Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உணர்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்

 

எதைச் செய்யச் சொன்னாலும் “இது கஷ்டமாயிருக்கிறது” என்று சொல்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். என் பொறுமையின் அடித்தளம் வரை சென்று கெஞ்சினாலும்,என் கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தினாலும் அவள் பேச்சிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. தொலைபேசி அழைப்பை துண்டித்து விடுவதால் என்னிடம் இருந்து தப்பித்துக் கொள்கிறோம் என அவள் நினைத்திருக்கலாம். நேரில் தான் பேச வேண்டும் என ஒவ்வொரு தொலைபேசி துண்டிப்பின் போதும் நினைத்திருந்தாலும், எப்போதாவது சந்திக்கும் போது மகிழ்ச்சி கரமான பேச்சுக்கு மத்தியில் அது பற்றி பேச நினைவே வருவதில்லை.

“சரி இது பற்றி இனிமேல் அவளிடம் பேசுவதில்லை” என்று இருக்கும் போது,அவளே அழைப்பை ஏற்படுத்தி “என்னை கொஞ்சம் தூண்டி விடேன், கட்டளையிட்டு இதைச் செய்யச் சொல்லேன்” என்று கெஞ்சுவாள். ஆல்லது “நீ முன்பு போல் இல்லை, என்னை கட்டாயப்படுத்தியாவது செய்யச் சொல்லலாம் அல்லவா, நான் பாவம் இல்லையா…?” என்று குறை பேசுவாள். இந்த தருணங்களில் எல்லாம் என்னிடமிருந்து வெளிப்படுவது மௌனம் தான்…

உண்மையில் ‘கஷ்டம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? இது எப்படி தமிழுக்கு வந்தது? அடுத்த தடைவ கணனியில் அமரும் போது ‘கூகுளில்’ போட்டு ‘சேர்ஜ்’ செய்ய வேண்டும் என்று நினைத்தக் கொள்கிறேன்.

உண்மையில் கஷ்டம் என்று சொல்ல வேண்டியது நான் தான். ஏனென்றால் ஒரு எழுத்தாளனாயிருப்பது எவ்வளவு கஷ்டம் என்று எனக்குத்தான் தெரி;யும். என் எழுத்துக்கள் பற்றி பேசுவார்களோ இல்லையோ, ஏதாவதொரு தேவையை முற்படுத்தி ‘அதை எழுதித் தர முடியுமா?, இதை எழுதித்தர முடியுமா?’ என்று கற்பனையை கட்டிப்போட்டு விடும் நண்பர்களைத் தான் அதிகம் சந்தித்திருக்கிறேன். (ஏதாவதொன்றை கிறுக்கி விட்டு எழுத்தாளன் என்று சொல்கிறாயா? எனக் கேட்க நினைத்தால் அந்த வார்த்தைப் பிரயோகத்துக்காக என்னை மன்னியுங்கள்)

ஒரு முறை அப்படித்தான், அவளது நண்பிக்கு ஏதோ ஒரு போட்டிக்கு அனுப்பி வைக்க ‘கவிதை’ ஒன்று எழுதித்தர வேண்டும் என்று குறுஞ்செய்தி மூலம் தகவல் சொன்னாள். மூன்று தலைப்பில் ஏதாவதொன்றில் எழுத வேண்டும். உண்மையில் கவிதைக்குப் பொருத்தமில்லாத நெடிய தலைப்புக்களில் எழுத நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.

“எனக்கு கஷ்டமாக இருக்கிறது, இது போல என்னிடம் கேட்காதே” என்றேன். ‘உனக்கு தலைக்கனம்’ என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள். நான் ஒரு வாரமாய் இதில் என்ன தலைக்கனம் இருக்கிறது என்று யோசித்து, இனி யாருக்கும் ‘இல்லை’ எனச் சொல்வதில்லை என நினைத்துக் கொண்டேன்.

‘குறுஞ்செய்தி’ எனும் போது தான் ஞாபகம் வருகிறது – இந்தக் குறுஞ்செய்திகளால் (ளுஆளு) நான் படும் கஷ்டம். நெடிய ஆங்கிலத் தமிழில் என் தொலைபேசி நிறைத்து விடும் குறுஞ்செய்திகளில் அதிகமானவை, ‘இதை ஏழு பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு ஒரு நற்செய்தி வரும்’, ‘இதில் ஏதாவதொரு இலக்கத்தைச் சொன்னால் உங்கள் மனநிலையைச் சொல்வேன்’ என்று வந்து தொலைக்கும் போது எரிச்சலுடன் ‘டெலீட்’ கொடுப்பது தான் என் கோப வெளிப்பாடு. குடைசியாக வந்த ளுஆளு சொன்ன செய்தி, “என் வாழ்க்கைத் துணை யார் என்று சொல்ல, ஏதாவது இலக்கத்தை தெரிவு செய்ய வெண்டுமாம்”.

என்ன இது குட்டி ஜோசியமா, எனத் தோன்றியது. இதற்காக நான் சிரிப்பதா அழுவதா…………………………..?

ஒரு தடவை ‘நீ முன்பு போல் இல்லை’ என்று அவள் சொன்னதற்கான காரணம் தேடியலைந்தேன். சரி தான். ‘காதல் தேசம்’ படத்தின் கதைதான் எங்களுடையது. அந்தப் படத்தின் கடைசியில் கதாநாயகி சொல்வாளே…, “நீங்க ரெண்டு பேரும் இல்லாத வாழ்க்கைய என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியல. அதனால, கடைசி வரைக்கும் நல்ல ப்ரண்டா இருப்போம்” என்று. அதைத் தான் அவள் என்னிடம் சொல்லியிருந்தாள். ஆனால், என் நண்பன் ஒன்றும் அவளைக் காதலிக்கவில்லை, இங்கே நண்பனுக்கு பதிலாக இருந்தது அவளது பெற்றோர். பின் என்ன நடந்திருக்கம் என்று யாரும் ஊகித்துக் கொள்ளலாம்.

இதை ஏற்றுக் கொள்வதில் எனக்கிருந்த கஷ்டம் பற்றி சொல்லவா வேண்டும். அதிலே கொஞ்சம் மனம் விட்டு, மனதால் சற்று விலகியது உண்மைதான். அதை இப்போது அவள் குறிப்பிட்டு பேசுவதிலும் எனக்குக் கஷ்டம் தான்.

ஆனால் ‘நண்பனாய் மட்டும்’ என்று அவள் சொன்னாலும் அதே அன்புடன் தான் இன்று வரை என்னுடன் பழகி வருகிறாள். என்னை முன்னுரிமைப் படுத்தித் தான் அவளது அனைத்து விடயங்களும், செயற்பாடுகளும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் தான் சறுக்கி விட்டேன், என்ற குற்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.இந்த உணர்வும் எனக்கொரு கஷ்டத்தை தந்து கொண்டு தான் இருக்கிறது.

அதுவெல்லாம் அப்படியே இருக்க, அடிக்கடி அவளுக்கும் எனக்கும் முருகல் ஏற்படுவதுண்டு. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது என்று முடிவு செய்து கொண்டோம். இடம் என் வீடு தான். அதில் கஷ்டம் என்னவென்றால் இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத போது தான் இந்த திட்டம் தீட்டப் பட்டது. முகத்தில் எந்த வித சந்தோசமும் இன்றி கலந்து கொண்டிருந்தாள் அவள். சுரியாக சாப்பிடவில்லை, பின்னேர சிற்றுண்டியிலும் கலந்து கொள்ள வில்லை. நேரத்துடனேயே புறப்பட்டு சென்று விட்டாள். இதில் எனக்கிருந்த கஷ்டம் சொல்லவா வேண்டும். அப்படி என்ன நடந்தது எங்களுக்குள், அதே ளுஆளு பேச்சு தான். நான் ஏதோ சொல்ல,அதை அவள் வேறாக புரிந்து கொள்ள ‘மந்தம்’ என்று திட்டி வைத்து விட்டேன். ஆதனால் வந்த வினை தான் அது.

சரி என்று பல நாள் கடந்து ‘உனக்கு திட்டுவதற்கு எனக்கு உரிமை இல்லையா’ என்றெல்லாம் உருக்கமாகப் பேசி அவளை சமாதானப்படுத்தி இன்றைக்கு இப்படி வந்து நிற்கிறது.

அவள் இலகுவாக கஷ்டம் என்று சொல்லி விட்டு இருக்கிறாள். எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டியது உண்மையில் எனக்கு கஷ்டம் இல்லையா………….

திரும்பவும் அழைப்பை தொடுக்கிறேன்.

“ப்ளீஸ்……….இன்னம் நாலு மாசம் தான் இருக்கு, கொஞ்சம் இன்ரெஸ்ட் காட்டலாமே………..”

“நானும் தான் ட்ரை பண்றேன் கஷ்டமா இருக்கே………..”

“இது உன் எதிர்காலம், அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது….? புரிஞ்சுக்க ப்ளீஸ்…………..”

“அது எனக்கு விளங்குது பட்(டிரவ) கஷ்டம்……”

“அடி தான் வாங்கப்போற……………..நான் சொல்றத கேளேன்…..”

“சரி……படிக்கிறன்………..போதுமா…….?”

பின்னர் வழமையான அறிவுரைகளுடன் அழைப்பை துண்டிக்கிறேன். இனி அடுத்த முருகல் -சமாதானம் என்று நாலு மாதத்துக்கு அவளது கஷ்டம் தொடரும்…..

உண்மையில் கஷ்டம் யாருக்கு என்று யாரும் உணரலாம். ‘இன்னும் நான்கு மாதத்தில் பரீட்சை வருகிறது………….’ 

தொடர்புடைய சிறுகதைகள்
சித்திரம் கீறிக் கொண்டு வராத காரணத்தினால் சிலர் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர். கையில் நீள் சதுர சித்திரக் கொப்பியும் பென்சிலும் இருந்தது. சிலர் சும்மா நிண்டிருந்தார்கள், சிலர் ஏதோ கிறுக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வகுப்புக்குள்ளே சாமிலா டீச்சர் அதே சித்திரப் ...
மேலும் கதையை படிக்க...
“புகை சூழ்ந்த அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது என்னிடம் எந்தவித நடுக்கத்தையும் நான் உணரவில்லை. மங்கலான மஞ்சள் வெளிச்சமொன்றைக் கடந்து என் பாதங்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். ஒப்பனைகளையும் விசித்திரங்களையும் சேர்த்து மிக உற்சாகமான ஓசை நயத்துடன் விளக்கி விளங்கப்படுத்த வேண்டிய ...
மேலும் கதையை படிக்க...
“தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம்” மிக மெல்லிய இசையில் அழகான வரிகளுடன் ஏற்ற குரலில் ஓடிக் கொண்டிருந்தது பாட்டு. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் தோன்றியதால் மொபைலில் கூகுள் சேர்ஜூக்குச் சென்று பாடலின் முதல் வரியை டைப் செய்து ‘டவுன்லோட்’ செய்து கொண்டேன். ...
மேலும் கதையை படிக்க...
இப்போ.....நேரம் ஆறு மணி.எனக்குப் பதட்டம் கூடிக்கிட்டே இருக்கு. வியர்வை வேற,மின் விசிறியை அழுத்தி விட்டேன். இப்ப கொஞ்சம் பரவாயில்ல. ஒரு பேப்பரையும்,பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டேன். “எப்படி ஆரம்பிக்கிறது.......?” மனம் சிந்திச்சிக்கிட்டே இருக்கு. ஆனா வருதில்ல. எப்படியோ இன்டக்கி ஒரு முடிவு எடுத்தாயிற்று.எழுதியே ...
மேலும் கதையை படிக்க...
நேரம் இரவு 11.45 மணி புதன் கிழமை 2011.10.12 அன்புள்ள டயரி........இன்றைய தினம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. நான் எதைச் செய்து இதை மறக்கவென்று தெரியவில்லை. வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று இன்பத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களைத் தாண்டியும் நிகழும் சில ...
மேலும் கதையை படிக்க...
சித்திரமும் கைப்பழக்கம்
‘நான்’ பற்றிய கனவு
முகமூடிகள்
இதுவும் ஒரு கதை…
நரகத்தின் தேவதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)