தறுதலை தகப்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,087 
 

ஹிட்லர் மீசையளவு, மூக்குக்கு கீழ் வெள்ளை மயிரில் பொடியின் கறை அப்பியிருந்தது. “கருணாநிதிய உட்டுட்டு எதுக்கு போனும், அதனால எம்.ஜி.ஆரை எனுக்குப் புடிக்காது.” இதைச்சொல்லும் போது பெரியவரின் முகம் சிவந்தது. இருந்தாலும் எதுக்கு தேவையில்லாம இவரிடம் கோபத்தை காட்டனும். கிடைக்கிற ஒரு ரூபாயும் கிடைக்காமல் போயிவிடுமோ என்று யோசித்தார். முகத்தை இயல்பாக வைத்துகொண்டார்.

காலர் இல்லாத ஜிப்பா அணிந்திருந்தார். அது வெளுப்பும் இல்லாமல், அதிகமான அழுக்கும் இல்லாமல் இருந்தது. சிகப்புக் கலரில் குறுக்கும் நெடுக்குமாக வெள்ளைக் கோடு பெட்டி பெட்டியாக இருந்தது. ஒரு போர்வையை கழுத்தில் சுத்தியிருந்தார். பழுக்க பழுக்க வெண்மையாய், மயிர் மட்டும் தான் இருக்கும் போல. தலையோடு முகத்தில் முளைக்காத இடம் தவிர்த்து, மயிர் சமமாய் வளர்ந்திருந்தது. அதிக அலங்கோலத்தைக் காட்டவில்லை. ஜிப்பா கழுத்து வீ கட்டிங்காக இருந்தது. அதன் நடுவில் கண்ணாடிபிரேம் கயிறோடு தொங்கிக்கொண்டிருந்தது. அனேகமாக கண்ணாடி மார்பையும் வயிற்றையும் தொட்டு நின்றது. அவர் சில்தன்மையை நிச்சயம் உணர்வார். வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். இடது கையில் ஒரு பை வைத்திருந்தார். பையின் இரண்டு காதும் மணிக்கட்டுக்கு மேல் இருந்தது. பையை ஒருவாறு சுருட்டி உள்ளங்கையில் வைத்திருந்தார். மூன்று அடியில் சற்று கனமான மூங்கில் தடி இருந்தது. அது கரிய நிறத்தில் இருந்தது. ஆனால் அது சலவைக்கொம்பு அல்ல. அது வசதிகேற்ப இடது கைக்கும் வலதுகைக்கும் மாறிக்கொண்டே இருந்தது. வலது உள்ளங்கையில் சில்லறை சின்ன ரவுண்டு, பெரிய ரவுண்டுமாக நிரம்பியிருந்தது. பிச்சை கேட்கும்போது கொம்பு இடது கைக்கு மாறிவிடுகிறது. மற்ற நேரத்தில் வலது கைக்கு வந்து விடுகிறது. அரசு ஊழியர் கட்டடம் விழியாக வந்தவர் “ஐயா ஒரு ரூபா குடுங்களேன்” என்று கையை நீட்டினார்.

அவன் தினம் சாப்பாட்டு இடைவேளையில், அந்த மரநிழலில் நின்று படித்துக் கொண்டிருப்பான். இவ்வளவு பெரிய நகரத்தில் லைப்ரரியைத் தவிர்த்து காற்றோட்டமான இடம் எங்கே இருக்கிறது? வெளியே நின்று படித்தால் ஏதோ பைத்தியக்காரனை பார்ப்பது போல் பார்கிறார்கள். சீமானின் விடுதலைக் கட்டுரையை படித்து முடிப்பதற்கும் பெரியவர் கையை நீட்டுவதற்கும் சரியாய் இருந்தது. இரையைக் கண்டவுடன் பதுங்கி வரும் மிருகமாக அவன் ஆரம்பித்தான். இவருக்குள் என்ன புதைஞ்சி கிடக்கிறதோ “ஒரு ரூபா போதுமா. அதுக்கு என்ன வாங்குவீங்க” இந்த நாயிடம் ஒரு ரூபாய் இல்லை என்றால், பகலில் கண்தெரியாத ஆந்தையாகிவிடும். எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கிடக்கும். இப்போது பத்து ரூபா சில்லறை, பாக்கட்டில் கிடக்க பெரியவரிடம் இந்த கேள்வி வைத்தான். அதில் ஆணவம் இல்லை. கிண்டல் இருந்தது. அதோடு பெரியவரிடம் பேச்சை வெளிக்கொண்டுவர அவனுக்கு வேறுவழி தெரியவில்லை.

சின்ன விசாரிப்புக்கு காத்திருக்கிறவர் போல், ஒரு ரூபாயை மறந்து விட்டார் “ஐயா யாராண்டனா, பத்து ரூபா கேட்டா குடுப்பாங்களா. ஒருத்தர் ஒரு ரூபானா. பத்து பேர், பத்து ரூபா ஆச்சி” அவர் கையில் வைத்திருந்த சில்லைறையை நன்கு தெரியும்படியாக வைத்திருந்தார். உதவியற்று இருப்போரிடம் எப்போதும் நடைமுறையில் இருக்கும் கேள்வியைத் தான் கேட்டான். “உங்களுக்கு புள்ள இல்லையா? எந்த ஊரு” என்று கேட்டான். அவனுக்கு என்ன சாதின்னு கேட்கணும் போல் தோன்றியது. அதை தள்ளிப் போட்டான். எல்லாருக்கும் எல்லா தொழிலும் திட்டமிட்டே அமைவது இல்லைதான்.

பெரியவர் குடும்ப பொறுப்புக்கு திரும்பினார். சோகச்சாயல் முகத்தில் தெரிந்தது. அதை சமாளித்தவர் “ஒரு புள்ளய தொலைச்சிட்டேன். காணா பொணமா போயிட்டான். ஒண்ணு கலியாணம் பண்ணிக்கினு மாமியார் ஊட்டுக்கு போயிடுச்சி. ஒரு பொண்ணு ஒபயமுத்தவனுக்கு கொடுத்தேன். என்ன வந்து பாக்கக்கூட உடமாட்டான். பொண்ணு எப்பனா வரும் பாத்துட்டு பத்தோ இருவதோ குடுத்துட்டு போவும். வேற யாரும் இல்லை. அனாதையா ஊரான் மாடு மேச்சேன். என் காலம் வீணாப்போச்சி” தன் வாழ்வை நொந்து பிச்சை எடுப்பதின் தற்போதைய நிலையை நினைவுகூர்ந்தார்.

ஒரு இடத்தில் பிறந்தால் மட்டுமல்ல, அந்த இடத்தில் தன் இளமைப் பருவத்தை கொஞ்சகாலமாவது கழித்திருக்கவேண்டும். அந்த மனுஷன் தன் ஊரின் பசுமையை மனதின் எதோ ஒரு முலையில் சாகும் வரை வைத்திருப்பான். சாதிய உணர்வும் அடிக்கடி தலைகாட்டும். அதையும் மீறி சமூகத்தில் எந்த மனுஷனுக்கும் குரூரம் இல்லாமல் புழங்குவது சிறந்த ஒன்றுதான். இவர் ஊர் மாடுமேச்சேன்னு சொல்றாரே தலித்தா இருப்பாரோ ஆனா நிறத்தைப்பார்த்தா அப்படி தெரியலையே. ஒரு கணக்கெடுப்பின் நோக்கத்தோடுதான் இக்கேள்வியை வைத்தான். என்ன “ஜாதி பெரியவரே. உங்க வாழ்க்கை வரலாற கொஞ்சம் சொல்லுங்களேன்.”

