கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்  
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 22,063 
 

“அரிகாதொ”. வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி சொல்லிவிட்டு, பதில் நன்றி சொல்ல அவள் குனிந்த போது மார்பு தெரிகிறதா என்று பார்த்தான்.

“மடா இகிமாசு”. திரும்பி வருவதாகச் சொல்லி அவள் நடந்தபோது, நடைக்கேற்றபடி அசைந்த இறுக்கி உயர்ந்த அளவான பிட்டங்களின் கவர்ச்சியில் கண்ணையும் மனதையும் செலுத்தியபடி, விசாலமான சொகுசு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். இவளை இங்கேயிருந்து கடத்திக் கொண்டு போனால் நன்றாக இருக்குமேயென்று நினைத்துக் கொண்டான்.

அமெரிகாவிலிருந்து பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து இங்கே விற்பது போல், எதிர்த்திசையிலும் செய்யலாமென்று கூட்டாளியிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்தான். மசாஜ் பெண் திரும்பி வரும்போது எப்படியும் அவளைத் தொட்டுவிட வேண்டும் என்று காத்திருந்தான்.

கைகளில் ரப்பர் கட்டை போல் ஏதோ எடுத்துக்கொண்டு திரும்பி வந்தவள், புன்னகைத்துவிட்டு, அவன் முகத்தில் நறுமணம் வீசும் துண்டைப் போர்த்தினாள். பின்னர் தலையைச் சிலிர்த்துக்கொண்டு சற்றும் எதிர்பாராவிதமாக ரப்பர் கட்டையினால் அவன் முகத்திலும் மண்டையிலும், மாற்றி மண்டையிலும் முகத்திலும், அறுபது மைல் வேகத்தில் அடித்தாள். வலியால் துடித்தாலும், அவன் வாய் திறக்க முடியாதபடி அசுரவேகம். கைகால்கள் பொம்மலாட்டம் ஆட, அரை நிமிடத்துக்குள் முகமெல்லாம் வீங்கி மூச்சு நின்றுபோய் இறந்தான், சொட்டு ரத்தம் சிந்தாமல். கத்தியினிறி ரத்தமின்றி யுத்தம்.

செப்டம்பர் 11க்கு பிறகு உலகின் பெரும்பாலான விமான நிலையங்களில் உயிர் போகிற நெருக்கடி என்றால் கூட அவசரமாக ஒன்றும் செய்ய முடியாது. நகோயா விமான நிலையத்திலும் இதே தொல்லை தான். போதாக்குறைக்கு அவன் இருந்ததோ முதல் வகுப்புப் பிரயாணிகளுக்கான தனி ஓய்வறை. இறந்து போயிருந்தால் கூட உண்மை தெரியவர நேரமாகும். அதுவும் பார்ப்பதற்கு வெளியூர் போல் தெரிந்தால் பக்கமே வரமாட்டார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து யாரோ ஒரு பயணி சந்தேகத் தகவல் சொல்லி விவரம் தெரிந்ததும், நெரிசலாய் கூட்டம். விமான நிலையக் காவல்துறை, விமானப் பணியாளர், மருத்துவ உதவிக்குழு என்று எல்லோரும் ஓடி வந்தனர். இறந்தவன் ஜப்பானியனோ, அமெரிக்கனோ, அதுவுமில்லாத வெள்ளைக்காரனோ இல்லை என்று தெரிந்ததும் சற்றுத் தயங்கினர். “இன்டியன் தெசு” என்று இழுத்தாள் ஒருத்தி. இன்னொருத்தி டி-பிப் கொண்டு வந்து உனக்காச்சு எனக்காச்சு என்று அவன் மார்பில் அடி மேல் அடியாய் அடித்தாள். அவன் நகராத அம்மியாய் இருந்தான். தற்போதைக்கு யாரென்றுத் தீர்மானமாகாத, அனாதைப்பிண அம்மி.
**

விமான நிலையத்துக்குள் ஒன்றும் புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். எப்படி இங்கே வந்தேன் என்று மறந்து விட்டது. ஏதோ உருப்படாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சுமார் முப்பதடி தூரத்தில் அவளைப் பார்த்தேன். முகம் சரியாக விளங்காத ஒரு பெண். கூட்டத்தில் தனியாகத் தெரிந்தாள். நான் அவளைப் பார்த்தது தெரிந்தும் பார்வை விலக்காமல், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் நகர்ந்தேன். எங்கேயாவது பார்த்திருக்கிறேனா? ஏன் என்னை வெறிப்பது போல் பார்க்கிறாள்?

என்னருகே கலவரம். போலீஸ்காரர்களும் நர்ஸ், மருத்துவர் என்று பலரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்க்க நினைத்துப் பின்தொடர்ந்தேன். மறுபடி அவளைப் பார்த்தேன். எனக்கு இருபதடி தூரத்தில், என்னையே பார்த்தபடி நின்றிருந்தாள். கோபம் வந்தது. ‘ஏன் இப்படி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்கலாமென அவளை நோக்கி நகரத் தொடங்கியபோது, நான் திடுக்கிடும்படி அவள் வலது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.
**

வெளிநாட்டுப் பயணிகள் வந்திறங்கும் ஒஹேர் விமான நிலையத்தின் ஐந்தாவது நிறுத்தம். லன்டன், ப்ரேங்பர்ட், ஆம்ஸ்டர்டேம், ரோம் என்று ஐரோப்பிய நகரங்களிலிருந்து நேரத்துடனும் நேரம் கடந்தும் சொல்லிவைத்தாற்போல் ஒன்றாக வந்துத் தரைதொட்ட விமானங்களில் வந்த பயணிகள், பரிசோதனைகளை முடித்துக் கொண்டு உள்ளூர் விமானமேறவோ, சிகாகோவில் சுற்றுலாவவோ, வாடகை வண்டி பிடித்து வீடு போய்ச்சேரவோ, எலிகள் போல் கூட்டம் கூட்டமாய் வெளிவந்தனர். சூட்கேஸ் சுமக்கும் எலிகளை வரவேற்கக் காத்திருந்தது இன்னொரு எலிக் கூட்டம். இந்த நெருக்கடியில் தகாத செயல் செய்யத்துணியும் சிறுநரிக் கூட்டம். அவன் அந்தச் சிறுபான்மைச் சிறுநரிகளில் ஒருவன்.

ப்ரேங்க்பர்டிலிருந்து வந்திருந்த விமானப் பணிக்குழு வெளிவரக் காத்திருந்தான். கையில் கால் கிலோ போதைப்பொருளுடன். விக்டோரியா பவுன்டன், மிசிகன் வழி, சியர்ஸ் டவர் என்று பலவித வண்ணப்பட முகப்புடன், ‘ஸ்வீட் சிகாகோ’ என்ற வார்த்தைகள் செதுக்கப்பட்ட, அட்டைப்பெட்டியினுள் சிறு சாக்லெட் பொட்டலங்களில் கோகெய்ன்.

விமானப் பணிக்குழுவிலிருந்து வரும் இரண்டாவது பைலட்டிடம் பெட்டிகளைக் கொடுக்க வேண்டியது அவன் வேலை. முதல் பைலட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு வருவது கூட்டாளி மிகேலின் வேலை. தொலைவில் இரண்டாவது பைலட் வருவது தெரிந்ததும் மெள்ள நடந்து, அன்னியச் செலாவணி விற்பனைக்கூடத்தைக் கடந்து, மெக்டானல்ட்ஸ் எதிரே இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான். பைலட் வந்து சேர பத்து நிமிடமாவது ஆகும். அமரும்போது அண்மையில் நின்றிருந்த இருவரையும் பார்த்தான்.

பட்டுக்கரை வேட்டி சட்டையணிந்து நெற்றியில் விபூதி குங்குமத்துடன் கொஞ்சம் வயதானவன் போலிருந்தான் ஆண். ஓரளவுக்கு நேர்த்தியான சின்னாளப்பட்டு புடவையும், கழுத்தில் மணித்தங்கம் சேர்த்தப் புத்தம் புதிய பளிச் மஞ்சள் கயிறும், நெற்றியில் நல்ல சிவப்பில் குங்குமப்பொட்டும் அணிந்து அவனுடன் ஒட்டிக்கொண்டு, இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். இருபது கூட சொல்லமுடியாத வயதில் இத்தனை வாளிப்புடன் சாதுவாக இருக்கும் அந்தப் பெண்ணை இன்றைக்குப் போட்டால் நன்றாக இருக்குமே என்று விகாரமாய் நினைத்தான்.

அவர்களிருவரையும் இங்கிருந்தே கவனித்தவன், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் கண்கள் தற்செயலாய் இவன் பக்கம் வந்தபோது, தேடிக்கலந்து புன்னகைத்தான். மருண்டு போய் முகம் திருப்பிக்கொண்டவளின் சற்றே விலகிய முந்தானையில் தெரிந்த செழிப்பான மார்பையும் பிளவையும், கண்ணால் பார்த்து மனதால் தொட்டான். அவன் கவனிப்பது தெரிந்தோ இயல்பாகவோ மார், தலை, முகம் என்று எல்லாவற்றையும் புடவைத் தலைப்பால் சுற்றிக்கொண்டவளின் கண்களில் தெளிவான அச்சத்தைப் பார்த்தான். இரையின் மருட்சி. ‘எங்கே இந்த சோதாப்பய?’ என்று நினைத்தபோது எதிரில் வந்து உட்கார்ந்தான் பைலட்.

“என்ன சாப்பிடுகிறாய்?” என்று கேட்டான் பைலட்டிடம். ‘பிக் மேக் அன்ட் கோக்’ என்று பதில் வந்தால் பணம் சரியாக இருக்கிறது, சரக்கு தரலாம் என்று பொருள். ‘பிக் மேக் அன்ட் வாடர்’ என்றால் சரக்கு தர வேண்டாம் என்று பொருள். பணத்தைச் சரிபார்த்துவிட்டு மிகேல் பதில் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருப்பான்.

“பிக் மேக் அன்ட் கோக்” என்றான் பைலட்.

தன்னிடமிருந்த மூன்று அட்டைப்பெட்டிகளை அந்தப் பைலட்டுக்கு அருகேயிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு சாதாரணமாய் நடந்தான்.

திரும்பிப் போகலாமென்று நினைத்தவன், அந்தப் பெண்ணின் கபடமில்லாத அபரிமித வளைவுகளையும் விறைத்த மார்பையும் மறக்க முடியாமல் உடம்பெல்லாம் பாதரசமாய்ச் சூடேறி, துரிதமாக அவர்கள் எதிரே சென்று நின்றான். அவளைப் பார்த்து, வேண்டுமென்றே வளமான ஆங்கிலத்தில், “ஏதாவது உதவி தேவையா?” என்றான்.

“ஏங்க, ஏதோ கேக்கறாரு பாருங்க” என்றாள் அந்தப் பெண், அருகிலிருந்த ஏங்கவிடம். தேனில் தோய்த்த குரல். அவளை அப்படியே நக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. பொறுமை என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, “நீங்க தமிழா?” என்றான் செயற்கை நட்புடன்.

“ஆமாம், அண்ணே” என்றாள். தமிழ்க்குரல் கேட்டதும் அவள் மருட்சி அகன்றது போல் பட்டாலும் ‘அண்ணே’யில் அழுத்தம் அதிகமாகத் தொனித்தது.

“உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?” என்றான் ஆணிடம்.

“அவருக்குக் காது கொஞ்சம் செவிடுங்க; உரக்கப் பேசுங்க” என்றவள், ஒலி கூட்டி “ஏங்க.. ஏதாவது உதவி வேணுமானு கேக்கறாரு பாருங்க” என்றாள் ஆணின் காதருகே.

ஆண் சுதாரித்து,”ரொம்ப நன்றிங்க.. நான் இந்த ஊர்ல ராமர் கோவில் கும்பாபிஷேக வேலைக்கு வந்திருக்கங்க. சிலை செதுக்கி, வண்ணம் பூசறதுங்க. தச்சு வேலையும் செய்வேன். எங்க ப்ளைட்டு ஜர்மனிலே யாரோ தீவிரவாதிங்க வந்துட்டாங்கன்னு ரொம்ப தகராறு பண்ணி அந்தப் ப்ளேன்லந்து எங்க எல்லாரையும் இறக்கிவிட்டாங்க. அடுத்த பிளைட்டுனு தினம் தினம் போய் மூணு நாளைக்கு இடம் இல்லேன்னுட்டு, இன்னிக்குத்தான் எங்களை ஏத்திவிட்டாங்க. பாசையும் தெரியாம, கைல காசும் இல்லாம ரொம்ப சிக்கலாயிருச்சுங்க. எங்களைக் கூட்டிப்போக வரவேண்டியவங்களுக்கு சேதி சொல்லவும் வழியில்லை. ப்ளேனு மாறிடுச்சுனு அனேகமா அவங்களே சேதி தெரிஞ்சுகிட்டு வருவாங்கனு பாத்துக்கிட்டு இருக்கோம். இல்லைனா ஏதாவது டாக்ஸி எடுத்துகிட்டு ராமர் கோயில் தெரியுமானு கேட்டுகிட்டே போவணும்” என்றான்.

“அரோராவா, லெமான்டா, மேற்கு சிகாகோவா? எந்தக் கோவில் சார்?”

“விலாசம் இருந்துச்சு.. இங்கே இப்படி எடுக்குறப்ப நெரிசல்லே எவனோ படுபாவி தட்டி விட்டுட்டான்”

“ஏன் சார், இது என்ன மாம்பலமா, ராமர் கோவில் எங்கேனு கேட்டுகிட்டே போக? உங்களுக்குப் பரவாயில்லைனா என் கூட கார்ல வாங்க. எங்க வீட்ல இன்னிக்கு தங்கிட்டு, நாளை ஒவ்வொரு கோவிலா காட்டி உங்களைக்கொண்டு விடறேன். இருட்டிடுச்சு பாருங்க, குளிர் காலம் வேறே”

“உங்களுக்கு ஏன் அண்ணே வீண் கஷ்டம்?” என்றாள் பெண், சந்தேகத்தைச் சாதுரியமாக மறைத்தபடி.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, தங்கச்சி” என்றான் அழுத்தமாக. “பயப்படாம வாங்க. வீட்ல எங்க அக்கா இருக்கு, எல்லாம் பாத்துக்குவா. வீட்லந்து கோயிலுக்கு போன் பண்ணி விவரமெல்லாம் கேட்டுக்கலாம்” என்றான். “வாங்க சார்” என்றான், ஆணிடம் உரக்க.

அக்கா என்றதும் சற்று அமைதியானாள். இருவரும் அவன் காரில் ஏறிக்கொண்டனர். ஏறக்குறைய உடைந்து போயிருந்த அவர்களுடைய இரண்டு பெட்டிகளையும் காரின் பின்பெட்டியில் போட்டுவிட்டு வந்தான். பின்னால் உட்கார்ந்திருந்தவர்களைக் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தபடி காரைக் கிளப்பினான். “எந்த ஊர் நீங்க?” என்றான் உரக்க.

“சீர்காழி. என் பேர் வைத்திங்க. இவ என் பெண்டாட்டி கோமதி. ஊர் சுவாமிமலை. இப்பத்தான் கல்யாணமாச்சு..ரெண்டாம் தாரம். நீங்க எந்த ஊர்? உங்க பேரென்ன, அண்ணே?”

“நான் மெட்ராஸ் பக்கம், பொழிச்சலூர். பேரு துரையப்பன்” என்றான்.

“என்ன வேலை பண்றீங்க?”

“சாக்லேட்” என்றான். “ஸ்கூல், காலேஜ்ல போய் சாக்லேட் வியாபாரம். வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கும் கொஞ்சம் தரேன்”.

“இவளுக்குக் குடுங்க, எனக்கு சாக்லேட் எல்லாம் பிடிக்காது. இவளுக்குத்தான் சாக்லெட் பால் எல்லாம் பிடிக்கும். எனக்கு எல்லாம் பேதியாயிரும்” என்றார் வைத்தி.

“அதனாலதான் அப்படி தளதளனு இருக்காங்க, தக்காளி மாதிரி” என்றான், வேண்டுமென்றே மெதுவாக.

“என்ன சொன்னீங்க?” என்று திரும்பக் கேட்ட வைத்திக்கு பதில் சொல்லாமல் காரைச் செலுத்தினான்.

அரைசெவிட்டுக் கணவன் தலையாட்டுவதைக் கண்ட கோமதி, இனம் புரியாமல் கலவரப்பட்டாள். ‘நவசக்தி வினாயகா, உனக்கு ஒரு தேங்கா உடைக்கிறேன், இக்கட்டு இல்லாம காப்பாத்து. அங்காள பரமேஸ்வரி, உனக்கு மாவிளக்கு ஏத்துறேன் தாயே’ என்று மனதுக்குள் சொல்லத் தொடங்கினாள்.

அவனோ, ‘தக்காளியை ராத்திரியே ஜூஸ் பிழிஞ்சிடறேன்’ என்று மனதுள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.

2

வீங்கியிருந்த முகத்தின் கோரத்தைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்ட மருத்துவர், இறந்தவன் கண்களை இமை விலக்கிப் பார்த்தார். நாடி பிடித்தார். பிறகு உதட்டைப் பிதுக்கி, “சுதேனி சிந்தே” என்றார். ஏர்போர்ட் தொலைக்காட்சி கேமராவைப் பார்த்ததும் சுதாரித்து, ‘ஐகோ’ என்றபடி ஆங்கிலத்துக்குத் தாவினார். “அல்ரெடி டெட். க்ளினிகலி அண்ட் பிசிகலி டெட்” என்றார். மரணச்சான்றிதழில் கையெழுத்திட்டு அருகிலிருந்த சிப்பந்தியிடம் கொடுத்து, “மோர்க்” என்றார்.

அதுவரைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த ஏர்போர்ட் போலீஸ்காரர், “இவர் தங்கியிருந்த ஷிஞ்சுகு ஹோட்டலில் இவருடன் இன்னொரு நபரும் பதிவு செய்திருக்கிறார். அவரை விசாரணை செய்யப் போகிறோம்” என்றார்.

“ம்ம்..என் வேலை முடிந்துவிட்டது. அடாப்சி, பேதாலஜி ரிபோர்ட் வந்ததும் சொல்லுங்க” என்றபடி நகர்ந்தார் மருத்துவர். எஞ்சியிருந்த மருத்துவ உதவிக்குழு, இறந்து கிடந்தவனைப் பிணக்கிடங்கிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யத் தொடங்கியது.
**

‘எதற்காக இத்தனை கூட்டம்?’ என்று நான் விசாரிக்க முனையும் போது, அவளை மறுபடி பார்த்தேன். இப்போது எனக்கு பத்தடி தூரத்தில் வந்துவிட்டாள். அவளைக் கவனிப்பதில்லை என்று தீர்மானித்து நகர்ந்தேன். நான் பார்ப்பதைத் தெரிந்து கொண்டவள் போல் சிரித்தாள்.

சிரிப்பு என்றால் அடக்கமான புன்னகையில்லை. எக்காளச் சிரிப்பு. எக்காளம் விடாமல் எதிரொலிக்கவே, அவளைப் பார்த்தேன். அவள் வாய் வழியாகக் குபுகுபுவெனச் சிலந்திகள் வெளிவர, நாக்கு இருக்குமிடத்தில் கருங்குழியைப் பார்த்து வெலவெலத்தேன்.
**

“உள்ளே போங்க” என்று இருவரையும் தள்ளாத குறையாகத் தள்ளினான். “நான் உங்க பெட்டியை எடுத்துட்டு வரேன்”.

“வீடு வசதியா இருக்குது, நல்ல வியாபாரம்னு சொல்லுங்க” என்றார் வைத்தி.

“அக்கா எங்கே?” என்றாள் கோமதி, முதல் வேலையாக.

பெட்டிகளை உள்ளே கொண்டு வந்து வைத்தவன், “இங்கதான் கடைக்குப் போயிருக்கும், வந்துரும். நீங்க மாடில போய் குளிச்சுட்டு வாங்க” என்றான். அவன் சொல்லும் போதே உள்ளறையொன்றின் கதவைத் திறந்துகொண்டு வெறும் ஜட்டியுடன் வந்த ஒரு வெள்ளைக்காரி அவனருகில் நின்று, திறந்த மார்பைக் குலுக்கி, டிம்பர்லேக் பாணியில் ‘ஐம் ப்ரிங்கிங் செக்சி பேக்’ என்று அவன் கன்னத்தைத் தட்டிவிட்டுப் போனாள்.

“இவங்க உங்க அக்காவா?” என்றாள் கோமதி, அதிர்ந்து போய்.

“இல்லமா.. என் கூட்டாளியோட பெண்டாட்டி. இதெல்லாம் இந்த ஊர்ல அப்படித்தான் இருக்கும், நீங்க போய் குளிச்சுட்டு வாங்க, போங்க” என்றான் சிரித்துக் கொண்டே.

அவர்களுடன் மாடியேறி ஒரு தனி அறையில் பெட்டிகளைப் போட்டுவிட்டு “பத்து பதினஞ்சு நிமிஷத்துல வந்துருங்க… எனக்குப் பசிக்குது, சேர்ந்து சாப்பிடலாம்” என்றான். வைத்தியிடம், “சார், அவங்க குளிச்சு வந்துரட்டும், ஒரு கை குடுக்கறீங்களா? இந்த மெத்தையைத் திருப்பிப் போட்டுறலாம்” என்றான்.

கோமதி குளிக்கப் போனதும் இருவரும் கட்டிலிலிருந்து மெத்தையை எடுத்துத் திருப்பிப் போட்டனர்.

“நாங்க தரையிலேயே படுத்துக்குவோங்க, எதுக்கு..” என்றபடித் திரும்பிய வைத்தியைக் கீழே கிடந்த கட்டையால் ஓங்கி அடித்தான்.

ஓசையின்றிக் கீழே விழுந்த வைத்தியை இழுத்துப் போய் இன்னொரு தனியறையில் அடைத்தான். சட்டைப் பையிலிருந்து ஒரு சாக்லெட் பொட்டலத்தைப் பிரித்து ஒரு சிட்டிகை கோக் எடுத்து உள்ளங்கையில் கோடு போல் பரப்பி அவசரமாக மூச்சிலிழுத்தான். தலையைச் சிலுப்பிக் கொண்டே இன்னொரு சிட்டிகை எடுத்து, கீழே மயங்கி விழுந்து கிடந்த வைத்தியின் வாயைத்திறந்து பற்களில் தேய்த்தான். கைகளைக் கழுவிக்கொண்டு கதவை அடைத்துவிட்டுக் கீழே இறங்கினான்.

படியிறங்கியவன், ஏதோ வேகம் வந்து மறுபடி மாடியேறி, குளியலறைக் கதவை ஆவேசமாக உதைத்துத் திறந்து உள்ளே போனான். “கடவுளே” என்று அலறி உடம்பை அடக்கி ஒடுக்கிக் கொண்டாலும் கோமதியால் தன் உடலை மறைக்க முடியவில்லை. மஞ்சள் சிலையாய் இருந்த அவள் உடலில் நீர்த்துளிகள் வேகமாகத் தெறித்து விழுந்ததை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு, சிவந்த கண்களுடன் வெளியே வந்தான். படிகளில் தாவி இறங்கிக் கீழே இறங்கி வெளிக்கதவை அடைத்தான். சோபாவில் சாய்ந்து படுத்து, மேல்சட்டையைக் கழற்றி எறிந்தான். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துப் பிடித்தான்.

வெகு நேரமாகக் கீழே இறங்கி வராமல் இருந்தவள் மீது கோபம் வந்து மாடிக்கு விரைந்தான். அறைக்குள்ளே சுவற்றில் சாய்ந்தபடி அழுது கொண்டிருந்தாள் கோமதி. அவனைப் பார்த்ததும், “எங்களை தயவு செய்து ஏதாவது கோவில்ல கொண்டு விட்டுருங்க, இந்த இடம் எங்களுக்குப் பிடிக்கலை. அவர் எங்கே?” என்றாள் அழுவதை நிறுத்தாமல்.

“சரிதான், எழுந்திருடி” என்று அவள் கைகளைப் பிடித்திழுத்தான். அதிர்ச்சியுடன் நகராமல் இருந்தவளின் முடியைப் பிடித்தெழுப்பி நிறுத்தினான்.

உதட்டில் முத்தமிட வந்தவனைத் தள்ளினாள் கோமதி. “வேண்டாம்.. நீங்க அண்ணன் மாதிரி. இந்தப் பாவம் வேண்டாம். நாங்க போயிடறோம்”.

அவள் மேல் பாய்ந்துக் கட்டிப் பிடித்தான். வெறியோடு அவளை மெத்தையில் தள்ளினான். அவள் இடுப்பில் ஒரு கை வைத்து, புடவைக்குள் மறு கை நுழைத்த்தான். ஆத்திரத்தோடு இரண்டு கைகளாலும் அவன் முகத்தைப் பிடித்துத் தள்ளி, வேகமாகப் புரண்டு எதிர்புறம் போய் விழுந்த கோமதி, கட்டிலைச் சுற்றி ஒடினாள். அவன் கைகளில் சிக்காமல், ஏதாவது ஆயுதம் தென்படுகிறதாவென்று பார்த்தாள். “என்னங்க, இங்கே வாங்க…” என்று கணவனைக் கூவியழைத்து அலறினாள்.

போதையேறியவனுக்கு இது விளையாட்டாயிருந்தது. கோமதி அங்கே இங்கே ஓடுவதையும் தேடுவதையும் அலறுவதையும் பார்த்துச் சிரித்தான். திடீரென்று தன் கால்சட்டையை அவிழ்த்து அவள் மேல் எறிந்தான். வேகமாக அவள் மேல் தாவி அவள் மார்பில் இரண்டு கைகளையும் வைத்து, “வா” என்றான். திமிறி, அவன் முகத்தில் நகத்தால் கீறினாள்.

கோமதியின் கைகளை உதறி விலகியவன், அவள் முந்தானையைப் பற்றியிழுத்தான். கீழே தடுமாறி விழுந்தவளுடைய புடவையை, குனிந்து அவள் வயிற்றிலிருந்து கணத்தில் நீக்கினான். தன் வயிற்றருகே குனிந்தவனுடைய தலையைத் தன் முழங்காலால் பலம் வந்தமட்டும் இடித்தாள். தலையில் அடி வாங்கியவன் இன்னும் சிரித்தான். அவள் அலறினாள். “ஐயோ.. யாராவது என்னைக் காப்பாத்துங்க… கடவுளே… முருகா… பராசக்தி… பரமேஸ்வரி.. என்னை விட்டுறுங்கண்ணே…. உங்களுக்கு இந்தப் பாவம் வேண்டாம்”. கைகூப்பிக் கதறினாள்.

கோமதியைச் சுவரோரம் தள்ளி, அவள் கைகளைப் பிணைத்து உடலோடு உடல் வைத்து அழுத்தினான். பிறகு அவள் கால்களில் தன் முழங்கால்களை வைத்து மண்டியிட்டு அழுத்தி, அவள் தொப்புளில் வாய் வைத்தான். அவள் நகர முடியாமல் கதறினாள். “யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்… என்னங்க..எங்கே இருக்கீங்க? என்னைக் காப்பாத்துங்க… முருகா.. முருகா”.

“அவளை விடுறா, நாயே” என்று கதறியபடி அறைக்குள் வந்தார் வைத்தி. நிற்க முடியாமல் தடுமாறினார். கையில் கொண்டு வந்திருந்த கட்டையால் அவன் தலையில் அடிக்கப் போய், குறி தவறி அவன் கைகளில் அடித்தார். அவளை விட்டு நகர்ந்தவன் சுதாரிக்குமுன், சுவற்றில் மாட்டியிருந்த ஒரு படத்தை எடுத்து அவன் முகத்தில் அடித்தார். “என் தங்கமே கோமதி…” என்று அவள் கைகளைத் தொட்டார். பிறகு ஆத்திரத்துடன் அவனை உதைத்தார்.

உதைத்த வைத்தியின் கால்களைப் பற்றித் தூக்கியடித்தான். வைத்தி சுவரோரமாக விழுந்தார். அவன் உடனே எழுந்து கட்டிலருகே இருந்த மேஜையைத் திறந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து, இன்னும் தடுமாறி எழுந்து கொண்டிருந்த வைத்தியை நெற்றியில் சுட்டான்.

“ஐயோ” என்று அலறிய வைத்தியைக் கைத்தாங்கலாகப் பிடித்த கோமதி, அவருடன் சேர்ந்து கீழே விழுந்தாள். கண்களில் வருத்தத்துடன் தன் மனைவியையே பார்த்தபடி, சில நொடிகளில் இறந்து போனார் வைத்தி.

அவள் விடாமல் அலறிக்கொண்டிருந்தாள், “ஐயோ”.

அலறிக் கொண்டிருந்தவளை அப்படியே தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்கு நடந்தான். “ஐயா என்னை விட்டுடு, புண்ணியமா போகும்” என்று அவள் கெஞ்சக் கெஞ்ச, அவன் அவளைப் படுக்கையில் தள்ளினான்.

கீழேயிருந்து கோக் கலந்த விஸ்கியை எடுத்து வந்தக் கூட்டாளி மிகேலும் வெள்ளைக்காரியும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். வெள்ளைக்காரி கோமதியை அழுத்திப் பிடித்துக்கொள்ள, அவன் கொஞ்சம் கோக் எடுத்து கோமதியின் உதட்டில் ஒற்றி முத்தம் கொடுத்தான்.

காறித்துப்பினாள். “இந்தப் பாவம் உன்னை விடாது. ஏழு பிறவியிலும் உன்னை விடாது. உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார்” என்றாள்.

மிகேல் கோமதி மேல் கோகெய்னை அள்ளி வீசினான். வெள்ளைக்காரி கோமதியின் இடுப்பைக் கட்டிப் பிடித்தாள். அவன் கோமதியின் வாயில், அவள் கதறக்கதற, கோக் கலந்த விஸ்கியை ஊற்றினான்.

சக்தியில்லாமல், “தெய்வமே தெய்வமே” என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த கோமதியை மூவரும் மாற்றி மாற்றி அனுபவித்துக் களைத்துப் போய் ஓய்ந்தபோது, அதிகாலை மணி மூன்றுக்கு மேலானது.

அவர்கள் ஓய்ந்து விலகியதும், உடலெங்கும் விஸ்கியும் போதைப்பொருளும் பரவி அருவருப்பூட்ட, முரட்டுத்தனத்தினால் ஏற்பட்ட காயங்களிலிருந்து ரத்தம் கசிய, உடல் வலியால் நகர முடியாமல் “முருகா முருகா” என்று அழுதாள். சிறிது நேரம் பொறுத்து மெள்ள அடி மேல் அடியாகத் தவழ்ந்து, பக்கத்து அறையில் நான்கைந்து மணி நேரமாக இறந்து கிடந்த கணவனருகே வந்து அவர் கைகளைப் பற்றினாள். சில நொடிகளில் நினைவிழந்தாள்.

3

சப்தம் கேட்டு நினைவுக்கு வந்தாள், அரைத் தூக்கத்திலிருந்த ஹோட்டல் ரிசெப்ஷன் பெண். நாற்காலியிலிருந்து எழுந்து “ஸுமி மாஸென்” என்று மன்னிப்பு கேட்டவள், எதிரே இருந்த காவல்துறை ஆட்கள் இருவரையும் பார்த்தாள். “கேசத்தெஸ்” என்றபடி போலீஸ் அடையாளச்சீட்டைக் காட்டிய இருவரும், “ஒகயநு கென்சகு” என்றனர். இறந்து போனவனுடைய புகைப்படத்தைக் காட்டினர். பலமாகத் தலையாட்டிய ரிசெப்ஷன் பெண், உடனே அறைச் சாவியை எடுத்து வந்தாள்.

இரண்டாவது மாடியின் வடக்கு மூலையிலிருந்த அறை வாசலில் நின்று தயங்கி, போலீஸ்காரர்களைப் பார்த்தாள். கதவை மூன்று முறை தட்டிவிட்டு பல வினாடிகள் பொறுத்து, கொண்டுவந்த சாவியால் கதவைத் திறந்தாள்.

உள்ளே யாருமில்லை. டோக்யோவின் பெரும்பான்மையான ஹோட்டல்களைப் போல் சிறிய அறை. இரண்டு படுக்கைகளும் சீராக இருந்தன. மூலையில் பூட்டியிருந்த ஒரு பெட்டி. உள்ளே வந்த காவல்துறை ஆட்கள் படுக்கையறையிலும் ஒட்டியிருந்த குளியலறையிலும் தேட, ரிசெப்ஷன் பெண் வெளியே நின்று கொண்டிருந்தாள்.

படுக்கையறையில் தேடிக் கொண்டிருந்தவன், துணைக்கு வந்தவனை அவசரமாக அழைத்து தலையணைக்கடியில் இருந்ததைச் சுட்டினான், “நொஷோகு”. சிறிய பொட்டலம். “ஹவ்” என்று தலையசைத்தார்கள். படுக்கையைச் சுற்றித் தீவிரமாகத் தேடினார்கள்.

அடுத்த நான்கு மணி நேரத்தில் அறையில் தங்கியிருந்தவனைத் தேடிப்பிடித்து ஷிஞ்சுகு காவல்துறை மையத்திற்குக் கொண்டுவந்தனர். ஆங்கில மொழிபெயர்ப்புத் துணையுடன் இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். “உங்கள் பெயர்?”

“மிகேல்”

“டோக்யோ வந்த விஷயம்?”

“சுற்றுலா” என்றவனிடம், ஷிஞ்சுகு ஹோட்டல் அறையிலிருந்து எடுத்துவந்தப் பொட்டலத்தையும் பெட்டியையும் காட்டினார். பெட்டி நிறைய பணம். பொட்டலத்தில் கோகெய்ன்.

“கோகன டட்சுதன்” என்றார் இன்ஸ்பெக்டர். மொழிபெயர்ப்பாளர் விழித்துவிட்டு, கொட்டையை நசுக்குவது போல் சைகை காட்டினார்.

எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினான் மிகேல்.
**

விமான நிலையத்திலிருந்து மருத்துவ உதவிக்குழு கிளம்பியது. என்ன செய்கிறோமென்று தெரியாமல் நானும் பின் தொடர்ந்தேன். அந்தப் பெண்ணிடமிருந்து விலகினால் போதுமென்று தோன்றியது. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் சற்று அருகில் வருவது போல் உணர்ந்தேன். நிச்சயமாக என்னை விடாது பின்தொடர்கிறாள்.

காலையிலிருந்து எல்லாம் கனவு போல் நடப்பதால் ஒரு வேளை பிரமையோ? வாயிலிருந்து சிலந்தி வருவதாவது? பிரேதக்கிடங்கு வந்ததும் நின்றார்கள். நான் உள்ளே போக மனமில்லாமல் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

முழுக்க முழுக்க கண்ணாடிக் கட்டிடத்தின் தானியங்கிக் கதவுகள் திறந்து அவர்கள் உள்ளே போனபோது, பக்கத்திலே சுழல் கதவின் பின்னால் அவளைப் பார்த்தேன். ஐந்தடி தூரம் கூடக் கிடையாது. அவளேதான். என்னதான் செய்வாள் பார்த்துவிடலாம் என்று ஆத்திரத்துடன் உள்ளே போனேன்.

அவளைக் காணவில்லை.

அவள் நின்றிருந்த இடத்தில் மஞ்சளும் சிவப்புமாய் பொடி. தொட்டுப் பார்த்தவன் அலறினேன். தொட்டவுடனே என் கை விரல்கள் அறுந்து விழுந்தது போல் இனம் புரியாத வலி. கையை விலக்கிக் கொண்டு அதிர்ச்சியில் மேலே பார்த்து, மயிர்க்கூச்செறிந்தேன்.

உத்தரத்தில், இந்த முனையிலிருந்து அந்த முனை வரை, அறுபதடி நீளத்துக்குப் பரந்து படுத்திருந்தாள். அவள் தலைமுடிக்கற்றை விழுது போல் தொங்கியாடியது. அவளுடைய கண்கள் அகண்டிருந்தன. வாயில் இப்பொழுது பற்கள் இருந்தன. ஓனாய்ப் பற்கள்.
**

இறந்து போயிருந்த வைத்தியைப் புதைத்துவிட்டு, இரண்டு மூன்று வாரமாய் கோக், எல்எஸ்டி, எக்ஸ்டசி என்று கோமதிக்கு தினமொரு போதை மருந்தேற்றி அவனும் மிகேலும் இன்னும் மற்றவர்களும் அவள் உடலையும் மனதையும் நாசம் செய்துவிட்டிருந்தார்கள்.

“இவள் வந்து ஒரு மாதமாகப் போகிறது துரேபன். ஐ வில் கெட் ரிட் ஆப் ஹர். ரிஸ்க் அதிகம்” என்றான் மிகேல்.

“நா” என்றான் அவன். “”ஒரு அபாயமும் இல்லை. இந்தியாவின் கிராமத்துக்காரி. வெளி மொழி எதுவும் தெரியாது. போதைக்கு அடிமை. இவளால் நம்மை அடையாளம் காட்டவே முடியாது. இவளை நம் ஏஜன்டுக்கு விற்றால் நிறைய பணமும் கிடைக்கும். அடுத்த வாரம் மாவியிலிருந்து வரும் ஜேக் மசாகி இவளை வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறான். டேஸ்ட் பார்த்து சொல்வதாய்ச் சொன்னான். ஒகினாவா மரீன் பேஸுக்கு இப்ப முழு சப்ளை அவன்தான். அவர்களுக்குப் பிடிக்கும் இந்த மாதிரி ஜூசி கட். பேச வேண்டாம். படுத்தா போதும்” என்றான். “சாம்பிள் பார்த்து, பிடிச்சிருந்தா எல்லா ஏற்பாடும் அவனே செய்துடுவான். வழக்கம் போல நாம போய் பணம் மட்டும் எடுத்துகிட்டு வந்தா போதும். கேஷ் டீல்”.

கோமதி “இன்னும் கொஞ்சம் மருந்து குடுண்ணே” என்று கெஞ்சினாள். அவன் கோகெய்ன் பொட்டலத்தை அவள் முன் ஆட்டினான். “இப்ப யாருடி தெய்வம்?” என்றான். “நீதான்ணே, குடுண்ணே” என்று அவனைச் சுற்றி வந்தாள்.

நடந்து போன கொடூரத்தை மறக்கவும் அவர்களுக்கு இணங்கி நடக்கும் போது உண்டாகும் பயம் போகவும் அவளுக்குப் போதை மருந்து தேவைப்பட்டது. அவனிடம் தினம் கெஞ்சுவாள் “ஒரே ஒரு ஊசி தாயேன்”. உள்மனத்தில் மட்டும் காயம் ஆறவில்லை. காயம் ஆறாமலிருக்க வேண்டுமென்று தெய்வத்தைத் வேண்டிக்கொள்வாள். ‘மறத்துப் போனாலும் மறந்து போகவிடாதே, கடவுளே. எப்ப இதை முடித்து வைக்கப் போகிறாய், முருகா?’.

முடித்து வைக்கும் வாய்ப்பு வந்தது. ஒகினாவாவில்.

சிகாகோவிலிருந்து மாவிக்குப் போய், அங்கிருந்து அமெரிக்கக் கப்பற்படை சார்ந்த மரீன் கார்கோ தனியார் சப்ளை விமானத்தில் கடத்தப்பட்டு ஒகினாவா வந்தாள்.

கோமதியுடன் சேர்த்து மொத்தம் ஆறு பெண்களைக் கடத்தி வந்திருந்தார்கள். ஓகினாவா மரீன் பேஸ் டாபரிடம் அவர்களைப் ஒப்படைத்தார்கள். அவன் அவர்களின் முகம், உதடு, பல், மார்பு, பிட்டம், அல்குல் என்று ஒவ்வொரு இடமாய்த் தொட்டுப் பார்த்துச் சோதனை செய்தான். பிறகு தலையாட்டி, “கார்கோ ஓகே” என்றான். ஒரு சீட்டெழுதிக் கொடுத்தான்.

“என்ன இது?” என்றான் மிகேல்.

“ஷிஞ்சுகு ஹோட்டல் அட்ரெஸ். அங்கே போய்க் காத்திருங்க. ஒரு பொண்ணுக்கு இருபதாயிரம் டாலர். ஆறுக்கும் சேத்து நூத்திருபது. பவுடருக்கு இருநூறு. மொத்தப் பணத்தையும் அங்கே கொண்டு வந்து கொடுப்பாங்க” என்றான் டாபர்.

சீட்டை வாங்கிப் பையில் திணித்துக் கொண்ட மிகேல், கூட்டாளியை அழைத்தான். “வா போவலாம்”.

ஷிஞ்சுகுவில் காத்திருந்த இருவருக்கும் பணப்பெட்டி வந்தது. பண விஷயம் மிகேலின் பொறுப்பு என்பதால், அவன் அடுத்த விமானத்தில் சிகாகோ செல்லத் தீர்மானமானது.

ஒகினாவாவின் சிவப்பு விளக்குப் பகுதியில் கோமதியைப் புதுச்சரக்கு என்று அதிக டாலருக்கு டாபர் வாடகை பேச, இரண்டு அமெரிக்கச் சிப்பாய்கள் வந்தனர். ஆடைகளைக் களைந்துவிட்டு, “டூ இன் ஒன்” என்றனர். கோமதி, ஆடையில்லாமல் நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்துச் சிரித்தாள். அவர்கள் கழற்றிப் போட்ட பேன்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆட்டிச் சிரித்தாள். பதிலுக்கு அவர்களும் இடுப்பை ஒடித்து, “லுக் அட் அவர் கன்ஸ்” என்று சிரித்தனர். கோமதியை நெருங்கினர். அவள் இருவரையும் சுட்டாள்.

முதல் குறி தவறி எங்கோ தெறிக்க, அவர்கள் இருவரும் அப்படியே வெளியே ஓட முயற்சித்தனர். மறுமுறை வைத்த குறி தவறாமல் சுட்டாள். தன் நெற்றியில். “கோமதி, நீ செய்ய வேண்டியதெல்லாம் இனிமேல் தானடி”.
**

ஷிஞ்சுகு காவல் மையத்தின் உயரதிகாரி, மிகேல் சொல்வதையெல்லாம் கேட்டபடி ஒரு சிகரெட் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் உட்கார்ந்திருந்தான். கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த போதைப்பொருள் தடுப்பிலாகா அதிகாரி, அப்பொழுது வந்த செய்தியைக் காண்பித்தார். ஒரு புகைப்படத்தை அவனிடம் காட்டினார்.

“இவள்தானா அந்தப் பெண்?” என்றார்.

“ஆமாம்” என்று தலையாட்டினான்.

“உங்கள் கூட்டாளி எங்கே?” என்று கேட்டார், போதைப்பொருள் தடுப்பிலாகா அதிகாரி.

“அவன் நேற்றே சிகாகோ..”.

அவனை மறித்த போலீஸ்காரர், “அவன் நேற்று இரவு நகோயா விமான நிலையத்தில் விபரீதமாய்க் கொல்லப்பட்டான்” என்றார். அதிகாரியிடம் ஏர்போர்ட் விவரங்களைச் சொன்னார்.

அதிகாரி எழுந்து, “மிஸ்டர் மிகேல், நீங்க எங்ககூட வந்துப் பிணத்தை அடையாளம் காட்டுங்க. முழு குற்றச்சாட்டு தீர்மானமாகும் வரை உங்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைத்திருக்கிறோம்” என்றார்.
**

அங்கிருந்து நகர்ந்தேன். எதிரே இருந்த அறைக்குள் சில காவல்துறை ஆட்கள் நிற்பதைப் பார்த்து நிதானமும் தைரியமும் வந்து உள்ளே போனேன். அந்தப் பெண் இத்தனை காவல் இருக்குமிடத்துக்கு வரமாட்டாள்.

வந்து சேர்ந்த தேதி, நேரம், பதிவெண் வாரியாகப் பிணங்களைக் கிடங்குள் வைத்திருந்தார்கள். நான் அருகே சென்றபோது ஏதோ ஒரு பிணத்தை அடையாளம் காட்டுவதற்காக வெளியே எடுத்து வந்தார்கள். அடையாளம் காட்ட வந்தவனோ எனக்கு நன்றாகத் தெரிந்தவன். மிகேலா?

அப்படியானால் பிணம்? அதிர்ச்சியுடன் பிணத்தைப் பார்த்தேன். என் முகமா அது? யானைக்கால் வியாதி போல் வீங்கி, சீ ஒழுகிக் காய்ந்து போன கண்றாவி. இருந்தாலும் அடையாளம் தெரிந்தது.

என் கையை யாரோ பிடிக்க, திடுக்கிட்டேன். அந்தப் பெண்தான்.

ஒரு சில நொடிகளுக்கு மசாஜ் செய்த பெண்ணாகத் தோன்றினாள். என் கையை உதற நினைத்தேன், முடியவில்லை. இப்பொழுது கோமதியாக மாறி என் கையை அழுத்தினாள். அவள் கை விரலகள் ஐந்தும் தேள் கொடுக்காய் மாறி என்னை ஒரே நேரத்தில் கொட்ட, துடித்தேன். கொட்டிய இடத்தில் உடனே நூற்றுக்கணக்கில் கம்பளிப்புழு. அடுத்த நொடியில் அவள் கண்களிலிருந்த வந்த தீப்பொறி பட்டு, எரிந்துகொண்டே ஓடியக் கம்பளிப்புழுக்கள் என் கைகளைக் குடைந்து உள்ளே சென்றன.

அலறினேன். நான் இறந்திருந்திருந்தால் வலிப்பானேன்? துடிப்பானேன்?

“இந்தச் சாவு என் பழிக்கு ஆரம்பம். இன்னும் ஏழு பிறவி இருக்குடா, சண்டாளா.. உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார். உனக்கு நரகம் கிடையாது” என்று என் காதில் சொன்னாள். சொல்லும்போதே அவள் நாக்கிலிருந்த விஷமுள் என் கன்னமெல்லாம் கீறியது. பிறகு “வாடா துரையப்பன், இனி முதல் பிறவி” என்றாள்.

– 2011/08/24

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *