கனவில்லை, நிஜம்!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 176,561 
 

ஷாலினி ஒரு இருட்டறையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள், சரியாகச் சொன்னால் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தாள். அவளது உடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏதோ திரைச்சீலையை உடலில் சுற்றி வைத்ததுபோல. அது போதாதென அறை முழுக்க வெவ்வேறு இடங்களிலிருந்து திரைச்சீலை துணித் துண்டுகள் போன்றவைகள் அவள் உடையுடன் இணைந்திருந்தன. அவள் அந்த உடையின் இணைப்புகளை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டது, தாங்க முடியாமல் ஷாலினி இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள். அப்போது ஒரு கை அவளை பின்னாலிருந்து தொட்டபோது……….

அலறி அடித்துக்கொண்டு ஷாலினி எழுந்து உட்கார்ந்தாள். பக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் ஜீவாவும் விழித்துக்கொண்டு அவளை ஆசுவாசப்படுத்தினான்.

“என்னாச்சு ஷாலு? ஏன் அப்படி அலறின?” என பொறுமையாக விசாரித்தான்.

“என்னமோ ஒரு அமானுஷ்யமா, ஏதோ தப்பா தெரிஞ்சதுங்க” என்றாள்.

“கனவுலயா?” என்றதற்கு, “இல்லைங்க, நாந்தான் தூங்கவே இல்லையே. ஏதோ நெஜமாவே எனக்கு நடக்கறமாதிரி இருந்தது” என்று, தான் ‘கண்ட’ காட்சியை விவரித்தாள்.

அவளை சிறிது நேரம் வேறு விஷயத்தில் கவனம் திருப்பி, பிறகு படுக்க வைத்தான்.

அடுத்த ஒரு வாரத்திலேயே இன்னும் நான்கு முறை அதேபோல அமானுஷ்யம் தெரிந்ததாக அலறினாள்.

அவனுக்கு உள்ளுக்குள் மணி அடிக்க ஆரம்பித்தது, இதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தான்.

“ஷாலு! நாமா ஏதாவது நினைச்சிக்கறதுக்கு பதிலா டாக்டரைப் போய் பார்க்கலாம். உன்னோட பெரியப்பா பையன் சங்கர் ஒரு டாக்டர்தானே? அவனையே போய் பார்ப்போமா?” என்றான்.

“அய்யோ! அவன் மனநல மருத்துவனாச்சே? எனக்கு ஒண்ணும் மனநோய் இல்லைங்க” என்று வருத்தப்பட்டாள்.

“நான் உனக்கு மனநோய் இருக்குன்னு சொல்லலமா. அவன் நமக்குத் தெரிஞ்ச டாக்டர் ஆச்சே, மொதல்ல அவன்கிட்ட சொல்லுவோம், என்ன சொல்றான்னு கேட்டுத்தான் பார்ப்போமே” என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்தி, சங்கரைப் பார்க்க சம்மதிக்க வைத்தான்.

அடுத்த நாளே சங்கரின் பிரத்யேக மருத்துவமனைக்குச் சென்றனர்.

சங்கர் அவளைப் பேசவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான். அவளுக்குத் தோன்றிய காட்சிகள் கனவு இல்லை என்பதை, ஒருமுறைக்கு இருமுறை கேட்டு ஊர்ஜிதம் செய்துகொண்டான்.

பிறகு அவன் அவளைப் பற்றி ஆராய்ந்தவைகளைச் சொன்னான் – “ஷாலினி! உனக்கு வந்திருக்கறது மனநோய் இல்ல. ஆனால் ஒருவிதமான அழுத்தம் இதுமாதிரி தோண வச்சிருக்கு. அடுத்த தடவை இதுமாதிரி தோணும்போது கண்ணைத் திறக்க முயற்சி பண்ணு. அப்படி செஞ்சா உனக்குத் தெரியற காட்சியில் ஏதாவது மாற்றம் இருக்குதான்னு பாரு. இல்லைன்னாலும் பரவாயில்ல, நான் கொடுக்கும் மாத்திரை, டானிக்கை தொடர்ந்து ரெண்டு வாரம் சாப்பிட்டுவிட்டு மறுபடி என்னை வந்து பாரு. பயப்படாத, குணமாகிடும்”.

இருவருக்கும் இப்போது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

இரண்டு வாரங்கள் சென்றன. அவன் கொடுத்த மாத்திரைகள், டானிக்கை சரியாகச் சாப்பிட்டாலும் அவ்வளவாக மாற்றங்கள் ஏதும் இல்லை.

அதற்குள் சங்கருக்கு அவசர வேலையாக மலேசியா செல்ல வேண்டி இருந்ததால், அவன் கொடுத்த மருந்துகள் சாப்பிட்டு முடிந்ததும் நிலைமையைப் பற்றி தொலைபேசி மூலமே தகவல் சொல்லச் சொன்னான்.

ஆனால், ஜீவாவுக்கு, இந்த பிரச்சனை மருந்துகள் மூலம் குணமாகும் என்ற நம்பிக்கை போய்விட்டது. தனக்குத் தெரிந்த நண்பன் ஒருமுறை ஒரு மலையாள மாந்திரீகர் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்போது அதை கிண்டல் செய்திருந்தான், இப்போது விதி அவனை அந்த முயற்சிக்குத் தள்ளியது.

ஜீவா அந்த நண்பனைத் தொடர்புகொண்டு, அந்த மாந்திரீகரை வரவழைக்க முடியுமா என்று கேட்டான். வேறொரு காரணம் சொன்னான், தன் மனைவியின் பிரச்சனை பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் என்று நினைத்தான்.

நண்பனும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னான். ஒரு வாரத்திலேயே அவர் வந்தார், நண்பன் வரவில்லை. நல்லதாகப் போயிற்று என அந்த மாந்திரீகரிடம் நடந்தவைகளை விரிவாகச் சொன்னான் ஜீவா. அவர் மறுநாளே ஒரு பூஜை செய்து, ‘சில நாட்களிலேயே எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லி ச் சென்றார்.

நாலைந்து வாரங்கள் சென்றன, ஒன்றுமே சரியாகவில்லை.

ஷாலினிக்கு பயம் வர ஆரம்பித்தது, சோர்ந்து காணப்பட்டாள்.

அவளை அரவணைத்து சமாதானம் செய்தானே ஒழிய, ஜீவாவுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பின், வேறொரு நண்பனின் வீட்டில் ஒரு சுவாமிஜி வந்து யாகங்கள், பூஜைகள் இவற்றை செய்து, அவனது வீட்டு கஷ்டங்கள் தீர்ந்ததாக அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவனிடம் பேசியபோது, அதிருஷ்டவசமாக அந்த சுவாமிஜி இப்போது அவர்களின் ஊருக்கு வந்திருப்பதாக அறிந்து, அவரிடம் சென்று தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.

அவரும் ஒப்புக்கொண்டு இரு நாட்களுக்குப் பிறகு வந்தார். அவரிடம் தனியாக நடந்தவற்றைச் சொன்னான். அவர் சில யாகங்கள், பூஜைகள் செய்வதாகச் சொன்னார். தடபுடலாக எல்லாம் நடந்தேறியது, உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

எல்லாம் முடிந்ததும், அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துச் சென்று, அந்த சுவாமிஜி அவர்களுக்கு பூஜைக் கயிறு கொடுத்து கட்டிக் கொள்ளச் சொன்னார்.

மேலும் பத்து நாட்கள் சென்றன, இன்னும் ஒன்றும் சரியாகவில்லை.

முடியைப் பிய்த்துக் கொள்ளலாம்போல் இருந்தது ஜீவாவுக்கு. கடைசியாக, மீண்டும் சங்கரிடமே சென்றார்கள். தாமதமாக வந்ததற்கு அவர்களை அவன் கடிந்து கொண்டு, மேலும் சில சோதனைகள் செய்து பார்த்து, ஷாலினிக்கு வேறு சில மருந்துகள் கொடுத்தான். ‘இந்த முறை நிச்சயம் முன்னேற்றம் இருக்கும்’ என்று வாக்களித்தான்.

என்ன ஆச்சர்யம்? சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

அவன் கொடுத்த மருந்துகளை முழுவதுமாக இரு மாதங்கள் சாப்பிட்டதும், முற்றிலும் குணமடைந்து விட்டாள். அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை.

இதெல்லாம் நடந்து சில மாதங்கள் கழித்து ஒரு நாள் ஷாலினி சங்கரின் மருத்துவமனைக்குச் சென்றாள், தனியாக.

“அண்ணா! உனக்கு ரொம்ப நன்றி. நீ எனக்கு செஞ்சது பெரிய உதவி” என்று தழுதழுத்தாள்.

சங்கர் “என்னம்மா! உனக்காக இதுகூட செய்யமாட்டேனா? நன்றி எல்லாம் சொல்லி என்னை அந்நியன் ஆக்காதம்மா” என்றான்.

“இப்ப அவர் பழைய ஜீவாவா ஆயிட்டார். நாங்க காதலிக்கும்போது அவருக்கு என்மேல இருந்த பாசம், அக்கறை, காதல் எல்லாம் இப்ப ரெண்டு மடங்கு ஆயிருக்கு. அதுவும் இப்ப நான் கர்ப்பமா இருக்கேனா? என்மேல அன்பைப் பொழியறார்” என்றாள்.

“கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ஷாலினி. உங்க கல்யாணம் ஆன சில வாரங்கள்லயே அவர் உன்னை வரதட்சணை கேட்டு வேதனைப்படுத்த ஆரம்பிச்சதைப் பத்தி நீ சொன்னதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. ஆமா, நீங்க ரெண்டு பேரும் காதல் பண்ணிதான் கல்யாணம் செஞ்சுகிட்டீங்க. அப்பல்லாம் நல்லவராதான இருந்தார். திடீர்ன்னு எப்படி ராட்சஷன் ஆனார்?” புரியாமல் கேட்டான்.

“அவரோட அம்மாதான் காரணம் அண்ணா. காதல் கல்யாணம்-ங்கறதால வரதட்சணை வராதுன்னு, கல்யாணத்துக்கு ஒத்துக்கற மாதிரி நடிச்சி, எங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவரை மூளைச்சலவை பண்ணினாங்க. அவர் என்னைக் கொடுமைப்படுத்தி காசு பிடுங்கப் பாத்தார். காசு கொடுக்கறதுகூட எனக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனா, எவ்வளவு நல்லவரா இருந்த ஜீவாவை இப்படி மாத்திட்டாங்களேன்னுதான் எனக்கு ரொம்ப வருத்தம்.

ஜீவாவைத் திருத்தி பழையபடி மாத்த என்ன பண்ணலாம்ன்னு உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் நல்ல யோசனை குடுத்தீங்க.

அது மாதிரியே எனக்கு மனநோய் இருக்கற மாதிரி நடிச்சி, அவர் வாயாலேயே உங்ககிட்ட பரிசோதனைக்கு வரலாம்னு சொல்ல வெச்சி, அப்புறமும் சரியாகாம இருக்கறதா நான் நாடகம் ஆடினதுல, மாந்திரீகர், சுவாமிஜி-ன்னு அவர் அலைஞ்சி, ‘இவள் உயிரோட இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்’னு அவரை நினைக்க வெச்சி, இப்ப நாங்க பழையபடியே காதலர்களா இல்லற வாழ்க்கைய சந்தோஷமா ஆரம்பிச்சதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லணும் அண்ணா!” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “கனவில்லை, நிஜம்!

  1. இந்த கதையை சிறு குறும்படமாக செய்ய விருப்பம்… உங்கள் சம்மதம் தேவை… உங்கள் ஓய்வு நேரத்தில் பதில் அளிக்கவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *