Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆம்புலன்ஸ்

 

ஈரக் கோழி மாதிரி வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தான் அனந்து.

அவ்வப்போது விலுக் விலுக்கென்று உடம்பு தூக்கிப் போட்டது. சிவந்த கண்களும், உலர்ந்த உதடுகளும் ஒரு மாதிரி கோணிக் கொண்டிருக்க, போர்வைக்குள் சன்னமாய் அனத்திக் கொண்டிருந்தான்.

இரண்டு மாதங்களாகத்தான் அவனை எனக்குத் தெரியும். அமெரிக்காவுக்குப் புதுசு என்று பார்த்த மாத்திரத்தில் புரிந்து விட்டது.

பாக்கெட்டில் கர்ச்சீப் வைத்துக் கொண்டு அடிக்கடி எடுத்து முகம் துடைப்பது, இடது கையில் தங்க முலாம் பூசிய டைட்டன் வாட்ச் கட்டிக் கொண்டிருப்பது, சனிக்கிழமை காலையில் டன்க்கின் டோனட்ஸ்க்கு சாப்பிடப் போனால் கூட ஃபார்மல் உடையணிந்து டக்-இன் பண்ணி, பட்டையான பெல்ட் போட்டுக் கொள்வது… இதெல்லாம் இங்கே புது மெருகு குலையாதவர்களின் அங்க லட்சணங்கள்.

ஐந்து வருஷ அனுபவம் இருப்பதாக முதலில் அலட்டியவன், டீம் மீட்டிங்கில் ரொம்பவும் சொதப்பி, வாட்டர் கூலர் அருகே கலங்கிய கண்களோடு என்னிடம் மட்டும் உண்மையை சொல்லி விட்டான். முழுசாய் ஒரு வருஷம் கூட ஆகவில்லை. இங்கே எல்லாமே வினோதமாக இருக்கின்றன. உதவி பண்ணினால் கோடி புண்ணியம்.

எனக்கு இளகிய மனசு. லேசாக பரிதாபம் காட்டியதில் பச்சக்கென்று கூடவே ஒட்டிக் கொண்டான். வால் பிடித்த மாதிரி துரத்த ஆரம்பித்தவன், கெஞ்சிக் கூத்தாடி அபார்ட்மெண்ட்டிலும் பங்கு போட்டுக் கொண்டான்.

“டேய் அனந்து, என்னடா ஆச்சு?”

பதறிப் போய் உலுக்கியதும் ரொம்ப சிரமப்பட்டு தலையைத் தூக்கினான்.

“மு… முடியலை.”

அப்போதுதான் கவனித்தேன். அவன் பக்கத்தில் திறந்து கிடந்த சூட்கேசுக்குள் நிறைய மருந்து பாட்டில்கள். எல்லாம் இந்திய சரக்கு. பெனட்ரில். விக்ஸ் ஆக்ஷன் 500. ஜண்டுபாம். நெற்றியை தொட்டுப் பார்த்து அடித்த ஷாக்கில் வெடுக்கென்று இழுத்துக் கொண்டேன். காய்ந்த தோசைக் கல்லில் கயை வைத்த மாதிரி சூடு.

“என்னடா, இப்படி கொதிக்குது?”

அனந்து விலுவிலுவென்று நடுங்கிக் கொண்டே, தட்டுத் தடுமாறி பதில் சொன்னான். “நாலு க்ரோசின் மாத்திரையை முழுங்கியாச்சு. கேக்கலை. வழக்கமா ரெண்டு போட்டாலே காய்ச்சல் பறந்துடும் ஆறு மாசத்தில் ஏழு தடவை உடம்புக்கு வந்துருச்சு. கொண்டு வந்த மருந்தெல்லாம் தீர்ந்து போச்சு. ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாம இங்கே மருந்து கிடைக்காதாமே…”

“லூசாடா நீ? சாதாரண காய்ச்சலுக்கு ஓவர் தி கவுண்ட்டர் மருந்து கிடைக்கும். இதுக்காக இந்தியாவிலிருந்து ஒரு ஃபார்மசியையே கடத்திட்டு வந்து வெச்சிகிட்டு கன்னா பின்னான்னு மாத்திரையை முழுங்கிட்டிருக்கியா? இப்போ உனக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சல் போல தெரியலையே? அவனவன் ஸ்வைன் ஃப்ளூங்கறான், பறவைக் காய்ச்சல்ங்கறான்.”

இதை நான் சொல்லியிருக்கக் கூடாதோ? அனந்துவின் முட்டைக் கண்கள் நன்றாக மேலே சொருகிக் கொண்டன. ரெகுலேட்டரை உச்சத்தில் திருப்பி வைத்த மாதிரி அவன் உடம்பு இன்னும் வேகமாய் தூக்கித் தூக்கிப் போட்டது.

அதைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாயிருந்தது. பயத்தில் கோபம் தலைக்கேற கத்தினேன். “இப்படி கண்ட மருந்தை சாப்பிட்டு வீட்டுக்குள் கவுந்தடிச்சுப் படுக்கிறதுக்கு பதிலா டாக்டர் அப்பாயின்மெண்ட் எடுத்து பார்த்துட்டு வரதுக்கு என்ன கேடு?”

ஏற்கெனவே கண்கள் சொருகி வாய் கோணிக் கிடந்ததில் பரிதாபமாயிருந்த அவன் மூஞ்சி நான் போட்ட சத்தத்தில் இன்னும் பரிதாபமாய் மாறியது. “எனக்கு அதெல்லாம் தெரியாதே? ஒரு தடவை பழைய ரூம் மேட் டைரக்டரி பார்த்து யாரோ டாக்டர் ஆபிசுக்கு ஃபோன் பண்ணினான். நைன் டு ஃபைவ்தான் டாக்டர்ஸ் வேலை பார்ப்பாங்களாம். சனி, ஞாயிறு டாக்டர் ஆபிஸ் எல்லாம் மூடிருவாங்களாம். அப்பாயின்மெண்ட் கேட்டா பத்து நாளைக்கு இல்லைங்கறாங்க. க்ரோசினும், விக்ஸ் ஆக்’ஷன் 500-ம் இல்லேன்னா அன்னிக்கே செத்திருப்பேன்.”

“மடையா, அர்ஜண்ட் கேர், எமர்ஜென்சி கேர்ன்னு இருக்கே? எல்லா நாளும் திறந்திருப்பான்.”

அப்படி ஒண்ணு இருக்கா என்கிற மாதிரி திருதிருவென விழித்தான்.

“இன்ஷ்யூரன்ஸ் கார்டைக் குடு. இப்ப டாக்டரைப் பார்க்கலைன்னா ராத்திரிக்கு நீ தாங்க மாட்டே.”

“இன்ஷ்யூரன்ஸ் கார்டா?”

ஒரு அறை விடலாம் போல கோபம் வந்தாலும், அடக்கிக் கொண்டு நானே அவனுடைய மொத்த சொத்தான இரண்டு சூட்கேஸ்களையும் சோதனையிட்டேன். அவன் பே ஸ்லிப்பில் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸுக்காக மாதா மாதம் அறுநூறு டாலர்கள் சுளையாகப் பிடித்திருந்தார்கள்.

எப்போதோ தபாலில் வந்திருந்த இன்னொரு பிரிக்கப்படாத கவரில் இன்ஷ்யூரன்ஸ் அடையாள அட்டைகள்.

“உன்னால இப்ப கார்ல வர முடியுமா? இல்லேன்னா அவசர உதவிக்கு 911 ஆம்புலன்ஸ் கூப்பிடவா?”

“எ.. எங்கே?”

“எமர்ஜென்சி கேர் ஆஸ்பிட்டல்”

கைத் தாங்கலாய் அவனை கூட்டிப் போனேன். காருக்குப் போவதற்குள் மிச்சமிருந்த பெனட்ரில் சிரப்பை இரண்டு பெக் போட்டுக் கொண்டான். பின் சீட்டில் எட்டாய் மடங்கி சுருண்டு படுத்தான்.

ஆம்புலன்ஸ்எரிச்சலூட்டும் அவன் முனகல் சத்தம் கேட்காதபடிக்கு எஃப் எம்மில் ஜாஸ் இசையை சத்தமாய் வைத்துக் கொண்டு காரை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரட்டினேன். இன்ஷ்யூரன்ஸ் பாதிக்குப் பாதி கவர் பண்ணினாலும் அமர்ஜென்சி ஆஸ்பத்திரியில் நன்றாக பில் தீட்டி விடுவார்கள். அதற்கு பயந்து வீட்டில் கை வைத்தியம் பார்த்து செத்துப் போக முடியுமா?

பத்து நிமிஷத்தில் அவசர சிகிச்சை ஆஸ்பத்திரியின் வெயிட்டிங் ஹாலில் இருந்தோம். விலுக் விலுக்கென்று கை கால் இழுத்துக் கொண்டிருந்தாலும், நிரப்ப வேண்டிய ஃபாரங்களை அனந்து நிரப்பித்தான் ஆக வேண்டும்.

இன்ஷ்யூரன்ஸ் கார்டை காப்பி பண்ணிக் கொண்டு, நூறு டாலர் கோ பே கிரெடிட் கார்டில் தேய்த்துப் பிடுங்கிக் கொண்டு, “அங்கே போய் உக்காருங்க. கூப்பிடறோம்.” என்றாள் அந்தக் கறுப்பழகி.

“அவன் ரொம்ப சீரியசா இருக்கான் மேம். அதான் எமர்ஜென்சிக்கு வந்திருக்கோம். எப்படி உடம்பு தூக்கிப் போடுது பாருங்க. உடனே பார்க்க மாட்டிங்களா?”

அவள் அலட்சியமாய் இடது புறம் கை காட்டினாள். அங்கே ஒருவர் மனைவியிடம் பூரிக் கட்டையால் அடி வாங்கியவரைப் போல நெற்றியில் அடிபட்டு ரத்தம் ஒழுக உட்கார்ந்திருந்தார். இன்னொருவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்திருப்பாரோ? உடைந்த கால்கள் ரப்பர் தண்டு போல புசுபுசுவென வீங்கி, தன்னிச்சையாய் ஆடிக் கொண்டிருக்க, வலியைத் தாங்கிக் கொண்டு கண்ணீர் கன்னத்தில் வழிய அமைதியாய் அமர்ந்திருந்தார்.

“இங்க வர்ற எல்லாருமே எமர்ஜென்சி கேஸ்தான். இருக்கிற நாலு டாக்டர்ஸை வெச்சிகிட்டு சிவியரிட்டியை பொறுத்துதான் முன்னுரிமை தர முடியும். ரெண்டு ஃபேட்டல் ஆக்சிடெண்ட் கேசும், ஹார்ட் அட்டாக் கேசும் ஏற்கெனவே உள்ளே இருக்கு. அவங்க முடிஞ்சதும் அந்த ரத்த பார்ட்டி. அப்புறம்தான் நீங்க.”

அவள் அப்படிச் சொன்னதும், பேண்ட்டின் பின்புற பாக்கெட்டில் பதுக்கி வைத்திருந்த க்ரோசின் மாத்திரையை கண்டுபிடித்து முழுங்கிக் கொண்டு, சோபாவில் சுருண்டான் அனந்து. அரை மணி நேரம் ஒரு மணி நேரமாகி – ஒரு மணி நேரம் இரண்டானது.

அனந்துவிமிருந்து குறட்டை சத்தம் கேட்டது. இப்போதுதான் காலுடைந்தவரைக் கூப்பிட்டார்கள். அடுத்து அவனைக் கூப்பிட்டாலும் கூப்பிடலாம். எழுப்பலாமா?

நான் யோசித்தபோது, ஆஸ்பத்திரி வாசலில் பெரிய இரைச்சலுடன் வந்து நின்றது ஓர் ஆம்புலன்ஸ். அந்த சத்தம் கேட்டு அனந்துவே திடுக்கிட்டு எழுந்து விட்டான்.

எனக்கு நெஞ்சுக்குள் கொஞ்சம் பகீரென்றது. ஆம்புலன்ஸில் வருகிறவர் உயிர் போகிற கேசாக இருந்தால் அனந்துவைக் கூப்பிட இன்னும் தாமதமாகுமே? யோசித்துக் கொண்டே எட்டிப் பார்த்தேன்.

ஆம்புலன்ஸில் இருந்து காலி ஸ்ட்ரெச்சர்தான் வந்தது. அதைத் தூக்கிக் கொண்டு வேகமாய் உள்ளே போனவர்கள், நீலத் துணி போர்த்திய ஓர் உருவத்தை அவசர அவசரமாய் எடுத்துச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

எமர்ஜென்சி சிகிச்சை பலனின்றி ரத்த பார்ட்டி அவுட்டா? ரிசப்ஷனிஸ்ட் கறுப்பழகியிடம் மெல்ல விசாரித்தேன்.

“ஸ்ட்ரெச்சர்ல போறவர் ட்யூட்டி டாக்டர்தான். தலை சுத்தி கீழே விழுந்துட்டார். இங்கே ஏற்கெனவே ஓவர் க்ரவுட். நாங்கதான் அவசர உதவிக்கு 911 கால் பண்ணினோம். வேற ஆஸ்பத்திரிலதான் வெச்சு அவருக்குப் பார்க்க முடியும்.”

வெடுக்கென்று எழுந்த அனந்து இப்போது நடுக்கம் இல்லாமல் ஸ்டெடியாய் நின்றான். “சரியாய்டுச்சு. நாம வீட்டுக்குப் போலாம்.”

- ஜனவரி 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
05 செப்டம்பர் 2009 அவர் என்னை நம்பினாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் நடந்த உண்மைகளை சொல்லித்தானே ஆக வேண்டும். வெட்கமாயிருந்தது. அமெரிக்கா வந்த பின்னும் இண்டியன் பங்ச்சுவாலிட்டி. ஹெட்மாஸ்டர் தங்கதுரையின் அறுக்கும் பார்வையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. யார்க், பென்சில்வேனியாவில் காலை பத்து மணி்க்கு அவரை ...
மேலும் கதையை படிக்க...
இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள். " கண்டிப்பா நாம நியுஜெர்ஸியிலிருக்கும் உன்னோட அண்ணன் குடும்பத்தோட ஒரு வாரம் தங்கியிருக்கப் போறோம். இந்தியக் குடும்பப் பழக்க வழக்கங்களை எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
ஈச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை டவுசரை அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கொண்டு, வட்டமான தட்டைக் கூடையைத் தோளில் தூக்கிக் கொள்ளுவான். கேட் சாத்தியதால் தங்கி விட்ட ...
மேலும் கதையை படிக்க...
வசந்த் வெள்ளைத் தடியைத் தட்டித் தட்டித் தட்டுத் தடுமாறி பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்த போது அநேகமாய் அங்கே வேறு யாருமில்லை. “ஹலோ, ஹலோ” என்ற அவன் குரலுக்கு பதில் குரல் எதுவுமில்லை. சாலையில் அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாகக் கார்களின் ஓசைகள். அவனுடைய உலகம் ...
மேலும் கதையை படிக்க...
’என் தப்பை உணர்ந்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.’ என்ற தகவலைக் கடைசியாக ஃபேஸ்புக்கில் பதிப்பித்த கையோடு, மொபைல் ஃபோனைப் பிடித்துக் கொண்டே செத்துப் போயிருந்தான். கொட்டிக் கிடந்த கருஞ்சிவப்பு ரத்தத்தில் அவன் உடம்பு மிதக்கிற மாதிரி இருந்தது. “இது நாலாவது கொலை.” என்றார் இன்ஸ்பெக்டர் ...
மேலும் கதையை படிக்க...
டூ லேட்
இந்தியன்
அந்நிய துக்கம்
பிடி 22
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொல்!

ஆம்புலன்ஸ் மீது 2 கருத்துக்கள்

  1. Nithya Venkatesh says:

    நிஜம்மா என்ன சொல்றதுனு தெரியல .. நல்ல வேல நம்ம ஊரு ஹாஸ்பிடல் அப்படில இல்ல அதுவரைக்கும் கடவுளே உனக்கு தான் நான் நன்றி சொல்லணும்…ஆனா கதை அருமையா இருந்துச்சி ..வாழ்த்துக்கள் ..

  2. சதீஷ் says:

    சூப்பர் சூப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)