“ஊர் வாலாஜாபாத். ஜாதியில எடையன். ஊர்மாடுகளை மேய்ப்பேன்யா. ஒரு மாட்டுக்கு மாசம் ஒருரூபா, பால் கற‌க்கிறதுக்கு அஞ்சிரூபா மாசம். எப்பிடியும் பாஞ்சிரூபா சம்பாரிச்சிடுவேன். அப்ப ஊர்லயே என்னைவிட யாரும் அதிகம் சம்பாரிக்கல. சேரில ஊர்ல ரெண்டு எடத்துலயும் போய் பால் கற‌ப்பேன். ஊர்ல அங்க இங்கனு சாப்பாடு போடுவாங்க. காசும் குடுத்துடுவாங்க. சேரில காசு மட்டும் வாங்குவேன். சாப்பாடு போட்டா சாப்பிடமாட்டேன்னு அவுங்களா நெனைச்சிக்குவாங்க போல நான் காசமட்டும் வாங்கினு வந்துடுவேன்”.

(குறிப்பு: இடையில் உம்காட்டுதல், அவனின் கேள்விகள் பல தவிர்க்கப்பட்டுள்ளது.)

“அப்பல்லாம் நெலம் விலை ரொம்ப குறைச்சலாத்தானே இருக்கும். எதுனா வாங்கினிங்களா”.

“அப்பலாம் அந்த யோசனையே வரலைய்யா. சம்பாத்தியம் அதிகம். வயசு திமிர்ல எங்க மச்சினிச்சி, மாமியார்துல எத்தும்பபோய் கொட்டி கொட்டி நான் ஓட்டாண்டியா போயிட்டேன். இன்னிக்கு ஊர்ல பிஞ்சிப்போன குடிசையில அனாதையா கெடக்குறேன். நீங்க புடிங்கிக்கவா போறீங்க முதியோர் பென்ஷன் வர்து அது இருபதாந் தேதிதான் தருவான். அத வாங்கினேன்னா கொஞ்ச நாளைக்கு வரமாட்டேன். அப்புறம் வாரத்துல ரெண்டு நாள் வருவேன்”

“இன்னக்கிதான் தேதி இருவது பெரியவரே. நீங்க வந்துட்டு இருக்கிறீங்களே. காசு எப்படி வாங்குவீங்க” பெரியவர் சற்று அமைதியானார். வர.. வர.. எவ்வளவு மோசமாகிவிட்டது. நம் நிலைமை, தேதியைக்கூட அறிந்துக்கொள்ள முடியாதபடி நாள் கழிகின்றதே. சற்று நேரம் யோசித்தார். அதை வெளிக்காட்டவில்லை. “இன்னிக்குதான் இருபதாய்யா. என்வீட்டுக்கு நாலாவதுவீடுதான். அங்க போய் கேட்டா குடுத்துடுவான். ஒரு பொறம்போக்கு ஒன்னு இருக்குது. அவன் முகத்தில முழிக்கக் கூடாதுனு தான்.” அந்த நேரம் கையில் வைத்திருந்த கொம்பை சற்று இருகப்பிடித்தார். இரண்டு மூன்று முறை தரையில் தட்டினார்.

அவன் “யாரு பெரியவரே” என்றான்.

“என் அட்டையில் கிருஷ்ணாயில் வாங்குவேன்ய்யா. ஒரு கடைக்காரனுக்கு குடுப்பேன். கடைக்காரன் மேல காசுபோட்டு குடுப்பான். எனுக்கு நாலாவது ஊட்டுக்காரன், ஒரு போலிஷ்காரனுக்கு கிருஷ்ணாயில் வேணும்னு கேட்டான். நானு குடுக்கமாட்டேன்னு சொல்லிட்டேன். அவனும், பொலிஷ்காரனும் சேர்ந்துக்கினு, எழுதி போட்டுட்டு இருக்கிறானுங்க. எனுக்குத் தெரியாது. ஒரு நாளு, ரேஷன்கடக்காரன் ‘பெரியவரே உன் காடு எத்தா கிருஷ்ணாயில் வாங்கறவங்களுக்கு காடு புதுசா என்ட்ரோ, இன்னாவோ போடணும்னு சொன்னான். என் ஊட்டாண்ட வந்து வாங்கிம் போனான். நான்கூட வயசானவங்களுக்கும், அனாதைங்களுக்கும் வீட்டுக்குவந்து ஓதவராங்க போலன்னு நெனைச்சேன்ய்யா. மறுநாள் போயி கேட்டா, நீ காஞ்சிபுரம் தாலுக்காபிஷ்ல போயி கேளுன்னுட்டான். ஏம்பான்னா, உனுக்கு தாஷில்தார் தான் என்ட்ரோ போடணும். அதனால அங்க போயி பாருன்னான். செர்தான்னு தாலுக்காபிஷ் வந்து கேட்டேன். ‘யோ. நீ கிருஷ்ணாயில் வாங்கி விக்கிறியான்னு கேட்டான். தப்புதான்னு அலைஞ்சி அலைஞ்சி அடப்போங்கடான்னு உட்டுட்டேன்” என்று தொடர்ச்சியாக சொன்னவர், இவன் ஒரு ரூபா கொடுப்பானோ மாட்டானோ இவங்கிட்ட அதிகமா பேசிட்டோம், போலீஸ் கம்மானாட்டிங்கன்னு வேற சொல்லிட்டோம், பிச்ச கேட்கிறவன் பேசாம கேட்டுட்டுப் போனம், நம்ம அறியாம இவ்வளவு பேசிட்டோமே என்று முகம் மாறி மௌனமாகி நின்றார்.

அவன் பாக்கட்டில் இருந்த மூன்று ரூபாய் சில்லறை எடுத்தான். அதையும் கொடுத்து விட்டான். “பெரியவரே நீ ஒன்னும் நெனைக்காதே தாராளமா சொல்லு. நானும் சாதாரணமான ஆளுதான். அவர் சில்லறையோடு சேர்த்துக் கொண்டார். சற்று உற்சாகம் அடைந்தார். அவன், பாக்கட்டில் கைவைப்பவன் போல் பெரியவருக்கு போக்குக்காட்டி பேச்சை வாங்கினான். இப்போது அவரே பேச்சை கொட்டவேண்டும் என்பதுபோல் நின்றார்.

சின்ன வயசுல, உங்க வாழ்வு எப்படிப்போச்சி.

அறியாத வயசுல நல்ல பாரியாளா இருப்பேன். யாரு சண்டைக்கும் போகமாட்டேன். எவனையும் மதிக்கமாட்டேன். ஊர்ல, அவன் திமிர் பிடிச்சவன்டா. எப்பிடி நெட்டா போறாம்பாரு. பொறாமையில சில நேரம் சண்டைக்கு வருவானுங்க. பத்து பேரு வந்தாக்கூட மொத ஆளா வரவன, புடிச்சி நாலு அறை வுடுவேன். பின்னாடி வந்தவனெல்லாம் ஓடிப்புடுவான். இன்னும் அந்த வேகம் பேச்சில் இருந்தது என்று உற்சாகமாய் உடல்மொழியுடன் பேசினார்.

அவரே மீண்டும், கற‌வ மாடு வச்சிங்கிறவங்களுக்கு காலையும், சாயங்காலமும் நாந்தான் தெய்வம். ஒவ்வொருத்தரும் காலிப் பாத்திரத்தை வச்சிக்கினு நிப்பாங்க. எங்கிட்ட எதுனா கிறுக்கு பண்ணாங்கனா அவுங்க தாளம்போடுவாங்க. ரெண்டு மூணு உட்டுக்கு பின்னாடியே வந்து கெஞ்சுவாங்க. அப்புறம் கடைசியா போய் கறந்து குடுத்துட்டு வருவேன். அதல யாரும் என்னாட மூச்சி உடமாட்டங்க. பால் கறந்துட்டு அடிக்கடி சினிமாவுக்குப் போவேன். அப்பலாம் எம்.ஜி.ஆர் படம்னா உயிர். ஒரு படம் தவறாம பாத்துடுவேன். அதுக்கப்புறம் அவன் கெடக்குறான்னு படம் பாக்கறதே உட்டுட்டேன்.

“ஏன் பெரியவரே.”

“கருணாநிதிய உட்டுட்டு ஏன் போனான்” என்று நேர் எதிரியை சாடுவதுபோல் கேட்டார்.

“அரசியல்ல இருந்தீங்களா? எந்தக் கட்சி?”

“தேவராஜ் மொதலியார்னு ஒருத்தர் தெரியுமா. கலக்காட்டுர்ல அவருக்கு எழுபது ஏக்கர். அந்த ஊர்ல, அவுர்துதான் நெலம் வாலாஜாபாத்துல அவர்தான் மொதல்ல தி.மு.க.னு கட்சிய ஆரம்பிச்சாரு. அண்ணா வந்துதான் கொடி ஏத்துனாரு. அப்போ சோஷலிஷம், கமுனிஷ்ட்டுதான் இருந்தது. ஒரே தகராறு. இங்க தி.மு.கலாம் ஆரம்பிக்கக் கூடாதுன்னு. நானு தேவராஜ் மொதலியார் ஊட்டுலதான் பால் கறந்துகினு இருந்தேன். மொதலியாருக்கு அம்மா ஒருத்தர் இருந்தாங்க. அவங்க சொம்மா பிரம்மாண்டமா இருப்பாங்க. சோரு பெரிய பெரிய டேக்ஸாவுல வெடிப்பாங்க. திடீர்னு பத்துபேர் வந்துடுவாங்க. திண்ணையில மீட்டிங் போடுவாங்க. சாப்பிட்டு மாளாது. அவுங்க சாணி வாறதில இருந்து பலகாரம் கொண்ணாந்து வக்கிறது வரைக்கும் எல்லாத்துக்கும் பெரம்பு கூடதான்.” என்று மனதில் புதைந்து கிடந்த மீள முடியாத வாழ்வைக் கொட்டினார்.

“நீங்க அண்ணாவ நேர்ல பாத்து இருக்கிறீங்களா. கட்சியில சேர்ந்து இருந்தா இந்நேரம் பெரிய ஆளா ஆக்கியிருப்பாங்களே”

அவர் முகத்தில் பெருமிதம் பொங்க “ஏன் பாக்கல. அவங்க வீட்டு திண்ணையில தான ஒக்காந்திருப்பாரு. எனக்கு தேவராஜ் மொதலியார் தான் குரு. நான் மொதலியார் வீட்டுல பால் கீல் கறந்து குடுத்துக்குனு இருப்பேன். அண்ணா அப்பிடியே போவார். என்னப் பாத்ததும், ‘நீதான் மொதலியார்க்கு செக்ரற்றியா’ சிரிச்சிக்கினு போவார். நானும் என் வேலைய செய்துக்குனு இருப்பேன். எனக்கு ஆசைதான். மொதலியார மீறி எப்படி போகமுடியும். அப்பிடியும் மொதலியார கேட்டேன். ‘டே உனுக்கு ஏண்டா. வேணாண்டா. அரசியல்ல சண்ட சச்சரவு இருக்கும். சோஷலிஷ்ட், கம்முனிஷ்ட்காரனுங்களாண்ட போராட முடியாதுனு சொல்லிட்டாரு.

அப்போ பஞ்சாயத்து போடுல ரெண்டு தாட்டி வேல இருக்குதுனாங்க. மொதலியார் சொன்னா போதும்னாங்க. அதுக்கும், ரங்கப்பிள்ள, வேணாண்டா. அதுல மாசம் முப்பது ரூபாதான் சம்பளம். நீ மாசம் எழுபது சம்பாரிக்கிறே. அத உட்டுட்டு ஏண்டா அதுக்கு போகப்போறனு சொல்லிட்டாரு. கட்சி மீட்டிங் போவேன் கொடிப்புடிப்பேன். எவன்னா கட்சிக்கு எதிரா பேசினான்னா சொம்மா உடமாட்டேன். அப்பிடிலாம் இருந்துட்டேன். என்ன யாரும் உறுப்பினரா சேரவும் சொல்லல. எனக்கும் அதுப்பத்தி தெரியவும் தெரியாது. காலமும் தள்ளிட்டேன்” என்று லேசாக சிரித்தார்.

பற்கள் வரிசையாக அழகாக இருந்தது. மேல் பல் வரிசையில் நடுப்பல் ஒன்று சிமெண்டு நிறத்தில் இருந்தது. அதுவும் அவருக்கு அழகாகத்தான் இருந்தது. அவர் தன்னையே சுய விமரிசனம் செய்வது போல் “இன்னா நான் தப்பா எதுனா சொல்றேனாய்யா எல்லாம் உண்மைதான் பொய்யே கெடையாது.”

“இல்ல பெரியவரே நீங்க சொல்றது பொய்மாதிரியே தெரியல. நான் நம்புறேன்.” என்றதும் பெரியவர் வெளிப்புற‌ப்பட்ட வார்த்தையை சற்று அடக்கி “நீங்க எங்கயிருக்கிறீங்க.” என்றார்.

“நான் இந்த ஆபிஷ்தான். அய்யான்னு சொல்லாத பெரியவரே. அடிக்கடி இந்த பக்கம்வருவ இல்ல. உன்ன அப்புறமா பாக்குறேன்” என்று அவன் சொன்னதும் மனசு குளிர்ந்திருக்கும் போல. “இல்லையா. இந்த பக்கம் வரமுடியாது. இன்னிக்கிகூட ஒரு மோசக்காரன் வக்கில பாக்கலாமுனு தான் வந்தேன்”. இப்படி சொல்லிவிட்டு, அவனை சந்தேகத்துடன் பார்த்து பேச்சை நிறுத்தினார். அவன் தாராளமாய் சொல்லு பெரியவரே என்பதுபோல் சைகை காட்டினான்.

“என் பொண்டாட்டிக்கு கூடபொறந்தவங்க ரெண்டு பொம்பளைங்க, ஒரு ஆம்பள . எங்க மாமியார் நெலம் வித்தாங்க. எங்களுக்கு பாகம் குடுக்கல. நான் பொண்ணுங்களுக்கும் பாகம் உண்டுன்னு கேஸ் போட்டேன். கேஸ் நடந்துகினு இருந்தது. என் பொண்டாட்டி செத்துட்டா. கேஸ் நடந்து தீர்ப்பு வரநேரம் பாத்து எங்கம்மா படுத்துட்டாங்க. ஆஸ்பத்திரிக்கு, அதான்ய்யா மெட்ராஸ்ல செத்த காலேஜோ, இந்நேது, உயிர்காலேஜோ அங்கதான் கூட்டிம்போனேன். புத்து நோவுனு சொல்லிட்டாங்க. அங்கியே மூணு மாசம் பாத்து கூட்டிக்கினு வந்தேன். வீட்ல ஒரு வாரம் இருந்து செத்துப் போயிட்டாங்க. அதுக்கப்புறம் போயி எங்க மச்சினிச்சிகிட்ட கேட்டா, உனுக்கு வந்த பாகத்த வக்கிலு வச்சிங்கிறாரு போயி வாங்கிக்கோனு சொல்லிட்டா. சரி வக்கில பாக்கிலாமுனு வந்தப்போ என்ன ஒரு கார்காரன் இடிச்சிட்டான். இடுபெலும்பு ஒடிஞ்சி மறுபடியும் மெட்ராஸ் கொண்டாந்து போட்டாங்க. அப்பத்தான் எமனாண்ட போய்வந்தேன்” என்று சாதாரணமாக சொன்னார்.

இவ்வளவு நேரம் பொறுப்புடன் கேட்டவன், இப்போது ஜோக்கை கேட்பது போல் உள்ளுக்குள் சிரித்தான். என்னமா புருடா விடுகிறார் என்று அவனுக்குத் தோன்றியது. இவ்வளவு நேரம் அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பியவனுக்கு, அது மட்டும் பொய் என்று எப்படி ஊகிக்க முடிகிறது. உண்மையாகவும் இருக்கலாம். பொய்யை நிறுவ உண்மைசாயம் தெளிப்பவையாகவும் இருக்கலாம். என்னதான் சொல்கிறார் பார்ப்போம். “பாசக்கயிறு, எரும கடாலாம் இருந்ததா?” .

“கார்காரன் இடிச்சதும் நான் துரமாக போய் விழுந்து விட்டேன். உடனே மேலே இருந்து தூதர்ங்க நாலுப்பேரு வந்து என்ன தூக்கிப் போனாங்க. என் தொந்தி மட்டும் கீழே கெடந்தது. அதை ஜனங்களாம் சேர்ந்து வண்டில தூக்கி போட்டுகினு போயிட்டாங்க. கத்தக் கத்தையா மீசை வச்சிகினு இம்மா ஒயரமா நிக்கிறாரு. தூக்கியாந்தாங்களே அவுங்களப் பாத்து மொறைச்சாரு. கீழப்போட்டு தல குனிஞ்சி நின்னாங்க. அந்த எடம் ஏதோ மாய எடம்மாதிரி மங்கலா இருக்குது. எருமைக்கடா இருக்குதுபோல. எனக்கு சரியா தெரியல. தூதர்ங்கள மொறைச்சிட்டு என்ன காலால எட்டி ஒதைச்சாரு. அப்புறம் ஆஸ்பத்திரில கண்ண முழிச்சிக்கிட்டேன்” என்று பெருமிதம் பொங்கச் சொன்னார்.

அவன் இடையிடையில் அந்த இடம் எப்படியிருந்தது, எமன் உடைகள் எப்படியிருந்தது என்ற கேள்விக்கெல்லாம் உறுதியான பதில் இல்லை. பெரியவர் தொடங்கினார். “அப்புறம் கொஞ்ச கொஞ்சமா தடிய ஊனி நடந்தேன். கொஞ்ச நாளானதுக்கப்புறம் வக்கில பாக்கவந்தேன். அய்யா வெளிய போயிருக்காரு, கேஷ்சுக்கு போயிருக்காருன்னு ஒவ்வொரு நாளும் சொன்னாங்க. ஒரு நாள் வக்கிலு பார்த்தாரு. ‘யோ உன் பொண்டாட்டிதான் செத்துப் போச்சே, எப்படி காசு தருவானுங்க. எனக்கே பீஸ் குடுக்காம போயிட்டாங்கனு சொன்னாரு. ஏன் புள்ளங்க இருக்குதேன்னு கேட்டா, போயி உங்க மச்சினி எல்லாம் கூட்டிக்குனு வா. மறுபடியும் கேசு போடலாம்னு சொல்லிட்டு, ஐம்பது ரூபா கொடுத்தனுப்புறான்ய்யா. இதுக்கப்புறம் கேசுப்போட்டு சுடுகாட்டுக்கு வாரிம்போப்போறேனு உட்டுட்டேன். அப்பிடி, வரச்சொல்லலாம் வந்து பாப்பேன். பாக்கட்டுல இருந்து இருவதோ முப்பதோ கொடுத்தனுப்புவாரு. அம்பதுக்கு மேல குடுக்கமாட்டாரு. இன்னிக்குக் கூட அவர பாக்கலாமுனுதான் வந்தேன். ஏன் பையன் ஊட்டுக்குக் கூட போகமுடியாது. நேரா ஊட்டுக்குத்தான் போகணும்” என்றார்.

பிச்சை எடுக்கும் ஒருவரோடு பேசினால், பார்வையாளர்களுக்கு இருவரும் ஒரு தன்மையோடுதான் தெரிகிறது. அவன் அவரிடம் அதிக நேரம் எடுத்துக் கொண்டான். அலுவலம் தாமதமாகிவிட்டது. வருத்தப்பட்டான். இருந்தாலும் சாப்பிட்ட பிறகு எப்படியும் அரைமணி நேரம் பணிசாராத கதைதான் பேசுவார்கள். நமக்கு இப்படி செலவாகட்டும் என்று நின்றவன், என்னடா உலகம் இது, எத்தனை காலம் வாழப்போறோம் பிள்ளைகளே தனக்கு உயிர்பிச்சை தந்த பெற்றோரை துரத்துவதா, மதிக்காமல் போவதா என்று வேதனைப்பட்டவனாக “ஏன் பெரியவரே, அவன் வீட்டைத்தேடி போனாக் கூடவா உன் பையன் சேக்கமாட்டான்” என்றான்.

“இல்லையா, காசு கொஞ்சம் அதிகமா வசூலாச்சினா ஒரு கோட்டரோ, ஆப்போ சாப்பிடுவேன். அப்பிடித்தான் அன்னிக்கும் கோட்டர் சாப்பிட்டு, அவன் ஊட்டாண்ட போனேன். இன்னாடா பையா அங்க சொந்த எடத்த உட்டுட்டு இங்க வந்து இருந்தா எப்படிடா. அந்த கூரை எல்லாம் பிஞ்சிப்போச்சி. எனக்கு தண்ணி வெச்சிக்குடுக்கக் கூட நாதியில்ல. நம்ம ஊட்டுக்கு வாடானு கூப்பிட்டேன். அவன் வெளியே பெருக்கிக்கினு இருந்தான். நானே நாலு புள்ளங்கள வச்சிக்கினு சாப்பிடக்கூட வழியல்லாம கஷ்ட‌ப்படுறேன். உனுக்கு சோத்த ஆக்கிப்போடதான் வரணுமா போடா. ஆதியில இருந்து சம்பாதிச்சி தத்தி தத்தியா வாங்கி உட்டுக்கிறியே. அதப்பயிர் வெக்க கூப்பிடுறியா. அப்பவும், அப்பிடித்தான் அழிச்சே. இப்பவும் இப்படித்தான் அழிக்கிற. பிச்சக்கார நாயே போடான்னு தள்ளி தொடப்பத்தாலேயே போட்டான்.

நான் இன்னாப்பன்னேன், கையில இருந்த கொம்புல கால்மேலையே போட்டேன் ஒன்னு. அவனுக்கு கால் முறிச்சிக்கிச்சி. இந்த கொம்பு, எப்பேர்ப்பட்ட கொம்பு” அவர் கையில் இருந்த கொம்பைக் காட்டினார். அப்போது இதயம் குளிர்ந்த சிரிப்பு அவர் முகத்தில் பரவியது. கொம்பைப் பார்த்த அவனுக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. கொம்பை உற்றுப்பார்த்தான்.’எங்க காமிங்க’ என்று பெரியவர் கையில் இருந்த கொம்பை வாங்கிப் பார்த்தான். “அம்மா! வைரம் பாஞ்சா கொம்புதான்.” ஒன்றும் பேசவில்லை. பேண்டு பாக்கட்டில் தேடி “இந்தா பெரியவரே டீ சாப்பிடு” என்று ஐந்து ரூபாயைக் கொடுத்தான். அவன் இதயத்துடிப்பு வேகமானது. அங்கிருந்து சட்டென நகர்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *