன பயம்? எங்கப்பன் அடிச்சா எனக்கும் திருப்பி அடிக்கத் தெரியும். என்னய பாஸ் பண்ணலேன்னாலும் பரவாயில்ல, இந்தப் பைய வாங்கிக்கிட்டு அந்த வனிதாவை மட்டுமாச்சும் ஃபெயிலாக்கி உட்டுருங்க!” எனக் காலில் விழாத குறையாகக் கெஞ்சினான்.

பெரிதாகக் கோபம் வந்துவிட்டது ஹெட்மாஸ்டருக்கு. எருமைக்கு வைத்திருந்த எச்சில் பானையைத் தூக்கிக்கொண்டு குமாரப்பனை அடிக்க வந்தார். அடிக்குப் பயந்து சீமெண்ணெய் பாட்டிலோடு ஓடிப் போனான் குமாரப்பன். அந்த சீமெண்ணெய் பாட்டிலை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்யப்போகிறான் என்பது தெரிந்திருந்தால், ஹெட்மாஸ்டர் எச்சில் பானையைத் தூக்கியிருக்க மாட்டார்.

டவுனில் இருக்கிற ஒரு அச்சாபீஸில் கல்யாணப் பத்திரிகை அடிக்கிற சின்னச்சாமிதான் குமாரப்பனின் தாய்மாமன். அந்த மாமனுக்குப் பிறந்தவள்தான் வனிதா! குள்ளமாகப் பிறந்தவளுக்கெல்லாம் குட்டிக்கரணம் போடத்தான் தெரியும் என்று நம்பிக்கொண்டு இருந்த குமாரப்பனைத் திக்குமுக்காடவைத்தவள் வனிதா. கறுப்பாக இருந்தாலும் அவள் கண்டபடி படித்தாள். வயிற்றுக்குச் சோற்றைத் தின்கிறாளா, இல்லை… புத்தகத்தையே தின்கிறாளா என்று அச்சம் தருகிறபடி நன்றாகப் படித்தாள். கலெக்டர் ஆவேன், கண் டாக்டர் ஆவேன், ராக்கெட்டு விடற விஞ்ஞானி ஆவேன், காருல போவேன், காசு சம்பாதிப்பேன் என்று அவள் பேசுகிற பேச்சைக் கேட்டாலே பற்றிக்கொண்டு வரும் குமாரப்பனுக்கு.

“ஆயிரம் படிச்சாலும் நீ என்னத்தான் கட்டிக்கணும். நீ கலெக்டராகி வந்தாலும் சரி, நீ ஊத்தின கஞ்சியில உப்பில்லே உறைப்பில்லேன்னு நான் எட்டி உதைப்பேன். அப்ப நீ என்ன செய்வே!” என்று சிரிப்புக்காகத்தான் கேட்டான் குமாரப்பன். குரங்கைப் பார்ப்பதைப் போல ஒரு தினுசாகப் பார்த்தாள் அவள். “ஏமாந்த பசங்கள எட்டி உதைச்சிட்டா நீ பெரிய இவன் கிடையாது. நான் பெரிய படிப்பு படிச்சி போலீஸாகி உன் முட்டிய உடைச்சாலும் உடைப்பேன், இல்லே டாக்டராகி வந்து உன் வயித்தையாவது கிழிச்சாலும் கிழிப்பேன். ஆனா உன்னக் கட்டிக்க மட்டும் மாட்டேன்!” என்று சவால்விட்டிருக்கிறாள். இதை நினைத்ததும்தான் கண்ணீர் வந்துவிட்டது குமாரப்பனுக்கு. இத்தனைக்கும் காரணம் மண்டையில் புல் முளைத்த அந்த ஹெட்மாஸ்டர்தான் என்று கருவ ஆரம்பித்தான். என்ன மாதிரியே அந்த ஆளும் கண்ணுல தண்ணி உட்டு ஐயோ… ஐயோன்னு கத்தியே ஆகணும் என்று தீர்மானித்தான்.

அன்றைக்கு ராத்திரியே ஹெட்மாஸ்டர் வேட்டியைக்கூட சரியாகக் கட்டிக்கொள்ளாமல் ஐயோ… ஐயோ என்று கத்த ஆரம்பித்தார். அவர் வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் போர் பற்றி எரிந்துகொண்டு இருந்தது. ஐயோ என்று கத்தினாலும், ஓடி ஓடித் தண்ணீர்விட்டாலும் எரிந்த பிறகுதான் அணைந்தது நெருப்பு. நாலு ஆடு, ரெண்டு கோழி, ஒரு சினை எருமை எல்லாம் எரிந்து சாம்பல். “அடப் பாவி பரமானந்தா! இப்படிப் பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா, நீ வாத்து முட்டைய வாங்காமயே பாஸ் போட்டிருக்கலாமேடா!” என்று ஒப்பாரிவைத்தாள் அம்மாக் கிழவி!

ஹெட்மாஸ்டருக்கு ஆத்திரமான ஆத்திரம். பொழுது விடிந்ததும் அவர் வீரவீரமாக குமாரப்பன் வீட்டுக்கு வந்தார். “ஒழுக்கமாப் படிக்கத் தெரியாத உன் மகன் என் வீட்ட பத்தவெச்சானே, இது நியாயமா?” என்று சின்ன சந்தேகத்தைத்தான் அவர் கேட்டார். குமாரப்பனின் அம்மா வாத்தியா ருக்குப் படிக்கவில்லை என்றாலும், வாய் கிழியப் பேசுவாள். “வாய்யா வாத்தியாரே! நல்லா படிச்ச என் பையனை பெயிலாக்கிட்டு, நீயே உன் வீட்டுக்கு நெருப்பும்வெச்சிட்டு, என் மகன் மேல பழி போட வந்தியா? நீ மட்டும் ஒழுங்காஒண்ணா வதுல இருந்து என் மகனை பாஸ் போட்டிருந்தா, இந்நேரம் என் மகன் கண் டாக்டர் ஆகி இருப்பான்… கலெக்டர் ஆகியிருப்பான், ஊசி போடற நர்சு ஆகியிருப்பான், தபால்காரன்கூட ஆகியிருப்பான். அவன் வாழ்க்கையவே கெடுத்த நீ இப்ப வந்து நியாயம் கேக்கறீயா?” என்று பேயாட்டம் ஆட ஆரம்பித்தாள்.

அப்போதுதான் குப்பைக் குழியில் இருந்து எழுந்து வந்திருந்த குமாரப்பனின் அப்பா பல் விளக்காமல்கூட பயங்கரமாக ஏச ஆரம்பித்தான். “ஏன்யா வாத்தியாரே! ஆறடி ஒசரம் இருக்கிற என் மகனை பெயிலாக்கி உட்டுட்டு, மூணு அடிகூட இல்லாத உன் மகனை பாஸ் போட்டிருக்கியே, இது என்ன நியாயம்? இப்பவே பள்ளிக்கூடத்தைத் தெறந்து ஒண்ணாவதுல இருந்து என் மகன் பாஸ்தான்னு எழுதிவையி. இல்லேன்னா, உன் குடும்பம் நாசமாப் போகட்டும்னு சாமி கும்பிடுவேன். காலடி மண் எடுத்து மந்திரிச்சிவெப்பேன்.” என்று நிலவரம் இல்லாமல் பேச, ஹெட்மாஸ்டருக்கு ஆத்திரமாகிவிட்டது.

போலீஸ், கோர்ட், ஜெயிலு, முன்சீப், முதலமைச்சர் என்று ஹெட்மாஸ்டர் ஒரே கத்தாகக் கத்த ஆரம்பித்தார். குமாரப்பனைப் பிடிக்க மூன்று போலீஸ் வந்ததும் ஊரே எகிறி எகிறிக் குதித்தது. ”வூட்டுக்கு நெருப்புவெச்சவன் ஊருக்கே நெருப்புவெப்பான். அவனைத் தூக்குல போடுங்க சார்” என்று நாட்டாமை உட்பட எல்லோரும் பேசினார்கள். தூக்கில் போடுவதற்கு குமாரப்பனைத்தான் காணோம்.

குமாரப்பன் இருக்கிற இடம் வனிதாவுக்குத் தெரியும். ஊர் ஜனம் பின்தொடர, இலுப்பைத் தோப்புக்குப் போனது போலீஸ். மரம் மரமாகத் தேடி, ஒரு நடு மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்த குமாரப்பனைக் கண்டுபிடித்தார்கள். “டேய் எறங்கி வாடா! நீ ஒன்பதாவது பாஸ் ஆயிட்டே!” – ஒரு போலீஸ் சிரித்தபடி சொல்ல, இறங்கவே மாட்டேனென்று அடம்பிடித்தான் குமாரப்பன். “கல்லெடுத்தா குரங்கு இறங்கும்!” என்று சொல்லிக்கொண்டே குமாரப்பன் மீது கல் எறிந்தாள் வனிதா!

எல்லோரும் கல் எறிய, அவன் ஐயோ… ஐயோ என்று கத்திக்கொண்டு கீழே இறங்கி வந்தான். கடைவாய்ப்பல் தெறிக்கிறபடி ஓங்கி ஒரு அடி கொடுத்தார் மீசை வைத்த போலீஸ். “நீதானாடா நெருப்புவெச்சது?”

“ஆமா, நாந்தான்!” விரைப்பாகச் சொன்னான் குமாரப்பன்.

“படிக்கிற பையனுக்கு ஏன்டா இந்தப் புத்தி? ஒழுங்காப் படிச்சா, ஏன்டா ஃபெயில் போடறாங்க? ஏன் வாத்தியாரே இவனைப் பத்தாவதுக்கு பாஸ் போட்டுத் தள்ளிவிடறது?” – மீசை போலீஸ் பஞ்சாயத்து பேசினார்.

“இப்ப அவன் ஃபெயிலானானா, நாசமா போனானாங்கறது பிரச்னை இல்லே! என் வீட்டுக்கு நெருப்புவெச்சான், அதைக் கேளுங்க!” ஹெட்மாஸ்டர் காட்டுக் கத்தல் கத்தினார்.

“அட! ஏன் வாத்தியாரே தேவையில்லாமக் கோபப்பட்டுகிட்டு? படிக்கணுங்கற ஆசையிலதானே அத்தனை தப்பும் பண்ணான். படிக்க ஆசைப்பட்ட பையனை நாம குத்தம் சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப முடியுமா?” என நாட்டாமை சொல்ல… ஊரில் இருந்தவர்கள் எல்லாம் அவர் பக்கம் சாய்ந்துகொண்டார்கள்.

“டேய்! நான் உனக்கு பாஸ் போடறேன். பத்தாவது ஒழுங்காப் படிப்பியா?”-நாட்டாமை தானே வாத்தியாராகி தீர்ப்பு சொன்னார்.

“ஒம்பதாவது பாஸ் பண்ணாப் போதும். அப்புறம் பள்ளிக்கூடத்துக்கே போக மாட்டேன்!”

“பள்ளிக்கூடத்துக்கே போகாதவன் எதுக்குடா பாஸ் கேக்கறே?” – மீசை போலீஸ் சிரித்தபடி கேட்டார்.

“ஒம்பதாவது ஃபெயில் ஆனவன் ஒம்பதாவது பாஸ் ஆன வனிதாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது கேவலமில்லையா…?” – போலீஸிடம் எதிர்க் கேள்வி கேட்டான் குமாரப்பன்.

“அடீங்க… ஒழுக்கமா டிராயர் போடத் தெரியலை… கல்யாணம் கேக்கறான்… யாருடா அந்த வனிதா?”

“அதா, அங்க நிக்கிறாளே அவதான்!”

“ஏன்டா, மீசைகூட ஒழுக்கமா மொளைக்கலே… உனக்கு கல்யாணம்னா என்னான்னு தெரியுமாடா?” – மீண்டும் போலீஸ் சிரித்தபடி கேட்டார்.

“ஏந் தெரியாம… மாலைய மாத்தி தாலியக் கட்டி ராத்திரி லைட் அணைச்சிட்டு…”

நாட்டாமை பாதியில் பதறினார். “ஏய்… ஏய்…. போதும் நிறுத்துடா சாமி… வாத்தியாரே நாந்தான் சொன்னனே… பையன் கொஞ்சம் வில்லங்கமான ஆளுன்னு. பேசாம பாஸ் போட்டுவிடுங்க, தொலையட்டும். என்னங்க ஏட்டய்யா நான் சொல்லறது?” – நாட்டாமை சொல்ல, ஏட்டும் அதுதான் சரியென்பது போலத் தலையாட்டினார்.

உள்ளூர் ஆசாமிகள் எல்லாம் சேர்ந்துகொண்டு நாடகம் போடுகிறார்கள் என்று தெரிந்ததும் ஆத்திரமாகிவிட்டது ஹெட்மாஸ்டருக்கு. “பாஸ் போடறதெல்லாம் ஆகற காரியமில்ல சார்! இவன் மேல கேஸ் போடுங்க அதுதான் இப்ப நடக்கும்!” என்று உறுதியாகச் சொல்ல, அதுவரை தோதான கல்லைத் தேடிக்கொண்டு இருந்த குமாரப்பன், பெரிய கல்லாகப் பார்த்துவிட்டான். மீண்டும் ஒருமுறை ‘ஐயோ’ என்று கத்தினார் ஹெட்மாஸ்டர். அவர் வேட்டி முழுவதும் ரத்தமாக இருந்தது.

போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து ஊரைவிட்டுப் போகும்போது வனிதாவையே பரிதாபமாகப் பார்த்தான் குமாரப்பன். கல்லெடுத்து அடித்து போலீஸில் பிடித்துக்கொடுக்கிற இவளெல்லாம் கல்யாணம் கட்டிக்கொள்வாளா? மோகனரங்கத்தின் சுண்டு விரலைப் பிடித்தபடி நின்றிருந்த வனிதாவின் கண்களில் சொட்டுக்கூட பரிதாபம் இல்லை.

பல வருடங்கள் கழித்து அப்போதுதான் அந்த ஊருக்கு வந்திருந்தார் ஹெட்மாஸ்டர். குமாரப்பன் ஜெயிலுக்குப் போன ரெண்டே மாதங்களில் ஹெட்மாஸ்டரும் ஊரைவிட்டுப் போய், வேலைமாற்றலும் வாங்கிக்கொண்டார். சின்னத் தப்பு பண்ண துக்கே ஒரு பையனை ஜெயிலுக்கு அனுப்பின இவனெல்லாம் என்ன வாத்தியார் என்று ஊரே அவரைக் கரித்துக்கொட்டியது. நல்லவன் கெட்டவன் பேச்சைக் கேட்கவில்லை, நாட்டாமையை மதிக்கவில்லை, ஊரையே மதிக்கவில்லை என்று அவரைப் பார்க்கும்போது காறிக் காறித் துப்பியது. நியாயமற்ற ஊரில் இனி இருக்க மாட்டேன் என்று கோயிலுக்கு முன்பாக நின்று கத்திவிட்டுத்தான் அவர் ஊரைவிட்டே போனார்.

மகனுக்குக் கல்யாணம் என்று பத்திரிகை வைக்கத்தான் மீண்டும் ஊருக்குள் வந்தார். அவரைக் கொல்லையில் நெத்து உருவிக்கொண்டு இருந்த வனிதாவைப் பார்த்ததும் ஆர்வமாகிவிட்டது அவருக்கு. அவளுக்குத்தான் முதல் பத்திரிகை கொடுத்தார். “என்னம்மா… லீவுல வந்தீயா? என்ன படிக்கிற? டீச்சருக்கா, காலேஜா?” – ஆர்வமாகக் கேட்டார்.

பக்கத்தில் இருந்தவள் சலிப்பாகச் சொன்னாள்: “ஆ… டீச்சருக்குப் படிச்சி இவ கிழிச்சா! நீ ஊரைவிட்டுப் போனதுமே இவ படிப்பு நின்னுபோச்சி வாத்தியாரே! சமைஞ்ச புள்ளையப் படிக்கவெக்க முடியாதுன்னு அப்பனும் ஆத்தாளும் நிறுத்திட்டாங்க!”

மொட்டு மொட்டாக அறிவுவிட்டுக்கொண்டு இருந்த பெண்ணை இப்படி மொக்கையாக்கிவிட்டார்களே. அவருக்கு வேதனையாக இருந்தது. “சரி படிக்கலே, படிச்ச பையனாப் பாத்து கல்யாணம் கட்டியிருக்கலாமில்ல!”

பெண்கள் கிளுகிளுவென்று சிரித்தார்கள். “ம்… அதுக்குத்தான் வாத்தியாரே காத்துக்கிட்டு இருக்கா. ஒன்பதாவது ஃபெயிலாயி ஜெயிலுக்குப் போன பெரிய படிப்புப் படிச்ச அவளோட முறைமாமன் திரும்பி வந்ததுமே கல்யாணம்னு முகூர்த்தம் எழுதிவெச்சிட்டாங்க. பேரு குமாரப்பன். கல்யாணத்துக்குக் கண்டிப்பா வந்துடுங்க!”

ஊமை போல நின்றிருந்த வனிதாவைப் பார்த்து கோபத்தோடு கத்தினார் ஹெட்மாஸ்டர், “என்ன பொண்ணும்மா நீ? படிச்ச பொண்ணு இப்படி ஊமை மாதிரி நின்னா எப்படி? நான் இப்படித்தான் படிப்பேன், இவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு எதுத்துப் பேசத் தெரியாதா உனக்கு? வீட்டை எரிச்சி, என் மண்டைய உடைச்ச முரடனையா நீ கட்டிப்பே!”

பெண்கள் மீண்டும் கிளுகிளுவென்று சிரிக்க ஆரம்பித்தார்கள்: “ஊர் நெலவரம் தெரியாம பேசக் கூடாது வாத்தியாரே! எருமைக் கிடாயாப் பிறந்ததெல்லாம் எல்லைப் பிடாரி சாமிக்கும், பெண்ணாப் பிறந்தது எல்லாம் தாய்மாமனுக்கும்தான்னு நேந்துவிட்டு வளக்கிறதுதான் எங்க ஊருப் பழக்கம். ஊர் நோம்பு வந்தா எருமைக் கிடாயும், முகூர்த்த நாள் வந்தா வளந்த பொண்ணும் கழுத்தை நீட்டியே ஆகணும்! ஆடு பொறக்கிறதுக்கு முந்தியே கொல்லன் பட்டறையில கொடுவா செய்யிற ஊர்ல வாழ்ந்து பழக்கப்பட்டவங்க நாங்க. இருந்து பொழைச்சிப்போம். அவளப்பத்தி கவலைப்படாம போய் வா வாத்தியாரே!”

ஒரு மணி நேரம் ஓயாமல் பாடம் ஒப்பித்த அந்தப் பெண்தான் இப்போது ஒரு வார்த்தை பேசாமல் கண் துடைத்தபடி நிற்கிறாள். கல்லும் மண்ணுமாக வாரி இறைத்தபடி வந்த சூரைக்காற்று மண் விழுந்து அவள் அழுகிறாளா, இல்லை மனசு வெந்து அழுகிறாளா என்பது ஹெட்மாஸ்டருக்குப் புரியவே இல்லை!

– அக்டோபர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *