இலக்கியரைக்காண்டலும் இனிது

 

மார்கழி சங்கீதசீஸனையிட்டும், புத்தகக்கண்காட்சியையிட்டும் சென்னைக்குச் செல்வது என்வழக்கம். அவ்வாறான ஒரு விஜயத்தின்போது அந்த ஆண்டு நான் பெருமதிப்பு வைத்திருப்பவரும் , தனித்துவமான ஒரு எழுத்தின் சொந்தக்காரருமான ஒரு எழுத்தாளரைப் போய்ப்பார்ப்பதுவும் என் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. பெருந்தமிழ்நிலத்துக்கப்பால் ஒவ்வோராண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ஒரு விருதுக்காகக்கூட அவர் பெயரை நான் உரத்துச் சிபாரிசுபண்ணியிருக்கிறேன் என்றால் பாருங்களேன். (அதொன்றும் அவருக்குத் தெரியவே வந்திருக்காது). ஆக அவரை இங்கே கிண்டல் பண்ணுவது என் நோக்கமல்ல என்பதையும், ஆனால் பெரிய மனுஷன் ,எழுத்தாளன் எல்லாங்கூட அப்பப்போ எப்படி நடந்துக்கிறான் என்கிற என் அதிர்ச்சியை உங்களுடன் பகிர்வது மாத்திரமே என்பதையும் , முதலில் தெளிவுபடுத்துகிறேன்.

இவரைச்சந்திக்க முதல் வாரமும் ஒருநாள் மாலை இன்னொரு கவிஞரும், அமய பத்திரிகையாளரும், நண்பருமான, ஒருவர் என்னைவந்து ஹொட்டலில் ஐந்து மணிக்குப் பார்ப்பதாகச் சொல்லியிருந்தார். நான் எல்லா அலுவல்களையும் நிறுத்திவிட்டு அவருக்காகக் காத்திருந்தேன். ஆறுமணியாகிவிட்டிருந்தது, ஆளைக்காணவில்லை. கைத்தொலைபேசியில் அழைத்துப்பார்த்தேன், அது அணைக்கப்பட்டிருந்தது. மீண்டும் மீண்டும் முயன்றதில் ஏழுமணியளவில் தொடர்புகிடைத்தது, அவரே பேசினார். “சாரி, சார் ஒரு படம் பிறிவியூவில் இருக்கேன், அங்கே வரமுடியலீங்களே” என்றார் சாதாரணமாக. நாலைந்து நாட்கள் கழித்து தேவநேயப்பாவாணர் அரங்கில் மனுஷ்யபுத்திரனின் ’இதற்கு முன்னும் இதற்குப்பின்னும்’ கவிதைத்தொகுதிவெளியீட்டில் பார்த்தும் ஏதும் நடவாதது மாதிரிச் சிரித்தார்.

இந்த அனுபவத்தினால் நான் இந்த எழுத்தாளரிடம் செல்லும் நாள் அதிகாலையிலும் அவருக்கு மீண்டும் தொலைபேசி என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன்.

எங்கள் பேருந்து அவர் ஊரை மதியம் 12:00 மணிக்குச் சென்றடையும். அவர் வதியும் மாநிலத்தையோ, மாவட்டத்தையோ சொன்னால்கூட தீவிரவாசகர்கள் அப்பிரமுகர் யார் என்பதை ஊகித்துவிடுவார்கள். அதனால் பொறுத்தாற்றவும் அவற்றையும் இங்கே தவிர்த்துவிடுகிறேன்.

எழுத்தாளர் ‘வேறுயாரை இங்கே பார்க்கவேணும் உனக்கு’ என்று தொலைபேசியில் உசாவினார். தமிழுக்கு நிறையவே இலக்கியர்களைத்தந்தது அவரது மாநிலம். திடுப்பென அங்கேயுள்ள இன்னொரு நண்பர் பெயரும் நினைவில் பொறிக்கவும் அவரைச்சொன்னேன் , அவர் இலக்கியரல்லத்தான்.

‘எத்தனை பேர் வருவீர்கள்’ என்றார் அடுத்ததாக. சென்னையிலிருந்து என் நண்பன் வசந்தனும் கூட வந்தான். ’இரண்டுபேர்’ என்றேன். ’சரி முதல்ல அங்கே போயிட்டு மதியம் சாப்பாட்டையும் அங்கேயே முடிச்சிட்டு வந்துடுங்க’ என்றார். பொதுவாக எனக்குப் புதிதாக ஒருவரைச்சந்திப்பதென்றால் எனக்குள் ஒரு பரபரப்பு புகுந்துவிட பசி, தூக்கம் எல்லாமே பறந்துவிடும்.

எம்.ஆர்.ராதா மலேஷியாவில் பேசியதாக ஒரு பேச்சை ஒலிப்பதிவொன்றில் கேட்டிருந்தேன், அதுவே உடனே என் ஞாபகத்துக்கு வந்தது. “சினிமாவைப்பார்த்து ரசிச்சீங்கன்னா எழுந்து போய்க்கிட்டேயிருங்க………. ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலைவாங்கிக்கிட்டு அந்த நடிகனைப் போய்ப்பார்க்கவோ, அவன்கிட்ட மச்சான் முறைகொண்டாடவோ போகாதீங்க…….. அவன் கடித்து விரட்டுவான் உங்களை.” சுஜாதாகூட ஒருமுறை “ என் நல்ல வாசகர்கள் வீதிமுக்கிலுள்ள முஸ்தாபாகடையில் 6 சாத்துக்குடிகள் வாங்கிக்கொண்டு என்னைப்பார்க்க வருவதில்லை” என்று எழுதியிருக்கிறார். ‘என் எழுத்துக்கும் மேலால் என்னிடம் எதைப்பார்க்கவாறாங்க’ என்று அவர் எண்ணியிருக்கலாம்.

எனக்குச் ’சப்’பென்றானது, ஆனாலும் “சரிங்க” என்றேன்.

அந்த மற்ற நண்பன் வீட்டுக்குப்போய் அவனுடய சிபாரிசில் நல்ல ஹொட்டலொன்றில் சாப்பாட்டையெல்லாம் முடித்துக்கொண்டு எழுத்தாளரிடம் புறப்படவும் அவனோ ’எனக்கும் அவரைப்பார்க்கோணும் நானும் வர்றேன்’ என்று கூட இழுபட்டான். அவனைக் காய்வெட்டுவது கடுவலாயிருந்தது.

எழுத்தாளர் வீட்டை முச்சக்கரவண்டிக்காரர் தெரிந்து வைத்திருந்தார். ஆதலால் சிரமமில்லாமல் அவரது வீட்டை அடைந்தோம். சம்பிரதாயமான சந்திப்பு, முகமன்கள். அவர்பால் என் கவனம் ஈர்த்த படைப்புகள், அவை கருக்கொண்ட சந்தர்ப்பங்கள் அவைபற்றியெல்லாம் அளவளாவினோம். அவரது குரலிலும், உடல்மொழொயியிலும், அபிநயங்களிலும், நிறைய பெண்மை இருந்தது. என்கூடவந்த அவ்வூர் நண்பனின் மனைவி, அதேதொகுதியில் சென்றமுறை தேர்தலில் பா.ஜ.கட்சியில் நின்று தோல்வியடைந்திருந்தார். நண்பரும் நல்ல தமிழுணர்வாளன், இருந்தும் அன்று அவன் எழுத்தாளருடன் உள்ளூர் அரசியலே அதிகம் பேசமுற்பட்டான். ’எதுக்கடா இந்தச் அலுப்பனைக் கூட்டிவந்தோம்’ என்றிருந்தது. அவர்கள் தந்த இடைவெளிகளில் சமகால புலம்பெயர் – பெருநில இலக்கியங்கள் – புதுமைப்பித்தன் – மு.தளையசிங்கம் – கைலாசபதி- மணிகொடிகாலம்- பிரமிள் என்று சுற்றுச்சுற்றி ஒரு முடிவுக்கு வந்தோம். நான் அவருக்காக எடுத்துச்சென்ற கையுறையையும் (Glenfiddich Whisky), எனது நூல்களையும் அவரிடம் அர்ப்பணித்தேன். எனது நூல்கள் சிலவற்றைப்பதிப்பித்த ஒரு பிரசுரமே, அவரது நூல்கள் சிலவற்றையும் பதிப்பித்திருந்தது. அவரது 3 நூல்களை அங்கே வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக எடுத்துசென்றிருந்தேன்.

“உங்களின் மற்ற நூல்களையும் தாருங்கள்.” என்று (பிற பதிப்பகங்கள் போட்ட) அவரிடம் கேட்டேன். ‘இவனும் நூல்களைத் தருகிறானே…………… அதனால் நானும் நூல்களை இனாமாகக்கொடுக்கணுமே’ என்று இலக்கியர் எண்ணியிருக்கலாம். “என்னிடம் அத்தனை பிரதிகள் இல்லையே” என்று இழுத்தார் ஈனசுரத்தில்.

எடுத்துச்சென்ற அவரது நூல்களைக் கையெழுத்திட வேண்டிக்கொடுத்தேன். அப்போதுதான் அப்பிரதிகளைப் பார்ப்பவர்போன்று அவற்றை உருட்டியுருட்டி அதன் ஆறு பரிமாணங்களையும் பார்த்தவர், கையெழுத்திடும்போது அப்பிரசுரத்தின் பெயரைச்சொல்லி ”அங்கே உங்களுக்கு இப்பிரதிகளை ஓசியில் கொடுத்தாங்களா” என்றார்.

எனக்குத் திடுக்காட்டமாகவும் எரிச்சலாகவும், இருந்தது, ரௌத்ரம் அடக்கி அமைதிகாத்து

” நினைத்த மாத்திரத்தில் ஒரு புதியகாரை வாங்க என்னால் முடியாதிருக்கலாம். ஆனால் எந்தவொரு புத்தகத்தையும் வாங்கக்கூடிய அளவுக்கு வசதி இருக்கு சார்………… அவர்கள் என்நூலைப்பிரசுரித்த நோக்கங்களில் இலாபமும் ஒன்றல்லவா…………அவர்கள் எனக்கு எதற்காக ஓசியில் தரணும்……….அப்படியான எதிர்பார்ப்பு ஒன்றும் என்னிடம் கிடையாது இந்த நூல்களை காசுகொடுத்துத்தான் சார் நான் வாங்கினேன், அந்த சந்தேகம் வேண்டாம்………… இன்னும் கைவசம் இருக்கும் உங்கள் எல்லா நூல்களிலும் ஒவ்வொரு பிரதி கொடுங்கள், வாங்கிக்கறேன். ” என்றேன் தண்மையாக.

இப்போது கண்ணாடியின் வில்லைகளுக்கு மேலால் என்னைப்பார்த்தார்.

என் வார்த்தைகளில் இவன் வாங்குவான் என்று நம்பிக்கை வந்திருக்கவேண்டும்.

“ ம்ம்ம்ம்ம்ம்…….. பார்க்கிறேன்” என்றுவிட்டு உள்ளே போனவர் பன்னிரண்டு பிரதிகளுடன் வெளியே வந்தார். அவற்றில் சில ஏலவே என்னிடம் உள்ளவைதான். இருந்தும் அனைத்தையும் வாங்க முடிவுசெய்தேன்.

மொத்தத்தொகையை வசந்தன் கணக்குப்போட்டான், மூவாயிரத்துச்சொச்சமே வந்தது. பத்தாயிரத்தைக் கொடுத்தேன்.

அதிசயித்து “எதற்கு இத்தனை தொகை, இது ரொம்ப அதிகமல்லவா……….” கையில் வாங்கவே தயங்கினார்.

“இல்லை சார்……இது எனது சந்தோஷம்………. வைச்சுக்குங்க.” என்று அவர் கையில் வைத்து அமுக்கினேன்.

முச்சக்கரவண்டி காத்திருப்பில் நின்றது.

நாங்கள் புறப்படவும் “ என்ன அவசரம் இருங்க…………சார், சாப்பிட்டிட்டுப்போகலாம்.” என்றனர் அவரும் மனைவியுமாக.

”எங்களுக்கு 17:00 மணிக்கு கடைசிப்பேருந்து சார், அதைப்பிடித்தாகணும்” என்றான் வசந்தன்.

“ அடுத்தவாட்டி சாப்பிடாம உங்களைப் போகவிடவே மாட்டோம் “ என்றனர்.

“ பேஷா சாப்பிடுவோமே………… ”

விடைபெற்றோம்.

வெளியான சஞ்சிகை: “உரையாடல்” – டிசெம்பர் – 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். எம்பாதையில் மண்குளித்து விளையாடிக்கொண்டிருந்த ...
மேலும் கதையை படிக்க...
இவ்வாண்டுதான் பல்கலையுள் ‘உளவியல்’ படிக்கப்புகுந்திருக்கும் என் மகள் அம்பாவுக்கு ஈஸ்டருடன் இப்போது நீண்ட கோடை விடுமுறை ஆரம்பித்திருக்கிறது. “இவ் விடுமுறை நாட்களில் நான் வேலை செய்யப்போகிறேன் டாட்” என்றாள். “சரி உன் இஷ்டம்” என்றேன். பொருத்தமான வேலைகளை இணையத்தில் தேடியதில் ஓரிடத்தில் ’ஆபீஸ் அசிஸ்டென்ட்’ என்றொரு ...
மேலும் கதையை படிக்க...
நாம் இருபது ஆண்டுகளாகப் போயிராத காலிமுகத்திடலைப் பார்த்ததும் இது நமது காலிமுகத்திடல்தானா அல்ல Costa Rica, Honduras, Bahamas இலுள்ள வேறொரு கடற்கரையாவென்று திகைத்தோம். வீதிக்கரையோரமாக சைக்கஸ் மற்றும் பாமே மரங்கள் நடப்பட்டுள்ளன, அங்குமிங்குமாக திசையெங்கும் நீரூற்றுக்கள். நியோன் விளக்குகள், அந்தமாதிரி ...
மேலும் கதையை படிக்க...
இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலைத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச் பண்ணியாகவேண்டும். இணையத்தில் ஏதாவது பார்த்துவிட்டோ கிறுக்கிவிட்டோ படுக்கைக்குப் போகலாமென்றால் அவனது செல்லமகள் ஹோம் வேர்க் பண்ணுகிறேனென்று சொல்லிக் கணினியை மூன்று ...
மேலும் கதையை படிக்க...
ராம்குமாருக்கு வேலைபோய் மூன்று மாதங்களாகின்றன. அவன் இழந்தது மந்திரிப்பதவியோ, அல்லது அவன் ஒரு நிலப்பிரபுவின் பிள்ளையோ அல்ல. ஒரு சாதாரண உயிரணிகச் சாரதி (ஆம்புலன்ஸ்). அவனது மாதாந்த ஊதியமே அவன் குடும்பம் வதியும் இரண்டறை வீட்டின் வாடகைக்கும், அரிசி காய்கறி, உப்புப்புளி, ...
மேலும் கதையை படிக்க...
பால்வீதி!
அம்பா வேலை தேடுகிறாள்
Galle Face Hotel
வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்
மேகா அழகிய மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)