பச்சை ரத்தம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 97,512 
 

‘இன்றைக்கு வேலைக்குப் போக வேண்டாம்’ என மனதுக்குள் ஒரு குரல் காலையிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு நெடுநேரம் கழித்து தூங்கியதால், அயர்ச்சியாக இருக்கிறது போலும். உடல் அயர்ச்சியாக இருந்தால் மனதும்; மனது அயர்ச்சியாக இருந்தால் உடலும் அயர்ச்சி அடைவது இயல்புதானே. அதனால்தான் காலையில் தூக்கம் கலைந்த பின்னரும் கண் மூடி, உடலை தளர்த்திப் படுத்திருந்தேன். ஏதோ நினைவு வந்தவனாய் சட்டென்று சோம்பல் உதறி எழுந்தேன். காலைக்கடன் கழித்து, குளித்து முடிந்ததும், காலை சிற்றுண்டி உண்டு, இதோ பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்.

காலை சூரியன் வழக்கத்திற்கு மாறாக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருந்தான். கழுத்திலிருந்து முதுகு வழியாக வியர்வை வழிந்துகொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் மக்கள் வழமைபோல பரபரப்பாக இருந்தனர். ஆட்டோ ஒன்று என்னைக் கடந்து சென்றது. ஆட்டோவிலிருந்த இளம் பெண் டிபன் பாக்சிலிருந்த பிரட்டை எடுத்து தின்றுகொண்டிருந்தார். குர்லா புகைவண்டி நிலையத்திலிருந்து வரும் 332ஆம் எண் கொண்ட இரண்டடுக்கு பேருந்து குடைசாய்ந்து வருவதுபோல், மக்கள் கூட்டத்தை தாங்க முடியாமல் சற்று சாய்ந்தபடியே ஊர்ந்து வந்தது. இந்தப் பேருந்தில் ஏறுவதா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என்னையும், பேருந்து நிறுத்தத்தையும் தாண்டி சற்று தொலைவில் போய் நின்றது. ‘ஏற்கனவே பதினைந்து நிமிடம் காலதாமதமாகி விட்டது, வந்த வண்டியும் போச்சு…’ இன்னைக்கு ‘சேட்டு’ என்ன சொல்ல போறாரோ? அவனா சேட்டு…? சரியான கஞ்சப் பிசுனாறி. கால் மணி நேரம் தாமதமாக சென்றாலும், ‘ரோஜ் அய்சே லேட் ஆனேக்கா அதத் ஓகயா யானா?’ நாளில் தொடங்கி வருடத்திற்கு கணக்குப் போடுவான். ‘பத்து நிமிடம் விரயமாவது கூட தெரியாமல் காட்டுக் கத்து கத்துவான். அவன் கத்தும்போது அவன் தொண்டையை அப்படியே கடிச்சுத் துப்பிவிட வேண்டுமென்று தோன்றும்’ என யோசித்துக்கொண்டிருக்கும் போதே 488 சிவப்பெழுத்துள்ள சிறப்புப் பேருந்து வந்து நின்றது. கட்டணம் கூடுதல்தான். ஆனாலும் பரவாயில்லை, கூட்டத்தோடு சேர்ந்து நானும் ஏறிக்கொண்டேன். மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். தொந்தி பெருத்த ஒருவர் தன் வயிற்றால் என்னை இட்டித்துக்கொண்டு நின்றிருந்தார். நான் திரும்பி முறைத்துப் பார்த்தேன். அதை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவர் கழுத்தை அங்குமிங்கும் திருப்பிப் பார்த்துவிட்டு, சாதாரணமாக இன்னும் நெருக்கியடித்து நின்றார். அது மேலும் எரிச்சலை உண்டு பண்ணியது. கூட்டத்திற்குள் நுழைந்து சற்று முன்னே நகர்ந்து நின்றுகொண்டேன். மனித வெக்கையும், வெயிலின் வெக்கையும் சேர்ந்து தலைக்குள் புகுந்து கிறுக்குப் பிடிக்க வைத்து.

கடைசல் இயந்திரத்தில் (லேத் மிஷின்) ‘கிரிலோஸ்கர்’ என்னும் தானியங்கி இயந்திரத்தை இயக்குவதுதான் என்னுடைய வேலை. சம்பளம் ஒன்றும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாள் ஒன்றுக்கு 35 ரூபாய்தான். பேருந்து மெதுவாக ஆமைபோல ஊர்ந்துகொண்டு சென்றது. ‘நம்மவூரு கட்டவண்டியே தேவல’ என நினைத்துக்கொண்டேன்.

மும்பைக்கு வந்த புதிதில், நாள்தோறும் நான் வசிக்கும் பகுதிக்கு மட்டும் ஐந்து, ஆறு பேராவது தகரப் பெட்டியும், மஞ்சள் பையுமாக, இரண்டு நாள் புகைவண்டிப் பயணத்தில் கறுத்த உடல் மேலும் கறுப்பாகி, அழுக்கு உடையுடன், சிக்கல் விழுந்த தலைமுடியுடனும் வந்துகொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் அப்படி யாரும் வருவதேயில்லை. அப்படி வேலை தேடி யாரும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் நன்கு படித்த பட்டதாரிகள், நவீன ஆடைகளுடன் கையில் பணி நியமன கடிதத்துடன் வந்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். தமிழகத்திலேயே இன்றைக்கெல்லாம் நல்ல வேலை வாய்ப்பு இருக்கிறது. எண்பதுகளில் நிலைமை இப்போது இருப்பதற்கு நேர்மாறாக இருந்தது. அரசு பள்ளிகளில் கட்டணமில்லா கல்விதான், புத்தகங்கள் கூட இலவசமாக கிடைத்தது. ஆனாலும் பள்ளிக்குப் போவதென்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் தனியார் பள்ளிகள் நம்மூர் குழந்தைகளும் கட்டணம் செலுத்தி வண்ண, வண்ண சீருடைகளில், முதுகில் புத்தகப் பையை சுமந்துகொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியவாறு, சொகுசு பேருந்துகளில் பள்ளிக்குப் போவதை பார்க்கும்போது, ‘நாம ஒரு இருபது, இருபத்தைந்து வருசம் பிந்தி பிறந்திருக்கக் கூடாதா?’ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. ஊரைப் பற்றி நினைத்தாலே மனதிற்கு உற்சாகம் கிடைத்து விடுகிறது. இதுவரை சோர்வாக இருந்த மனசு, மழைநீர் வழிந்தோடிய பாறைபோல் பளிச்சென தெளிவாகியது.

“செலோ… செலோ… ஆகே படோ; செலோ… ச்சக்காலா… ச்சக்காலா…” என நிறுத்தம் வருவதற்கு சற்று முன்னே குரல் கொடுத்து இறங்குபவர்களை உஷார் படுத்தினார் நடத்துனர். நானும் ச்சக்காலாவில்தான் இறங்கவேண்டும். நினைவுகளில் மூழ்கியதால் டிக்கட் எடுக்காமல் பயணம் செய்துகொண்டிருந்தேன். “ச்சக்கலா ஏக்”, “கிதர்… ஸே?”, “ஜெரிமெரி… ஸே.”, “அபிதக் க்யா கர்ரஹாத்தா? சோரஹாத்தா க்யா? சாலா, சபேரே சபேரே திமாக் கராப் கர்னே ஆயா…”, “காலி நைய் தேனா…”, “ஹட், சாலா… மதராஸி சரம் நஹி லக்தா…” நடத்துனரை முறைத்துக்கொண்டே பேருந்திலிருந்து இறங்கினேன்.

‘தமிழனென்றாலே இளக்காரம்தான்…’ கோபம் தலைக்கேறியது. ‘கீழே கிடக்கும் கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து விடுவோம்’ என நினைத்தேன். ஆனாலும் அவ்வாறு ஒன்றும் செய்யாமல், நேரமாகி விட்டது என்ற நினைப்பு வரவும் வேகமாக நடந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில்தான் நான் வேலை பார்க்கும் தொழிற்பேட்டை உள்ளது. அந்த தொழிற்பேட்டையிலுள்ள நான்கு அடுக்கு மாடி கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில்தான் வேலை பார்க்கிறேன். கால்கள் வேகமாக அசைவது போன்று இருந்தாலும், சற்று தொலைவிலிருந்து தொழிற்பேட்டையின் பாதை நீண்டுகொண்டே போவதுபோல் இருந்தது. ஆற்றாமையும், எரிச்சலுமாய் வந்தது.

‘ஆ… அப்பா… ஒரு வழியா வந்துவிட்டோம்… இன்னும் மூணுமாடி ஏறணும். இப்பவே தாகமாக இருக்கு…’ என்றைக்கும் இல்லாத தகிப்பு தெரிந்தது இன்று. கம்பெனிக்குப் போனவுடன் இரண்டு, மூணு தம்ளர் தண்ணீர் குடித்தால்தான் முடியும் என்று நினைத்தவாறே கைக்கடிகாரத்தைப் பார்த்தேன், மணி பத்தைக் காட்டியது. ‘ஐய்யோ கா மணி நேரம் லேட்டா வந்தாலே கத்தோ கத்துனு கத்துவான்… இன்னைக்கு ஒருமணி நேரமாச்சு என்ன சொல்லுவானோ…? பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்குப் போவமா… அப்பவும், நாளைக்கு நேத்து எதுக்கு வரலனு கத்துவான்… எப்படியும் கத்தத்தான் போறான்… அத இன்னைகே கத்திட்டுப் போகட்டும்…’ என நினைத்துக்கொண்டே மூன்றாவது தளத்திற்கு வந்து சேர்ந்தேன். படிகட்டுகளில் ஏறி மூன்றாவது தளத்திற்கு வந்தவுடன் இடப்பக்கம் இருக்கின்ற நான் வேலை பார்க்கும் கம்பனியைப் பார்த்தேன். மூடியிருந்தது. ‘ஆச்சரியமா இருக்கு! ஒன்பது மணிக்கு வேலை நேரம்னு சொன்னா, துப்புரவு பண்ற பெண் 8.45க்கு வந்து விடுவாள்… துப்புரவு பெண்மணி வர்றதுக்கு கால் மணி நேரத்துக்கு முன்னதாக வந்து காத்திருப்பாரே சேட்டு… மணி பத்தைத் தாண்டியும், இன்னும் கதவு கூட தெறக்கல என்னாச்சி…? அப்பா… இன்னைக்கு திட்டு கிடைக்காது’. சுருள் கதவருகே மெதுவாகச் சென்றேன். கதவருகே குப்பைக் கூடை இருந்தது. ‘கதவு அடைச்சிருக்கு… குப்ப கூட மட்டும் வெளியே எப்படி?’ கேள்வி எழுந்தது.

குப்பைக் கூடைக்குள் இரத்தம் சொட்ட, சொட்ட… முதலாளியின் தலை, மொட்டக் கத்தியை வைத்து அறுத்ததுபோல், கழுத்து அறுபட்டு, தொண்டை குழல் சற்று வெளியே நீண்டிருக்க பச்சை ரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது… ‘இப்ப… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் யாரோ கொலை செய்திருக்க வேண்டும்…’ கொலைகாரன் இந்த கட்டடத்தைவிட்டு இறங்கி இருக்கக் கூட முடியாது. ‘நாம மேலே வரும்போது யாரும் எதுத்தால போகலையே… அப்ப நாம் வந்தத பார்த்துட்டு இங்க எங்கயாவது ஒளிந்திருக்கணும்’.

அங்கிங்கென சுற்றிப் பார்க்கிறேன், யாரும் தென்படவில்லை. நான் வேலை பார்க்கும் கம்பெனி மட்டுமில்லாமல் மற்ற பதினொன்று கம்பெனியும் மூடியிருந்தது. ‘கொலை நடக்கவும் கம்பெனியை மூடிவிட்டு எல்லாம் ஓடிட்டார்களோ…?’ நிச்சயமாக ஒருவன் மட்டும் இந்தக் கொலையை செய்திருக்க முடியாது. இரண்டு மூன்று பேர் சேர்ந்துதான் செய்திருக்க முடியும். அவர்களை நம் ஒருவனால் பிடிக்க முடியுமா? தெரியவில்லை… ஆனாலும் அவர்களைத் தேடினேன். அந்தத் தளத்தின் நீளமான நடைபாதையையும், வரிசையாக உள்ள கம்பெனிகளின் துவக்கத்திலும், முடிவிலும் உள்ள பால்கனியிலும் சென்று தேடினேன். பால்கனியின் சுவரை பிடித்த வண்ணம் கட்டிடத்தின் தரைத்தளம் வரை எட்டிப் பார்த்தேன், யாரும் தென்படவில்லை. அந்தத் தொழிற்பேட்டையே நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. ‘யாராவது என்னை கொலைகாரன் என நினைத்து விட்டால் என்ன செய்வது? வந்தத் தடம் தெரியாமல் ஓடிவிட வேண்டியதுதான்…’ சட்டென எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.

“ஒரு நிமிடம்… இல்ல, இல்ல… ஒரு வினாடி கூட தாமதிக்கக் கூடாது… ம்… சீக்கிரம் கீழே இறங்கி ஓடிவிடு… இல்ல அவ்வளவுதான்… மாட்டிக்கிடுவ… உன் வாழ்க்கையே பாழ்பட்டுப் போய்விடும். அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவ, அப்பா கேட்டா என்ன சொல்லுவ…? ஓடு, ஓடு… சீக்கிரம் இறங்கு…” மனம் தன் சாட்டையை சொடுக்க ஆரம்பித்து விட்டது. அவசரம்… அவசரமாக இறங்கியதில் இரண்டாவது தளத்தில் படிக்கட்டுக்குப் பக்கத்தில் உள்ள கைப்பிடியின் முனை பட்டு முழங்கால் விண்ணென்று தெரித்தது. ஒரு நிமிடம் உயிர் போகின்ற வலி. அப்படியே அந்த கைப்பிடியை பிடித்தவாறு அமர்ந்துகொண்டேன். ‘தாமதிக்காதே…’ உள்ளுணர்வு எச்சரிக்கிறது. கைப்பிடியை பிடித்தவாறு எழுந்து கீழே எட்டிப்பார்க்கிறேன்.

கீழே நான்கு போலீசார் நின்றுகொண்டிருந்தனர். ‘போலீஸ் நம்மை பார்த்துவிடக்கூடாதே’ என நினைக்கும்போதே, ஒரு போலிஸ்காரர் என்னைப் பார்த்து விட்டார். அவர் மற்ற போலீஸையும் அழைத்து, என்னைப் பார்த்து கைநீட்டி ஏதோ சொல்கிறார். ‘போலீஸ் நம்மை பாத்திருச்சே… மாட்டுனம்னா அவ்வளவுதான்… வாழ்க்கையே முடிஞ்சு போகும்…’ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே நான்கு பேரும் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தனர்.

நான் அப்படியே மூன்றாவது தளத்தை நோக்கி மேல போவதுபோல போக்குக் காட்டி விட்டு, இரண்டாவது தளத்தில் வலப்பக்கம் உள்ள கம்பெனியின் சுருள் கதவையொட்டி ஒளிந்துகொண்டேன். பூட்ஸ் கால் சத்தம் மிக அருகில் கேட்டது. இரண்டாவது தளத்திற்கு வந்து விட்டார்கள். மூன்றாவது தளத்திற்கு செல்ல படிகட்டுகளில் வேக, வேகமாக ஏறுகின்றனர். ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு… ஒவ்வொருவராக செல்வதை எண்ணிக்கொண்டிருந்தேன். நான்கு போலீஸும் இரண்டாவது தளத்திலிருந்து மூன்றாவது தளத்தை நோக்கி ஏற ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், கீழ்த் தளத்தை நோக்கி வேக வேகமாக இறங்கினேன். நல்ல வேளை நான் கீழ்த் தளத்திற்கு வரும்வரை போலீஸ் கவனிக்கவில்லை. அந்தக் கட்டிடம் உள்ள சந்தில் நேராக கொஞ்சம் தூரம் சென்று இடபக்கம் திரும்பினால் மெயின் ரோடு வந்து விடும். ‘அதுவரை போலீஸ் பார்க்காமல் இருந்தால்போதும்’ என நினைத்துக்கொண்டே ஓடினேன். மேலே பால்கனியிலிருந்து போலீஸார் என்னைப் பார்த்து விட்டனர். அதில் ஒன்றோ, இரண்டோ போலீஸ் மேலேயிருந்து குதிக்கின்றனர். அவ்வளவுதான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினேன். மெயின் ரோட்டில் வலப்பக்கமாக திரும்பி அந்தேரி-குர்லா சாலையில் ஓடினேன். போலீஸும் விடாமல் துரத்துகிறது. இரண்டு மணிநேரத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தேன். தேவாலயத்தின் மணி ஒலிக்கும் சப்தம் கேட்டது. இடது புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தேவாலயத்தின் முன்பாக இயேசு அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவராய் கசியும் கருணையை கண்களில் ஏந்தி நின்றுகொண்டிருந்தார். ச்சக்காலா சிக்னல் அருகே ஓடிக்கொண்டிருந்தேன். ‘ஐநூறு மீட்டர் தூரம் கூட இருக்காது, இவ்வளவு நேரம் ஓடியும் இன்னும் சிக்னலைக் கூட கடக்கவில்லையே’ மனதில் எண்ணம் ஏற்பட்ட திகில் உடலெங்கும் பரவ, கால்கள் பின்னிக்கொண்டன. மாகாளி கேவ்ஸ் சாலையிலிருந்து ஒரு கார் அசுர வேகத்தில் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து நின்றேன். அந்தக் கணமே, எனக்கு மிக அருகில் வலதுபக்கம் திரும்பி அதே வேகத்துடன் சென்றது.

ஜே. பி. நகர், மொரல் பைப்லைன் கடந்து ஓடிக்கொண்டிருந்தேன். “ஏ… ஏ… பாஹோ மத்; கோலி செல்லாவுங்கா…” என போலீஸ் எச்சரித்தது. ஓடிக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்ததேன். உண்மையிலேயே போலீஸ் துப்பாக்கியை எடுத்து விட்டது. தப்பிப்பதற்கு வழி உண்டா என்று அங்குமிங்கும் பார்க்க, முன்னால் சாலை முழுவதும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல், ஹாரன் சத்தம் காதைப் பிளந்தது. வாகனங்களுக்கிடையே நுழைந்து வலது, இடது என மாறி, மாறி ஓடினேன். போலீசின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிவிட்டேன். சாக்கி நாக்கா இன்னும் சற்று தூரம்தான். சாலையில் நெருக்கிக்கொண்டிருந்த வாகனங்கள் தீடீரென மேலெழும்பி பறவைகள்போல சப்தம் கொடுத்துக்கொண்டு பறக்கத் துவங்கின. சாலையில் ஒரு வாகனமும் இல்லாமல் வெறிச்சோடி விட்டது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த வாகனமும் எனது தலைக்கு மேலாக பறந்துகொண்டிருந்தது. நான் தலையை குனிந்துகொண்டே திரும்பி ஓடத் துவங்கினேன். எனது வலது கால் ஒரு பாறையின் மீது இடறியதுபோல இருந்தது. என் காலில் பட்ட பாறை உருண்டு சற்று தொலைவில் போய் விழுந்தது. நான் அந்தப் பாறையப் பார்த்தேன். அது தன் உருவத்தை சுருக்கி என் முதலாளியின் தலை போன்று உருமாறியது. அதன் அடிப் பகுதியில் பச்சை இரத்தம் கசிந்துகொண்டே இருந்தது. என்னைப் பழி வாங்கத்தான் அந்தத் தலை உருண்டு, உருண்டே இங்கே வந்து விட்டது என நினைத்துக்கொண்டே ஓடினேன். பெட்ரோல் பங்கிலிருந்து கிளம்பிய மாருதி எஸ்டீம் சிவப்பு நிற கார் இடது பக்கம் திரும்பியவுடன், அந்தக் காரும் பறக்கத் தொடக்கியது. வானில் பறந்துகொண்டிருந்த வாகனங்களுக்கு மேலே இரயிலொன்று பறந்து சென்றது.

நான் சாக்கி நாக்கா சிக்னலிலிருந்து இடப்பக்கம் திரும்பி ஓடும்பொழுது, காலையில் சென்ற அதே MH 04 DC 6747 எண் கொண்ட 332 பேருந்து இடது புறம் திரும்புவதற்காக தன் வேகத்தை குறைத்தது. நான் தாவி அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டேன். கால்கள் தளர்ந்திருந்தன. கணுக்கால் தசையும், தொடை தசை நார்களும் முறுக்கிக்கொண்டு வலித்தன. மூட்டு வலியும் கடுகடுவென வலிக்கத் தொடங்கியது. பேருந்து ஆர்.கே. மில் நிறுத்தத்தில் நிற்கவும், நான் இறங்கி திரும்பிப் பார்த்தேன். சாக்கி நாக்கா சிக்னல்வரை போலீஸ் தென்படவில்லை. பேருந்து வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நான் பேருந்திற்குப் பின்னால் ஓடத்துவங்கினேன்.

ஜெரிமெரி வந்து விட்டது. இரவு எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. சோடியம் விளக்குகள் மஞ்சள் வண்ண ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தன. காலையில் இருந்த பரபரப்பு அடங்கி பேருந்து நிறுத்தம் அமைதியாக இருந்தது. ‘காலையிலிருந்து இவ்வளவு நேரமாவா ஓடினோம்?’ பின்னால் திரும்பிப் பார்க்கிறேன், போலீஸ் இப்போதும் தென்படவேயில்லை. ‘இதுதான் சமயம் கல்லிக்குள் நுழைந்து விட்டால்போதும், போலீஸ் நம்மை பிடிக்கவே முடியாது’ ஆனந்த பவன் ஓட்டலைத் தாண்டி லெசிக்கடையை ஒட்டியுள்ள அந்த குறுகலான சந்துக்குள் நுழைந்தேன். காலில் பந்துபோல் ஏதோ ஒன்று பட்டு உருண்டது. கால் பெருவிரலில் நகம் பிய்ந்து பிசுபிசுப்பாக இரத்தம் கசிந்தது. குனிந்து பார்த்தேன் காலில் பட்டு சற்று முன்னே போய் விழுந்தது முதலாளியின் தலை. நான் ஓடும் பாதையெங்கும் அந்தத் தலை பச்சை இரத்தம் சொட்ட, சொட்ட எனக்கு முன்னால் உருண்டு வந்துகொண்டேயிருந்தது. எனது தலை பூமியோடு சேர்ந்து நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுவதுபோல் உணர்ந்தேன். ‘வீட்டிற்கு எப்போதும் போவதுபோல போகக் கூடாது. வேறு பாதையில் கல்லி, கல்லியாக நுழைந்து யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு சென்றுவிடவேண்டும்.’ என்று நினைத்துக்கொண்டேன். இந்த இரவு நேரத்தில் யார் பார்க்கப் போகிறார்கள் என சற்று தைரியம் ஏற்பட்டவுடன் நிம்மதியாக இருந்தது. ஓடுவதை நிறுத்தினாலும் வேகமாகவே நடக்கத் தொடங்கினேன்.

ஒரு ஆள் மட்டுமே செல்வதற்கான வழியுள்ள குறுகலான சந்து வழியாக செல்லலாம். அந்த சந்தில் எதிரில் ஆள் வந்து விட்டால் யாரவது ஒருவர் ஏதாவதொரு வீட்டின் வாசலை ஒட்டி நின்றால்தான் எதிரில் உள்ளவர் கடந்து செல்லமுடியும்; அவ்வளவு குறுகலான சந்து. பகலிலேயே அந்த சந்திற்குள் யாரும் போகமாட்டார்கள். அந்த சந்தின் முகப்பில் கிரில் கேட் போட்டு அடைத்து இருந்தது. கேட்டை திறந்துகொண்டு அந்த சந்திற்குள் நுழைந்தேன். ‘இனி யாரும் நம்மை பார்க்க முடியாது’ நம்பிக்கை பிறந்தது. ‘நேராக வீட்டிற்குப் போகக்கூடாது. போலீஸ் நம்மை தேடிக்கொண்டு வீட்டிற்கே வந்து விட்டால்…’ நம்பிக்கை பிறக்கும் போதே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையைப்போல அவநம்பிக்கையும் வந்து விடுகிறது.

இடபக்கம் இருக்கிற வீடு ஒன்று திறந்திருந்தது. வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். எல்லோரும் வீட்டிற்கு வெளியில்தான் படி வைப்பார்கள். அந்த வீட்டில் உள்பக்கம் படி இருந்தது. அந்த குறுகலான பாதையைவிட இரண்டடி பள்ளத்தில் இருந்தது வீடு. “கோன்…?” சமயலறையிலிருந்து ஒரு பெண் குரல். பத்துக்குப், பத்தடி அவ்வளவுதான் வீடு. மீண்டும் அதே பெண் குரல் “கோன் ஹை…?” என்றவாறு மோரியிலிருந்து எட்டிப் பார்த்தாள். எனக்கோ அவளைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம். ‘அட… நாம தினம் வேலைவிட்டு வரும்போது பஸ் ஸ்டாண்டில் பார்க்கிற பொண்ணு… இங்க எப்படி? அப்படியொரு அழகுக்கு சொந்தக்காரி’ கேள்வி எழுந்தது. நவீன ஆடைகள் அப்படியே பொருந்தி போகிற உடல் வாகு… எந்த ஆடை அணிந்தாலும் அந்த ஆடைக்கே ஒரு தனி அழகு வந்து சேர்ந்து விடும். அப்படிப்பட்ட பேரழகி!

பேருந்து நிறுத்தத்தில் பார்க்கும்பொழுதெல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன். பல நாட்கள் அவளுக்காக இரண்டு, மூன்று பேருந்தை தவற விட்டு, அவள் வந்ததும் அப்போதுதான் வந்ததுபோல போக்குக் காட்டி நிற்பேன். ‘இவள் மட்டும் நம் மனைவியாக வந்து விட்டால்…’ என நினைக்கும்போது நெஞ்சுக்குள் மகிழ்ச்சி புனலாக ஊற்றெடுக்கும். ‘இப்பேரழகி இவ்வளவு குறுகலான சந்துக்குள், அதுவும் பள்ளமான ஒரு வீட்டுக்குள், வறுமை ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்த தரித்திரம் நிறைந்த வீட்டிலா வசிக்கிறாள். இதுதான் இவள் வீடா…?’ எண்ணங்கள் ஒருவினாடிக்குள் சிறகு விரித்து பல விதமாக வட்டமடித்துக்கொண்டிருந்தது.

“ஹரே… தும்…” இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. இதோ அவள் வீட்டில் நிற்கிறேன். அவள் என்ன என்று கேட்கிறாள். என்னால் பதில் ஒன்றும் சொல்லமுடியவில்லை. நெஞ்சுக் கூடு வயிறோடு சேர்ந்து உப்புவதும், குறைவதுமாக இருந்தது. மூச்சு இன்னும் சீராகவில்லை, முகத்தில் அச்சமும், ஆச்சரியமும் மாறி, மாறி வந்து போனது. மல்லிகைப் பூவைவிட மென்மையான கைகளால் என் தோளைப் பற்றி உலுக்கி விட்டு, தன் கை விரல்களை அப்போதுதான் மலர்ந்த ரோஜாப் பூப்போல் விரித்து “க்யா…?” என புருவத்தை சுருக்கிக்கொண்டு கண்களாலும் கேள்வி கேட்டாள்.

“போ, போ… போலீஸ்…” நாக்கு வரண்டு உள்ளிழுத்துக் கொள்ள மெதுவாக “போலீஸ்…” என்று சொல்லி முடிப்பதற்குள் விரைந்து கதவை உள்பக்கமாக தாழிடுகிறாள். எரிந்துகொண்டிருக்கின்ற பழைய குழல் விளக்கை அணைத்து விட்டு, சிறிய மஞ்சள் விளக்கை எரிய விட்டாள். பின் மெதுவாக என்னருகில் வந்து குடிக்க தண்ணீர் கொடுத்தாள். நான் குடித்து முடித்த பிறகு மெதுவாக “என்ன?” என்று கேட்டாள். நடந்தது முழுக்க திக்கித், திணறி சொல்லி முடித்தேன். நாங்கள் இருவரும் அருகருகில் தரையில்தான் உட்கார்ந்துகொண்டோம். நாங்கள் அமர்ந்திருந்ததற்கு வலப்பக்கமிருந்து ‘லொக்… லொக்…’ என இடைவிடாத இருமல் சத்தம்.

‘யாரு?’ என்பது போல் அவளைப் பார்த்தேன். “தாத்தா” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு விரைந்து அவரருகில் சென்று டானிக்கும், மாத்திரையும் எடுத்துத் தந்தாள். மருந்து எடுத்துக்கொண்டபின் இருமல் நிற்க, அமைதியாக படுத்துக்கொண்டார் அவர். நானும் அவள் அருகில் போய் நிற்கிறேன். இவன் யாரு என்பதுபோல் அந்தப் பெரியவர் கேட்க, ‘தன்னோடு வேலை செய்யும் பையன். ரொம்ப நல்ல பையன், இங்க பக்கத்துலதான் இருக்கான். சும்மா பார்க்க வந்திருக்கான்’ அவரை சமதானம் படுத்தும் விதமாக பதில் சொன்னாள். பெரியவர் போர்வையை எடுத்துத் தலையிலிருந்து கால்வரை போர்த்திக்கொண்டார்.

பெரியவருக்கு எப்படியும் 75, 76 வயது இருக்கும். எலும்பும் தோலுமாய் இருந்தார். “அம்மா, அப்பா…?” என்று கேட்கவும் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த போட்டோவைக் காட்டினாள். நெற்றியில் ஒரு ரூபாய் நாணயமளவு குங்குமப் பொட்டிட்டு சிரித்த வண்ணம் இருந்தனர். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. கண்கலங்கி நின்றேன். “அவங்க நான் பொறந்த பத்தாவது மாதத்திலேயே அடுத்தடுத்த பத்து பதினைந்து நாளில் செத்துப் போனாங்க… தாத்தாதான் என்னை வளர்த்தார். இப்போ நான் அவரைப் பாத்துக்கிறேன்” என்றாள். அவளுடைய குடும்பச் சூழல் மேலும் அவள் மேல் உண்டான அன்பை பெருக்கிற்று.

என்னை அழைத்து கட்டிலுக்கருகில் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு உட்காரச் சொல்லிவிட்டு சப்பாத்தியும், கோபி பாஜியும் சாப்பிடுவதற்கு தந்தாள். காலையில் நாலு இட்லி சாப்பிட்டது. சப்பாத்தியைப் பார்த்தவுடன் பசி வயிற்றை கிள்ளுவதை உணர முடிந்தது. வயிறு நிறைய சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்த பின்தான் அவளுக்கு சாப்பாடு இருக்குமா…? இருக்காதா…? என்ற கேள்வியெழ, அவளைப் பார்க்கிறேன். “கவலைப்படாதே சப்பாத்தி இருக்கு” என்றவளை ஏறிட்டுப் பார்த்தேன். “முஜே, தமிழ் மாலுமே” என்றாள். நான் அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சரி, இரவு எங்கும் போக வேண்டாம் இந்தக் கட்டிலேயே படுத்துக்கோ” என ஒரு போர்வையை கட்டிலின் மேல் விரித்து விட்டாள். “நான் கட்டிலில் படுத்துக்கொண்டால் நீ எங்க படுப்ப?” என கேட்டேன். “வேற வழியில்லை கட்டிலில்தான். ஏன்னா கீழே தரையில் விரிக்க ஒண்னுமேயில்லை…” என சொல்லிவிட்டு கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டாள். மறு ஓரத்தில் நானும் படுத்துக்கொண்டேன். உடல் முழுவதும் வலி கூடுதலாக இருந்தாலும் தூக்கம் மட்டும் ஏனோ வரவில்லை. இவளிடம் எப்படி சொல்வது என யோசித்துக்கொண்டே திரும்பிப் படுத்தேன். அவள் முதுகு தெரிந்தது. சிறிது நேரம் கழித்து அவளும் திரும்பி படுத்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘என்ன?’ என்று கண்களாலேயே கேட்டாள். “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டேன். அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவள் இதழ்கள் என்னை எடுத்துக்கொள் என்பதுபோல துடிக்கிறது. அவள் இதழ்களில் திராட்சை ரசம் பனிபோல மிர்ளிந்து கொண்டிருந்தது. அவளை இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. எனது எண்ணம் அபத்தமாக இருப்பதெண்ணி எனக்குள்ளே மெலிதாக சிரித்துக்கொண்டேன். அவள் மீண்டும் திரும்பிப் படுத்துக்கொண்டாள். அவள் தோளைத்தொட்டு மெதுவாக திருப்புகிறேன் அந்த அழகான முகம் கொஞ்சம், கொஞ்சமாய் முதலாளி முகமாக மாறி, கழுத்திலிருந்து பச்சை நிறத்தில் இரத்தம் சொட்ட சொட்ட கோரமாய் சிரித்தது, என்னைப் பார்த்து.

நான் அலறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். வீட்டில் என்னைத் தவிர மற்றனைவரும் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தனர். அணைக்காமல் மறந்துபோன அகல் விளக்கு மட்டும் மெலிதாக தலையை அசைத்து, அசைத்து எரிந்து கொண்டிருந்தது. விமானம் ஒன்று பேரிரைச்சலோடு தரையிறங்கி ஓடுதளத்தில் ஓடி அமைதியானது.

2003- மும்பைத் துடிப்பு மாத இதழ்

மே-2013, தென்னரசு மாத இதழ்.

Print Friendly, PDF & Email

1 thought on “பச்சை ரத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *