யமன் வாயில் மண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 11,187 
 

“புறப்படு.”

“எங்கே?”

“கொலைக்களத்திற்கு.”

“ஆ!” அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் புலவர் வந்திருக்கிறார். அவரைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கொண்டு குதுகலித்தார்கள். தமிழுலக முழுவதும் பெரும் புகழ்பெற்ற சிறந்த கவிஞர் அவர். அரசனை நோக்கிச் செல்லும் அப்புலவரைச் சூழ்ந்த கூட்டம் யமனை நோக்கிச் செல்லும் இளந்தத்தனை அணுகியது. அப்பொழுதுதான் அந்த இளம் புலவன் மூர்ச்சை தீர்ந்து கண் விழித்தான். கோவூர் கிழார் போகிறார் என்பதை அந்தக் கூட்டத்தினரின் பேச்சால் உணர்ந்துகொண்டு ஓலமிட்டான்:”புலவர் திலகரே ஒலம்! கோவூர்கிழாரே ஓலம்!’ என்று கதறினான்.

கோவூர்கிழார் காதில் இந்தப் புலம்பல் பட்டது. அவர் நின்றுவிட்டார். விஷயத்தை விசாரித்தார். இளந் தத்தனை அணுகிப்பேசினார். “யாதொரு பாவமும் அறியாதவன் நான். என்னை ஒற்றனென்று கொல்லப்போகிறார்கள்.”

அறிவிற் சிறந்த அப்பெரியார் அவனோடு சில கணம் பேசினார்.’உண்மையில் அவன் புலவன் தான்’ என்பதை உணர்ந்துகொண்டார். இனம் இனத்தை அறிவது இயல்புதானே?’ என்ன காரியம் இது? பெரிய பாதகச் செயலுக்கு இவ்வரசன் உள்ளாகி விட்டானே! இந்த இளம் புலவன் குற்றமின்றியே கொலைப்படுவதா?” என்று நினைத்தபோது அவர் உடல் நடுங்கியது. கொலையாளிகளைப் பார்த்து,” சற்றுப் பொருங்கள். இவரை நான் அறிவேன். இவர் ஒற்றர் அல்ல. மன்னனிடம் இதைப் போய்ச் சொல்லி வருகிறேன்” என்று கூறிவிட்டு விரைவாக அரண்மனையை நோக்கி நடந்தார்.

யமன் வாயை நோக்கிச் சென்ற கவளம் அந்தரத்திலே நின்றது.

“அரசே, அந்தப் புலவர்களின் பெருமையை நான் என்னவென்று சொல்வேன்!” என்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார் கோவூர்கிழார்.

“அதில் என்ன சந்தேகம்? புலவர்களால்தான் எங்களுடைய புகழ் நிலைநிற்கிறது” என்று ஆமோதித் தான் நெடுங்கிள்ளி.

“அவர்களுடைய முயற்சியைச் சொல்வதா? அடக்கத்தைச் சொல்வதா? திருப்தியைச் சொல்வதா? அவர்களும் ஒரு விதத்தில் அரசர்களாகிய உங்களைப் போன்றவர்களே!”

“கவிஞர்களென்ற பெயரே சொல்லுமே.”

“எங்கெங்கே ஈகையாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போகிறார்கள். பழுத்த மரம் எங்கே உண்டோ அங்கே பறவைகள் போய்ச் சேருகின்றன அல்லவா? கடப்பதற்கரிய வழிகள் நீளமானவை என்று நினைக்கிறார்களா? இல்லை இல்லை. ஒரு வள்ளல் இருக்கிறானென்றால் நெடிய என்னாது சுரம் பல கடக்கிறார்கள். அவனை அடைந்து தமக்குத் தெரிந்த அளவிலே அவனைப் பாடுகிறார்கள்.அவன் எதைக் கொடுக்கிறானோ அதைத் திருப்தியோடு பெற்றுக்கொள்கிறார்கள். பெற்றதைத் தாமே நுகராமல் தம்முடைய சுற்றத்தாரும் நுகரும்படி செய்கிறார்கள். நாளைக்கு வேண்டுமென்று வைத்துக் கொள்வதில்லை. திருப்தியாக உண்ணுகிறார்கள்; எல்லோருக்கும் தாராளமாகக் கொடுக்கிறார்கள். மறுபடியும், வரிசை அறிந்து கொடுக்கும் உபகாரி எங்கே இருக்கிறானென்று தேடிப் புறப்பட்டு வருகிறார்கள். வரிசை அறிவோர் கிடைக்காவிட்டால் வருந்துகிறார்கள். இந்த நல்ல பிராணிகளால் யாருக்காவது தீங்கு உண்டோ? கனவிலே கூட அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்க மாட்டார்கள்; நினைக்கவும் தெரியாது. பரம சாதுக்கள். நான் சொல்வது உண்மையல்லவா?”

“முக்காலும் உண்மை. புலவர்களால் நன்மை உண்டாகுமேயன்றித் தீமை உண்டாக வழியே இல்லைஅவர்கள் கடிந்து சொன்னாலும் அது நன்மையைத் தான் விளைவிக்கும்.”

“அதைத் தான் நான் வற்புறுத்திச் சொல்கிறேன். இவ்வளவு சாதுவாக இருந்தாலும் அவர்களுடைய பெருமை பெரிது. உங்களைப் போன்ற சிறப்பு அவர்களுக்கும் உண்டு. பகைவர்கள் நாணும்படி தலை நிமிர்ந்து சென்று வெற்றி கொள்ளும் தன்மை அவர்களிடமும் உண்டு. கல்விவீரர்கள் அவர்கள். ஓங்கு புகழ் மண்ணாள் செல்வம் எய்திய நும்மனோரைப் போன்ற தலைமை அவர்களுக்கும் உரியதே.”

“மிகவும் பொருத்தமான வார்த்தைகள்.” கோவூர்கிழார் சிறிது மௌனமாக இருந்தார்.

“பிறர்க்குத் தீதறியாத வாழ்க்கையுடைய அவர்களைக் குற்றவாளிகளாக எண்ணுவது–”

“மடமையிலும் மடமை” என்று வாக்கியத்தை முடித்தான் நெடுங்கிள்ளி.

“அரசே, இன்று இந்த உண்மை இவ்வூரில் பொய்யாகிவிடுமென்று அஞ்சுகிறேன்.”

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?” என்று திடுக்குற்றுக் கேட்ட்டான் அரசன்.

“ஒரு பாவமும் அறியாத புலவனாகிய இளந்தத்தனைக் கொலைக்களத்துக்குப் போகும் வழியில் கண்டேன். புலவர் உலகமே தூக்கு மரத்தில் தொங்குவது போல அஞ்சினேன். ஓடி வந்தேன் இங்கே. அவன் யான் அறிந்த புலவன்.”

கோவூர்கிழார் முன்னம் அப்புலவனை அறியாவிட்டாலும் ஒரு கணத்தில் அவனை அறிந்துகொண்டார் என்பதில் பிழை என்ன? ‘அப்படி அல்ல அவர் சொன்னது பொய்’ என்றாலோ, ஒருவன் உயிரைப் பாதுக்காக்கச் சொன்ன அச் சொல்லைக் காட்டிலும் வாய்மை வேறு உண்டோ?

“பொறுத்தருள வேண்டும் நான் செய்தது பிழை….யர் அங்கே! ஓடுங்கள். இளந்தத்தரை விடுவித்து அழைத்து வாருங்கள்…ஆசனம் கொண்டு வாருங்கள்… என்ன பாதகம் செய்தேன்! அபசாரம்! அபசாரம்! …பகைமை இருள் என் கண்ணை மறைத்துவிட்டது.. உங்களால் நான் அறிவு பெற்றேன்.” – அரசன் வார்த்தைகள் அவன் உணர்ச்சியைக் காட்டின. அச்சமும் பச்சாதாபமும் துள்ளின அவன் வாக்கில்.கோவூர்கிழார் முகத்தில் ஒளி புகுந்தது. இளந்தத்தன் உடம்பில் உயிர் புகுந்தது. யமன் வாயில் மண் புகுந்தது. இந்த நிகழ்ச்சியை அறிந்த உலகத்தார் உள்ளத்தில் வியப்புப் புகுந்தது.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *