பரமனும் பன்னிக்குட்டியும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 13,927 
 

“டேய் பரமா, பக்கத்துல போவாதடா. குட்டிப் போட்ட பன்னி கடிச்சிடும்” அம்மாவின் எச்சரிக்கையால் சற்று தூர நின்றே பார்த்தேன். புசு புசுவென வெள்ளை பஞ்சை உருட்டி விட்டது போல மூன்று வெள்ளைக் குட்டிகள், இரண்டு கருப்பு குட்டிகள்.

தாய்ப் பன்னி படுத்துக் கிடக்க சுற்றிச் சுற்றி வந்து விளையாடின குட்டிகள். ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை “பன்னியைப் பார்த்து போதும், வீட்டுக்கு வா” என அழைத்தாள் அம்மா. நான் எங்கே பன்னிக் குட்டியை கையில் பிடித்துவிடுவேனோ என்ற பயம் அம்மாவுக்கு.

இந்த புது வீட்டுக்கு குடிவந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பக்கத்தில் இருந்த காலி இடத்தில் நிறைந்திருந்த சாக்கடையில் பன்னி கூட்டம் படுத்துக் கிடக்கும். எனக்கு நாய்க்குட்டிகளை விடவும் பன்னிக்குட்டிகள் அழகாக தெரிந்தன.
“ அம்மா நாம அந்த பன்னிக்குட்டியை வளர்க்கலாமா” என்றேன் ஆசையாக.

“டேய் அதெல்லாம் பீயை திங்கும்டா. அது பக்கத்துல எல்லாம் போவதே” என்றாள்.

“குட்டிப் பன்னியுமா அதை சாப்பிடும்”

“பெரிசானதுக்கப்புறம் அதுவும் அதைதான் சாப்பிடும்” அதைக் கேட்டவுடன் எனக்கு அருவருப்பு தொற்றிக் கொண்டது. இருந்தாலும் ஒரு முறை நேரில் அந்த காட்சியைப் பார்க்கவும் எனக்கு பன்னிகள் என்றால் வெறுப்பானது. அழகான பன்னிக்குட்டிகளை அதன் பின் நான் பார்க்கவே செல்லவில்லை. வீட்டுக்குள்ளவே விளையாடினேன்.

****

ஒரு நாள் காலையில் ஒரே சத்தம். நான் எழுந்து வாசலுக்கு ஓடினேன். என் ஆவலைப் புரிந்து கொண்டு அப்பா மாடிக்கு கூட்டிச் சென்றார். எங்கள் தெருவில் விரித்து வைத்திருந்த வலையில் ஒரு பெரிய பன்னி மாட்டிக் கொண்டது. அதன் மரணச் சத்தம் காதைக் கிழித்தது.

“அப்பா இதை எதுக்கு பிடிக்கிறாங்க”

“வெட்டி விக்கறதுக்குடா”

“அதை என்னப்பா பண்ணுவாங்க”

“சாப்பிடுவாங்கடா”

“அது பீயெல்லாம் சாப்பிடுமாமே அதைப் போய் இவங்க சாப்பிடுறாங்களே”

அப்பா என்ன சொல்லுவதென்று தெரியாமல் மௌனமாக இருந்தார்.

****

நாட்கள் நகர்ந்தன. பன்றிகள் பற்றி முழுவதும் மறந்திருந்தேன். இரவு வெளியிலிருந்து பன்றியின் சத்தம் வந்தது. வீட்டில் யாராலும் உறங்க முடியவில்லை. எல்லோரும் என்னவென்று பார்க்க வெளியே வந்தோம்.

சற்றே வளர்ந்த பன்னிக் குட்டியொன்று பின்பக்கம் அடிபட்டு வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தது. இரண்டு பின்னங்கால்களும் செயலிழந்து போயிருந்தன. முன்னங்கால்களால் ஊன்றி உடலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே கத்தியது. “நாய் ஏதாவது கடித்திருக்கும்” என்று அம்மா சொன்னார். “நாயா இருந்தா இப்படி செய்யாது. எவனோ வண்டில ஏத்திட்டு போயிருக்கான்” என்றார் அப்பா. அது விடாமல் வலியாலும் வேதனையாலும் கத்திக் கொண்டே இருந்தது.

பக்கத்து வீட்டுகாரரும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

“என்னாச்சு சார்”

“எவனோ வண்டியில வந்து அடிச்சிட்டான் போலயிருக்கு”

“அச்ச்சோ, அப்ப அவன் வண்டியை உடனே வித்திடனுமே”

“அவன் வண்டியை விக்கிறான், இல்ல விக்காம போறான். இதை என்ன சார் பண்ணறது.”

“ஒரு குச்சியை வைச்சு வேற பக்கம் தள்ளிவிட்டுடலாம்.”

“அய்ய்யோ வேணாம் சார். அப்படி செஞ்சா அது இன்னும் கத்தும். வீட்டுல மத்தவங்களுக்கு சிரமமாயிடும். ஒரு சாக்குல தூக்கிட்டு போய் தூரமா போட்டிடுவோம்”

“சரி இருங்க, நம்ம வீட்டுல ஒரு பழைய சாக்கு இருக்கு, அத எடுத்துட்டு வரேன்”.

அப்பாவும், பக்கத்துவீட்டுக்காரரும் அதை சற்று தொலைவில் விட்டு வந்தார்கள். தூங்குவதற்குப் படுத்தால் மெதுவாய் அதன் கத்தல் கேட்டுக் கொண்டே இருந்தது. பிறகு சிறிது நேரம் கழித்து ஓய்ந்தது. எல்லோரும் தூங்கினோம்.

****

காலையில் அதை ஆஸ்பெட்டலுக்கு தூக்கிக் கொண்டு போகலாம் என்று அப்பாவிடம் அவர் விட்டுவந்த இடத்தைக் கேட்டேன். அதற்குள் வெளியே “எவன்டா பன்னி மேல கல்லெடுத்துப் போட்டுக் கொன்னது” என அதன் உரிமையாளன் கத்திக் கொண்டிருந்தான்.

“அடப்பாவிகளா அதான் ராத்திரி சத்தம் நின்னதா” என்று அம்மாவும் அப்பாவும் தெருவிற்கு ஓடினார்கள். நான் மட்டும் அப்படியே நின்றேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “பரமனும் பன்னிக்குட்டியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *