ஆவிகளின் ராஜ்யம்!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 36,437 
 

”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு வைராக்கியமாய் இருந்த புண்ணியகோட்டிக்கு வந்த து சோதனை!

”பேய் காற்றுடன், பேய் மழையும் சுழற்றியடிக்க அவனின் வைராக்கியம் மழையில் கரைந்து வேறுவழியில்லாமல் அன்று புளியமரத்திடமே ஒதுங்கினான்.

ஒதுங்கிய நேரத்தில் மனதிற்குள்ளே….”ஆவிகள் உலாவி வருவதைப்போல நிழல் நிழலாக பிம்பங்கள் நடனமாடி அவனை இன்னும் பீதிக்குள்ளாக்கியது. மழையில் நனைந்ததால் உடம்பின் உதறலோடும், உள்ளத்தில் பீதியோடும் அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

பீதியிலேயே உறங்கி விட்டான். மறுநாள் காலை

”ஏங்க, பால்காரன் இன்னைக்கு வரலே, ஆதனால நீங்க போய் ”ஆவி-ன் வாங்கி வாங்க என்றாள் புண்ணியவதி.

இவன் காதில் ”ஆவின்” என்பது ”ஆவி” என்றே ஒலித்தது.

”என்னது ஆவியா ?, ஏன்டி காலையிலேயே பயமுறுத்துற” என்று படத்துல ராகவா லாரன்ஸ் பயப்படுவது போலவே புண்ணியகோட்டியும் பயந்தான்.

”ஆவி இல்லேங்க, ஆவின் பாலுங்க” என்று விளக்கமாய் சொல்லிவிட்டு…. பால் வாங்கிட்டு அங்கன…இங்கன ..உ”லாவி”ட்டு வராதீங்க…சீக்கிரமா வந்துடுங்க” என்றாள்.

மறுபடியும், அவன் காதில், உ”லாவி” என்ற வார்த்தையில் ”ஆவி” என்ற சத்தம் மட்டும் ஆவிக்கணக்காய் ஒட்டிக்கொண்டது. மனசுக்குள்ளே… ” புளியமரத்துக்கு கீழே ஒதுங்கினதுல, ஏதேச்சும் ஆவி…கீவி நம்மளை” புடிச்சுருக்குமோ…நல்ல சாமியாரா பார்த்து மந்திரிச்சுக்கணும்” என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.

ஆவின் பால் வந்த்து….சிறிது நேரத்தில் … டீபாயின் மேல் காபியை வைத்துவிட்டு …இந்தாங்க காபி….ஆவி பறக்குது, நல்ல ஆத்திக்குடிங்க” என்றாள் மனைவி.

மனைவி காபியின் ஆவியைச் சொல்ல, புண்ணியகோட்டி புளியமரத்தின் ஆவியை நினைத்து கொண்டான். அந்த பயத்திலேயே செய்திதாளைப் பிரித்து படிக்க…அதில் …… நடுரோட்டில் ஒரு விபத்து…அநேகமாக அது ஆவியின் வேலையாக இருக்கும் என்று கிராமவாசிகள் பூசாரியைக் கூப்பிட்டு பூஜைப் போட்டார்கள்” என்று முன்னால் வந்துநின்றது அந்த செய்தி

அந்த செய்தியை படிக்கும்பொழுதே…..”அடியே, அரிசியைதண்ணிய விட்டு நல்லா துழாவி….துழாவி” களைஞ்சு கழுவுனாதானே, அழுக்கு போவும்டி” என்று மருமகளுக்கு சொன்னாள் புண்ணியகோட்டியின் அம்மா.

ஏற்கனவே பீதியில் இருந்த புண்ணியகோட்டி…. அம்மாவின் துழாவி..துழாவி”யில் இருந்த ஆவிகள் வேறு பயமுறுத்த துவங்கி விட்டன.

காலை டிபன் நேரத்தில்…. ”சீக்கிரமா வாங்கோ, இட்லி ஆவி பறக்க சுடா இருக்குது. சுடு ஆறதுக்குள்ளாற சாப்பிடுங்கோ” இட்லி ஆவியின் வழியாகவும் மேலும் பயமுறுத்தினாள் மனைவி.

பயத்திலேயே இட்லியை அவசர அவசரமாக விழுங்கினான். மதியம் சாப்பாட்டு நேரத்திலும் சமையலில் ஆவி பறக்க சுட..சுட செய்து பறிமாறினாள் அன்பு மனைவி. ஆனால், ஆவி பயத்தில் சரியாக சாப்பிடாமல் அரைகுறையாக எழுந்துவிட்டான்.

தான் பயந்துகிடப்பது மனைவியிடம் சொன்னால் கிண்டல் செய்வாளோ” என்று பயந்து….. அம்மாவிடம் சொல்வோம் என்று ” அம்மா, நீ சின்ன வயசில புளியமரம் பக்கம் போகாதே” சொன்னே. அப்போ போகல, இப்போ புளியமரம் பக்கம் ஒதுங்க வேண்டியதாயிடுச்சு. மனசுக்குள்ளாற ”ஆவிகளா உலாத்துற மாதிரி இருக்குதும்மா” நீதான் ஏதாச்சிலும் வைத்தியம் செய்யணும்” என்றான்.

”டேய் , இதுக்கு ஏன்டா பயப்படணும். கொஞ்சமா நெருப்பு துண்டங்களை எடுத்து, அதில் சாம்பிராணி தூளைத் தூவினா……… ஆவிக்கணக்கா புகைவரும் பாரு….. அதை முகத்தில காண்பிச்சா… ”ஆவி பறந்தே போயிடும்டா” என்றாள் அம்மா.

மறுபடியும் ஆவியா ? என்று மயங்கினான்.

புண்ணியகோட்டியின் அம்மா பூசாரிகிட்ட கூட்டி போகணும்-ன்னு சொல்ல…. மருமகளோ…. தம் புருஷனை டாக்டர்கிட்ட கூட்டி போகணும்-ன்னு சண்டை போட்டு ….கடைசியில் டாக்டரிடம் கூட்டி போய் விவரத்தை சொன்னார்கள்.

” திஸ் இஸ் வெரி சிம்பிள், அவருக்கு மனப்பிராந்தி. நான் குணப்படுத்திடறேன்னு சொல்லி புண்ணிய கோட்டியை உட்டகார வைத்து..

மெதுவாக……”பிளிஸ், கண்ணை மூடுங்கோ……அப்படியே நான் சொல்ற வார்த்தைகளை சொல்ல, நீங்க திரும்ப சொல்லுங்க” என்றார் டாக்டர்.

”மா”யாவியி”டம் கொஞ்சம் நேரம் அளவ”ளாவிய”தில், அவன் ஒரு ”மே-தாவி” என்றே தன்னைத்தானே, வானா-”ளாவி” புகழ்ந்து கொண்டது, பிடிக்காத்தால், அவனின் வா”னாளவிய” புகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க” என்று சொல்லிக் கொண்டே… ”நர்ஸ், எனக்கு குடிக்க வெந்நீர் கேட்டேனே” கொண்டு வா” என்றார் டாக்டர்.

”இருங்க டாக்டர், தண்ணீ ரொம்பவே சூடாக்கிட்டேன்… அதில ஆவி பறக்குது” என்றாள் நர்ஸ். அதைக்கேட்ட புண்ணியகோட்டி…அதோ பறக்குது ஆவி…ஆதோ ஆவி” என்று சொல்லியவாறு கண்விழித்தான்.

”எங்கே….ஆவி…எங்கே ஆவி” என்று கேட்டவாறே அரைமயக்கத்தில் வீழ்ந்தார் டாக்டர்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆவிகளின் ராஜ்யம்!

    1. கருத்துக்கு மிக்க நன்றி. மேலும் இந்த கதை இந்த வலைளத்தளத்தில் இருந்து தேர்ந்தெடுத்து ”கதை சொல்லி” ஜுலை 2017 இதழில் வெளியாகி உள்ளது. வலைத்தளத்திற்கும் கதை சொல்லி மாதஇதழ் ஆசிரியருக்கும் மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *