நான் நானல்ல

 

பயந்து போயிருந்தான் கபிலன். சில நாட்களாகவே ஏதோ இனம் காணமுடியாத விஷயம் பயமுறுத்திக் கொண்டு இருந்தது. நிம்மதியாக இருக்க முடியவில்லை.

யாரிடம் போய் சொல்வது எனப் புரியவில்லை. யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது.

உறங்கும் போதும். குளிக்கும் போது. தெருவில் பலருக்கு மத்தியில் நடக்கும் போது. பலருடன் பேருந்தில் பயணம் செய்யும்போது. பலர் கூடும் பொது இடங்களில் இருக்கும் போது. இப்படி எங்கு யாருடன் இருந்தாலும் அந்த பயம் அவனை விட்டு அகல மறுத்தது.

மூன்று வாரங்கள் கழிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. தூக்க மாத்திரைகளை விழுங்கியும் பயனில்லை.

ஒரு மனோதத்துவ நிபுணரைச் சந்திப்பது என்று முடிவெடுத்தான். தன் அலைபேசியில் தேடினான். வீட்டில் இருந்து அருகிலேயே ஒருவர் இருந்தார். மனோதத்துவத் துறையில் அவரது அனுபவத்தை ஆராய்ந்தான். திருப்தியாக இருந்தது.

அவரது அலைபேசியை அழைத்து அவரைச் சந்திக்கும் நேரத்தை முன்பதிவு செய்து கொண்டான்.

அரைமணி நேரம் முன்னதாகவே சென்றான்.

“கபிலன் தானே நீங்கள்? மருத்துவர் ஒரு நோயாளியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். சற்று அமருங்கள். அது முடிந்ததும் நீங்கள்தான்”

பொம்மை போல் இருந்த வரவேற்பாளினி சொன்னாள். வேறு சமயமாக இருந்திருந்தால் அவளுடன் கொஞ்சம் நேரம் சகஜமாக பேசிக் கொண்டு இருந்திருப்பான். ஆனால் இன்று இந்தப் பிரச்சினை அவன் மண்டைக்குள் குடைந்து கொண்டு இருந்ததால் மெளனமாக அமர்ந்தான்.

அது மனோதத்துவ நிபுணர் புத்தனின் பிரத்யேக மருத்துவமனை. ரொம்பச் சின்னது. வரவேற்பு அறையின் மெளனமான சூழல் நன்றாக இருந்தது. மனம் அமைதியாக ஆரம்பித்தது. கண்ணை மூடினான்.

எவ்வளவு நேரம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தான் என்று தெரியவில்லை. வரவேற்பாளினியின் குரல் அவனை எழுப்பியது.

“கபிலன் ஸார்! நீங்க உள்ளே போகலாம்”

மென்மையான பழுப்பு நிறம் கொண்ட கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

புன்னகையுடன் வரவேற்றார் புத்தன்.

“வாங்க கபிலன். நல்லா இருக்கீங்களா?”

உட்கார்ந்து கொண்டான்.

“சொல்லுங்க கபிலன், என்ன பிரச்சினை?”

“சில நாட்களாகவே ஏதோ இனம் புரியாத பயம் சூழ்ந்துகிட்டு என்னை நிலையில்லாமல் ஆக்கிட்டு இருக்கு ஸார்”

“கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமா?”

“திடீர் திடீர்ன்னு ஒரு காட்சி மனசுல தோணுது. அது எனக்கு ரொம்ப கலக்கத்தைக் குடுக்குது. அது என்ன மாதிரியான காட்சின்னா… ஒரு ஆள் ஒரு கறுப்பு போர்வை (அல்லது) மேல் அங்கியைச் சுத்திகிட்டு யாரோ ஒரு ஆளை கத்தியால் குத்தற மாதிரி.

ஆரம்பத்துல எனக்கு அந்தக் காட்சி சரியா புரியல. அப்புறம் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. அந்தக் காட்சில வர்ற ரெண்டு பேரும் நான்தான். குத்தறது இன்னும் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இருக்கப் போகிற வயதான நான், குத்து வாங்கறது ஐந்தாறு வருடங்களுக்கு முந்தைய நான். இந்தப் புரிதல் வந்ததுல இருந்து எனக்கு பயம் அதிகமாயிடுச்சு.

இது எப்பவெல்லாம் வரும் ன்னு கேட்டீங்கன்னா என்னால சரியா சொல்ல முடியாது. எப்ப எங்க வேணா இந்தக் காட்சி எனக்குத் தோணுது.

இதை எப்படியாவது குணப்படுத்திடுங்க ஸார். எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு”

பொறுமையாக அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டார். பிறகு அவனை சில கருவிகள், உபகரணங்கள் கொண்டு சோதித்துப் பார்த்தார்.

அவனை ஸ்கேன் எடுத்தார். அதன் ரிப்போர்ட் வர ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவனை வரவேற்பு அறையில் உட்காரச் சொன்னார்.

வந்து அமர்ந்தவன், கண் அயரக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்க முயற்சித்……. கண் அயர்ந்தான், தன் நினைவை இழந்து. அவன் பயந்தது போல் அந்தக் காட்சி தோன்றியது. தானே தன்னைக் கத்தியால் குத்துவது.

திடுக்கிட்டு விழித்தான், வரவேற்பாளினி எதிரே நின்றிருந்தாள்.

“எவ்ளோ நேரமா எழுப்பிட்டு இருக்கேன், தூங்கிட்டீங்களா? உங்க ஸ்கேன் ரிப்போர்ட் வந்து அரை மணி நேரம் ஆச்சு. ஸார் உங்களைக் கூப்பிட்டார்”

அவ்வளவு நேரமா தூங்கினோம் என்று ஆச்சரியமாக உள்ளே சென்றான்.

புத்தன் பேச ஆரம்பித்தார்.

“எல்லா ரிப்போர்ட்ஸ்ஸையும் பார்த்துட்டேன் கபிலன். இது உடல் சம்பந்தமான பிரச்சினை கிடையாது. மனசு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். அதை உறுதிப்படுத்ததான் இந்த சோதனைகளைச் செஞ்சு பார்த்தேன்.

சில கேள்விகள் கேட்கறேன். தயங்காம பதில் சொல்லுங்க.

உங்களுக்கு எந்த காரணத்துக்காகவாவது குற்ற உணர்ச்சியோ விரக்தியோ இல்ல சுய பச்சாதாபமோ இருக்கா? என்ன காரணம் ன்னு எனக்குச் சொல்ல வேணாம், இந்த மாதிரி உணர்வுகள் ஏதாவது இருக்கான்னு மட்டும் சொல்லுங்க, போதும்”

யோசிக்காமல் உடனே சொன்னான்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல ஸார்”

“எதாவது மனசு உறுத்தற மாதிரி தப்பு பண்ணியிருக்கீங்களா?”

“இல்ல ஸார்”

“சின்ன வயசு ஞாபகங்கள் எதுவும் சமீபத்துல வந்ததா? யார்கிட்டயாவது மன்னிப்பு கேட்கணும் ங்கற மாதிரி தோணியிருக்கா?”

“நிச்சயம் அப்படி எதுவும் இல்ல ஸார்”

கொஞ்சம் யோசித்தார் புத்தன்.

“எல்லாம் தெளிவா இருக்கு, இன்னும் கொஞ்சம் உங்களை சோதனை பண்ணனும். ஆனா இப்ப இல்ல. நான் சில மருந்துகள் தரேன், சாப்பிடுங்க. ரெண்டு வாரம் கழிச்சு வாங்க. என்னென்ன மாற்றங்கள் இருக்குன்னு பார்ப்போம்.

ஒரு முக்கியமான விஷயம். நீங்க எதைப் பத்தி நினைக்கும்போது எல்லாம் இந்த மாதிரி கற்பனைக் காட்சி உங்களுக்கு தோன்றுதுன்னு கவனிங்க. அது ரொம்ப முக்கியம். அதை வெச்சுதான் இதுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு குணமாக்க முடியும்.

இதைப் பத்தி யார் யார்கிட்ட எல்லாம் இதுவரைக்கும் சொல்லியிருக்கீங்க?”

“யார்கிட்டேயும் சொல்லல ஸார்”

“நல்லது. யார்கிட்டேயும் இப்போதைக்கு சொல்ல வேணாம்”

விடைபெற்று பணம் கட்டிவிட்டு வெளியில் வந்தான். வழியில் அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொண்டான்.

விறுவிறுப்பாகச் சென்றன இரண்டு வாரங்கள். ஓரளவுதான் மாற்றங்கள் தெரிந்தன. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டான். மீண்டும் புத்தனைக் காணச் சென்றான்.

“வாங்க கபிலன்! என்னென்ன மாற்றங்கள் தெரிஞ்சது?”

“பயத்தோட வீரியம் கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கு, சும்மா கொஞ்சம்தான்.

ஆனா ஒரு விஷயத்தை உணர்ந்தேன்.

நீங்க சொன்ன மாதிரி என் எண்ணங்களை கவனிச்சேன். எந்த மாதிரியான விஷயங்களைப் பத்தி நான் யோசிச்சிட்டு இருக்கும் போது எனக்கு அந்த காட்சி தோன்றி பயம் கிளம்புதுன்னு ஓரளவுக்குப் புரிஞ்சுது”

“ஓ சூப்பர்! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். சொல்லுங்க. எந்த மாதிரியான எண்ணங்கள்?”

தயங்கினான். எச்சில் விழுங்கினான். அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தான்.

“இதோ பாருங்க கபிலன். உங்க கஷ்டம் எனக்குப் புரியுது. அந்தரங்கமான விஷயத்தை யார்கிட்டயாவது சொல்லணும்ன்னா அது கஷ்டம்தான்.

ஆனால் நீங்க அதைப் பத்தி சொல்லாம இருந்தா என்னால உங்களை எப்படி குணமாக்க முடியும்?

வேற மருத்துவரைப் பார்க்கணும்ன்னா கூட பாருங்க. ஆனா நீங்க இந்த விஷயத்துல வெளிப்படையா இல்லன்னா எந்த மருத்துவராலயும் உங்களை குணப்படுத்தறது கஷ்டம்”

“கொஞ்சம் தயக்கமா இருக்கு, அவ்ளோதான். மத்தபடி உங்க கிட்ட இதைப் பகிர்ந்துக்கறதுல எனக்கு பயமோ நம்பிக்கை இல்லாமலோ எல்லாம் இல்லை.

இதைச் சொல்றதுக்கு முன்னாடி ஒண்ணு கேட்கிறேன். நான் சொல்லப் போற விஷயத்துல சட்டம் அனுமதிக்காத காரியங்கள் இருக்கும் பட்சத்தில் என் ரகசியங்களை நீங்க காப்பாத்துவீங்களா?”

“ஓ நிச்சயமா. என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு நோயாளி. உங்களைக் குணப்படுத்த வேண்டியது என் கடமை. மத்தபடி உங்களை சட்டத்துக்கு பிடிச்சுக் கொடுக்கறது மாதிரியான வேலையெல்லாம் செய்ய மாட்டேன்.”

“அப்ப சரி. சொல்றேன்.

எனக்கு எப்பவும் பெண்கள் மேல ஒருவிதமான ஈர்ப்பு அதிகம். எல்லா ஆண்களுக்கும் பெண்கள் மேல பொதுவான ஈர்ப்பு இருக்கும், ஆனா எனக்கு அதோட வீச்சு ரொம்ப அதிகம்.

யாராவது அழகாவோ வசீகரமாவோ இருக்கற பெண்ணைப் பார்த்தாலோ அல்லது இதுவரைக்கும் அப்படிப்பட்ட யாரையாவது பார்த்ததையோ பழகினதையோ பத்தி நெனைச்சாலோ என் எண்ணங்கள் தாறுமாறா ஆயிடும். அவங்கள்ல யாரையாவது கற்பழிக்கணும்-ன்னு எண்ணம் தீவிரமாயிடும்.

உதாரணமா சொல்லணும்ன்னா…. இங்க இருக்கற வரவேற்புப் பெண்ணைப் பார்த்தாலே அவளை எனக்கே எனக்குன்னு சொந்தமாக்கிக்கணும்ன்னு தோணுது. அதுக்காக என்ன வேணும்ன்னா பண்ணலாம்ன்னு தோணுது.

இப்படி நிறைய பெண்களைப் பத்தி நினைக்கறேன்.”

“இதுவரைக்கும் யாரையாவது கற்பழிச்சிருக்கீங்களா?”

அவசர அவசரமாகத் தலையாட்டினான்.

“இல்லவே இல்ல ஸார். ஆனா அந்த எண்ணம் தீவிரமாயிட்டு வருது.”

புத்தன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார்.

“இந்த ரெண்டுக்கும் சம்பந்தம் இருக்குமான்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியல. ஆனா மருந்துகளால இந்தப் பிரச்சனை சரியாகும்ன்னு தோணல. இப்படியே விட்டா அந்த கற்பனைக் காட்சி தோன்றுவதால் உங்களுக்கு ஏற்படும் பயம் கடைசில உங்களை தற்கொலை வரைக்கும் கொண்டு போயிடும். நான் சொல்றபடி செஞ்சு பார்க்கறீங்களா?”

“சொல்லுங்க ஸார்! இந்தப் பிரச்சினை சரியாக என்ன வேணும்ன்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்”

“பெண்கள் மீது நன்மதிப்பை வளர்த்துக்கோங்க. அவங்களை அனுபவிக்கணும் ங்கற மாதிரியான கெட்ட எண்ணங்களை விட்டுட்டு நேர்மையா இருங்க. நிச்சயம் இந்தப் பிரச்சினை சரியாயிடும்.

மாத்திரை, மருந்து எதுவும் வேண்டாம். யோகா, தியானம் மாதிரி நல்ல விஷயங்கள்ல மனசைச் செலுத்துங்க.

ரெண்டு மாசம் கழிச்சு வாங்க. எப்படி இருக்கீங்கன்னு சொல்லுங்க. சரியா? சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்”

விடைபெற்று வெளியில் வந்தான்.

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது, பிறகு அவனது மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. மருத்துவர் சொன்னது போலவே யோகா, தியானம் போன்ற நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தினான். வாழ்க்கை முன்னைவிட அழகானது.

சரியாக ரெண்டு மாதங்களில் புத்தனைச் சந்தித்தான்.

“நான் இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கேன் ஸார். நீங்க சொன்னபடியே செஞ்சிகிட்டு வர்றேன். மனசு மாறிடுச்சு. இப்ப அந்தக் காட்சி எதுவும் தோணுறது இல்ல, பயம் எதுவும் இல்ல. ரொம்ப நன்றி ஸார்” கையெடுத்துக் கும்பிட்டான்.

“சந்தோஷமா இரு கபிலன். நான் சொன்னதை ஞாபகம் வெச்சுக்கோ, இனிமேல் எக்காரணம் கொண்டும் பெண்களைத் தப்பா நெனைக்காதே” என்று சொல்லி சந்தோஷமாக அவனை வழியனுப்பி வைத்தார்.

அடுத்த நிமிடமே புத்தன் தன் அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்தார்.

“நாம நினைச்சபடியே நம்ம பரிசோதனை வெற்றிகரமா முடிஞ்சிருக்கு. இவன் சுத்தமா மாறிட்டான். இனிமேல் இவனுக்கு பெண்கள் மீதான கெட்ட எண்ணம் எதுவும் வராது.

இவனை மாதிரியே நாம பரிசோதனை செஞ்ச மத்த நாற்பத்து ஒன்பது பேரும் நாம எதிர்பார்த்தபடியே நல்லவங்களா மாறிட்டாங்க.

இனி நம்மளோட திட்டப்படியே நான் தயாரிச்ச ‘பயம் கிளப்பும் வாயு’வை இந்த ஊர் பூரா பரப்பலாம். கொஞ்சம் நாள் கழிச்சி, அதை மாநிலம் பூரா, அப்பறம் நாடு முழுக்கவே பரப்பலாம். நாம ஏற்கனவே பரிசோதிச்சபடியே அந்த வாயுவானது பெண்கள் மேல தப்பான கண்ணோட்டத்தோட இருக்கறவங்களை மட்டும் பாதிக்கும். அவங்களுக்கு பயம் கிளப்பும். அவங்க எந்த மருத்துவர்கிட்ட போனாலும் அது சரியாகாது, மனோதத்துவ நிபுணராலதான் குணப்படுத்த முடியும். அந்த நிபுணரும் எல்லா வித வழிமுறைகளையும் முயற்சி செஞ்சிட்டு கடைசியா நான் இந்த ஐம்பது பேருக்குச் சொன்னபடியே மனசை மாத்திக்கச் சொல்லிடுவாங்க” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார்.

மறுமுனையில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் ஞானசம்பந்தன் சந்தோஷமானார்.

“ரொம்ப நல்ல காரியம் செஞ்சிருக்கீங்க புத்தன். பெண்கள் மீது தப்பான எண்ணங்கள் கொண்டவங்களை, அவங்க தப்பு ஏதும் பண்றதுக்கு முன்னாடியே மனசு மாற வெச்சிட்டா யாருக்கும் பாதிப்புகள் இல்லாமலே தடுத்துடலாம்ன்னு நீங்க சொன்னப்ப இதையெல்லாம் எப்படி செஞ்சு முடிக்கப் போறோம்ன்னு மலைப்பா இருந்தது. உங்களாலதான் இது சாத்தியமாச்சு. இவ்ளோ பேரை சட்டப்படி தண்டிக்கறது நடைமுறைல சாத்தியமே இல்லை.

அதுவும் வெறும் ஐம்பது பேர் மட்டும் கூடின திரையரங்கில் பரிசோதனையா அந்த வாயுவைச் செலுத்தி, அவங்க மனோதத்துவ நிபுணரை இணையத்தில் தேடும்போது உங்கள் பெயர் முதலில் வரும்படி செய்து அவங்க எல்லோரும் உங்களையே தேடி வரவைத்து…. அப்பப்பா… நீங்க பெரிய கெட்டிக்காரர்தான் ஸார்.

இன்னும் சில மாதங்கள்ல நம்ம நாட்டுல பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமை போன்ற வன்முறைகள் அறவே ஒழிஞ்சிடும். நினைக்கவே ஆனந்தமா இருக்கு”. 

தொடர்புடைய சிறுகதைகள்
"இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர், மக்கள் போற்றும் மகேசன், எதிரிகள் அஞ்சும் எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன் அவர்களுக்கு நாள்பட தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தீராத ...
மேலும் கதையை படிக்க...
ஷாலினி ஒரு இருட்டறையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள், சரியாகச் சொன்னால் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தாள். அவளது உடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏதோ திரைச்சீலையை உடலில் சுற்றி வைத்ததுபோல. அது போதாதென அறை முழுக்க வெவ்வேறு இடங்களிலிருந்து திரைச்சீலை துணித் துண்டுகள் போன்றவைகள் அவள் ...
மேலும் கதையை படிக்க...
மாதவன் ஸாரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். ரொம்ப சுவாரஸியமான ஆள். நிறைய அறிவு. நல்லா பழகுவார். ரொம்ப பேசுவார். பிறருக்கு உதவிகள் செய்ய தயங்கமாட்டார். சாயந்திரம் ஆனால் போதும், எங்கள் குடியிருப்பில் உள்ள சிறு பூங்காவின் இருக்கையில் ...
மேலும் கதையை படிக்க...
காட்சி 1: "என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!" "இல்லைடி. ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்" "என்னடி ஆச்சு? என்கிட்ட சொல்லவேயில்ல. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?" "சின்னதா ஆரம்பிச்சி, பூதாகரமா ஆயிடுச்சி" "யார் மேல தப்பு?" "ரகுதான் எல்லாத்துக்கும் காரணம். ...
மேலும் கதையை படிக்க...
"ஹாய்டா! உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கியா?" "ஹாய்டி! உன்னைப் பார்க்காமல் சூப்பரா இருக்கேன், நீ எப்படி இருக்கே?" ஏதோ பலநாள் கழித்து சந்திக்கும் நண்பன்/நண்பியின் ஜாலியான உரையாடல் இது என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் கணவன், ...
மேலும் கதையை படிக்க...
எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்
கனவில்லை, நிஜம்!
எங்க காலத்துல…
யார் மேல தப்பு?
சேர்ந்தும் சேராமலும்

நான் நானல்ல மீது ஒரு கருத்து

  1. Bhuvana says:

    மிக அருமையான கதை… நல்ல வித்தியாசமான அறிவும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.. இது உண்மையில் நடந்தால் நாடே சொர்க்கம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)