விதி

 

மும்பையை விட்டு ரயில் நகரத் தொடங்கியது. சென்னை சென்று சேர்வதற்குள்
ரேவதியை ரயிலை விட்டு கீழே தள்ளி கொன்றுவிட வேண்டும். முதல் முறையாக ஒரு
கொலை செய்யப்போகிறேன் என்கிற எண்ணமே உடலுக்குள் ஏதேதோ செய்தது. லேசாய்
உடம்பு சுட்டது. முதல் வகுப்பு ஏசியில் பயணித்தும் வியர்த்துக்கொண்டே
இருந்தது. இவை எதுவும் அறியாமல் என் தோளில் சாய்ந்துகொண்டு “ரீடர்ஸ்
டைஜஸ்ட்” படித்துக்கொண்டிருந்தாள் என் காதலி பூஜா.

எதிர் சீட்டில் இரு பெண்கள் ஒன்று நான் கொல்லப்போகும் ரேவதி. இன்னொருபெண்
பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவள் போலிருந்தாள். எலுமிச்சை நிறம்.
டிசர்ட்டில் தமிழ்ப்படுத்த முடியாத ஒரு ஆங்கில வாசகமிருந்தது. அவளை பற்றி
எதற்கு இப்போது? நான் கொலை செய்ய வேண்டியது ரேவதியை. காதில் ஐபோடை
மாட்டிக்கொண்டு,கண்கள் மூடி,ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பாடலை
ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் முகம் மட்டும் பளிச்சென்று இருந்தது.
அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரியுமே அது மாதிரி.

ரேவதி என்முன் வந்து அமர்ந்துபோது என்னை அடையாளம் கண்டுகொண்டு எவ்வித
பயமோ பதட்டமோ இல்லாமல் வெகு இயல்பாய் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு
பாடல்களில் மூழ்கிப்போனாள். பூஜாவிடம் ரேவதி என்னுடன் கல்லூரியில்
படித்தவள் என்று மட்டும் சொன்னேன். ரேவதியால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட
பூகம்பத்தை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. காரணம்,பூஜா என் காதலி. இந்த
இரண்டு வருடங்களாய் நான் சிரிப்பதற்கு காரணம் பூஜா. அதற்கு முன்பு நான்கு
வருடமாய் நான் அனுபவித்த சித்ரவதைக்கு காரணம் அப்பாவிபோல் என் முன்னால்
அமர்ந்திருக்கும் இந்த ரேவதிதான்.

ரேவதியும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். சென்னையிலிருக்கும்
மிகப்பிரபலமான கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனாக கனவுகளுடன் சேர்ந்த முதல் வருடம் எவ்வித பிரச்சினையுமின்றி கடந்துபோனது. இரண்டாம் வருடத்தின் முதல் நாளில்தான் பிரச்சினை ஆரம்பமானது. எங்கள் பக்கத்து கல்லூரியின் சேர்மன் எலக்ஷனில் ஏற்பட்ட அடிதடிக்கு எங்கள் கல்லூரி மாணவர்கள்தான் காரணம் என்று
உசுப்பிவிட்டதில் இருகல்லூரிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

அப்போது கல்லூரிக்கு தன்னுடைய காரில் வந்துகொண்டிருந்த ரேவதியை
ஒருகூட்டம் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தது. கார் கண்ணாடிகள் அடித்து
நொறுக்கப்பட்டது. ரேவதியின் அப்பா ஒரு கோடீஸ்வரர். தன்னுடைய பணபலத்தை
பயன்படுத்தி காரை நொறுக்கியவர்கள் அனைவரையும் போலீஸ் ஸ்டேசனில்
நிறுத்தினார். சண்டையை வேடிக்கை பார்த்த நான் உட்பட.

இந்த அடிதடியில் நான் கலந்துகொள்ளவில்லை என்பதை எவ்வளவோ
எடுத்துச்சொல்லியும் யாரும் கேட்பதாயில்லை. பிடிபட்ட மாணவர்கள் தங்கள்
பின்புலத்தால் வெளிவந்துவிட்டனர். அநாதையாய் மாட்டிக்கொண்டவன் நான்
மட்டும். 15 நாட்கள் காவலில் வைத்துவிட்டு அனுப்பினார்கள். என்னை
அவமானபடுத்திய ரேவதியை பழிவாங்க நினைத்து அவள் ஜிம்மிலிருந்து கார்
நோக்கி போகும்போது ஆசிட் பாட்டிலை அவள் மீது எறிந்துவிட்டு
திரும்பிப்பார்க்காமல் ஓடிவிட்டேன். மறுநாள் போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு
போய் வாயில் நுரைதள்ளும் வரை அடித்தார்கள். ஒவ்வொரு அடிவிழும்போதும்
அவள் முகம் எவ்வளவு கோரமாய் மாறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டே வலியை பொறுத்துக்கொண்டேன்.

கொலை முயற்சி வழக்கில் என்னை கைது செய்து புழல் சிறையில் நான்கு வருடம்
அடைத்தார்கள். மனம் கல்லாகி இருந்தது. ஆனாலும் ஒரே திருப்தி ரேவதியின்
கோரமுகம் மட்டும்தான். கொஞ்ச நாளில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் சொன்ன
செய்தி கேட்டு மனம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. ரேவதியின் முகத்தை
நோக்கி நான் வீசிய ஆசிட் தவறுதலாக அவள் கையில் பட்டிருக்கிறது. சிறிய
காயத்துடன் தப்பிவிட்டாள். நான்கு வருடமாய் வன்மத்துடன் ஜெயில் கம்பிகளை
எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஜெயிலை விட்டு வெளியே வந்தவுடன் எவ்வளவோ தேடியும் ரேவதியை கண்டு
பிடிக்கமுடியவில்லை. ஏதோ வெளியூருக்கு போய் விட்டதா சொன்னார்கள்.
படிப்பும் இல்லாமல் ஜெயில் சென்று வந்தவன் என்கிற பட்டத்துடன் சென்னையில்
வேலைதேட விரும்பவில்லை. திருட்டு ரயிலேறி மும்பை வந்து ஒரு ஹோட்டலில்
வேலைக்கு சேர்ந்து, வாழ்க்கை திசைமாறி போனது.

ஹோட்டலுக்கு எதிரே இருந்த பெண்கள் கல்லூரியில் தான் பூஜா
படித்துக்கொண்டிருந்தாள். நான்கு மாதம் கஷ்டப்பட்டு அவளை கவர்ந்து என்
காதலியாக்கியது அவள்மீதுள்ள காதல் மட்டுமல்ல.சென்னையில் அவள் அப்பா
வைத்திருக்கும் ஜுவல்லரி மீது கொண்ட காதலும்தான்.

“தூக்கம் வருது நவீன்…தூங்கலாமா?” பூஜாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு
கொண்டுவந்தது. பூஜா அழகிய மஞ்சள் நிற நைட்டிக்கு மாறியிருந்தாள். மற்ற
இரு பெண்களும் நைட்டிக்கு மாறியிருந்தனர்.

நானும் பூஜாவும் லோயர் பெர்த்தில் படுத்துக்கொண்டோம். எனக்கு நேர் மேலே
உள்ள பெர்த்தில் ரேவதியும், பூஜாவுக்கு மேலே உள்ள பெர்த்தில் அந்த
கல்லூரி பெண்ணும் படுத்துக்கொண்டனர்.

மணி இரவு பத்தை தாண்டியிருந்தது. இரயிலில் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது.
எல்லோரும் நல்ல உறக்கத்திலிருந்தனர். எப்படி ரேவதியை ரயிலைவிட்டு
தள்ளுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையை மாற்றி எழுதிய இந்த
சண்டாளியை எப்படி கொல்வது? யோசித்தபடியே படுத்திருந்தேன் ஏசியின்
குளிரில் மெல்ல உறங்கிப்போனேன்.

திடுக்கிட்டு விழித்து மணியை பார்த்தேன். அதிகாலை மூன்று மணி. சே கொலை
செய்ய போகும் நேரத்திலும் எனக்கு தூக்கம் வருகிறதே? இப்பவே புரொபஷனல்
கில்லராக மாறிவிட்டேனா? சீக்கிரம் காரியத்தை முடிக்கவேண்டும் என்று
நினைத்துக்கொண்டிருந்தபோது ரேவதி பாத்ரூம் நோக்கி நடந்தாள். இதுதான்
சரியான தருணம். சட்டென்று எழுந்தேன். விளக்கில்லாமல் இருள்
கவிந்திருந்தது. அடிமேல் அடியெடுத்துவைத்து மெல்ல சென்று ரயிலின் கதவை
திறந்து வைத்துக்கொண்டு கதவருகே ரேவதிக்காக காத்திருந்தேன்.

பாத்ரூமிலிருந்து டவலால் முகம் துடைத்துக்கொண்டே வந்தவளை சட்டென்று கதவை நோக்கி வேகமாக தள்ளினேன்.

எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து ரயிலுக்கு வெளியே விழுந்தவளின்
அலறல்சத்தம் காற்றில் கலந்து மறைந்தது.

இத்தனை வருடமாய் இதற்காகத்தானே காத்திருந்தேன். இனி என் பூஜா என்
ஜுவல்லரி. கதவை மெதுவாய் மூடிவிட்டு சீட்டுக்கு வந்து உட்காரும்போதுதான்
கவனித்தேன்…பூஜாவைக் காணவில்லை! ஓடிச்சென்று பாத்ரூமிலும் தேடினேன்.
எங்குமில்லை என் பூஜா. அப்படியெனில்…நான் தள்ளியது பூஜாவையா? அய்யோ ஏன்
எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. இனி நான் மட்டும் இருந்து என்ன
ஆகிவிடப்போகிறது? பூஜா நானும் உன்னோடு வந்துவிடுகிறேன் ஓடிச்சென்று
கதவைத் திறந்து குதித்துவிட்டேன்.

ஒரு முட்புதரில் பொத்தென்று விழுந்ததில் எலும்புகள் நொறுங்கியிருக்கவேண்டும்..உயிர் போகும் வலியுடன்,எங்கிருக்கிறேன் என்கிற
உணர்வு குறைய ஆரம்பித்தபோது காதிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்திருந்தது.

இரவு பத்து மணிக்கு நான் உறங்கிய பின்னர் குளிர் தாங்க முடியாமல்
பூஜாவிற்கு மேலுள்ள பெர்த்தில் படுத்திருந்த அந்தக் கல்லூரி பெண் பூஜா
இடத்திற்கும் பூஜா அவள் இடத்திற்கும் மாறியதோ, பாத்ரூம் போனது ரேவதி
என்று நினைத்து அந்த கல்லூரி பெண்ணை நான் தள்ளிவிட்டதோ, கீழே விழுந்தவள்
ரயில் பாலத்திற்கு கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில் விழுந்து கரை நோக்கி
நீந்தியதோ அறியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் ரேவதி. இவை எதைப் பற்றிய
கவலையுமின்றி சென்னை நோக்கி விரைந்துகொண்டிருந்தது அந்த நீள ரயில்.

- Sunday, September 7, 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
இனியும் பொறுக்க முடியாது. என்னை மன்னித்துவிடு சந்தியா. இனியும் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. என் சூழ்நிலை தெரிந்தும் ஏன் உன்னால் எனக்காக இறங்கி வர முடியவில்லை? இத்தனை நாட்கள் உனக்காக விட்டு வைத்த உயிர் இன்று பிரிய போகிறது. நீ அழுவாய் என்று தெரியும். நீ ...
மேலும் கதையை படிக்க...
நாளைக்கு காலைல 6 மணிக்கு ஒரு கொலை செய்யப் போறேன். +2 படிச்சுட்டு வேலை தேடி சென்னைக்கு வந்து நாலு மாசமா அலைஞ்சு திரிஞ்சும் ஒரு வேலையும் கிடைக்கல. திருவல்லிக்கேணில ஒரு மேன்சன்ல தங்கி இருக்கேன். தங்கி இருக்கேன்னு சொல்றது தப்பு. நாலு பேரு ...
மேலும் கதையை படிக்க...
இருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய வெட்கத்துடனும் பதபதைப்புடனும் அலைபேசியில் பேசியபடியே என்னை நோக்கி நீ வந்த கணத்தை உறையச்செய்து என் இதயத்தின் நான்கு அறைகளிலும் பத்திரப்படுத்தி ...
மேலும் கதையை படிக்க...
"எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா" அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன். எனக்கு மட்டும் என்ன சொல்லக்கூடாது என்கிற எண்ணமா? பயம்தான். பயம் மட்டும்தான் காரணம். காலேஜே திரும்பி பார்க்குற அழகி அவள். சென்னையில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவள். அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
"அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்" நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன். "சொல் நரசிம்மா" "நம் தேசத்தின் வடக்கு பகுதியில் இன்று திடீரென்று ஒரு மாபெரும் சத்தம் கேட்டது, அங்கே காவற்பணியில் ஈடுபட்டிருந்த நம் சேவகர்கள் ஓடிச்சென்று ...
மேலும் கதையை படிக்க...
ஒரு துளி விஷம் போதுமடி!
முத்துப்பேச்சியும் குரோட்டன்ஸ் செடியும்
துயரங்களின் நர்த்தனம்
என் இனிய ஜெசினா…
விசித்திர உருளைch2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)