Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எனது மனமார்ந்த நன்றி

 

என்னுடைய நண்பர் ஒருவர் பத்திரிகாசிரியராக இருக்கிறார். அவருக்கு வந்த கடிதம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. முன் பின் பார்த்திராத யாரோ ஒருவர் விகடத் துணுக்கு ஒன்றை அனுப்பி, “தயவு செய்து இதைப் பிரசுரிக்க வேணும்; அதற்காக என் ஆயுள் பூராவும் நான் தங்களுக்குக் கடமைப்பட்டவனா இருப்பேன்” என்றும் எழுதி இருந்தார். விகடத் துணுக்கு என்ன என்பது பற்றி எனக்குச் சிந்தனை ஓடலில்லை. “அடேயப்பா, ஒரு மனுஷன் ஒரு சின்ன விஷயத்துக்காக யாரோ ஒரு ஆசிரியருக்கு இப்படி ஆயுள் பூராவும் கடமைப்பட்டு விடுகிறாரே!… இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் இருப்பதென்றால் ஜீவிப்பது எப்படி சாத்தியம்?” – என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.

“இதெல்லாம் சும்மா ‘உளஉளாக் கட்டி’க்காக எழுதப்படுபவைதான்” என்று அப்புறம் சமாதானமும் அடைந்தேன்.

நன்றி தெரிவிப்பதென்பது மனிதர்கள் குணத்தில் சேர்ந்தது. நாய் இதை வெகு அழகாகச் செய்கிறதாலோ என்னவோ, மனிதன் நன்றி கெட்ட காரியங்கள் செய்யும் போது நாய்க்கும் கேவலமாக மதிக்கப்பட்டு விடுகிறான்! தற்கால நாகரிகத்தில் ஒருவர் மற்றவருக்கு ஏதேனும் சேவை செய்தவுடன், பெற்றுக்கொண்டவர் ‘தாங்க்யூ’ என்கிறார். செய்தவர் ‘நோ மென்ஷன்’ என்கிறார். ‘ஐஸா பைஸா’ என்று காரியம் தீர்ந்து விட்டது. அப்புறம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும் வேண்டாம். முன் காலத்திலெல்லாம் அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த ‘நன்றி’ என்ற குணம் மனிதனிடம் மட்டும் இல்லாமல், இதர ஜீவராசிகள் எல்லாவற்றுக்குமே இருந்திருப்பதாகவும், நன்றிக்குப் பதில் நன்றி செய்தாலொழிய அவை உட்காருவதில்லை என்றும் நினைக்கிறேன்!

ஒரு எறும்பு ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு விடுகிறது; தத்தளிக்கிறது இதைப் பார்த்த ஒரு புறா ஓர் இலையைக் கிள்ளிப் போட, அதை ஓடமாக உபயோகித்து எறும்பு கரை சேர்ந்து விடுகிறது. மறுநாள் ஒரு வேடன் அந்தப் புறாவின்மீது அம்போடவிருக்கும் சமயம் எறும்பு அவன் காலில் கடித்துக் குறி தவறச் செய்கிறது. புறா இதற்குள் ஓடி விடுகிறது. நன்றி மறவாத எறும்பின் சமாசாரம் இப்படியாச்சா? நன்றி மறவாத சிங்கம்கூட ஒரு கதையில் வருகிறது. ஒருவன் அதன் காலில் தைத்த முள்ளை எடுத்து விட்டதற்காக, அகோரப் பசியுடன் அவிழ்த்து விடப்பட்ட போதும்கூட அவனைக் கொல்ல அது மறுத்து, நாய்க்குட்டி மாதிரி நடந்து கொள்கிறது!

கீழே வார்த்த ஜலத்தை உச்சந்தலையால் கொடுக்கும் தென்னை மரங்களுக்குத்தான் நம் ஊரில் குறைவே இல்லை!

இப்படியாக ஒரு நற்காரியம் செய்தால், அது பதிலுக்கு இன்னொரு நற்காரியத்திற்கு ஆதாரமாக நிற்கிறது என்று பழங்கதைகள் கூறுகின்றன. ஆனால் எந்தக் கதையும் நன்றிக்குப் பதில் நன்றியை அடித்து வாங்கு என்று சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. தானாக ஏற்பட வேண்டிய குணம் அது. அவ்வளவுதான்!

எனக்குத் தெரிந்த ஒருவர் எங்கள் ஊரிலிருந்து வந்திருந்தார். அவரை என் குழந்தைப் பருவத்தில் நான் பார்த்திருக்கிறேன்.

“என்னடா, ஸம்பாதி! செளக்கியமாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.

“இருக்கிறேன்” என்றேன்.

“உனக்கு ஞாபகம் இருக்குமோ இல்லையோ, அந்த நாளில் உன் அப்பா முறுக்கென்றால் என்னிடம் வந்து விடுவான்… அநேகமாக நம் வீட்டில் ஒரு வேளை காபி சாப்பிட்டு விட்டுத்தான் போவான்.”

“ஓஹோ!”

“அந்த நாளில் நாங்கள் சகோதரர் மாதிரி வளர்ந்த பேர்… எத்தனை ஒத்தாசை செய்திருக்கிறேன் தெரியுமா அவனுக்கு!… உனக்கு மூணு வயசு இருக்கும், கபவாத ஜுரம் வந்து நினைவு தெரியாமல் கிடந்தாய். நம் வீட்டில் ஒற்றை மாட்டு வண்டி இருந்தது. உன் அப்பாவோ அழுகிறான்… ‘கட்டடா வண்டியை’ என்றேன். கும்பகோணத்திலே அப்போ டாக்டர் கணபதி இருந்தார். ராத்திரி பன்னிரண்டு மணிக்குப் போய்க் கதவைத் தட்டினேன்… மருந்து கொடுத்தார்… நீ பிழைத்தாய்.”

“ஓஹோ!”

“நீ செளக்கியமாக இருக்கிறாய் என்று கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நமக்கு வேண்டியவாள் நன்றாக இருந்தாலே ஒரு ஆனந்தம்தானே?… நான் இப்ப வந்தது எதற்குன்னா…” என்று தொடங்கி, என்னால் ஆகாத ஒரு காரியத்தைச் செய்து தரும்படி சொன்னார்.

நான் திணறினேன். நான் இன்று பிழைத்திருப்பதே அவரால்தான் என்று அவர் ஸ்தாபித்துவிட்ட பிறகு, அந்தக் காரியத்தைச் செய்து தராவிட்டால் இந்த ஜன்மம் வீண்தான் என்பதாக என்னை ஒரு பார்வையும் பார்த்தார்.

“ஏதோ முயன்று பார்க்கிறேன்” என்றேன்.

“அதெல்லாம் சொல்லாதே! உன் அப்பா இன்றைக்கு இருந்தானானால், அடித்து ‘அடே, செய்துவிட்டு அன்னண்டே போடா!’ என்பேன். அத்தனை சுவாதீனம் எனக்கு உண்டு!”

“நிச்சயம் பார்க்கிறேன்.”

“அப்படிச் சொன்னால் போதாது… நீதான் செய்து வைக்க வேண்டும். உன்னால் ஆகாத காரியம் இல்லை என்று சொல்லுகிறார்கள்.”

“அதெல்லாம் சரியில்லை… நான் என்னாலான வரையில் முயன்று பார்க்கிறேன்.”

“உன்னை நம்பி விட்டேன், எனக்கு வேறே யாரையும் தெரியாது.”

“ஷண்முகா!” என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டேன். நான் இதைச் செய்யாவிட்டால் என் பெயர் எப்படி அடிபடும் என்பது எனக்குத் தெரியும். என் தகப்பனார் உயிருடன் இருந்தால், “ஐயோ அப்பா! நீ நிஜமாகவே இவர்கள் வீட்டில் காபி குடித்தாயா? ஏன் குடித்தாய்?… இன்று என் உயிரை இவர் குடிக்கிறாரே!” என்று கதறிக் கண்களில் நீர் விடுவேன்.

நன்றியை அடித்து வாங்கிக் கொள்வது எத்தனை பிசகோ, அத்தனை பிசகு நன்றியை வர்த்தகம்போல் நடத்துவதே. “நீ என் கதை நன்றாயிருக்கிறதென்று பிரசாரம் பண்ணு; அதற்குப் பதிலாக நீ எழுதுவதெல்லாம் பேஷாயிருக்கிறதென்று நான் சொல்கிறேன்” என்று இரண்டு எழுத்தாளர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டால் எத்தனை அபத்தம்!

ஆனால் எத்தனை பேர் இம்மாதிரி ஒரு வலையில் விழுந்து விடுகிறார்கள்! “ஸம்பாதி, நீ எழுதி இருக்கிறது நன்றாய் இருக்கிறது?” என்று யாராவது சொன்னால், பதிலுக்கு அதையே அவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டும் நான் பயப்படுவதில்லை. இப்படிப் பாராட்டுகிற நண்பர், சில காலத்திற்குப் பிறகு “நீ எழுதுவதெல்லாம் முன்னைப்போல் இல்லை இப்போ! நீதான் என்ன பண்ணுவாய்! உனக்கும் வாரா வாரம் விஷயம் அகப்பட வேண்டாமா?” என்று கேட்கத் தொடங்கி விடுவாரே என்றுதான் பயப்படுவேன்.

எப்போதுமே, நம்மைப் புகழ்ந்து பேசுகிறவர் அகழ்ந்து பேசும் ஸ்தானத்தையும் லகுவாக அடைந்துவிட முடியும். புகழ்வது என்பது மதிப்புப் போடுவதுதானே? மதிப்புப் போடுபவர் பண்டத்தைவிட உயர்வானவர் தானே? நல்லதைக் கேட்பவன் கெட்டதைக் கேட்கவும் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

நன்றி என்பது மனிதனின் உள்ளத்தில் உதயமாக வேண்டிய பூ, காய், அல்லது பழம். இதற்கும் உலகத்தில் இதர செடி கொடிகளில் வளரும் பழங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. செடி கொடிகளில் வளர்பவைகள் நாளுக்கு நாள் பருத்து வரும். உள்ளத்தில் முளைக்கும் நன்றி நாளுக்கு நாள் சிறுக்கும்!

ஒருவர் நமக்கு எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நம் உள்ளம் நன்றியினால் பூரித்துப் போகிறது. அந்தச் சமயத்தில், “இவரைப்போல் உண்டா? காமதேனு, கல்பக விருட்சம் எல்லாமே இவர் பக்கத்தில் நிற்க அருகதை அற்றவையாச்சே!” என்று எண்ணுகிறான் மனிதன். ஒரு வருஷம் கழித்து அதே பேர்வழியிடம் கேளுங்கள். பழைய உற்சாகம் மிகக் குறைந்து போய்த்தான் இருக்கும்! “என்னமோ செய்தார்!…. அவர் கையால் அடைய வேண்டும் என்று நமக்குப் பிராப்தம் இருந்தது. இல்லாவிட்டால், நம்மைப் பார்த்துச் செய்வானேன்?” என்று வேதாந்த பரமாகப் பதில் கிடைக்கும்.

வெகு காலமாக எனக்குப் பரிச்சயமான ஒருவர் காசிக்குப் போய் வர வேண்டுமென்றும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.எனக்குத் தெரிந்த ஒரு பெரிய மனிதர் காசிக்குப் போவதாக அறிந்து, இவரை அவருடன் சேர்த்து விட்டேன்.

அதுமட்டுமல்ல; பெரிய மனிதர் மற்றவரின் சகல செலவுகளையம் தாமே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி விட்டார்! கேட்க வேண்டுமா, நன்றிப் பெருக்கை? “நீங்கள் சாட்சாத் பரமேச்வரன்தான்!” என்று பழைய பேர்வழி புகழ்ந்து விட்டுப் போனார்; திரும்பியும் வந்தார். வந்ததும் நன்றியின் அறிகுறியாக எனக்கு ஒரு குடம் அளவு பெரிசாக ஒரு கஙகைச் செம்பு கொண்டு வந்திருப்பதாகவும் அதை வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார்.

வேலைத் தொந்தரவினால் நான் போகவில்லை. மறுபடி சந்தித்தபோது கை ஜாடையாக ஒரு செம்பளவு காண்பித்து, “கங்கையை எடுத்துப் போக வேண்டாமா?” என்றார்.

மேலும் ஒரு வாரம் எனக்கு ஒழியவே இல்லை. இப்போது அவர் என்னைப் பார்த்து, இரு கைகளாலும் ஒரு சிறிய உரித்த தேங்காய் அளவு காட்டி, “என்ன! இன்னும் எடுத்துக் கொள்ளவில்லையே!” என்றார்.

அடுத்த வாரம் ஒரே கையினால் கிச்சிலிப் பழ அளவு. காட்டி, “உங்களுக்கு வேண்டாமா? ரொம்பப் பேர் கேட்கிறார்கள்! நீங்கள் இன்றாவது வராவிட்டால்,போய் விடும்!” என்று எச்சரித்தார். அதற்கு மறுநாள் போய்’ சுமார் எலுமிச்சம்பழ அளவில் இருந்த காசிச் செம்மைப் கொண்டு வந்தேன்.

விசாரித்தபோது உண்மை வெளியாயிற்று : அவர் பெரிய குடம் அளவிலிருந்து எலுமிச்சம்பழ அளவு வரையில் பல கங்கைச் செம்புகள் கொண்டு வந்திருந்தார். வந்த புதிதில், நான் செய்த உதவி மனத்தில் நன்றாகப் பதிந்திருந்தது. பிரதி உபகாரமாகப் பெரிய செம்பைக் கொடுத்து விட மனம் இடங் கொடுத்தது. நாளாக ஆக நன்றியுணர்ச்சி குன்றக்குன்ற, அது கங்கைச் செம்பையும் உடனுக்குடன் பாதித்து விட்டது!

இந்த உலகத்தில் ஒரு பொருளை மற்றவரிடமிருந்து காரணமாகவோ, இனாமாகவோ அடைந்து விட்டால், இந்த நன்றிப் பிரச்னை கிளம்பி விடுகிறது. நன்றி பெரிதாக ஆரம்பித்து, சிறுகச் சுருங்கிப் போகும் சுபாவம் கொண்டதாகையால், முதலில்உதவிய ஆசாமிக்கு மனத்தாங்கல் ஏற்படுவதும் சகஜம்தான்! ஆகையால்தான் புத்திசாலிகளாக இருந்த நம் முன்னோர்கள், “எந்தக் கர்மம் செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்காதே!” என்று சொன்னார்கள். இது கடுமையான நிபந்தனைதான். எனவே பிரதிபலனே இல்லாமல் போய்விட்டால் உலகமே அழிந்துவிடப் போகிறதே என்று பயந்து, அதே மூச்சில், “உப்பிட்டவரை உள்ளளவும் நினை!” என்றும் சொல்லி, சமையலில் சர்க்கரையைவிட உப்புக்கு அதிகப் பிராதான்யம் கொடுத்து விட்டார்கள்!

மாப்பிள்ளைகளுக்கு ஏன் கெட்ட பெயர் வருகிறது? மாமனார்களிடம் பல இனாம்கள் வாங்குகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள்! பிறகு, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பதிலாக, “இது எங்கள் உரிமை” என்று வழக்குப் பேசுகிறார்கள். நன்றி என்கிற அம்சமேயின்றி நடந்து கொள்கிறார்கள்!

மனித சுபாவம், கடவுளானாலும் பிரதிப் பிரயோசனத்தை எதிர்பார்க்கிறது. ஒரு காரியம் ஆக வேண்டுமா? ஒரு பரீட்சை பாசாக வேண்டுமா? உத்தியோகத்துக்கு செலக்ஷன் ஆக வேண்டுமா? உடனே “பிள்ளையாரே உனக்கு 108 மோதகம் செய்து நிவேதனம் செய்கிறேன்” என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த நிவேதனத்துக்குக் கடவுள் உடனே நன்றி செலுத்துவதுபோல் நமக்கு நினைத்த காரியத்தில் சித்தி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்… எப்படி இருக்கிறது நியாயம்!

நவக்கிரகப் பிரீதிகள், சாந்திகள் எல்லாம் செய்கிறார்களே… எதற்கும் அடிப்படைத் தத்துவம் என்ன? “ஏ தெய்வங்களே, உங்களுக்குத் நான் மறக்காமல் படைக்கிறேன்… பதிலுக்கு நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள்!” என்று எச்சரிக்கை போல் அமைகிறது நம் காரியம்! தெய்வங்கள் நன்றி தெரிவிக்காவிட்டால், முணுமுணுத்து விட்டுப் போகிறோம். அவைகள் நம் கையில் அகப்படுதில்லையே!

எனக்கு ஒரு பெரிய குறை உண்டு. அதாவது நான் எவ்வளவு செய்தாலும் பிறர் எனக்கு நன்றி தெரிவிப்பதில்லை. நேர் எதிராகக்கூட நடந்து கொள்கிறார்கள். ஒருவருக்கு நான் அடிக்கடி கைமாறு கொடுப்பதுண்டு. ஒருபோது மட்டும், அவர் கேட்ட சமயம் என் கையில் பணம் இல்லை. உள்ளதைச் சொன்னே . அவர் கோபித்துக் கொண்டு, “கிடக்கிறான்! இவன் பணம் குப்பைக்குச் சமானம் எனக்கு! எனக்கு வேண்டியதில்லை!” என்று சொல்லி விட்டார். அதற்குப் பிறகு என்னைக் கண்டால் பேச மாட்டேனென்கிறார்; முகத்தை திருப்பிக் கொள்கிறார். ‘முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்’ என்று நினைத்து நானும் மனத்தைச் சமாதானம் செய்து கொள்கிறேன்.

என்ன செய்து கொண்டிருந்தும் பழசையெல்லாம் மறந்துவிட்டாரே என்ற தாபமே உண்டாகிறது, “வீசு வீசு வாடைக் காற்றே வீசு! மனிதனின் நன்றி கெட்ட தனத்தைப்போல் அத்தனை கொடுமை உன்னிடம் இல்லை” என்று யாரோ கவி பாடியது ஞாபகத்துக்கு வந்தது.

இதெல்லாம் கேட்ட என் மனைவி, “நீங்கள் முதல் முதலாகக் கேட்டபோதெல்லாம் உங்கள் சிநேகிதருக்குக் கொடுத்தது பிசகு!” என்று முடிவாகச் சொல்லி விட்டாள், அப்படியும் என் சஞ்சலம் தீரவில்லை. கொடுத்தது பிசகா. நன்றியை எதிர்பார்த்தது பிசகா என்ற கொந்தளிப்பு என் மனத்தில் ஓயவே இல்லை.

அது போகட்டும்; இதுவரை தொடர்ந்து வாசித்த நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இதை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்களே!

- தொடரும் 

தொடர்புடைய சிறுகதைகள்
தேவன்நான் கரூருக்குப் போன வாரம் போய்விட்டு வந்தேன். போகும்போது என்னைப் பார்த்தவர்கள் ஒரு வாரம் விச்ராந்தியாகப் போய், குடும்பத்தாருடன் இருந்துவிட்டு வரப் போகிறான் என்று எண்ணியிருப்பார்கள். வருகிறபோது நான் சந்தோஷமாகத்தான் திரும்பினேன். அப்போது என்னைக் கவனித்தவர்கள், குஷியாகக் காலsந்தள்ளி விட்டு நிஷ்கவலையாக ...
மேலும் கதையை படிக்க...
ரோடுஸென்ஸ்
'ரோடுஸென்ஸ்' என்பது, இப்படிப் போனால் இந்த இடத்தில் ஆபத்து வரும் என்று முன் கூட்டியே தெரிந்து கொண்டு அந்தப் பக்கமாகப் போகாமல் இருப்பதுதான். வண்டியோட்டக் கற்றுக் கொடுக்கும் குரு, 'மோட்டாரை ஓட்டப்போகும் ஏ ஆத்மாவே! நீ எத்தனை காலம் ஆபத்து வரும் ...
மேலும் கதையை படிக்க...
(அமரர் தேவனின் மிஸ்டர் வேதாந்தம் நாவலிலிருந்து ஒரு பகுதி)சென்னைப்பட்டணத்தைப் பெரிய நகரம் என்று எண்ணினவன் வேதாந்தம். கல்கத்தாவைக் கண்டதும் 'அம்மாடி!' என்று பிரமித்தான்.தூத்துக்குடியில் அவன் வீடுதான் மிகப் பெரிய கல் கட்டடம், சென்னையில் அது மிகச் சிறிதாக அவனுக்குத் தோன்றியது. இங்கே, ...
மேலும் கதையை படிக்க...
நாகப்பனுடைய தொழில் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதுமல்ல; நாலு பேர் அறியச் செய்யக் கூடியதுமல்ல, அவன் செய்தது திருட்டுத் தொழில். அவனுடைய ஆயுளில் எத்தனையோ பொருள்களை எவ்வளவோ சிரமப்பட்டுக் களவாடியிருக்கிறான்; ஆனால் அவனுடைய மனைவியின் இதயத்தைக் கொள்ளை கொள்வது மட்டும் அவனுக்கு அசாத்தியமாகவே ...
மேலும் கதையை படிக்க...
அலமுவின் சுயசரிதை
[ஸ்ரீமதி அலமு தன் சுய சரிதையை எழுதியிருக்கிறாள். அவளுக்கு எழுதுவதற்கான அவகாசம் அதிகமாய்க் கிடையாதாகையால், இந்தச் சரித்திரத்தின் நடை ஒரு மாதிரியாயிருந்தாலும் நீங்கள் மன்னித்துக் கொள்ளவும். அவளுடைய வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களைப்பற்றிய குறிப்புகள் அவ்வப்போது அவள் வைத்திருந்தபோதிலும், அவைகளை அவள் லக்ஷ்யம் ...
மேலும் கதையை படிக்க...
ஐயோ! சுண்டெலி!
ரோடுஸென்ஸ்
கல்கத்தாவில் மிஸ்டர் வேதாந்தம்
நாகப்பன்
அலமுவின் சுயசரிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)