நந்தாதேவி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 34,947 
 

என் பெயர் முத்துகிருஷ்ணன். இரு உலகப்போர்களுக்கு இடையே 1925 இல் நான் பிறந்த சமயத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் போர் பற்றி யாருக்கும் பெரிய அக்கறை இருக்கவில்லை. பிரிட்டிஷருக்காகப் போரிட ஒவ்வொரு மாதமும் நம்மூர் சிப்பாய்கள் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பெருங்குழுவாகக் கப்பலேறினர். ஸ்ரீமுஷ்ணத்தைப் பொருத்தவரை போர் என்றால் இதுதான். இதனால் ஐந்து வருடங்களுக்கு முன் நான் மெட்ராஸ் பட்டாலியனில் ரேடியோ ஆப்பரேட்டர் வேலைக்குச் சேர்ந்தபோது, அந்தச் செய்தி ஸ்ரீமுஷ்ணத்தில் எனக்கு ராஜ மரியாதையைத் தந்துவிட்டது. என் ஐந்து வருடப் பயிற்சியில் பல மலைகளுக்கு ரேடியோ டவர் எழுப்பச் சென்றிருக்கிறேன் என்றாலும் பனி மலையில் ஏறுவது இதுதான் முதல் முறை. அதுவும், போரிடச் செல்லாமல் மலை உச்சியை அடைவது மட்டுமே குறிக்கோள் என இந்திய மலையேறும் பள்ளிக் குழுவோடு போவதும் முதல் முறை. கடைசி முறையும் கூட. இந்த அசைன்மெண்டு முடிந்து ஊருக்குத் திரும்பியதும் நான் வேலையை ராஜினாமா செய்துவிடுவேன்.

இந்தியாவின் ரெண்டாவது உயரமான சிகரமான நந்தாதேவியின் வசீகரம் எங்கள் பயணக் களைப்பை மறக்கச் செய்தது. ரிஷிகங்கா பள்ளத்தாக்கில் நுழைந்ததிலிருந்து வண்டலாக ஓடும் நதிகளும், காட்டாறுகளும், பூமலைகளுமாகக் கடந்து வந்தோம். மலைகளுக்கிடையே ஊஞ்சல் போல மரப்பாலங்கள் வழியே அலக்நந்தா, பாகீரதி நதிகளைக் கடந்தோம்.

பேஸ் கேம்பிலிருந்து கிளம்பி முதல் கேம்ப்பை நோக்கி எங்கள் நடை தொடங்கியது. என்னோடு மேஜர் சுக்வீந்தர் சிங், மேஜர் சுரேந்திரநாத், கமாண்டோ பகத்சிங், மற்றும் ஐந்து ஷெர்பாக்கள். எங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் பெங்கால் சாப்பர்ஸ் குழுவினர் இந்திய மலையேறும் பள்ளியின் நிபுணர் ஜென்ரல் வில்லியம்ஸின் தலைமையில் நந்தாதேவி மலையின் கிழக்கு பக்கம் ஏறத் தொடங்கியிருந்தனர். முதல் கேம்ப், ரெண்டாவது கேம்ப், மூன்றாவது கேம்ப் என மலைப் பாதைகளில் கூடாரங்கள் உருவாக்கியபடி மேலே ஏறுவார்கள்.

விறுவிறுவென்றிருந்த கால்வலி மறைந்துபோய், மூச்சுவேகம் சீராகி, முதுகில் சுமந்திருந்த பாரம் குறைந்துபோய், பசி முற்றிலும் ஆவியாகிப்போனது – எதுவும் தெரியாமல் முதல் கேம்ப்பை நோக்கி மலையேறிக்கொண்டிருந்தேன். பனைமர உச்சியைப் பார்ப்பதுபோல் செங்குத்தாய் உயர்ந்திருந்தது பாதை. நான் ஏறிக்கொண்டிருந்த பனிப்பாறை நன்றாக இறுகி இருந்தது. எழுநூறு மீட்டர் ஏறியதில் முதல் கேம்ப் கொடி கண்ணுக்குத் தெரிந்தது. ரெண்டு நாட்களாகத் தொடர்ந்து பெய்த பனியில் நந்தாதேவியின் முதல் கேம்ப் முழுவதும் வெள்ளையடித்த காலி வீடு போல இருந்தது.

கூடாரங்களில் நுழைந்து அவரவர் இடங்களைத் தேர்ந்தெடுத்தோம். வெளியே ஷெர்பாக்கள் மாலை உணவுகளைத் தயார் செய்யத் தொடங்கினர். ஷெர்பாக்களின் திபத்திய பாடல்களும், நெருப்பில் வாட்டிய கறி வாசமும் மாலையை ரம்மியமாக்கியது. ஷெர்ப்பாக்களுக்குச் சதையே கிடையாதோ எனும் சந்தேகம் டெஹ்ராடூன் வந்ததிலிருந்து உண்டு. வாயில் பைப்பு வைத்து உறிஞ்சியது போல ஒட்டிய முகம். குள்ளமாக இருந்தாலும் மிக நீளமான கைகள். வாயில் எப்போதும் அதக்கியிருக்கும் புகையிலை. ரப்பர் போல வளைந்தாலும், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டு போல இறுக்கமான உடம்பு. ஷெர்பாக்களோடு உட்கார்ந்திருந்தால் நேரம் போவதே தெரியாது. நாம் கவனிப்பதைப் பார்த்து கறைபடிந்த பற்களைக் காட்டிச் சிரிப்பார்கள். என்னைப்பார்த்து, `பாடுங்க?`, என்பது போல குவிந்த விரல்களை வாய்க்கருகே கொண்டுபோய் ஆகாயத்தில் பறக்கவிட்டான் ஒருவன். `ம்மேஹூ, ம்மேஹூ`, என கழுதை கத்துவதைப்போலச் சத்தம்போட்டேன். குந்தியிருந்தவன் பகபகவெனச் சிரித்தபோது அவனது கழுகுக் கண்கள் மேலும் இடுங்கின.

`அடுத்த ரெண்டு நாட்களுக்கு பனிப்பாளம் உருகாது. கனமில்லாமல் தூவலா பெய்யுது`, என்றார் சுக்வீந்தர். இந்த கேம்ப்பின் இன்சார்ஜ். என்னை விட சின்னவரென்றாலும் சுக்வீந்தர் என் சீனியர் – இந்திய மலையேறும் பள்ளியிலிருந்து நேரடியாக ராயல் பெங்கால் படையில் இணைந்தவர். `ஆமாம் சார். ரெண்டாவது பேஸ் காம்ப்புக்கு போவதற்கு முன்னால் இந்த கூடாரங்களை இடம் மாத்தியாகணும். பனிப்பாளம் உருண்டு விழுந்தால் திரும்ப வரும்போது அடையாளம் தெரியாது, இதோ இவன விட்டுப்போனா புளியங்கொட்டைப் பல்ல வெச்சு கண்டுபிடிச்சிடலாம் சார்`, என என்னைப் பாடச் சொன்ன ஷெர்பா பக்கம் கைநீட்டினேன். ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் பார்த்ததைக் கண்டு மிரண்ட அவன் எங்கள் சிரிப்பைப் பார்த்து சகஜமாக இளித்தான்.

நந்தாதேவியின் கிழக்குப் பகுதியில் மேகமற்ற வானத்தைத் துளைத்திருந்த சுனந்தா தேவியைப் பார்த்தேன். இந்திய மலையேறும் பள்ளியின் எத்தனை வருடக் கனவு அது! ஒவ்வொரு நாளும் நந்தாதேவியின் படங்களைப் பார்த்தபடி இருப்பார்கள். முகட்டிலிருந்து வந்த பனியின் ஊளைக்காற்று மிக பலமாக இருந்தது. கடல் மட்டத்திலிருந்து ஐநூறு மீட்டர் வரை வந்ததும் சிறு சமதளம் இருக்குமென 1930ஆம் ஆண்டு பிரெஞ்சு குழுவினர் தயாரித்த வரைபடத்தில் இருந்தது. பனி நின்றதும் ஏதேனும் ஒரு மூலையில் அவர்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் விட்டுச் சென்ற கழிவுகள், பிரெஞ்சுக் கொடி என ஏதாவது கிடக்கும். படபடவென கூடாரங்கள் அடித்துக்கொண்டன. நான் ஆழமாக அடித்த ஆணிகள் கெட்டியாகப் பிடித்திருந்தன. கூடாரத்து இணைப்பைச் சரிபார்ப்பதும் என் வேலை. இன்று அடிக்கும் காற்றுக்கு நாளை சிறிது மலையை ஒட்டி கூடாரம் அமைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். சைக்கிள் கைப்பிடிப் போன்ற தடிமனான நைலான் கயிறுகள் கூடாரத்தின் உச்சியிலிருந்து சற்று தொலைவு வரை சென்று தரைக்குள் நுழைந்தன. மடக்கு நாற்காலிகளுக்குப் பக்கத்தில் சுடு நீர் புகை எழும்பியது.

மூன்றாம் பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் எனப் பெயர் மாற்றும் வருடம் நான் ரேடியோ ஆபரேட்டராகச் சேர்ந்தேன். அப்போது மேஜர் வில்லியம்ஸின் அறையில் முதல்முதலாக நந்தாதேவியைப் பார்த்தேன். உச்சியில் புகை கசிந்தபடி கம்பீரமாக நின்றிருந்த படத்தை இமயமலை என்று நினைத்திருந்தேன். குடகு மலையில் நடந்த மலைக் கள்வருடனான சிப்பாய் சண்டையில் முதலில் ரேடியோ தூக்கி ஓடினேன். அதுவரை சண்டை என்றால் எதிரி நாட்டோடு போடுவது மட்டும் என்று நினைத்திருந்தேன். மேஜர் வில்லியம்ஸ் என்னுடைய பட்டாலியனை முன்நடத்தி சென்றார். அன்று முதல் எனக்கு எப்போதும் அவர் தான் குரு. எந்த முடிவையும் அவருடன் ஆலோசிக்காமல் தீர்மானிக்க மாட்டேன்.

`நந்தாதேவியைக் கைப்பற்றியதும் உங்களுடன் மெட்ராஸுக்கு போய்விட வேண்டும்`, என ரெண்டு மாதங்களுக்கு முன்னால் டெஹ்ராடூன் பயிற்சி கூடத்தில் சொன்னேன்.

`முட்டுக்ருஷ்ணன், தவறு. மலைகளை என்னிக்கும் கைபற்ற முடியாது. பணிவோடு அவற்றை அணுக வேண்டும். மலை தேவி மனசு வைத்தால் தான் நம்மால் அவளது உச்சியை தரிசிக்க முடியும்.`, வாழ்க்கை முழுவதும் இந்தியாவில் கழித்த வில்லியம்ஸ் எப்போதும் எனக்கு சாதாரண இந்தியரை விட முழு இந்தியராகவே தெரிவார்.

`ஒரு மெட்ராஸியா உன்னோட ரத்ததுல வீரம் இல்லைன்னு நெனைச்சுக்காத. அது ஒண்ணும் பஞ்சாப்காரனின் சொத்து இல்லை. முன்னெல்லாம், பதான் வீரர்களெல்லாம் மெட்ராஸ் சிப்பாய் முன்னால் நிற்க பயப்படுவார்கள். நான் சொல்வது என் தாத்தா காலத்தில். திண்டுக்கல்லில் என் தாத்தா ஃபுல்லர்டன் பால்காட்டோடு சண்டையிட்டார். இருநூறு குதிரைகள், ஆயிரம் சிப்பாய்கள் தான் இருந்தனர். பாலக்காட்டு ராஜாவுக்கு பதான்கள் ஆயிரக்கணக்கில் தில்லியிருந்து வந்திருந்தனர். எட்டு நாட்கள் நடந்த போரில் துரத்திவிட்ட பதான்கள் மெட்ராஸ் பட்டாலியனில் சேருவதற்கு இருநூறு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் வருகிறார்கள். `

ரேடியோ ஆபரேட்டரின் வேலை சண்டை ஆரம்பித்ததும் முடிவடையும் ஒரு விஷயம் அல்ல. தொடக்கமும் நாங்கள் தான்; முடிவிலும் நாங்கள் வேண்டும். பெட்டாலியன் செல்வதற்கு முன்னரே டவர் நடுவதற்காக நாங்கள் போயாக வேண்டும். போரில் முதலில் சாவது ரேடியோ ஆபரேட்டர்கள் தான்.

கம்பெனி உத்தியோகம் என்பது தினமும் கல்யாண போஜனம் செய்வது மாதிரி. யாருக்கும் கிடைக்காத விஷயம். ஆபரேட்டராகச் சேர்ந்து லெப்டினண்டாக உயர்ந்தவர்கள் பலர் உண்டு. ஒரு பக்கம் தப்பித்துக்கொள் என மூளை ஆணையிட்டாலும், எனது தேர்ந்த நுண்ணுணர்வு காரணமாக கடினமான வேலை கூட எளிதில் வசமானது. மெட்ராஸ் பட்டாலியனின் பயிற்சி காலத்தில் இந்தியாவின் மண் அனைத்தும் எனக்கு அத்துப்படியானது. எதிரி குழாம் இருக்கும் பகுதிக்குள் முதலில் நுழையும் ரேடியோ ஆபரேட்டருக்குத் தேவையான நிதானமும், உள்ளுணர்வும் எனக்கு அதிகம் இருந்ததை மேஜர் வில்லியம்ஸ் சுட்டிக்காட்டினார்.

`நின்றும் குந்தியும் அடியடியாக நீ ஏரியாவில் நுழையும்போது உன்னுடைய முதல் சிக்னல் விலங்குகளும் பறவைகளும் தான். அவற்றின் பாஷையைப் படித்துவிட்டால் உனக்கு ஜெயம்`, என மேஜர் வில்லியம்ஸ் பயிற்சியில் சொன்னார்.

அது என்னை அவருடன் டெஹராடூன் வரை கொண்டுவிட்டது. நம் பார்வையைக் குருடாக்கக்கூடிய வகையில் சுற்றிலும் பனி மலைகள் நிறைந்த இடம். மேலும் கண்ணாடி அணியாமல் பனி மலையில் ஒரு நாள் முழுவதும் அலைந்தால் கண் பார்வை மங்கிவிடும். இந்த அவஸ்தை எனக்கு எதற்கு என அலுப்பு தட்டியது. இங்கிலாந்திலிருந்து கண்ணாடிகளை வரவழைத்திருந்தாலும், அதுவரை பகலில் மட்டுமே அதைப் பயன்படுத்தி வந்தனர். இங்கு வந்ததும் நான் வெளிச்சம் ஊடுருவும் மெல்லிய பச்சை துணி மறைத்த கண்ணாடியை அணிந்துகொண்டேன். என் ஊரில் உப்பளங்களில் வேலை பார்ப்பவர்கள் இப்படி போட்டுக்கொள்வர். டெஹ்ராடூன் பள்ளி முழுவதும் இந்த செய்தி உடனடியாகப் பரவியது. மேஜர் வில்லியம்ஸ் என்னைக் கூட்டி வந்த முடிவு சரியானது என்பது போல என்னைப் பார்த்து சிரித்தார். மெட்ராஸ் பட்டாலியனை மறந்துவிடு, பெங்கால் சாப்பர்ஸோடு டெஹ்ராடூனில் தங்கிவிடு என அந்த சிரிப்பு சொன்னது. இப்படித்தான் டெஹ்ராடூனில் ஆறு மாதங்களாக இருந்தேன்.

பனி ஊளை சத்தம் குறைந்தது போலத் தெரிந்தது. கேம்ப்பின் கடைசி வெளிச்சமும் அணைந்து விட்டது. எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. வெளியே லாந்திவிட்டு வரவும் இது பரங்கிமலை அல்லவே. இன்னும் ஒரு வாரம் தானே. அடுத்த வாரம் இந்த நேரம் ஸ்ரீமுஷ்ணத்தில் மனைவியின் அணைப்பில் கிடக்கலாம் எனும் நினைப்பே குதூகலப்படுத்தியது. வேலையில் இருந்தவரை எரிச்சலும் பயமும் இருந்தாலும், தேவையற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்வோமோ என பயம் வந்தது. இருந்தாலும் இது போல எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஏன், வடக்கு பக்கமே வரும் சாத்தியம் கூடக் கிடையாது.

கேம்ப்புக்குப் பின்புறம் சிறிது தொலைவு நடந்தால் நந்தாதேவியின் மேற்கு அழகை ரசிக்கலாம். கையில் டார்ச் லைட் எடுத்துக்கொண்டேன். நூறடி கூட நடந்திருக்க மாட்டேன். மிச்சமிருந்த பனி ஊளையையும் மீறி செடிகள் உரசும் ஓசை கேட்டது. உடனடியாக எனது அனைத்து புலன்களும் டீம் சல்லூட் என விறைத்தன. புலன்களை முழுவதுமாய்த் திறந்திருந்தால் மலையின் வேறொரு பரிணாமத்தை நம்மால் ரசிக்க முடியும் என ஜென்ரல் வில்லியம்ஸ் கூறியிருக்கிறார். காளைச் சாணம், மான் கொழுப்பின் வாசம், முயல் ரத்த வாடையுடன் ஓநாய் பல்லிலிருந்து வழியும் கோழையின் அழுகிய பழ வாடை எனக் காற்றில் மிச்சம் இருக்கும். உடனடியாக எனது பயிற்சியில் சொல்லிக்கொடுத்ததைப் போல பனியில் கால் தடம் தேடினேன். முக்கோண வடிவில் அழுத்தமான குளம்புப் புள்ளிகள் – மானின் தடமாக இருக்கலாம். கைவிரல்கள் போல் சற்றே விரிந்து அழுத்தமாக இருந்தால் காளையின் தடம்.

கால்சராயிலிருந்து இஞ்ச் டேப்பை எடுத்து கால்தடத்தை அளவெடுத்தேன். அதுவரை என்னிடமிருந்து மூச்சு விடும் சத்தம் கூட வெளியே வரவில்லை. ரெண்டரை இஞ்சு ஆழம். உடல் எடைக்கு ஏற்ப ஆழம் அதிகமாக இருக்கும். அருகில் இருந்த புதரில் காலடித்தடங்கள் மறைந்தன. நிதானமானத் தடங்கள். பனி ஊளையில் மான்களுக்கு அவசரம் இருக்கும். அவற்றின் தடங்கள் இத்தனை தெளிவாக இருக்காது. முயல்கள் இத்தனை ஆழமான தடங்களைப் போடாது. ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு காளைகள் வராது. அதுவும் பனிக்காலத்தில். வேக வேகமாகப் பயிற்சியின் மனக்கணக்குகளை சரசரவென அலசிப்பார்த்தேன். ஒவ்வொன்றாய் கழியக் கழிய மனித ரத்த வாடையை தேடும் மிருகங்கள் எஞ்சின. கேம்ப்புக்கு அருகே மேய்வதற்கு அவற்றுக்கு மட்டுமே தேவை இருக்கிறது. தைரியமும்.

உடனடியாக சுக்வீந்தரிடம் விஷயத்தைச் சொல்ல வேண்டும். நாளை அதிகாலை உயரே ரெண்டாவது கேம்ப்புக்குச் செல்வதற்கு முன் இந்த கேம்ப்பை காலி செய்தாக வேண்டும் என அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை மனம் தொகுக்கத் தொடங்கியது. அப்போது திடீரெனப் புதர் உரசல்கள் சத்தத்தைக் கேட்டேன். சத்தம் வந்த திசையில் என் டார்ச் அடித்தது.

அங்கு ஒரு ஓநாய் என்னையே வெறித்துப் பார்த்திருந்தது. சேற்றில் மூழ்கி எழுந்தது போல உடல் முழுவதும் சடை சடையாக அடர்ந்த கரிய முடி. முழுவதுமாக மூடாத வாய். பற்களிலிருந்து கோழை வழிந்தது. தலையில் அடிபட்டது போல உறைந்த ரத்தச் சிகப்புக் கட்டிகள். எனது கால்கள் பின்வாங்கத் தொடங்கின. உடனடியாக திரும்பி ஓடிவிடக்கூடாது. உயிர் தப்பாது. ஓநாய்க்கு ஆபத்தில்லை எனும்படியாக எனது ஒவ்வொரு உடலசைவும் இருந்தாக வேண்டும். முன்னைக்கு இப்போது எனது கால்கள் பனியில் அதிகமாகப் புதைந்தன. புதிய பனி. மனித காலடித்தடம் பதியாதவை. புது பனி தீயில் வாட்டிய பறவை உடல் போன்றது. தேனில் விரலை நுழைப்பதுபோல தடை இருப்பது போலவும் இல்லாதது போலவும் மெல்ல எனது கால் பனிக்குள் நுழைந்தது. என்னிடமிருந்து எந்தவிதமான திடீர் மாற்றமும் என் கடைசி இரவாக இதை மாற்றிவிடும். கேம்ப்புக்கு இன்னும் நூறடி கூட இருக்காது. மைல் கணக்கில் நீண்டிருப்பது போலத் தோன்றியது.

என்னைப் போலவே தப்பிக்கும் வழியை ஓநாயும் யோசித்திருக்குமா? இவனை இங்கேயே சாப்பிடலாமா, கூட்டாளிகளைக் கூப்பிட்டு பரோபகார போஜனம் செய்யலாமா என திட்டம் போட்டிருக்குமோ? அப்போதுதான் எனக்குப் பின்னால் சிறு உறுமல் சத்தத்தைக் கேட்டேன். அநேகமாக எனக்கு மட்டுமே கேட்கும்படியாக உண்டாக்கிய சத்தமாகக் கூட இருக்கலாம். தொண்டை செருமுவது போல `நானும் இருக்கிறேன்` எனும் ஒலி. அறிவிப்பு. கனத்த மூச்சொலி கேட்டது. கூடவே நிணத்தின் வாடை. சந்தேகமில்லை. தூரத்தில் கிடந்த வெறி பிடித்த ஓநாய் கூட்டங்களுக்கு நானே வந்து இரையாக வாய்த்திருக்கிறேன். எதையோ முகரும் ஒலி. என்னை நெருங்கி வந்துவிட்டதை முதுகு உணர்ந்துவிட்டது. இதயத்துடிக்கு கோயில் மணி போல அடித்ததில் நொடிகள் மிக மிக மெதுவாகக் கடந்தன.

எனக்கு மேல் மலை முகட்டில் ஏதோ ஒரு விரிசல் ஒலி கேட்டது. ரெண்டு பெரிய ரப்பர் துண்டுகள் உராய்வது போல, சிரமமான சத்தம். மலச்சிக்கல் நோய் கண்ட எருதுகள் முனகும் ஒலி. ஆனால் இது உயிரிடத்திலிருந்து வரும் சத்தம் அல்ல. என்னைப் போலவே ஓநாய்களும் உணர்ந்திருக்க வேண்டும். சட்டென அங்கு ஒரு அசைவு ஏற்பட்டது. ஒத்தையடிப்பாதையில் யார் முதல் அடியை எடுத்துவைப்பதென்ற குழப்பம் போல. பெரும் உருமலுடன் பெரிய பனிப்பாறை பிளந்து மேலிருந்து எங்களுக்கு மிக அருகாமையில் வந்து விழுந்தது. விருட்டென பலத்த சலசலப்பு. ஓநாய்களின் ஓட்டம். எத்தனை என எண்ணிப்பார்க்கும் நிலையில் நான் இல்லை. நூறடியைக் கடப்பதற்கு இத்தனை நேரம் ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை. ஆண்டாண்டுகாலமாக ஓடிக்கொண்டிருந்தது போல். நூறடியை ஓடிக்கடக்காமல், பதற்றத்தில் விழுந்து புரண்டு மடக்கு நாற்காலியைத் தள்ளிவிட்டபடி கேம்ப்பின் வாசலடியில் விழுந்தேன்.

ஊமையாகிவிட்டேனோ எனும் சந்தேகம் வந்தது. மண்டையில் டிராம் ஓடுவது போலச் சத்தம். நெஞ்சுக்கூடு விம்மித் தணிந்ததில் தூக்கித் தூக்கிப் போட்டது..

`ஐயோ ஓநாய்..ஓநாய்..சுக்வீந்தர்..சுக்வீந்தர்`, என வலிப்பு வந்தவன் போலக் காலை உதறியபடி நான் கத்துவது எனக்குக் கேட்டது. பிறகு ஒன்றுமில்லை.


`உன் பொண்டாட்டியோட தாலி ரொம்ப ஸ்ட்ராங்குப்பா. தப்பிச்சிட்டியே`, மேஜர் சித்தேந்திரநாத் சிரித்தபடி கூறினார்.

`இந்தா சூடா டீ குடி`, என சுக்வீந்தர் கோப்பையை கையில் திணித்தான். நான் எழுந்து உட்கார்ந்தேன். கேம்ப்புக்கு உள்ளே சத்தம் கேட்டதும், ஷெர்பாக்கள் வாசலிலிருந்து எட்டிப் பார்த்தனர். எல்லார் முகத்திலும் கிண்டல் கலந்த சிரிப்பு தெரிந்தது.

`ஊருக்குப் போய் கோவில் கோவிலா விழுந்துகிட..நீ ஓடினது கூடப் பெருசில்லை, எதிர்பக்கமா ஓடாம கேம்ப்பை பார்த்து ஓடினயே..அந்த புத்தி கொடுத்ததுக்கு நீ வாழ்க்கை முழுக்க கடவுளுக்கு செருப்பா கெடக்கணும்`, சுக்வீந்தர் கூரையைப் பார்த்து கும்பிட்டான்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. ஊதி ஊதி டீயைக் குடித்தேன். இந்த அசைன்மெண்டுக்கு வந்திருக்கக்கூடாதோ? பனி மலையேறப் பயிற்சியற்ற ஒரு ரேடியோ ஆப்பரேட்டருக்கு இங்கு என்ன வேலை? வாசல் வழியாகத் தெரிந்த வானம் மேகங்கள் இல்லாமல் இருந்தது. மதிய வெயில் உச்சத்துக்கு வந்திருந்தான். இரவு நடந்ததெல்லாம் மிகத் துல்லியமாக நினைவுக்கு வந்தன. சேற்றில் ஊறியிருந்த ஓநாயின் உடலும், கண்களும் மீண்டும் நினைவுக்கு வந்தன. உடம்பு ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. மரக்கிளையில் உரசியபடி நின்றிருந்த ஓநாயின் தலையில் உறைந்த ரத்தம். எத்தனை முறை யோசித்துப் பார்த்தும் என் கண்களை சந்தித்த ஓநாய்க்கு உயிர் இல்லாதது போலத் தோன்றியது. அப்படி ஒரு அசைவற்ற கண்கள். வெறி இருந்தது. உயிரோட்டம் இருந்ததா எனத் தெரியவில்லை. எனக்குப் பின்னால் வந்ததும் ஓநாய் தானோ? இருக்கலாம். நிணத்தின் பச்சை வாடை கிட்டத்தில் உணர்ந்தேனே.

`எப்போதும் ரைஃபிலோடு போ. எங்களுக்கு சிக்னல் செய்யவாவது தேவைப்படும். இன்று முழுவதும் இங்கேயே இரு. ரெண்டாம் கேம்ப் வரை பாதை போட நானும் சுக்வீந்தரும் போகிறோம். ரெண்டு ஷெர்பாக்களை கிடாக்களோடு அனுப்பிவிட்டோம். மேலே இன்னும் நிலைமை கொடுமை. இரவு ரெண்டு பெரிய அவலாஞ்சி.. வில்லியம்ஸ் தாத்தாவின் கேம்ப் மூடிவிட்டது. வெளியே எடுத்ததிலிருந்து மூச்சுத்திணறல்..`, என சித்தேந்திரநாத் எனக்கு ரைஃபிலைக் கொடுத்தார்.

கிழவன், தாத்தா என ஜென்ரல் வில்லியம்ஸ் பற்றி சொல்வது எனக்குப் பிடிக்காது என அவருக்குத் தெரியும். பல முறை என் முகம் மாறியதை கவனித்திருக்கிறார். `இந்தியன் மலையேறும் பயிற்சி பள்ளிக்கு` ஜென்ரல் வில்லியம்ஸ் மிகப் பெரிய சொத்து. சிப்பாய்க்கு முதலில் துப்பாக்கி பிடிக்கத் தெரிய வேண்டாம். சந்தர்ப்பத்தையும், தன்னையும், மற்றவனையும் உணரக்கூடிய தன்மை வேண்டும் என்பார். போர் சமயத்தில் வளர்ந்ததால் சண்டை மீது உனக்கு வெறுப்பு வந்திருக்கலாம் – சிப்பாய் என்றாலே சண்டை என்று அர்த்தமில்லை. ஒரு கட்டத்தில் நாட்டுக்காக போரிடுவதாக நினைத்துக்கொள்வாய். ஆனால் உண்மையில் உன் டீமுக்காகவும் நண்பர்களுக்காக மட்டுமே வேலை செய்வாய். தனிப்பட்ட உறவையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு டீமுக்கும் நீ செய்யும் வேலைக்கும் உண்மையாக இருந்தால் போதும் என்பார். `நம் டீமின் மிஷன் தான் நமக்கு முக்கியம். அதுக்குத் தடையா வர்ற எதையும் நீ உணர்ச்சிகரமா அணுகக்கூடாது`. அவர் சொன்னதை நினைத்துப் பார்த்ததும் மனசு சற்று லேசானது.

கூடாரத்தை விட்டு வெளியே வந்ததும் உலகமே வெளிச்சத்தால் நிறைந்திருந்தது. மடக்கு நாற்காலி மற்றும் ஷெர்பாக்களின் சாமான்கள் மீது இரவு முழுவதும் பனித்திவலைகள் விழுந்ததுக்கான அடையாளம் தெரிந்தன. வேண்டுமென்றே நான் கூடாரத்துக்குப் பின்னால் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்த்தேன். குளிரில் என் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. கீழே பாதாளத்தில் ஏதோ ஒரு ஊரில் ஜன நடமாட்டம் எறும்பு வரிசைப் போலத் தெரிந்தது. பருந்து போல தலைக்கு மேலே ஆயிரம் மீட்டரில் இப்படி ஒரு அபாயம் இருப்பதை உணர்ந்திருப்பார்களா? இருக்கலாம். மிருகங்களைப் போல அவர்களுக்கு இரு வீடுகள். கடும் பனி காலத்தில் பள்ளத்தாக்கின் வேறொரு ஊருக்கு போய்விடுவார்கள். பாகீரதி தாண்டிய போது அப்படி ஒரு ஊரைக் கடந்தேன். அங்கு யாருமற்ற வீடுகள், பதுங்கி ஓடும் முயல்கள், செழிப்பிழந்த நாய்களைப் பார்த்தேன்.

சித்தேந்திரரும், சுக்வீந்தரும் மலை ஏறுவதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தனர். ரெண்டாம் கேம்ப்புக்கு மேலும் தொள்ளாயிரம் மீட்டர் உயரப்போகவேண்டும். செங்குத்தான மேற்குப் பகுதி வழியாக ஏறமுடியாது. பிரெஞ்சுக் குழுவினர் தென்கிழக்குப் பகுதியிலிருந்த `நந்தாதேவியின் முதுகு` வழியாக ஏறினர். எனக்கு அவர்களது வரைபடம் மூளையில் அங்குலம் அங்குலமாகப் பதிந்திருந்தது. இத்தனைக்கும் மூன்றாம் கேம்ப்புக்கு மேல் ரேடியோ ஆபரேட்டர்கள் போக வேண்டியதில்லை. அங்கிருந்து ஏதேனும் அவசரத் தகவல்களை பேஸ் கேம்ப்புக்கு அனுப்பினால் போதும். உச்சி வரைக்கும் போகவேண்டுமா? மூச்சு முட்டும், மூத்திரம், வியர்வை கூட உறைந்துவிடும். ஜீரணக்கோளாறு ஏற்பட்டால் ஆசனவாயில் உறையும் ரத்தக்கட்டியில் டர்பெண்டால் தடவி எரிச்சலைக் குறைக்கவேண்டும். கண்றாவி.

மூங்கில் அளவிலான கயிறுகள் ரெண்டாவது கேம்ப் வரை எடுத்துச் செல்லத் தேவையான முடிச்சுகள், சுத்தியல், பனி உடைக்கக் கோடரி எனப் பெரிய மூட்டையோடு தூரத்தில் அவர்கள் போய்க்கொண்டிருந்தனர். எனது பார்வை பனியில் அவர்களது காலடித்தடத்தின் மீது எதேச்சையாகப் பதிந்தது. பனியில் வழுக்காமல் இருப்பதற்கு பற்சக்கரம் இணைத்த காலணிகளின் தடம். ஓநாயின் தலையைப் பிடித்து அதன் கூரிய பற்களை வலுக்கட்டாயமாகப் பனியில் இழுத்துச் சென்ற தடம் போலிருந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

எப்போதும் ஜென்ரல் வில்லியம்ஸ் என்னைப் பற்றி சொல்வது ஒன்றுண்டு- `போருக்குப் பிறந்ததால் உனக்கு புதிய சந்தர்ப்பங்கள் மிக சுலபமாக படிந்துவிடுகின்றன. இருளனின் கவனக்குவிப்பும், அடுத்த கணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் உன்னுடைய பலம்.`. இது எந்தளவு உண்மை என எனக்குத் தெரியாது. தெரியவும் தேவையில்லை. கிளம்புகிறேன் என சமாதானம் செய்துகொண்டாலும் கடைசி நிமிடத்தில் என்னை நிறுத்தக்கூடியவர் ஜென்ரல் வில்லியம்ஸ் ஒருவரே. அடுத்த வியாழனுக்குள் ரெண்டாவது கேம்ப்பில் இருக்கும் அவர் நான்காம் கேம்ப்புக்கு உயரே போய்விட்டால் போதும். அடுத்த வியாழன், வியாழன் என மனம் அடித்துக்கொண்டது. உயரப் போகாமல் நான் உடனே கிளம்பிடவேண்டும் என வேண்டிக்கொண்டேன். அவரது கண்களை சந்தித்துவிட்டால் விமோசனம் கிடையாது.

தனியாக கேம்ப்புக்குச் செல்ல பிரியப்படவில்லை. சிறிது நேரம் ஷெர்பாக்களோடு இருந்தால் தேவலை எனத் தோன்றியது. சூடான டீயில் தேனை நிரப்பி (மிருதுவான மலத்துக்கு உத்தரவாதம்) கேம்ப்பை விட்டு வெளியே வந்தேன். ஷெர்பாக்களுக்கு மாலை உணவு தயாராகிக்கொண்டிருந்தது. மூன்று முயல்களைத் தீயில் வாட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் சென்று உட்கார்ந்ததும் சலசலவென்றிருந்த பேச்சுச் சத்தம் குறைந்தது. ஏதோ கேட்க வந்ததைப் போல் என் முகத்தைப் பார்த்தனர். முயல்களின் உடம்பிலிருந்து கொழுப்பு வாசம் எழுந்தது. டீயை ஒருமுறை கொப்பளித்துத் துப்பினேன்.

இந்தியன் மலையேறும் பயிற்சியில் ஷெர்பாக்களை நடத்தும் முறை பற்றி ஒரு கையேடு உண்டு. நான் அதைப் பார்த்திருக்கிறேன். நேபாள மொழியைப் போலிருந்தாலும் ஷெர்பாக்களின் மொழி மலைக்கு மலை வித்தியாசப்படும். அவர்களிடம் சுலபமாக நெருங்கிவிடமுடியாது. முழுவதுமாக நம்பவும் கூடாது. அவர்களுக்குப் புரிந்த ஒரே மொழி – பணம். இப்படித்தான் எங்கள் பட்டாலியன் பயிற்சி வகுப்பிலும் சொன்னார்கள். எங்கோ திண்டுக்கல், பரங்கிமலை இருக்கும் எனக்கு இதெல்லாம் தேவையில்லை என நான் பயிற்சியில் இதைப் பற்றியெல்லாம் அதிகம் கவனிக்கவில்லை. அவர்களுடன் தனியே இந்த மலையில் இருக்கப்போகிறேன் எனத் தெரிந்திருந்தால் கொஞ்சம் கவனமாக இருந்திருப்பேன்.

ஷெர்பாக்களின் தலைமை டான்ஹோவிடம் பேச்சு கொடுக்க முயன்றேன். அவனருகே உட்கார்ந்ததும் ஒரு தட்டில் வெண்ணெய் தடவிய சுட்ட சப்பாத்தி, நன்கு வாட்டிய இறைச்சியைக் குச்சியில் குத்திக் கொடுத்தார். ஆயிரம் மீட்டர் உயரத்தில் இதைவிட சொகுசு எதிர்பார்க்க முடியாது. மூட்டை நிறைய இருந்த உருளைக்கிழங்கு தோல்களை ஒருத்தி வேகமாகச் சீவிக்கொண்டிருந்தாள். ஆயிரம் வருடப்பழைய மரத்தின் பட்டை போல கடும் குளிரில் சிதிலமடைந்த முகம். ஒரு பெருங் குழுவினர் ஒன்றாக இணைந்து நாங்கள் மலை உச்சியை அடைய வேண்டும் என வேலை செய்வது ஆச்சர்யமாக இருந்தது. எனது அரைகுறை இந்தி அவனுக்கு ஓரளவு புரிந்தது. அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என அருகிலிருந்த பெண்ணைக் காட்டிக் கேட்டேன். அவன் முகம் பிளந்த தர்பூசிணி மாதிரி பளீரென இளிப்பாக மாறியது. உருளைக்கிழங்கிலிருந்து வெளிப்பட்ட நீராவிகள் வழியே தெரிந்த மலை ஆட்டம் போட்டது. எனக்குப் பேசுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு பெரிய குடும்பத்தில் இருக்கும் பாதுகாப்பு கிடைத்தது.

குளிரடிக்காத நாட்களில் சுட்டெறிக்கும் வெயில் அடிக்கும் என்றாலும் இன்று குளிரோடு வெயிலும் சேர்ந்து புழுங்கியது. நாங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் உயர்ந்த மலைகள். `மனிதர்கள் மலையேறுவது ஒரு புல்லுக்குக் கூடத் தெரியக்கூடாது`, என ஜென்ரல் சொன்னது நினைவுக்கு வந்தது. தடம் விட்டுச்செல்லாத பறவையைப் போல காற்றில் கலந்துவிடவேண்டும் எங்கள் இருப்பு. நேற்றிரவு ஓநாய்களிடம் மாட்டியிருந்தால் என்னுடைய தடம் ஏதாவது எஞ்சியிருக்குமா?து உடல் கொஞ்சம் சிலிர்த்தது. ஓநாய்கள் எதாவது ஒரு பனிக்குகைக்குள் என் உடலை இழுத்துச் சென்றிருக்கும். எப்போதும் பத்துக்கும் மேற்பட்டவை வேட்டையாடச் செல்லும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேற்று பத்து ஓநாய்களா அங்கு இருந்தன? நான் ஒரு அடி முன்வைத்திருந்தால் மேலும் சில ஜோடிகள் தங்கள் இருப்பைத் தெரியப்படுத்தியிருக்கலாம். மின்னிய ஓநாயின் கரிய கண்கள் மீண்டும் நினைவுக்கு வந்து சட்டென என் தப்பை உணர்த்தியது. நான் இதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கக்கூடாது. என் பலகீனத்தை நானே நம்பும்படியாக ஆகிவிடும். எதேச்சையாக எனது கோட்டுப் பாக்கட்டுக்குள் இருந்த துப்பாக்கியைத் தொட்டுக்கொண்டேன்.

ஜென்ரலை நேரில் சந்தித்தால் என்ன சொல்ல வேண்டும் என ஒரு முறை நினைவுபடுத்திக்கொண்டேன். என் முக ஓட்டத்தை அவர் உடனடியாகப் படித்துவிடக்கூடும். விருட்டெனக் கிளம்பி கேம்ப்புக்குச் சென்று என் பையிலிருந்து கையடக்கக் கண்ணாடியில் முகம் பார்த்தேன். பனிக்காற்றினால் முகத்தில் தடிப்புகள் ஏற்பட்டிருந்தன. பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொண்டபடி கண்ணாடியிடம் பேசினேன். என் முக பாவனைகள் எனக்கே பார்க்கச் சகிக்கவில்லை. நான் ஏன் பயப்பட வேண்டும்? அவருக்குக் கீழ் வேலை செய்பவன் என்பதால் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்த முடிவுகளுக்கும் அவரிடம் ஆலோசனை கேட்க வேண்டுமா? என இரு முறை சத்தமாகச் சொல்லிக்கொண்டேன். தெம்பு வந்தது.

களிம்பை பையில் வைக்கப்போகும்போது டெஹ்ராடூன் ஆர்மி பயிற்சி கேம்ப்பில் கொடுத்த ஆர்டுனன்ஸ் சர்வே வரைபடத்தைப் பார்த்தேன். Ordnance survey – OL 73 – RishiGanga. கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்குலம் அங்குலமாகப் பயணம் செய்து ரிஷி கங்கா பகுதியில் விரிந்துகிடந்த நந்தாதேவி, அன்னபூர்ணா, சுனந்தா தேவி, நங்காபர்பத் மலைகளை கச்சிதமான அளவுகளில் வரைபடங்களுக்குள் அடக்கியிருந்தார்கள். மெட்ராஸ் பட்டாலியனில் ஜூனியர் ஆபிசர்களுக்குப் ஆர்டினன்ஸ் வரைபடப் பயிற்சி கொடுப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. நானிருக்கும் பகுதியைத் தேடிப்பார்த்தேன் SE3242 எனக்குறிக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு காணாமல் போய்விட்டு ஏதேனும் ஒரு மலைப்பொந்தில் கண் விழித்திருந்தால் முதல் கேம்ப்புக்கு எப்படி வந்திருப்பேன் என நினைத்தே பார்க்கமுடியவில்லை. அன்றில்லையேனும் அதற்கு அடுத்த நாள் புலிகளுக்கும், ஓநாய்களுக்கும் இரையாகியிருப்பேன்.

ரேடியோ அழைப்பு சன்னமாக ஒலிக்கத்தொடங்கவே வரைபடத்தைக் கோட்டுப்பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன். உஜைன் தாஸ்குப்தாவின் சன்னமானக் குரல் கேட்டது. மூன்றாவது கேம்ப்பில் இருக்கும் பெங்கால் சாப்பர்ஸின் இன்சார்ஜ். ஒலிவாங்கியைக் காதில் பொருத்தி சத்தத்தை அதிகமாக்கினேன்.

`ஜெனரல் வில்லியம்ஸுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாக இருக்கிறது. அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்`, உஜைனின் குரல் மிகவும் வேகமாக ஒலித்தது.

மடமடவென எனது மூளை மாற்று யோசனைகளை செயலாக்கத் தொடங்கியது. ரிஸ்க் சர்வைலன்ஸ் பற்றிய பல்முனை திட்ட வரையறை பயிற்சி டெஹ்ராரூனில் எடுத்திருந்தேன். முதலில் பேஸ் கேம்ப்பிலிருக்கும் ஷர்மாவுக்கு விஷயத்தைச் சொன்னேன். சில ஷெர்பாக்கள் துணையோடு அருகிலிருந்த மலையடிவார கிராமத்துக்கு விரைந்தார் ஷர்மா. உடனடியாகச் செய்ய வேண்டியது, காவல் நிலையத்துக்குச் செய்தி சொல்லி மருத்துவரை பேஸ் கேம்ப்புக்கு வரவழைப்பது. அதற்குள் ரெண்டாம் கேம்ப்பிலிருந்து ஜென்ரல் வில்லியம்ஸை பேஸ் காம்ப்புக்கு அழைத்து வரவேண்டும். ஆயிரம் மீட்டர் நான் இறங்க, டாக்டர் ஐநூறு மீட்டர் ஏற மொத்ததில் ஆயிரத்தி ஐநூறு மீட்டரில் முடியக்கூடியக் காரியம். ஆனால் மலையில் எதுவும் சுலபமல்ல. குறிப்பாகப் பனிக்காலத்தில்.

டான்ஹோவுடன் இருந்த ஷெர்பாக்கள் இருவரை பேஸ் கேம்ப்புக்கு விரையச் சொன்னேன். என்னிடம் இருக்கும் பிராணவாயு சிலிண்டர்கள் நான்கு பேருக்குத் தாங்காது. அடுத்து ரெண்டு நாட்கள் கடும் பனிப்பொழிவு இருந்தால் எதையும் எடுத்துவர முடியாது. டான்ஹோ துரிதமாகக் காரியத்தில் இறங்கினான். அரை நாளுக்குள் சிலிண்டர்களும் சாப்பாட்டுப் பொருட்களும் வந்துவிடும். அதற்குள் மூன்றாம் கேம்ப்பிலிருந்து ஜென்ரலைக் கூட்டி வரவேண்டும்.

அடுத்த திட்டத்துக்காக ரேடியோ கருவிக்கு முன் காத்திருந்தபோது, இன்னும் அரைநாளில் ஜென்ரலை சந்திக்கப் போகிறோம் என்பது எனக்கு உறைத்தது. பட்டென நெற்றியில் அடித்துக்கொண்டேன். இந்த கேம்ப் என் பொறுப்பில் இருப்பதால் நானே முன்னின்று இதை நடத்தவேண்டும். ஜென்ரலை பேஸ் காம்ப்புக்குச் சிகிச்சைக்குக் கூட்டிச் செல்லும்வரை செயல்திட்டங்கள் போட்டாகவேண்டும். என் நினைவிலிருந்து எல்லாமே மறைந்தது போலிருந்தது. திடுமென ரேடியோ அழைப்பு வந்தாலும் எப்படி இயக்குவது என்பது மறந்துவிட்டது போல ஸ்தம்பித்திருந்தேன். மேடிட்ட என் நெற்றியைத் தேய்த்தபடி, கூடாரத்தின் கித்தானைப் பிடித்து நின்றபடி யோசித்தேன். பல மலைகளையும் தாண்டி வந்த பனி ஊளை கூடாரத்தை ஊதிப்பெருசாக்கியது. மடித்து செருகிவைத்திருந்த துணிகள் காற்றில் படபடத்தன. நல்லவேளையாக, பனிப்பாளைகளின் இடுக்குகளில் அறைந்திருந்த ஆணிகளில் தடிமனான கயிறுகள் இறுகிச்சுற்றப்பட்டிருந்தன. பத்தடிக்கு ஒரு ஆணி வீதம் இரும்புக்காம்பு கயிறை இறுகப்பிடித்திருந்தது. இருக்கும் வேலையில் இதுவும் சேர்ந்துகொண்டால் என்ன ஆவது.

மூன்றாவது கேம்ப்பிலிருந்து சுக்வீந்தரும் சுரேந்திரநாத்தும் நந்து ஜயாலுடன் நான்காம் காம்ப்புக்குக் கிளம்பியிருந்தார்கள். மூன்றாம் காம்ப்பில் ஓரிரு ஷெர்பாக்களும் உஜைனும் மட்டும் இருந்ததால் மூன்று ஷெர்பாக்கள் துணையோடு நான் மூன்றாம் கேம்ப்புக்குப் பாதி வழி வரை சென்று ஜென்ரலை அழைத்து வரவேண்டும் என முடிவானதும் நான் கிளம்பினேன்.

எழுநூறு மீட்டரில் மேடானப் பகுதி வருமென்றும் அங்கு ஜெனரலைக் கொண்டுவருவதாகவும் உஜைன் சொல்லியிருந்தார். நிதானமாக நாங்கள் ஏறத்தொடங்கினோம். மதிய வெயில் மிக உக்கிரமாக எங்களை பதம் பார்த்தது. இரவெல்லாம் பெய்த பனி இறுகாமல் உதிரி உதிரியாக இருந்தது. மலையில் இருக்கும் பனிக்கும் நாம் கற்பனை செய்துவைத்திருப்பதுக்கும் எத்தனை வித்தியாசம்! பனி என்றால் உறைந்த நீர் என்பது மிக எளிமையான விளக்கம். பனி என்றால் சந்தர்ப்பம் என என்னைப் போல் பனி மலைகளில் அதிகம் பழக்கமில்லாதவர்களுக்குக் கூடத் தெரியும். உருகாமல் முற்றிலும் இறுகிய பனி க்ளேசியர்களில் மட்டுமே சாத்தியம். நான் ஏறிய ஒவ்வொரு பனியும் பெண்களைப் போல ஒவ்வொரு வகையானது. நன்னீரின் மேல் இருக்கும் சிறு பனிப்பாளை மீது கால் வைத்திருக்கிறோம் என்பதை சக்கரக்கால்களை வைக்கும்வரை கணிக்க முடியாது. பல சமயம் வெயிலின் உக்கிரம் ஏறியவுடன் உடும்பென கெட்டிப்போயிருக்கும் பனி பாளங்களாக உருண்டோடிவிடும்.

என்னோடு மூன்று ஷெர்பாக்களை அழைத்துக்கொண்டேன். காலை உதைத்து படிக்கட்டுப் போல சிறு பள்ளத்தை உருவாக்கினேன். இறுக்கமாக கயிறைப் பற்றியபடி படிக்கட்டில் கால்வைத்து ஏறினேன். அடுத்த படிக்கட்டைப் போடும்முன் பனிச்சுத்தியலைத் தட்டிப்பார்த்து சோதித்தபடி ஒவ்வொரு அடியாக மெதுவாக முன்னேறினேன். எதிர்பாராத இந்நிகழ்வால் முணுமுணுத்தபடி ஷெர்பாக்கள் என்னைத் தொடர்ந்தார்கள். டான்ஹோ பேஸ் காம்ப்புக்குப் போயிருந்ததால் இவர்களை மிரட்டி வேலை வாங்குவதற்கு யாருமில்லை. வேண்டா வெறுப்போடு என்னுடன் வந்துகொண்டிருந்தனர். அனுபவமில்லாத எங்கள் குழு பத்தடி ஏறுவதற்குள் சூரியன் கொஞ்சம் நகர்ந்திருந்தான்.

அடுத்த மூன்று மணிநேரத்தில் உஜ்ஜைன் சொல்லியிருந்த சமதளத்துக்கு வந்துசேர்ந்தோம். மலைக்குப் பின்னாலிருந்த இருட்டு மெல்ல எங்களைச் சூழ்ந்துகொண்டது. இருட்டும் சமயத்தில் எந்த கேம்ப்பிலும் இல்லாமல் ஏதோ துருத்தி நிற்கும் பனிப்பாறை மீது நின்றுகொண்டிருக்கிறோமே என எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. தூரத்தில் கயிறைப் பிடித்தபடி நால்வர் குழு மெல்ல இறங்கிக்கொண்டிருந்தனர்.

உஜ்ஜைனும் மற்றொரு ஷெர்பாவும் ஜென்ரலை துணிப்பலகையில் கொண்டுவந்தனர். அவரைக் கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது பார்த்திருந்தேன். இளைத்தது போலிருந்தார். முகத்தில் அதீத வலி தெரிந்தது. என்னைப் பார்த்து புன்னகைப்பது போலிருந்தது. வந்தவேலை முடிந்து அவர்கள் எங்களைவிட அதிக தூரம் சென்று மூன்றாம் கேம்ப்பை அடையவேண்டும். மேலும் தாமதிக்காது ஜென்ரலின் துணிப்பகலையை நானும் ஷெர்பாவும் சுமந்துகொண்டு நால்வர் குழுவுக்கு விடை கொடுத்தோம்.

லேசாகப் பனித்தூறல் தொடங்கியது. இதை விட மோசமான சந்தர்ப்பம் இருக்கவே முடியாது. கடுமையாகப் பனி பெய்யத் தொடங்கிவிட்டால் ஜென்ரலுடன் சேர்ந்து எல்லாரும் இங்கேயே சமாதி அடையவேண்டியதுதான். நான் மூக்கைப் பொத்திக்கொண்டு எச்சி துப்பிவிட்டு குந்தி உட்கார்ந்தேன். உலகில் உள்ள பனியெல்லாம் என் மேல் விழுவது போலிருந்தது. துருத்திக்கொண்டிருந்த இப்பகுதி நந்தாதேவியின் காது போல ஒரு பக்கம் வளைந்து மறுபக்கம் குறுகிக் கிடந்தது. நாங்கள் நின்றிருந்த இடத்தில் கூட மிருக நடமாட்டம் இருந்திருக்க வேண்டும். முயல்களின் கரும் விட்டைகள் காய்ந்து இறுகிக் கிடந்தன. நந்தாதேவி பற்றி எரிவதுபோல சிகரத்திலிருந்து வெண்மையான புகைப்படலம் எழும்பிக்கொண்டிருந்தது. நான் நினைத்தது சரிதான். இந்த பனிப்பொழி நிற்கப்போவதில்லை. இன்னும் சில மணிநேரங்களில் கடுமையான பனிப்பொழிவு வரக்கூடும்.

ஏறி வந்தவழியில் பனிப்படலம் அதிகரித்ததால் மாற்றுப்பாதையில் இறங்கி வரத் தீர்மானித்தேன். புது பாதை போடுவது மேஜர் சுக்வீந்தர் குழுவினரின் வேலை. இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களை எதிர்பார்க்க முடியாது. தவிரவும் ஒவ்வொரு மணிநேரம் தாமதிப்பதும் ஜென்ரல் உயிருக்கு ஆபத்து. எட்டு மணி நேரங்களுக்கு மேல் நடக்காததால் அவரது கால்கள் உறையத் தொடங்கிவிட்டன. முதல் கேம்ப்புக்குத் திரும்பிய பின்னர் தான் சுடுநீரில் ஒத்தடம் கொடுக்க முடியும். அதாவது கேம்ப்புக்குத் திரும்ப முடிந்தால்.

ஆர்ட்னன்ஸ் வரைபடத்தை பிரித்துப் பார்த்தேன். ரெண்டாம் கேம்ப்பிலிருந்து கிழக்கில் முப்பது டிகிரி திரும்பி எழுநூறு மீட்டர் கீழிறங்கினால் முதல் கேம்ப் வந்துவிடும் எனக் குறிக்கப்பட்டிருந்தது. சுக்வீந்தர் சில வரிகள் கிறுக்கியிருந்தார். பனிக்காற்றில் வரைபடம் படபடத்தது. எந்நேரமும் கடும்பனிப்பொழிவு தொடங்கலாம். முடிவெடுக்க தாமதிக்கமுடியாது. முயலின் காய்ந்தவிட்டைகளைப் பார்த்திருந்ததால் தைரியமாக மேற்குப்பாதை வழியாகக் கீழிறங்கலாம் எனத் தோன்றியது. திடீர் சரிவுகள் மட்டுமல்ல பனிப்பிளவும் வழியில் இல்லாததால் தான் முயல்கள் இந்த உயரத்துக்கு வந்திருக்கும் எனக் கணக்குப் போட்டேன். எத்தனை பெரிய தவறு என அடுத்த இருநூறு மீட்டரில் தெரிந்தது.

நானும் ஒரு ஷெர்பாவும் ஜென்ரல் படுத்திருந்த பலகையைத் தூக்கி இருநூறு மீட்டர் தூரம் இறங்குவது என முடிவெடுத்தோம். மற்ற இருவரும் அடுத்த நூறு மீட்டர்களுக்குத் தூக்கிவருவதாகத் திட்டம். எங்களைக் கடந்து சென்ற மற்ற இரு ஷெர்பாக்களும் சிறிது நேரத்தில் குறிப்பிட்ட சமதளத்தை அடைந்தார்கள். எங்களுக்காக காத்திருப்பது போலத் தெரிந்தது. என்னவாக இருக்குமென உடனடியாக யோசிக்க முடியவில்லை

சுலபமான நடையாகத் தெரியவில்லை. ஒவ்வொரு அடிக்கும் ஜெனரல் கனம் அதிகமானது போலிருந்தது. அவரிடமிருந்து வரும் முனகல் ஒலியும் அடங்கிக்கொண்டிருந்தது. பனிப்பொழிவு ஒவ்வொரு நொடியும் அடர்த்தி அதிகமானது. ஷெர்பாக்களின் தெளிவற்ற உருவம் அருகில் செல்லச் செல்ல மேலும் கலங்கலாகத் தெரிந்தது.

ஒரு வழியாக ஐந்து பேரும் ஒன்றாகக் கூடும்போது வெண்சுவர் எழுப்பியது போல சுற்றிலும் கடும்பொழிவு. நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு அருகில் கிட்டத்தட்ட நான்கடி அகல பனிப்பிளவு. பயிற்சி காலத்தில் பனிப்பிளவை எச்சரிக்கையோடு அணுகக் கத்துக்கொடுத்தனர். பலநூறு மீட்டர்கள் ஆழத்துக்குச் செல்லும் பிளவுகளில் சிக்கிக்கொண்டவர்கள் அதிகம். பனிப்பிளவை எளிதில் கண்டுபிடிக்கமுடியாது என்பதாலேயே அது சிக்கலாகிறது. பொதுவாக மெல்லிய பனித்தளம் அதை மூடியிருக்கும். சாமான்களோடு அதன் மீது ஒரு ஆள் நிற்கும்போது ரெண்டாளுக்கான அழுத்தம் உருவாகி சாமான்களோடு ஆளையும் விழுங்கிவிடும். தாழ்வானப் பகுதிகளில் நீர் சலசலக்கு ஓசை கேட்கும். அடி ஆழத்தில் என்ன இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்?

முதல் ம்ப் நானூறு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறது. எங்களை உலகத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் நான்கடிப் பிளவை தூரத்திலிருந்து பார்த்து நின்றோம். சிறிது தூரம் ஓடி அது மலைச்சரிவில் இறங்கிவிட்டிருந்தது.

`இன்று ராத்திரி மட்டும் இங்கேயே ஒரு கூடாரத்தைப் போட்டுவிடலாம். என்ன சொல்றீங்க?`, எனக் கேட்டேன்.

புரியாமல் நின்ற ஷெர்பாக்களிடம் ஒரு கூடாரத்தைக் காற்றில் வரைந்து காட்டினேன்.

பொதுவாகக் கட்டளைகளை மட்டும் கேட்டுப் பழகிய ஷெர்பாக்கள் ஒருகணம் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். முனகல் ஒலி தவிர ஜெனரலிடமிருந்து எதுவும் வரவில்லை.

இருவர் மட்டும் தங்கக்கூடிய கூடாரத்துக்கான துணிகள் ஷெர்பாக்கள் கொண்டுவந்திருந்த மூட்டைகளிலிருந்து கிடைத்தன. அவற்றை ஒன்றாகச் சேர்த்து கூடாரத்தை அரைமணியில் தயார் செய்துவிட்டனர்.

`பிரமாதம். ஜென்ரலை உள்ளே படுக்க வைப்போம்.`, யாரிடமும் இல்லாத உற்சாகம் எனக்குக் கரைபுரண்டு ஓடுவது போலிருந்தது.

இருட்டத் தொடங்கியதும் ஜென்ரலைக் கூடாரத்துள் படுக்கவைத்தோம். ஷெர்பாக்களின் மூட்டையிலிருந்த மரக்குச்சிகள் சிலவற்றினால் நெருப்பு மூட்டினேன். ஜெனரலின் காலருகே நெருப்பு குண்டத்தை வைத்தபின் அவரது பூட்ஸைக் கழற்றினேன். `ம்ஹூம்`, என வலியின் ஒலி. ஜில்லிட்டிருந்த என் கைகளால் அவரது கால்களைத் தேய்க்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் இரண்டும் சூடாயின. ஜென்ரலின் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது போலிருந்தது.

ஒரு ஷெர்பாவைக் கூட்டி வரலாம் என வெளியே வந்து பார்த்தபோது பனிப்பொழிவுக்கு நடுவே மூட்டைகளில் தலைவைத்துப் படுத்துக்கிடந்தனர். சடலங்கள் போலக் கிடந்த அவர்களைப் பார்த்தும் எனக்கு மனசு கனத்தது. வேறுவழியில்லை. ஒருவரை எழுப்பி என்னுடன் வரச் செய்தேன். இருவருமாக ஜென்ரலில் கால்களைத் தேய்த்தோம். முனகல் ஒலி குறைந்து ஜெனரல் அமைதியாகத் தூங்குவதைப் போலானார். ஜென்ரல் உறங்கியதும் அன்றைய தினத்தின் முழு களைப்பும் என்னை அழுத்தியது போலிருந்தது.

நான் படுத்திருந்த இடத்தைக் குறுக்கிக்கொண்டு `இங்கேயே படுத்துக்கோ`, என சைகை காட்டினேன். வழக்கமாக முயல் திரும்பிப் பார்ப்பது போன்ற பயம் கலந்த பார்வை இப்போது அவனிடம் இல்லை. ஒரு கணம் என்னை தீர்க்கமாகப் பார்த்து தலையாட்டிவிட்டு வெளியே போய்ப்படுத்தான்.


பால் குடிக்கவரும் பூனை போல காலை சூரியன் மெல்ல எட்டிப்பார்த்தது. பனிப்பொழிவு குறைந்திருந்தது. ஜென்ரலால் ஒருசில வார்த்தைகள் பேசமுடிந்ததில் எனக்கு உற்சாகம் மீண்டுவந்தது.

`ஜென்ரல், மேஜர் சுக்வீந்தரும் மேஜர் சுரேந்திரநாத்தும் நாலாம் காம்ப்புக்குப் போயிருக்காங்க. நாம முதல் காம்ப் போறத்துக்குள்ள டாக்டர் வந்திருப்பார்..யூ டேக் ரெஸ்ட். கெட்டிங் தேர்`

`ரொம்பவும் சிக்கல் உனக்கு..அதுவும் கடைசி அசைன்மெண்டில்`, என உடைந்த குரலில் ஜெனரல் பேசினார்.

நான் அவரது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிடம் எப்போ சொல்வதாக இருந்தாய் என்பது போல அவர் பார்த்திருந்தார்.

`இன்னும் ஒரு மாசத்துல எனக்குக் குழந்தை பொறக்கப்போகுது ஜெனரல்..எனது கோழைத்தனம் டீமுக்குத் தடையாகத்தான் இருக்கும்..`

எதோ சொல்வதற்கு வாய் திறந்தார் ஜெனரல்.

`ஜென்ரல் பனி அதிகமா பெய்வதற்குள் கேம்ப்புக்கு போயிடலாம் வாங்க`

நாங்கள் வெளியே வந்தபோது ஷெர்பாக்கள் எங்கள் கட்டளைக்காகக் காத்திருந்தனர். நான்கடி பிளவைத்தாண்டுவதற்கு எங்களிடம் போதுமான பலகைகள் இல்லை. ஜென்ரலைத் தாங்கியிருந்த துணிப்பலகை மட்டுமே இருந்தது. அது ரெண்டாள் வரை தாங்கும். வேறு வழியில்லை.

மூட்டைகளை அடுக்கிவைத்து ஜென்ரலை அதில் படுக்கவைத்தோம். எங்களைப் பார்த்தபடி ஜென்ரல் மூட்டையில் சாய்ந்துகொண்டார். துணிப்பலகையை பிளவுக்குக் குறுக்காகப் போட்டு ஒரு ஷெர்பா அந்தப்பக்கம் போய்விட்டார். இன்னொரு ஷெர்பாவையும் அந்தப்பக்கம் அனுப்பி கேம்ப்பிலிருந்து மடக்கு பாலத்தைக் கொண்டுவரச் சொல்லலாம் என யோசித்தேன். ஆனால் பனிப்பொழிவு அதிகமானால் ரெண்டு ஆள் குறைந்துவிடும் எனும் பயம் வந்தது,

ஆற்றைக் கடப்பது போல ஜெனரல் என் கழுத்தை இறுகிக்கொண்டார். கூடாரத்தைத் கட்டிவைக்கும் கயிறுகளை இடுப்பில் இறுகக் கட்டிக்கொண்டோம். மற்றொரு முனையை ஷெர்பாக்கள் பிடித்துக்கொண்டனர். நாங்கள் படுத்ததும் துணிப்பலகை சற்று மடங்கி எழும்பியது. கீழே பிளவின் இருட்டுக்குள் பார்வை செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. கடல்மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரே இருப்பதால் பிளவு முன்னூறு அடிகளுக்காகவாவது ஆழமிருக்கும். மெல்ல ஊர்ந்து அந்தப்பக்கம் வந்ததும் மேடிருந்த ஒரு இடத்தை அடைந்தோம்.

அப்போதுதான் அது நடந்தது.

காலடியில் உணரும் பனி வழுக்குவதுபோலிருக்கிறதே என நினைத்த நேரத்தில் பெரும் பாளம் போல நாங்கள் நின்றிருந்த இடம் உள் வாங்கியது.

பனியும் நீரும் கலந்து சேறு நிரம்பியிருந்த குடுவைப் பள்ளத்தில் இருவரும் விழுந்தோம். ஒருவர் மீது ஒருவர் விழாததால் அடியில்லை. பத்தடி ஆழம் இருக்கும். மிகக் குறைவான வெளிச்சம். திடீரென விழுந்ததால் ஒரு நொடி எங்கிருக்கிறோம் எனத் தெரியவில்லை. க்ளோரோஃபார்மை முகத்தில் வைத்து அழுத்தியது போல கனமான திரவ வாடையில் மூச்சு விட சிரமமாயிருந்தது. ஒவ்வொரு முறை மூச்சிழுக்கும்போது உறைந்த பனி மூக்கில் அடைப்பது போலிருந்தது.

`அம்மா..ஐயோ ..டானே, டானே`, எனக் கத்தினேன். என் இடுப்பில் சுற்றியிருந்த கயிறு என்னை ரெண்டாகப் பிளந்துவிடுவது போல இறுகியது. வலி மிகக் கடுமையாக இருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்தாலும் ஜென்ரலின் கழுத்து மட்டும் நீருக்கு மேலிருந்தது. எனது காலுக்குக் கீழே தட்டுப்பட்ட கற்களை உதைத்து மேலெழும்பப் பார்த்தேன். பூட்ஸுகள் கற்களிடையே மாட்டிக்கொண்டிருந்தன. அவற்றை விலக்கி என் கால்களை விடுவித்துக்கொண்டேன். நல்லவேளை அதிக ஆழமில்லை. இடுப்புவரை நீர்மட்டம் உயர்ந்த பகுதிக்கு வந்ததும் ஜென்ரலைக் கைகொடுத்து இழுத்தேன். பனியும் நீரும் அடர்த்தியாக இருந்தன. டானே என்னை மேலிழுக்கப்பார்த்தான்.

`பொறு..பொறு`, எனக் கத்தினேன். என் இடுப்பு பிளக்கப்போவது போல பயங்கர வலி. பனிக் கோடாறியால் கயிறை அறுத்தேன். மேலிருந்து பார்த்த டானேவுக்கு பயங்கர குழப்பம். இணைப்புக்கயிறை பாறைசுவரில் இறுக அடித்துவிட்டு ஒரு கையால் அதைப் பிடித்தபடி ஜென்ரலுக்கு அருகே சென்றேன்..

திடீரென குளிர்ந்த நீரில் நனைந்ததில் அவர் முழு உணர்வோடு கண்ணைத் திறந்து பார்த்திருந்தார். கீழிருந்து மிருகம் உயிரோடு சாப்பிடுவது போல அவரது முகத்தில் கடுமையான வலி தெரிந்தது.

`வராதே..நீ போயிடு`, எனக் கத்தினார்.

நான் கொண்டு சென்ற கயிற்றை அவரது கையில் கட்டப்பார்த்தேன். அவர் விலகியபடி திமிறினார். அப்போது அவரது கண்கள் நேற்றிரவு பார்த்த ஓநாயின் கண்களைப் போல உயிரற்று இருந்தது. அவரது முகம் கெஞ்சுவது போல உறைந்திருந்தது. எனது சுவாசம் கடுமையாகத் திணறினாலும், பலம்கொண்ட மட்டும் அவரை இழுக்கப்பார்த்தேன். அவரது உடல்முழுவதும் என் மீது சாய்ந்தாலும் கால்கள் எதிலோ பின்னியிருப்பது போலிருந்தது. அவரை முழுமையாக என்னுடன் இழுக்க முடியவில்லை. சொன்னதையே திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது குரல் அடைத்திருந்தது. ஃப்ளீஸ் உடைக்குள் தண்ணீர் புகுந்ததால் எங்கள் எடை நான்கு மடங்கானது.

வேறு வழியில்லை. மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு தண்ணீருக்குள் சென்றேன். கடும் அமில சுவை என் வாய் முழுவதும் நிரம்பியது. பனிக்கோடாறியால் மிதந்திருந்த பனிக்கட்டிகளை உடைத்தபடி ஜென்ரலின் பூட்ஸை அடைந்தேன். குகையில் விழுந்த வேகத்தில் அவரது பூட்ஸ் தெறித்து வெறும் கால்கள் கற்களுக்கிடையே சிக்கியிருந்தன. பனிப்பிளவை கடக்க முற்பட்டது எத்தனை பெரிய தப்பு என அப்போது உரைத்தது. கோடரியால் பனிப்பாளங்களை உடைத்து அவரது கால்களை விடுதலை செய்தேன். பழுப்பும் சிவப்புமாய் ரத்தமும் பாசியும் கிளம்பி வந்தன.

நீருக்கு மேலே வந்ததும் என்னால் முழுமையாக மூச்சு விடமுடியும் எனத் தோன்றவில்லை. முனகும் சக்தியையும் ஜென்ரல் இழந்திருந்தார். உடம்பு உறைந்துப்போயிருந்ததில் சுயநினைவை இழக்கும் கட்டத்தில் இருந்தார். அவரை மேடான இடத்தில் இழுத்துப் போட்டு பாறை சுவரில் சாய வைத்தேன். நான் நீருக்குள் போனதில் கட்டையால் யாரோ தலையில் அடித்த உணர்வு. எந்த நிமிடமும் மயங்கி நினைவு தப்பிவிடும் என நினைத்தேன். மேலிருந்து ஷெர்பாக்கள் சத்தமாகக் கத்தி கைகளை ஆட்டியபடி குகைக்குள் பார்த்தபடி நின்றிருந்தனர்.

பாறையில் செருகியிருந்த கயிற்றை ஜென்ரலின் இடுப்பில் இறுகக் கட்டினேன். ஒரு கணம் கண் இருண்டு மீண்டது. ஸ்ரீமுஷ்ணத்தில் என் வீட்டின் அமைப்பை துல்லியமாக நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தேன். ஜன்னலின் நிழல் விழுந்த படுக்கை அறை, கட்டைவிரலில் குங்குமம் குழைத்து என் நெற்றிக்கருகே கொண்டுவரும் அம்மா, கட்டிலில் காலை உதைத்து அழும் குழந்தை என மாறி மாறி காட்சிகள் சுழன்றுகொண்டே இருந்தன. என் இடுப்பில் டபுள் நாட் போட்ட இணைப்பு கயிற்றைத் இறுகக் கட்டினேன். இதைவிடத் தெளிவாக நான் இருந்ததில்லை என மனதுக்குள் பலமுறை சொல்லிக்கொண்டேன்.

ஷெர்பாக்கள் கீழே போட்ட கயிற்றை சுத்தியலால் பாறையில் செருகி அடித்து ஒவ்வொரு அடியாக மேலே ஏறினேன். ஒரு யுகம் கடந்ததுபோலிருந்தது. இணைப்புக்கயிறையும், ஆணிகளையும் மேல் விளிம்புவரை அடித்துமுடித்தேன். என்னோடு இறங்கி வந்த ஷெர்பாக்களோடு ஜென்ரலை தூக்கி மேலேறுவதற்குள் இருட்டத் தொடங்கியது.

பனி பொழிவு நின்றுபோயிருந்தது. மற்றொரு இரவை கடக்க முடியும் என யாருக்கும் தோன்றவில்லை. ஜென்ரலின் நாடித்துடிப்பு இயங்கிக்கொண்டிருந்தாலும் இடுப்புக்கீழே சுரணையற்றுக் கிடந்தார். ஓலங்கள் அற்ற பிராந்தியம் எனக்கு எல்லையற்ற களைப்பை உண்டாக்கியது. கண்ணை மூடும் கணம் ஸ்ரீமுஷ்ணத்தின் என் வீட்டுக்குப் போய்விட முடியும் எனும் கற்பனை என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அப்படியே மூட்டைகள் மீது படுத்தேன். கொழுத்த பருந்து ஒன்று சிரமமில்லாமல் பறந்துகொண்டிருந்தது. மேகங்களற்ற வானில் நந்தாதேவியின் விளிம்பு செம்பிழம்பாகத் தெரிந்தது.


கண்விழித்ததும் நான் முதலில் இனிமையானப் பெண் குரலைக் கேட்டேன். பிரிட்டிஷ் உச்சரிப்பு பிசிறில்லாமல் இருந்தது. என் முன்னே கூடாரத்தில் யாரும் இல்லை. என் பார்வை ஒரு வட்டம் வந்ததில் என் தலைமாட்டில் இருவர் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது.

எங்களுக்கு ஷெர்பாக்களை ஏற்பாடு செய்திருந்த சன்ரீத் டாஹே கதவுக்கு அருகே நின்றிருந்தார். நான் கண் விழித்ததைப் பார்த்த வெள்ளைக்கார பெண் அருகில் வந்தாள். கூடவே கமாண்டண்ட் பகத் உடன் வந்தார்.

`முத்துகிருஷ்ணன். நான் ரிஷி கங்காவில் திரிசூல் ஆஸ்பத்ரியின் டாக்டர். ஹவ் ஆர் யூ ஃபீலிங் நவ்?`, எனக் கேட்டாள்.

முதலில் என் உலர்ந்த ஆடைகளை உணர்ந்தேன். கைகால்களில் இருந்த துணிகளைத் தடவியபடி இருந்தேன். உலர்ந்த உதடுகளை நனைத்துக்கொண்டேன். என்னால் தடையின்றி மூச்சு விட முடிகிறது.

`பாதி உயிர் வந்தது போலிருக்கு டாக்டர்`

`கவலையில்லை மீதியும் வந்திடும். ஆஸ்பத்திரியில் இருந்து ஆட்கள் வருகிறார்கள்..` , என என் தோளை அழுத்தினாள்.

`ரொம்ப நன்றி..ஜென்ரல் இப்ப எப்படி இருக்கார்?`

`அவருக்கு முழிப்பு ஓரிரு முறை வந்தது. திரும்பவும் நினைவிழந்து போகிறார். பிழைப்பது கஷ்டம் தான். காப்பாற்றினாலும் கைகால்கள் உபயோகப்படுத்த முடியாது..மேலும்..`, என இழுத்தாள்.

அதற்குள் பகத் முன்னால் வந்தார், `முத்துகிருஷ்ணன் உங்க தைரியம் அசாத்தியமானது. டான்ஹோ உங்களைப் பற்றி ரொம்பப் பெருமையாகச் சொல்கிறார். இந்திய மலையேறி பள்ளிக்கே உங்களால் ரொம்ப பெருமை..கடைசியாக மயக்கமாவதற்கு முன்னால் ஜென்ரல் உங்களுக்காக ஒரு குறிப்பு எழுதச்சொன்னார்.`

பகத் கொடுத்த குறிப்பை விரல் நடுங்கப் பிரித்துப் படித்தேன்.

`முத்துகிருஷ்ணன் – என்னை நீ ஏமாற்றிவிட்டாய். இந்த வேலைக்கு நீ லாயக்கில்லை. உன் ஊருக்கு போய்விடு – இது என் ஆர்டர்` – என எழுதியிருந்தது.

– சொல்வனம் | இதழ் 85 | ஏப்ரல் 28, 2013

Print Friendly, PDF & Email

2 thoughts on “நந்தாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *