அமைச்சர் கழுதையார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,106 
 

தன் வீட்டில் இருக்கும் கழுதை பேசுகிறது என்று சின்னான் சொன்ன போது ஊருக்குள் யாரும் நம்பவில்லை. யார்தான் நம்புவார்கள்? ஆனால் பாருங்கள் கிளி பேசுகிறது மைனா பேசுகிறது என்று சொன்னால் நம்புபவர்கள் கழுதை பேசுகிறது என்பதை நம்பாதது ஆச்சரியம்தான். நம்பிக்கை இழக்காத சின்னான் ஊர்ப்பண்ணாடியிடமும் சொன்னான். அவரும் நக்கலாகத்தான் புன்னகைத்தார். ஆனால் அந்தப் புன்னகையில் கொஞ்சம் நம்பிக்கை தெரிந்தது. திண்ணையில் கிடந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு சின்னானுடன் நடந்தார். இருவரும் சின்னான் வீட்டிற்கு பக்கமாக போய் இருந்தார்கள். வாசலை கூட மிதிக்கவில்லை அதற்குள்ளாக யாரோ கட்டைக் குரலில் ஊர்ப்பண்ணாடியை தாறுமாறாக திட்டத்துவங்கினார்கள். வீட்டுக்குள் காலை வைத்தால் நறுக்கிவிடுவேன் என்ற அதட்டவும் செய்தார்கள். வேறு யாருமில்லை மிஸ்டர் கழுதையார்தான்.

அதிர்ச்சியடைந்த பண்ணாடி தனக்கு வந்த அத்தனை கோபத்தையும் திரட்டிக் கொண்டு கற்களை பொறுக்கத் துவங்கினார். கழுதையாருக்கும் கோபம் வந்துவிட்டது. உரத்த குரலில் அவரின் அந்தரங்க உறவுகளை எல்லாம் பட்டியலிட ஆரம்பித்தது. கிணற்று மேட்டுக்கு யாரையெல்லாம் பண்ணாடி அழைத்துப்போனார் என்ற பட்டியல்தான் அதில் பிரதானம். வியர்த்துப்போன பண்ணாடி கற்களை கீழே போட்டுவிட்டு ஓடத் துவங்கினார். தனது வீட்டையும் தாண்டியும் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தார். கழுதையாரின் சத்தம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்கள் வரை கேட்டது. இப்பொழுது சின்னான் சொல்வதை நம்புவதைத் தவிர ஊருக்கு வேறு வழி தெரியவில்லை.

அடுத்தநாள் தினத்தந்தியில் கழுதையாரோடு சேர்த்து சின்னானும் பல்லிளித்தான். அப்புறமாக சன் டிவி, விஜய் டிவியில் எல்லாம் படம் ஓட்டத்துவங்கினார்கள். முப்பது பேரை வட்டமாக கூட்டி வைத்து கழுதை பேசினால் நாட்டுக்கு நல்லதா கெட்டதா என்ற தலைப்பையும் சொல்லிவிட்டு கோட் ஷூட் அணிந்த ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்த கூத்து எல்லாம் நடந்தது. இதோடு நின்றிருந்தால் பரவாயில்லை அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்பதைப் போல எவன் மாட்டுவான் என்று காத்துக் கொண்டிருக்கும் வட இந்திய இங்கிலீஷ் சேனல்காரர்கள் படை திரட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். ஏதோ பிரளயம் வருவதைப் போல பிட் ஓட்டிக் கொண்டிருந்த அவர்களை கழுதையார் தாறுமாறாக ஆங்கிலத்திலேயே திட்டத் துவங்கினார். ஆனால் அவர்களுக்கு சுரணை எதுவும் இருப்பது மாதிரி தெரியவில்லை.

கழுதையாரால் ஊருக்கு பெருமை என்றுதான் முதலில் பேசிக் கொண்டார்கள். ஆளாளுக்கு கொண்டாடினார்கள். வாலில் வறண்ட பனை ஓலையைக் கட்டி விரட்டியவர்கள் எல்லாம் கழுதையாரை பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் மீதான வெறுப்பில் வார்த்தைகள் கழுதையாரின் தொண்டை வரைக்கும் வந்து அடைத்துக் கொண்டன. செய்தித்தாள்கள், டிவி எல்லாம் போக அமைச்சர் வேறு பார்க்க வருகிறாராம். கழுதையார் மற்றவர்களின் அந்தரங்கத்தை பற்றி வெளிப்படையாக பேசக்கூடாது என்பதை வலியுறுத்தவே அமைச்சரை பிரதமர் அனுப்பி வைத்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் பழனிசாமி பார்க்க பக்கியைப்போலவே இருப்பார். கொங்கு நாட்டுக்காரர்தான். அவர் தனது மனைவியை செய்தியாளர்கள் முன்பாகவே கழுதை முண்டை என்று ஒருமுறை திட்டிவிட்டார். முண்டை என்பது விதவையைக் குறிக்கும் சொல் என்பதை கண்டறிந்த பெண்ணிய அமைப்புகள் அமைச்சரை பிய்த்துவிட்டார்கள். ஆனாலும் ராஜினாமா செய்யாமல் தப்பித்துவிட்டார். அதிலிருந்து கிசுகிசுக்களில் அவரை கன்னா முன்னா அமைச்சர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். அவர் படம் போட்ட செய்தித்தாளை தின்ற போதெல்லாம் தனக்கு வாந்தி வந்தது கழுதையாருக்கு ஏனோ ஞாபகம் வந்தது. வரட்டும் கவனித்துக் கொள்ளலாம் என்று கழுதையார் நினைத்துக் கொண்டார்.

அமைச்சர் வருகிறார் என்பதால் சாலைகளை சுத்தம் செய்வதும் குளோரின் போடுவதுமாக ஊரே பிரகாசம் ஆனது. கழுதையோடு சேர்ந்து அமைச்சர் நிழற்படம் எடுக்க வேண்டியிருக்கலாம் என்பதால் கழுதையாருக்கு குளித்துவிடச் சொல்லி சின்னானிடம் தெரிவித்தார்கள். எப்பொழுதுமே தனக்கு குட்டிச் சுவரை உரசித்தான் பழக்கம் என்பதால் குளிப்பதற்கு அத்தனை சுளுவாக கழுதையார் ஒத்துக் கொள்ளவில்லை. இப்பொழுதெல்லாம் சின்னான் என்ன பேசினாலும் எதிர்த்து பேசி மானத்தை வாங்கிவிடுகிறது. அதனால் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

மத்திய அமைச்சர் பத்து மணிக்கு வருவார் என்று அறிவித்திருந்தார்கள். அவர் வந்தவுடன் வணக்கம் சொல்ல வேண்டும் என்று கழுதையாருக்கு உத்தரவு போட்டிருந்தார்கள். மணி பதினொன்றுக்கு மேலாகியிருந்தது. டிவி சேனல்காரர்கள் வெயிலுக்கு ஓரமாக ஒதுங்கினார்கள். கழுதையார் வாயில் அசைப்போட்டுக் கொண்டிருந்தார். அமைச்சர் எந்த நேரத்திலும் வந்துவிடக் கூடும் என்பதால் துப்பி விடச் சொன்னார்கள். கழுதையார் பசியோடு முறுகிக் கொண்டிருந்தார். மணி இரண்டும் ஆகிவிட்டது. இனியும் தன்னால் பசியோடு கிடக்க முடியாது என்று வெளிப்படையாகச் சொன்ன போது கறுப்புச்சட்டை அணிந்திருந்த போலீஸ்காரன் தன்னிடம் இருந்த குச்சியால் கழுதையாரின் முதுகில் விளாசிவிட்டான். தே பசங்களா என்று ஆரம்பித்த கழுதையாரின் வசவு அத்தனையும் அச்சுபிசகாமல் டிவியில் லைவ் டெலிகாஸ்ட் ஆகிக் கொண்டிருந்தது. சின்னான் காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதானப்படுத்தினான்.

மூன்றரை மணிக்கு அமைச்சர் வந்து சேர்ந்தார். பத்தாயிரம் வாலா பட்டாசு ஒன்றை கொளுத்தினார்கள். கழுதையார் நடுங்கிப் போனார். அமைச்சர் கழுதையாரை பார்த்ததோடு நிறுத்தியிருக்கலாம். கழுதையாருக்கு அரசாங்க வேலை கொடுக்கப்படும் என்று அறிவித்தார். கடுப்பேறிய கழுதையார் அமைச்சரின் முகத்தை நேருக்கு நேராகப்பார்த்து ஏதோ வசவு சொல்லை உதிர்க்க அமைச்சர் கோபம் கொப்புளிக்க ஓங்கி ஒரு அடி போட்டுவிட்டார். அதோடு நில்லாமல் ‘கழுதை முண்டை’ என்று திட்டியும் விட்டார். கண் இமைக்கும் நேரத்தில் தனது அத்தனை பற்களையும் நறநறத்துக் கொண்ட கழுதையார் அமைச்சரைக் கவ்விப்பிடித்துவிட்டார். துல்லியமாக எந்த ’இடம்’ என்று வெளிப்படையாக அறிவிக்க முடியாத சங்கடத்தில் டிவிச் சேனல்கள் தொடை என்றே குறிப்பிட்டன. அவசரமாக மருத்துவமனை ஒன்றிற்கு அலறியபடியே தூக்கிச் செல்லப்பட்ட அமைச்சர் இரண்டு கால்களையும் விரித்து படுக்க வைக்கப்பட்டார்.

ஒரு நாளுக்குப் பிறகாக மயக்கம் தெளிந்தவுடன், உடனடியாக கழுதையை கொன்றுவிட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டபோது அதை ’சீக்ரெட்டாக’ செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கழுதைக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. சின்னான் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் அதிகாரிகளே உணவைக் கொடுக்கப் போனார்கள். இருபத்திநாலு மணி நேரச் சேனல்கள் கழுதை உணவு உண்பதிலிருந்து ஒண்ணுக்கு போவது வரை எதைச் செய்தாலும் படம் எடுத்துக் கொண்டிருந்ததால் விஷ உணவு கொடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. முழுக்கண்காணிப்பில் இருக்கும் கழுதையை ரகசியமாகக் கொல்லுதல் என்பதற்கான எந்த சாத்தியமும் இல்லாத நிலையில் கழுதையாரை என்ன செய்வது என்று யோசித்தார்கள்.

பிரதமரிலிருந்து லோக்கல் பண்ணாடி வரைக்கும் அத்தனை பேரின் ரகசியங்களையும் பிட்டு பிட்டு வைக்கும் வைக்கும் கழுதையார் தனிக்கட்சி ஆரம்பித்தால் கூட வென்றுவிடுவார் போலிருக்கிறது. அத்தனை புகழ் அவருக்கு. பிரதமரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும், முதல்வரின் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் நடந்தன. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கழுதையாரின் புகழ் பரவிக் கொண்டிருந்தது. அண்ணா ஹசாரேவும் கழுதையாரின் ஆதரவைக் கேட்கப்போவதாக புளியைக் கரைத்தார்.

கழுதையாரை தனிக்கட்சி ஆரம்பிக்க அனுமதிப்பதை விட ஒரு கட்சியில் எம்.எல்.ஏ ஆக்கி வாயை அடக்கிவிடலாம் என்றும் யோசித்தார்கள். சின்னானை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கழுதையார் அமைச்சர் பதவி கேட்கிறாராம். அது காரியத்தை இன்னமும் சுலபமாக்கிவிட்டது. முதலமைச்சரின் பொதி சுமக்க சரியான ஆள் கிடைத்த மகிழ்ச்சி அரசியல்வாதிகளுக்கு. இடைத்தேர்தலில் “அன்பார்ந்த தாய்மார்களே பெரியோர்களோ வாக்காள பெருங்குடி மக்களே அண்ணன் கழுதையாருக்கு….” என்று அறிவித்தபடி ஆட்டோ சுற்ற ஆரம்பித்தது.

– ஆகஸ்ட் 2, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *