அவளுக்கு பதில் இவள்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 11, 2022
பார்வையிட்டோர்: 7,147 
 

சிவபாலனுக்கு மண்டை காய்ந்தது..தடவித் தடவி தலை வழுக்கையானதுதான் மிச்சம்..

“ஏன்யா…இளங்கோ.. இப்படி ஒரு குண்டத்தூக்கி போடுறியே..!

போனவாரம் தான் அந்த பாட்டி கேரக்டர் சீரியசாயிருக்குன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களுக்கு மங்களம் பாடி அனுப்பி வச்சோம்..

இப்ப அப்பா நடிகர் துபாய்க்கு போகப்போறாருன்னு சொன்னா..?

“சார்.. நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்துட்டேன்..ஒரே பிடியாக நிக்குறாரு சார்..

பையன் உடனே வரச்சொல்லி டிக்கெட் அனுப்பிட்டான்னு சொல்றாரு சார்…!”

“இந்த வாரம் தானே அவருக்கு முக்கிய ஸீன்…மருமகள வீட்ட விட்டு விரட்ட அவரும் பையனும் சேந்து பிளான் பண்ற ஸீன் பிரமாதமா வரப்போகுது,
டி.ஆர்.பி.எகிறப் போகுதுன்னு டைலக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேனேய்யா…?

“சார்…வேணும்னா மருமகள இவர் துரத்தறதுக்கு பதிலா இவர மருமக துரத்திட்டா…?

அப்படியே போயிட்டாருன்னு அவர் கதைய க்ளோஸ் பண்ணிடுவோம்..!”

“இளங்கோ…என்னப்பா பெனாத்துற..? மருமக ரொம்ப தங்கம்னா, தங்கம்…! அவுங்க காரக்டருக்கு இது ஒத்து வராதே..! மறந்திட்டியா..?

ஜனங்க இதுக்கு ஒத்துக்கவே மாட்டாங்களே…!”

“பின்ன..வேற வழியே இல்ல.. ஹார்ட் அட்டாக்..ICU…! அடுத்த ஸீன்.. பெரிய ஃபோட்டோ.. மாலதான்…!

“இளங்கோ..எத்தன பேருக்குத் தான் மால போடறதுப்பா…?சீக்கிரமே நானும் ஃபோட்டோல தொங்கிடுவேன் போலியே..?

‘பிரபல சின்னத்திரை இயக்குனர் சிவபாலன் திடீர் மாரடைப்பால் காலமானார்…’

இப்பவே எழுதி வச்சுக்கோ…!

“சார்.. சார்.. அப்படியெல்லாம் பேசாதீங்க.. நீங்க இல்லைனா. நாங்க இல்லை சார்…! எப்படியும் சமாளிச்சிடலாம்… எங்கிட்ட விடுங்க…!”

“இளங்கோ… எனக்கு இன்னிக்கு மூடு சரியில்லை..நீயே இந்த எபிசோட முடிச்சிடு… யாருக்கு மால போடுவியோ தெரியாது..!’

நேராக கிளப்புக்கு போய் இரண்டு பெக் விஸ்கி அடித்தபின்தான் மனசு ஒருநிலைக்கு வந்தது..

வீட்டில் நிருபமாவை சமாளிக்க வேண்டுமே…!

***

சிவபாலன் பெரிய திரையில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான இயக்குனர்.

அவர் இயக்கிய..
‘இரவில் சூரியன்……’
‘என்னைக் காணவில்லை…!’
‘ஒன் பிளஸ் ஒன்…!’
வரிசையாக ஹாட்ரிக் அடித்து எங்கேயோ அவரைக் கொண்டு போய் உட்கார வைத்து விட்டது..
ஆனால் இந்த வருடம் எல்லாம் தலைகீழ்….

ஒரு படம் எடுக்க முடியவில்லை..லாக்டவுன்…!

திரையரங்குகள் மூடல்…

பெரிய திரையில்லையென்றால் , சின்னத்திரை இருக்கவே இருக்கிறது!?

இப்போது மெகா சீரியல் டைரக்டர்…

மெகா சீரியல் இன்று சுலபமாய் இரண்டு வார்த்தையில் சொல்லிவிடலாம்..

ஆனால் எடுத்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்..!

ஒரு வருடமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘ தங்க மனசுக்காரி…..!’

ஆரம்பத்தில் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது சீரியல்..

ப்ரைம் டைம்..பெண்களுக்காக வே எடுக்கப்பட்ட சீரியல்..

இந்த சீரியலைப்பார்த்து நிறைய மாமியார்கள் மாறிவிட்டதாகக் கேள்வி…!

இரண்டு மாதத்தில் ஆரம்பித்தது பிரச்சினை..

“என்னய்யா..பாப்பா..மொட்டத்தலையோட இருக்கு..போன சீன் வரைக்கும் முடியிருந்துச்சேய்யா..!

“குழந்தைக்கு மொட்ட போடறேன்னு நேந்துகிட்டாங்களாம்..அதுனால…”

“அதுனால..? சொல்லாம கொள்ளாம போய் மொட்டையடிச்சிட்டு வந்திடுவாங்களா…?

கன்டினியுட்டி என்னாகுறது…? ஏன்யா..குழந்தைக்கு கூடவா விக் வைக்கணும்…?

நம்ப சீரியலப் பாக்குறவுங்க எதுடா சாக்குன்னு குத்தம் கண்டுபிடிக்க காத்துகிட்டு இருக்காங்களே…!

தீடீர்னு வேற குழந்தைக்கு எங்க போறது…?”

“சார்.. குழந்தைக்கு பழனிபோய் மொட்ட போட்டமாதிரி இரண்டு டைலாக் எழுதிட்டா முடிஞ்சது வேல.!”

“சர்தான்… இன்னைக்கு எடுக்கப்போற எபிசோட் கோவிந்தா…!”அடுத்த தடவ கன்டினிவிட்டில சொதப்பினன்னு வை..நீ அவுட்டு…”

அடுத்த வாரம் வேறொரு புது பிரச்சினை…!

இது கொஞ்சம் சீரியஸ்..

ஹீரோயின் சந்திரமதியாக நடிக்கும் சனம் புடவை கட்ட மாட்டாளாம்…

“சார்.. என்ன சார்..பத்துமாசமா இதே கிழிஞ்சு போன புடவையக் கட்டிட்டு… !

என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கேலி செய்யுறாங்க..

‘என்னமோ. பிரமாதமா சிவபாலன் சார் சீரியல்னு சொன்ன..இந்த பாடாவதி கிழிஞ்ச புடவைக்கா இவ்வளவு அலட்டல் ன்னு’ … !

அவமானமா இருக்கு சார்..!”

“ஏம்மா..நடிக்க வரும்போதே நான் கண்டிஷன் போட்டுட்டு தானே சேத்தேன்..

சந்திரமதி கேரக்டர் ரொம்ப பாவப்பட்ட குடும்பத்து பொண்ணு..அப்பா கிடையாது..அம்மா நாலுவீட்டில வேலை செஞ்சு சம்பாதிக்கிறான்னு…!

அப்போ தலய தலய ஆட்டி,

“சார்..உங்க சீரியல்ல நடிக்கிறதே பெரிய பாக்கியம்..இதில டிரஸ்ஸப் பத்தி எனக்கு கவலயேயில்ல ‘ ன்னு சொன்னது மறந்திட்டியா…?இப்ப பட்டுப்புடவ கேக்குதா..?”

“மறப்பேனா சார்..பட்டுப்புடவயா கேட்டேன்..?..இப்போ எல்லோருமே சுரிதாருக்கு மாறிட்டாங்களே..!

கிழிஞ்ச புடவைக்கு பதிலா பழைய சுரிதார் போட்டுக்கிறேனே சார். கொஞ்சமாவது கிளாமர் வேண்டாமா…?

கடைசியில் சிவபாலன் தான் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது..

சனம் சீரியல் நாயகிகளில் முன் வரிசையில் நிற்பவளாயிற்றே…!

எங்கேயாவது சீரியலை விட்டு விலகினால்…?

ஒருமுறை ஒரு நாய்க்குட்டி காலில் கூட விழத் தயாராயிருந்தார்.. அதுக்கு மூட் அவுட்டாம்! மூலையில் போய் உட்கார்ந்து விடும்…

அப்புறம் விஷயம் தெரிந்து அமேசானிலிருந்து அதுக்கு பிடித்த பிராண்ட் பிஸ்கெட் போட்டப்புறம்தான் வாலாட்டிக் கொண்டு நடிக்க வந்தது.!

‘ ச்சே..! என்ன கேவலமான பொழப்பு..! இதுதான் என்னோட கடைசி மெகா சீரியல்.இனிமே எடுத்தேன்னா எம்பேரு சிவபாலன் இல்லை..!’ என்று சீரியல் நடிகையை மிஞ்சும் வகையில் சூளுரைத்தார்…!

இப்போதெல்லாம் வீட்டுக்கு போகவே நடுங்குகிறார் சிவபாலன்..

***

இரண்டு வருடத்துக்கு முன்னால் வீட்டுக்குப் போவதென்றால் ஒரே உற்சாகம் தான்..

ஆரத்தி எடுக்காத குறையாக வாசலில் நிரூ நின்று கொண்டிருப்பாள்…சில சமயம் நிஜமாகவே ஆரத்தி எடுத்ததும் உண்டு..!

காரைப் பார்த்தவுடன் ஓடி வந்து கதவை திறந்து ப்ரீஃப்கேசை வாங்கிக் கொள்வாள்…

வாசல் லவுன்ஞ்சில் குறைந்தது பத்து பேராவது உட்கார்ந்திருப்பார்கள்..

சிவபாலன் நினைத்தால் இன்னொரு வழியாக வீட்டுக்குள் நுழையலாம்..!

ஆனால் வேண்டுமென்றே அவர்களைத் தாண்டி போவார்..

அவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்வதைக் கண்டும் காணாதவர்போல நேராக வீட்டிற்குள் நுழைந்து விடுவார்…

அவர்கள் கூழைக்கும்பிடு போடுவதை ஓரக்கண்ணால் ரசித்தபடி தலையை வேறுபக்கம் திரும்பிக் கொண்டே நடப்பது இருக்கிறதே…

அந்த சுகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..

அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்…!

வந்தவர்களை ஒரு மணி நேரமாவது காக்க வைத்து விடுவார்..

அவர்களோ ஒரு நாள் முழுவதும் காத்திருக்கத் தயாராக பெட்டி படுக்கையுடன்தான் வந்திருப்பார்கள்..!

ஆனால் வந்தவர்கள் எல்லோருக்கும் மிக்சர் , அல்வா, பாதாம் கீர் என்று குடுத்து அசத்தி விடுவார்..

டிசம்பர் மாதக் குளிரிலும் ஏ.சி.யை ஓடவிட்டு பந்தா காட்டுவார்..!

“வாங்க.. வேலாயுதம்..! ஒரு ஃபோன் போட்டிருந்தீங்கன்னா நான் ஓடி வந்திருக்க மாட்டேன் ?

(ஏண்டா..? நீ இத்தன நாளு என் ஃபோனக் கட் பண்ணி எத்தன ராங்கி பண்ணிகிட்டு திரிஞ்ச..? பாரு ..உன்னிய என் காலடில விழவச்சேனா இல்லியா ?)

பாருங்க வேலாயுதம்.. இன்னும் மூணு வருஷத்துக்கு கமிட் ஆயிருக்கேன்…

உங்கள் மாதிரி ப்ரொட்யூசருக்கு படம் பண்ணமுடியலையேன்னு நினைச்சா ராத்திரி தூக்கம் வரமாட்டேங்குது ‘ ன்னு இன்னம் கொஞ்சம் ஏத்தி விடுவார்..

‘அப்புறம்…? ‘ என்று கூறிக் கொண்டே எழுந்து நின்றுவிட்டால்..‘நீ கிளம்பு‘ என்றுதானே அர்த்தம்..

ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழ்..!

***

வாசலில்தான் நிற்கிறாள் நிருபமா.. ஆனால் ஆரத்தியோடு இல்லை…அர்ச்சனையோடு…!

கொஞ்சம் நடுங்கிக் கொண்டுதான் இறங்கினார் சிவபாலன்..

நல்லவேளை அவருடைய டிரைவர் உதயகுமார் அவரை விட்டுப் போகவில்லை..!

அவர் மனைவியுடன் செலவழித்த நேரத்தைவிட உதயனுடன் செலவழித்த நேரம்தான் அதிகம்.

பொதுவாக சினிமாத் துறையில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் பகைத்துக கொள்ள முடியாத உறவு என்றால் அது அவர்களின் பார்த்தசாரதிகள் தான்..

அவர்களுக்குத் தெரியாமல் அணுவும் அசையாது… !

அவர்களை வேலையை விட்டு அனுப்பினால் அடுத்த நாளே..

“பிரபல டைரக்டரின் லீலா வினோதங்கள்..”

“டைரக்டர் குகப்பிரியன் ஏன் நடிகை செம்பருத்தியை புதுப்படத்திலிருந்து தூக்கினார் தெரியுமா ..?”

இதுபோன்று யூட்யூப் சேனலில் வைரலாகிவிடுவார்…

ஆனால் உதயன் அந்தப் ரகமில்லை..சிவபாலனும் எந்த கிசுகிசுவிலும் இதுவரை மாட்டிக் கொண்டது இல்லை..பவ்யமாக கார் கதவைத் திறந்து விட்டான்…

லவுஞ்சில் ஒரு ஈ..காக்கா.இல்லை..!

பாவம்..சக்தி மட்டும் வாலாட்டிக்கொண்டே ஓடிவந்து அவரது அவரது காலை மோந்து பார்த்தது..

“பாவங்க..சக்தி…இன்னைக்கு ஒரே தவியா தவிச்சுப்போச்சு…சூடு தாங்கல போல…!”

“ஏன் என்னாச்சு…?”

“இனி என்ன ஆவணும்…? மூணு ஏ.சி.ய புடுங்கிட்டு போய்ட்டாங்களே..! ஏ.சி. இல்லாம ஒரு நிமிஷம் கூட இருப்பானா சக்தி…? பிள்ள மொகமே வாடிப்போச்சு பாருங்க….!”

அப்படியே போய் வாசலில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்..

முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது..
இருப்பதே இரண்டு முடி… அதையும் பிய்த்துப் போட மனம் வரவில்லை..!

போனவாரம் வரை போர்ட்டிகோவில் நிறுத்த இடமில்லாமல் ஐந்து கார்கள்..

(இரண்டு பென்ஸ், ஒரு பி.ம்.டபிள்யூ…, ஒரு ஸ்கார்ப்பியோ.. அப்புறம் ஒரு மஸ்டாங்…!)

இ.எம்.ஐ. கட்டமுடியாமல் ஸ்கார்ப்பியோ மட்டும் அனாதையாய் நின்று கொண்டிருக்கிறது…!

சமையலுக்கு மட்டுமே மூன்று பேர்…..

ஒரு மாமி , ஒரு பீஹாரி, ஒரு கான்ட்டினென்ட்டல் குக்..

இப்போது சங்கரி மாமி மட்டும்.. அவளையும் நிறுத்திவிடலாம் தான்.ஆனால் நிரூவுக்கு காப்பி மட்டும்தானே போடத்தெரியும்…

“ஏங்க… இன்னைக்கு சீரியல் ஒழுங்கா போச்சா…? என்னோடு இரண்டு மூணு ஃப்ரண்ட்ஸ் வேற சேனலுக்கு மாறிட்டாங்களாம்..

நிரூ.. உனக்காகத்தான் இத்தன நாள் பொறுத்து கிட்டு இருந்தோம்.. சீரியல் படு போர்.. உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிடாத ‘ ன்னு ….”

“போதும் நிரூ..நானே கொதிச்சு போய் வந்திருக்கேன்.. குடிக்க கூலா ஏதாவது கொண்டுவா..!

“உதயா..கேட்ட மூடிட்டு போ!”

போன வருடம் கேட்டைத் திறக்க ஒரு வாட்ச்மேன், மூட ஒருத்தன் என்று மொத்தம் நாலுபேர்..

இப்போது கேட்டை மூடினால் திறக்க வேண்டிய அவசியமே இல்லையே…!

எல்லாம் நேரம்..!

அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப்பானையிலும் தங்கமிருக்கும்.. இல்லையென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்து விடும் !

குளிர்ந்த தண்ணியைக் குடித்துவிட்டு குப்புறப் படுத்துக் கொண்டு தூங்கவேண்டியதுதான்..!

***

காலையில் அவர் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூட இல்லை…

இளங்கோ….!

‘என்ன தல போற அவசரம் இவனுக்கு.. நிச்சயம் ஒரு குண்டத்தூக்கி தலைல போடப்போறான்…’

“ம்ம்ம்..சொல்லுய்யா.இளங்கோ..யாராச்சும் சீரியல விட்டு விலகுறாங்களா…?”

“சார்.. உங்களுக்கு அபார மூளசார்..? எப்படி கரெக்டா கண்டு பிடிச்சீங்க…?”

இளங்கோ சிலசமயங்களில் கேலி செய்கிறானா அல்லது உண்மையாகவே அப்பாவியா என்று புரிந்து கொள்ளவே முடியாது…!?

“ஏய்..என்னோட பொறுமைய சோதிக்காத… சீக்கிரம் சொல்லு…!

“நம்ப ஹீரோயின் சனம் இருக்காங்க இல்ல சார்..?”

“அவுங்க இருக்காங்களா…இல்லையா…?”

சிவபாலனுக்கு இரத்தம் தலைக்கேறியது…

“நல்லவேளை… அவுங்க இருக்காங்க சார்… அவுங்க ஃப்ரண்டு காரக்டர்…!”

“யாரு..? பூர்ணாவா…?”

“அவுங்க ஃபோன் பண்ணி இந்த வார எபிசோட முடிச்சு குடுத்திட்டு விலகிக்கிறாங்களாம்..”

“ஏனாம்..?”

“உங்க கிட்ட நேர்ல தான் சொல்லணுமாம்.”

“ஆமா.. பெரிய சிதம்பர ரகசியம்..வந்து வச்சிக்கிறேன்…!”

நிஜமாகவே சிதம்பர ரகசியம் தான்.

சிதம்பரம் ஆரம்பகாலத்திலிருந்தே சின்னத்திரையில் கொடி கட்டிப் பறப்பவர்..ஏழு மணி ஸ்லாட்டை அவருக்கு சாசனம் செய்து கொடுத்து விட்டது நிலா டி.வி.

எப்படியோ அவரது சீரியல்கள் எல்லாமே டி.ஆர்.பி.யில் முதல் மூன்று இடத்தைப் பிடித்து விடும்..இப்போது ’முள்ளில்லாத ரோஜா‘ சீரியல் சக்கை போடு போடுகிறது…

அவரிடமுள்ள ஒரே கெட்ட குணம்..அதை ராஜ தந்திரம் என்றுகூட சொல்லலாம்..

மற்ற சீரியலில் நன்றாக நடித்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் புதுமுகங்களை எப்படியோ தன்பக்கம் இழுத்துக் கொண்டு விடுவார்..

பூர்ணாவும் அந்த வலையில் சிக்கி விட்டாள்..

“சார்.. என்ன மன்னிச்சிடுங்க. எனக்கு மூணு வாரமா சீனே இல்ல.. இப்பத்தான் ஓரளவுக்கு பேர் வந்திருக்கு..என்ன மறந்திடப்போறாங்களேன்னு பயம் வந்திடிச்சு சார்..”

“ஏம்மா..போனவாரமெல்லாம்.. படிச்சு படிச்சு சொல்லல..இரண்டு வாரம் கழிச்சு உனக்குத்தான் மெயின் ரோல் இருக்குன்னு…!

ஏம்மா.. என் பொறுமைய சோதிக்கிறீங்க…?”

சிதம்பரத்திடம் பேசிப்பார்த்தால் என்ன ?

“வணக்கம் சிதம்பரம் சார்.. எப்படி இருக்கீங்க….”

“என்ன சிவபாலன்.. அதிசயமா காத்து இங்க வீசுது..?”

“நீங்களெல்லாம் பெரிய ஆளுங்க..எப்பவுமே பிஸி…உங்கப்போய் தொந்தரவு பண்ண வேணாமின்னுதான்..”

“என்ன சிவபாலன்..நிலம புரியாம பேசுறீங்களே…என்ன பிஸி?

நாலு சீரியல் பண்ணின காலமெல்லாம் மலையேறிடிச்சு.!

இப்போ இரண்டுக்கே சிங்கியடிக்குது..!

ஆமா..உங்க ‘ தங்க மனசுக்காரி “சீரியல் சூப்பர் ஹிட்டு போலியே…டி.ஆர்.பி.எங்கியோ போய் நிக்குதே…?”

“எல்லாம் குருநாதர் ஆசீர்வாதம் தான்… அதுலதான் ஒரு சிக்கல்..!”

மனதுக்குள் சிதம்பரத்தை நன்றாகக் திட்டித் தீர்த்தார்..

‘ எப்படி ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறான் பார்… குள்ள நரி…)

“சார்..உங்க கிட்ட முக்கிய விஷயம் ஒண்ணு பேசணும்..”

“சொல்லுங்க சிவா…!”

“எங்க சீரியல்ல நடிக்குதே பூர்ணா.. அவுங்க உங்க சீரியலுக்கு வராங்களாமே…! சார்..? உங்களுக்குத் தெரியாததில்லை.

முக்கியமான காரக்டர்…எனக்கு ஒரு வாரமா தூக்கமில்ல…சாப்பாடு இல்ல…..! சார்….!நீங்க போயி…”

சிதம்பரம் சுயரூபம் காட்டத் தொடங்கினார்…

“பாருங்க சிவா..அந்த பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது.. ஒரு வாரமா எனக்கு போன் மேல போனு.. எனக்கும் ஒரு ஆளு அவசரமா தேவைப் பட்டுது..!

ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்..!

எந்த ஒரு ஆர்ட்டிஸ்ட்டையும் இரண்டு மூணு நாளைக்கு மேல சும்மா வச்சிருந்தோம்னா வேற சீரியலுக்கு மாறிடுவாங்க..!

அவுங்களுக்கு ஏதாச்சும் சின்ன ரோலாவது குடுத்துகிட்டே இருக்கணும்..!

இண்டஸ்ட்ரியில நீங்க கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு…!”

சிவபாலன் வாயைத்திறக்க வழியில்லை..

“இளங்கோ.. நமக்கு நேரம் சரியில்லை..பூர்ணாக்கு பதிலா யாரையாவது தேடிப் பிடி…

“அவருக்கு பதில் இவர்’ னு போடு.. எல்லாம் என் தலையெழுத்து..!

***

ஒரு வாரம் போயிருக்கும்..

“ஏங்க..நம்ப சந்தோஷ் வரானாம்..நாளைக்கு ஃப்ளைட்டில! எவ்வளவு வருஷமாச்சு..

கல்யாணம் பண்ணிகிட்டு போனவன் தான்…ஏங்க நாலு வருஷம் இருக்குமா..?”

“ஆமா.! அந்த கணக்கெல்லாம் நீயே வச்சுக்க..!”

சிவபாலனுக்கும் சந்தோஷுக்கும் ஏழாம் பொருத்தம்..பேசுவதை நிறுத்தி ஒரு வருடமாகிறது..

சந்தோஷ் வந்துவிட்டான்..

ஆரத்தி கரைத்து தயாராய் வாசலுக்கு வந்தாள் நிருபமா..

“வாப்பா..வாம்மா மீனா…!”

என்று நிமிர்ந்தவளுக்கு ஒரே அதிர்ச்சி..

இது மீனா மாதிரி இல்லையே.. நாலு வருஷத்தில் இப்படி மாறிப்போவார்களா..?

மீனா மாநிறமாய்..நல்ல உயரமாய், நீண்ட முடியுடன்…!

இவள் கொஞ்சம் பருமனாய், சிவப்பாய், குள்ளமாய் , ஒட்ட வெட்டிய முடியுடன்…

அமெரிக்கா ஆளை இப்படி மாற்றுமா…?

“அம்மா..இவ மீனா இல்ல..சோனா..!

மீனாவுக்கும் எனக்கும் சரிப்பட்டு வரல..ம்யூசுவல் செபரேஷன்…

“ஏன் சந்தோஷ்..? சொல்லவேயில்லையே..!”

“அதான் நேரில கூட்டிட்டு வந்திட்டேனே…”

சிவபாலனுக்கு அதிர்ச்சியாகவே இல்லை.. இந்த இரண்டு வருஷத்தில் எத்தனையோ பார்த்துவிட்டார்…!

‘அவளுக்கு பதில் இவள்…’

அவ்வளவுதானே…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *