கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்  
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 41,750 
 

சோழிங்கநல்லூர் சமிக்ஞையில் காத்துக்கொண்டிருந்த அவன் எரிச்சலுடன் காணப்பட்டான். “யோவ், கொஞ்சம் முன்னாடி தள்ளுயா… வண்டில இடிச்சிடப்போற” என்று அவனுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டியை திட்டினான். “தள்ளுயா … விட்டா என் மேலேயே சாஞ்சிடுவ போல” என்று தனக்கு இடதுபுறம் அருகில் இருந்த மற்றுமொரு இரு சக்கர வாகன ஓட்டியை திட்டினான். தன்னை மிகவும் நெருங்கி ஒரு மயிர் கத்தை தூரத்தில் நின்ற நான்கு சக்கர வானக ஓட்டியை மனதிற்குள் திட்டினான் “கொஞ்சம் தள்ளி நின்னா தான் என்னவாம்?” வழிந்து ஓடும் வியர்வையை துடைத்து எறிந்தான் – அது அந்த நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் பட்டது. அந்த வாகன ஓட்டியோ அதை கூட கவனிக்காமல் சமிக்ஞை எப்போது பச்சையாக மாறும் என்று கவனமாக பார்த்துக்கொண்டிருந்தான். அவ்வபோது வாகன ஒலி எழுப்பி சமிக்ஞையை சிகப்பினின்று பச்சையாக மாற்ற வைக்காத போக்குவரத்து காவல்துறையை திட்டினான். அமுதனுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. தனது அன்றாட காரியங்களில் ஒன்று அந்த சோழிங்கநல்லூர் சமிக்ஞையில் நிற்பது என்று கருதுபவன். அலுவலகத்திற்கு தினமும் பத்து முதல் அறுபது நிமிடம் வரை தாமதமாக செல்பவன். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒன்பதில் இருந்து அதிகபட்சம் இருபத்தி நான்கு மணி நேரம் வரை வேலை செய்பவன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சொற்களுக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவன். சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு சராசரி மென்பொறியாளன்.

அன்றுவரை அப்படித்தான் இருந்தது. ஆனால் அன்றைய நாள், அவன் திட்டமிட்டபடி நடக்கபோவதில்லை என்பதை அறியாமல் காலை ஏழரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான். தன் இருசக்கர வாகனத்தை உதைத்து, தலைகவசத்தின் கண்ணாடியை கீழிறக்கி, ஒரு மிடுக்குடன் புறப்பட்டான். வழக்கமாய் காலை உணவுக்கு நிறுத்தும் சிற்றுண்டிக் கடையை ஏனோ அவன் இன்று கவனிக்கத்தவறி ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். சாலையில் கவனம் இழந்த அவன், சற்று தள்ளி பள்ளி செல்ல நின்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவன் மேல் இடித்து வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு எங்கோ கீழே விழுந்தான். விழுந்தவுடன் அவனை இருள் சூழ்ந்துகொண்டது.

கண் விழித்துப் பார்த்தபோது அவன் எதிரே ஒரு மருத்துவர் நின்றுகொண்டிருந்தார். மருத்துவமனையின் அந்த நெடி அவன் நாசியைத் துளைத்தது! எழுந்து அமர முயற்சி செய்தபோது அவனால் அது முடியவில்லை. கண்களை சற்று கீழிறக்கிப் பார்க்கையில் தன் கருப்பு நிற கால்கள் தெரியாமல் இருக்க சிவப்பு கலந்த வெள்ளைத் துணி ஒன்று சுற்றபட்டிருப்பதைக் கண்டான். அதுவரை இல்லாத அந்த வலி, திடீரென்று வந்தது. “ஆ” என்று முனங்கினான். அருகில் இருந்த மருத்துவரோ அவனிடம் ஒன்றும் பேசாமல் அவனையே வெறித்துப் பார்த்தார். வலி பொறுக்க முடியாமல் மீண்டும் “ஆ” என்றான், இம்முறை அந்த அந்த முனங்கல் சுற்றியிருக்கும் அனைவருக்கும் கேட்டிருக்க வேண்டும்! ஆனால், அருகில் இருக்கும் மருத்துவரின் கவனத்தை அதுவும் ஈர்க்கவில்லை. ஏனோ அவரைக் கூப்பிட அவனுக்கு மனம் வரவில்லை. அவரோ, அவனை மட்டுமே பார்ப்பது போல் தோன்றியது. இப்படியே ஒரு இருபது நிமிடம் அவனின் அந்த வலி நிறைந்த முனங்கலுடன் சென்றது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவராய் அந்த மருத்துவர் பேச ஆரம்பித்தார்.

“நீ எங்கிருக்கிறாய், எப்படி இங்கு வந்தாய், உனக்கு என்ன ஆனது என்று நினைவிருக்கிறதா?”

“அலுவலகம் செல்லும் வழியில் கவனக்குறைவால் ஒரு சிறுவன் மீது என் வாகனம் மோதி – அந்த சிறுவன் எப்படி இருக்கிறான்?”

“அந்த சிறுவன் இருக்கட்டும்… நீ எங்கிருக்கிறாய், உனது பெயர் என்ன?”

“என் பெயர் அமுதன். நான் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். அந்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறான்?”

“ஹ்ம்ம்ம், நான் யார் என்று தெரிகிறதா?”

“நீர் ஒரு மருத்துவர்”

“ஹ்ம்ம்ம்! உனக்கு எங்கெங்கு அடி பட்டிருக்கிறது? உன்னைச் சுற்றி யார் யார் இருக்கிறார்கள்?”

இதற்கு மேல் பொறுமை இல்லாதவனாய், “யோவ்… எல்லாம் என் கண்ணுக்கு தெரியுது. அந்தப் பையன எங்க? எப்டி இருக்கானு கேட்டா பைத்தியம் மாதிரி பேசுற”

வாய்விட்டுச் சிரித்துவிட்டார் அவர். “நான் யார் என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொண்டாய்! சரி சொல், உனக்கு எங்கெங்கு அடிபட்டிருக்கிறது?”

அவரை சற்று கலக்கத்துடன் பார்த்த அவன், சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு அருகில் இருந்த சக நோயாளிகள் அவனுக்கு இருந்த அதே கலக்கத்துடன் அந்த மருத்துவரைப் பார்த்தனர்.

“சொல்லையா… எங்கெங்கு அடிபட்டிருக்கிறது?” அவரின் அந்த குரலில் அப்படி ஒரு தெளிவு.

“அ…. என் காலை அசைக்க முடியவில்லை. என் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் உள்ளது.”

“வேறு ஏதேனும் வலி, காயம் – ஏதேனும்?”

“அ… அ…” என்று வாய்விட்டு சத்தம் போட்டு யோசித்த அவன் சிறிது நேரத்திற்கு பிறகு “இடது கை ஆள்காட்டி விரல் வலிக்கிறது” என்றான்.

“அப்புறம்?”

“அவ்ளோதான்னு நினைக்கிறேன். அந்த சிறுவன் எப்படி இருக்கிறான்? அவனுக்கு ஏதேனும் பலத்த அடியா?”

“அந்த சிறுவனைப் பற்றி இறுதியில் கூறுகிறேன். முதலில் உன்னிடம் நான் சிறிது பேச வேண்டியுள்ளது.”

“அய்யய்யோ… அந்தச் சிறுவன் விபத்தில் இறந்துபோய்விட்டானா? மருத்துவமனையிலிருந்து நேரே சிறை செல்லப்போகிறேனா?”

இம்முறை தன் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார் அந்த மருத்துவர். சுற்றி இருக்கும் அனைத்து நோயாளிகளும் அமுதனும் அவரை பைத்தியம் என்று முடிவே கட்டியிருந்தனர். “ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறி மீண்டும் சிறிது நேரம் சிரித்து முடித்தார். கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்துவிட்டு, “என்னைப் பார்த்தால் மருத்துவன் போலவா தெரிகிறது?” என்று கேட்டார்.

“வெள்ளை சட்டை, கழுத்தில் தொங்குவது, எல்லாம் பார்த்தால் மருத்துவர் போல் தான் உள்ளது” என்றான் அமுதன்.

வந்த சிரிப்பை அடக்கிவிட்டு “அதுசரி. உனக்கு அப்படித்தான் தெரியும். நீ தொடர்ந்து பேசுவதற்கு முன் நான் வந்த வேலையை முடித்துவிடுகிறேன்” என்றார்.

இதற்குள் அருகில் இருந்த ஒரு நோயாளி எழுந்து அமுதனின் அருகில் வந்து நின்று, “யாருய்யா நீ? இவன என்ன பண்ணப்போற? எதுக்கு இந்தப்பையன இந்த பாடு படுத்துற?” என்றார்.

அந்த நோயாளி பேசியது எதுவும் காதில் விழாதது போல் அந்த மருத்துவர் “நீ இருப்பது மருத்துவமனையும் அல்ல, நான் ஒரு மருத்துவனும் அல்ல” என்றார்.

“அப்படியென்றால், நான்…?”

“குறுக்கே பேசாமல் நான் சொல்வதைக் கேள். மிகச்சரியாய் முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த மூன்றாம் உலகப்போரில் நம் அண்டை நாடு நம் மீது நடத்திய இரசாயனத் தாக்குதலால் நாடே மாயைக்குட்பட்டது. உன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் உன் மனம் உன் கண் முன்னே விரிக்கும் மாய வலை. உதாரணமாய் நீ இப்போது மருத்துவமனையில் இருப்பது போலவும், நான் உன் மருத்துவன் போலவும் உனக்குத் தெரிவது.”

“மூன்றாம் உலகப்போரா… அதுசரி… மருத்துவமனையின் எந்த பிரிவில் நீ இருக்கிறாய் என்பது இப்போது எனக்கு புரிந்துவிட்டது!”

“உண்மையில், நான் ஒரு மன நோயாளிதான். இந்த உலகில் நீ பார்க்கும் அனைவரும் சாதாரண மனிதர்கள் என்றால், என்னை நான் மன நோயாளி என்று ஒத்துக்கொள்வேன்!” அவரின் அந்த குரலில் மீண்டுமொரு இனம்புரியாத தெளிவு. அமுதனின் மனதின் ஏதோ ஒரு ஓரம் அவர் பேசுவதை கேட்கத்தூண்டியது.

“நீ மருத்துவன் இல்லை என்றால் வேறு யார்?”

“மன நோயாளி என்று இப்போது தானே கூறினாய்!” என்று சொல்லி சிரித்தார். “நான் சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்லி முடிக்கிறேன், பின் நான் யாரென சொல்கிறேன்.” என்று தொடர்ந்தார். “இரசனைய குண்டு தாக்குதலில் இந்த நாடே மாயை வலையில் விழுந்தது. அதாவது நீ உன் கண் முன்னே பார்க்கும் பல பொருட்கள், மனிதர்கள், நீ அன்றாடம் செல்லும் பேரூந்து, வாகனம் என உண்மையில் உன்னிடம் எதுவுமே இல்லை. இவை உன் மனம் ஏற்படுத்தும் கற்பனைகள் அல்லது பிம்பங்கள். உதாரணமாய் இன்று நீ வாகனத்தால் மோதிய சிறுவன் பற்றி கூறினாயே – அப்படி ஒருவன் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், உனக்கு எந்த காயமும் இல்லை.”

கீழே பார்த்தபோது அவனது காலில் தெரிந்த அந்த சிகப்பு வெள்ளை கலந்த துணி மற்றும் அந்த இனம் புரியாத வலி, பக்கத்தில் இருப்பவன் ஒரு பைத்தியம் என்று சொல்லாமல் சொல்லியது.

“என்ன, உனக்கு இவ்வளவு நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது இல்லாத ஒரு வலி இப்போது வருகிறதா?”

அவர் சொல்வதும் உண்மை தான். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வரை அவனுக்கு வலி ஏதும் தெரியவில்லை!

“சரி, உனக்கு விளங்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கிறேன். உனக்குத் தெரிந்தவரை, இப்போது உலக மக்கள்தொகை எவ்வளவு?”

“அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”

“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்!”

“700 கோடிக்கு மேல்”

“உன் அருகில் இருக்கும் கைபேசியை உபயோகித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள்தொகை எவ்வளவு என்று பார்.”

அவரை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு தன் கைபேசியை எடுத்து உயிர்பித்தான். சிறிது நேர தேடலுக்குப் பிறகு “கிட்டத்தட்ட 30 கோடி”

“உலகம் தோன்றி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன… நம் கணக்கிற்காக இரண்டாயிரம் ஆண்டுகளாய் மனிதன் வாழ்கிறான் என்று வைத்துக்கொள்வோம். முதல் ஆயிரம் வருடத்தில் இருந்த முப்பது கோடி, அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அதிகபட்சம் நூறு கோடி கூடியிருந்தாலும், உன் கணக்குப்படி எழுநூறு கோடி வரவில்லையப்பா!”

“அது வந்து…” அவனை பேசவிடாமல் அவர் தொடர்ந்தார்.

“உன்னால் எழுநூறு கோடிக்கு கணக்கு காட்ட முடியாது. ஆனால் நான் இந்த கேள்வியை கேட்டவுடன் உன் மனம் இது சாத்தியம் என்று தானே கூறியது?”

“ஏன் சாத்தியமில்லை?”

“பார்த்தாயா, உன் மனம் அதைத்தான் சொல்கிறது. இது தான் உனக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய மாயை. உன் மன பிம்பங்களின் எண்ணிக்கை தான் இந்த உலக மக்கள்தொகை.”

அமுதனுக்கு அவன் கேள்விகள் அர்த்தமற்றவையாய் தோன்றின. இரசாயன குண்டுக்கும், மாயைக்கும் என்ன சம்பந்தம்? மாயை உண்டாக்குவதால் எதிரி நாடு அடைந்த லாபம் என்ன? இந்த முட்டாளுடன் பேசுவதில் எந்தப்பயனும் இல்லை என்று உணர்ந்தான். பேசும் வரை பேசிவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டான். சிறிது நேர அமைதிக்குப் பின், “அப்படியென்றால் உங்கள் அபிப்ராயப்படி இப்போதைய உலக மக்கள்தொகை எவ்வளவு?”

“கிட்டத்தட்ட முப்பது கோடி.”

“ஓ ஹோ. இவ்வளவு விவரமாக பேசுகிறீர்களே, நீங்கள் ஏன் என்னுடைய பிம்பங்களில் ஒன்றாக இருக்கக்கூடாது?”

அவன் கேள்வியை ரசித்த அவர், அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். “ஹாஹஹா. நீ கூட என்னுடைய பிம்பங்களில் ஒன்றாக இருக்கலாமோ?” பதிலுக்குக் காத்திராமல் “இதே போல் இன்னும் சிறிது காலம் யோசி… உனக்கும் உண்மை தெரியவரும். நான் வந்த வேலை முடிந்துவிட்டது. ஆங்! என் வேலை – உன்னைப்போல் மாயையில் சிக்கியிருக்கும் மக்களை விடுவிப்பது!” சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விலகிச் சென்றார். “இதே போல் யோசி அமுதா…. உனக்கு சீக்கிரமே உண்மை புரிய வரும்!” சொல்லிவிட்டு சிறிதுநேரத்தில் காணாமலே போனார்.

——–௦௦௦௦௦௦௦௦——–

மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற அமுதன், அந்த மனிதரை மீண்டும் ஒருமுறை கூட பார்க்கவில்லை. ஒரு சிலர் அந்த மருத்துவமனையின் அடுத்த பிரிவில் ஒரு பைத்தியம் மிக சமீபத்தில் தப்பித்து சென்றதாக கூறினர். ஆனால் அவர் கேட்ட அந்த கடைசி கேள்வி… அந்த கடைசி வார்த்தைகள் “இதே போல் யோசி அமுதா…. உனக்கு சீக்கிரமே உண்மை புரிய வரும்!” அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒருவேளை உண்மையில் நம்மைச் சுற்றியிருக்கும் பலர் நமது பிம்பங்களாய் இருப்பர்களோ? என்று பல சமயம் அவன் மனம் கேள்வி கேட்கும். பதில் தெரியாமல், அல்லது தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாமல் விட்டுவிடுவான்.

——–௦௦௦௦௦௦௦௦——–

மருத்துவமனையின் வாயிலைக் கடந்து வீடு திரும்ப அந்த வாடகை வாகனத்தில் ஏறினான் அமுதன். வழக்கம் போல் சோழிங்கநல்லூர் சமிக்ஞையில் சிகப்பு. சாலையை பார்த்த அவனை ஆச்சரியப்பட வைத்தது அங்கே நின்று கொண்டிருந்த வாகனங்கள். சோழிங்கநல்லூர் போக்குவரத்து சமிக்ஞை எப்போதும் இருக்கும் புற்றீசல் போல் இல்லாமல் தனித்து வாழும் கழுகு போல் ஆங்காங்கே ஒரு சிலர் நின்று கொண்டிருந்தது தான் ஆச்சரியம். அவனை மேலும் ஆச்சரியப்பட வைத்த மற்றொரு விஷயம் – அவர்கள் நின்ற ஒழுங்கு முறை. இந்த கோட்டைத் தாண்டி [நீயும் வர கூடாது நானும் வர மாட்டேன் அப்டின்னு யோசிக்காதீங்க… கதைய படிங்க!] போகக்கூடாது என்று போடப்பட்ட நிறுத்து கோட்டை தாண்டாமல் நிற்கும் இரு சக்கர வாகனம், அதனிடம் இருந்து பத்தடி தள்ளி நிற்கும் ஒரு நான்கு சக்கர வாகனம், அதனிடம் இருந்து இடதுபுறமாய் ஆறு அடி தள்ளி நிற்கும் ஒரு பேரூந்து, அதற்கு இருபது கெஜம் தொலைவில் மற்றுமொரு நான்கு சக்கர வாகனம், அதற்கு சற்று தள்ளி அமுதன் வந்த வாகனம். அமுதனின் வாகன ஓட்டி எரிச்சலுடன் காணப்பட்டான். “யோவ், கொஞ்சம் முன்னாடி தள்ளுயா… வண்டில இடிச்சிடப்போற” என்று அவனுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டியை திட்டினான். “தள்ளுயா … விட்டா என் வண்டி மேலேயே சாஞ்சிடுவ போல” என்று தனக்கு வலதுபுறம் அருகில் இருந்த மற்றுமொரு இரு சக்கர வாகன ஓட்டியை திட்டினான். அமுதன் கண்ணுக்கோ அவை ஒன்றுமே தெரியவில்லை! தனியாகப் பேசிக்கொண்டிருந்த அந்த வாகன ஓட்டியை ஒரு விதமாய் பார்த்தான்.

ஒருவேளை…

ஒருவேளை…

ஒருவேளை…

அமுதனுக்கு உலகமே இருண்டது!

– நவம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *