Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எருமைச் சவாரி!

 

‘எச’ ராமசாமியை நான் சந்திப்பேன், அதுவும் நான் பயணித்-துக்கொண்டு இருக்கும் விமானத்தின் பைலட்டாக அவன் இருப்பான் என்று நான் கற்பனையில்கூட எண்ணிப் பார்த்தது இல்லை. அந்த ஒல்லிக்குச்சி ஏர்ஹோஸ்டஸ் என்னை நோக்கி வந்தாள். பவ்யமாகக் குனிந்து, ‘‘எங்கள் கேப்டன் டி.ஜி.ராம்சே உங்களைச் சந்திக்க ஆவலோடு இருக்கிறார்’’ என்றாள்.

நான் ப்ளூ க்ராஸ் ராகவன் என்று மரியாதையோடும், மாட்டு சாணி, பூனை மூத்திரம், கொக்கு, குரங்கு, ஈ, கொசுக்களோடு வசிப்பவன் என்று வசையோடும் அழைக்-கப்படுபவன். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் கவலை-யெல்லாம் இந்த உலகத்தின் ஏகபோக உரிமையை மனிதன் மட்டுமே அனுபவித்துக்கொண்டு இருக்கிறானே என்பதுதான். நகரம், மனித சுயநலத்தின் மொத்த உருவம் என்பது என் தாழ்மையான கருத்து!

சென்னை, நுங்கம்பாக்கம் சாலையில் ஒரு முதியவர் இடமிருந்து வலமாக சாலையைக் கடக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பக்கம் அவர் இருக்கும்போது பென்ஷனாக இருக்கும் அவரது ஃபைல், அவர் அந்தப் பக்கம் போய்ச் சேரும்போது ஃபேமிலி பென்ஷ-னாகிவிடும். அந்த அளவுக்குப் பாதசாரிகளைத் துச்சமாக மதிக்கிறார்கள் நம் வாகன ஓட்டிகள். இதில் அற்ப ஜந்துக்களான நாய்களுக்கும் மாடு-களுக்கும் எங்கே இடம்? ஏது மரியாதை?

நாய் மட்டுமே ஏதோ ஓரளவுக்கு நகர சாலைப் போக்குவரத்தைப் புரிந்துவைத்திருக்கிறது என்று சொல்லலாம். பொறுமையாக வாகனப் போக்குவரத்தை ஓரக்கண்ணால் அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொண்டே இருந்து, வாகனங்கள் வருவது குறையும் விநாடி நேரத் தைப் பயன்படுத்திக்கொண்டு ‘விலுக்’கென்று ஒரே பாய்ச்சலில் அந்தப் பக்கம் போய்விடும் அதி புத்திசாலி ஜந்து!

ஆடு, மாடுகள்தான் பாவம்! எங்கேயாவது ஹைவேயில் கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டு இருக்கும். தன் சுயநல தேவைகளுக்காக ஓடி ஓடிச் சம்பாதிக்க மனிதன் போட்டி-ருக்கும் ராஜ பாட்டையை நாம் அடைத்துக்கொண்டு போகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் இருக்கும் முட்டாள் ஜீவன்கள் அவை. கும்பலாகச் செல்லும் அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் வாகன ஓட்டிகளுக்குப் பொறுமை போய்-விடும். காது கிழியும் அளவுக்கு ஹாரன் அடித்து, அவற்றை மிரளச் செய்து, அங்கும் இங்கும் தெறித்து ஓட விடுவார்கள். மாட்டு இடையனைக் காது கூசும் அளவுக்குத் திட்டித் தீர்ப்பார்கள். நான் மட்டும் அந்தக் காலத்து அரசனாக இருந்திருந்தால், அவர்களை ஒரே அமுக்காக அமுக்கிக் கழுமரத்தில் ஏற்றியிருப்பேன்.

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே தஞ்சாவூருக்குப் பக்கத்தில் வெட்டாற்றங்கரையில் இருக்கும் ‘ஒம்பத்து வேலி’ எனப்படும் இயற்கை எழில் கொஞ்சும் குக்கிராமம். ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன், தவளை, வாத்து, பாம்பு, பல்லி, எலி, புறா, குரங்கு, நாய், கிளி, மைனா, வண்ணத்துப்பூச்சி, மண்புழு என விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் என்ற சூழலில் பிறந்து வளர்ந்தவன் நான். எனவேதான், நகரத்தின் வாழ்வு உரிமையில் அடிக்கடி முரண்பட்டுப் போகிறேன்.

நானும் ‘எச’ ராமசாமியும் வாழ்ந்த அந்த இளமை பள்ளிப் பருவம் எங்களின் பொற்காலம். வாய் பேசாத ஜீவன்களோடு எங்களுக்குத் தொடர்பு மூன்று வயதிலேயே ஏற்பட்டது. எங்கள் வீட்டுக் காமாட்சி, கன்று ஈன்றதைப் பார்க்க என் அம்மா அனுமதிக்காவிட்டாலும் கட்டைச் சுவர் ஏறி, மரத்துக்குத் தாவி, தூரத்திலிருந்து பார்த்தோம். அவனை முசுக்கட்டை கடித்து, கைகால்கள் கண்டு கண்டாக வீங்கியது தனிக் கதை.

பசுவும், கன்றும் என்று ஆரம்பித்த எங்களது இனிய பொழுதுபோக்குகள் நாளுக்கு நாள் விரிவடைந்தன. துள்ளிக் குதிக்கும் கன்றை நான் வெளியே அழைத்து வந்தால், அனைத்து பால்ய கூட்டமும் கூடிவிடும். கன்று மண் தின்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு ஓலைக் குவளையை அதன் வாயில் கட்டியிருப்பார்கள். அதை ஒரு முறை ராமசாமி எடுத்து வந்து தன் வாயில் கட்டிக்கொண்டு, கன்றுக்குட்டி மாதிரி குதித்து அவன் அம்மாவிடம் மொத்து வாங்கி-னான்.

ராமசாமி சும்மாவே இருக்க மாட்டான். படுத்திருக்கும் காமாட்சியின் கழுத்தில் இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு, அதன் மேல் உதட்டை இரண்டு பக்கமும் உயர்த்தி, ‘ஈ’ என இளிக்க வைப்பான். பன்றிக் குட்டிகளை ஓட ஓட விரட்டுவான். உடம்பு முழுக்கத் துணி சுற்றிக்கொண்டு நாவல் பழ மரம் ஏறி, கிளிக்குஞ்சு பிடித்து வருவான். மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீட்டிக்கொண்டு இருக்கும் மண்-புழுக்களைப் பிடித்து பாட்டிலில் போடுவான். அதற்காக நானும் அவனும் கட்டிப் புரண்டு சண்டை போட்டி-ருக்கிறோம். அவன் வண்ணத்துப்பூச்சி பிடித்து வந்தால், அவன் கதறக் கதற நான் அதை வெளியே விட்டு-விடுவேன். அதே சமயம், தேனடை எடுக்கப்போய் குளவிக் கொட்டு வாங்கி வந்தால், நான்தான் அவனுக்கு வெங்காயம் தேய்த்துவிடுவேன்.

ராமசாமிக்கு ஒருநாள், மாடு மேய்க்கும் சிறுவர்கள் எருமை மாட்டின் மீது ஜாலியாகச் சவாரி போவது போல் தானும் போக வேண்டும் என்ற பேராவல் உண்டா கிவிட்டது. எருமை மீது உட்கார்வது மிக மிக அசௌகர்யமானது. எங்கும் பிடிமானமே இருக்காது. முதுகு எலும்பு உறுத்தும். தவிர, எருமைகள் மகா சோம்பேறிகள். நகரவே பத்து நிமிஷம் யோசிக்கும். நாங்கள் அவற்றை பிரேக் இன்ஸ்-பெக்டர்கள் என்று அழைப்போம்.

ராமசாமியின் அதீத ஆசையை நான் நிறைவேற்றிடத் துணிந்தேன். மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனுக்கு மாங்காய் லஞ்சம் கொடுத்து, அவன் ஓட்டி வந்திருந்த மாடுகளில் சாதுவாகத் தெரிந்த ஒரு எருமையின் மேல் ராமசாமியை ஏற்றிவிட்-டேன். அவனை ஏனோ எருமைக்குப் பிடிக்க-வில்லை. தலையை ஆட்டியும், பின்-பக்கக் கால்களை உதைத்தும் அது தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. எதுவும் பலிக்க-வில்லை என்று தெரிந்ததும், திடீரென நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது.

எருமை ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? படு பயங்கரமாக இருக்கும். விஷயம் கை மீறிப் போய்-விட்டது. எருமையின் கழுத் துப் பகுதிக்கு வந்து, முன்னே சரிந்தவனை அது ஒரு உதறு உதற, தலைகுப்புற விழுந்தான் ராமசாமி. ‘பேக் வீல்’ அவன் தொடையைப் பதம்-பார்த்துவிட்டது. பின்னங்காலால் உதைத்துவிட்டது சுவாமி! அன்றி லிருந்து ராமசாமிக்கு ‘எருமை சவாரி’ என்ற அடைமொழி சேர்ந்து, அது பின்னர் சுருங்கி, ‘எச’ ராமசாமி ஆனான்.

அந்த ‘எச’ ராமசாமி… மன்னிக்-கவும், கேப்டன் டி.ஜி.ராம்சே என்னைப் பார்த்ததும் மகிழ்ந்து போனான். நிறையப் பேசி-னோம்.

‘‘டேய்! அன்னிக்கு எருமை சவாரி செஞ்சே! இப்ப ஆகாச எருமை… அதான், அலுமினிய எருமையை மேய்க்கிறே! எப்படிடா இருக்கு?’’

‘‘அடப் போடா, எருமைச் சவாரில இருக்கிற த்ரில் இதுல சுத்தமா இல்ல. இது வேகமா போனாலும், எருமையைவிட மோசம்! டேக் ஆஃப் செஞ்சு, எலெக்ட்ரானிக் பாதையில ஃபிக்ஸ் செஞ்சதும் எங்க வேலை முடிஞ்சுது. டர்புலன்ஸ் வந்தா-தான் வேலை. அதையும் மெஷின்களே பார்த்துக்கும். ஏ.எல்.எஸ். வந்ததும், லாண்டிங் கூட ஈஸியாப் போச்சு! ஒரு மாசத்துக்கு எல்லாத்-தையும் மூட்டை கட்டி வெச்சுட்டு, ஒம்பத்து வேலிக்குப் போய் எருமைச் சவாரி போகணும் போல இருக்குடா! அது சரி, உன் ப்ளூகிராஸ் எப்படி இருக்கு?’’

என் கவலையைக் கொட்டினேன். பூமியில்… குறிப்பாக, நகரங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு இடமில்லாது போனதைச் சொன்னேன்.

‘‘ஆமாம்! முன்னெல்லாம் காக்காய் குருவிகள் உட்கார மொட்டை மாடியில் டி.வி. ஆன்ட்டெ-னாக்கள் இருந் துச்சு. கேபிள் டி.வி. வந்ததில் அதுவும் போச்சு. இன்னும் கொஞ்ச நாள் போனா, காக்காய் குருவிகளை நம்ம குழந்தைகள் ‘ஜூ’வில்தான் பார்க்க முடியும் போலிருக்கு!’’&ராம்சே அலுத்துக்கொண்டான்.

‘‘நல்லவேளை… ஆகாயம் மட்டும் இன்னும் பறவைகளுக்காக இருக்கு. இல்லேன்னா அதையும் ப்ளாட் போட்டு வித்துக் காசாக்கிடுவாங்க நம்ம மகா ஜனங்க!’’ என்றேன்.

‘‘அடப் போடா! ஆகாயத்தையும் அபகரிச்சாச்சு! விமானம் தரை இறங்கும் சமயத்தில், பறவைகள் எங்கள் பாதையில் வந்துவிடக் கூடாது. பறவையின் அற்ப உயிரைவிட விமானத்தின் பாதிப்புதான் எங்கள் முதலாளிகளோட கவலை. விமானத்தின் இறக்கைகளில் ஃபேன் மாதிரி ஓடிக்கொண்டு இருக்குமே, ப்ரொப்பல்லர்கள்… அதுல பறவைகள் சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான்! விமானம் மறுபடி பறக்கத் தயாராக நாட்கள் பிடிக்கும். என்கொயரியில் ஆளுக்கு ஆள் குற்றம் சாட்டுவார்கள். இதனால், ஏர்போர்ட்-டைச் சுற்றிப் பறவைகளே தென்படாத-வாறு பார்த்துக்கொள்ள ஒரு பெரிய டீமே வேலை செஞ்சுட்டு இருக்கு!’’

‘‘ஆமாம். நமக்கு நெல் வேண்டும்; ஆனால், பூச்சிகள் கூடாது! அடுக்கு மாடி வீடுகள் வேண்டும்; ஆனால் அங்கே பாம்போ, பல்லியோ, பூரானோ, எலியோ வந்துவிடக் -கூடாது. அதிவேக சாலைகள் வேண்டும்; அங்கே தப்பித் தவறி மாடோ நாயோ குறுக்கே வந்து-விடக் கூடாது! விமானம் வேண்டும்; பறவைகள் அங்கே வந்து பறக்கக்-கூடாது!’’

‘‘சுயநலம் பிடித்த மனிதர்கள் ஒழிந்து போவார்களாக!’’ & நானும் ‘எச’ ராமசாமியும் கோரஸாகச் சொன் னோம்.

பறவைகளை விரட்டிவிட்டு, விமானம் தரை இறங்கத் தன்னை தயார் செய்துகொள்ளத் தொடங் கியது!

- 06th ஜூன் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது. 'க்ளக்' என்ற ஓசையுடன் கதவு சாத்திக் கொண்டது!! குளிரூட்டப் பட்ட மிகப் பெரிய அறை. சிறிய ஓசை கூட மிகத் ...
மேலும் கதையை படிக்க...
"ச்சீ!.... என்ன ராஜேஷ்?..... யூ ஆர் வெரி நாட்டி" ஷர்மிளா முகம் சிவந்தாள். அவளின் ரோஜா நிற மெல்லிய உதடுகளின் மேல் சின்னச் சின்னதாய் நீர் மொட்டுக்கள். "கமான் ஷர்ம்ஸ். இதவிட பவர்ஃபுல்லா இன்னொண்ணு இருக்கு.. வேணுமா?" ராஜேஷ் விஷமத்தனமாக சிரித்தான். அவனுள்ளே ...
மேலும் கதையை படிக்க...
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? அவரே சொன்னது போல, ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்!’ அனுபவப்பட்ட எனக்குத்தானே அதிலுள்ள சிரமம் தெரியும்! ‘மிகப் பெரிய சிந்தனைகள் எல்லாம், எதிர்பாராத நேரத்தில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட வந்தபோது கிட்ட தட்ட விடிந்தேவிட்டது. லேட். அரை மணிக்கும் மேல் லேட். துணிகளை வீசி வீசி கொடிகளில் போட்டு வேகம் வேகமாக ...
மேலும் கதையை படிக்க...
பல்லி
வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது. தன்னை சுற்றி கோலம் போட்ட மாதிரி புள்ளி புள்ளிகளாய் பச்சை நிற பூச்சிகள் உட்கார்ந்து கொண்டு, பறந்து கொண்டு இருந்தாலும் அந்த பல்லி அவற்றைக் கண்டு கொள்ளவே ...
மேலும் கதையை படிக்க...
கொல்வதற்கு வருகிறேன்
இது, அது அல்ல
நாய் பட்ட பாடு
செல்வி
பல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)