டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.) த்ரில்லர்
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 24,217 
 

போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். ‘ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா இன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று.

ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் இருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீது ‘டபில்’ மெத்தை ஒன்றும் சுவரோரமாக ,ருந்தன. ‘நைட் புக்கிங்’குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான் ‘நைட் புக்கிங்’ ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது ,ருந்த மெத்தையை இலேசாகத் திருப்பி, அதன் அடியிலிருந்து ஒரு நீளமான அரை டூஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு, கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் டூழுத்துவிட்டுக்கொண்டே, மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள். உத்திரத்தில் ஒரு இரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு, கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா? நடுவில் இருந்த மெர்க்குரி விளக்கின் மேற்பாதி, ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால், வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு, கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு, கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள்.

மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி, நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஓடிவந்தாள். புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை இறுகக் கட்டினாள். அவள் இழுத்த இழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது. வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு, அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் இளைப்பாறிவிட்டு, கை நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும், மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள். வீட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு? அதுவும் இல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு, தன் கழுத்துக்கும் இரும்பு வளையத்துக்கும் உள்ள இடைவெளியையும், சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே இருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் இல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு இரண்டாக வகுத்துக்கொண்டாள். இப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் இருந்த பிளவில் கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது. இவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி, ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க, கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு இதிலெல்லாம் அனுபவம் போதாது. இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு, ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது. அப்போது கீழ்க் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது. ‘இப்போது இதுக்கு என்ன அவசரம்?’ என்று நினைத்தவள் போல், தேவயானை கீழே ஓடிச்சென்று, சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள்.

அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

”கதவெத் தெறக்க இந்நேரமா?” என்றான் அத்தான்.

”மேலே இருந்தேன்” என்றாள் தேவயானை.

”கதவை அடைச்சிட்டு, லைட்டை அணைச்சிட்டு இருன்னா, ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது?” என்றுகொண்டே அத்தான் நுழையவும், கூட இருந்தவரும் உள்ளே நுழைந்தார்.

”உம், லைட்டைப் போடு” என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து இருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும், ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ”சரிதானேங்க?” என்றான் அத்தான், அவரைப் பார்த்து.

ரேழியை அடுத்திருந்த அறையினுள் நுழைந்து, குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ”பரவாயில்லை, எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க” என்றார் அவர்.

”இங்கே எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கும்” என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. ”அப்ப நா வர்றேன்.”

”பணம்?” என்றார் வந்தவர்.

”எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன்” என்றுகொண்டே வெளியேறினான் அத்தான்.

வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு, ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு, வந்தவரிடத்து, ”வாங்க” என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின் பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார்.

”இப்படி உட்காருங்க” என்றாள் அவள்.

”இல்லே, அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி இருக்கே, அதை எடுத்திட்டு வா” என்றார் அவர். அவள் சிரித்தாள்.

”எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம்” என்று அவர் விளக்கினார்.

பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவயானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.

”நீ அழகா இருக்கே” என்றார் அவர். அவள் சிரித்தாள்.

”கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க” என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். ”உம், வேடிக்கைக்குச் சொல்லலே; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க.”

அவள் அவ்வாறே செய்தாள்.

”கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு.”

அவள் மீண்டும் சிரித்தாள்.

”கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன்” என்று கொஞ்சுவது போல் அவர் சொன்னார்.

”நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா?” என்று அவள் சிரித்தாள்.

”ஆமா, அப்படித்தான் வச்சிக்கயேன்” என்றார் அவர்.

அவளும் அவளது சேலையையும், முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு, ஏதோ குறை கண்டவராய், ”உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே; கொஞ்சம் படுத்துக்க” என்றார் அவர்.

”நீங்க உட்கார்ந்துதானே இருக்கீங்க, வெறுமனே” என்றாள் அவள் சிரிக்காமல்.

”நான் இங்கே உக்காந்து இருந்திட்டுப் போகத்தானே வந்திருக்கேன்” என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு டூருந்தார்.

”உங்களுக்கு ஆசை இல்லையா?” என்றாள் அவள்.

”நிறைய இருக்கு.”

”அப்ப?”

”அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே இருக்கேன்.”

”பாத்துகிட்டே இருந்தாப் போதுமா?” அவள் சிரித்தாள்.

”தொட்டுப் பார்க்கலாம்.”

”நீங்க தொட்டுப் பாக்கலயே.”

”தொட்டா நீ சும்மா இருக்கணுமே!” என்றார்.

அவள் சிரித்தாள். ”நான் ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன்; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க.”

வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார்.

”இல்லே வச்சிக்கோங்க, எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு” என்றான் அத்தான்.

”இப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க” என்றார் அவர்.

அத்தான் வெளியேறுகிறான்; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார்.

”கொடுமை” என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார்.

”எது?” என்றாள் அவள், கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு.

”இந்த நேரக் கணக்குதான்” என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே, அவரது இரு கன்னங்களிலும் இறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள்.

”சரி, நீ போய்ப் படுத்துக்க” என்கிறார் அவர்.

”நீங்க என்ன செய்யறீங்க?” என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள்.

”இங்கே இருக்கேன்” என்கிறார் அவர்.

”அதெக் கேக்கலே; என்ன தொளில் செய்யறீங்க?”

”பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.”

அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள்.

”எனக்குத் தண்ணி தவிக்குது” என்கிறாள் தேவயானை.

அவர் எழுந்து, ரேழி விளக்கைப் போட்டு, மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது, அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது மார்பகத்தை நனைக்கிறது.

நின்றுகொண்டிருக்கும் அவர், ”சென்று வருகிறேன்” என்கிறார்.

”அடுத்த வாட்டி எப்ப வருவீங்க” என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.

இரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள் விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே, ”அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார்” என்றாள்.

”யாரவன்?” என்றான் அத்தான்.

”அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே, அவருதான்.”

”மொதல்லே யாரக் கூட்டியாந்தேன்? நான் இன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன்?”

”அதான், ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே, அவரே நெனப்பில்லையா?”

”ஏளு, ஏளரை மணிக்கா? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே!”

”இன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா?”

”ஆமாம், இருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே இருந்திட்டேன்.”

”அப்ப, அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே?”

”டாக்டரா? அவர் யாரு டாக்குட்டரு? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா, இல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா?”

”இல்லயே, கதவ அடச்சிட்டு மேலேதான் இருந்தேன். நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன்.”

அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள்.

”கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட இல்லே” என்றுவிட்டு தேவயானை சிரித்தாள்.

”தேவு, சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே இன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன்?”

”நா உளர்றேனா, நீங்க உளர்றீங்களா?” என்றுகொண்டே, தான் அவரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும், பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் இரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான்.

”எங்கே போயிருக்கும்; இங்கேதான் எங்காவது இருக்கணும்” என்றாள் தேவயானை நம்பிக்கையோடு.

”எது?” என்றான் அத்தான்.

”அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான்.”

”நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா?” என்றுகொண்டே அத்தான் சிரித்தான்.

”நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க” என்றாள் தேவயானை, இன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே.

”ஒருவேளை மேலே மாடியிலே இருக்கும்” என்றுகொண்டே, தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு இரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன.

Print Friendly, PDF & Email

2 thoughts on “டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்

  1. அழகான வார்த்தை கோர்வைகள். மூன்று நபர்கள் மட்டுமே கதைக்கான மாந்தர்கள்.
    ”பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.”..அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *