Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

ஒரு பாடம்

 

ஜனவரி மாதத்தின் இறுதிக்கட்டத்தில் குளிரும் குளிர் சார்ந்த இடமுமாக மாறிப்போன மிச்சிகன் மாநிலம் . அண்டார்டிக்காவிலும் , மிச்சிகனிலும் ஒரே விதமான குளிர் -34 . பாதரசத்தின் அளவு கீழே இறங்க இறங்க குளிரின் அளவு மேலே ஏறிக்கொண்டிருந்தது . -50 வரை போக வாய்ப்பிருப்பதாக அலறிக் கொண்டிருந்தன செய்தித்தாள்கள் .

polar vortex என்று தினுசாக ஒரு பெயரை சொன்னார்கள் . விளக்கத்தை தேடினால் , வட துருவத்தில் இருக்கும் காற்று மண்டலத்தில் அழுத்தம் அதிகமாகி உள் பக்கம் நகர்கிறது என்று தொடங்கி பக்கம் பக்கமாய் போயிற்று , குளிர் காற்று அடிக்கும் என்பதை சுத்தி வளைத்து சொல்கிறார்கள் என்று விட்டுவிட்டேன் .

அரசாங்கத்தால் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்ததால் , work from home எனச் சொல்லிவிட்டு வீட்டில் இருந்தேன், பின் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு குளிரோடு போய் சண்டை போடவா முடியும் ?

காலை ஏழு மணிக்கே மீட்டிங் ஆரம்பித்துவிட webex இல் இணைந்துவிட்டு , ஆஸ்திரேலியாவில் இருந்து எதற்கு கத்துகிறான் எனத் தெரியாமல் ஒருவன் கத்திக்கொண்டிருக்க , சீனாவில் இருந்து ஒரு அம்மையார் பதிலுக்கு கத்திக்கொண்டிருந்தார் , இதுல ஏன்டா என்னை கோர்த்து விடீங்க என எண்ணியபடி பால்கனியின் கண்ணாடிக் கதவின் மூலம் வெளியே பார்த்தேன்.

காற்றின் சீற்றம் கண்ணாடி தாண்டி வர , இலை உதிர்ந்து போன மொட்டை மரங்களின் ஆட்டமும் , பனியால் மூடிக்கிடக்கும் கார்களின் அரசல் புரசலான தோற்றங்களும் , வசந்த காலத்தில் புல்வெளியாக இருந்து இப்போது பனிப்போர்வையாய் மாறிப்போன நிலமும் கண்ணில் பட , பார்வைக்கு எட்டிய தூரம் வரை ஒரு மனித நடமாட்டமும் இல்லை . அவ்வப்போது காற்றின் அளவு அதிகமானதால் கூரைகளில் இருந்த பனி காற்று மண்டலத்தை , புகை மண்டலமாய் மாற்றிக்கொண்டிருந்தது .

மிக நீண்ட பொழுதாய் இன்று இருக்கப்போகிறது என்று எண்ணியபடி , 75 டிகிரிக்கு ஹீட்டர் வைத்திருந்தும் , மெல்ல மெல்ல ஒரு நத்தையைப் போல காலின் சுண்டுவிரலில் ஆரம்பித்து , பிற விரல்களுக்கு பரவி கணுக்காலில் ஏற ஆரம்பித்துக்கொண்டிருந்த குளிரை கவனித்துக் கொண்டிருக்கையில் , “Are u there mr …. ? ” என்ற கேள்வி இடைமறிக்க , ” opps sorry i was talking on mute ” என சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தேன் ” what was the question again ?”. எப்படியெல்லாம் இவர்களிடம் நடிக்க வேண்டி இருக்கிறது ?

ஏழு மணிக்கு என்ன தலை போகுற பிரச்சனை என்பதற்கு , 2022 வருடம் வெளியாகும் காருக்கு ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போகும் சிக்னல் ஒன்றை காணவில்லை என்ற பதில் வந்தது . கண்டுபிடித்து தரும் படி சொல்லிவிட்டு நாளைக்கு மறுபடியும் பேசலாம் என வைத்துவிட்டார்கள் . ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை .

“யார் வம்புக்கும் போகாமல் அமைதியாகத்தானே இருந்தேன் , இப்படி கிணத்த காணோம்னு சொல்லுறாங்களே , இருக்கிற ஆயிரக்கணக்கான சிக்னல்களில் இந்த எங்கேன்னு தேடுறது , சிக்கனல் ஆர்மபிக்கும் இடம் தெரிஞ்சவாவது நல்லா இருக்கும் , அதுவும் தெரியாது ” என்று பேசிக்கொண்டிருக்கையில் ஒரு உண்மை உறைத்தது , எதிர் புற சுவரில் இருந்த சிலந்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

சிலந்திகள் இது கொஞ்சம் பெரிதுதான் , நல்ல கருப்பு நிறத்தில் வாட்ட சாட்டமாய் இருந்தது . புரதப் பசி என்று நிறைய சிலந்திகளை சாப்பிட்டிருக்கும் போல,ஒரு மனிதன் பேசியதாலோ , அல்லது குளிரிலோ தெரியவில்லை அது சுவரோடு சுவராக அசையாமல் ஒட்டிக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் கவனித்து பார்த்தும் அசைவில்லை , அசைந்தால் மட்டும் அது பேசவா போகிறது என , வீட்டுற்குள் இன்னொரு குளிராய் படர்ந்திருந்த தனிமையை போக்க, மடிக்கணினியை பார்க்க கண்களை சிமிட்டி சிமிட்டி அடுத்த மீட்டிங்க்கு நேரம் ஆகி விட்டது என சொன்னது .

அடுத்த அழைப்பு முன்னதைவிட பயங்கரமான பிரச்சனை , காருக்குள் சில பகுதிகளை வைக்க இடம் இல்லை , செய்த டிசைன் தவறு என்று ஒரு பெரிய கூட்டம் இன்னொரு பெரிய கூட்டத்திடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தது , நல்ல வேளை இது 2024 இல் தான் வெளிவரும் . “இடம் இல்லைனா பக்கத்து காருல வைங்கடா ” இத சொன்னா நம்மை பைத்தியக்காரனும்பாங்க என்று நினைத்துக்கொண்டு சிலந்தியை பார்க்க , எங்கே இன்னொரு முறை பேசிவிடுவேனோ என்ற அச்சத்தில் அது ஓடி ஒளிந்து கொண்டது.

ஒரு மணி நேரம் மாற்றி மாற்றி பேசிக்கொண்டார்கள் , நம் ஏதாவது வாய் கொடுத்தது சிக்கினால் சின்னாபின்னமாவோம் என்பதால் , இரண்டு பக்கம் நபர்கள் பேசும்போதும் ” yes thats right ” என்பதை யாரும் பார்க்க முடியாது என்றாலும் கூட தலையை ஆட்டி ஆட்டி சொன்னேன்.

நிறைய பேசிவிட்டதால் பசிக்க ஆரம்பிக்க , எப்போதோ அரைத்த மாவில் , தனது கரும்பற்களை காட்டி சிரித்துக்கொண்டிருந்த தோசைக்கல்லின் மேல் , பல விசித்திரமான வடிவங்களில் தோசை ஊற்ற ஆரம்பித்தேன் . “ஓடின தானே உனக்கு தோசை கிடையாது” என்று சொன்னது சிலந்திக்கு கேட்டதா என தெரியவில்லை.

இன்னைக்கு நாள் இப்படியே தனிமையில் பேசியே போய்விடுமோ என்று இருக்கையில் , கண்ணில் பட்டது “Alaskan huskey ” பியர் பாட்டில்கள் . சிலந்தி தான் போய் விட்டது மதியத்திற்கு மேல் இந்த huskey நாயுடன் பொழுதை களிக்கலாம் என்ற உற்சாகத்தில் தோசைகளை தட்டில் போட்டுவிட்டு வந்து அமர மறுபடியும் மீட்டிங்.

இது ஆகாது என “As i am suffering from fever ” மின்னஞ்சல் அடித்துக்கொண்டிருக்கையில் இரண்டாவது கைபேசியில் வந்தது நண்பரின் அழைப்பு .

“நீங்க work from home ஆ ? ”

“ஆமாங்க ”

“நானும்தான் சியர்ஸ் ” .

“சூப்பருங்க, இந்த குளிர்ல வெளியாவா போக முடியும் ”

“நானும் குளிர பத்தி பேசத்தான் கால் பண்ணினேன் , வெளியே -34 குளிர் அப்ப நான் தண்ணிய வெளிய ஊத்துனா அது ஐஸ் ஆகணுமில்லே ? தண்ணியாதான் ஓடுது ” நம்மை ஏமாத்துறாங்க பாஸ் என்றார் .

என் அறிவுக்கண்ணை திறக்க இப்படி ஒரு அறிவாளி நண்பர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என மெய்சிலிர்த்துப்போனேன் .

“நீங்க கேட்டது சரிதான் தலைவா , ஒண்ணு பண்ணலாம் ஒரு பாட்டில்ல தண்ணிய புடிச்சு வெளிய வெச்சு பாக்கலாம் நீங்களும் வைங்க , எதுக்கும் நம்ம whatsup குரூப்ல இத போட்டு விடுங்க” என்றேன் .

அவர் வெகு சிரத்தையாக குழுவில் இந்த கேள்வியை கேட்க , வெளிய நான் வைத்த பாட்டிலை புகைப்படம் எடுத்து அனுப்பினேன் .

ஆங்காங்கே இருந்த நண்பர்கள் அவர்கள் வீட்டிற்கு வெளியேயும் தண்ணியை வைக்க சூடு பிடித்தது களம் . எல்லாரும் வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்று வெட்டியாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து ஒரு பெரிய நிம்மதி வந்தது .

“பாஸ், இதை தண்ணினு சொன்னா டம்ளர் கூட நம்பாது” என்ற வந்த விமர்சனங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஒரு சிறிய பிளாஸ்டிக் குவளையில் அதைவிட சிறிதாக தண்ணீர் ஊற்றி, “மேல கொஞ்சம் பனி மாதிரி வந்திருக்கிறது ” என்று கள நிலவரம் அனுப்பிக்கொண்டிருந்தார் போன் செய்த நண்பர் .

நான் வைத்த பாட்டில் அப்படியே இருக்க, அதை சோகத்தோடு பார்த்தேன் .

குழு நிலவரம் இப்படி இருக்க , இந்த குளிரிலும் அலுவலகத்திற்கு போன இன்னொருவர் நீரை மேல ஊற்றினால் பனியாக மாறும் youtube காணொளியை போட , குளிரை புறந்தள்ளி வீறுகொண்டு எழுந்தது தமிழர் படை.

வாளி வாளியாக அனைவரும் தண்ணீரை மேல ஊற்றியதில், குளிர் இன்னும் இரண்டு டிகிரி கீழ போக , மேல போன தண்ணீர் அப்படியேதான் கீழே இறங்கியது .

“நம்ம எங்கோ தப்பு பண்ணுறோம் பாஸ் , பால்கனியில் இருந்து ஊத்தினாதான் பனியாகும் , நிலத்தில் நின்று வீசுவதால் தண்ணிக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது , அதுக்குன்னு ஒரு நேரம் கிடைக்கணும் பாருங்க”

என்று இன்னொருவர் கொளுத்தி போட, வாளித் தண்ணீர் அவரவர் பால்கனியில் இருந்து மறுபடியும் வானம் நோக்கி பறக்க ஆரம்பித்தது.

அப்படியும் தண்ணீர் தண்ணீராகத்தான் இருந்தது.

ஒரு வேளை சுடுதண்ணீர் ஊத்தணுமோ என்ற மெசேஜ் வந்ததுதான் தாமதம், அடித்து பிடித்துக்கொண்டு அடுப்பை பற்ற வைத்ததில் சூடானது whatsup குழு .

சக்ஸஸ் சக்ஸஸ் என்று காணொளிகள் பறக்க சுடுதண்ணீர் ஊற்றினால், கிழே விழுமுன் அது புகையாகி போகும் காணொளிகள் நாலாப்பக்கம் இருந்து வரத்தொடங்கின .

ஒருவர் மட்டும் சுடுதண்ணீரை பைப்பில் பிடித்து ஊற்றினேன் வரவில்லை, ஏன் எனக்கு மட்டும் வரவில்லை என்று புலம்பினார், உடுக்கை இழந்தவன் கை போல, அடுப்பில் கொதிக்க வைத்த சுடுநீர் என்று வந்த மெசேஜ் அவரின் இடுக்கண் களைந்தது .

இன்னொரு நண்பர் ஒருவர் “அதற்கும் மேல” போய் தன் மனைவியை தண்ணீர் வீசச் சொல்லி , “slow motion “இல் அருமையாக வீடியோ எடுத்து பகிர்ந்து கொண்டதுடன் கடமை தவறாமல் தன் “whatsup status ” ஆகவும் வைத்துக் கொண்டார் .

சாதித்து விட்ட பெருமிதத்தில் வெளியே வைத்த பாட்டிலை பார்க்க “டபுள் சக்ஸஸ்” . தண்ணீர் முழுவதும் உறைந்து போய் பாட்டில் புடைத்துக்கொண்டு இருந்தது . புகைப்படம் எடுப்பதற்காக உள்ளே எடுத்து வைத்தேன் .

ஒரு புதிருக்கு விடை கண்டுபிடித்து விட்டோம் என “huskey ” உடன் கலந்துரையாடலை துவக்கினேன்.

குளிருக்கு மிக இதமாய் உள்ளே போக ஐந்தாவது பாட்டில் பாதி இருக்க ஞாபகம் வந்தது , கண்டுபிடிக்க வேண்டிய சிக்னல் .

என்ன கொடுமை என்று கணினியை தேடினால் அதில் சார்ஜ் இல்லை , குறுக்கும் நெடுக்கும் தேடுகையில் மேலாளரின் அழைப்பு.

அவருடைய வீட்டில் சண்டையா எனத் தெரியவில்லை மனுஷன் என்ன சொல்லியும் கேட்காமல் நாளை காலைக்குள் சிக்னல் வேண்டும் என்றார் ,

இண்டு இடுக்கில் தேடியும் சார்ஜ்ர் கிடைக்காததால் காற்றில் குத்தியும் , உதைத்தும் சண்டை போட, “எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என்ற குரல் என்னை அப்படியே நிறுத்தியது .

சுற்றும் முற்றும் பார்க்கையில் , தனது எட்டு கண்களை உருட்டி உருட்டி பார்த்தபடி நகர்ந்து வந்தது சிலந்தி.

பறந்து வந்து சோபாவில் ஏறிக்கொண்டேன் .

“மறுபடியும் கேக்குறேன் எதற்கு இவ்வளவு டென்ஷன் /அவசரம் ?”

“நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுறேன் பக்கத்துல வராத , அவசரம்னா கேட்ட ?”

” டென்ஷன் ஆகாம என்ன செய்யுறது உனக்கென்ன சாப்பாடு உன்னை தேடி வருது எனக்கெல்லாம் அப்படியா ”

“சாப்பாடு வரது இருக்கட்டும் , ஓடி ஓடி தண்ணி ஊத்தி என்ன கத்துகிட்ட ? ”

சிலந்தியின் கேள்வி சுத்தமாக புரியவில்லை .”தண்ணி ஊத்துறதில என்ன கத்துகிறது ? குளிர் அதிகமா இருக்குனு தெரியுது ”

கீழே வந்த நூல் ஒன்றில் தன் எட்டு கால்களையும் அசைத்து இறங்கிய சிலந்தி, சுற்றி சுற்றி சிரித்தது .

“என்ன சிரிப்பு எங்கே நீ சொல்லு பாக்கலாம் ? என்ன கத்துகிட்ட ? ”

“மிக முக்கியமான பாடம் இன்னைக்கு , என்னதான் சுடு தண்ணியாட்டம், கொதிச்சாலும் ஒரு நொடியிலே உருத்தெரியாம வாழ்கை போயிடும், இதே அமைதியா இருந்தா உறையறதுக்கும் நேரமாகும் , உறைந்தாலும் திரும்ப பழைய நிலைக்கு வந்திடலாம் ”

“யோசிச்சு பாரு ” என்று சொல்லியபடி சிலந்தி மேல ஏற ஆரம்பிக்க, எனக்கு இறங்க ஆரம்பித்தது .

உள்ளே வைத்த பாட்டிலில் சலனமில்லாமல் இருந்தது தண்ணீர் . அதை அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கையில் , மழை அடித்தபின் , பொங்கி வரும் ஆற்றில் , துள்ளி வரும் மீனை போல , மனதில் மின்னி மறைந்தது அந்த சிக்னல் தொடங்கும் இடம், கூடவே தோள்பையில் இருக்கும் சார்ஜ்ஜரும். 

தொடர்புடைய சிறுகதைகள்
2019 ஆண்டின் தீபாவளி நாள் . பேரரசன் நரகாசுரனை வாழ்த்தியும் , தீபாவளி வாழ்த்து சொல்லியும் whatsup செய்திகள் வந்து கொண்டிருக்க , மதியம் ஒரு மணிக்கு , ஒரு கார்கள் கூட இல்லாத பார்க்கிங் லாட்களை பார்த்தபடி , நான்கு ...
மேலும் கதையை படிக்க...
என் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும், கார்ட்டூன்களின் மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆனால் கேள்வி கேட்டு முழிக்க வைப்பது மட்டும் என்னிடம் . அறிவாளி என்று நினைத்து கேட்கிறாளோ இல்லை எப்படியும் தெரிய போவதில்லை கேட்டு வைப்போம் என்று ...
மேலும் கதையை படிக்க...
முந்தாநாள் தான் இந்தியாவில் இருந்து வந்தேன். இந்த இந்தியா பயணத்தில் போய் இறங்கிய முதல் நாள் காலையில் இட்லி குடல் குழம்புடன் ஆரம்பித்து , பயணத்துக்கு முந்தைய தினம் மாரியம்மன் பொங்கலும் , கறி விருந்தும் என்று முடிந்த காலம் முழுவதும் கறிக்காலமாக ...
மேலும் கதையை படிக்க...
கண்ணா, லட்டு திங்க ஆசையா ?
கேள்விக்கென்ன பதில்
அது ஒரு “கறி”க் காலம்!

ஒரு பாடம் மீது ஒரு கருத்து

  1. Balaji SVG says:

    Very Funny.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)