Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டொக் …டொக் …டொக்

 

விசுக்கென்று அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டான் நரேன். பக்கத்தில் நடுங்கியபடியே, ஓடிவந்த மூச்சிறைப்புடன் அபி. இத்தனை பதட்டத்திலும் கூட, அவளை அழகு என்று விவரிக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் அழகு. பயத்தில் இன்னமும் சிவந்துபோய் இருந்தவளை பார்க்க நரேனுக்கு இந்த நேரத்திலும் முத்தமிடவேண்டும் போல .. “ஏன் ..ச்சே ..கதவை திறந்தால் உயிர் போய்விடும்.. இந்த இடத்தில் எதற்கு இப்பிடி ஒரு சிந்தனை?”, நரேன் அவளை அணைத்துக்கொண்டே அறையினுள்ளே வந்தான். ஒரேயொரு மேசை. மேலே ஒரு பல்ப். எரித்துக்கொண்டிருந்தது.

நாங்க எங்கடா இருக்கிறம் இப்ப?

உஷ் … இது ..

ஆள்காட்டி விரலை அவளின் உதட்டில் வைத்து அழுத்தினான் நரேன். ஹார்ட் பீட் நூற்றி இருபது இருக்கலாம். ட்ரெட்மில்லில் ஓடும்போது, நூற்றி ஐம்பதை தாண்டினால் தான் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டரோல் குறைய தொடங்குமாம். பிரவீன் சொல்லியிருக்கிறான். பிரவீன் … எங்கே போயிருப்பான்? .. தப்பியிருப்பான் அவன் .. எமக்கு முன்னாலேயே ஓடிப்போனானே.

என்னத்தையாவது பேசடா … பயமா இருக்கு நரேன்

பேசவில்லை. அபி பயத்தில் மூடிய கண்ணை இன்னனும் திறக்கவில்லை. நரேன் இப்போது நிமிர்ந்து அறையை சுற்றும் முற்றும் பார்க்கிறான். மிக விசாலமாக தெரிந்தது ..மிக விசாலமாக .. வெளிச்சத்தில் அறையின் சுவர்களை கூட காணவில்லை. வந்த வழியை திரும்பிப்பார்த்தான். கதவு தெரிந்தது .. இரண்டு புறமும் சுவர் .. நீண்டு நீண்டு ..என்ன மாதிரியான கட்டடம் இது? அறையா? சுவரா? சுவரே இல்லாத அறையா? எதற்கு இந்த கதவு? ச்சே இப்படி வந்து மாட்டியாச்சு. அடியும் விளங்கேல்ல நுணியும் விளங்கவில்லை. நரேனுக்கும் அடிவயிற்றில் ஏதோ ஓரு பயம் .. காட்டிக்கொள்ளவில்லை. அபியைப்பார்த்து மெலிதாய் சிரித்தான்.

அபி…

ம்ம்ம்..

இத பார்த்தா அறை போல தெரியேல்ல .. திடீரென்று ஒரு மூலையில் இருந்து அதுகள் வந்திட்டா?

என்னடா சொல்லுற? பயமுறுத்தாத.. ..இது அறை தானேடா .. அந்த கதவு ..வெளிய இருந்து திறக்கும்போது ..உள்ளுக்க பல்ப் ..மேசை கூட…ஆனா ஆனா .. இந்த மேசை ஏன் நீள் சதுரத்தில் ..

அபி பேசிக்கொண்டு இருக்கும்போதே அவசரமாக ஏதோ அரவம் கேட்டு அவளின் வாயைப்போத்தினான் நரேன். கதவுக்கு வெளியே தான் ஏதோ சத்தம் .. வந்துவிட்டுதுகளா?

டொக் …டொக்….டொக்

கதவு தான் தட்டப்படுகிறது. இருவருக்கும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போய்விட்டது. என்ன செய்வது? யாராக இருக்கும்? திறப்பதா? விடுவதா? நரேன் குழம்பினான். அபி இன்னும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டாள். கட்டை மெதுவாக விலக்கி. அவளை மேசைக்கு அடியில் ஒளியும் படி சொல்லிவிட்டு, ஷூவை கழட்டி கையில் எடுத்துக்கொண்டு மெதுவாக நரேன் கதவடிக்கு போனான். ஆயுதம் இல்லை.

டொக் …டொக்….டொக் ..

ஒரு டொக்குக்கும் இன்னொரு டொக்குக்கும் இடையே இருந்த அமைதி மிரட்டியது.

ப்ளீஸ் கதவை திற .. ப்ளீஸ்

நரேனும் அபியும் உள்ளே இருப்பது தட்டுபவனுக்கு தெரிந்திருக்கவேண்டும். அல்லது பொதுவாக தான் சொல்லுகிறானா? திரும்பி அபியை பார்த்தால் .. நடுங்கிக்கொண்டு இருந்தாள். இன்னமும் சிவந்து … கள்ளுறக்கனிந்த பங்கி இவளை அப்படியே .. அம்மாடி … ச்சே சனியன் பிடிச்ச கம்பனும் காதலும் காலம் நேரம் தெரியாமல் … புத்தியை செருப்பால அடிக்கோணும்.

நரேன் … நீ தான் எண்டு தெரியும் .. பிளீஸ் திற .. அவங்கள் வைகுண்டத்துக்கும் வந்திட்டாங்கள்!

திடுக்கிட்டான் நரேன். வைகுண்டமும் போச்சா. கடவுளே என்ன ஊழிடா இது.. கொஞ்சமே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெதுவாக பேசினான் நரேன்.

நீ யார் என்று முதலில் சொல்லு .. உன்னை எனக்கு தெரியுமா?

தெரியுமாவா? உன்னை படைச்சதே நான் தாண்டா .. அப்பன்டா!

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை தணிகாசலம், நரேனின் அப்பன், ஐஞ்சாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப்பில பெயிலானதுக்கு முதுகுல போட்டது சன்னமாக அவனுக்கு ஞாபகம் வர,

நரகத்தையும் பிடிச்சிட்டாங்களா?

டேய் நான் வேத முதல்வன்டா .. உன்னை .. அபியை … இந்த அறையை .. எல்லாத்தையும் படைச்சவன்!

கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பிரம்மன் பக்கத்தில் இருப்பது எப்போதும் நன்மை தானே. நரேன் அபியை திரும்பிப்பார்த்தான். அவளும் ஆயாசமாயானது போல தோன்றியது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது. பிரம்மனே வழியில்லாமல் ஓடும நிலை.

ஓ நீயா .. சொறி நீங்களா .. உங்களுக்கே ஆப்பு வச்சிட்டாங்களா?

என்று சொல்லிக்கொண்டே தாழ்ப்பாளை மெதுவாக திறந்துகொண்டிருக்கும்போதே வெடுக்கென்று புகுந்தான் அவன்.

அவன்! வேத முதல்வனா அவன்? ம்ம்ஹூம். கன்னங்ககறுப்பாக .. மூன்று தலைகளை வேறு காணோம்.. ஏமாற்றிவிட்டான் பாவி. இவன் அவன் ஆளா? எங்களை போல அகதியா? இனியும் அகதிகள் வந்தால் அடக்கலாமா? அவசரப்பட்டு விட்டோமோ? என்று நரேன் யோசித்துக்கொண்டே இருக்கும்போது இப்போதைக்கு நான்முகன் மேசைக்கு பக்கத்தில் போய்விட்டிருந்தான். இப்போது அபி மீண்டும் பயத்தில் விறைத்து சுருண்டு போயிருந்தாள்.

நீங்கள் நான்முகன் தான் என்பதற்கு என்ன அடையாளம்? நான்முகன் ஆரியன் அல்லவா? உங்களை பார்த்தால் கறுப்பாக இருக்கிறதே? நீங்கள் சிவனா? இல்லை திருமாலா? இல்லை சுமந்திரனா? சொல்லுங்களேன்.

சிரித்தான். பல்லெல்லாம் கறுப்பு. வெளியில் தெரியும் எந்த இடமும் வெள்ளை இல்லை. கறுப்பு. சனீஸ்வரன் போல .. ஏமாற்றுப்பட்டுவிட்டோம் ச்சே .. எழுந்து ஓடும்போது ஏழரை ஆரம்பித்ததை மறந்தேவிட்டேனே என்று நரேன் குழம்பிக்கொண்டிருக்க, நான்முகன் aka சனியன் இப்போது அபியை பார்த்தான். அபி சுருண்டு, நடுங்கி .. முன்னே சொன்ன எல்லா விவரணங்களும் இன்னமும் அப்படியே.

சொல்லுங்க .. நீங்க யாரு … நீ..ங்க தான் பிரம்மன் எண்டதுக்கு

வாயை மூடுமாறு சைகை செய்துகொண்டே மேலே எரிந்துகொண்டிருந்த பல்ப்பை பார்த்து கை நீட்டினான் அவன்.. பல்ப் பட படவென்று மின்னத் தொடங்கியது .. வெளிச்சமும் இருளும் .. வெளிச்சமும் இருளும் … இருண்டபோது தான் தூரத்தில் சின்னதாய் இன்னொரு எல்ஈடி பல்ப்பும் இருந்தது தெரிய .. திடீரென்று ஒட்டுமொத்தமாய் பல்ப் அணைந்துவிட்டது. வீல்…… என்று கத்தினாள் அபி. எல்ஈடி இன்னமும் எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில், மிரண்டுபோயிருந்தாலும் அபியின் அழகு. எல்ஈடி தோத்துது போ!

ஹ ஹ ஹ .. சிரித்துக்கொண்டே “இப்ப பாரு” என்று நான்முகன் aka சனியன் சொல்ல மீண்டும் பல்ப் எரிந்தது. அறை முழுதும் வெளிச்சம். காய்த்துகொண்டிருந்த எல்ஈடியை காணவில்லை!

கடவுள் என்று சொல்லிக்கொண்டு வந்தவன் வித்தை காட்டுகிறான். அபி நரேனிடம் “இவனை எப்படியாவது வெளியே அனுப்பு” என்று கிசுகிசுக்கிறாள். நமக்கே சாப்பாடு இல்லை. மூன்றுபேரை இந்த அறை தாங்குமா?. நரேனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிரச்சனைக்கு ஒளிந்து ஓடி அறைக்குள் வந்தால் இவன் இப்படி வந்து ஒட்டிகொண்டானே. பிரம்மஹத்தி!

“பசிக்குதா அபி ?”

கேட்டுக்கொண்டே அவன் தன் கறுப்புக்கோட்டுக்குள் இருந்து எதையோ எடுக்கும்போது தான் அபி கவனித்தாள். அட … கறுத்தக்கொழும்பான். கோண்டாவில் உயர் சாதி மாம்பழம்! இப்போது அபியின் சிவந்த உதடுகளில் இலேசாக எச்சில் ஊறத்தொடங்கியது. “எத்தனை நாளாயிற்று இந்த மாம்பழத்தை சாப்பிட்டு. இவர் கடவுளே தான்!” என்று அபி யோசிக்கும்போது, அந்த கிரனைட்டை கண்ட நரேன் வெலவெலத்து போனான். இவன் ஏன் கிரனேட்டை எடுக்கிறான்? .. என்ன இது! சோதனை உள்ளேயுமா? அட ஆண்டவா!

டொக் …டொக்….டொக்

—————————— முற்றியதா? ————————————-

பிற்குறிப்பு: இந்த சிறுகதை 31-05-2012 வியாழ மாற்றத்தில் வெளிவந்தது. தனிப்பதிவாக போடகூடிய கதை என்று நண்பர்கள் சொல்லியதால் பல மாற்றங்களோடு மீண்டும் இங்கே தந்திருக்கிறேன்! 

தொடர்புடைய சிறுகதைகள்
“The present determines the past” -- Veera’s Theorem இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” -- வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி ...
மேலும் கதையை படிக்க...
“மெல்பேர்ன் சென்ரல் செல்லும் அடுத்த புகையிரதம் இன்னமும் ஐந்து நிமிடத்தில் புறப்படும்" எப்பிங் நிலையத்தில், பச்சை நிற பொத்தான் அழுத்தியபோது சொல்லியது. ஆஸ்திரேலிய வசந்தகாலம் காதில் கூசியது. ஜாக்கட்டின் ஜிப்பை இன்னும் மேலே இழுத்துவிட்டேன். ஐபாட் காதுக்குள் இளையராஜா “தென்றல் வந்து தீண்டி”னார். ...
மேலும் கதையை படிக்க...
ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் ...
மேலும் கதையை படிக்க...
இன்று அவளுக்கு chemistry பரீட்சை. முதலாம் பகுதி என்பதால் பதினொரு மணிக்கெல்லாம் பரீட்சை முடிந்து விடும். எனக்குள் மெதுவான ஒரு பதட்டம் பரவத்தொடங்கி இருந்தது. அவளை கடைசியாக பார்த்து ஒரு வாரம் ஆகியிருக்குமா? கண்ணாடியில் பார்த்த போது முன்பக்க முடி இலேசாக ...
மேலும் கதையை படிக்க...
கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் 'ய'வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள். சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். கனக்ஸ் மாமா வீட்டு முற்றத்துக்குள் நுழையும்போதே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அவரின் தோட்டம் முழுதும் புதினமான ...
மேலும் கதையை படிக்க...
வீராவின் விதி
என்ர அம்மாளாச்சி!
கதை சொல்லாத கதை!
உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம்!
கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

டொக் …டொக் …டொக் மீது ஒரு கருத்து

  1. Sindhu AL says:

    After that what hpn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)