அத்திரிபச்சான் கல கலா!

 

கிருஷ்ணனுக்கு சாப்பாட்டு வக்கணை அதிகம். வீட்டில் என்னதான் பஞ்ச பட்ச பணியாரங்கள் மனைவி அனு சமைத்துப் போட்டாலும் வெளியே போய் சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம். எங்கே போய் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளட்டும். அது அனுவுக்கு ஆட்சேபணையில்லை. வீட்டுக்கு வந்து அந்த ஐட்டங்களோடு அனுவின் சமையலை ஒப்பிட்டு வம்பு செய்யும்போதுதான் அனுவுக்குப் பற்றிக் கொண்டு வரும்.

“நீ இட்லிக்குப் பண்ணற சாம்பார் சரியேயில்லை. ரத்னா கேஃப்ல ஒரு சாம்பார் போடறாங்க பார். ஜனங்க எல்லோரும் அங்கே சாம்பாருக்குத் தான் இட்லி தொட்டுக்கிறாங்க. அவ்வளவு ருசி!” அப்போதுதான் அனுவுக்கு கிருஷ்ணன் பார்த்தசாரதி கோவிலுக்குப் போகிறேன் என்று மாலை கிளம்பிப் போனது நினைவுக்கு வரும். அலுவலகம் விட்டு ஒரு நாளும் நேரே வீட்டுக்கு வர மாட்டான். வீட்டில் அனு குழந்தைகளுக்காக வைத்து விட்டுப் போகும் ப்ரட், பிஸ்கட் வகையறாக்கள் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது என்பதால் வெளியே ஏதாவது சாப்பிட்டு விட்டு தான் வருவான். அதைத் தவிர ஏதாவது வேலையாக பிராட்வே பக்கம் போனால் அங்கே பிரசித்தமாக உள்ள பிரகாஷ் கேஃபில் அல்வா, போண்டா, மசால் தோசை, திருவல்லிக்கேணி போனால் ரத்னா கேஃப் இட்லி, சாதா தோசை என்று வெளுத்து வாங்கி விட்டு வருவான்.

வீட்டில் அனு என்ன பாடு பட்டு எதை செய்தாலும் “இந்த பாயஸத்துக்கு தேங்காய் கீறி வறுத்துப் போட்டிருக்கலாம். என்ன இது? அரைச்சு விட்ட சாம்பாருக்கு தேங்காயெண்ணெயில் தாளித்துக் கொட்டலையா? கொஞ்சம் கூட வாசனையாகவே இல்லையே? எலுமிச்ச சாதமா இது? எலுமிச்சம்பழம் பிழிஞ்சு கலந்தியா இல்ல வெறும் மஞ்சப் பொடி போட்டு சாதம் கலந்தியா?” என்று குறை கண்டு பிடித்து கொண்டேயிருப்பான்.

ஒண்ணங்கிளாஸ், மூன்றாம் க்ளாஸ் படிக்கும் சின்னக் குழந்தைகளை பள்ளிக்குக் கிளப்பி விட்டு, தானும் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்ப பஸ்ஸைப் பிடிக்க வேண்டிய சூழ்நிலையில் காலை வேளைகளில் நிஜமாகவே சில சமயங்களில் குழம்பில் உப்பு போட்டோமா, ரசத்துக்குத் தாளித்தோமா போன்ற சந்தேகங்கள் அனுவுக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் எத்தனையோ விடுமுறை நாட்களில் அவியல், வெங்காய சாம்பார், பருப்புருண்டை மோர்க்குழம்பு என்று அவளும் பாடுபட்டு சிறப்பாக சமைக்கத்தானே செய்கிறாள்? சமையல் நன்றாக இருந்தால் தப்பித் தவறி கூட ஒரு பாராட்டு கிடைக்காது. ஏதாவது தவறு இருந்ததோ தொலைந்தது. பிறகு அடுத்த தவறு நிகழும் வரை முந்திய தவறுக்கு, “அன்னிக்கு ஒரு ரசம் வச்சியே எருமை மாட்டு மூத்திரம் மாதிரி! ஆயுசுக்கும் அதை மறக்கவே முடியாது” என்று ஒரு நாள் ரசத்துக்கு உப்பு, உறைப்பு கம்மியாகப் போனதற்கு சகஸ்ரநாம அர்ச்சனை தொடர்ந்து கொண்டேயிருக்கும். தவறு தன் மேல் தான் இருக்கிறது என்பது ஜன்மத்திற்கும் அவனுக்குப் புரியும் என்று தோன்றாததால் ‘உங்களை மாதிரி எருமை மாட்டு மூத்திரம் குடித்து எனக்குப் பழக்கமில்ல. அதனால நீங்க சொல்றது எனக்குப் புரியல!’ என்று நாக்கு நுனி வரை ரோஷமாக வரும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு வெளியே வராமல் உள்ளேயே நிறுத்திக் கொள்வாள் அவன் கோபத்திற்கு பயந்து. கோபம் வந்து விட்டால் லேசில் சமாதானமாக மாட்டான். நாள் முழுவதும் பொறுமிக் கொண்டேயிருப்பான்.

ஒரு தடவை பேச்சு வாக்கில் “எங்கம்மா தவலை அடை பிரமாதமா செய்வாள்” என்று சொல்லி விட்டாள். அவ்வளவுதான். தினம் கேட்க ஆரம்பித்து விட்டான். “நீ எப்போ தவலை அடை பண்ணப்போற?” என்று. “எனக்குப் பண்ணத் தெரியாது. எங்கம்மாவுக்கு தான் தெரியும். அம்மா தான் எப்பவோ மேலே போயிட்டாளே?” என்றால், “ஏன் நீ இதெல்லாம் அப்பவே கத்துக்கல?” என்று ஆரம்பித்து, “உங்கக்கா இருக்காளே க்ரோம்பேட்டையில, அவ கிட்ட போய் கத்துண்டு வா!”: என்று முடிப்பான். சோதனை என்னவென்றால் அக்காவுக்கும் இதெல்லாம் தெரியவில்லை. “‘மேலே பரலோகத்துக்குப் போய் உங்கம்மா கிட்டயே கத்துண்டு வா!” என்று சொல்லாத குறை தான். பிடுங்கல் பொறுக்க முடியாமல் கல்யாணத்துக்கு அண்ணா வாங்கிக் கொடுத்த எவர்சில்வர் தவலையை ஒரு நாள் பரணிலிருந்து எடுத்து, சாதா அடை செய்து அதில் போட்டு, ‘தவலை அடை’ என்று கொடுத்து விடலாமா என்ற அளவுக்கு அனு தலையைப் பிறாண்டிக் கொண்டாள்.

வீட்டில் கொறிப்பதற்கு அவ்வப்போது லாலா கடையிலிருந்து ஏதாவது வாங்கிக் கொண்டு வருவான். அப்போது வீட்டிலுள்ளவர்களுக்கும் மிக்ஸர், காராசேவு என்று கிடைக்கும். அதையும் அப்படியே சாப்பிட்டுவிட மாட்டான். “போன வாரம் சாப்பிட்ட காராசேவு மாதிரி இல்லியே? இது என்னவோ வித்தியாசமான டேஸ்டா இருக்கே?” என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பான். சில சமயங்களில் “நேத்திக்கி பீச்ல மொளகா பஜ்ஜி சாப்ட்டேன். சூப்பரா இருந்தது. இன்னிக்கு நம்ப காய்கறிக்கடையிலேயே பஜ்ஜி மொளகா பார்த்தேன். அதான் வாங்கிண்டு வந்தேன். இன்னிக்கே பண்ணிடு” என்பான். அவள் அலுவலகம் விட்டு வரும்போதே மணி ஏழாகி விடும். அதற்குப் பிறகு எப்போ மொளகா பஜ்ஜி பண்ணி, எப்போ ராத்திரிக்கு சமைத்து எப்போ குழந்தைகளுக்கு நாளைக்கு டெஸ்டுக்கு சொல்லிக் குடுத்து, தூங்கப்போவது….. நினைக்கும்போதே அலுப்பாக இருக்கும் அனுவுக்கு. அன்றைக்கு முடியாவிட்டாலும் பாவம் இவ்வளவு ஆசையாகக் கேட்கிறானேயென்று ஒரு ஞ்£யிற்றுக்கிழமை செய்து கொடுத்து விடுவாள். ஆனால் அவனிடம் நல்ல சர்டிஃபிகேட் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுமா?

“டேஸ்ட் கொஞ்சம் கம்மியாகத் தானிருக்கு. ‘பீச்’ல சாப்பிட்டது போல இல்லை” என்பான் உதட்டைப் பிதுக்கியபடி.

‘டேஸ்ட் நிச்சியம் கம்மியாகத்தானிருக்கும். ஏன்னா நான் புதுசா எண்ணையை அடுப்பில ஏத்தி பண்றேன் இல்லியா? ‘பீச்’ல னா மாசக்கணக்குல ஒரே சுட்டெண்ணையை வச்சுப் பண்ணிக் குடுப்பாங்க. வாஸ்தவந்தான். அந்த டேஸ்ட் வர்றாது தான்.’ என்று எதிர்த்து கேட்க ஒரு நொடி ஆகாது. ஆனால் பதிலுக்குப் பதில் பேசுவது அவனுக்குப் பிடிக்காது. “என்னையே எதிர்த்துப் பேசறியா?” என்று ஏக ரகளை செய்வான் வீடு ரெண்டு படும் என்பதால் இவளும் வாயே திறக்காமல் மனதுக்குள் மட்டும் பொறுமிக் கொள்வாள்.

புது வருடம் ஜனவரி ஒண்ணாந்தேதியன்று காலையில் குடும்பத்தோடு ஏதாவது கோவிலுக்குப் போய் விட்டு அப்படியே ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

இந்த வருடம் புது வருடம் அவர்களோடு வெளியே வர முடியாது என்று முதல் நாளே சொல்லி விட்டான். யாரோ ‘ஜார்ஜ்’ என்று ஒரு கிருத்துவ நண்பராம், புதிதாக இவன் அலுவலகக் கிளைக்கு மாற்றலாகி வந்திருக்கிறாராம். அவர் வீட்டுக்குக் காலையில் போய் புத்தாண்டு வாழ்த்து நேரில் தெரிவிக்கப் போகிறேன் என்றான்.

அனு தான் மட்டும் தனியாகப் போக வேண்டியிருந்ததால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகிலுயேயுள்ள சிவன் கோவிலுக்குப் போய் விட்டு வந்து வீட்டில் சமையலை ஆரம்பித்தாள். ஜார்ஜ் வீட்டுக்குப் போய் விட்டு திரும்பியவன் நேரே சமையலறைக்கு அனுவைத் தேடிக் கொண்டு வந்தான். முகம் ஒரே சீரியஸாக இருந்தது.

“என்ன? பசி வந்தாச்சா? ஏதாவது டிஃபன் சாப்பிட்டீங்களா? இதோ சீக்கிரம் சமையலாகிடும்” அடுப்பில் காயைக் கிளறிக்கொண்டே அனு பேசினாள்.

“அனு! அவங்க வீட்டில ஒண்ணு சாப்பிடக் கொடுத்தாங்க. ஒரு பட்சணந்தான். ஆனா உருவத்தில வித்தியாசமா இருந்தது. நீ மைதா மாவுல இனிப்பு துக்கடா பண்ணுவியே, கிட்டத்தட்ட அந்த ருசி. பேர் என்னவோ சொன்னான். வீட்டுக்கு வர்ற வழி முழுக்க ‘அத்திரி பச்சான் கொழுக்கட்டை’ மாதிரி மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே வந்தேன். வீட்டுல உன்னைப் பண்ணச் சொல்லணும்னு நெனைச்சேன். மறந்து போச்சே! ” என்று கைகளை உதறிக் கொண்டான்.

“நீ சொல்லேன்! உனக்கு நிச்சியமா தெரிஞ்சிருக்கும்!” என்றான்.

“நா கண்ணால பார்க்காத ஒண்ணைப்பத்தி நான் என்ன சொல்ல முடியும்?” என்றாள் அனு யதார்த்தமாக.

“இல்லே! உனக்குத் தெரியாம இருக்காது. வேணும்னே சொல்ல மாட்டேங்கிறே?” என்று ஸ்ருதி ஏற ஆரம்பித்தது.

‘இது ஏதடா புது வருஷமும் அதுவுமாக காலையிலேயே வம்புக்கு அஸ்திவாரம் போடறாரே?’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அவள் பக்கத்து வீட்டுப் பெண் நீரஜா, “ஹாப்பி நியூ இயர்! மாமா! மாமி!” என்று உற்சாகமாகக் கூவிக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

“வா நீரு! நீ ஊர்ல இல்லாம ப்ளாட்ல சத்தமேயில்ல.” என்று அனு சொன்னதும், சோழிகளைக் குலுக்கிப் போட்டது போல ‘கல கல’ வென்று நீரஜா சிரிக்க, “இந்த ‘கல கல’ சிரிப்பு தான் ஒரு வாரமா கேக்காம பில்டிங்கே நிசப்தமா இருந்தது” என்று அனு சிரித்தபடி சொன்னாள்.

“என்ன? என்ன சொன்னே? ‘கல கல’ ன்னா? ஜார்ஜ் வீட்டில சாப்பிட்ட ஐட்டம் பேரு ‘கல கலா’ ன்னு தான் சொன்னான். இப்பத்தான் நினைவுக்கு வர்றது. பூங்கொத்து மாதிரி ஒரு அச்சில போட்டு பண்றாங்க.” என்றான் கிருஷ்ணன் உற்சாகமாக.

நீரஜாவுக்கு சிரிப்புத் தாங்கவில்லை. “அத்திரிபச்சான் கொழுக்கட்டை தான் கேள்விப் பட்டிருக்கேன் மாமி! இது அத்திரிபச்சான் ‘கல கலா’ வா?” அனுவும் அவளோடு சேர்ந்து அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
"ஏ புள்ள! நானெல்லாம் அந்த காலத்துல நெதமும் எட்டு மைலு தொலவு நடந்து போய் படிச்சிட்டு வந்தவந்தான்! அப்போ மாதிரியா இருக்குது ஊரு இப்போ? ரோட்டு போட்டிருக்காங்க. அக்கம் பக்கத்து ஊருங்களுக்கு பஸ்ஸ§ ஓடுது?" இளங்கோ வாத்தியார் பேசுவதை பூங்கோதையும் காவேரியும் ...
மேலும் கதையை படிக்க...
காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. ஒரே மாதிரி உடையலங்காரத்துடன் ஒவ்வொரு வளைவிலும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பாலகர்கள் பூஜையை ஆரம்பித்தனர். கரையிலிருந்து சற்று நேரம் ஆரத்தி ஏற்பாடுகளை ...
மேலும் கதையை படிக்க...
"கங்கிராட்ஸ்! நீங்க மறுபடி தந்தையாகப் போறீங்க!" டாக்டர் சொன்னதைக் கேட்டு வசீகரன் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது. பதில் பேசாமல் டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு மைதிலியுடன் வெளியே வந்தபோது அவள் சந்தோஷமாக இருக்கிறாளா இல்லையா என்று ...
மேலும் கதையை படிக்க...
மழை விட்டிருந்தது. அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய வாணி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று இடது கால் கோணிக்கொண்டது. ஒரு நொடி குனிந்து அந்த கால் செருப்பு அறுந்திருப்பதை கவனித்தாள். சாலை ஓரமாக ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. ஜோடி செருப்பையும் அவிழ்த்து ...
மேலும் கதையை படிக்க...
"கண்ணா! செப்புப் பாத்திரத் தண்ணி குடிச்சியா?" ரமா பரபரப்பாக சமையலறையில் காரியம் செய்து கொண்டே அப்போது தான் தூங்கி எழுந்து வந்த பிள்ளையை விசாரித்தாள். பல் தேய்த்து விட்டு ஆசையாக சூடாகக் காப்பி குடிக்கலாம் என்ற நினைப்போடவே எழுந்திருந்த கண்ணன் உடனே ...
மேலும் கதையை படிக்க...
'பிரபல நடிகன் 'ஆக்ஷன் ஆறுமுகம்' ஷ¨ட்டிங் முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருந்தது. எதிரேயிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான். அவன் கூடவே உள்ளே வந்த ரசிகர் மன்றத் தலைவனும் அவனுடைய பால்ய நண்பனுமான சண்முகம் பக்கத்தில் ...
மேலும் கதையை படிக்க...
'ணங்'கென்ற சத்தத்துடன் முதலில் ஒரு பித்தளைக் குடம் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக வைக்கப்பட, தேசிய நெடுஞ்சாலையின் அந்தப் பகுதியே பல வண்ணக்குடங்களினால் போடப்பட்டது போல் தோற்றமளித்தது. வானம் பார்த்த பூமியான கருத்தம்பட்டி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
"அண்ணாமலை வந்திருக்கார். அரை மணி நேரமா காத்திண்டிருக்கார்." கணவரை வாசலிலேயே எதிர் கொண்டு கிசுகிசுப்பான குரலில் யமுனா அறிவித்தாள். 'எதுக்கு வந்திருக்கார்? இந்த மாச வாடகை கூட அக்கவுண்ட்ல போட்டாச்சே? என்ன விஷயமாக இருக்கும்?' கேள்விக்குறியை முகத்தில் தேக்கியபடியே சுப்பு உள்ளே நுழைந்தார். அவரைப் ...
மேலும் கதையை படிக்க...
கோபி தன் கோபத்தையெல்லாம் காட்டி ஓங்கி உதைக்க, வண்டி 'விர்'ரென்று சீறிக் கொண்டு ரோஷமாகக் கிளம்பியது. சிக்னல்களையெல்லாம் கடந்து அண்ணா சாலையின் மையத்திலுள்ள தன் அலுவலகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு 'லிஃப்டுக்கு' ஓடிய கோபிக்கு 'சே!' என்றிருந்தது. 'என்ன மனைவி, என்ன வாழ்க்கை ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சு கை கால்களெல்லாம் ஓய்ந்து போய் படுத்தாள். எப்போதடா பொழுது விடிந்து இந்த நீண்ட இரவு முடியும் என்று ஆயாஸமாக இருந்தது. நேற்று இரவு ஒன்றுமே விபரீதமாக நடக்காததைப் போல எப்பொழுதும் போல ஜகன் காலை எட்டு மணிக்குக் கண் முழித்து ...
மேலும் கதையை படிக்க...
ஜான்சி ராணிகள்
சின்னஞ்சிறு பெண் போலே…
ஒன்றா…. இரண்டா?
சொல்லாமலே…
கண்ணா! காப்பி குடிக்க ஆசையா?
தீர்வு புலப்பட்டபோது….
மாயப் பெட்டியும் மாறாத மனிதர்களும்
காலம் செய்த கோலமடி…..
அனு அப்படித்தான்!
போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)